(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வேர் செத்த பிறகும் விழ மனம் இல்லை. எகிறின் பிடிப்பில் அழுந்தி நின்று கொண்டு அடம்பிடிக்கிறது எனது முன்கடைவாய்ப் பல்.
நாக்கால் தொட்டால் சோளக்கொட்டை போல் நாலாப்புறமும் உலாப் போகிறது!ஆனால் விழமாட்டேன் என்கிறது.
அதுதரும் நோவும் அடம் பிடித்து ஏற்படுத்தும் அசௌகரியங் களும்… அப்பாடா பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
வயிற்றிலே பசியா…? அல்லது வலியா..? அல்லது வேறு எங்காவது நோகிறதா….? என்று சொல்லத் தெரியாமல் சதா நை நை’ என்று கத்தித் தீர்க்கும் குழந்தை போல். என்ன செய்வதென்றே தெரியாமல் எகிறில் வீக்கம் கண்டு..!
கேவலம் ஒரு பல் , அதுவும் என் பல்…. வாயில் ஒன்றும் வைத்து விட முடியாது… நீர் பட்டால் இழுக்கிறது சாப்பிடும் போது ஏதாவது தப்பித் தவறி பட்டுவிட்டால் உயிர் நிலையில் அடிப்பட்ட மாதிரி…
அப்படியே கன்னத்தை அழுத்திப்பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்துவேன்.
கையைக் கழுவிக் கொண்டு எழுந்து விடுவேன்.
பல்லின் அடம் வயிற்றுக்குத் தெரிகிறதா?
“என்னங்க இப்பவும் சாப்பிடாமல் எழுந்திறிச்சிட்டீங்க… அந்தப் பக்கம் போகாம பாத்து மெது மெதுவா மென்று முழுங்கிடுங்க. இப்படி பட்டினி கெடந்தா எப்படி? வயித்துக்கு எதையாவது போட்டாகணுமே…”
“ஒங்களுக்கும்…ஒங்க பல்லுக்காகவும் தான் சோத்தையும் கொஞ் சம் கொழைய விட்டு, ரசமும் வச்சிருக்கேன்… நல்லா பெனைஞ்சி நைசா முழுங்கிடுங்க.
“பட்டினியோட போறிங்க மயக்கம் போட்டு எங்கயாச்சும் ரோட்டுல விழுந்துட்டிங்கன்னா… குடிச்சிட்டு விழுந்து கெடக்குறதா நாலுபேர் நெனைப்பானுக!
மனைவி சொல்லுவதில் உள்ள நியாயம் எனக்கு தெரிகின்றது.
ஆனாலும் அவளை முறைக்கின்றேன்.
“எனக்கல்லவா தெரியும் என் வேதனை உனக்கெப்படித் தெரியும்” என்னும் அந்த முறைப்பின் எரிச்சல் ஏவுகணை போல் அவளது கண் வழி நுழைந்து உடலுக்குள் சர் சர்’ ரென்று ஊடுறுவி இதயத்தைத் தேடித் தாக்குகின்றது.
காலங்காலமாய் எனக்குச் சகலமுமாகி எனது சகலவற்றையும் பகிர்ந்து கொண்டு எனக்காகவே வாழும் அவள் இப்போது அயலவளாய்த் தோன்றுகின்றாள்… தெரிகின்றாள்..!
“என்னுடைய வேதனை உனக்கெப்படி தெரியும்” என்கிறேன்.
காரணம் இந்தப் பல்லும் அதன் பயங்கரவாதமும்.
தாகத்திற்கு தண்ணீரைத் தவிர வேறு எதையுமே வாயில் வைத்த றியாத என்னை நாலுபேர் குடிகாரன் என்றும், குடித்துவிட்டு றோட்டில் விழுந்து கிடக்கிறவன் என்றும் குறை பேச வைக்குமா இந்தப் பல்.
இத்திணையூண்டான இந்தப் பல்லின் சில்லறை விளையாட்டுக்கள் என் கௌரவத்திற்கு இழுக்கைத் தேடித்தரும் ஒருதிட்டமிட்ட செயலா கத்தான் இருக்க வேண்டும்.
கோபத்தால் பல்லைக் கடித்தேன்.
“அம்மோவ்…” தொலைந்தேன் !
கீழ்ப்பல்லின் அழுத்தத்தால் சற்றே ஒருக்கழித்து வரிசையை விட்டு விலகி கன்னத்தின் மென்மையைக் கீறிக் கொண்டு..!
ஒரு கணம் உயிர் போய்த் திரும்புகிறது.
எகிறில் இரத்தம் ஊர்வது போன்ற ஒரு இழைதல். எச்சிலை உரிஞ்சிச் சுவைக்கின்றேன் ரத்த வாடை இல்லை…
இருக்கும் இடம் விலகியதால் ஏற்பட்ட இடைஞ்சல் என்னை சித்தரவதைப்படுத்துகின்றது.
பல்லுக்கு மேலாக நாவைச் சுழற்றித் தடவிப் பார்க்கின்றேன்.
நிற்கவும் முடியாமல் விழவும் மனமில்லாமல் மண்ணின் பிடிப்பில் வேரூன்றி சரிந்து நிற்கும் மரம் போல் அடிப்பல் எகிறின் உள்ளும் நுனிப்பல் கன்னத்தைத் தொட்டுக் கொண்டும்…
பல்லின் மேல் நாக்குப் பட்டதுதான் தாமதம்.
கோபித்துக் கொண்டு வாசல் கல்லில் போய் அமர்ந்து கொண்ட கிழம், யாராவது கூப்பிட மாட்டார்களா என்பதற்காகக் காத்திருந்து “உள்ள வாயேன் காத்தடிக்குதில்லே” என்ற குரல் கேட்டதும் ஓடி வந்து நுழைந்து கொள்ளுவதைப்போல…டடக்’கென்று மீண்டு வந்து வரிசையில் நின்று கொண்டது.
பல்லை மெதுவாக மீண்டும் மீண்டும் நாக்கு தடவுகிறது.
அடிப்பல்லின் ஓரம் நாவைக் கீறினாலும் தடவல் இதமாக இருக்கிறது.
விலகி வெளியே வந்த அளவு உள்ளே போகுமா என்னும் பரிசோதனையில் நாவால் மெதுவாக உந்துகிறேன்.
வரிசை விட்டு விலகி வெளியே வந்தது போலவே உள்ளேயும் போகிறது.
பற்களை மெதுவாகக் கடித்து ஆடும் பல்லை உட்பக்கமாக அழுத்தினேன். பிறகு மீண்டும் கடித்து வெளிப்பக்கமாக அழுத்தினேன்.
தள்ளு ஊஞ்சல் மாதிரி உள்ளேயும் போகிறது வெளியேயும் போகிறது.
ஆனால் கழன்ற பாடில்லை.
கண்ணாடி முன் நின்று வாயை அகலத் திறந்து பார்க்கின்றேன். வலிக்குப் பயந்து அந்தப் பக்கம் பிரஷ் போடுவதே இல்லை . லேசாக மஞ்சள் பூத்துப் போய் வழவழத்துக் கொண்டு!
எழும்பவும் ஜீவனற்று புரட்டிப் போடவும் நாதியில்லாமல் ஈரமும் பிசு பிசுப்புமாய் கட்டிலில் கிடக்கும் கிழம் போல!
அசூயை என்னை அரிக்கின்றது!
“இந்த இளவையெல்லாம் வாய்க்குள் வைத்துக் கொண்டு”
எரிச்சல்… எரிச்சலாக… வருகின்றது!
விரலால் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு மெதுவாகச் சுழற்றிப் பார்க்கின்றேன்.
உதட்டை நீவிக் கொண்டு விரல் உள்ளே நுழைந்ததும் கோணல் முகமும் விரலும் மட்டுமே கண்ணாடியில் பெரிதாய் தெரிகின்றன. பல்லும் பல்லின் நடமாட்டமும் தெரியவில்லை.
கண்கள் கலங்கிச் சிவந்ததுதான் கண்ட பலன்! பல் கையில் வரவில்லை.
எனது மெது மெதுவான பலாத்காரப் பிரயோகங்களுக்கெல்லாம் பல் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை .
நான் எத்தனை பெரியவன்! எத்தனை எத்தனை பிரமாண்டங்களை எல்லாம் செய்து காட்டியவன்! எனக்குத் தெரிய முளைத்தது இந்தப் பல். எனது சுண்டு விரல் நகம் அளவு இருந்துக் கொண்டு!
பல் எல்லாம் மனிதனுக்கு அவசியமா என்ன? என்னும் நினைவு எழுகிறது.
நெருக்கடிகள் தான் ஒரு வரலாற்றுத் தேடலுக்கான நெருக்குதலை உயிர்ப்பிக்கின்றனவோ.
பொக்கை வாயாக இருந்து மண்ணைக் கீறிக் கொண்டு மேலெழும் ‘விதை முளை போல் சின்னதாக வெள்ளையாக எகிறை முட்டிக் கொண்டு ஒன்று எட்டிப் பார்க்கையில் எத்தனை குதூகலம் கொண்டி ருப்பார்கள் பெற்றவர்கள். விரலால் தடவிப் பார்த்து பல்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டதும் அவசர அவசரமாக அரிசி இடித்து பல் கொழுக்கட்டை பிடித்து!
எத்தனை வரவேற்பு!
பிறகு ஒவ்வொன்றாய் முளைத்து வளர்ந்து வாய் நிறைந்து கீறிப் போட்ட தேங்காய்க் கீற்றுப் போல் வரிசையாக
முகத்துக்கே ஒரு தேஜசாய்
எத்தனைப் பேர் என் பற்களைப் பார்த்து பொறாமைப்படவில்லை முன்னிரு பற்களும் அதனை ஒட்டி வளர்ந்த மற்ற பற்களும் – ஒரே சீரான அளவுடன் வரிசை மாறாமல் – வெளியே தெத்தித் துருத்தாமல்!
எகிறின் சிவப்பும் அதில் பளிங்கு பதித்தாற்போன்ற பல் வரிசையும்.
எனது சிரிப்பின் மோகனம் எத்தனை பேரை வசீகரித்திருக்கின்றது! என்மேல் மோகம் கொள்ளச் செய்திருக்கிறது.
இந்தப் பற்களால் முகத்துக்கொரு களையும் எனக்கொரு கௌர வமும் கிடைத்ததே!
அதே பற்களில் ஒன்று இன்று என் கௌரவத்திற்கே இழுக்குச் செய்யத் துணிந்திருக்குமா?
நம்ப முடியவில்லை!
என்னால் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் அநீதி அக்கிரமங்கள் எப்போதாவது ஏற்பட்டிருக்குமா? தெரிந்தோ தெரியாமலோ!
இல்லை என்றால் இது ஏன் என்னை இப்படி இம்சிக்கிறது துன்பு றுத்துகிறது எதற்காகவோ பழி வாங்குவது போல்.
“Every Action has a Reaction” என்பது எத்தனை சத்தியமானது
ஆலும், வேலும்….. என்பதற்கிசைய ஆலங்குச்சியை மென்று பல் தேய்க்கவில்லை தான் நான். இன்றைய விஞ்ஞான வேகத்தில் இதெல் லாம் சாத்தியப்படுவதில்லை. குச்சியையும் கொம்பையும் எங்கே போய்த் தேடுவது!
இருக்கவே இருக்கின்றன றெடிமெட் குச்சிகள். விதவிதமான வண் ணங்கள் வளைவுகளுடன்.
பல் வரிசையில் உள்ளும் வெளியுமாகக் கையை ஓட்டி ஓட்டி இடைஞ்சலின்றி லாவகமாக பிரஷ் செய்வதற்கான விஞ்ஞான கண்டு பிடிப்புத்தான் இந்த வளைவுகள் என்னும், விளம்பரங்களுடன்.–
பல்லின் மேல் உள்ள பற்றுதல் பாசத்தில் அக்கறையில் அழகழ கான அதிக விலையான பிரஷ்களையே பாவிப்பேன். அடிக்கடி பிரஷ் வாங்கி வாங்கியே அம்மாவிடம் ஏச்சுப் பட்டிருக்கின்றேன். குப்பை யாகச் சேர்ந்துவிடுவதால் எங்கே கொட்டுவது என்பதும் பிரச்சினை தான்.
தங்கள் தங்கள் மேம்பாட்டுக்காகவன்றி பற்களின் மேம்பாட்டுக் காகவே நலன்களுக்காகவே தயாரிப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பற்பசைகளில் பெரிதாகத் தம்பட்டம் அடிக்கும் பற்பசையைத்தான் தேர்ந்தெடுத்துப் பாவித்தேன்… பாவிக்கிறேன்…!
பொங்கும் பால் போல நுரை நுரையாகக் கிளம்பி வாய் எது பல் எது என்று தெரியாமல் பொங்கிப் பூரித்து துப்பும் போதும் துப்பிய பின்பும் அது மணக்கும் மணம். கொப்பளித்து துப்பிய பின்பும் பல்லைச் சுற்றிச் சுற்றி ஓடி வரும் அந்த சில்லென்றச் சுகந்தம்.
எத்தனை செய்திருக்கிறேன்… இதற்காக. பிள்ளைக்கு நல்லதே என்று தினமும் காலைக் கருக்கலில் நாலு மைல் தூரம் நடந்து போய் ஆட்டுப்பால் வாங்கி வந்து காய்த்து சீனி போட்டு கையில் எடுத்துக் கொண்ட பிறகுதான் எழுப்புவேன் இவனை… இப்போது எவளோ ஒருத்தியின் பின்னால் ஓடிக் கொண்டு நீ யார் என்று என்னையே கேட்கின்றானே என்று குமுறிப் புலம்பும் அப்பா போல்…
நானும்..!
“அது ஒரு தகப்பனாகப்பட்டவனின் கடமை” என்று அந்த மகன் சொல்லியிருப்பான் ….
இந்த பல்லும்……
நானும் தான் உனக்கு எத்தனை எத்தனையோ செய்திருக்கின்றேன். என்னைப் பத்திரமாக… சுகதேகியாக… மரியாதையாக…. வைத்திருக்க வேண்டியது உனது கடமை என்று கூறுமோ..?
இறைச்சியா எலும்பா? சோறா சோளமா? சகலமும் இதற்கு யானை வாய்க் கரும்புதான்!
கரும்பை மட்டும் விட்டா வைத்தேன்.
முன் கடைவாய் பல்லால் ஓரத்தை ஒரு கடி கடித்து இழுத்தேன் என்றால் டர்டர்’ரென்று உரிந்து வரும் பட்டை.
உதடு லேசாக நசிந்து எரியும். நற நற’ வென்று கடித்து மெல்கையில் சர சரவென்று கருப்பஞ்சாறு தொண்டைக்குள் இறங்கும். வெளி யேயும் வீசித் தெறிக்கும்.
பல்லிடுக்கில் சிக்கி நிற்கும் சின்னச் சின்ன சக்கை வலி கொடுக்கும்.
பல்லைக் கடித்து வாயைச் சுழித்து ‘ஸ்ஷ்ஸ்’ என்று பலமாகக் காற்றை உள்ளிழுத்தால் சிக்கிக் கொண்டிருந்த கரும்புச் செதில் ‘கப்’ பென்று தொண்டைக்குள் போய்விழும்.
காறி உமிழ்ந்து விட்டு மீண்டும் நற நறவென்று கடித்து மென்று… இனிக்க இனிக்க சாறு விழுங்கி.
கருப்பஞ்சாற்றைப் போலவே அந்த நாட்களும் மிக இனிமையானவை.
இப்போது கரும்பென்று நினைக்கையிலேயே குலை நடுங்குகிறது. கடிக்கவா… இழுக்கவா…. மெல்லவா..?
உறைக்க உறைக்க ஆஸ் ஊஸ் சென்று இறைச்சியும் சோறும் மென்று முடித்து கை வாய் கழுவியதும் அம்மாவிடம் பின்’கேட்பேன்.
ஆறேழு இடங்களில் குத்தி எடுத்தால் தான் விடுதலை கிடைக்கும். இறைச்சித் துரும்புகளை குத்தி எடுக்கும்வரை பற்களுக்கு சிலுவையில் தொங்கும் ஒரு வேதனை.
பல்லை எல்லாம் பின்’னால் குத்தக் கூடாது என்பார்கள் அம்மா ரவிக்கையில் கழற்றிய பின்னை நீட்டிக் கொண்டே!
பல்லிடுக்குகளை மெது மெதுவாகக் குத்தி சுத்தம் செய்து கொப்ப ளித்துத் துப்புகையில் தண்ணீர் லேசான சிவப்பாய்த் தெறிக்கும், மெலி தான இரத்த வாடையுடன்.
ஒட்டி நிற்கும் பற்களுக்குள் ஓட்டை போட்டு பிரித்து விடும் சூழ்ச்சி எதையும் நான் தெரிந்து செய்யவில்லை. என்றாலும் எகிறருகில் ஊசியை நுழைத்து பல் நுனி வரை இழுத்துப் பார்த்திருக்கின்றேன்.
ஏறக்குறைய ஒட்டியிருக்கும் இரண்டை. வெவ்வேறாகப் பிரிப்பதற்கொப்பானதுதான் இது!
ஆபீசில் வேலை பார்க்கும் ஆறேழு பெண்கள் ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தனர். பேசிச் சிரித்து நாலைந்து குளிர் பானப்போத்தல்கள் வாங்கி….
இதெல்லாம் வழமைகள் தானே!
பெண்கள் என்றதும் மனம் சிலிர்த்துக் கொள்ளும் வயது அது!
மேசை மீது போத்தல்களை வைத்து விட்டு “அம்மா கிளாஸ்” என்றேன்.
கிளாஸ்கள் மட்டுமே வந்தன. ஒப்பனர் வரவில்லை. கேட்டேன். அம்மா மறுபடியும் குசினிப் பக்கம் நடந்தார்கள்.
அதற்குள்
கூடியிருந்து கும்மாளமிடும் “யாரோ” இந்த பெண்களிடம் என்னு டைய கெட்டிக்காரத்தனத்தைக் காட்ட பலியாவது எனது பல்!
கடை வாய்ப் பல் இடுக்கில் போத்தலை வைத்துக் கடித்து கடக்’ கென்னும் ஓசையுடன் ஒன்றைத் திறந்து காட்டினேன்!
“அம்மாடியோவ்…” என்று ஒருத்தி குதூகலித்தாள். ஓப்பனருடன் அம்மா வருவதற்குள் நாலைந்து “அம்மாடியோக்கள்…”
டஸ்ஸென்று நுரை வழிய வழிய கிளாஸ்கள் நிறைந்தன.
அம்மா திகைத்து நின்று விட்டார்கள். பிறகு ஏசினார்கள்.
ஆனாலும் எனது பற்கள் மீதான என்னுடைய ஆதிக்கம்… சர்வாதி காரம்..!
எனது பல்தானே என்னும் எதேச்சதிகார அசட்டை …!
தங்கள் தங்கள் குஷிகள் கொண்டாட்டங்களுக்காக அடிமைகளை துன்புறுத்தி இன்பம் காணும் எஜமானர்கள் போல்…
அம்மாவின் இடத்தை மனைவி பிடித்துக் கொண்ட பிறகும் பின்னால் பல்லுக் குத்தாதீங்க என்றபடி ரவிக்கையில் இருந்து பின்’ கழற்றிக் கொடுப்பது நடந்து கொண்டே இருந்தது.
நாசூக்கான இந்தப் பிளவு படுத்தும் வேலையை தனியாக மட்டு மின்றி கூட்டாகவும் செய்திருக்கின்றேன்.
இது நாசகார வேலையல்ல நமது பாரம்பரியம் என்னும் போலிப் பூச்சுடன்.
எங்கள் வீட்டில் ஒரு விருந்து!
பொரித்தாக்கிய கத்திரிக்காய் கூட்டும் உருளைக்கிழங்கை பிசைந்து மாவாக்கிய உருளைக் கிழங்கு உப்புமாவையும் தவிர்ந்த மற்றதெல்லாமே பல்லுடன் மல்லுக்கு நிற்கும் அயிட்டங்கள்.
இறால் வறுவல், மாட்டிறைச்சிப் பிரட்டல், கால் முள்ளும் சதையுமாக கோழி இறைச்சிக் கறி!
மாட்டிறைச்சி வேண்டாம் என்பவர்களுக்காக குண்டு குண்டாய் எலும்புகளுடன் ஆட்டிறைச்சிப் பிரட்டல்….!
கடிக்க முடியாதவைகளை வீசித் தொலைக்கின்றார்களா? இல்லை சப்புகின்றார்கள், உறிஞ்சுகின்றார்கள்…திருப்பித் திருப்பிப் பார்த்து இடம் தேடிக் கண்டு பல்லை நுழைத்து…
ஒரே போர்க்களம்!
கை கழுவித் துடைத்து பழம் தின்னும் முன் ஒவ்வொருவரும் பல் குச்சியும் தானுமாய்….
முன் கையால் வாயை மூடிக்கொண்டு முகங்களைக் கோணிக் கோணி…
பூச்சாடியின் பூக்களென ஊசி ஊசியாய் நீட்டிக் கொண்டு பற் குச்சிகள் பக்கற்றுடன் வீற்றிருக்கிறது மேசையில்.
தலையைப் பலமாக உதறிக் கொண்டேன் . சும்மாவே ‘நொய் நொய்’ என்று பிய்க்கும் பல்லுக்கு தலையின் பலமான உதறல் வெறும் வாய்க்கு அவல் போட்டது போல்…
விரலால் மெதுவாகத் தடவுகின்றேன். பல்லின் வழுவழுப்பு விரலில் அசூயையை ஏற்படுத்துகின்றது.
நகத்தால் மெதுவாகச் சுரண்டியவாறே விரலிடுக்கில் பல்லை வைத்து பிடியைச் சற்று அழுத்தி…
ஒரு திருகு..!
பல் கையுடன் வந்து விட்டது போன்ற உணர்வு ஆனால் விரல் மட்டுமே வெளியே வந்தது. எச்சில் ஒழுகிக் கொண்டு.
இடுப்பில் குந்தியிருக்கும் குழந்தையைப் போல் எகிறுக்கு வெளியே குந்தியிருக்கிறது பல்!
எகிறைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நாவால் இழுத்துப் பார்க்கிறேன்.
வரிசைக்கு வர மறுத்து அடம்பிடிக்கிறது.
என்னுடைய பலாத்காரப் பிரயோகங்களுக்கான ஒரு எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டு!
கண்ணாடி முன் நின்று பல்லுடன் மல்லாடிக் கொண்டிருக்கும் என்னை வருவோர் போவோர் எல்லாம் ஏளனமாகப் பார்ப்பதும் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வதுமாய்…
அவர்களுக்கு இப்படி ஏதும் இன்னும் வரவில்லையா அல்லது தங்களுடையவைகளை மறைத்துக் கொண்டு அயலவனை கேலி செய்யும் வேஷமா?
ஒரு விதமாகப் பல்லை சமாதானப்படுத்தி வரிசைக்கு கொண்டு வந்து விட்டேன்.
மெதுவாக தொட்டுப் பார்க்கிறேன். விரல் நுனிபடும் போதே விலகிச் செல்கின்றது!
எச்சில் சிவப்பாய் ஊறி ஊறி வாய் ரொம்புகிறது.
“தண்ணி.. கொஞ்சம்…” என்று குழறியபடி வெளியே ஓடுகின்றேன்.
டம்ளரில் தண்ணீருடன் மனைவி வந்தாள்.
வழவழப்பும் சிவப்புமாய் எச்சிலைத் துப்பி விட்டு.
துப்புவது எங்கே வாயைத் திறந்து குனிந்து வடித்து விட்டு நிமிர்ந்தேன்.
கிளாசை வாங்கி தண்ணீரை வாயில் ஊற்றியது தான் தாமதம்
இழுத்ததே ஒரு இழுப்பு! கையில் இருந்த கிளாசை வீசி எறிந்தேன்.
எரி கொள்ளியை தண்ணீருக்குள் விட்டு இழுத்தது போல் புகையும் கொதிப்புமாய் ஏதோ ஒன்று சர் சர் ரென்று பல்லுக்குள் நுழைந்து எகிறுக்குள் ஏறி கன்னத்தில் வியாபித்து கண் நெற்றி என்று ஏறி ஏறி மண்டைக்குள் பிரவேசித்து மூளையைத் தேடி…
என்னால் நிற்க முடியவில்லை. நின்றால் சாய்ந்து விடுவேன் என்பது திண்ண ம்.
ஓடுகின்றேன்…. வீட்டை சுற்றி… கேட்டைத் தள்ளிக் கொண்டு றோட்டு வழியே …
சைக்கிள்… கார்… பஸ்…. என்று தாண்டி ஓடுகின்றேன்.
சிலர் நின்று திரும்பி என்னைப் பார்க்கின்றனர். பிறகு நடக்கின்றனர்.
நான் ஓடுகின்றேன்…. பின்னால் மனைவி ஓடி வருகின்றாள்…
நீண்டு நீண்டு வரும் அவளது கரம் எட்டி எட்டி என்னைப் பிடிக்க முயன்று முதுகில் பட்டு பட்டு விலகி…
எட்டிப் பிடித்து வேகத்தைக் குறைத்து ஓட்டத்தை நிறுத்தி உள்ளே கூட்டி வருகிறாள்.
எனக்கு சுயம் திரும்புகின்றது. வெட்கமாக இருக்கின்றது அடங்கிப் போய் கதிரையில் அமர்கின்றேன்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இம்சைப்படப் போறீங்க. டாக்டர்கிட்ட போங்கன்னு நானும் எத்தனையோ தடவை சொல்லி விட்டேன்…. நேரமில்லைம்பீங்க ஆடுற பல் தானே விழுந்துடும்பீங்க…அது உங்களை வீழ்த்திடும் போலிருக்கே…”
கலங்குகின்றாள் மனைவி
ஆம் அதுதான் சரியான வழி! நானும் தீர்மானித்துக் கொண்டேன்.
என்னுடைய எந்தவிதமான சமரசங்களுடனும் அது ஒத்து போக வில்லை !
இதமான எனது தடவல்கள் அதைத் திருப்திப் படுத்தவில்லை .
எனது சின்ன சின்ன பலாத்காரங்களுக்கு அது மசியவில்லை.
இனி ஆயுதப் பிரயோகம் தான் ஊசி போட்டு உணர்வழித்து உயர்ந்த கதிரையில் உட்கார்த்தி தலையை அழுத்தி வைத்து கிடுக்கி போட்டு இறுக்கி கத்தியால் கீறி குரடால் அழுத்திப் பிடித்து நெம்பி….
“Every action has a reaction” என்பதன் இருப்பை நானும் நிலை நாட்ட வேண்டும்!
கன்னத்தில் கை பதித்து ஆயுத உதவி நாடி டாக்டரை அடைந்த போது எனக்கு பகீர் என்றது.
என்ன இத்தனை கூட்டம்!
கன்னத்திலும் தாவாயிலும் முன் வாயிலும் கை பதித்தவர்களாய் அத்தனை பேரும்!
முகத்தைக் கோணி கோணி அழுதபடி அம்மாவை அரவணைத்துக் கொண்டு அந்தச் சிறுவன்…
பள்ளிக்கூடக் கவுனும் தானுமாய் அப்பாவின் பிடிக்குள் நெளியும் அந்தச் சிறுமி…
பூவும்… பிஞ்சும்… காயும்… பழமுமாய்….
இத்தனை பேருக்குமே பல்வலியா!
டாக்டரிடம் நானோ என்னிடம் டாக்டரோ எப்போது நெருங்குவது….
உலகம் அவசர அவசரமாகக்கிழண்டுப் போய்க்கொண்டிருக்கிறதோ!
டாக்டரே டாக்டர்களாகிப் பல்கிப் பெருகி…
கத்திகளும்… இடுக்கிகளும்… ஒன்றுடன் ஒன்று மோதும் கடமுடா வென்னும் ஆயுத ஒலிகள் இரைச்சலாகி…. காது செவிடுபடும் படி…
ஆட்டம் போடும் இந்த பல்லை ஆயுதம் போட்டு அகற்றி அழித்து விட்டு…
நுனி நாவால் தடவிப் பார்க்கின்றேன். பல்லிருந்த இருந்த இடம் பள்ளமாக இருக்கிறது.
ஆனால்…. ஆனால்..!
பக்கத்துப் பல் ஏன் லேசாக வலிக்கிறது!
– சரிநிகர் 1997.
– தினக்குரல் 2012.
– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.