கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது.
ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு உடன் பிறப்புகளையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. அவளுக்கு அவன் அடிக்கடி கூறும் சார்லி சாப்ளினின் கதை நினைவிற்கு வந்தது.
“பாத்ரூம் போகணுமா?” கேட்டான் மாதவன். அவனுக்கு இந்த சித்திரை வந்தால் நாற்பது வயது முடிகிறது. அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு என்றாலும் படிக்க வேண்டிய பருவத்தில் மற்ற இரண்டு சகோதரர்களையும் போலில்லாமல் இவன் கதை, நாடகம் என்று சுற்றித் திரிந்தவன். தனக்கென்று குடும்பம் மனைவி என்றில்லாமல் நிலையான வாழ்க்கை எதுவுமில்லாமல் அல்லாடுகிறான்.
பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு நகல் எடுத்துக் கொடுப்பது, கணினியில் எழுத்துருவாக்கம் செய்து கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுச் சொற்ப வருமானத்தைக் கொண்டு ஜீவிதம் செய்து வருகிறான். அதுவும் மற்ற இரண்டு சகோதரர்கள் மாதம் பிறந்தால் கொண்டு வரும் முள்ளங்கி பத்தை போன்ற வருமானம் இல்லை. பேரு மட்டும் பெத்தபேரு, உதவி வசனகர்த்தா.
அம்மா ஆமென்று தலையாட்டினாள். மாதவன் அம்மாவின் கட்டிலின் அருகில் குனிந்து பஞ்சை விட மெலிந்து போன தாயின் தேகத்தை அவள் தலைக்கு அடியில் கைகளைக் கொடுத்து பூப்போல மெல்ல தூக்கிவிட்டான். அவளது கவனம் முழுவதும் தனது முழு அங்கியின் மீதுதான் இருந்தது. கைகளால் மெதுவாக தொடைக்கு அடியிலிருந்து தொடங்கி சற்று மேலே தூக்கி நின்ற ஆடையைக் கணுக்கால்களை மறைக்கும் வண்ணம் இழுத்து விட்டாள். மெல்லிய குருத்து போன்ற எலும்புகளும், பச்சை ரத்தம் ஓடும் நாளங்களும்… அவளது பாதங்கள் இரண்டும் வாடிய தாழை மடல்களைப் போலிருந்தன.
நார்க்கட்டிலின் இருப்புச் சட்டங்களை பலமாகப் பற்றியபடி தனது ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டி பிரயாசையுடன் எழுந்து நின்றாள். அந்தச் சிறிய முயற்சிக்கே அவளுக்கு மூச்சு வாங்கியது. கன்னங்களில், கழுத்தில், வயிற்றுப் பகுதியில் நீர் சேர்ந்து சற்று வீங்கிய தோற்றத்துடன் காணப்பட்டாள். சுருட்டி மடக்கினால் ஒரு பெரிய கித்தான் பையில் எடுத்துக் கொண்டு போகும்படியான உருவம்தான். ஆனால், அதற்குள் தன்னால் அடுத்தவர்களுக்குச் சிரமம் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் இருந்தது.
கையைப் பிடித்துக் கொள்ளவில்லை என்றாலும் கழிப்பறை வரையில் உடன் சென்று வெளியில் நின்று கொண்டான். இப்பொழுதெல்லாம் அவளைத் தனியே எங்கும் அனுப்பாமல் தனது கண்பார்வையில் வைத்து கவனித்துக் கொள்கிறான். மீண்டும் அம்மாவைக் கழிப்பறையிலிருந்து அழைத்து வந்து நார்க் கட்டிலின் விரிப்பை உதறி சரி செய்து வேறு விரிப்பு மாற்றித் தலையணை தட்டிப் போட்டுப் படுக்க வைத்தான்.
அம்மா படுக்க விரும்பாமல் சற்று தள்ளாடியபடி தன்னை விழுந்துவிடாமல் சுதாரித்துக் கொண்டு முதுகைக் கூன் போட்டபடி அமர்ந்தாள்.
“ஏதாவது சாப்பிடறியா?’’
“என்ன இருக்கு?”
“உனக்கு ஓட்ஸ் கஞ்சி பண்ணியிருக்கேன். இன்னிக்கு சாலிகிராமத்தில் என் கதையை டிஸ்கஸ் பண்றாம்மா. நேத்திக்கே சில்வர் ஷங்கர் தயாரிப்பாளர்கிட்டே கதையைச் சொல்லிட்டாராம். ஃபைனலைஸ் ஆயிடும்னுதான் சில்வர் ஷங்கர் உறுதியா சொல்றார். இந்தத் தயாரிப்பாளர் கதை எழுதறவங்களை ரொம்பவே தலையில் வச்சு தாங்குவாராம்.
குறைந்தது ஒரு இலட்சம் கிடைக்கும்னு சொல்றாங்க. பேனரும் பெரிய பேனர். உறுதியாச்சுன்னா காசுக்குக் காசு, பேருக்குப் பேரு…”
“உட்கார்ந்துண்டுதான் காலை நீட்டணும். நின்னுண்டு நீட்டக் கூடாது…” என்றாள் அம்மா நூறாவது முறையாக.
“ஓட்ஸ் எடுத்து வைக்கட்டுமா?”
“தெனம் ஓட்ஸ் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு மரத்துப் போச்சுடா…”
“பூரி மசால் பண்ணித் தரட்டுமா?”
அவன் கிண்டலை ரசிக்கும் அளவிற்குக் கூட அவளிடம் தெம்பு இல்லை.
அவளது ஆகாரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. நீர், சர்க்கரை, உப்பு எல்லாமே மருத்துவர் கூறும் அளவுகளில்தான் கொடுக்க வேண்டும். மீறும் ஒவ்வொரு அளவிற்கும் ஏற்படும் உடற் கோளாறுக்கு அவர்கள் மருத்துவமனைக்குக் கொடுக்க வேண்டிய தொகையை நினைத்தால் தூக்கம் நின்றுபோய்விடும். இதுவரையில் அண்ணன்மார்கள் இருவரின் வாசல் கதவைத் தட்டும் துர்பாக்கியத்தை ஆண்டவன் அளிக்கவில்லை. இனிமேலும் அளிக்கக் கூடாது என்பதுதான் இருவரது விருப்பமும்.
“சீக்கிரம் வந்துடு…” “என் ஒருத்தன் கையில் இருந்தால் நீ சொல்றபடி வரலாம். நான், ஹீரோ, சில்வர் ஷங்கர், இயக்குனர், தயாரிப்பாளர், அவனுடைய இரண்டாவது சம்சாரம் இத்தனை பேர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். மத்யானம் போஜனம் கிடைக்கறதான்னு பார்ப்போம். வழக்கம் போல உனக்கு டயபர் கட்டிட்டுப் போறேன். வாக்கரைப் பக்கத்தில் வச்சுட்டு போறேன். வாக்கர் இருக்கு என்பதற்கு அடிக்கடி நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சாவியைப் பக்கத்துப் போர்ஷன் காமாக்ஷி கிட்ட கொடுத்துட்டுப் போறேன்.
ரெண்டு மூணு தபா வந்து பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்கா. கூடிய மட்டும் சுருக்க வந்துடறேன்…” மாதவன் கிளம்பினான். வேகு வேகு என்று ஓடினால்தான் பத்து மணிக்குள் பேருந்தைப் பிடித்துக் கோடம்பாக்கம் போக முடியும். மற்றவர்கள் காத்திருக்க இவன் செல்வதற்கும், இவன் காத்திருந்து மற்றவர்கள் வருவதற்கும் பெரிய அளவில் பேதம் உள்ளது.
சில்வர் ஷங்கர் அவனைப் பொறுத்தவரையில் நண்பன், மேதை, வழிகாட்டி எல்லாம். அவன் முகம் சற்று மாறி, “என்ன மாதவன் வழித்தடம் அறிந்து கொஞ்சம் முன்னால் வந்திருக்கக் கூடாதா?” என்ற கேள்வியை மற்றவர் முன்னால் கேட்டு விடக் கூடாது. அந்தத் துறையைப் பொறுத்தவரையில் நேரம் தவறாமை என்பது அவனைப் போன்ற முதல் படியில் இருப்பவர்களுக்கு மட்டும்தான். உச்சிப்படியில் இருக்கும் சில்வர் ஷங்கர் போன்றவர்களுக்கு அல்ல.
போன பத்து நாட்களாக அம்மாவிடம் அதிகப்படியான முன்னேற்றமும் இல்லை. அதிகப்படியான சீரழிவும் இல்லை. அருகில் இருந்த எழுபது வயதான எம்.பி.பி.எஸ்., மருத்துவரிடம்தான் அம்மாவைக் கொண்டு போய்க் காட்டுவான். தீராத ரத்த அழுத்தம், தலை சுற்றல் உள்ளன. அவர் கொடுக்கும் மாத்திரையில் அடங்கிக் கிடந்தது ஒருநாள் எல்லை மீறி அம்மாவை அவரது கிளினிக்கில் இரண்டு நாட்கள் அனுமதிக்கும்படியானது. அந்த நேரம்தான் அவனுக்குக் கிடைத்த அபரிமிதமான ஓய்வில் ஒரு முழு படத்திற்கான அவுட் லைனைக் காட்சி வாரியாகப் பிரித்து நடு நடுவில் வாய்விட்டுச் சிரிக்கக் கூடிய வசனங்களைக் கோர்த்து ஒரு நல்ல திரை வடிவத்தை எழுதி முடித்தான்.
சில்வர் ஷங்கர் அதை முழுவதும் வாசித்துவிட்டு தலையில் வைத்துக் கொண்டாடினான். பூவோடு சேர்ந்த நார் என்ற பட்டம் மட்டும் மாதவனுக்கு ரசிக்கவில்லை. இதுபோன்ற நுட்பமான அவமானங்களை உள்வாங்கி மரத்துப்போன மனது அதனை முகத்தில் காட்டாமல் இருக்கப் பழகிக் கொண்டு விட்டது. அடுத்த முறை அம்மாவிற்கு மேலும் இப்படி ஒரு சீரழிவு ஏற்பட்டால் நோய் வேறு பரிமாணம் அடையும் என்று மருத்துவர் எச்சரித்து விட்டார். அவனைக் கூடை கூடையாகப் பணம் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தார்.
முதலில் கூடைக்கே அலையணும். அப்புறம்தானே அதில் இட்டு நிரப்ப பணம்? பேருந்தில் ஏறியதும் நடத்துனரிடம் மாத பாசைக் காட்டிவிட்டு கூட்டத்தில் ஒருவனோடு ஒருவனாகத் தன்னை மறைத்துக் கொண்டான். சென்னையின் வசதி இந்தக் கூட்டம்தான். சட்டென்று காணாமல் போய்விடலாம். யாரும் தேட மாட்டார்கள். வீட்டில் இருக்கும் அவனையும் அம்மாவையும் தேடுவதற்கே ஆளைக் காணவில்லை. இத்தனைக்கும் அம்மா, தான் சமையல் வேலை பார்த்து வந்த இல்லத்தின் உடைமையாளரிடம் சொல்லி மூத்தவன் கணேசனுக்கு கனரக போக்குவரத்து வண்டிகள் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் வேலை வாங்கிக் கொடுத்தாள்.
கணேசனுக்குத் தன் பொறியியல் படிப்பின் மீது தீராத நம்பிக்கை உண்டு. சட்டென்று பிடித்துக் கொண்டு உயரத்திற்குப் போய்விட்டான். வேளச்சேரியில் நூறடி சாலையில் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பனிரெண்டாவது தளத்தில் சொந்த வீடு, காதல் திருமணம், இரண்டு குழந்தைகள். லிப்ட் இருந்தாலும் அவனும் அவன் தாயாரும் மேலே ஏறுவதற்குச் சிரமப்பட்டனர்.
மாதவன் தனது நிறுத்தம் வந்ததும் கீழே இறங்கினான். வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால் பேருந்து அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் கொண்டு வந்து விட்டது. பத்து நிமிடம் முன்னால் கொண்டு விட்டதால் அனைத்து சென்னைவாசிகளுக்கும் இருக்கும் அந்தப் பரபரப்பு இன்றி அவன் சற்றுக் காலாற நடந்தான்.
ஷோபா கல்யாண மணடபத்தின் அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரு கோல்ட் ஃபில்ட்டர் வாங்கி ஆழமாகப் புகையை உறிஞ்சினான். எல்லா திரையரங்குகளிலும் காட்டப்படும் புகைப் பழக்கம் உடல் உயிரைக் குறிக்கும் என்ற வாசகம் மனத்திரையில் கருப்பு வெளுப்பாக ஓடியது. கணேசனுக்கு அடுத்தவன் நாராயணன். அவன் அண்ணனைப் போல அதி புத்திசாலி இல்லை என்றாலும் மாதவன் அளவிற்கு ஊர் சுற்றியும் இல்லை.
ஊரில் இருக்கும் எல்லா தகுதித் தேர்விற்கும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் உதவியாளர் பணியில் அமர்ந்து துறைத் தேர்வுகளில் படித்து பதவி உயர்வு பெற்று கொஞ்ச காலம் வேலூருக்கு மாற்றலாகி, மீண்டும் சென்னைக்கு மாற்றலில் வரும்போது உடன் வேலை பார்த்த பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தான்.
அம்மாவிற்கு அட்சதை போடும் வாய்ப்பைக் கூட அவன் வழங்கவில்லை. மூத்தவர் இருவருக்கும் ஆயிரம் காரணங்களுடன் தனித் தனி குடித்தனம். மாதா மாதம் இருவரும் தலைக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் மாதவன் வங்கிக் கணக்கில் பணம் போட்டு விடுவார்கள். பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுந்தகவல் ஒவ்வொரு முறை கைப்பேசியில் வரும்போதும் அவன் கூனிக் குறுகுவான்.
சிகரெட்டை அணைத்துவிட்டு மின்ட் மிட்டாய் ஒன்றை வாயில் அதக்கிக் கொண்டு மாதவன் எல்.வி.பிரசாத் சாலையில் நுழைந்தான். அந்தச் சாலையில் ஒரு வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் சில்வர் ஷங்கர் தனியாக அலுவலகம் போட்டு வைத்திருந்தான். பல வருடங்களாகத் திரைத் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவன். அவனுடைய சிற்றப்பன்கள் இரண்டு பேர் வெவ்வேறு துறைகளில் திரைப்படத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டுபவர்கள். அவர்களது பெரிய தாத்தா ஒருவர் நாற்பது ஐம்பதுகளில் குணச்சித்திர வேடங்களில் பிரபலமாக விளங்கியவர். சில்வர் ஷங்கரும் தடாலென்று திரைத் துறைக்குள் நுழையவில்லை. இரண்டு மூன்று பத்திரிகை அலுவலகம், அமெச்சூர் நாடகங்கள், நான்கைந்து காப்பி ரைட்டர்.
அப்போதுதான் மாதவன் ஷங்கரிடம் அறிமுகமானான். ஒரு சினிமா, இரண்டு டெலிவிஷன் சீரியல் என்று பன்முகம் காட்டியபின்னரே கதை வசனகர்த்தா என்ற ஒளிவட்டம் பின்னால் சுழலத் தொடங்கியது. அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்தபோது சீனு விளக்குமாற்றால் தரையைக் கூட்டிக் கொண்டிருந்தான். மாதவன் சிஸ்டத்தை ஆன் செய்து விட்டுக் காத்திருந்தான். சீனுவைத் தவிர வேறு யாருமில்லை. இது எப்போதும் நடக்கும் கூத்து என்றாலும் இதனை மீறவோ அல்லது எடுத்துச் சொல்லவோ தனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்த மாதவன் தனது சட்டைப் பையிலிருந்து பென்டிரைவை எடுத்தான்.
“வைரஸ் இல்லாம பார்த்துக்குங்க சார்…’’ என்ற சீனுவை முறைத்தான். “ஆன்டி வைரஸ் சாஃப்ட் வேர் போடச் சொல்லுப்பா உங்க முதலாளியை…’’ வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. சீனு கதவைத் திறக்க சென்ட் மணக்க தயாரிப்பாளரும் அவன் சம்சாரமும் நுழைந்தனர். தயாரிப்பாளரின் சம்சாரம் அணிந்திருந்த லெக்கின்ஸ் பயமுறுத்துவதாக இருந்தது. பின்னால் சில்வர் ஷங்கரும் கூடவே நுழைந்தான்.
சீனுவும் மாதவனும் தயாரிப்பாளர் அமரச் சொல்லும் வரையில் நின்றுகொண்டிருந்தனர். கூடம் முழுவதையும் அடைத்துக் கொண்டு திவான் போடப்பட்டிருந்தது. சுவரில் நான்கைந்து தலையணைகள் சதுர வடிவில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. சில்வர் ஷங்கர் யார் முன் அனுமதியுமின்றி ஒரு தலையணையின் மேல் சாய்ந்து கையில் ஒரு ஸ்க்ரிப்ளிங் அட்டையுடன் அமர்ந்தான். தயாரிப்பாளர் ஒரு தலையணையில் சாய்ந்து கொண்டார்.
“மாதவன்…” சில்வர் ஷங்கர் அழைத்தான்.
“சொல்லுங்க சார்…’’ “சாருக்கு உன் கதை பிடிச்சுப் போயிடுச்சாம். ரொம்பப் பாராட்டினாரு. இருந்தாலும் பெண்களுக்குப் பிடிக்குதா இல்லையான்னு தெரிஞ்சுக்க அவரு மேடத்தைக் கூட்டிகிட்டு வந்திருக்காரு. உன்னால் மேடத்திற்குக் கதை சொல்ல முடியுமா?’’தயாரிப்பாளரின் சம்சாரம் எவ்வித ஆபத்தையும் எடுக்க முயற்சிக்காமல் ஓரத்தில் போடப்பட்ட சோஃபா ஒன்றில் அமர்ந்து கொண்டாள். தனக்கு அருகில் இன்னொரு நாற்காலி போடச் சொன்ன அவளது நாகரீகம் மெச்சும்படி இருந்தது என்றாலும் மாதவன் நின்று கொண்டே கதை சொல்வதாகக் கூறினான். அவனால் நின்றபடி, நடந்தபடி, தான் உருவாக்கிய கதையைக் கூறுவது எளிதாக இருப்பதாக எண்ணுபவன்.
பத்து பேருக்கு ஒரே கதையைக் கூறினாலும் முதன் முறையாகக் கூறுவதைப் போன்ற உணர்வுடன் கூறவேண்டும் என்பதுதான் அவனுக்கு அளிக்கப்பட்ட பாலபாடம். அதை நினைவில் வைத்துக்கொண்டு தயாரிப்பாளரின் சம்சாரத்திற்குக் கதை சொல்லத் தொடங்கினான். நாற்பது காட்சிகளையும் ஏற்ற இறக்கங்களுடன் அவன் கூறிய விதத்திலும், கதையில் இருந்த புதுமையிலும், இடையிடையே அந்தக் காட்சிகளை மனத் திரையில் ஓடவிட்டு வாய் விட்டுச் சிரித்தும், முக பாவங்களை மாற்றியும் அவள் கதை கேட்ட விதம் அவனை மேலும் ஆர்வத்துடன் கதை சொல்ல வைத்தது.
இறுதியில் அவன் உச்சக்கட்ட காட்சியை விவரித்து முடித்ததும் தயாரிப்பாளரின் சம்சாரம் எழுந்து நின்று கை தட்டினாள். “ரொம்ப நல்லாருக்கு…” பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் முகத்தில் அநியாயத்திற்கு திருப்தி நிலவியது. அனைவருக்கும் மதிய உணவு வரவழைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்குத் தாவியபடி உணவு பரிமாறப்பட்டது. இயக்குனர், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பு, கேமராமேன், லொகேஷன் போன்ற பல விஷயங்கள் ஆராயப்பட்டன.
கிளம்பும்போது, “உங்க சிஷ்யன்னா சும்மாவா? தம்பி கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுங்க…” என்று கூறிவிட்டுத் தயாரிப்பாளர் கிளம்பினார். மாதவன் எதுவும் பேசாமல் இருந்தான். தனது அபிப்பிராயத்தின் மேல் அவனால் அங்கு ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது என்பதை அறிந்தவன் என்பதால் மெளனமாக இருந்தான். உள்ளே ஒரு திருப்தியான எண்ணம் ஓடியது. விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஒரு பெரிய பேனரிலிருந்து தனது முதல் கதை வசனம் வருகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.
எத்தனை அவமானங்கள்! “கதை நாடகம்னு சுத்தி சுத்தி தண்டமா வந்து நிக்கறியே. இருபத்தாறு வயசாச்சு இனிமேல் அரசாங்க வேலைக்கு லாயக்கில்லை. என்ன பண்ணப் போற?” எத்தனை கேள்விகள்! எத்தனை எள்ளி நகையாடல்கள்! அத்தனையும் ஒரு முடிவிற்கு வரப்போகிறது. “மாதவன்…” சில்வர் ஷங்கரின் குரல் அவனை பூமிக்குக் கொண்டு வந்தது.
“சொல்லுங்க பாஸ்…”
“உனக்கு இந்த புரொடியூசரைப் பத்தி தெரியும். இவர் படம் அப்படின்னாலே எல்லா சென்டரிலும் படம் வித்திடும். இவரும் தனது படத்துக்கு சாதாரண நடிகர்களையோ கலைஞர்களையோ புக் பண்ண மாட்டார். இவரது படத்தின் எல்லா விஷயத்திலும் ஒரு தரம் இருக்கும்…”
“ஆமா பாஸ். இவர் பேனரில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் நடிகைங்க பேட்டி கொடுத்ததைப் பார்த்திருக்கேன்…”
“இவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. நேத்திக்கே ஓகே சொல்லிட்டாரு. இன்னிக்கு சம்சாரத்தைக் கூட்டிகிட்டு வந்ததெல்லாம் ஒரு கண் துடைப்புதான்.
இவ்வளவு பெரிய பேனரில் எடுக்கப் போகும் படத்திற்கு ஓர் அமெச்சூர் எழுத்தாளன் கதை என்று விளம்பரப்படுத்தினால் போணியாகுமா அப்படின்னு யோசிக்கிறார்…”
“என்ன சார் கே.பி. சாரோட ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஏ.வி.எம் பேனரில்தானே படமா எடுத்தாங்க?”
“ஆனா, அதுக்கு முன்னால் அவரு ஒரு எஸ்டாபிளிஷ்டான நாடக ஆசிரியர் மாதவன்…”
மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஒரு சின்ன காம்ப்ரமைஸ் பண்ணிக்கச் சொன்னார்…” மாதவன் மௌனத்தைத் தொடர்ந்தான். “கதை உன்னுதாவே இருக்கட்டும். ஆனால், திரையிலும் மற்ற விளம்பரங்களிலும் கதை திரைக்கதை வசனம்னு என் பேரு இருக்கட்டும்னு சொல்றாரு…”
மாதவனுக்கு அப்போது ஏற்பட்ட வலியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மாதவனாக இருந்தால்தான் முடியும்.
“எனக்கு ஒரு நாள் டைம் கொடுப்பீங்களா பாஸ்?” கேட்ட மாதவனின் குரலில் இருந்த உற்சாகம் உருகி ஓடிய தடம் கூடக் காணவில்லை.
“தாராளமா கூட ரெண்டு நாள் கூட எடுத்துக்க. ‘ஃபிலிம் ஃபேர்’ அவார்ட் ஃபங்ஷனுக்கு அவரும் அவர் சம்சாரமும் பெங்களுர் போறாங்க. வருவதற்கு திங்கட்கிழமையாகும். அப்ப சொல்லு. ஆனா ஒண்ணு மாதவன்…”
“சொல்லுங்க பாஸ்…”
“முதல் படத்திற்கு நீ ஒரு தயாரிப்பாளர்கிட்டே இருந்து வாங்கும் சம்பளத்தை விட என் பெயரில் இந்தக் கதை வந்தால் அதன் மூலம் அவர் எனக்குக் கொடுக்கும் தொகையிலிருந்து நான் உனக்குக் கொடுக்கப்போகும் தொகை அதிகமாக இருக்கும். சரியா?’’
பணம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் வஸ்துவா? அதற்கு மீறிய பொருள்..? மாதவன் சிரித்தான். வஸ்துவிற்கு வடமொழியில் திரவியம் என்று பெயர். தமிழில் பொருள். பொருளை மீறி எதுவுமில்லை போல. தான் கொண்டு வந்த பென்-டிரைவை அப்படியே எடுத்துக் கொண்டான். நல்லவேளை அவனது கணினியின் டெஸ்க் டாப்பில் தனிக் கோப்பில் சேமித்து வைக்காததும் ஒருவிதத்தில் நல்லதற்குத்தான். மீண்டும் வேளச்சேரிக்குப் பேருந்து பிடித்து விஜயநகர் பேருந்து நிலையத்தில் இறங்கினான். மனம் எவ்வித சிந்தனையுமின்றிச் சலனமற்று இருந்ததைக் கண்டு அவனுக்கே வியப்பாக இருந்தது. வீட்டை நெருங்கியதும் அதன் கதவு மூடப்பட்டு நாதங்கியில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் சிறிது கலவரமானான்.
அடுத்த வீட்டு காமாக்ஷியின் மகன் அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்து அவனிடம் வீட்டுச் சாவியை நீட்டினான். “மாமிக்கு நீங்க போனவுடனே உடம்பு கொஞ்சம் முடியாமப் போயிடுத்து. மூச்சுத் திணறல்னு நினைக்கிறேன். என்னோட அம்மாதான் ஆட்டோவில் உங்கம்மாவை எப்பவும் போகும் கிளினிக்கிற்குக் கூட்டிண்டு போயிருக்கா. உங்களுக்கு நாலஞ்சு முறை மொபைலில் கூப்பிட்டாங்களாம். நீங்க எடுக்கலன்னு அம்மாவே மாமியைக் கூட்டிகிட்டு போயிருக்காங்க…”கதவைத் திறந்து பார்த்தான். கொடியில் காய்ந்து கொண்டிருந்த அம்மாவின் நைட்டி இரண்டு, படுக்கை விரிப்பு, கூடை போன்றவற்றைக் காணவில்லை.
தனது கைப்பேசியை பார்த்தான். நான்கைந்து முறையன்று, காமாக்ஷி மொத்தம் பதினொரு முறை அழைத்திருக்கிறாள். மடையன், கதை சொல்லும் மும்முரத்தில் சலனமற்ற நிலையில் கைப்பேசியை வைத்தது நினைவிற்கு வந்தது. வெளியில் வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.“அம்மாவுக்குத் தீரவும் முடியலை மாதவா. மூச்சு விட முடியலை. வாந்தி எடுக்க வர்றா மாதிரி இருக்குன்னு சொல்றா. ஆனா, வாந்தி வர மாட்டேங்கறது. முதுகுக்குக் கீழே வலிக்கறதுங்கறா. கால்ல நீர் சேர்ந்து போயிருக்கு. டாக்டர் ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்திருக்கார். எழுநூறு ரூபாய் பணம் கட்டணும்….” ஒரு தேர்ந்த ஆர்.ஜே போல நிறுத்தாமல் பேசினாள்.
“அம்மா என்ன சாப்பிட்டாங்க?”
“எது சாப்பிட்டாலும் வாந்தி வருதுன்னு சொல்றவங்களுக்கு என்ன கொடுக்க முடியும்..?” “டாக்டர் பார்த்துட்டாரா?” “பார்த்துட்டார். அவர்தான் ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்திருக்கார். பிளட் ரிப்போர்ட் வந்ததுக்கப்புறம்தான் சொல்ல முடியும்னு சொல்லிட்டார். சரி மாதவா. வீட்டில் போட்டது போட்டபடி இருக்கு. நான் கிளம்பிப் போயிட்டு வந்துடறேன். இந்தா இந்தப் பைசாவை வச்சுக்கோ. நான் பிளட் ரிப்போர்ட்டுக்குப் பைசா அடைச்சிட்டேன். மத்ததைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்…” பதில் கூற விடாமல் நெடுகப் பேசி விட்டு காமாக்ஷி சென்ற திசையை அவன் மிரண்டு போய்ப் பார்த்துக் கொண்டான்.
இந்த ஆஸ்பத்திரி வாசம் வேண்டாம் வேண்டாம் என்றுதான் அம்மா, பிள்ளை இருவரும் தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தது இப்போது வேறு வழி எதுவுமின்றி முடிந்திருக்கிறது. அன்றைய இரவு முழுவதும் அவனுக்கும் அம்மாவிற்குமான இரவாக அமைந்தது. காமாக்ஷி ஒரு முறை வந்ததோ இரவு ரத்தப் பரிசோதனையின் முடிவுடன் டாக்டர் வந்ததோ எதுவும் நினைவில் இல்லாமல் அப்படி ஓர் இரவாக அமைந்தது. அம்மாவிற்குப் பெரிய சரித்திரப் பின்னணி எதுவுமில்லை. அப்பா ஒரு பெரிய சமையல் காண்டிராக்டரிடம் உதவியாளராக வேலையில் இருந்தார். குடி, சீட்டு, ரேஸ்-எல்லா கண்றாவிகளும் உண்டு.
அம்மா வீட்டில் ஐந்து பெண்கள். தாத்தாவுக்கும் அதிகப்படியான வருமானம் இல்லை. வலிய வந்த அப்பா வீட்டினரின் சம்பந்தத்தை உதறும் அளவிற்கு தாத்தாவிற்கு மனமில்லை என்பதால் வறுமையில் உழலும் ஒவ்வொரு இல்லத்தில் இருக்கும் பெண்களைப் போலவே அம்மாவும் பலியானாள். மூன்று பிள்ளைகள் என்ற கருணையைத் தவிர அப்பாவிடமிருந்து அம்மாவிற்கு வேறு எந்த சுகமும் இல்லை. அம்மா சமையல் வேலைகளுக்குப் போகத் தொடங்கினாள். அந்தப் பணத்தையும் அப்பா குடிப்பதற்கும் சூதாட்டத்திற்கும் எடுக்கப் போக அம்மா துணிந்து அப்பாவை, ‘‘வெளியே போயிடுங்கோ…” என்று கூறி விட்டாள்.
அன்று வெளியேறிய அப்பாவை வீட்டில் வேறு யாரும் பார்க்கவில்லை. அம்மா அது குறித்துப் பிறகு எதுவும் பேசவில்லை. “மாதவா வா, இப்படி பக்கத்தில் உட்காரு…” அம்மா அழைத்தாள். மாதவன் அவள் அருகில் அமர்ந்தான். “நீ அப்போ பொறக்கலை. கணேசனுக்கு நாலு வயசு. நாராயணனுக்கு ஒன்பது மாசம். ஓயாமல் கபம் அவனுக்கு இருந்துண்டே இருக்கும். ஒருநாளைக்குத் தூளியில் இருந்து குழந்தையை எடுத்தா நிக்கவே இல்லை காலு ரெண்டும் துணி மாதிரி துவளறது. உங்கப்பாவோ சீட்டு விளையாடப் போயிட்டார். இப்போ மாதிரி அப்போ டெலிபோன் வசதி எல்லாம் கிடையாது. ஒரு கையில் கணேசனைப் பிடிச்சிண்டு இன்னொரு கையில் நாராயணனை மாரோட அணைச்சிண்டு தர்மாஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போனேன்.
அவங்களே பயந்து போயி ராயப்பேட்டை கவர்ன்மென்ட் ஆசுபத்திரியில் காட்டச் சொல்லிட்டாங்க. எனக்கு அப்போ திக்கும் தெரியாது திசையும் தெரியாது. கற்பகாம்பா காப்பாத்திக் கொடுடி தாயே, செவ்வாய்க் கிழமை முழுப் பட்டினி இருக்கேன்னு வேண்டிண்டேன். கபாலீஸ்வரரை அவதான் அனுப்பி வச்சா மாதிரி ஒரு பெரியவர் வந்து என்னை ராயப்பேட்டா ஆஸ்பத்திரி வரை கொண்டுபோய் விட்டார். எமர்ஜென்சி கேஸ்னு நின்னப்போ டாக்டர் அரைமணிநேரம் காலதாமதமாயிருந்தா குழந்தையை உசிரோட பார்த்திருக்க முடியாதுனு சொன்னார்…”
அம்மா செவ்வாய்க் கிழமைகளில் உணவு எதுவும் சாப்பிட மாட்டாள் என்பது தெரியும். இது பொதுவாக எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக இருக்கும் விரதம் என்றுதான் நினைத்தான். ஆனால், காரணம் இன்றுதான் தெரிந்தது. “சும்மா இரும்மா. ஏற்கனவே உன்னால பேச முடியலை. டாக்டர் வந்தா சத்தம் போடப் போறார்…” அதட்டினான். அம்மா அவனைப் பார்த்துச் சிரித்தாள். “மூத்தவன் ப்ளஸ் டூவில் கொள்ளை கொள்ளையா மார்க் வாங்கினான். கிண்டி இஞ்சினியரிங் காலேஜில் இடம் கிடைக்கும்னு சொன்னாங்க. அதே மாதிரி கிடைச்சுது. அவனும் ரொம்ப சிரத்தையா படிச்சான். அட்வகேட் ராமானுஜம் வீட்டில் சமையலுக்குப் போயிண்டிருந்தப்போ வக்கீல் கிட்ட சொல்லி மோட்டார் கம்பனியில் உத்தியோகம் வாங்கித் தரச் சொன்னேன்.
உன்னை யாரு சிபாரிசுக்குப் போய் நிக்கச் சொன்னாங்க என்று எப்பவும் போல வள்ளுன்னு விழுந்தான். அன்னிக்கு அப்படி கேட்டிருக்காட்டி இன்னிக்கு அதே கம்பனியில் இத்தனை உசரத்திற்கு அவனால போயிருக்க முடியுமா? நான் சொல்ல வந்தது அதில்லை…” அம்மா சுவாசத்தில் தடை ஏற்பட, பேசுவதை சற்று நிறுத்தினாள். “அம்மா நாளைக்குப் பேசிக்கலாம்மா. டாக்டர் வந்தா சத்தம் போடப் போறார்…”
“சும்மா இருடா. நாளைக்குப் பேச முடியாமப் போயிட்டா? வக்கீல் மாமா வேலைக்குதான் சொன்னாரே ஒழிய கம்பனிக்காரன் ரொக்கமா இருபத்தையாயிரம் ரூபாய் கேட்டான். இந்தச் சமையல் கிழவிகிட்ட ஏது அவ்வளவு பணம்?
கல்யாணம் பண்ணி வந்த புதுசில் மூத்த அக்கா, உங்க பரிமளம் பெரியம்மா, எனக்கு ரெண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கிலி பண்ணிப் போட்டா. நான் உள்ளே ஏறின உடனே அப்பாவோட குணத்தைத் தெரிஞ்சிண்டுட்டேன். சத்தமே போடாம நகையைக் கழற்றி ஒரு பெருங்காய டப்பாவில் போட்டு பரணியில் எடுத்து வச்சேன். மூணு வீடு மாத்தினோம். டப்பாவும் மாறலை நகையும் மாறலை. அந்த ரெண்டு பவுன் சங்கிலியைத்தான் மார்வாடிகிட்டே மொத்தமாவே கொடுத்து பணம் பெரட்டிக் கொடுத்தேன். இப்போ மூணு பெட்ரூம் ஃப்ளாட்டில் இருக்கான். அதில் ஒரு பெட்ரூமில் கூட பெத்தவளுக்கு இடமில்லை…”
“நான்தான் உனக்கு ஆறாவது விரல் மாதிரி எவ்வித பிரயோஜனமும் இல்லாம ஒட்டிண்டு இருக்கேனே..?’’“என்னைப் பேச வேண்டாம்னு நீதானே சொன்னே?”அவன் பதில் சொல்லும் முன்னர் அம்மாவே தொடர்ந்தாள். ‘‘எனக்குதான் ரொம்ப அடிச்சுக்கறது. அவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்தது மாதிரி உனக்கு சரியான படிப்பைக் கொடுக்கலியோன்னு தோணும். எல்லா படிப்பும் சம்பாதிச்சுக் கொடுக்கற படிப்பாதான் இருக்கணும் என்பதில்லை. நீ இஷ்டப்பட்ட மாதிரி உன்னைப் படிக்க வச்சிருக்கலாம். ஆனா, மூத்தவங்க ரெண்டு பேரும் நீ உருப்படாத துறையைத் தேர்ந்து எடுத்துட்டன்னு சொல்லிக் காட்டிண்டே இருக்காங்க. அதுதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.
அப்பல்லாம் நினைச்சுப்பேன். சாதாரணமா வாழ்க்கையில் முன்னேறணும்னா எத்தனை பேரோட கையைக் காலைப் பிடிச்சு முன்னுக்கு வர வேண்டியிருக்கு? சினிமான்னா சும்மாவா? போட்டி பொறாமை, அவனை இவனுக்கு ஆகாது, இவனை அவனுக்கு ஆகாது, தலைக்கனம், பின்னாடி குழி பறிக்கிறதுன்னு எவ்வளவோ இருக்கும். அத்தனையும் தாண்டித்தானே நீ மேல வர வேண்டியிருக்கும்?”நர்ஸ் ஒருத்தி உள்ளே வந்தாள். இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியை அம்மாவின் தோளில் சுற்றி அதனை அழுத்தி பாதரச அளவைப் பார்த்தாள். “பாட்டிம்மா பிரஷரு எகிறிப் போயி இருக்கு. இப்படி ராத்திரி முச்சூடும் எதுனா புலம்பிக்கிட்டு இருந்தா எப்படி? நிம்மதியா தூங்குங்க. நாளைக்கு டாக்டர் வந்தா சத்தம் போடப் போறாரு…”
நர்ஸ் சொன்னதற்காக அம்மா சற்று நேரம் கண்மூடிக் கிறங்கிக் கிடந்தாள். அவன் வெளியில் கிளம்பி அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரு சிகரட் வாங்கிப் பற்றவைத்தான். நாளை டாக்டர் பெரிதாக எதுவும் சொல்லப் போவதில்லை. இரத்தப் பரிசோதனையை நாள் கடத்தியதன் காரணம் கூட அவர் மனதளவில் போட்டு வைத்திருந்த கணக்கு தவறியதால் கூட இருக்கலாம். ஸ்க்ரிப்டின் முப்பத்தேழாவது காட்சியில் ஒரு சின்ன லாஜிகல் தவறு நிகழ்ந்திருக்கிறது. சட்டென்று தனது சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான். பென்-டிரைவ் தட்டுப்பட்டது. அந்த இடத்தை மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டும். சிகரட்டை அணைத்து விட்டு உள்ளே போனபோது அம்மா விழித்துக் கொண்டிருந்தாள்.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்றாள். மெல்ல அவளை எழுப்பிக் கட்டிலிலிருந்து இறக்கி – வீட்டு நார்க் கட்டிலை விட இது கொஞ்சம் அதிக உயரம் இருந்தது – கழிப்பறையில் கொண்டு விட்டான். அம்மா வெளியில் வரும்போது, “சிகரட் பிடிப்பியா?” என்று கேட்டாள். “ம்…” என்றபடி அம்மாவை மெல்ல படுக்கையில் கிடத்தினான்.“எனக்குத் தெரிஞ்சே உங்கப்பாவுக்கு சூளையில் ஒரு பெண்ணோட தொடர்பு இருந்தது. சம்பாதிக்கறதைக் குடிச்சா பரவாயில்லை. கடன் வாங்கிக் குடிக்கணுமா? மாசம் பொறந்தா முதல் பத்து தேதிக்கு ஊரில் இருக்க மாட்டார். நானும் எத்தனை கடன்காரனுக்கு பதில் சொல்ல முடியும்? இதை உனக்கு எதுக்கு சொல்றேன்னா… நீ போற இடம் அப்படி. குடி, போதை, பொம்மனாட்டி எல்லாம் இருக்கும். அதையும் தாண்டி வர்றவங்களாலதான் ஜெயிக்க முடியும்.
அடிப்படையா மனுஷ குலத்துக்குன்னு ஒரு நேர்மை, தர்மம் இருக்கு. அதை விட்டுடாதே. அதர்மமும் பொய்யும் பீடத்தில் உட்கார்ந்திண்டு இருக்கறப்போ இது என்ன புது வியாக்கியானம்னு நினைக்காதே. தோணித்து…”மறுநாள் டாக்டர் காலையில் பத்து மணிக்கு கையில் இரண்டு மூன்று ரிப்போர்ட்டுகளுடன் நுழைந்தார். முதல் கட்ட பரிசோதனைகளைக் கடந்து அவனைத் தனியாக அழைத்துச் சென்றார்.
“அம்மாவோட நிலைமையை வச்சுப் பார்க்கறப்போ அவங்களுக்கு சிறுநீரகம் பழுதாக வாய்ப்பு அதிகம். சிடி ஸ்கேன் ஒண்ணு எடுக்கணும். என் கிளினிக்கில் இதற்கான வசதி கிடையாது. ஒண்ணு செய்யி, மத்யானம் ரெண்டு மணிக்கு பணத்தோட வா. நான் முழு மெடிகல் ஹிஸ்டரி எழுதி வைக்கிறேன்.
மைலாப்பூரில் ஒரு பெரிய நர்சிங் ஹோம் இருக்கு. வசதியில்லாதவங்களுக்கு கிட்டத்தட்ட இலவசமா பார்க்கறாங்க. இருந்தாலும் நீயும் கொஞ்சம் பணம் தயார் பண்ணி வச்சுக்கணும். முடியுமா?” என்று கேட்டார். மாதவன் உற்சாகமாக ‘‘முடியும் டாக்டர்…” என்றான். காலையில் காமாக்ஷி வந்திருந்தாள். அவளை அங்கே அம்மாவிற்குத் துணையாக வைத்துவிட்டு அவசர அவசரமாக சாலிகிராமம் நோக்கிப் பயணித்தான். வழி நெடுகிலும் ஒரு மனம் இன்னொரு மனதை சமாதானம் செய்தபடி வந்தது. ஒரு கணத்தைத் தீர்மானிப்பது தர்மங்களோ, நெறிகளோ இல்லை.
பணம்தான் தீர்மானம் செய்கிறது. அந்தத் தீர்மானத்திற்கு அவன் வெறும் கருவி மட்டும்தான். அவனது பிறப்பு, வாழ்க்கை, படிப்பு, அவன் பெற்றோர், அவன் உடன்பிறப்புகள், அவனது கல்யாணம், கொண்டாட்டம் எல்லாவற்றையும் அந்த ஒரு கணம்தான் கட்டமைக்கிறது. அந்த ஒரு கணத்திற்கு என்று தனியாக வரைமுறைகள் உள்ளதா? இருக்கலாம். நெறிகளுக்கு உட்பட்டதா இல்லையா என்பதெல்லாம் அந்த ஒரு கணத்திற்குத் தெரியாது. அந்தக் கணம் இயங்கச் சொல்வதற்கு ஏற்பவே மொத்த பிரபஞ்ச இயக்கமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனை மீறுவதற்கு அவன் யார்? சில்வர் ஷங்கர் அவனது அலுவலக அறையில் இருந்தான்.
“நானே உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன் மாதவா. அம்மா எப்படி இருக்காங்க?”“க்ரானிக் ரீனல் ஃபெயில்யூரா இருக்கலாம்னு டாக்டர் சந்தேகப்படறார். கூடை கூடையா பணம் வேணும்னு சொல்றார்…”“அதுக்கென்ன? நான் தயாரிப்பாளரிடம் இந்தக் கதைக்குப் பத்து இலட்சம் கேட்டிருக்கேன். அவரு மட்டும் தயாரிப்பாளர் இல்லையே? அதையும் சொல்லி மிரட்டியிருக்கேன். சரின்னு சொல்லிடுவார்னு நினைக்கிறேன். மொத்தமா உனக்கு மூணு இலட்சம் கொடுக்கறேன். உனக்கும் அம்மாவுக்கு வசதியா மருத்துவம் பார்த்த சமாதானம் இருக்கும்…”சில்வர் ஷங்கர் பேச்சில் இரக்கத்தை விட வியாபாரம்தான் கூடுதலாகத் தெரிந்தது.
மாதவன் கணினி முன்பு அமர்ந்தான். தனது சட்டைப் பையிலிருந்த பென் டிரைவை எடுத்தான். சில்வர் ஷங்கர் மிக முன்னேற்பாட்டுடன் தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருப்பான். ஆனால் இவனுக்கு எவ்வித ஒப்பந்தமும் கிடையாது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையையும், வல்லூர் தேவராச பிள்ளையையும் நினைத்துக் கொண்டான். சில்வர் ஷங்கர் தனிக் கணினி யில் டெஸ்க் டாப்பில் தனி கோப்பில் திரைக்கதையை ஏற்றி விடலாம் என்று எண்ணினான். பிறகு அவன் பாடு.“என்ன பண்ற?’’ சில்வர் ஷங்கர் கேட்டான். சொன்னான்.“நீ என்னோட மெயிலுக்கு ஒரு நகல் அனுப்பிடு…’’ தனது விசிட்டிங் கார்டை நீட்டினான்.
“உனக்கு வருத்தம் இல்லையே?” ஒரு சமாதானக் கேள்வியும் வந்தது.“வருத்தப்பட என்ன இருக்கு? ஆனால், ஒரே ஒரு குறை. எனது முதல் நுழைவிற்கே நான் இப்படி வளைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டால் இது தொடருமோ என்ற குறை. வேறு வழிகளையெல்லாம் மூடிவிட்ட இந்தக் கணத்தை நம்மில் வேறு யாரால் தடுக்க முடியும்?’’ என்று கேட்டான். சில்வர் ஷங்கர் பதிலே சொல்லவில்லை. ஒரே ஒரு க்ளிக்தான். அவனது மொத்த திரைக்கதையும் ஒரு கோப்பின் மூலம் சிவர் ஷங்கரின் மின்னஞ்சலுக்குப் போயிருக்கும். அதற்குள் அவனது கைப்பேசி அவனை அழைத்தது. யார் என்று பார்த்தான். காமாக்ஷி. “சொல்லுங்க…’’“எங்கேயிருந்தாலும் கிளம்பி வா மாதவா. அம்மா காலமாயிட்டாங்க…”
– Jan 2018