(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தூளியில் கிடக்கும் குழந்தை ‘வீல் வீல்’ என்று கத்துவதைக் கேட்டும், எழுந்து சென்று அதை எடுக்க முடியாத அசதியில் அவள் கிடந்தாள். கை கால்களும் உடம்பும் எல்லாம் ஜீவனை இழந்துவிட்டதுபோல் ஒரு அசக்த நிலைமை… இமைகளுக்குத்தான் என்ன கனம்…!
இன்னும் பதினாறு நாள் ஆகியும்கூட திகையாத பச்சிளம் குழந்தை… அது விடாமல் கத்துவதைக் கேட்டால், ‘நீ என்னைத் தூக்கிக் கொள்ளும்வரை ஓய்ந்திருக்கமாட்டேன்’ என்று தன்னிடம் நேருக்கு நேர் சமர் தொடுப்பது போலிருக்கிறது.
மாலை ஏழு மணி சுமாருக்குப் பால் கொடுத்தது. இப்போது நடு நிசி கழிந்திருக்கும்… பாவம் வயிறு பசித்துத்தான் இப்படிக் கதறி அழுகிறது! தன் ஜம்பர் நனைவதை அவளால் உணர முடிகிறது. ஆனாலும், கையும் கால்களும் ஒத்துழைக்காமல் எப்படி எழுந்து போய் குழந்தையை எடுப்பது…! ஒருவித மயக்கத்தில் தான் ஆழ்ந்து போய்க்கொண்டிருப்பது போலிருக்கிறது. தன் அம்மாவையும் காணவில்லை. அழுது அரற்றும் குழந்தையைத் தூளியிலிருந்து எடுத்து, தன் பக்கத்தில் கொண்டுவந்து படுக்க வைத்தால் போதுமாக இருந்தது. இவள் எங்கேபோய்க் கிடக்கிறாள்…!
கண்களைத் திறக்க இயலாமல் ‘அம்மா… அம்மா…’ என்று களைத்த குரலில் ஓரிரு தடவை எப்படியோ கத்திப் பார்த்தாள் அவள். அழைப்புக்குச் சுவரில் இருந்த கடிகாரம் இரண்டுமுறை அடித்துக் குரல் கொடுத்தது. அவ்வளவுதான்.
விழிகளை எப்படியோ சிரமப்பட்டுத் திறந்தபோது கரும் கும்மென்றிருந்த வானம் ஜன்னல் வழி தென்பட்டது. அங்கங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்களும்! கழுத்தைத் திருப்பி நடுக் கூடத்துக் கதவைப் பார்த்தபோது, அது சாத்தியிருப்பது விடிவிளக்கு ஒளியில் தென்படுகிறது.
குழந்தை அழுது அழுது களைத்துப் போய்விட்டது போலிருந்தது.
இப்போது லேசாகச் சிணுங்கிக்கொண்டு கிடந்தது. அவளுக்கு மயக்கம் சரியாகத் தெளியவில்லை. இருந்தும் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தலை கிறுகிறுவென்று சுற்றிக்கொண்டு வந்தது. தன் உடம்பிலிருந்து ஜீவன் முழுதும் வடிந்து போய்விட்டது போல் ஒரு அசதி… எழுந்து மூன்று நான்கடி வைத்தால்தான் தூளியின் பக்கத்தில் செல்ல முடியும். எழுந்து நின்றால் விழுந்து விடுவோமோ என்று பயமாக இருந்தது. சுவரில் சாய்ந்தவாறு அப்படியே உட்கார்ந்தபோது சிறிது ஆசுவாசமாக இருந்தது. கொல்லையில் நின்ற பவழ மல்லிகையின் மணத்தைச் சுமந்தவாறு ஓடிவந்த காற்று முகத்தில் ஸ்பரிசிக்க சிறிது சிறிதாகத் தலையின் கிறுக்கும் குறைந்துகொண்டு வருவதுபோல் தோன்றியது.
இப்போது மாடியில் குழாயிலிருந்து தண்ணீர் சடசடவென்று விழும் ஓசை கேட்கிறது. மாடியில்தான் அண்ணாவும், அண்ணியும், அவர்கள் குழந்தைகளும் படுத்துக்கொள்வார்கள். நேற்று காலையில் அண்ணி கூறியது இப்போது லேசாக ஞாபகம் வருகிறது.
‘ஏண்டி ருக்கு! எண்ணைக்கும் ராத்திரி பூரா இப்படிக் குழந்தையை அழப் போடுறே? நேத்தைக்கு ராத்திரியும் நானும் உங்க அண்ணாவும் தூங்கவே இல்லை…’ குழந்தைக்கு மருந்து எண்ணெயால் உச்சி வைத்தவாறு அண்ணி இப்படிக் கேட்டபோது, ருக்குவுக்குத் துக்கம் துக்கமாக வந்தது.
‘உம்… என்ன அண்ணி செய்ய! இந்த இழவு எடுத்த பிராந்தியை வேண்டாமுண்ணு சொன்னா அம்மா விட்டாத்தானே! அதுவும் கூட ஒரு சொட்டு தண்ணீர் சேர்க்காமல் ராத்திரி படுக்கும்போது அம்மா குடிக்க வச்சு விடுகிறாள்… அதைக் குடிச்சுட்டுக் கிடந்தால், குழந்தை அழுதா மட்டுமில்லே, வீடே தீப்பற்றி எரிஞ்சாலும்கூட எனக்குத் தெரிய மாட்டேங்குது. நினைவு தவறி செத்துக் கிடப்பதுபோல் கிடக்குறேன்…’ என்றாள் ருக்கு.
பரணையிலிருந்து ஏதோ பாத்திரத்தை எடுத்துக்கொண்டிருந்த அம்மா, ‘ஆமா… அதுவும் வேண்டாம்… தலைச்சன் பேறு… பிரசவ ரட்சைக்கு ராத்திரி ஒரு நேரமாவது ஒரு மடக்கு இதைக் குடிக்காட்டி நீ எப்படி திராணியா இருந்து குடும்பம் நடத்தி குப்பைக் கொட்டப் போறே? அந்தக் காலத்தில் ஒவ்வொரு பிரசவத்துக்கும் நான் எத்தனை புட்டி குடிச்சிருக்கேன் தெரியுமா…?’ என்றாள் வீராப்புடன்.
‘அதுதான் உடம்பில் தெரியுதே’ என்று அம்மாவைக் கேட்காதவாறு ருக்கு தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டாள்.
‘அவதான் அதைக் குடிச்சு மயங்கிக் கிடக்காண்ணு தெரியுமே… நீங்களாவது அழுகிற குழந்தையை எடுக்கப்படாதா? ராத்திரி பூரா வீல் வீல்ண்ணு இப்படியா குழந்தையை அழப் போடுவது?’ என்று அண்ணி அம்மாவிடம் கேட்டாள் உரிமையோடு.
‘ஆமா… ராத்திரி நீதானே மாடியிலேந்து கீழே இறங்கி வந்து அழுகிற குழந்தையை எடுக்கிறே! நேத்தைக்கு அசதியில் கொஞ் சம் கண்ணசந்துட்டேன்… கடைசியில் குழந்தை அழுவதைக் கேட்டு நான் அல்லாமல் எந்த உருவம் வந்து எடுத்தது?’ என்று எரிச்சலுடன் கூறிவிட்டு அம்மா விடுவிடுவென்று அடுக்களைக் குள் புகுந்துவிட்டாள்.
‘ருக்கு… எதுக்கும் இப்படி ராத்திரி குழந்தையை அழப் போடாதே… அது புள்ளைக்குத் தோஷமுண்ணு சொல்லுவா…’
தான் அசடு வழிய விழிப்பதைக்கண்டு, அங்கே இங்கே பார்த்து விட்டு தன் செவியில் அண்ணி குசுகுசுத்தாள். ராத்திரி நேரம் பக்கத்து வீடுகளில் – பக்கத்து வீடுகளில் மட்டுமென்ன, நம்ம வீட்டிலும்தான், இங்கே நானும் உன் அண்ணாவும் இருக்கிறோம்; உங்க அப்பா அம்மா இருக்கிறாங்க – இப்படிப் புருஷன் பெண்டாட்டிகள் சேர்ந்து ‘படுக்கிற’ நேரம்… அந்தச் சமயத்தில் பச்சைப் புள்ளை வாய் மூடாமல் அழுதால், அந்த அழுகை வழி அதன் ஜீவனும் அங்கேபோய் அடைந்து விடுமுண்ணு சொல்லுவா… அது புள்ளைக்கு ஆயுசுக்குக் கெடுதல் இல்லையா… அதுதான் சொல்றேன்…’
இப்போது குழந்தை மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டது. சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ருக்கு சுதாரித்துக்கொண்டு எழுந்தாள். முடியாதிருந்தும் மெல்ல அடி வைத்துத் தூளியின் அருகில் சென்றாள். குனிந்து குழந்தையைக் கையில் எடுத்தாள். கட்டிலுக்குத் திரும்பி வருவதற்கிடையில் நடுக் கூடத்துக் கதவை மெல்ல அவள் கை தள்ளிப் பார்த்தபோது, அது உள்ளிருந்து தாள் போட்டிருப்பது புலப்பட்டது. அப்பா அங்கேதான் படுத்திருப்பது வழக்கம்…
கட்டிலில் வந்து உட்கார்ந்துகொண்டு குழந்தையை மடியில் கிடத்தி, பாலூட்டிக் கொண்டிருக்கும்போது, கூடத்துக் கதவு மெல்லத் திறக்கும் ஓசை கேட்டது, உடுத்தியிருந்த பதினாறு முழப் புடவையைச் சரி செய்தவாறு வரும் அம்மாவின் வாட்டசாட்டமான உடம்பு தென்படுகிறது.
‘பரவாயில்லை… அம்மா… புள்ளையை நான் எடுத்தாச்சு… நீ போய்ப் படுத்துக்கோ…’ என்றாள் ருக்கு அர்த்த புஷ்டியுடன் சிரித்தவாறு!
– 24.08.1972
– தீபம் 4.1973
– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.