உயர்ந்த சித்திரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 3,475 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ராமசந்திரனை நான் இரண்டு மாத காலத்தில் அளந்து விட்டேன். மங்கலத்துக்கு வந்து இரண்டு மாதங் களுக்குள் ஓர் அரிய நண்பனைக் கண்டு பிடித்தது எனக்கு ஒரு பெரிய லாபந்தான். அவனோ சிறந்த கலாரசிகன். இணையற்ற ஓவியப் புலவன். அவனுடைய சித்திரங்கள் நாளுக்கு நாள் ஜீவ களையைப் பெற்று வந்தன. அவை புகாத காட்சிகளே இல்லை. 

எனக்குச் சித்திரங்களின் கலை நுட்பங்களை அறியும் தகுதியில்லை. ஆனாலும் கலைகளில் அபிமானமும், கலைப் புலவர்களிடம் அன்பும் உண்டு. சித்திரத்தை அனுபவிக்கும் ஆற்றல் ராமச்சந்திரன் பழக்கத்தால் எனக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. 

அவனுடைய அநாயாஸமான செயல்களில் எத்தனை விசித்திரமான விளைவுகள்! அவனுடைய நட்பைப் பெறுவதற்கு நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்! கலைத் திறமை கிடக்கட்டும். அவனுடைய குணந்தான் என்ன சாமான்யமானதா? அவனது நெகிழ்ந்த உள்ளத் திலே பொங்கும் அன்பினது நிலையை, அவனோடு பழகினவர்களே அறிந்து கொள்ள முடியும். குழந்தைகள் என்றால் அவனுக்குப் பிராணன். அவனுடைய வீட்டுக்கு வரும் எந்தக் குழந்தையும் வெறுங் கையோடு திரும்பாது. பிஸ்கோத்து, கற்கண்டு, திராக்ஷை, பேரீச்சம் பழம் முதலியவை அவனிடம் எப்பொழுதும் தயாராக இருக்கும்.

“என்னுடைய சித்திரக்கூடத்தை நீ பார்த்தது இல்லையே?” என்று கேட்டான் ராமச்சந்திரன். 

“அப்படியென்றால்…” என்று நான் இழுத்தேன்.

“உலகத்திற் சிறந்த சித்திரங்கள் சிலவற்றைப் பொறுக்கி ஓர் அறையில் வைத்திருக்கிறேன் அந்த அறைக்கு நானாகக் கொடுத்த பெயர் சித்திரக்கூடம் என்பது,” 

”அப்படியா ! நான் பார்த்ததே இல்லையே. பார்க்க வேண்டாமா?” என்று ஆவலுடன் கேட்டேன். 

“நன்றாயிருக்கிறது! நீ பார்க்காமலா? நாளைக்கே காட்டுகிறேன்” என்றான். 

சிறிது நேரம் என்னோடு என் வீட்டிற் பேசியிருந்து விட்டுச் சென்றான். 

மறுநாள் சித்திரக்கூட தரிசனம் ஆயிற்று. ஆஹா! என்ன அற்புதம் ! என்ன விசித்திரம் ! ஒரு சிறந்த சித்திரக் காரனால் தேர்ந்தெடுக்கப் பட்டனவென்றால். அவற்றின் சிறப்பை நானா சொல்லப் போகிறேன்? வர்ண விசித்திரங் களும், நிழல் விசித்திரங்களும் என் கண்களை அப்படி அப்படியே தம்பால் பதித்துக் கொண்டன. 

“இது என்ன?” என்று தூக்கி வாரிப் போட்டாற் போலக் கேட்டேன். அத்தனை விசித்திரமான சித்திரங் களுக்கு நடுவில் மிக அலங்காரமான சட்டத்தோடு ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. பலதெய்வ ரூபங்களுக்கு இடையில், மலையாள பகவதியின் படம் மாட்டி யிருந்தால் எப்படி யிருக்கும்? அப்படித் தோற்றியது எனக்கு. அந்தப் படத்தில் வெறும் வர்ணக் குழம்பைக் கொட்டினது போல ஒரு மொத்தையான உருவந்தான் இருந்தது. 

”அதுவா!” என்று சொல்லி ராமசந்திரன் பெருமூச்சு விட்டான். 

”இது திருஷ்டி பரிகாரத்திற்காக மாட்டப்பட்டு இருக்கிறதோ? அப்படியானால் இங்கே, நடுவில் மாட்டுவானேன்?” என்றேன் நான். 

”அவசரப்படாதே. நான் சொல்வதைச் சாவதானமாகக் கேள்” என்று பீடிகை போட்டுவிட்டு, மற்றொரு பெருமூச்சு விட்டான். அந்தப் பெருமூச்சின் அர்த்தத்தை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவன் சொல்ல ஆரம்பித்தான். 

“பத்து வருஷங்களுக்கு முன் நடந்த சமாசாரம். அந்த நிகழ்ச்சியை இந்தப் படம் எனக்கு நினைவூட்டுகிறது. இதற்கு ஒரு தனி ஜீவன் உண்டு. அதை நான் அனுபவிக்க முடியும். எனக்கு ஒரே ஓர் ஆண் குழந்தை இருந்தது. அதன் சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் இந்த ஊரில் உள்ளவர்களுக்கே வியப்பைத் தந்தன. அதன் கை விரல்கள் ஒரு சித்திரகாரனுக்கு ஏற்ற வண்ணம் அமைந்து இருந்தன. என்னுடைய கலையை அழியாமல் காப்பாற்ற வந்த தெய்வமாக நான் கருதி இருந்தேன், ஆனால் தெய்வத்திற்குச் சம்மதமில்லை…” 

மறுபடியும் பெருமூச்சு, ஒரு நிமிஷம் மெளனம், 

”ஒரு நாள் சித்திரத்துக்கு வர்ணம் தீற்றுவதற்கா க நீல வர்ணத்தைக் குழைத்து வைத்திருந்தேன். எதையோ எடுக்க உ ள்ளே போயிருந்தேன் அதற்குள் அந்தக் குழந்தை தன் வலக்கையை அந்த வர்ணத்தில் தோய்த்து, மிகவும் நிதானமாக, அருகிலிருந்த காகிதத்தில் பதிய வைத்துக் கொண்டிருந்தது. அதன் கை விரல்கள் அப்படியே அதில் பதிந்தன. நான் வந்து பார்க்கையில், அந்தச் சித்திரம் பூர்த்தியாக அமைந்திருந்தது. எனக்கு அதன் அருமை அப்பொழுது தெரியவில்லை. அதை எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டு விட்டேன். மறுநாளே குழந்தைக்கு காலன் ஓலையனுப்பி விட்டான். திடீரென்று மாந்தம் கண்டு இறந்து விட்டது. அதற்காக அழாதவர்கள் இந்த ஊரிலே இல்லை. அக்குழந்தை ஒரு சிறந்த சித்திரகாரனாகும் என்ற என் கனவெல்லாம் வீணாகி விட்டது. அன்று இரவெல்லாம் புரண்டு புரண்டு அழுதேன். 

“மறுநாள் எனக்குத் திடீரென்று அக்குழந்தை தன்  ைகயை வர்ணத்தில் தோய்த்து வைத்த காகிதம் ஞாபகம் வந்தது. விரைவில் குப்பைக் கூடையை எடுத்துத் தேடி அதைக் கண்டு பிடித்தேன். அதைப் பார்த்த போது, அந்தக் கையின் சித்திரம் என் உள்ளத்தை உருக்கியது. இந்த ஸ்வபாவ சித்திரத்தை நாம் வைத்துப் பூசிக்க. வேண்டுமென்ற எண்ணம் உ தித்தது. அப்புறம் அதைக் கண்ணாடி போட்டு இங்கே வைத்தேன். நாளுக்கு நாள் இதன் அருமை அதிகரித்து வருகிறது. என்னுடைய கனவு. மெய்யாகா விட்டாலும், அதன் நிழல் போல இது விளங்கி, எனக்குப் பழைய காட்சிகளை ஞாபகப் படுத்துகிறது. அந்தக் குழந்தை மட்டும் இருந்திருந்தால்…” 

மீண்டும் பெருமூச்சு; மௌனம். இரண்டு நீர்த் துளிகள் ராமச்சந்திரன் கண்களினின்றும் உதிர்ந்தன. 

– 1932-42, தினமணி ஆண்டு மலர்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *