உயிரின் அழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 1,639 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நேற்றையிலே இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்! ஆனால் அதைப்பற்றி இனிமேல் தர்க்கம் பண்ணி உபயோகமில்லை! இப்போ நீ போய் பெண்ணை மட்டும் அழைத்துக் கொண்டுவா ; போனதுபோக, மிச்ச மிருக்கிற மானத்தோடாவது ஊர்போய்ச் சேர்வோம். அவன் பணமுமாச்சு, அவனுமாச்சு……” 

“இரையாதே சாமா. நன்றாக இராது. கலியாணம்னால் நாலும்தாண்டா இருக்கும், அதோட… சம்பந்தி உன்னை இங்கே நிறுத்திக்கணும்னு ஆசைபடறாராம்…” 

கோபத்துடன் தாயாரைக் கூர்ந்து பார்த்தான் சுவாமிநாதன். 

“கோபம்வர சமய சந்தர்ப்பம் உண்டு. ஏதோ அவா ஆசைக்குச் சொல்லியிருக்கா. உனக்கு இஷ்டமில்லைன்னா, முக தாட்சண்யம் தட்டாமல் ஒரு பத்து நாளைக்கு இருந்து விட்டு ஆம்பிடையாளையும் அழைத்துக்கொண்டு வந்துடேன்!” 

“முடியாது? பெண்ணை நம்மோடு ஊருக்கு அனுப்பு கிறார்களா இல்லையா என்பதைத் தெரிஞ்சுண்டு வா போய்” என்று சீறினான் சுவாமிநாதன். 

எதிர்பாராதவிதமாகப் பிரணதார்த்தி அங்கே பிரசன்னமாகிக் கொண்டே, “அடடா! மாப்பிள்ளைக்கு என்ன இவ் வளவு கோபம் சம்பந்தியம்மா? ஏதோ ஈசுவர கிருபையிலே ஏழுதலைமுறை காணும்படி இருக்கிற வீடு. மாப்பிள்ளை சம்பந்திகள் எல்லோருமே இங்கேயே இருக்கலாம் என்கிற நினைப்பில் பிரஸ்தாபம் செய்தது நிஜம்தான்…” என்றார். 

சுவாமிநாதன் புயலாக தாயின் பக்கம் திரும்பி, “கேட்டுக் கொண்டாயா? ஜாதகம் கொடுக்கிறபோது நான் என்ன சொன்னேன் நினைவிருக்கிறதா உனக்கு?” என்றான். 

நாகசாமி குறுக்கிட்டு, “சாமா வார்த்தையை ரொம்பச் செலவழிக்காதே. பேசாமலிரு. யோசிப்போமே!” என்றார், நிலைமையைச் சமாளிக்க. 

பிரணதார்த்தி கர்வத்துடன் தலை நிமிர்ந்தார். “சம்பந்திவாள் லோகசகஜமான உத்தேசம்தான் நான் பண்ணினதும். ஒரே பெண் என்று இருக்கிறவா, மாப்பிள்ளையை ஆத்தில் வைத்துக் கொண்டு, ஆசை, அருமைகளைக் கொண்டாடி சந்தோஷப்பட்டு கண்ணால் பார்க்கணும் தான்-” 

“ஊம் அதற்கு என்று ஏழை குமாஸ்தாவின் பிள்ளையாகப் பார்த்துப் பிடித்தீராக்கும் பாவம். இஷ்டமிருந்தால் பெண்ணை அனுப்பும். இல்லாவிட்டால் வைத்துக்கொள்ளும்; உம் சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம்! மனிதனுக்கு மானம், மரியாதைதான் முக்கியம். அதைக்கொண்டு எனக்கு பிழைத்துக் கொள்ளத் தெரியும்…” 

“அதிகப்பிரசங்கி! பேசாமலிருடா! பெரியவா, பெருந் தலைன்னு இல்லை?” என்று அதட்டி அடக்கப்பார்த்தார் பணக்கார மாமா. 

“பெரியவர்களாக, நீங்களும், அவர்களும் இருங்கள். நீ கட்டம்மா மூட்டையை, அவர்கள் பெண்வரும்; அவர்கள் கொடுத்த சீரும் வரட்டும்” என்றான் சுவாமிநாதன் முறைப்பாக. 

“கிடக்கிறது விட்டுப்பிடியுங்கள்! புதுமாப்பிள்ளை முறுக்கு! ஆறாமாசம், தீபாவளி என்று இரண்டு நடை வேட்டகம் வந்தால், தன்னால் சரியாகப் போய்விடும்” என்று சமரசம் பேசினார் அவர். 

கோபம் தாளாமல் மாடிக்குப் போய்விடடான் சுவாமிநாதன். 

பிரணதார்த்தி மிடுக்குடன் திரும்பிப் புறப்பட்டவாறு, “என்னவோ, எல்லோருமாக யோசனை பண்ணி பிள்ளையாண்டானுக்குப் புத்தி சொல்லுங்கள். மாப்பிள்ளை மட்டுமாக நான் இருக்கச் சொல்லவில்லை. திருவையாறு க்ஷேத்திர வாசமாச்சே, வயசு காலத்தில் நீங்கள் ஹாய்யாக சிவதரி சனம் பண்ணிண்டு இருக்கலாம். இதுவும் உங்கள் வீடாகப் பாவித்துக் கொண்டால் தப்பே தெரியாது! என்ன நான் சொல்றது?” என்றார். 

“போய் யோசனை பண்ணி எழுதுகிறோம். சுபமாக குழந்தை இப்போது எங்களோடு வரட்டும். அவன் மனசுக் கும் சித்தே ஆறுதலாக இருக்கும்…’ 

”ஆகா, நீங்கள் புறப்படுங்கள். பின்னாலேயே நாங்கள் தர்முவை அழைச்சிண்டு வரோம்!… டேய் சந்த, தாம்பூலம், தேங்காய்க் கூடை எங்கேடா?” என்று அதட்டிக்கொண்டே வெளியேறினார் பிரணதார்த்தி. 

அடுத்த பத்து நிமிஷங்களில் பிள்ளை வீட்டார்கள் புறப்பட்டார்கள். மணப்பெண் தர்மு, பிழிய பிழிய அழுது கொண்டு மாடி ஜன்னல் வழியாக மாமனார், மாமியார், கணவன், பந்துக்கள் யாவரும் வண்டியேறுவதைப் பார்த்தாள். 

கணவன் தன்புறம் நிமிர்ந்து பார்க்க மாட்டானா, தன்னை அழைக்க மாட்டானா, என்று துடித்தாள், தவித்தாள்! 

அவன் ஏன் நிமிர்ந்து பார்க்கிறான்? 

உலகில், பணம், பதவி, சுக சௌக்கியங்களைச் சிறிதும் கருதாமல் சுய மதிப்புள்ளவன், மானம் மிக்கவர்களில் முதல்வன் உண்டு என்றால் அது சுவாமிநாதன் தான் ! 

கர்வமும், பணத்திமிரும், தலை வணங்காமையும், நெஞ்சு உரமும் ஒருங்கே குடிகொண்ட தனவந்தன் என்பதற்கு உபமானம் பிரணதார்த்திதான்! எனவே சுாமிவநாதனும் வரவில்லை ! பிரணதார்த்தியும் பெண்ணைப் புக்ககம் அனுப்ப வில்லை? ‘தன்னாலே வருவான் பார்!’ என்று திமிராகப்பேசி மகளுடைய வியாகூலத்தை அகற்றப் பார்ப்பார். 

தர்மு, கல்லும் உருக, கடிதம் எழுதி வேண்டினாள் கணவனை. தகப்பனாருக்குத் தெரியாமல் தன்னை அழைத்துச் செல்லும்படி கூட வேண்டுகோள் விடுத்தாள். 

சுவாமிநாதனா அசைபவன்? 

“என் கணவனிடம் என்னைக் கொண்டு விடுகிறாயா உயிரை விட்டு விடட்டுமா?” என்று கேட்கத் தெரியாதபடி இருந்தால் எவ்வளவு நாள் இருக்கிறாளோ இருக்கட்டும்! 

இவ்விதம் கறுவினான் சுவாமிநாதன். 

இடையில் ஏழாண்டுகள் உருண்டோடின! 

கோடாலி முடிச்சும் போர்த்தின முதுகுமாக, கோயிலுக்குச் சென்ற தர்முவைப் பார்த்து உள்ளம் நெக்குருக தன்னை மறந்து நின்றிருந்தாள் வாலாம்பாள். 

“அம்மா!” 

மேல்துண்டை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு அடக்கத் தோடு அழைத்த பரஞ்சோதியின் குரல் வாலாம்பாளை நினைவு கொள்ளச் செய்தது! 

“எங்கேடாப்பா வந்தே?” என்றாள் வெறுப்பும் வேண்டாமையுமாக. 

“அம்மாவைப் பார்க்கத்தானுங்க ; நாளைக்கு ஆடி கடை வெள்ளிக்கிழமையாச்சே, தாழம்பூ ஏகத்துக்கு ஆப்பிடுது தாழம்பூப் பாவாடை. தவன ரவிக்கை, கனகாம்பரத் தாவணியா வச்சுடவா… எப்படின்னு..”

குபீரெனச் சிவந்தது வாலாம்பாள் முகம்! 

அவள் வாயிலிருந்து சொற்களும் தீக்கங்குகளாக உதிர்ந்தன! “அப்பா பரஞ்சோதி, அந்த அம்பாளுக்கு பாவாடையும் சித்தாடையும் சாத்தின வரைக்கும் போதும். ஏழுவருஷ காலமா, நாள் தவறாமல் அந்திசந்தி இரண்டு வேளையும் அவள் சன்னதியில் நெய்விளக்கேற்ற வீட்டில் இரட்டைப் பசுமாடு கறவை! தெரியுமா உனக்கு? என் கண்ணான குழந்தை தன் கையாலேயே பூச்செடி வச்சு, ஜலம்கொட்டி, பாத்தி கட்டி, வளர்த்த பூச்செடிகளிலிருந்து பூப்பறித்து மாலை, அர்ச்சனைக்கு உதிரி ! தினம் ஒரு வேளை சாப்பாடு, தரையிலே தலைப்பை விரிச்சுப் படுக்கை, வாயிலே, அம்பாளின் ஜபம். இன்னும் என்ன கடினசேவை உண்டு உலகில்? அவள் சன்னதியில் நின்று, கரைந்து உருகி, அழுது தொழு கிறதே என் குழந்தை, அந்தக் கோயிலிலிருப்பது அருள் புரியும் அம்பிகையா, வெறும் கருங்கல்லா? அவள் அம்பிகை யானால் கட்டாயம் அவள் நெஞ்சு உருகியிருக்கும்! இல்லை! அது வெறும் கற்சிலை! 

“அதனாலே நாளையிலிருந்து என் வீட்டிலிருந்து ஒத்தை பூ வராது! நெய் விளக்கும் ஏற்றப்போவதில்லை. 

“ஆமாம்! என்றைக்கு அவள் என் குழந்தைக்கு வாழ் வைத் தருகிறாளோ, அன்றைக்கு அவளுக்கு பிரம்ம உற்சவமாக நடத்திவைக்கிறேன். அதுவரை அவள் இருக்கும் பக்கமே திரும்பமாட்டேன். நட, வந்த வழியைப் பார்த்துக் கொண்டு,” என்று வார்த்தையாக சொல்லவில்லை – சிம்ம கர்ஜனையாகக் கர்ஜித்தாள் வாலாம்பாள். 

பரஞ்சோதி அலறிப் போனான்! 

வாய் குழற “அம்மா, பதறாதீங்கம்மா. தெய்வத்தோடு கூட நாம் போட்டி போடலாமா தாயே? அவ சன்னதியிலே, நின்னுமுறையிட்டது ஒரு நாளும் வீணாப்போவாதும்மா, குழந்தைக்கு வாழ்வு குடுத்தாவணுமே அவ!…” என்றான். 

“எப்போ? ஏழு வருஷ காலமா என் குழந்தை பூவும். மணமுமாக இருக்க வேண்டிய நாளிலே, விரதமும், பட்டினி யும் கிடந்து மக்கி மடிகிறதுடா மடிகிர்து! அதைப் பார்த்துப் பார்த்து மாபாவி நான் சகிக்கிறேன்! இதைவிட எனக்கு துக்கம் வேறென்ன வேணும்? தெய்வமாம், பூசையாம், பாவாடையாம், தாவானியாம், போ பேசாமல். நினைக்க நினைக்கப் பத்தியெரிகிறது எனக்கு. ஆமா! நிக்காதே, நட வெளியே” என்று கூறியபடி, அழுகையும் ஆத்திரமும் கொண்டு கம்பிக்கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே போய் விட்டாள் வாலாம்பாள்! 

அடிவாங்கிய வாயாக அடங்கி செயலிழந்து படியிறங்கி நடந்தான் பரஞ்சோதி! 

“ஆத்தா? அதுந்து பேசி அறியாத அம்மாவா இப்பிடி காளியாத்தாளா மாறி கனல் தெறிக்க முளிச்சு, அனல் பறக்கப் பேசினாங்க ? ஆனா அவங்கமேலே என்ன தப்பு?” நடை தள்ளாட உள்ளம் துடிக்க ஆலயத்தை நோக்கி நடந்தான் பரஞ்ஜோதி. 

அவன் திருவையாறுடைய அப்பனுக்கும், அம்மைக்கும் புஷ்பப்பணி புரியும் பக்தன். ஏகாங்கி, பாரமார்த்திக உள் ளம் படைத்த உத்தமன். நேரமெல்லாம், நீர்மலி வேணி யனையும், தர்மாம்பிகையையும் நினைந்துருகும் நெஞ்சினன். தன் தாயாக நினைத்து அன்பு கலந்த பக்தியோடு அவன் தொழும் அம்பிகையின் சன்னதியில் வந்து நின்றான்! 

தாயின் மீது வாலாம்பாள் ஏற்றிய பழிக்காற்றாது கண்ணிரண்டும் மாரிபொழிய பெருங்குரலெடுத்து, “அடி  அம்மே, என்னைப் பெத்தாளே; இது என்ன அநியாயமடி ; உன் மேலே குத்தம் சொல்லி பழியேத்தறப்போ, பதில் சொல்ல வகையில்லாம, வாயடச்சு நின்னுட்டு, உன் கிட்டே ஓடியாந்திருக்கேண்டியம்மா! பெண்பாவம் பொல்லாதும் பாங்களே – உனக்கு அது தெரியாதோ? ஏழு வருஷமா, உன் மின்னே நெய் விளக்கேத்தி வச்சு, நின்னு, வாழ்வுப் பிச்சை கேக்குதே அந்தப்பொண்ணு-நீ வாயை மூடிக்கிட்டு நின்னயானா அதுக்கு என்ன அர்த்தம்? அவங்க மக வாழ்வு மணம் பெறணும்னு, எவ்வளவு பூபந்தல், பூப்பாவாடையா உனக்குச் சொரிஞ்சிருக்கணும்? நினைச்சுப் பாத்தியா நெஞ்சிலே? 

“வேணாம்டி தாயே, வேணாம்! பழியேத்துக்காதே! பாவம் அந்தப் பொண்ணுக்கு வாழ்வு குடு. தயங்காதே! அது கால் தேய உன்னை வலம் வந்தது. கைநோக பூபறிச்சு மாலை கட்டி கொடுத்திருக்கு, கண்ணீராலே உன் சன்னதியை மெழுகியிருக்குடீ! சும்மாயில்லே! நீயும் ஒரு பெண்ணாச்சே, உன் மனசு ஏன் எரங்கலை ? ஏண்டியாத்தா இரங்கலை…” என்று கூப்பாட்டுடன் சோகம் தாளாமல் மூர்ச்சித்து விழுந்தான் பரஞ்சோதி ! 

பரஞ்சோதியை வைது தீர்த்த மறுநாள் அதே நேரத்திற்கு, தப தப வென்று வாசற்கதவைத் தட்டினாள் கோகிலம். 

“யாரது, கதவைப் போட்டு இப்படி உடைக்கிறது?” என்று முனகிக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள் வாலாம்பாள்! 

“வாலு, கும்பகோணத்திலிருந்து எங்க ராஜி வந்திருக்கா! உங்க சம்பந்தியம்மாளுக்கு உடம்பு ரொம்ப ஜாஸ்தியாயிருக் காம்! மாட்டுப் பொண் முகத்தைப் பார்த்துட்டுப் பிராணனை விடணும்னு புலம்பராளாம். பிள்ளையானால், ‘வரச்சொல்லி எழுதியாச்சு, வந்தால் வரட்டும். இனி அவன் வீட்டுப் படி யேறி பெண்ணை அழைக்க மாட்டேன்’ என்கிறானாம். பெண் வாழ்வு பாழாகப் படாது வாலு! பெண்ணைக் கூட்டிண்டு கிளம்பு இப்பவே! பகவானாப் பார்த்து, உன் அகத்துக்காரரை வெளியூருக்கு அனுப்பிச்சிருக்கார்! பின்னாடி நடப்பது நடக்கட்டும். சாவைத் தள்ளப்படாது என்கிறசாக்கு இருக் கிறது, பார்த்துக்கலாம். சட்டுனு கிளம்பு. அரைமணி சாவகாசம்தான் இருக்கு வண்டிக்கி. பாவம், உசிரு இருக் கும்போது மாட்டுப்பெண் முகத்தைப் பார்க்கட்டும், தர்முக்கும் நல்லகாலம் பிறக்கட்டும்…” என்று துரிதப்படுத்தினாள் கோகிலம். 

கும்பகோணம் புதுத்தெரு கூரை வீடொன்றில் கயிற்றுக் கட்டலில் அசைவற்றுக் கிடந்தாள் ஞானாம்பாள். களை யிழந்தமுகத்துடன் அருகில் உட்கார்ந்து விசிறிக் கொண் டிருந்தான் சுவாமி நாதன்! சுவாமிநாதன்! 

கவலை மண்டிய உள்ளத்தோடு தெருத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் நாகசாமி. 

தட தடவென்று வீட்டு வாசலில் வந்து நின்ற குதிரை வண்டியிலிருந்து வாலாம்பாளும் தர்முவும் இறங்கி பறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தார்கள். 

சுவாமிநாதன் திடுக்கிட்டு விழித்தான் ! கவலையும், திகிலும், கலந்த குரலில் ‘அம்மா’ என்று குரல் நடுங்க அழைத்தவாறு மாமியாரின் முகத்தோடு தனது முகத்தைப் பதித்துக் கேவினாள் தர்மு. 

‘யாரு சாமா, யாரு…’ என்று முனகினாள் ஞானாம்பாள். 

“நான் தான் அம்மா, உங்கள் தர்மு. கண்ணைத் திறந்து பாருங்கள்” என்றாள் குரல் தழு தழுக்க. 

“தர்முவா, ஏதுக்கு இப்படி பொய் சொல்றே சாமா…?” 

“பொய்யில்லை சம்மந்தியம்மா, நிஜம்மா உங்க நாட்டுப் பெண் தர்மு தான் வந்திருக்கா, கண்ணைத் திறந்து பாருங்கோ!” என்றாள் வாலாம்பாள் அருகில் குனிந்து. 

திண்ணையிலிருந்து உள்ளேவந்த நாகசாமி, “நிஜம்தான் ஞானம், உன் நாட்டுப்பெண்ணும், சம்பந்தியம்மாவும் வந் திருக்கா கண்ணைத் திறந்து பாரு” என்றார் தலைமாட்டில் நின்று. 

ஞானாம்பாள் கண்களைத் திறக்க முயன்றாள் முடியவில்லை. “ஆங் தர்முவா, தர்முவா வந்திருக்கா சாமா? கண் திறக்கப் படலையே எனக்கு” என்று தவித்தாள் ஞானாம்பாள். 

நாகசாமி முன் வந்து “அம்மா, உன் கையாலே ஒரு  உத்தரணி ஜலம் மொண்டு வாயில்விடு, ஈரக்கையால் கண்ணைத்துடை” என்றார் மனைவியின் தாபத்தை உணர்ந்த உணர்வில்! 

கைநடுங்க தர்மு உத்தரணியால் ஜலத்தை மொண்டு மாமியாரின் இதழ்க்கிடையில் வார்த்தாள். ஈரத்துணியால் கண்களை மெல்லத் துடைத்தாள். மீண்டும் ஒரு தடவை உத்தரணி ஜலம் வாயில் விட்டாள். 

சுவாமிநாதன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கனவோ, நினைவோ என்ற பிரமையில் உட்கார்ந்திருந்தான்! 

மெல்ல கண்களைத் திறந்தாள் ஞானாம்பாள். அருகில் தர்முவும், அவள் தாயாரும் நின்றதை வெறித்துப் பார்த்தாள்! வாலாம்பாள் ஆனந்தக்கண்ணீர் வடிய, “சம்மந்தி யம்மா, உங்கள் சரக்கை உங்ககிட்ட எப்போ ஒப்பிக்கப் போகிறோம்னு கவலைப்பட்டேன், கொண்டு ஒப்பிச்சுட்டேன்! கோகிலத்தின் புண்ணியத்தால் சேதி தெரிஞ்சு அழைச் சிண்டு வந்தேன். இனிமேல் உங்கள் வியாதி தெளிஞ்சிடும் பாருங்கள்” என்றாள் பரவசத்தோடு. 

ஞானாம்பாளின் முகத்தில் தெளிவு தென்பட்டது! 

“என்கண்ணே வந்தியாடி என்னம்மா! சுவாமிநாத சுவாமி என் வீட்டை விளங்கவச்சானா கடைசியில் ? சம்பந்தி அம்மா, குழந்தைகளை உக்காத்தி வச்சு ஆரத்தி சுத்திக் கொட்டுங்கோ முதலில். சாமா, குழந்தை எப்படி ஒடுங்கிப் போயிருக்காள் பாரு! கன்னமெல்லாம் ஒட்டி பின்னலா, பூவா ஒண்ணும் இல்லாதே…’ ஆயாச மேலீட்டால் மேலே பேசமுடியாமல் சிரமப்பட்டாள் ஞானாம்பாள். 

“ரொம்பப் பேசாதேம்மா, மூச்சு வாங்கிறது பார்! ” என்றான் சுவாமிநாதன். 

“இனிமேல் எனக்கென்னடா ஒரு மாசத்திலே உடம்பு தேறிப் போயிடாதா? தர்மு, ஆம்பிடையானைப் பார்த்தி யாடிம்மா உன்வேதனை விட்டது போ!” என்றாள் ஞானாம் பாள். சிரமத்தால் மூச்சு வாங்கியது. 

தலை குனிந்தபடி, அம்மா, உங்கள் மனசு எனக்குத் தெரியும். உங்களைப் பார்க்கிறாப் போலே, ஊரிலே, தர்மாம் பிகை சன்னதியில் அவளைப் பார்த்து உங்களைப்பார்த்த மாதிரி மனசை சமாதானம் செய்துகொள்வேன் !……..’ என்றாள், கணவனைக் கடைக்கண்ணால் நோக்கியபடி. 

சுவாமிநாதன் அவளைப்பார்த்த பார்வை ‘அடே அப்பா ! எவ்வளவு பெரியபொய் ! பொழுதெல்லாம், தங்கள் நினைவு தான் தங்களை அடையத் தவம் செய்கிறேன், தங்கள் நினைவே தாரகம் என்றெல்லாம் புளுகினாயே கடிதத்தில்’ என்ற கேள்வி போட்டது! 

ஆயாசத்தால் ஞானாம்பாள் கண்களை மூடிக்கொண்டாள். வாலாம்பாள், கோலம் போட்டு மணையைத்தேடிக் கொண் டிருந்தாள். நாகசாமி வாசலைப் பார்க்கச் சென்றார். 

சுவாமிநாதனும், தர்முவும் தனித்து நின்றார்கள். பரஸ் பரம் அவர்கள் பரிமாறிக்கொண்ட பார்வைக்குப் பொருள் கூற வார்த்தைகள் ஏது? 

அங்கே – திருவையாற்றிலே, அன்னை தர்மசம்வர்த்தனி தனது கடமையைத் தீர்த்துவிட்ட பெருமையுடன் புன்னகை பூத்து மந்தகாச முகத்துடன் நின்றாள்! 

பக்தன் பரஞ்சோதிக்கு மட்டில்லா ஆனந்தம்!” அம்மா, என்னைப் பெத்தாளே, பழி ஏத்துக்காம, அந்தப் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தியோ, பொழைச்சயோ! இல்லை-இந்த பர தேசிப் பயக்கட்டை இந்நேரம் உன்னை சவிச்சிக்கிட்டு உசிரை விட்டிருக்குமே ” என்றான் பூரிப்புடன்! 

அம்மையின் அருள் முகத்தை, தீபவொளியில் உற்றுப் பார்த்துக் கொண்டு மெய்மறந்து நின்றான் பரஞ்சோதி!

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *