உயிர்க்கொடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 8,343 
 

இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால், கயிறு அசைந்து ராட்டினத்தில் இருந்து ஒலி எழும்பிக்கொண்டு இருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்துக்கு. லேசான வெளிச்சக் கோடுகள் வந்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது. மடியில் தூங்கிக்கொண்டு இருந்த தன் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள்.

அமிர்தத்துக்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாகப் பாடித் திரிந்தவள் அமிர்தம். ஆம்பூருக்கு வந்து வாழ்க்கைப்பட்டு இப்படித் துன்பப்படுவாள் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. நேற்று இரவு மாமியா ருடன் போட்ட சண்டையில் வீட்டுக்கு வெளியே துரத்தப்பட்டவள், இரவெல்லாம் இப்படிக் கிணற்றின் அருகிலேயே உட்கார்ந்து இருக்கிறாள்.

தன்னுடைய முந்தானையை எடுத்துத் தலையில் இருந்து கால் வரை இழுத்துப் போர்த்தி, ஒரு கூடாரத்தைப் போலாக்கி, கால்களை மடக்கித் தொட்டிலாக்கி, அதில் குழந்தையைப் படுக்கவைத்து, கால்களை மெதுவாக ஆட்டி தூங்கப் பண்ணினாள். அன்று இரவு முழுக்க ஒரு பொட்டுத் தூக்கம் கூட அவள் தூங்கவில்லை. கண்கள் மூடும்போது எல்லாம் அவளுக்குக் கோபமும் அழுகையும் பீறிட்டு வந்துகொண்டு இருந்தது.

‘இவ்ளோ தூரம் கண்காணாத எடத்துல குடுக்கணுமாப்பா?’ எனக் கேட்ட அம்மாவைப் பார்த்து, ‘டீச்சருக்கு வாத்தியாருதான் நல்லது. மிலிட்டரிக்காரனுக்கா பொண்ணக் கொடுக்க முடியும்?’ என்று சொன்ன சின்ன அண்ணன் நினைவுக்கு வந்தான். குழந்தையாக இருக்கும்போது அவன்தான் தலை வாரி, பவுடர் பூசி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவான். அந்தக் கிராமத்தில் அப்போது கடைகள்கூடக் கிடையாது. ஆனால், தினமும் பள்ளிக்குப் போகும்போது காசு தருவான். தான் வேலை பார்க்கும் கரும்புத் தோட்டத்தில் இருந்து தேர்ந்தெடுத்த நல்ல சிவந்த கரும்பினை வெட்டி, அதன் தோலைச் செதுக்கி, முள்ளங்கி பத்தையைப்போல கரும்பினை ஒரே அளவாக அரிந்து, தன்னுடைய துண்டின் ஒரு முனையில் மூட்டையைப்போல் கட்டிக் கொண்டுவந்து தங்கச்சிக்குத் தருவான். இது அவனுடைய அன்றாட வேலை. இவள் அதைத் தன் பாவாடையில் வைத்துக்கொண்டு சாப்பிடத் தொடங்குவாள்.

அமிர்தம் அந்தக் கிராமத்தின் செல்லப் பெண்ணாக வலம் வந்தவள். நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களும் சூழ்ந்திருக்கும் அழகிய கிராமம் அது. அந்த ஊருக்குள் செல்ல வேண்டும் என்றாலே, ஓடிக்கொண்டு இருக்கும் தண்ணீரில் நடந்துதான் செல்ல வேண்டும். பாலாற்றங்கரையில் அமைந்த வளமான ஊர் அது. வாலாஜா முக்கிய சாலையில் இருந்து கிளை பிரிந்து, தெற்குத் திசையில் திரும்பும் சாலையில் போனால், அணைக்கட்டு வரும். அவ்விடத்தில் பாலாறு இரு கிளைகளாகப் பிரிந்து செல்லும். அந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ள கிராமங்களில் சாதம்பாக்கமும் ஒன்று.

பள்ளிக்குப் போவதும் வருவதும் ஒரு கொண்டாட்டமாகவே அவர்களுக்கு அன்றாடம் இருக்கும். பூண்டி கோயிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு வரும் சுப்புரு ஐயர், இவர்கள் எதிரே வருகிறார்கள் என்பதற் காக வேறு வரப்பில் வருவார். ஆனால், அமிர்தமும் அவளுடன் பூண்டியில் படிக்கும் பையன்களும்விட மாட்டார்கள். சுப்புரு ஐயர் எந்த வரப்பில் வருவாரோ, அந்த வரப்புக்கு அப்படியே தாவிச் சென்றுவிடுவார்கள். தலை யில் அடித்துக்கொண்டு வேறு வழி இல்லாமல், கழனிச் சேற்றில் கால்கள் பதிய இறங்கி நடந்து செல்வார் சுப்புரு ஐயர்.

பத்தாம் வகுப்பு வரை பூண்டியில்தான் படித்தாள் அமிர்தம். அவளுடைய அத்தை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, சாத்தம்பாக்கத்துக்கே ஆசிரியையாக வேலைக்கு வந்தாள். இருவரும் நல்ல ஜோடி சேர்ந்தார்கள். புத்தகங் களைப் படிப்பதுதான் இருவரின் முக்கிய வேலை. அமிர்தத்தின் தாத்தா பாவலர் அந்தப் பகுதியில் அப்போது முக்கியமான சமூகத் தொண்டர். அதனால், இவர்களின் படிப்புக் கும் வாசிப்புக்கும் எந்தக் குந்தகமும் இல்லை.

அமிர்தம் அவளுடைய பத்தாம் வகுப்பு விடுமுறையில், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலைப் படித்துவிட்டு, அவள் அண்ணனுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு பூரணி என்ற அந்த நாவலில் வரும் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயரை வைத்தாள். சும்மா இருக்கும் நேரங்களில் அமிர்தமும் அவள் அத்தையும் ஊரில் இருக்கும் ரேடியோ ரூமுக்குப் போய் பாடல்களை வைப்பார்கள். எந்த நேரத்தில், எந்த ஸ்டேஷன் எடுக்கும் என்று இவர்கள் இருவருக்கும்தான் தெரியும். சிவாஜி கணேசன் பாடல்கள் என்றால், அந்த ஊர் மக்களுக்குக் கொள்ளைப் பிரியம். ‘ஏம் பாப்பு… அண்ணன் பாட்டு எதனா வையேன்’ என்று இவளிடம்தான் கேட்பார்கள்.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு, ராணிப்பேட்டையில் உள்ள தன்னுடைய இன்னொரு அத்தை வீட்டில் தங்கி ஆசிரியர் பயிற்சியைஇரண்டு ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு, மீண்டும் தன் கிராமத்துக்கு வந்தாள் அமிர்தம். அனை வருக்கும் ஒரே ஆச்சர்யம். ‘திவ்ளோண்டு புல்லுக்கிட்டி மாதிரி இருந்துக்குனு, இந்தப் புள்ள டீச்சாராயிடுச்சே!’ என்று புகழ்ந்து அமிர்தத்தின் அம்மாவிடமே சொன்னார்கள்.

ஆறு மாதங்கள் கழித்து, எந்தப் பள்ளியில் அமிர்தம் படித்தாளோ அந்தப் பள்ளிக்கு ஆசிரியையாக வேலை வந்திருந்தது. அவளுடைய அண்ணன்களுக்குப் பெருமிதம். பெரிய அண்ணன் அந்தக் கிராமத்தின் தலைவராக ஆகியிருந்தார். ‘தலைவரூட்டுப் பொண்ணுக்கு வேலை வந்திருச்சி’ என்று அனைவரும் பேசினார்கள்.

அமிர்தம் முதல் சம்பளத்தைத் தன் அம்மாவிடம் கொடுக்க… அதை அன்போடு வாங்கி அண்ணன்களிடத்தில் கொடுத்தாள் அம்மா. வீடே இன்னொரு சொர்க்கமாக இருந்தது. அண்ணன் குழந்தைகள், வேலை, வீடு, அந்த அழகிய கிராமம் என்று இருந்தாள் அமிர்தம். அவளுக்கு என்று தனி மரியாதை கூடி இருந்தது.

அன்று பூண்டி பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தாள் அமிர்தம். ஊரின் எல்லையில் உள்ள அரச மரத்தடியில் வரும்போது, அவளுடைய ஊர்க்காரத் தம்பிகள் ரச்சக்கல் மீது உட்கார்ந்து இருந்தனர். ‘யக்கா, சீக்கிரமா வூட்டாண்ட போ; உன்னப் பொண்ணு பாக்க சாயந்தரம் பஸ்ஸுக்கு வந்திருக்காங்க’ என்று உரக்கக் கத்திச் சொன்னான் ரேணு. அவன் எதிர்த்த வீட்டுப் பையன்.

அமிர்தத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் சின்ன உடலில் சுற்றிக்கொண்டு இருந்த புடவை அவிழ்வதைப்போல உணர்ந்தாள். அடி வயிற்றில் லேசான கலக்கம். வீட்டுக்குப் புறக்கடை வழியாகச் சென்றாள்.

‘எம்மா, பொயக்கட வழியாத்தான வந்த. போய் மூஞ்சக் கழுவினு வா’, தங்கம் பெரியம்மா சொன்னபோது கோபமாக வந்தது. பெரிய அண்ணன், ‘சீக்கிரமா வா’ என்று அதட்டி விட்டுப் போனான்.

‘ஆம்பூர்ல இருந்து வந்திருக்காங்க; மாப்பிள்ள வாத்தியாராம். நல்ல கறுப்பா, கட்டையாத்தான் இருக்கார்’ என்று வனிதா சொன்னபோது, பார்க்க வேண்டும் என்று தோணவே இல்லை அமிர்தத்துக்கு. திருமணம் பேசி முடிக்கப்பட்டு கல்யாண நாள் குறித்த பிறகுகூட அவள் இன்னும் சரியாக மாப்பிள்ளையைப் பார்க்கவில்லை. சனிக் கிழமையானால், வாரந்தோறும் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலும்கூடப் பேசியது இல்லை அமிர்தம். தண்ணீரும் சாப்பாடும் தருவதோடு சரி.

மிக நேராக அவள் மாப்பிள்ளையைப் பார்த்தது காஞ்சிபுரத்தில்தான். புடவை எடுக்க வந்த கடையில் எதிரில் இருக்கும் கண்ணாடியில்தான் மாப்பிள்ளையை முழுமையாகப் பார்த்தாள் அமிர்தம். அவள் மனதுக்குள் எதுவுமே தோன்றவில்லை. அண்ணன்கள் சொல்லிவிட்டார்கள் என்பதோடு நின்றாள்.

கல்யாணம் ஆம்பூரில்தான் நடந்தது. அப்போதுதான் இவ்வளவு தூரம் ஆம்பூர் இருக்கும் என்று அவ்வூரில் இருந்து கல்யாணத்துக்கு வந்திருந்தவர்களுக்குத் தெரிந்தது. ஏன், அமிர்தத்துக்கே அப்போதுதான் தெரியும். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக் கிழமைகளில் நடக்கும் ஆசிரியர் கூட்டங்களுக்கு வாலாஜா வரை வருவாள். அவளுடைய தோழி கஸ்தூரியிடம் பேசுவதற்காகவே அங்கு வருவாள். இல்லை என்றால், வாலாஜாவில் உள்ள நூலகத்துக்கு வருவாள். அதுதான் அவள் அதிகம் பயணம் செய்த தூரம். அவள் திருமணத்துக்குப் போகும்போதுதான் வாலாஜாவைத் தாண்டி வண்டி வேலூருக்கு வந்தது. இடையில் இருக்கும் ஆற்காடு, விஷாரம் ஆகிய ஊர்களில் எல்லாம் அவளுக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளும் அவள் அவர்கள் வீட்டுக்குச் சென்றது இல்லை. இப்போது அவர்கள் ஞாபகத்தில் வந்தார்கள். கல்யாணத்துக்கு வருவார்களா என்று மனதுக்குள் எண்ணத்தை ஓட்டினாள்.

வேலூர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆம்பூர் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று வாத்துக்காரமூட்டு சுப்ரமணி சொன்னான். எம்மாந்தூரம் என்று சலித்துக்கொண்டாள் அமிர்தத்தின் தாய். ஆம்பூர் வந்து, எதோ ஒரு சந்தில் வளைந்து, மீண்டும் நேராகப் போய் ஓர் அரச மரத்தடியில் வண்டி நின்றது. இரவு ஆகிவிட்டு இருந்தது. நிலா அரச மரத்தின் இலைகளை ஜொலிக்கவைத்துக்கொண்டு இருந்தது. அரச மரத்து இலைகள், இவர்கள் திருமணத்துக்கு ஜோடிக்கப்பட்ட தேர்போல அந்த இரவில் மின்னியது.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்திருந்தார்கள். மாரியம்மன் கோயில் மேடை மீது பாய்கள் விரிக்கப்பட்டு, நடுவில் பெட்ரோமாக்ஸ் விளக்கு வைக்கப்பட்டு இருந்தது. அது வெளிச்சத்தையும் சத்தத்தையும் ஒரு சேர தந்துகொண்டு இருந்தது. பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய் அங்கே உட்காரவைத்தார்கள். மேடையைச் சுற்றி சின்னப் பையன்களும் பெண்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். புதுப் பெண்ணைப் பார்க்கும் ஆசை அவர்களுக்கு.

இந்தா என்று வேகமாக ஒரு கை பித்தளை வாழைக்காய் செம்பை நீட்டியது. பானகம். வெல்லம், வாழைப் பழம் போட்டுக் கரைத்தது. வாங்கிக் குடி என்று யாரோ இடிக்க… அமிர்தம் வாங்கிக் குடித்தாள். எப்போதும் குவளையில் வாய் வைத்து அவள் குடித்தது இல்லை. யாராவது அப்படிக் குடித்தால், திட்டுவாள். ஆனால், இன்று தலை நிமிராமல் வாய் வைத்துக் குடித்தாள். வெல்லம் கரைந்து கரையாமல் இருந்த சின்னச் சின்ன கரும்புத் துணுக்குகள் தொண்டையில் சிக்கின.

துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்த நேரத்தில்தான் ‘அதான் ஒன் சின்ன நாத்தனா’ என்று காதில் சொன்னாள் அத்தை. அவளைப் பார்க்கக்கூட முடியவில்லை. வந்த மாதிரியே போய்விட்டு இருந்தாள் அவள். மாப்பிள்ளை வீட்டு உப்பில் கை வைக்க பெண்ணை அழைத்துச் சென்றார்கள். எரவாணம் சற்று இறக்கமாக இருப்பதால் குனிந்துதான் செல்ல வேண்டும். அதைக் கவனிக்காத அமிர்தத்தின் சின்ன அண்ணன் வீட்டினுள் நுழையும்போது தலையில் இடித்துக்கொண்டான். ‘வரும்போதே தல இடிக்குதே’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான்.

அடுத்த நாள் காலையில் மணமகன் இல்லத்தில் திருமணம். ஊர்ப் பெரிய வர் ஆதிமூலமும், கிராமத்தில் இருந்து வந்திருந்த பாவலரும் வாழ்த்துரை வழங்கி கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.

அதன் பிறகு, ஒன்றரை வருடங்கள் ஓடி இருந்தன. ஒரு கனவைப்போல இவற்றை எல்லாம் அந்த இரவு முழுதும் நினைத்து இருந்தாள் அமிர்தம். இடையில், பூண்டியில் செய்த ஆசிரியை வேலையை வீட்டுக்காரர் சொன்னார் என்பதற்காக ராஜினாமா செய்து, அது தெரிந்த சின்ன அண்ணன் அவளிடம் பேசாமலே இருந்துவிட்டார். பெரிய அண்ணன்தான் கல்யா ணத்துக்குப் பிறகான சீர்களை எல்லாம் செய்தார்.

பொழுது விடிந்துவிட்டு இருந்தது. அன்று வழக்கத்துக்கு மாறாக, வானம் சற்று கருமையாக இருந்தது. பூசணிக் கொடியில் புதிய பூசணிப் பூக்கள் பூத்திருந்தன. பக்கத்து வீட்டில் சண்முகம் வெள்ளாவியைப் பற்றவைக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

குழந்தைக்குப் பால் கொடுத்தாள் அமிர்தம். எதுவுமே தெரியாத அந்தக் குழந்தை பாலை உள்ளிழுத்துக் குடித்துக்கொண்டு இருந்தது. தன்னை அறியாமலேயே அமிர்தத்தின் கண்களில் நீர் வழிய… குழந்தையின் மார்பின் மீது சொட்டியது. கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். உரலின் அருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு, கிணற்றில் தண்ணீரைச் சேந்தி எடுத்து, முகம் கழுவிக்கொண்டாள். புடவையை உதறி இறுக்கிக் கட்டிக்கொண்டு, குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தாள். பேருந்து நிலையம் நோக்கி அவள் கால்கள் சென்றுகொண்டு இருந்தன. அவள் மனம் எதை எதையோ எண்ணிக்கொண்டு இருந்தது. போய் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும்… கதறி அழ வேண்டும் என என்னென்னவோ அவளுக் குத் தோன்றியது.

வேலூர் பஸ் ஏறி உட்கார்ந்து டிக்கெட் எடுத்தாள். குழந்தை சிணுங்கினான். மீண்டும் குழந்தைக்குப் பால் ஊட்டினாள். ஜன்னல் காற்றில் இலேசாகக் கண்ணயர்ந்தாள். வேலூரில் இறங்கினால், பதினோரு மணிக்கு அவள் கிராமத்துப் பேருந்து கிடைக்கும். நேராகச் சென்றுவிடலாம். இல்லையென்றால், அடுத்த பேருந்து ஒரு மணிக்குத்தான். அதில் போனால், மூன்று மணிக்குத்தான் போக முடியும் என்ற கணக்கு தூக்கத்தோடே அவளுள் ஓடிக்கொண்டு இருந்தது.

வேலூரில் இறங்கியதும் அம்மாவுக்குப் பிடித்த கமலா பழமும் கறுப்பு திராட்சையும் வாங்கிக்கொண்டு காத்திருக்க, சாத்தம்பாக்கம் பேருந்து வந்தது. ஏறி, தனக்கு வாகான இடத்தில் அமர்ந்துகொண்டாள். காலையில் இருந்து எதையும் அவள் சாப்பிடவில்லை. ஒரு தேநீர் குடித்தால் தேவலாம்போல் இருந்தது. ஆனால், அது முடியாது. அதற்குள் பேருந்தை எடுத்துவிட்டார்கள். பேருந்து கிளம்பி நிலையத்தைவிட்டு வெளியேறி சி.எம்சி. சத்துவாச்சாரி என ஆட்களை ஏற்றிக்கொண்டே முக்கியச் சாலைக்கு வந்து வேகம் பிடித்தது. விஷாரம் வழியாக ஆற்காடு சென்று ராணிப்பேட்டையைக் கடந்து வாலாஜா பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது, அவளுக்குக் கொஞ்சம் ஆசுவாச மாக இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறுவார்கள் என்று நம்பினாள். கூட்டம்முந்தித் தள்ளியது. அவள் ஊர் மொழி வழக்கு அவள் காதுகளுக்கு எட்டியது.

‘அமிர்தம், இப்பத்தான் வர்றியா? வாத்தியாரு வர்ல? நேத்தே வருவேன்னு நினைச்சோம்.நான் காலயில பஸ்ஸுக்கு வந்து வாழ இலைய மார்க்கெட்ல போட்டுட்டு வர்றேன்’ என்று நீளமாகப் பேசி முடித்தார், பின் இருக்கையில் இடம்பிடித்திருந்த ஜெயபால். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. கூட்டம் இருவருக்கும் இடையே தடுப்புச் சுவர்போல நின்றிருந்தது.

‘ஏன், இவரு நேத்தே வருவேன்னு நினைச் சாரு’ என யோசித்தாள். குழந்தை அழவே அந்த சிந்தனை அவளுள் அறுந்துபோனது.

பேருந்தில் இருந்து இறங்கியதும் ஜெயபால் குழந்தையை வாங்கிக்கொண்டார். மெள்ள நடந்தார்கள். கால்களுக்கு இதமாக இருந்தது. எத்தனை முறை இந்தத் தெருவில் அவள் ஓடி விளையாடி இருக்கிறாள். நினைக்க… மனசில் துக்கம் அடைத்துக்கொண்டது.

அவள் நினைத்த மாதிரியே ஊர் எல்லை யில் உள்ள கால்வாயில் தண்ணீர் ஓடியது. அதன் மேல் மெல்லிய அலைகள் பரவி இருந்தன. அந்த நேரத்திலும் தவளைகள் கத்திக்கொண்டு இருந்தன. வாத்துகளைக் கூட்டமாக ஓட்டிக்கொண்டு எதிரில் வந்தான் செம்பட்டை முடியுடன் ஒரு சிறுவன். அமிர்தத்தைப் பார்த்ததும் அவன் தலையைக் கவிழ்ந்துகொண்டான். சின்னச் சின்ன நீர்ப் பூச்சிகளைக் குறிவைத்து வாத்துகள் தண்ணீ ருக்குள் தலைகளை விட்டுத் தேடிக்கொண்டே நீந்திக்கொண்டு இருந்தன. கால்வாயில் இருந்து ஏறும் இடத்தில் கால்களை அலசிக் கொண்டு ஏறினாள். குழந்தையை ஜெய பாலிடம் இருந்து வாங்கிக்கொண்டாள்.

‘ஏங்கொழந்த… இப்பத்தான் வர்றியா?’ என்று கேட்டாள் அன்னம் சித்தி. அன்னம் சித்தி கால்வாய்க் கரையில் மாரியம்மா கோயிலுக்குப் பக்கத்திலே இருப்பவள். யார் வருகிறார்கள்… போகிறார்கள் என்பது அவளுக்கு அத்துப்படி. அவள் கண்களில் ஏதோ பரிதாபம் இழையோடியது. அதை அமிர்தம் கவனிக்கவில்லை.

கோயிலைக் கடந்து ரேடியோ ரூமைத் தாண்டி நடந்தாள். சின்ன அண்ணன், எசேக்கியல் வீட்டு அகன்ற திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். அவனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்போல் இருந்தது. ஆனால், இருவரும் பார்வையைத் தவிர்த்துக்கொண்டனர். பால் சொசைட்டிக்காகப் புதிதாகக் கட்டப்பட்டு இருந்த கட்டடத்தில் வெளியே நாய் ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது.

வீடு நெருங்க நெருங்க… வேகமாக நடந்தாள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழ வேண்டும் என்று நினைத்தாள். வீட்டுக்குள் போகவும் அண்ணி வெளியே வரவும் சரியாக இருந்தது. கையில் வைத்திருந்த கஞ்சி குடிக்கும் கட்றாவைக் கீழே போட்டுவிட்டு, குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்டு தேம்பித் தேம்பி அண்ணி அழ… ஒன்றுமே புரியவில்லை அமிர்தத் துக்கு.

‘பாப்பா, அம்மாவுக்கு ரெண்டு நாளா ஒடம்பே சரியில்ல; எதுவுமே இறங்கல; கண்ணத் தொறக்கவே முடியல’ என்று சொல்லி, ஓவென அழுகையைத் தொடர… அம்மாவைப் படுக்கவைத்திருந்த வீட்டுக்குள் ஓடினாள்.

அம்மா படுக்கவைக்கப்பட்டு இருந்தாள். முகம் வீங்கியிருந்தது. வீக்கத்துக்குள் கண்கள் புதைந்து இருந்தன. கண்களைத் திறக்க முடியவில்லை. கை கால்களும் வீங்கி இருந்தன. கிட்டே போனாள் அமிர்தம். அவளால் இப்போது அழ முடியவில்லை. ”யம்மா… யம்மா… நா அமிர்தம் வந்திருக்கேம்மா. குழந்தையத் தூக்கிட்டு வந்திருக்கேன். கண்ணத் தொறந்து பாரு” – காதோரம் சென்று கெஞ்சினாள். அம்மாவின் கண்களில் இருந்து நீர் வடிந்து காதுகளைத் தொட்டது. கண்கள் மெள்ள மேலே வர ஆரம்பித்தன. ஏறக்குறைய மூன்று மணி ஆகியிருந்தது.

‘இந்தா, இந்த பால கொஞ்சம் வுடுமா. ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்பிடல.’ ஒரு சின்ன டம்ளரில் பாலையும் கரண்டியையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். அமிர்தம் ”ம்மா, குடிம்மா” என்று கூறிக்கொண்டே கரண்டியில் பாலை அள்ளி ஊட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாகப் பால் உள்ளே இறங்கியது. ”இந்தப் புள்ளையப் பாக்கணும்னு நெனச்சிதான், இந்தம்மா இப்டியிருக்கு” என்று குழந்தையைக் காட்டினார்கள்.

அம்மா பெரிதும் முயற்சி எடுத்து கண்களைத் திறந்து பார்த்தாள். அண்ணிதான் அம்மாவின் தலையைப் பிடித்து, முதுகைத் தூக்கி சுவரில் சாய்த்து உட்காரவைத்தாள். குழந்தையை மடியில் கிடத்தினார்கள். குழந்தை பாட்டியின் மடி மீது படுத்துக்கொண்டு கையையும் காலையும் யாரோடோ சண்டை போடுவதைப்போல ஆட்டிக்கொண்டு இருந்தான்.

அன்று மாலை ஆறு மணிக்கு எல்லாம் அம்மாவின் வீக்கம் குறைந்திருந்தது. முகம் தெளிவாகியது. கம்மிய குரலில் அம்மா கேட்டாள், ”ஏம்மா… வாத்தியார் வரல?”

”அவருக்கு எதோ முக்கியமான வேல இருக்குன்னு என்னய அனுப்புனாரு. நாளக்கி வராங்களாம்” என்று கையை அதிகமாக சைகை காட்டிப் பேசினாள் அமிர்தம். அம்மா புரிந்துகொண்டதைப் புன்னகையால் சொன்னாள்.

இரவு, பாயைப் போட்டு அம்மாவைப் படுக்க வைத்தாள் அமிர்தம். சூடாகக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தாள். ”கொழந்தைய எம் பக்கத்துல போடு”- அம்மா கேட்டதும் குழந்தையைப் படுக்க வைத்தாள். தன்னுடைய தளர்ந்த கைகளால் குழந்தையை அணைத்துக்கொண்டு ஒருகுழந்தை யைப்போலக் கண்களை மூடித் தூங்க ஆரம்பித் தாள் அம்மா.

ஆழமாக மூச்சை இழுத்துவிடும் சததம் வந்தது. அண்ணன் வந்து பார்த்தார். ‘நா பாத்துக்கிறேன். நீ போய்ப் படு’ என அனுப்பிவிட்டு, அம்மாவின் புடவைகளை விரித்துப்போட்டுப் படுத்தாள் அமிர்தம். தன்னுடைய எந்தப் பிரச்னையும் அவள் நினைவில் இல்லை. தான் வந்ததும் அம்மா எழுந்து உட்கார்ந்தது, குழந்தையைப் பார்த்தது, பேசியது, சாப்பிட்டது எல்லாம் நிறைவாக அவள் மனதுள் இருந்தது. அயர்ந்து தூங்கினாள்.

மறு நாள் காலை ஏழு மணி. குழந்தை சத்தமாக அழுதுகொண்டு இருந்தான். அமிர்தம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள். பெரிய அண்ணன் வந்து, ”பாப்பா… பாப்பா… கொழந்த அழுவுறான் பாரு” சத்தமாகக் கத்தினார்.

”இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை… எழுப்பு அவங்களை” – இன்னும் சத்தம் அதிகமானது.

அமிர்தம் மெள்ள நகர்ந்து அம்மாவிடம் போனாள்.

‘யம்மா… யம்மா… யம்மா!’ சலனம் இல்லை.

குழந்தை மேல் இருந்த கையைத் தன் கையால் தூக்கினாள் அமிர்தம். அம்மாவின் கை சில்லிட்டு இறுகிப்போய் இருந்தது!

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *