ஜன்னல் வழியே வெளியே பார்த்துகொண்டிருந்தேன், கீழே மாமியாரும் மருமகளும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருக்கவில்லை.
ஆனால் நெருங்கி உட்கார்ந்துள்ளதை பார்ப்பதில் ஒரு அன்னியோன்யம் தெரிநதது. பொதுவாக மகிழ்ச்சியான சூழ்நிலை அங்கில்லை என புரிந்தது, பெருமூச்சு வநதது எனக்கு, என்ன செய்வது இன்றோடு பதினைந்து நாள் தன் மகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த பதினைந்து நாட்களும் மருமகளும் மாமியாரும் என்ன் செய்வார்கள்? உனக்கு நான் எனக்கு நீ! என்ற நிலையில்தான் இருந்தார்கள்.
உயிருக்கு போராடுபவர்களுக்கோ வயது முப்பதுக்குள்தான் இருக்கும். நல்ல அடி தலையில் பட்டிருக்கிறது, டாக்டர்கள் கெடுவை மாற்றி உயிர் பிழைக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். நான் அங்கு பணிபுரிவதால் அவர்கள் என்னிடம் அதிகமாக எதிர்பார்த்தார்கள். நான் ஏதாவது செய்யமுடியுமா என்று! என்னால் முடிந்த அளவு உழைப்பை அவர்களுக்கு அளிக்க முடியும். பண உதவி செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை. அவர்களுக்கும் என் நிலை தெரியுமாதலால் அதனை எதிர்பார்க்கவில்லை. நான் தினமும் டாக்டரிடம் பேசி நோயாளியின் நிலையைப் பற்றி அவர்களிடம் விளக்குவேன். அதைக் கேட்டுக்கொண்டு அழுது கொண்டிருப்பார்கள்.
டாக்டர் நோயாளியைப்பற்றி ஓரளவுதான் உறுதி தந்திருந்தார்.அடி பட்டவுடன் நோயாளி ஓர் இரவு முழுவதும் சாலையில் கிடந்துள்ளார். மறு நாள் ஏதோ புண்ணியவான் அவரை இந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னரே செய்தி கேள்விப்பட்டு மனைவி, அம்மா குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள்.
பின்னர் உறவினர் ஒருவரின் யோசனையின் பேரில் என்னை சந்தித்தனர். நானும் ஒரு வகையில் அவர்களுக்கு உறவினர் என்ற முறையில் அவர்களுக்கு உதவி புரிந்துகொண்டுள்ளேன். டாக்டரும் முடிந்தவரை முயற்சிசெய்வோம் என்று கூறினார்.
எனக்கும் அடிபட்டவரின் நிலைமை தெரியுமாதலால் அந்த தாயிடமும், அவர் மனைவியிடமும் தைரியமாக பேசமுடியவில்லை.
ஒரு முறை நோயாளியின் நிலைமை சிக்கலாகிவிட்டது, டாக்டரும் வெளியில் காத்திருக்கும் உறவினர்களுக்கு செய்தி சொல்லும்படி என்னிடம் சொல்லிவிட்டார். நான் வெளியே வந்து துக்கத்துடன் அவர்களை தேடினேன். அவர்கள் இருவரும் சிறிது தூரம் தள்ளி அமர்ந்து பிரார்த்தனை செயது கொண்டு இருந்தார்கள். நான் எப்படி அவர்களிடம் விசயத்தை சொல்வது என விழித்துக்கொண்டிருந்தேன்.
அரை மணி நேரம் கழித்து ஒரு நர்ஸ் என்னிடம் வந்து நோயாளி நிலைமை தற்போது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். நான் இந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தேன். ஒருவேளை அவர்களின் பிரார்த்தனையின் பலனாக கூட
இருக்கலாம் எனவும் நினைத்தேன்.
இப்படியே இன்றுடன் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. அடிபட்டவரின் நிலைமை திருப்தியாக இருந்தாலும் உயிருக்கு உததரவாதமில்லாமல் இருந்தது. மாலை ஆறு மணி இருக்கும் இருவரும் என்னிடம் வந்து டாக்டர் கூப்பிடுவதாகவும் மிகுந்த பயத்துடன் கூறினர். நானும் பதட்டத்துடன் டாக்டரின் அறைக்கு ஓடினேன். டாக்டர் கவலை நிறைந்த முகத்துடன் இனி கஸ்டம்தான் எப்படியாவது சமாதானம் செய் என்றார்.
என்கால்கள் நடுங்க ஆரம்பித்தன.’மரணம்’ என்பது இயற்கை என எவ்வளவு தூரம் நினைத்தாலும் நம்பிக்கையோடு காத்திருக்கும் அவர்களுக்கு எவ்விதம் ஆறுதல் சொல்வது.?
வேகமாக வந்த இருவரும் என் பேயறைந்த முகத்தை பார்த்தவுடன் ஏதோ புரிந்து கொண்டதைப் போன்று கண்கலங்கி நின்றனர்.சிறிது நேரம் கழித்து அந்தப்பெண் என்னிடம் அவரோட உறுப்புகளாவது யாருக்கும் பயன்படும்னா எடுத்துக்கச்சொல்லுங்க
என்று சொல்லி மாமியாரின் கையைப்பிடித்துக்கொண்டால்.
நான் இந்த் சூழ்நிலையில் எதுவும் பேசாமல் கண்ணீர் வழிய நின்றேன்.