தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,923 
 
 

வயிற்றுக்குள், பிரளயமே நடந்து கொண்டிருப்பது போல் இருந்தது.
சுற்றி கொண்டிருக்கும் மெஷினுக்குள் எதுவுமே போடாமல், சுற்றி சுற்றி சூடாவது போல், வெற்று வயிறு,”தீ’யாக எரிந்தது. எதையும் தூக்கி உள்ளே போடவும் பயம். நினைக்கவே முடியவில்லை.
மேஜை முழுவதும் பழங்கள், பிஸ்கட்கள், பலகாரங்கள், ஊட்டச்சத்து பானங்களென்று, அவரால் முடிந்தவரை அடுக்கி வைத்திருந்தார். பார்த்தாலே வாந்தி வந்து விடுவேனென்று பயமுறுத்தியது.
மனிதர்கள் வாசனை, பேச்சு சப்தங்கள் மேல் கூட வெறுப்பு கொப்பளித்தது. இப்போதைக்கு பிடித்ததெல்லாம், “கப்சிப்’பென்ற இருட்டு மட்டும் தான்.
கணவர் பயப்பட்டார்; அத்தை சிரித்தார்.
“”அட போடா பைத்தியக்காரா… எல்லா பொண்ணுகளுக்கும் உள்ளது தாண்டா… இப்போ உண்டாகி, பெத்து எடுக்குற வரைக்கும், ஆஸ்பத்திரி, வீடுன்னு அலையுறதால, மருந்து, மாத்திரைன்னு பிடிச்சுக்கிட்டு இருக்குது…
உயிர்“”அந்த காலத்துல, சத்து குறையிருக்குறது தெரியாம, சாம்பல், சுண்ணாம்பு கட்டி, செங்கல், மண்ணுன்னு சாப்பிடுவோம்… முத்து முத்தா பெத்து எடுக்கல… மேலேயிருக்கிறவன் மேலே பாரத்தை போடுடா… கொடுத்தவனுக்கு வெளியே கொண்டு வரவும் தெரியும்டா,” என்றார்.
அவர் துடிப்பை பார்க்க பாவமாக இருந்தது. உண்மையிலேயே, என் நிலைமை இப்படி ஆகுமென்று நினைக்கவே இல்லை.
நாள் தள்ளி போனபோது, “குபீர்’ என்று ரெண்டு பேரும் அடைந்த மகிழ்ச்சி. டாக்டர், “கன்பார்ம்’ செய்ததும், அப்பவே அங்குள்ளவர்கள் அனைவருக்கும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்.
அந்த நேரம், எதை வாங்கி தந்தாலும் ஆர்வமாக சாப்பிட்டேன்.
நாற்பத்தைந்து நாள் போயிருக்கும். தகதகன்னு கொதித்த சோற்றை கிளறி விட்டுக் கொண்டிருந்தவள், குமட்டிய அந்த வாசனையை உள்ளே முழுவதும் இழுக்கவில்லை. பாத்ரூமை நோக்கி கால்கள் ஓட, ஒன்றும் புரியவில்லை. குடலை புடுங்கி முதல் வாந்தி கொட்டியது.
ரொம்பவே தளர்ந்து, நிற்பதற்கே கால்கள் தள்ளாட, தாங்கி பிடித்த அவர் முகத்தின் வேதனையை காண, அந்த நிலைமையிலும் வலித்தது.
அன்று முழுவதும் சாப்பாட்டை நினைக்கவே பிடிக்காமல், பட்டினி கிடந்தேன்.
“”கொஞ்சமாவது சாப்பிட்டு தூங்கு அனு… என்னால, பார்த்துக்கிட்டு இருக்க முடியலை.”
இரண்டு நாட்களாக தொடர்ந்த அவரது ஆதங்கத்திற்காக, முயற்சி செய்து பார்ப்போமென்று, நாலே நாலு பருக்கையை உருட்டி, நாக்கில் வைத்தேன். அரைமணி நேரம் கடந்த நிலையில், ஓரளவு சாப்பாடும், தண்ணீரும் உள்ளே செல்ல துவங்க, சிரித்தேன்.
“”ஒரு உருண்டை சாப்பாட்டுலேயும், தெம்பு கிடைக்கதாங்க செஞ்சிருக்கு. நான்தான் பிடிவாதமா சாப்பிடாம, தூக்கமும் வராம கிடந்து கழிச்சிருக்கேன்,” என்ற வார்த்தைகளை சொல்லி முடிக்கவில்லை.
அம்மாடி, சாப்பிட்ட சோறும், தண்ணீரும் பத்து மடங்காக, வெளியேற, வெளியேற… பாத்ரூமென்றும் பாராமல் சாய்ந்து விட்டேன். தொண்டையும், வயிறும் எரிந்த எரிச்சல்… கண்ணீரே வந்து விட்டது!
“”மாதுளை டானிக் குடித்தால், வாந்தி கட்டுப்படும்ன்னு சொல்வாங்க… நாம டாக்டர்கிட்ட காட்டிட்டு வாங்கலாம்,” என்று தேற்றினார் அத்தை.
“”குடி… குடி… குடிச்சிரு அனு,” அவர் துடித்தார்.
மூக்கை பிடித்தபடி ஊற்றினேன். போன வேகம் முடியவில்லை, அறுத்து பிடுங்கி ஊற்ற, சுருண்டு விட்டேன்.
“”என்னை விட்டுருங்க… சாப்பிடுற ஆசையை விட, வாந்தி, எரிச்சல், படபடப்பில்லாமல், வெறும் வயித்தோட இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்,” வேதனையோடு மன்றாடினேன்.
“”பிடிக்கலை, பிடிக்கலைன்னு, வெறும் வயிற்றோட கிடந்தால், பிரட்டதாம்மா செய்யும்… எதையாவது கொஞ்சமா சாப்பிட்டு, சத்து டானிக், மாத்திரை விழுங்கினால் தான் தெம்பு கிடைக்கும். உ<டம்பு சோர்ந்து கிடந்தாலும், அசதியாதாம்மா இருக்கும்,” என்றாள் அத்தை.
நாள் போக போக, நாள் ஒரு ஆசையும், பொழுதுக்கு ஒரு சாப்பாடுமாக மாறி, காலும், அரையுமாக பிய்த்து கொறித்தும், முடியவில்லை. எச்சில் ஊறிக் கொண்டிருந்த நாக்கிற்கு, மாங்காய் அருமையான விருந்தாகயிருந்தது. குளிப்பதற்கும், ஏன் தலைமுடியை தொடுவதற்கே குமட்ட, நொந்தே போனேன்.
இப்படியே செத்து, செத்து பிழைத்து… நாட்களை உற்று பார்த்து… ஒரே இடத்தில் நிற்பது போன்றே பிரமை ஏற்படுத்தி, மலையாக கனத்த நாட்கள், ஒரு வழியாக மெல்ல நகர்ந்து, மாசம் ஏழு தொட்டது.
அம்மா, ஒரே ஒரு கண்டிஷன் நங்கூரமாக போட்டாள்…
“”குழந்தைன்னு உருவாகிடுச்சு. உன்னோட விருப்பு, வெறுப்புகளை தூக்கி கடாசு என்று,” சொல்லி விட்டாள்.
என் குழந்தைக்காக சரிந்து தான் படுத்தேன்.
முடிந்தோ, முடியாமலோ எழுந்து, உட்கார்ந்து தான் திரும்பி படுத்தேன்; தாகம் எடுக்காமலே நிறைய தண்ணீர் குடித்தேன்; இரவு முழுவதும், விழித்தே கிடப்பது போல் கிடந்தேன்.
அவர் கண்களில் நீர் கட்டி விட்டது.
“”போதும் அனு… இந்த ஒரு பிள்ளைக்கு மேலே ஆசை வைக்க கூடாது,” என்றார்.
“எல்லாரும் நினைக்குறது தான். அடுத்தது பெத்துகாமலாயிருக்க போறே… பார்ப்போமே…’ அத்தை சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது. ஏனோ அவர் சொல், பெரும் ஆறுதலளித்தது.
எத்தனையோ கட்டிபோட்ட கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு… அந்த நாளும் வந்தது.
லேசாக சின்ன வலிதான் எடுத்தது.
“”ஒண்ணுமில்லைமா…. தாங்கிக்கிறலாம்… பயப்படாம தைரியமாயிருக்கணும்…” அம்மாவிடமும், அத்தையிடமும் தான் எவ்வளவு தடுமாற்றம். ஏன் என்று புரியவில்லை?
அதுவும் சிறிது நேரத்தில் தெரிய ஆரம்பித்தது.
“சுருக், சுருக்’ என்று உடம்போட நரம்பு எலும்புகளெல்லாம் அறுந்து போன மாதிரியான வலி வர, “அம்மா’ என்று வேகமாக கத்தவில்லை. முனங்கினேன். நாக்கு <உழண்டு, தலையை போட்டு திருகி, வலியை மறைக்க முயன்றேன். உடம்பெங்கும், “குப்’பென்று வியர்வை ஆறு ஓட, மூச்சடைத்தது; படுக்க முடியவில்லை.
குளுக்கோஸ் ஏறியது. வலி குறைய, அத்தையை பிடித்து உட்கார்ந்தேன். எதனிடமிருந்தோ விடுபட்ட நிம்மதியில், தூக்கம் கண்களை தழுவ… அடுத்த நொடி பெரும் வலி!
அந்த ஒரு மணி நேரம் தொடர்ந்த போராட்டம் முடிய, அடுத்த ஒரு மணி நேரத்தில், வானமே மொத்தமாக <<இடிந்து, தலையில் விழுந்துட்ட பெரும் வலி!
புதிய உயிரின் போராட்டம்… “அம்மா…’ன்னு வேகமாக உச்சரித்தேன்.
“கடவுளே… காப்பாற்று!’ மனசு இரைய, வேர்வையும், கண்ணீரும் கணக்கில்லாமல் ஊற்றியது. மொத்த உடம்பும் வேதனையில் தளர்ந்த நேரம், “ம்ம்… பிரசவ வலிதான்…’ என்று, என்னை சுமந்த ஸ்ட்ரச்சர், பிரசவ வார்டு நோக்கி ஓடியது.
கடுமையான போராட்டத்திற்கு பின், மூச்சையெல்லாம் திரட்டி, ஒரே மூச்சில் முக்கிய தருணம்… புது உயிர் ஜனித்தது. எல்லா வலிகளும் உடம்பை விட்டு ஓடிவிட்ட பெரும் நிம்மதி! Œந்தோஷம். பூ பந்து போலிருக்கும் குழந்தையைப் பார்க்க பார்க்க… எதையுமே முன்னே புரட்டி பார்க்க முடியாத சந்தோஷம் கிடைத்தது.
தலையை தடவி விடும் அவர் கையை பிடித்தேன்.
“”ஏன் அனு… நைட்டெல்லாம் தூங்கவே மாட்டேங்குதே. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே… ஏம்மா… மூணு மாசம் முடிஞ்சும், தூங்காம படுத்துதே, எப்பதான் சரியா வரும்,” என்ற வாஞ்சையான அவரது முகத்தை பார்த்து, அத்தை சிரிக்க தான் செய்தார்.
“”டேய்… இதென்ன ஆடு, மாடு குட்டிகளா? உடனே எழுந்து நடக்குறதுக்கு… பெத்து போட்டுட்டா முடிஞ்சுதா நம்ம கடமை. இனிமேதான போராட வேண்டி இருக்கும். நீ ஒண்ணும் சங்கடப் படாதப்பா,” என்றாள் அத்தை.
“”சிவா… பிள்ளையோட ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலேயும், தாய் படுற பாடு கொஞ்சநஞ்கம் கிடையாது. எங்க ரத்தத்தை உறிஞ்சி, நோய், நொடிகளுக்கு கூடவே கழிஞ்சு மாய்ஞ்சாலும், எந்த தாயும், பெத்த பிள்ளைங்களை ஒட்டுண்ணிகளா நினைக்கிறது இல்லப்பா.
“”பிள்ளையால வர்ற கஷ்டங்களை, பனிக்காடு போல நினைக்கிறதால, குறும்பு செய்யுறதை பார்க்கும் போது, சுகத்தை அனுபவிச்சு மறந்து போறோம்பா… இது கூட தாய்மைக்கு உரிய பலவீனமாக கூட இருக்கலாம்,” என்றதும், அவர் முகம் ஏகத்துக்கு வாடியதும், ஒன்றும் புரியவில்லை.
அத்தையின் மடியில் மெதுவாக தலைவைத்தவர் பேச துவங்கினார்.
“”இப்படி ஒரு உயிரை நோகடித்து, வதைத்து வர்ற, உயிர்கள் போடுற ஆட்டத்தை பார்க்க முடியலைம்மா. இஷ்டத்திற்கு தீய வழிகள்ல போறதும், தாயை முதியோர் இல்லத்துல சேர்த்து, குஷ்டத்திற்கும் அருவருப்பான காரியங்களை செய்றதுக்கும், என்ன தகுதியிருக்குன்னு தெரியலை…
“”திருடன், தீவிரவாதி, மனித வெடிகுண்டு கொலைகாரன், கொள்ளைக்காரன், நாசக்காரன் மோசக்காரனா மாறி போறதுக்கு, அந்த உயிருக்கு என்ன உரிமையிருக்குது.
“”பிறப்போட போராட்டத்தின் அர்த்தமே இல்லாம போயிருதே. நல்லா வாழுற அந்த நாற்பது வருட வாழ்க்கையை, தாய்க்கு நன்மையாக்கி தர முடியாத உயிர்கள், பிறந்தென்ன லாபமிருக்குது?
“”தன் பிறப்போட வேதனை புரியலைன்னாலும், பிள்ளை வர்ற கஷ்டங்களை பார்த்து திருந்தாத ஜென்மங்களெல்லாம், மனுஷ ஜென்மங்களே கிடையாதும்மா,” என்று அவர் பேச, பேச கண்ணீர் கரகரவென வழிந்தது.
அத்தை பெற்ற பிள்ளை போல, என் பிள்ளையும், பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் உருவாகி, நாளைய பாரதம், சோலைகளாக மட்டுமே காட்சி தர வேண்டுமென்று இறைவனிடம் இறைஞ்சினேன்.

– மர்ஜான் பாரூக் (ஆகஸ்ட் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *