கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 3,879 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாங்கள் யாரும் அதை ஒரு நாயாகவே நினைக்கவில்லை! எங்களில் ஒருவராகவே, குடும்பத்தின் ஒருவராகவே அதையும் நினைத்துக் கொண்டிருந்தோம்!

சமையலறை முன் ஹால், படுக்கையறை நடுத்துண்டு, சாப்பாட்டு அறை என்று நாங்கள் எங்கிருந்தாலும், அதுவும் அங்கிங்கெனாதபடி எங்களுடன் இருக்கும்.

நாற்காலியில் உட்கார்ந்திருந்தால், கழுத்தை முழங்காலில் வைத்து தலையை மடியில் சாய்த்தவாறு நின்று கொண்டிருக்கும். பஞ்சு போன்ற அதன் கழுத்தின் வெள்ளையை எங்களையறியாமலே கைதடவிக் கொடுக்கும். தட்டிக் கொடுக்கும். தடவலின் சுகம் தலையை மேலும் மடிமீது அழுத்திக் கொள்ள கண்களை உருட்டி மேல் நோக்கிக் கூர்மை யாகப் பார்க்கும். அந்தப் பார்வையில் பாசமும், நன்றியுணர்வும் கரைந்தொழுகும். முதுகின் மேல் வளைந்து நிற்கும் வால் தன்பாட்டில் ஆடிக்களிக்கும். அரசவைப் பெண்கள் ஆட்டும் சாமரம் போல்.

“எங்கோ புழுதி மண்ணில் கிடந்து வந்துவிட்டு இப்போது மடி கேட்கிறதோ” என்று செல்லமான கோபத்துடன் தலையைத் தள்ளி விட்டால் முன்கால் இரண்டையும் தூக்கி ஒரு உரிமையுடன் மடி மேல் இருத்திக் கொண்டு சில்லென்றிருக்கும் முகத்தின் கறுப்பு நுனியை காதடியிலும், கழுத்தடியிலும், கன்னத்திலும் வைத்து வைத்து எடுக்கும்.. ஏதோ ரகசியம் கூறுவதைப்போல.

எங்கள் அத்தனை பேருடனும் எப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது. அதுவும் வந்து சேர்ந்த ஒரு ஆறேழு மாதங்களில்.

வந்த புதிதில் ஏதாவதொரு கதிரைக்கடியில் அல்லது எங்காவது ஒரு மூலையில் பதுங்கி நின்றபடி மெதுவாகத் தலையை நீட்டி பயம் நிறைந்த கண்களால் எங்களை ஒரு பரபரப்புடன் பார்ப்பதும் முகத் தைத் திருப்பிக் கொள்வதுமாக…… கொஞ்சமாக பால் கரைத்து ஒரு சிரட்டையில் ஊற்றி வைத்துவிட்டு ஆளுக்கொரு பக்கம் மறைந்து கொள்வோம்.

பயந்த பார்வையுடன் மெதுவாக வெளியே வரும். சிரட்டைக்குள் வாயும், சிரட்டைக்கு வெளியே பரபரத்த கண்களுமாய் நின்றபோது எங்களில் யாரோ ஒருவர் கண்ணில் பட்டுவிட்டோம் போலிருக் கிறது. மிரண்டு திரும்பிய வேகத்தில் சிரட்டை பிரண்டு சிமிந்தித் தரை முழுக்கப்பால் … பாலைத் துடைத்து விட்ட பிறகும் பிசுபிசுப்புப் போகவில்லை. ஈ மொய்ப்பும் போகவில்லை. முழு ஹாலையுமே தண்ணீரூற்றிக் கழுவ வேண்டியதாயிற்று.

பிறகு பிறகு மலமள்ளி, ஜலம் துடைத்து நீரூற்றிக் கழுவிய அத்த னையத்தனை பொறுமைகளுக்கும் அன்றைய அந்தப்பால் துடைப்பே கன்னி ஆரம்பமாகிவிட்டிருந்தது.

ஒரு வாரமான பின் மெது மெதுவாக வெளியே வந்து காலைச் சுற்றிச் சுற்றித் திரிய ஆரம்பித்தது. காலோ, வாலோ லேசாக மிதிப்பட்டு விட்டால் போதும், ஏதோ கொலை விழுந்து விட்டதைப்போல் கத்திக்கொண்டு ஓடிப் பதுங்கிக் கொள்ளும். பிறகு மெதுவாக எட்டிப் பார்க்கும். மெல்லமாக வந்து ஒட்டிக் கொள்ளும். இப்படிப் பழகத் தொடங்கியதுதான். இப்போது எப்படி லயித்துக் கிடக்கிறது… எங்களில் ஒருவராக.

எங்களுக்கு, ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்னும் நினைவு எப்போதுமே இருந்ததில்லை.

“பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த பெண்களை மிரட்டி…” போன்ற கதைகள் காதுகளுக்கெட்டும் நேரங்களில் கூட இந்த நாய் வளர்க்கும் எண்ணம் எங்களுக்கு ஏற்படவில்லை.

எப்படி ஏற்படும்…? நாங்கள் ஒரு நாயை வளர்க்க, அது றோட்டில் போகும் யாராவது ஒரு சிங்கள மனிதனைக் கடிக்க, அவன் ஊரைக் கூட்ட “தமிழனின் நாய் சிங்களவனைக் கடித்து விட்டது” என்னும் இன அடையாளத்துடனும் “நாய்தானா அல்லது நாயுருவில் வந்திருக்கும் புலியா” என்னும் அரசியல் அலங்காரங்களுடனும் தேரோட்டப் படும் சூழ்நிலையில் …. “நாய் கடிக்கும்” என்கின்ற ஒரு இயல்பான நிகழ்வுகூட அரசியலாக்கப்பட்டுவிடும் ஒரு ஆபத்தான சூழல் எங்களுக்கு இந்த நாய் வளர்க்கும் எண்ணம் எழவிடாமல் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்தது!

“உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும்ங்க” என்று ஆபீசில் இருந்த எனக்கு வீட்டை நினைவுப்படுத்திய எனது இல்லதரசி என்னுடையம்…ம்…ம்…. களுக்கிடையே கூறி முடித்த செய்தி இதுதான்.

“சுதா ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டு விட்டுப் போயி ருக்கிறது. ஆபீசில் யாரோ கொடுத்தார்கள் என்று நேற்று வீட்டுக்குக் கொண்டு சென்றதாம்… இப்ப எதுக்கு நாய்குட்டியும் பேய்குட்டியும்… என்று வீட்டில் ஒரே ரகளையாம்… விடிந்தும் விடியாததுமாக வேலைக்குப் போகும் வழியில் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறது… அத்தான் வந்ததும் கேட்டுப்பார். வேண்டாம் என்றால் நாளைக்கு வந்து கொண்டு போய்விடுகின்றேன், என்றது… அழகா இருக்குப்பா… இதோ கதிரைக் கடியில் பயந்து போய்…”

‘சுதா’ என்பது ‘சுதாகரன்’ என்பதன் செல்லச் சுருக்கம். மனைவியின் அண்ணன்! ‘வீட்டில்’ என்பது அவருடைய மனைவி. மூத்த சகோதரனை அண்ணன் என்று கூறி உறவுடன் விளிக்கும் மரபுகள் யாப்புகள் எல்லாம் பட்டினங்களில் உடைந்துபோய் வெகுகாலமாகி விட்டது.

போனில் மனைவி என்றதும் கொஞ்சம் பயந்துதான் போனேன். “லேசாகத் தலை சுற்றுகிறது. வியர்த்துக் கொண்டு வருகிறது. கொஞ்சம் நேரத்துடன் வருகின்றீர்களா” என்பதற்கு மட்டுமே போன் வரும்.

“பிரஷர்…”

ஏன் எப்படி என்பதற்கெல்லாம் விடை தெரியாது. டொக்டரிடம் கூட்டிப்போனால் “ஓட்டோவிலா வந்தாய்?” என்று என்னிடம் கேட்டு விட்டு, “அம்மா நிற்காதீர்கள் உட்காருங்கள்… நர்ஸ்….” என்று பரபரத்தவர் புஷ் புஷ் என்று காற்றடித்து பிரஷரைப் பார்த்துவிட்டு “மைகோட்” என்று முனகியபடி சக்கர நாற்காலியில் அமர்த்தி … எனக் குப் பயமாகப் போய்விட்டது. போதும் போதும் என்றும் ஆகிவிட் டது. அட்மிட்’ செய்து இரண்டு நாள் வைத்திருந்து பிரஷரை வழமைக்குத் திருப்பி, சின்னதாக என்னை ஒரு கடன்காரனாக்கி கூட்டிப் போகச் சொன்னார்கள்.

“வாரத்துக்கொரு தடவை கூட்டிவர வேண்டும். இந்த மருந்து மாத்தி ரைகளை வாங்கி ஒழுங்காகக் குடிக்க வேண்டும். கட்டிலை விட்டு அனாவசியமாக இறங்கக் கூடாது. குனிந்து எதையும் தேடவோ எடுக்கவோ கூடாது…” என்ற கட்டளைகளுடன் !

“ஷீ இஸ் வொரிட்… திங்கிங் டூ மச்… ட்றைடு கீப் ஹர் நோர்மல்…கூட யோசிக்கக்கூடாது தெரியுமா யோசிச்சு யோசிச்சு மண்டையைக் குழப்பிக்கிட்டா பிரஷர் எறங்காது…” என்று உபதேசங்களும் கூறி அனுப்பினார். அன்றைய பிரஷர் நிலை அடுத்து வர வேண்டிய திகதி ஆகியவற்றை அடையாளமிட்டு ஒரு அட்டையும் கொடுத்திருந்தார். அன்றிலிருந்து ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைச்சல்தான்.

“சதா எதையாவது நெனச்சி நெனச்சி மனதை பாரமாக்கிக்கிடாதீங்க… உங்களுக்கும் வருத்தம் எங்களுக்கும் எடஞ்சல்… நான் இல்லையா… அந்த மாதிரி மனசை பக்குவப்படுத்திக்கிடணும்…” டொக்டரின் உபதேசங்களை மனைவியிடம் நினைவுபடுத்தினேன்.

“உங்களுக்கென்ன…? காலையில் கெளம்பிப் போயிருவீங்க… எனக்கு அப்படியா? நாள் முழுக்க இந்த வீட்டைத்தான் சுற்றிச் சுற்றி வரவேண்டும். ஒரே நினைப்புத்தான் வரும். வேறு என்ன செய்ய முடியும், என்னால்… வலிய நோயை இழுத்துக்கொள்ள எனக்கு மட்டும் ஆசையா…” மனைவியின் கூற்று எனக்கு நியாயமாகவே படுகிறது.

மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் தான் எனக்கு வீட்டு நினைவே வருகிறது. அலுவலகச் சுமை வீட்டை மறக்கடித்து விடுகிறது. அவளுக்கு அப்படியா? இருபத்து நாலு மணித்தியாலமும் வீட்டையே சுற்றிச்சுற்றி வலம் வருகையில் வேறு வேறு நினைவுகள் எப்படி வரும்..? எங்கிருந்து வரும்..?

***

இன்றைய தொலைபேசியில் அதொன்றும் இல்லை என்பதே எனக்கு திருப்தியாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது.

என்ன செய்கிறது? என்று கேட்டேன்.

“வேர்த்துக் கொட்டுகிறது ‘பட பட’ வென்று வருகிறது!”

என்பதற்குப் பதிலாக “இதோ படுத்திருக்கிறது….அதே இடம்தான் செவுத்துப் பக்கம் மூஞ்சை வைத்துக் கொண்டு…அசையுதே இல்லைப்பா….கண்கள் மட்டும் வீடு முழுக்க அலைகிறது….உங்களுக்கு தெரியுமா நாலு கண்கள் இதுக்கு..!”

“என்ன நாலு கண்களா..?”

“ம்ம்….ரெண்டு கண்களுக்கும் மேலாக வட்டமான கறுப்புக் கோடுகளுக்கு நடுவில் இரண்டு வெள்ளைப் புள்ளிகள் ….”

மனைவியை அது ஆக்கிரமித்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். “ஆண் குட்டியா பெட்டையா?” என்று கேட்டேன்.

“ஐயய்யோ அதைக் கேட்க மறந்துட்டேனே!”

“கேக்குறது என்னத்தை…தூக்கி வயித்தடியைப் பாருங்களேன்…”

“ஐயோ எனக்குப் பார்க்கத் தெரியாது நீங்க வந்து பாத்துக்கங்க… ஒன்னுக்கிருக்க போச்சுன்னா பார்த்துச் சொல்லிருவேன்…”

“பைத்தியம் உங்களுக்கு…ஆண் குட்டின்னா காலைத் தூக்கிக்கிட்டிருக்கும்னு நெனைக்கிறீங்களா…இது குட்டிப்பா…அதுக்கெல்லாம் வயசுக்கு வரணும்… ஆளாகணும்…”

இன்று ஒரு இயற்கை வைத்தியம் வந்திருப்பதாகவே எனது உள்ளுணர்வு கூறிற்று.

“வேர்த்துக் கொட்டுகிறது. படபடப்பாக’ இருக்கிறது” என்பதற்கு பதிலாக அதன் கண்கள், கண்களுக்கு மேலிருக்கும் வெள்ளைப் புள்ளிகள் ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வம்…

***

“காலையில் இருந்து சனாவைக் காணலை. தேடித் தேடிக் களைச்சுப்போயிட்டேன்… அவளும் தோட்டம் முழுக்க தேடிட்டா…ரெண்டு பேரும் தேடாத எடம் இல்லை. நான் பயந்தே போயிட்டேன். பிறகு ரொம்ப நேரம் கழிச்சு எங்கேயோ இருந்து வந்துச்சுங்க…”

மனைவியின் பரபரப்பு எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. தொழிலுக்கு நான், மகள், மகன் எல்லோரும் அதிகாலையில் கிளம்பிப் போய்விட்ட பிறகு மனைவியும் மனைவிக்குத் துணையாக மூத்த மகளும் மொட்டு மொட்டென்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு….அசைபோட்டு அசைபோட்டு மனதைக் குழப்பிக் கொண்டு கிடந்த நிலைமைகள் மாறி…

இந்தப் புதிய ஜீவனின் பின்னால் திரிந்து கொண்டு, அதற்கு ஊட்டவும், அதன் செய்கைகளை வேடிக்கை பார்க்கவும், ரசிக்கவும், காணாமல் போய்விட்டதோ என்று தேடி அலையவும்…

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. சின்னதாக ஒரு மணி வாங்கி அதன் சின்னக்கழுத்துக்கு ஒரு பெல்ட் போட்டு பெல்டில் மணியைத் கோர்த்து விட்டேன். இப்போது பார்க்க வேண்டும். சிலிங்.. சிலிங்..என்று சின்ன மணி ஓசையுடன் உள்ளேயும் வெளியேயும், வெளி யேயும், உள்ளேயுமாக அது ஓடித்திரியும் அழகு… மெட்டி போட்டுக் கொண்ட சின்னப் பெண்போல…

ஒரு நாள் உள்ளைறையிலிருந்து நானும், வெவ்வேறு இடங்களில் இருந்து மனைவியும் மகளும், மகனும் ஓடிவந்தோம். நல்லவேளை ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொள்ளவில்லை.

மணியோசை கேட்க வில்லை! சதா எங்களில் யாராவது ஒருவரின் காலடியில்தான் ‘சனா’ சுற்றிச் சுற்றி நிற்கும். எல்லோரும் இருக்கின்றோம். அதைக் காண வில்லை. அதைக் காணவில்லை என்னும் உணர்வு எங்கள் அனைவருக்கும் எப்படி ஒரே நேரத்தில் பொறி தட்டியது. டெலிபதிபோல்.

“தோட்டத்துக்குள் எங்காவது இருக்கும்….” நான் சமாதானம் கூறினேன். “தவளை ஒன்றைக் கண்டிருக்கும். அதன் வினோதமான தாவலும் தத்தலும் இதை அதைப் பின்னால் சுற்றப் பண்ணியிருக்கும். முன்னங்கால்களால் அதை அமுக்கிப் பிடிக்கும் பிரயாசையில் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்”

“மணிச்சப்தம் ஏன் கேட்கவில்லை ?”

“அது என்ன மனுசோழனின் ஆராய்ச்சி மணியா. இம்புட்டுக் காணும் ஒரு சின்ன மணி….வளையமும் சரியில்லே, கொக்கியும் சரியில்லே எங்கேயாவது விழுந்திருக்கும்”

இப்போது நாங்கள் எல்லோரும் தோட்டத்தில், நாலா புறமும் நயனங்களால் துழாவிக் கொண்டும் நாசிகளால் மோப்பம் பிடித்துக் கொண்டும்… தமிழ் வீடுகளில் இரவில் நுழையும் ஆமிக்காரர் போலீஸ்காரர் போல்… உற்று உற்றுத் தேடிக்கொண்டு…

எங்கள் வீட்டைச் சுற்றி சின்னதாக ஒரு தோட்டம். மூன்று பக்கம் சுவர் எழுப்பிய வீட்டுக்காரன் ஒரு பக்கத்தை மொட்டையாக விட்டு விட்டான். சுவர் எழும்பாத அந்த பக்கத்தில் வரிசை வரிசை யாக முட்கம்பியும் சுவர்போல் வளர்ந்து கிடக்கும் சப்பாத்துச் செடி மற்றும் பல்வகை செடி கொடிகளும், பூச்சி பொட்டுக்களுடன் கூடிய சூரிய ஒளிபடாத அடி மண்ணுமாக…. முட்கம்பி வேலி முடிகின்ற இடத்தில் ஒரு முதிர்ந்த பலாமரம். வானளாவி என்பதைப்போல. அடியிலிருந்து நுனிவரை காய்த்துக் கொண்டு.

பலாமரத்தடியில் சேறும் சகதியுமாக ஒரு குட்டை . குட்டை என்றால் சிறுகுளம் என்கிறது அகராதி. நகரத்துக் குடியிருப்புக்கள், வீடுகள் போல் நீர் வடிகால்கள் அமைக்கப்படாத சூழலில் குளிக்கும் கழுவும் தண்ணீருக்கான தஞ்சம் இந்தப் பலா மரத்தடிதான்.

குழியாக வெட்டி வெட்டி, தண்ணீர் நிறைந்து நிறைந்து, பலா இலை களும் பழுத்துவிடும் பலாப்பழச் சிதறல்களுமாக இது ஒரு விலக்கப்பட்ட பிரதேசமாகிவிட்டது.

ஆள் நடமாட்டம் தெரிந்தால் ஈ அளவு கொழுத்த கொசுக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்து வரும்.

இந்த குட்டையில் விழுந்திருக்கலாமோ என்னும் ஐயம் எனக்கு ஏற்பட்டது. கொஞ்சம் அவதானித்தேன். இல்லை என்பதில் ஒரு திருப்தி என்றாலும், எங்கே என்கின்றதில் ஒரு ஏக்கம். சப்பாத்துச் செடி வேலியின் இருண்ட அடியில் ஏதோ முனகுவதுபோல் ஒரு ஒலி கேட்கிறது.

குனிந்து பார்க்கின்றேன். இலைகளுக்கிடையில் தரையில் நிறை ந்து கிடக்கும் சருகுகளை மேலுயர்த்திக் கொண்டு ஏதோ நெளிகிறது. பாம்பாகவும் இருக்கலாம். அரனை என்றால் இவ்வளவு நீளமாக சருகுகள் மேலெழுந்து விலக நியாயமில்லை.

பாம்புதான்..!

பாம்பு என்கின்ற நினைவின் பய உணர்வுடன் என்னை மீண்டும் குனியச் செய்கிறது அதே முனகல்.

மனைவியும் மற்றவர்களும் இப்போது என் பின்னால் நிற்கின்றனர். வளர்ந்து கிடக்கும் வாதுகளை ஒதுக்கிக் கொண்டு செடிகளுக் கிடையில் கழுத்தை நுழைத்து, கண்ணைக் குத்துவதுபோல் சிவப்பாகப் பூத்து மஞ்சள் மஞ்சளாக மகரந்தம் ஏந்தி நிற்கும் சப்பாத்து மலரை விரலால் விலத்திக் கொண்டு பார்வையை வீசினேன்.

வீசிய பார்வை எதிரில் மோதி மீண்டும் வந்து என் விழிகளுக்குள் பாய்ந்து பதுங்கியது.

பாம்பென்ற நினைவின் பயத்தைவிடவும் கூடுதல் பயத்துடன் விருட்டென்று வேகமாக எழுந்து நின்றேன். என்னைப்போலவே செடிகளுக்குள் குனிந்து கழுத்தை நுழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டுப் பெண். முகமும், முகத்துக்கடியில் சட்டை மூடாத கழுத்தும், தோள்களும் கழுத்துக்கடியில் பிதுங்கும் மார்புகளுமாய்..!

மனைவியைப் பார்க்கச் சொல்லலாமா என்று ஒரு கணம் எண்ணினேன். குனிந்து எதையும் பார்க்கக்கூடாது என்னும் வைத்தியரின் கட்டளை அந்த நினைவைத் தடுத்து வைத்தது. “என்னப்பா என்ன…. திடீர்னு எழுந்திருச்சீங்க…. பாம்பா….” என் பயமும் படபடப்பும் மனைவியைப் பதற்றமடையச் செய்திருப்பதை கேள்வியின் அவசரம் தெளிவாகக் காட்டியது.

பாம்பபைக் கண்டபோதுகூட இப்படி அச்சம் கொள்ளவில்லையே நான்!

பெண்கள் மீதான இந்த ஆண் மன அச்சத்தின் உக்கிரம்தான் பஸஸின் இருக்கையில் கூட மஞ்சளுடை மதகுருவின் அருகில் ஒரு பெண்ணின் அமர்தலை மூர்க்கமாக மறுக்கிறதோ?

“பாம்பு இல்லையப்பா…பக்கத்து வீட்டு பெண்களில் ஒன்று…வேலிக்கடியில் நுழைந்துக் கொண்டு…”

“என்னன்னு கேளுங்களேன். இப்படிப் பதறிப்போய் எழுந்து நின்றுக் கொண்டு. சிங்களப் பொம்பளைன்னதும் பயந்துட்டீங்களா?”

எனக்கு வேடிக்கையாகவும் இருந்தது. சிங்களப் பொம்பளை என்னும் அந்த அடைமொழி வேதனையாகவும் இருந்தது. சிங்களத்துக்கும் எங்களுக்கும் என்ன அப்படி ஒரு பகை. என்ன ஒரு பயம். என்ன ஒரு இடைவெளி. பாம்புக்கும் மனிதனுக்கும் மாதிரி. எங்களுக்கு அவர்களும், அவர்களுக்கு நாங்களும்… பாம்பு பாம்புகளாய்!

“குனிஞ்சு பாருங்கப்பா… இன்னமும் அப்படியே இருக்குதான்னு பாருங்க… இருந்தா என்னன்னு கேளுங்க…” மனைவி அவசரப்படுத்தினாள்.

குனிந்தேன். செடிகளின் அடி இருட்டுக்குள் அதே ‘பளீர்’ என்னும் மின்னல்.

முகமும் முகத்துக்கடியில் ரவிக்கை மூடாத முன் கழுத்தும், கழுத்துக் கடியில் தோள்களும்….முன் நீளும் கறுப்பு றபர் வளையல்கள் மலிந்த கைகளும் கைகளின் பிடியில் எங்கள் நாய்குட்டியும்! நாய்க் குட்டி கைமாறியதும் உதட்டைப் பிதுக்கிச் சிரித்து விட்டு தலையை இழுத்துக் கொண்டாள்.

அழகை அழகென்பதற்கும் ரசிப்பதற்கும் காரணங்கள் தேவை இல்லை தான்! ரோஜாவை அழகென்பதற்கும் ரசிப்பதற்கும் அதிலி ருந்து பெறப்படும் அத்தர் காரணமாகாததைப் போல் … நாய்குட்டியுடன் நிமிர்கின்றேன். எல்லார் முகங்களிலும் பரவசம்.

நாய்க்குட்டி தவளையைத் தொடர்… பாம்பு தவளையைக் கவ்வ… பயந்துபோன நாய்குட்டியின் கழுத்துப்பட்டி முட்கம்பியில் மாட்டிக் கொள்ள… கழுத்து நெரிபட்ட குட்டி கதறி ஊளையிட்டு முனக… அழுகுரல் கேட்டு ஓடி வந்த பெண், குனிந்து நாய்க்குட்டியை விடுவிக்க…. அதே நேரம் நானும் வேலிக்கடியில் குனிய… மயக்கத்தில் நான் இருந்த அந்த இரண்டொரு வினாடிகளில் அந்தப் பெண் சிங்களத்தில் கூறியதை சற்றே விபரங்களுடன் மனைவியிடம் ஒப்புவித்தேன்.

“நல்ல பெண்கள் தாங்க… அந்த மனுஷன் தான்….” என்றவாறு நாய் குட்டியை அணைத்துத் தடவிவிட்டபடி மனைவி உள்ளே செல்கிறாள்.

***

ஆரம்பத்தில் நானிருக்கும் வீட்டுச் சாவியை கொடுக்கும் போது வீட்டுக்காரர் என்னிடம் பயம் காட்டியதே இந்த பெண்களைப்பற்றித்தான்.

“நாலைந்து கிடக்கிறது. கிழவன் கிழவிக்கு அடங்காததுகள்.. ஆட்கொல்லிகள்… அடங்காப்பிடாரிகள்…. எல்லையில் பிழை என்று என்னை இந்தப் பக்கச் சுவரை எழுப்பவிடமாட்டேன் என்றதுகள்! அராஜகிகள் ! தப்பித்தவறி பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதீர்கள்… வைத்துக் கொண்டிடீர்களோ தொலைந்தீர்கள்…” சுற்றியும் சிங்களவர் மத்தியில் புதிதான இடத்தில் புதிதாக குடிவந்த நாங்களும் அந்த அறிவுரைகளுக்கிணங்கவே ஜாக்கிரதையாக இருந்திருக்கின்றோம். இந்தப் பக்கத்து வீட்டைப்பற்றி, அதன் அராஜகிகள் பற்றி.

இந்த புதிய உயிர் இன்று அந்த முட்கம்பி வேலிகளை உடைத்திருக்கிறது..

ஒரு நாள் ஆபீசில் இருந்து வந்து கேட்டைத் திறந்தேன். வேலியின் செடிகளுக்கிடையில் குத்தி குத்தி வைத்தாற்போல் பூப்பூவாய் முகங்கள். அடுத்த வீட்டு ஆட்கொல்லிகள்….மனைவியுடன் சிரித்துச் சிரித்துப் பேசியபடி. மனைவி பேசும் சிங்களத்தில் மயங்கி இருக்கலாம்..

அடுத்து வந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று அடுத்த வீட்டிலிருந்து, வேலிக்கு மேலாக இரண்டு ஈயத்தட்டுக்கள் வந்தன. பழைய சிலுமின பேப்பர் மூடிப்போட்டுக் கொண்டு. ஒன்று நிறைய பலகாரங்கள். கொக்கீஸ், கொண்டைப் பணியாரம் இத்தியாதிகளுடன். மற்றது நிறைய மஞ்சற் சாதம். சுற்றி சுற்றி இறைச்சி மற்றும் காய்கறி வகைகளுடன்.

தட்டுக்களைத் திருப்பிக் கொடுக்கும்போது ஒரு சீப்புப்பழத்துடன் கொடுத்தோம். நத்தாருக்கு நாமும் சாப்பாடு அனுப்ப வேண்டும் என்னும் நினைவுகளுடன்.

இது இப்போது நன்றாக வளர்ந்து ஒரு மினி ஜெர்மன் ஷெப்பர்ட் மாதிரித் திரிகிறது. சாப்பாடும், சவரட்ணையும், அன்பும் ஆதரவும்

அதை அப்படி வளர்த்தெடுத்திருக்கிறது.

ஆளுயர முன்கேட்டின் அரைவாசி உயரத்துக்கு நிற்கிறது. என்றா வது ஒரு நாள் கேட்டைப்பாய்ந்து வெளியே போகும் என்று நாங்கள் விளையாட்டாகவும் பெருமையாகவும் பேசிக் கொள்வோம்.

வாழ்க்கை என்னும் விளையாட்டின் பெரும்பகுதி பெருமை கூறுதல் தானே.

இப்போதெல்லாம் வீட்டை மூடிவிட்டு எங்களால் வெளியே எங்கும் போக முடிவதில்லை. யாராவது ஒருவர் வீட்டில் இருந்தேயாக வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைக்கென்று கிளம்பத்தொடங்கினால் போதும். செருப்பைக் கவ்விக் கொண்டு ஓடிவிடும். கையிலிருக்கும் சீப்பைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிடும். முன்கால்களால் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு நிற்கும்.

“உடுக்க விடமாட்டேங்குதுப்பா. கொஞ்சம் வெளிய கொண்டு போங்களேன்” என்னும் குரல்களைத் தொடர்ந்து வெளியேவிட்டு முன் கதவின் கீழ்பாதியை மூடிவிட்டால் காலைத்தூக்கிப் பாதிக் கதவில் வைத்துக் கொண்டு திறந்த வாயும் வாயின் ஒரு பக்கமாக நீண்டு தொங்கும் நாவுமாக ஒரு ஏக்கத்துடன் பார்க்கும்.

கேட்டுக்கு வெளியே ஓட்டோ சத்தம் கேட்டதும் விழுந்தெழுந்து ஓடி கேட்டிடம் நிற்கும். சூலக்கம்பிகளில் குத்தி வைத்தது போல் கேட் டுக்கு மேலாகத் தெரியும் ஓட்டோ பிரியந்த’ வின் முகம் நோக்கி கேட்டின் உச்சி வரை பாயும். “அப்போய் மாவ கேவா” என்றபடி

அவன் ஓடி ஆட்டோவுக்குள் அமர்ந்து கொள்வான்.

ஒரு விதமாக வீட்டைப் பூட்டி தோட்டத்துக்குள் அவனைவிட்டு கேட்டையும் பூட்டிக் கொண்டு நாங்கள் கோவிலுக்குப் போய்த் திரும்புகையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள் “நாய் கேட்டி டமே நின்று அழுது கொண்டிருந்தது” என்று. எங்களுக்கும் பரிதாமா கத்தான் இருக்கும். அவசர அவசரமாகப் பூட்டைத் திறந்து கேட்டைத் திறந்து உள் நுழைந்தால் ஓடுவதுமாக பாய்வதுமாக களேபரப்படுத்தி விடும். அதன் மகிழ்ச்சிக்கோர் எல்லை இருப்பதில்லை.

இறைச்சியும் கறியுமாகப் பிசைந்து வைத்த சாதம் பிளேட்டுடன் அப்படியே கிடக்கும்.

“நாய் கேட்டிடமே நின்று கொண்டிருந்தது” என்னும் பக்கத்து வீட்டுக்காரர்களின் கூற்றை மெய்பிப்பதுபோல. எங்கள் மேல் பாய்ந்து முடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதன் பிறகே சாப்பிடத் தொடங்கும்.

பக்கத்து வீட்டில் ஒரு பெண் நாய் இருக்கிற சங்கதி எங்களுக்கே தெரியாது. இதற்குத் தெரிந்திருக்கிறது. பக்கத்து வீடு என்றால் ஆட் கொல்லிகள் வீடல்ல. அடுத்த பக்கம்… சுவரெழுப்பியுள்ள பக்கம்!

சதா வீட்டுக்குள்ளேயும் கேட்டுக்குள்ளேயும் தானே கிடக்கின் றான். சற்றே காலாற உலவவிட்டு வரட்டுமே என்று சங்கிலியுடன் வெளியே கூட்டிப்போனேன். கையில் ஒரு கம்புடன், அந்த சந்துப் பாதைக்குள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் உறுமிக் கொண்டு நிற்கும் நாய்களுக்குப் பத்திரம் காட்டுவதற்குத்தான் இந்தக் கம்பு.

வாசலிலிருந்து பாதிப் பாதைவரை ஏதோ கடித்துக் குதறி விடுவ தைப்போல் குரைத்துக் கொண்டு ஓடிவருவதும் பிறகு ஓடிப்போய் உள்ளே நுழைந்து கொள்வதுமாக “வரெங் பலன்ன, காப்பாங் பலன்ன” என்று வாய் வீச்சு காட்டும் சண்டியர்களைப்போல….. அருகரு கேதான் இருப்பார்கள் ஆனாலும் அடித்துக்கொள்ள மாட்டார்கள்.

“வா பார்ப்போம் கையை வை பார்ப்போம்?” என்று முறைத்துக் கொண்டு கூறுவார்கள். பிறகு கலைந்துபோய் விடுவார்கள். இவைகளும் அவர்களைப் போலத்தான்…!

இப்படி உலாவரும் போதுதான் ஒரு நாள் சங்கிலியுடன் பரபர வென்று என்னையும் இழுத்துக் கொண்டு போய் பக்கத்து வீட்டுக்கு கேட்டிடம் நின்றது. இது கேட்டிடம் சென்றதும் அதுவும் ஓடிவந்து கேட்டிடம் நின்றது. உள்ளேயும் வெளியேயுமாக ஒரே குசுகுசுப்பு! ஒரே போராட்டம். தொலையட்டும் என்று நானும் நிற்கிறேன். உள்ளே சத்தமிட்டு யாரோ அதை துரத்துகின்றனர். நானும் இதை இழுத்துக் கொண்டு வந்துவிடுகின்றேன்.

அடுத்த நாள் நான் ஏதோ வேலையாக இருக்கின்றேன். சங்கிலியை வாயில் கவ்வி இழுத்தபடி… இது வந்து என் காலடியில் நிற்கின்றது. “பாருங்கள் அதன் அறிவை. வெளியே கூட்டிப் போகச் சொல்கின்றது” என்கின்றாள் மனைவி. கேட்டைத் திறந்ததுதான் தாமதம். என்னையும் சேர்த்திழுத்துக் கொண்டுபோய் பக்கத்து வீட்டு கேட்டிடம் நிற்கின்றது.

உள்ளேயும் வெளியேயுமாக அதே குசுகுசுப்பு! கேட்டுக்குள் மீண்டும் அதே சத்தம். அதே விரட்டல்.

பிறகொரு நாள், வெளியே ஏதோ சத்தம் கேட்கிறதே என்று முன் கதவைத் திறந்தேன். இது கேட்டிடம். ‘பூஸ் பூஸ்’ என்று மூச்சு விட்டபடி, முன்கால்களால் பூமியைத் தோண்டிக் கொண்டு.

கேட்டிடம் சென்றால் வெளியே அது. எப்படியோ காவல் மீறி ஓடி வந்திருக்கிறது. ஏதேதோ ரகசியப் பரிமாற்றங்கள். மெதுவாக உள்ளே சென்று மனைவியைக் கூட்டி வந்தேன். சிரித்துக் கொண்டோம். இனவிருத்தி இரகசியங்கள், அஃறிணை முதல் உயர்திணை வரை அதே தான் போலிருக்கிறது.

கதவை மூடிக்கொண்டு நாங்கள் உள் நுழைந்த அதேவேளை கேட் உடைவது போன் தொரு ஓசை. வெளியே ஓடினோம். கேட்டுக்கு மேல் எங்கள் நாய், வெளியேயும் பாய முடியாமல் உள்ளேயும் விழ முடியாமல்….கேட் நுனியில் தொங்கிக்கொண்டு…மனைவி பதறிப் போனாள். பதற்றம் ஒரு காரிய நாசம் மாத்திரமே.

உள்ளே ஓடி ஒரு சிறிய மேசையுடன் ஓடி வந்து மேலேறி கேட்டின் இரும்பு கூர்களில் இருந்து அதை உயர்த்தி உருவி எடுத்தேன். மெதுவாக இறக்கினேன்.

தரையில் மல்லாத்தி படுக்கவைத்து அமுக்கிக் கொண்டேன். அடி வயிற்றின் உள் மூலையிலிருந்து, இலேசாக இரத்தம் கசிந்தொழுகுகிறது. மனைவியின் பதற்றம் நீடிக்கிறது. சமாதானப்படுத்தியபடி ஓட்டோவை வரவழைத்து விலங்கு சிகிச்சை நிலையத்துக்கு ஓடினேன். “அனிமெல் கிளினிக்” என்னும் ஆங்கிலப் பெயரினடியில் ஆறேழு நாய்கள் வரிசையில் காத்திருந்தன. எஜமானர்களுடன்.

நிலைமையுணர்ந்து சட்ட வரிசை வழிவிட்டது. நாயின் வாய்க்கு பின்னல் மூடிப்போட்டு கட்டிவிட்டான் பணியாள். இனி வாயைத் திறக்கவும் இயலாது கடிக்கவும் இயலாது. பரிசோதித்த டொக்டர் ஏதேதோ கூறினார். ஏதேதோ செய்தார். ஊசியடித்தார். தையல் போட் டார். மாத்திரைகள் கொடுத்தார்.

கேட்டின் இரும்புக் கூரில் குஞ்சைக் கிழித்துக் கொண்டான் என்பது சாராம்சம். எனக்குத் தமிழ்ச் சினிமா பாண்டியராஜனின் நினைவு வந்தது…. சிரிப்பும் வந்தது.

“நனைக்கக் கூடாது. தையலை கடித்திழுக்க விடக்கூடாது. சாப்பிடும் நேரம் தவிர்ந்து வாய் மூடி போட்டுக் கொள்ளவும். ஒரு வாரத்தில் ஆறிவிடும். ஏழாவது நாள் கூட்டி வரவும்” டொக்டரின் கட்டளைகள். ஊசி, தையல், புதிதாக ஒரு வாய் மூடி, மருந்து, ஓட்டோ என்று ஐநூறைத் தாண்டிவிட்டது. ஓட்டோவுடன் திரும்புகையில் வீட்டு வாசலில் ஒரு கூட்டமே நின்றது.

முதலில் மனைவி, பிறகு தலைகள், தலைகள், தலைகள். கடைசியாக ஒரு குற்ற உணர்வுடன் பக்கத்து வீட்டுக் கதாநாயகி. வாலையாட்டியபடி. திணை, இனம், மதம் மறந்த உறவுக்கூட்டம்.

***

நாட்கள் நகர்ந்தன…நத்தார் வந்தது..!

“இவுங்களுக்கு நான் வேலிக்கு மேலாக குடுத்திடுவேன். நீங்க இதைப் பக்கத்து வீட்டுக்குக் குடுத்துடுறீங்களா..! பழைய வீரகேசரி யால் மூடி போட்டுக் கொண்ட தட்டுடன் மனைவி. பக்கத்து வீட்டுக் கேட்டைத் தட்டினேன். சிறிது நேரம் கழித்தே எட்டிப்பார்த்தவர்கள் என்னைக் கண்டதும் “வாருங்கள் வாருங்கள் என்று தென் பகுதிச் சிங்களத்தில் வரவேற்றார். திறந்த கேட்டின் வழியாக ஓடி வந்தது அவரின் புன்னகைக் குரல்! இதை வீணடிக்க இன்னும் நிறைய ‘வீரவங்சக்கள்’ வேண்டியிருக்கலாம்.

“நாய் குட்டிப் போட்டிருக்கிறது. அதனிடம் தான் இருந்தேன். அது தான் கொஞ்சம் தாமதமாயிற்று கேட்டைத்திறக்க” என்றவர் சிரித்த படியே கூறினார். “வந்து பாருங்கள்… ஒன்று அச்சாக உங்கள் சனாவே தான” என்றார். அவரைத் தொடர்ந்து பின் சென்றேன். பஞ்சில் செய்த பொம்மைகள் போல் நாலைந்து குட்டிகள். ஒன்றை ஒன்று தள்ளியப்படி பாலுறிஞ்சிக் கொண்டு.

ஒன்றை மெதுவாகக் திருப்பிக் காட்டினார். கண்களும் கண்களுக்கு மேலே கறுப்புக் கோடுகளுடன் இரண்டு வெள்ளைப் புள்ளிகளுமாக…மெத்தென்று அழகியதோரு பூவைப்போல. குஞ்சுச் சனாவேதான்! சிருஷ்டி ரகசியமும் விநோதமும் வியப்பளிக்கிறது.

பெண் என்றார் அவர்.

– மூன்றாவது மனிதன் செப் – ஒக் 2006.

– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *