உயிரைக் குடிக்கும் உல்லாசப் பிரயாணம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 7,475 
 
 

இன்றைய நகர வாழ்க்கை பெரியோர்களுக்கு மாத்திரமல்லாமல் பிள்ளைகளுக்கும்தான் எவ்வளவு சலித்துப் போய்விட்டது. படிப்பு, படிப்பு எப்போதும் பரீட்சை மீதான நெருக்குதல்கள் என்பன சிறு வயதிலேயே அவர்களுக்கு மன அழுத்தங்களை கொண்டு வருகின்றன. இதற்கு கிருஷாந்தனும் விதிவிலக்கானவன் அல்ல. எனவே, அவர்கள் அடுத்த வாரம் தெற்குப் பிரதேசத்தில் உள்ள கடற்கரை ஒன்றுக்கு உல்லாசப் பிரயாணம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அவனது அம்மா அவனிடம் கூறியபோது, எல்லோரையும் பார்க்க அவன்தான் மிக மகிழ்ச்சியடைந்தான்.

திருமகள், செந்தூரன் தம்பதிகளின் ஒரே புதல்வன் அவன். பதினொரு வயதாகின்றது. அவன் அம்மா பிள்ளையென்றாலும் அப்பாவும்கூட அவனிடம் அன்பு வைக்காமல் இல்லை. ஆனால் இன்றைய வேலைப்பளுவுக்கு மத்தியில் பலரிலும் பிள்ளைகளை சற்று தூரத்தில்தான் வைத்துப் பார்க்க முடிகின்றது. ஆதலால் இத்தகைய உல்லாசப் பயணங்கள்தான் குடும்பத்தினரை சற்று இறுகப் பிணைக்க உதவுகின்றன. அவர்கள் அந்தப் பயணத்தை மேற்கொள்ள இன்னும் ஒரு வாரம் இடைவெளி காணப்பட்டது.

இந்த இடைவெளி எப்போது முடிவுறும் என்று தவித்துக் கொண்டிருந்தான் கிருஷாந்தன். இந்தப் பிரயாணத்தை அவர்கள் தனியாக மேற்கொள்ளவில்லை. பல நண்பர்களின் குடும்பங்களும் உறவினர்களும் இப்பிரயாணத்தில் இணைந்துகொள்ளவிருந்தனர். கிருஷாந்தன் அந்த நாள் வரும் வரையில் மிகப் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

“”எப்போ அம்மா போகிறோம்?”

என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தான். ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அவர்கள் செல்வதற்கென சிறு பஸ்ஸொன்றையும் பிடித்திருந்தார்கள்.
நீண்ட விடுமுறை வந்ததால் நான்கு நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைத்தது.

அவர்கள் தேர்ந்தெடுத்த மேற்படி கடற்கரை உல்லாச ஹோட்டலில் சிறியோர், பெரியோர் என சகலருக்கும் மகிழ்ச்சியாக பொழுது போகும் வண்ணம் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இருந்தன. குறிப்பாக சுமார் ஏழெட்டுப் பிள்ளைகள் சேர்ந்திருந்ததால் கிருஷாந்தனும் அவர்களுடன் சேர்ந்து தனது முழு நேரத்தையும் விளையாட்டில் செலவழித்தான். பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடியதால் தாய், தந்தையர்கள் அவர்கள் சேர்ந்து விளையாடி மகிழட்டும் என்று தத்தமது வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். திருமகளும் செந்தூரனும்கூட தத்தமது நண்ப, நண்பிகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோருமே இயந்திர வாழ்வை மறந்து சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

ஆண்களைப் பொறுத்தவரையில் இத்தகைய உல்லாசப் பிரயாணங்களின்போது அபரிமித மதுவின் பாவனையே அவர்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. மனைவிமார்களும்கூட இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு சில நாட்களுக்குத்தானே என கணவன்மார்களைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. எனவே, எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் தத்தமது விடுமுறையை அனுபவிப்பதில் முழு மூச்சாக இருந்தனர்.

அந்த உல்லாசப் பிரயாண ஹோட்டலில் பிள்ளைகளை மிகக் கவர்ந்த இடமாக இருந்தது நீச்சல் தடாகம்தான். அநேகமாக அதில்தான் அவர்கள் தம் காலத்தைக் கழித்தார்கள். இவ்விதம் பல்வேறுவிதமான விநோத விளையாட்டுக்களுக்கிடையில் பொழுது மிக வேகமாக போய்க் கொண்டிருப்பது போல் அவர்களுக்குத் தோன்றியது.

அன்றைய மத்தியானப் பொழுது கழிந்து பகல் உணவு உண்ணும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

திருமகளும் செந்தூரனும் தமது பிள்ளை பற்றி எந்தவிதக் கவலையும் கொண்டிருக்கவில்லை. ஏனைய பிள்ளைகளுடன் அவனும் அங்கே எங்கோ விளையாடிக் கொண்டிருப்பான் என்பதில் அவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அதற்குக் காரணம் இத்தகைய சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை சாப்பிடச் செய்வதுகூட பகீரதப் பிரயத்தனமாகும். “”சாப்பிட வாங்க” என்று கூப்பிட்டாலும் “பசிக்கலன்னு’ இலகுவாக சொல்லிவிட்டு விளையாட்டில் ஈடுபடுவார்கள்.

நேரம் மிக அதிகமாகக் கடந்துபோய்விட்டது. மற்றப் பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகளை பலாத்காரமாக அழைத்து வந்து உணவு உண்ணக் கொடுத்தனர். எல்லாப் பிள்ளைகளும் வந்துவிட்டார்களே தம் பிள்ளை மட்டும் எங்கே என்று யோசித்தபோதுதான் திருமகளுக்கு சுருக்கென்றது. அவள் கணவனிடம் கூறினாள்.

“”என்னங்க கிருசைக் காணவில்லையே… பாருங்க”

செந்தூரன் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவன் நண்பர்களுடன் நல்ல மது போதையில் சிரித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்தான்.

“”இங்கேதான் இருப்பான்… விளையாடட்டும் விடு” என்று கூறிய அவன் தொடர்ந்தும் நண்பர்களுடன் நையாண்டிக் கதைகளில் மூழ்கிப் போனான்.

ஆனால் திருமகளால் அப்படி இருக்க முடியவில்லை. அவள் எல்லாப் பிள்ளைகளிடமும் கிருஷாந்தனைப் பற்றி விசாரித்தாள். யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. விரைவிலேயே ஹோட்டல் பணியாளர்களும் உஷாரானார்கள்.

கிருஷாந்தனை இறுதியாக நீச்சல் தடாகத்தில் பார்த்ததாக யாரோ கூறினார்கள்.

எல்லோரும் பதறித் துடித்துக் கொண்டு அங்கே ஓடினார்கள். ஆனால் அவர்கள் அங்கே சென்றபோது நேரம் கடந்துபோயிருந்தது.

கிருஷாந்தனின் உயிரற்ற பிஞ்சு உடல் பெரியவர்கள் நீந்திக் குளிக்கும் ஆழமான நீச்சல் தடாகத்தில் மிதந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “உயிரைக் குடிக்கும் உல்லாசப் பிரயாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *