கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 8,519 
 

“நீங்க என்ன சொன்னாலுஞ் செரி.நா இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..”மகள் வளர்மதியின் தீர்மானமான பதிலில்,அசந்து போனார் சிதம்பரம்.

இத்தனைக்கும் மாப்பிள்ளையாக வரப்போகிற வீரமுத்து, பேரூர் வட்டாரத்தில் பெரிய சந்தையான பூலுவபட்டி சந்தையில் வாழையிலைக் கட்டுகளை விற்கும் சிறிய கடை வைத்துள்ளான். வீட்டில் ஒரே பிள்ளை. அம்மா மட்டும்தான். வேறு எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாத, ஓரளவு வசதியான இடம்தான். பெண் பார்க்கவென்று வந்தபோதே “பெண்ணை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மாமா.. வளருகிட்டேயும் சம்மதமா..னு கேட்டு சொல்லுங்க..”என்றவன், “கல்யாண ஏற்பாடெல்லாம் தடபுடலா ஒண்ணும் வேண்டாம். என்ன முடியுமோ அதைச் செய்ங்க போதும்” என்று கூட சொல்லி விட்டான். அவனது தாயும், கூட வந்த உறவினர்களும் அதனையே ஆமோதித்து விட்டுச் சென்றனர். சிதம்பரத்தின் மனைவி கோமதிக்கும் இந்த சம்பந்தத்தில் மிகுந்த மகிழ்ச்சி.

‘இவ்வளவு தோதான இடம் இன்னொன்று அமையவா போகிறது.இந்தப் பெண் ஏன் அதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள்.?’ என்று வளர்மதி மீது மிகுந்த கோபமும் வந்தது சிதம்பரத்திற்கு.

ஒரு வேளை காதல் கீதல் என்று ஏதாவது.. அவ்வாறு யோசித்த சிதம்பரத்திற்கு அதற்கான சாத்தியமே இல்லை என்றும் புரிந்தது.

பத்தாவது வரை மட்டுமே படிக்கச் சென்று வந்தவளை கல்லூரியில் சேர்க்க வசதியில்லை என்று படிப்பை நிறுத்தி விட்டவர்தான். மற்றபடி இந்த நான்கு வருடங்களில் கோவிலுக்கும், தாங்கள் அழைத்துப் போகும் இடங்களுக்கும் தவிர அவள் வெளியே தனியே எங்கும் செல்வதில்லை.

தன்னுடன் தோட்டத்திற்கு வருவாள் ஆடு மாடுகள் உள்ள பட்டியை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வாள். அவைகளோடு கொஞ்சநேரம் கொஞ்சிக் கொண்டிருப்பாள். அவர்களுக்கு இருக்கும் ஒரே சொத்தான அரை ஏக்கர் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த தக்காளிச் செடிகளுக்கு தண்ணீர் விடுவாள். பின்னர் அங்கிருந்த ஐந்து மாமரங்களைச் சுற்றி வருவதும், மாங்காய், மாம்பழம் என்று பறித்து தின்பதும், அதன் நிழலில் அமர்ந்து சில நேரம் புத்தகங்கள் படிப்பதையும் தவிர வேறு வித்தியாசமான நடவடிக்கைகள் எதையுமே கண்டதில்லை.பின் ஏன் இவள் பிடிவாதம் பிடிக்கிறாள்?

விவசாயம் செய்கிறேன் என்று நிறையக் கடன்கள் உள்ள, அப்பனிடம் போதுமான அளவு பணங்காசு வசதியில்லை. இப்போது எதற்கு கல்யாணம் எனறு யோசிக்கிறாளோ.?

தடபுடல் இல்லாத கல்யாண எற்பாடு என்றாலும் குறைந்தது ஐம்பதாயிரம் வேண்டும். தாலி, மாலை, புழங்குவதற்கு கொஞ்சம் பாத்திர பண்டங்கள், புதிய பாய் தலையணை,பொண்ணு மாப்பிள்ளைக்கு கொஞ்சம் துணிமணி.. இதுக்கு ஐம்பதாயிரம் தாராளம்.. அந்தப் பணத்திற்கும் தோட்டத்திலுள்ள மாமரங்களையும், மூணு ஜோடி ஆடுகளையும், ரெண்டு கறவைகளையும் விலை பேச, யாவாரியிடம் சொல்லியுமாயிற்று. அப்புறமென்ன.. கல்யாணத்துக்கு சம்மதிக்க இவளுக்கு கசக்குது.? சிதம்பரத்தின் மனம் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழிக்கலாயிற்று. என்னவா இருக்கும்.? அலைபாய்கிற மனதுடன் இப்போதும் வளர்மதியைப் பார்த்துக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

தகப்பனைப் பொருட்படுத்தாத வளர்மதி தன் பாட்டுக்கு பட்டியைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள். சாணியை வழித்து உரக்குழியில் கொண்டு போய் போட்டு விட்டு, ஆடுகளுக்கு புல்லும், தழைகளையும் கட்டித் தொங்கவிட்டுவிட்டு, மாடுகளைக் குளிப்பாட்டத் துவங்கிவிட்டாள். அவள் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கும், சுத்தமும் இருக்கும்.

அந்த விசயத்தில் மகளை நினைத்து எப்போதும் அவருக்குப் பெருமையாகத்தான் இருந்தது.

இடுப்பிலிருந்த வெற்றிலைச் சீவலை எடுத்து வாயில் அதக்கியபடியே வளர்மதியை நோட்டமிட்டவருக்கு ஒருவேளை உடல் ரீதியாய் அவளுக்கு எதுவும் பிரச்சினை, கோளாறு இருக்குமோ..? மாலையில், மனைவியிடம் சொல்லி விசாரிக்கச் சொல்ல வேண்டும் என எண்ணமிட்டவருக்கு,காலையில் குடித்த கம்பங்கூழ் லேசாக அயர்வைத் தர, பட்டிச் சாலையில் போட்டுவைத்திருந்த நார்க்கட்டிலில் சரிந்தவர் அப்படியே கண்மூடினார்.

இரவு படுக்கையறைக்கு வந்து,தரையில் பாயை விரித்துக் கொண்டிருந்த கோமதியிடம்,அதற்காகவே காத்திருந்த சிதம்பரம், “நம்ம வளருக்கு உடம்புலே ஏதும் பிரச்சினையா.? ஏன் கலியாணம் வேண்டாம்..னு புடிவாதம் புடிக்கிறா.? உங்கிட்ட ஏதும் சொல்லியி ருக்காளா.?”

“அத மொதல்லியே கேட்டுட்டனுங்க..அப்படியெல்லாம் ஒரு பிரச்சினையுமில்லே. எல்லாம் ஒழுங்கா தேதி தவறாம நடக்குது. வேற அவளுக்கு மனசுலே ஏதும் பயமிருக்குதோ..னு நினைச்சு அப்படியெல்லாம் பயப்பட ஒன்னுமில்லே. இது சாதாரணமான விசயம்தான்னும் தெகிரியங்கூட சொல்லியிருக்கனுங்க. அப்டியும் அந்தக் கழுதை ரொம்ப பிடிவாதமா எனக்கு இப்ப கலியாணம் வேண்டாம். இன்னும் நாலஞ்சு வருசம் போகட்டும்னே சொல்லுது. இதுக்கு மேலே அவகிட்டே என்ன சொல்றதுனு எனக்கும் வெளங்கலீங்க. சின்னப் புள்ளையா.., ரெண்டு அடி போட்டு மெரட்டிவெக்க.?

நாளான்னைக்கு புதங்கிழமை மாப்பிள்ளை வூட்டுக்காரங்க நிச்சயம் பண்ணிக்க வாரோம்..னு வேற சொல்லீருக்காங்க.. இவ அதுக்குள்ள மனசை மாத்திகிட்டா பரவால்லையே..னுதான் இருக்கு எனக்கு..ம்..நம்மட தலையிலே என்ன எழுதி வெச்சுருக்கோ..ஆருக்கு தெரியும்..?” கோமதியின் பெருமூச்சில் வெக்கையும் துயரமும் வெளிப்பட்டது.

“ஏதாவது சொன்னாத்தானே இன்ன பிரச்சினையை இப்டித் தீர்த்துக்கலாம்னு சொல்ல முடியும்.ஒரு எழவையும் சொல்லாட்டி மனுசன் என்ன பண்ண முடியும்.?” கோபமும், மிகுந்த மனச் சோர்வும் சிதம்பரத்தை ஆட்டிவைக்க அப்படியே உறங்கிப் போனார் சிதம்பரம்.

புதன்கிழமை காலை நல்லநேரத்தில் நிச்சயதாம்பூலம் நல்லபடியாக முடிந்தது.‘கை நனைக்கும்’விருந்தின் போதும் வளர்மதியின் முகம் ‘உம்’மென்று இருந்ததை கவனிக்க தவறவில்லை வீரமுத்து. அவன் மனதுக்குள் ஏதோ நெருடியது. அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லையோ.. மாமாவிடம் அவளது விருப்பத்தை கேட்கச் சொல்லியிருந்தேனே.. அவரொன்றும் வித்தியாசமாகச் சொல்லவில்லையே., அவளிடமே நேரடியாக கேட்டுவிடலாமா.? அதான் சரி..’ எண்ணமிட்டவன் தக்க சமயம் பார்த்திருந்தான்.

பொதுவான விசயங்கள் குறித்து உறவினர்கள் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இதுதான் சரியான நேரம். வீரமுத்து சிதம்பரத்திடம் சென்று, “வளர்மதிகிட்டே ரெண்டு வார்த்தை பேசோனும் மாமா..”

சிதம்பரம் திடுக்கிட்டார். தனியாப் பேசவுட்டா இவ பாட்டுக்கு கல்யாணத்திலே எனக்கு இஷ்டமில்லே..னு உளறிக் கொட்டுனா என்ன பண்றது.? அவ வெவரமில்லாம சொல்றதை நம்பி மாப்பிள்ளையும் முடிவை மாத்திகிட்டா நல்ல சம்பந்தம் கையை வுட்டுப் போயிருமே..”

“அப்டி பொண்ணுகிட்டே பேசறது நம்மள்ளே வழக்கமில்லீங்களே..”அவருடைய குரல் மிகப் பலவீனமாக வெளிப்பட்டது அவருக்கே தெரிந்தது. மேலும் மாப்பிள்ளை தவறாக எதுவும் எண்ணிவிடக் கூடாதே என்ற பயமும் இருந்தது.

ஆனால், வீரமுத்து அப்படியெல்லாம் எதையும் கருத்தில் கொள்ளவில்லை.. “அதெல்லாஞ் செரிதான் மாமா. .காலம்பூரா கூட வாழப்போற பொம்பளை. .ஒரு வார்த்தை கேட்டுகிட்டா.. அவளுக்கும் ஏதாவது சொல்லவேண்டியது இருந்தா சொல்லட்டுமே மாமா.. அதனாலே தப்பு ஒண்ணும் வந்திராது. கேட்காம வுட்டதாலேயே நிறைய பிரச்சினை கல்யாணத்துக்கு அப்புறம் வர்றதை தவிர்த்துக்கலாமே. வளருகிட்டே சொல்லி ரெண்டு நிமிசம் பொடக்காளிப் பக்கம் வரச் சொல்லுங்க மாமா.” என்றபடியே வீரமுத்து வீட்டின் பின்பக்கம் உள்ள சப்போட்டாப் பழ மரத்தின் நிழலை நோக்கி நடக்கத் துவங்கிவிட்டான்.

குடுகுடுவென்று சமையலறைக்குள்ளே ஓடிய சிதம்பரம் கோமதியிடம் விசயத்தைச் சொல்ல, அவளுக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. அவளும் இப்படியொரு சூழல் வருமென்று எதிர்பார்க்கவில்லையே..

“சரி ஆகறது ஆகட்டும்ங்க, நம்ம மானம் நம்ம புள்ளே கைலே..ன்னு அவளுக்கும் தெரியாமயா இருக்கும். நல்லபடியா உன்ற முடிவை சொல்லிப்போடு..ன்னு ஒரு வார்த்தை நம்ம கடமைக்கு சொல்லிருவோம்.அப்புறம் நம்ம விதிப்படி நடக்கட்டும் வாங்க..” கோமதியின் அபார துணிச்சலைக் கண்டு அந்த நேரத்திலும் வியப்பாய் இருந்தது சிதம்பரத்திற்கு.

ஆழ்ந்த யோசனையுடன் தோட்டத்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த வளர்மதியிடம் வீரமுத்துவின் விருப்பத்தைச் சொல்லவும் அவர்களுக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. இவள் பாட்டுக்கு சூழல் தெரியாமல் கத்துவாளோ.? தனது எண்ணத்தை விட்;டுக் கொடுக்காமல் பிடிவாதம் பிடிப்பாளோ.?

“வளரு..”மனதை திடப்படுத்திக் கொண்டு கோமதிதான் அழைத்தாள்.வெடுக் கென்று திரும்பிய வளர்மதியின் முகம் கடுகடுவென்றுதான் இருந்தது. “என்ன.?”

பார்வையிலே அவள் கேட்ட கேள்வியில் கோபம் கொப்பளித்தது.

“இல்லே மாப்ளை உன்றகிட்டே ரெண்டு வார்த்தை பேசோனுமாம்மா.. பேச விருப்பமா..னு கேக்க சொன்னாரு..” சிதம்பரம் பம்மிக் கொண்டே சொல்ல, வளர்மதியின் முகத்தில் எதற்கு என்ற கேள்விக்குறி பிரதிபலித்தது. ஏதோ யோசனையும் தொடர்ந்தது.

சில விநாடிகள் திகிலுடன் அமைதியாகக் கழிந்தது. அவள் முகத்தின் போக்கைப் பார்த்தபடியே கோமதியும் சிதம்பரமும் காத்துக் கொண்டிருந்தனர். வளர்மதி ஏதோவொரு முடிவுக்கு வந்தது போலிருந்தது.

“சரி பேசறேன்ப்பா..” வளர்மதி அமைதியைக் கலைத்தாள்.

“சரி கண்ணு.. எங்க கௌரதையெல்லாம் நீ பேசறதுலேதான் இருக்கு. உங்கறதுக்கு சோறில்லேன்னாலும் மானம் மரியாதையோட ஊருக்குள்ளே நடந்துட்டுருக்கோம். தலைகுனிய வெச்சுறாதே. அப்புறம் நாங்க உசுரோட இருக்கறதுலே அர்த்தமில்லாம போயிரும். அவ்ளோதான் இப்ப சொல்ல முடியும்..” கோமதியின் வார்த்தைகளை காதில் வாங்கியபடியே வீரமுத்துவை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் வளர்மதி.

அந்த மரநிழலில் துவைக்கும் கல்மீது உட்காந்திருந்த வீரமுத்து, தான் எழுந்து கொண்டு அவளை உட்காரச் சொல்லி கைகாட்டுவதும், அவள் மறுப்பதும் தெளிவாகத் தெரிந்தது. அதற்குப்பின்னர் அவர்கள் பேசிக் கொண்டது காதில் விழவில்லை.

பத்துநிமிடங்கள் கழித்து வளர்மதி முகத்தில் மிகத் திருப்தியாக நிலவிய புன்சிரிப்போடு திரும்பி வீட்டை நோக்கி வருவது தெரிந்தது.

கோமதிக்கும் சிதம்பரத்திற்கும் இருப்பு கொள்ள வில்லை. அவள் தங்களை நெருங்கியதும் என்ன சொன்னே..? என்ன சொன்னே.? இருவரின் குரலிலும் தெறித்தது ஆர்வம்.

“ஒண்ணுமில்லே போம்மா..” என்று சொன்னபடியே உள் அறைக்கு ஓடினாள் வளர்மதி.

‘அப்பாடா..ஏதோ நல்லது நடந்திருக்கிறது. தாங்கள் பத்துநாளாக மேற்கொண்ட முயற்சியை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிவிட்டார் மாப்பிள்ளை’

மானசீகமாக மனதுக்குள் கும்பிட்டுக் கொண்டார் சிதம்பரம்.

காலை மணி இன்னும் ஆறைத்தாண்டவில்லை. தோட்டத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார் சிதம்பரம். “கோமதி..குடிக்க ஏதாச்சும் கொண்டு வா ஆத்தா.. தக்காளிச் செடிக்கெல்லாம் உரம் வைக்க ஆளுகளை இன்னைக்கு வரச் சொல்லியிருக்கு.அவியெல்லாம் வாரதுக்கு முன்ன போயி நாம நிக்கோனுமில்லே.!

“இதா..வந்துட்டேனுங்க..”சமையலறையிலிருந்து கோமதி சொல்லிக் கொண்டிருந்த அதேசமயம், “அண்ணே.. அண்ணே..”என்று வாசலில் குரல் கேட்டது.

“இதா வந்துட்டனப்பா..”என்றபடியே வெளிவந்த சிதம்பரம், நான்குபேர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். “யாருப்பா..என்ன வேணும்.?”

“அண்ணே..நம்ம மரக்கடை முதலாளி கணபதி அய்யா அனுப்பி விட்டாருங்க..”அவர்களின் கைகளில் கோடாரி, கயிறு,வெட்டரிவாள் என இருந்ததைக்கண்ட சிதம்பரம், “நம்ம வீட்டுக்கு மேக்காலே போற இட்டேரி வழியா மெதுவா போயிட்டுருங்கப்பா..கொஞ்சம் தொலை போயி வடக்கே திரும்புனா நம்ம தோட்டம்தான். நடங்க வந்துர்றேன்..”என்ற சிதம்பரம், திடீரென்று நினைவு வந்தவராய் “ஏப்பா..உங்களுக்கெல்லாம் மத்தியான சோறு நம்ம வீட்லேயே சொல்லிரட்டுமா..?”

“வேணாங்கய்யா..நாங்கல்லாம் சோறு கொண்டு வந்திருக்கோம்..அப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு ஏதாவது டீயோ, காபித்தண்ணியோ குடுங்கய்யா. அது போதும்..”, என்றபடியே அவர்கள் வீட்டின் பின்புறம் நோக்கி நடக்கத் துவங்கினர்.

சிதம்பரம், தோட்டத்திற்கு சென்றபோது, மரம் வெட்ட வந்த ஆட்கள் யாரோ ஒரு மனிதனிடம் நின்று பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகே ஒரு மோட்டார் சைக்கிளும். ‘அட..யாரது.நம்ம மாப்பிள்ளையா..இவர் இங்கே என்ன பண்றார்.?’ சிதம்பரத்தைக் கண்டவுடன் ஆட்கள் முந்திக்கொண்டு சொன்னார்கள் “மரங்களை வெட்டவேணாம்னு இவர் சொல்றாருங்க.”

அவர்களின் குரலைத் தொடர்ந்து திரும்பிய வீரமுத்து, “வாங்க மாமா, கல்யாண செலவுக்குன்னு தானே மரங்களை வெட்டி விக்கோனும்னு நினைச்சீங்க..அது வேணாம்.. அதில்லாம அந்த வேலியோரம் இருக்கற நாலு பனைமரம், ஆடுமாடு கோழியும் கூட இப்ப இருக்கற மாதிரியே அப்டியே எனக்கான கல்யாணச் சீரா இருக்கட்டும் மாமா. இது என்னோட ஆசை மட்டுமில்லே. வளர்மதியும் நிச்சயத்தன்னிக்கு இதாஞ் சொல்லுச்சு. என்னோட வருங்கால பொண்டாட்டியோட வார்த்தையை நா மீறமுடியுமா மாமா.?அதான் வெட்டுறதை நிறுத்தச் சொல்லிட்டேன். நீங்க கல்யாண செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க.. எல்லாம் நா பாத்துக்கிறேன்”. புன்சிரிப்போடு சொன்ன வீரமுத்துவின் வார்த்தைகளில் இருந்த குளுமையை அள்ளிக் கொண்டுவந்த மாமரங்களின் காற்று, சிதம்பரத்தை சில்லிடச் செய்து கொண்டிருந்தது.

– டிசம்பர் 2023, எழுத்தாளர் சிவசங்கரி -ராணி வார இதழ் இணைந்து நடத்திய சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை 

Print Friendly, PDF & Email

1 thought on “உயிர் சீர்..!

  1. இந்தக் கதையை வாசித்த பின்னர், இன்றைய காலத்தில் வரதட்சணை என்பது “மாப்பிள்ளை சீர்” “கல்யாணச் சீர்” என்று மாற்றம் அடைந்திருக்கிறதோ என்று யோசிக்க தோன்றுகிறது.

    ஒரு சிலர் விஷயத்தில், பெண் வீட்டார் இதை விரும்பி வழங்குகிறார்கள்; இதில் தங்கள் அந்தஸ்தும், மரியாதையும் காப்பாற்றப்படுவதாக நினைக்கும் பெண் வீட்டாரும் இருக்கிறார்கள்.

    இன்னும் ஒரு சிலர், புதுமணத் தம்பதிகளின் புதுவாழ்வுக்குப் பெரியவர்கள் கொடுக்கும் ஒரு சமூகப் பாதுகாப்பாகவும் வரதட்சணையைக் (கல்யாணச் சீர்) குறிப்பிடுகிறார்கள்.

    ஆனால் அடிப்படையில் இவை சம்பிரதாயங்களாக மாறி உள்ளன என்பது தான் பலருக்குச் சிக்கலை உண்டாக்குகிறது. இந்தச் சம்பிரதாயத்துடன் உட்கிடக்கையாக ஆணாதிக்க நடைமுறையும் சேர்ந்து விடுகிறது.

    கதையின் முக்கிய கதாபாத்திரம் சம்பிரதாயத்தை மறுக்காமல், அதை மாற்று வடிவில் நடைமுறைப்படுத்துவதைக் காண முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *