உயர்ந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 3,723 
 

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ் சாமே! அப்படி யென்றால், அநேக இடங்களில் பாத்திரம் துலக்கியும் வீடு பெருக்கியும் வயிறு வளர்த்து வந்த பார்வதிக்கு அவள் மகன் ராசா ஆகவும், “துரை ஆகவும் விளங்கியதில் தவறு இல்லைதானே?

“எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று எண்ணிக்கொள்ள உரிமை பெற்றிருந்த போதிலும், பார்வதி தன் மகனை மன்னன் ஆக்கி மகிழ ஆசைப்பட்டதே இல்லை. வருங்காலத்திலே அவன் ஒரு மந்திரியாகி “ஜெயம் ஜெயம் என்று வாழ்ந்து விடுவான் என்றுகூட அவள் கனவு கண்டது கிடையாது. அவளது கனவு அதிகபட்சமாகப் போயிருந்தால், ஒரு தாசில் உத்தியோகத்தையோ அல்லது கலெக்டர் பதவியையோ தான் தொட்டிருக்கக்கூடும்.

தனது உறைவிடமான கிணற்றில் நாலுதரம் அப்படியும் இப்படியும் தாவிக் குதித்துவிட்டு, “என்ன இருந்தாலும் நீ சொல்கிற கடல் என்கிற விஷயம் இதைவிடப் பெரிசாக இருந்துவிட முடியாது” என்று அடித்துப் பேசிய தவளையின் கண்ணோட்டம்தான் அவளுக்கும் இருந்திருக்க முடியும்.

பார்வதி அம்மாள் படிக்காதவள். பல ஊர்களுக்கும் போய் வந்து அறியாதவள். “கலெக்டர் பிள்ளை ” என்று ஜில்லா பூராவும் பெயர் பெற்றுத் திகழ்ந்த ஒருவர் வீட்டில் “வாசல் தெளித்துப் பெருக்கும்” பணி புரிந்தவள். கலெக்டருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கமுடியும் என்பதைத் தனது கண்ணால் கண்டிருந்தாள் அவள், “தாசில் பிள்ளை பெருமையும் அவள் அறிவாள். ஆகவே தன் மகன் கலெக்டர் ஆகிவிடுவான்; இல்லாவிட்டாலும், தாசில் வேலை பார்த்தே தீருவான் என்று ஆசைப்பயிர் வளர்த்து வந்தாள் அத் தாய்.

காலப்போக்கிலே அவள் கண்ணீரும் செந்நீரும் கொட்டித்தான் தனது ஆசைகளைப் பாதுகாக்க நேர்ந்தது. பெரிய காக்கை தன் குஞ்சு பொன் குஞ்சுதான் என்று எண்ணுவது தவறில்லை. அதற்காக அது “எண்ணியது எண்ணியவாறே எய்திவிடும்” என்று சொல்லமுடியுமா? தாய் யார் யாரையோ சிபாரிசு பிடித்து, சாமியார் பள்ளிக்கூடத்தில் சம்பளம் இல்லாமலே மகனைப் படிப்பிப்பதற்கு ஏற்பாடு செய்தாள்.

மக்களுக்குக் கல்வி அறிவு புகட்டியே தீருவது எனும் நோக்கத்தோடு சாமியார்களாக வாழ்ந்து, பள்ளிக்கூடம் நடத்தி நல்ல பெயரும் பெறுகிற பாதிரிகள் ஸ்தாபனத்தின் “ஐயா”க்கள் கூட பார்வதி மகன் செல்லையாவின் மூளையிலே பாடப் புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பதிய வைக்க முடியவில்லை.

“ஸிலபஸில் சேராத விஷயங்கள் எல்லாம் அவன் மூளையில் சுலபமாகவே புகுந்து கொண்டு அவனைப் படாத பாடு படுத்தினால், அந்தச் சிறுவன் பாடங்களைக் கற்றுக்கொள்வது எங்கே? பரீட்சையில் தேறுவது தான் எப்படி? அரியோன் அரி” என்று யாரோ சொல்லிக் கொடுத்தால், அண்ணாவி வீட்டிலே பொரி” என்று எவரும் சொல்லி தராமலே கத்துவதற்குக் கற்றுக்கொண்டான் அவன். “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று புத்தகம் சொல்கிற தாக்கும்? அவன் வாய் அதைத்தான் சொல்லவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லையே! “வாத்தியார். சாகாரா! வயித்தெரிச்சல் தீராதா” என்று தான் அது ராகம் போடும்.

செல்லையா தானும் உருப்பட மாட்டான்; மற்றவர்களையும் உருப்பட விடமாட்டான் என்று தெரியவந்ததும், பாதிரி பள்ளிக் கூடத்து ஐந்தாம் வகுப்பு “ஐயா” பையா! நீ இனிப் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டாம்” என்று சொல்லிவிட்டார். “கண்டிப்பு – கட்டுப்பாடு – ஒழுங்கு முறை – நல்லபடிப்பு – அருமையான பலன் வகையராக்களுக்குப் பெயர் பெற்றது “சாமியார் பள்ளிக்கூடம்”.

இருந்தும் என்ன செய்ய? பார்வதியிடம் நல்ல பெயர் சம்பாதிக்க முடியவில்லை அதனால். “வாத்தியாராம் வாத்தியாரு! எங்க ராசாவுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க முடியலே அவங்களாலே பையன் தலையிலே களிமண்ணு தான் இருக்குது என்று ஒரு ஐயா சொல்லி விட்டாரு. மேல்மாடி காலி என்கிறாரு ஒருத்தரு. சுட்டுப் பொசுக்கினாலும் படிப்பு வராது என்று பெரிய ஐயா சொன்னாரு. அவங்க எல்லோருமே சோம்பேறிகதான். என் துரைராசா நல்ல புத்திசாலி ஆச்சுதே. அவனுக்கு விளையாட்டுத்தனம் அதிகம். அதனாலே தான் படிப்பிலே கவனமில்லை. கவனம் வைத்து அக்கறையோடு படித்தான் என்றால் அவனை யாரும் மிஞ்ச முடியுமா?” என்று அவள் சொன்னாள். தன் மகனைப் பற்றி வேறு விதமாகப் பேச, பெற்ற மனசு இடம் கொடுக்குமா?

பார்வதியின் “ராசா” வான் செல்லையா அவிழ்த்து விட்ட கழுதை” மாதிரி அலையும் சுதந்திரம் பெற்றுவிட்டான். அவனுடைய “கீர்த்தி” எங்கும் பரவியது. பாடப் புத்தக விஷயத்தில் தான் அவன் மூளை “தடிமன் பெற்றிருந்ததே தவிர, வயிற்றுப் பாடு என்கிற பிரச்னை வரும் பொழுது ரொம்ப சூட்டிக்கமாகத் தான் வேலை செய்து வந்தது. அப்படி வேலைத்தனங்கள் செய்து அகப்பட நேரிட்டால், எளிதில் தப்பி விடுவதற்கு உரிய உபாயங்களையும் ஒரு கணத்தில் கண்டுவிடும் சக்தி அதற்கு இருந்தது. அட தப்பித் தவறி அடியும் உதையும் பெற நேர்ந்தது என்றாகிவிட்டால் தான் என்ன? “தோலுக்கு மேலே தொண்ணூறு அடி; துடைத்து விட்டால் ஒண்ணுமில்லே!” என்று சுட்டிக்காட்டக்கூடிய “பரிபூரணானந்த பக்குவம்” அதற்கு இருந்தது.

பார்வதி தான் கண்ணீர் வடித்தாள். தனது ராசா வின் மேனியில் கசிந்து பொறுக்கிட்டிருக்கும் ரத்தக் கறைகளைக் காணும் போது அத் தாயின் உள்ளம் வேதனையோடு ரத்தம் கக்கும், “அடே, ஏண்டா இந்த வரத்து வருகிறே? நல்லவன்னு பெயரெடுத்து நீ நாலு பேரு மதிக்க வாழணுமின்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன் என் எண்ணத்திலே மண்ணைப் போட்டுவிட்டையேடா ராசா!” என்று வயிற்றெரிச்சல் தாங்காமல் புலம்பினாள் தாய்.

“இப்போ எனக்கு என்னம்மா குறை? நாலு பேரு மதிச்சு நமக்கு என்ன ஆகப் போகுது?” என்று கேட்டான் பையன்.

சர்வ சமய சஞ்சீவியான பழமொழிதான் பார்வதி அம்மாளுக்கும் புகல் அளிப்பது வழக்கம். இந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு பழமொழி தான் அவளுக்கு ஆறுதல் கூறியது ஊம் என்னாலே என்னடா செய்ய முடியும்? தலையிலே எண்ணெய்தான் தேய்க்க முடியும், தலை எழுத்தைக் கண்டால் அழிச்சு எழுத முடியுமா?” என்று அவள் முனங்கினாள்.

செல்லையா நண்பர்களின் நல்மதிப்பு வேண்டும் என்று கூட எண்ணுவதில்லை. தான் தப்புவதற்கு நண்பனைக் காவு கொடுக்கவும் அவன் தயங்க மாட்டான். அப்பாவி நன்பன் ஒருவன் ள அகப்பட்டுக்கொண்டால், தப்பிவிட்ட அவன் கை கொட்டிச் சிரித்து மகிழ்ப் பின் வாங்கவும் மாட்டான்.

ஒரு சமயம் அப்படித்தான் ஆயிற்று. ஒரு தோப்பில் மாமரங்களில் குலைகுலையாகக் காய்கள் தொங்கின. அவற்றின் பசுமை பையன்களை ஆசைகாட்டி அழைத்தன அதனால், கற்கள் பறந்தன, காய்கள் விழுந்தன. காய் அடித்துத் தின்னும் சுவாரஸ்யத்தில் பையன்கள் தோப்புக் காவல்காரன் வந்ததைக் கவனிக்கவில்லை. முதலில் கவனிக்க நேர்ந்த செல்லையா டெடேய ஓடுங்கள்!” என்று கூவிக்கொண்டு விழுந்தடித்து ஓடவும்தான் மற்றவர்கள் கால்களிலும் உணர்வு பிறந்தது. எனினும் ஒருவன் அகப்பட்டுக் கொண்டான். காவல்காரன் அவனை மிரட்டவும், மற்றப் பையன்களுக்கு பயம் காட்டவும் ஒரு வேலை செய்தான். அச்சிறுவனின் கைகளைக் கயிற்றினால் கட்டி, அவனை ஒரு கிணற்றினுள் இறக்கினான். தண்ணீர் அதிகம் இல்லாத கிணற்றுக் குள்ளே அந்த மனித வாளி” இறங்கியது. அலறி ஓலமிட்டுக் கொண்டே இறங்கியது. அலறி “ஐயோ ஐயோ, என்னை உள்ளே போட்டு விடாதே மேலே தூக்கு என்று பயந்து. நடுங்கிக் கதறினான் பையன்.

அந்த அலறல் கேட்டு எல்லாச் சிறுவர்களும் அங்கே வந்து கூடினார்கள். அவனை விட்டுவிடும்படி சிலர் கெஞ்சினார்கள். “வாத்தியார் ஐயர் மகன் தானே இந்தப் பையன்?” என்று தோப்புக்காரன் கேட்டான். “ஆமாம்” என்றனர் சிலர். அப்போ எல்லாரும் கத்துங்க… “ஐயரே ரெண்டரே. அமுக்கிப் புடிச்சா ஒண்ணரே. உம். கத்துங்கள்!” என்றான் காவல்காரன். அவனுக்கு அது தமாஷாக இருந்தது.

பயந்தனர் சிலர். பரிதாபப்பட்டனர் பலர். செல்லையா தான் முதல் குரல் கொடுத்தான். தயங்கித் தயங்கி நாலைந்து குரல்கள் மெதுவாக இணைந்தன. பிறகு எல்லாக் குரல்களும் கூவின. அதுவரை அந்தச் சிறுவன் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தான். “நம் உயிர் நம்ம கையில் இல்லை” என்ற தவிப்பு அவன் உள்ளத்தில் பதை பதைத்துக் கொண்டிருந்தது. பீதி என்பதன் உயிர்ச்சித்திரமாக மாறியிருந்தது அவன் முகம்.

முடிவில் அவனை வெளியே தூக்கி, கட்டை அவிழ்த்து விட்டதும் அவன் யாருடனும் பேசவில்லை. கும்பலாக நின்று கூவிய பயல்கள் ஒவ்வொருவரும் “செல்லையா தான் முதல்லே கத்தினான்” என்று ஏதோ ஒரு மகா உண்மையை உரைப்பது போல ஓதினார்கள்.

ஆமா நான் தான் கத்தினேன். நாம் கத்தாவிட்டால் தோப்புக்காரன் அவனை கரைக்குத் தூக்க மாட்டான் என்று எனக்குப் பட்டது. அதனாலேதான் கத்தினேன்” என்றான் அவன்.

“நீ அகப்பட்டுக் கொண்டு முழிச்சிருக்கணும். அப்ப தெரியும்” என்றான் அனுபவ ஞானம் பெற்றவன்.

“நான் ஏன்டா அகப்படப் போறேன்!” என்று அலட்சியமாக அறிவித்தான் செல்லையா. அந்தப் பையன் அவனோடு சில தினங்கள் வரை பேசாமலிருந்தான். அதைப் பற்றி செல்லையா கவலைப்படவில்லை.

பொதுவாக, அவன் எதைப் பற்றியுமே கவலைப்படுவது கிடையாது. கவலை வளர்த்து வாழ்ந்த அன்னைக்குக் கூட அவன் ஆறுதல் கூறக் கற்றுவிட்டான்.

“நீ ஏனம்மா கவலைப்படுகிறே? கவலைப்படுவதனாலே என்ன நடக்கப் போகுது? ஒன்றும் நடக்காது என்கிற போது மனுசன் ஏன் கவலைப்படணும்?” என்று சொல்வான் அவன்.

“அம்மா. நீ நிச்சயமாக நம்பலாம். நான் பெரியவன் உயர்ந்தவன். என்று நிரூபிக்கும் படியான காரியம் எதையாவது என்றாவது செய்யாமலா போகப் போறேன்” என்றும் அவன் கூறுவான்.

ஆனால், பார்வதி மகன் செல்லையா உருப்படாத பயல்” என்று தான் ஊர்க்காரர்கள் முடிவுகட்டியிருந்தார்கள். “கழுதை எதுக்கு லாயக்கு? சோத்துக்குக் கேடு, பூமிக்குப் பாரம்” என்றும் சொன்னார்கள். “தாயார்க்காரி” வேண்டிக்கொண்டதற்கு இணங்க எவராவது பெரிய மனிதர். ஏதாவது மளிகைக் கடையிலோ வேறு எங்கோ சிபாரிசு செய்து அவனுக்கு வேலை வாங்கிக் கொடுப்பதும். சில தினங்களிலேயே அவன் அந்த வேலையை விட்டு விடுவதுடன், வேலை தேடித் தந்தவர் முகத்தில் “கரியைப் பூசுவதும்” இயல்பாகிவிட்டது. அதனால் அப்புறம் அவனுக்கு உதவி புரிய எந்தப் பெரியவரும் முன்வரவில்லை அவன் கெட்டது அவனுடைய அம்மாவினாலேதான். ரொம்பவும் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டாள் அவள் இருக்கிற வரை அவனுக்குக் கவலையா கஸ்டமா?” என்றுதான் பலரும் சொன்னார்கள். “தடிமாடு அவன். தின்னு போட்டு ஊரு சுற்றுவதும் வம்புச் சண்டையைவிலைக்கு வாங்குவதும் தவிர அவன் வேறு என்ன செய்யப் போகிறான்? என்றார்கள்.

ஒருநாள் அவன் கையில் கயிறு அறுந்த காற்றாடி ஒன்று சிக்கியது. அதற்குக் கயிறு கட்டிப் பறக்கவிடவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. எங்கிருந்தோ கயிறு சம்பாதித்தான். இரண்டு பையன்களையும் துணை சேர்த்துக் கொண்டு பட்டத்தைப் பறக்க விடுவதில் ஈடுபட்டான்.

கனத்தில் “விர்ரென்று” எவ்விப் பாய்ந்தது காற்றாடி. பழக்கம் பெற்றிராத செல்லையா முதலில் திணறினாலும் சீக்கிரமே சமாளித்துக் கொண்டான். அவன் “டைரக்ட” செய்த காற்றாடி விண்ணிலே நெளிந்தது; நீந்தியது; ஏறி இறங்கியது; சுகமாக மிதந்தது. உயர்ந்து உயர்ந்து சிறு பறவை போல் திரிந்தது. வர்ணப் புள்ளி போல் நிலைத்து நின்றது.

செல்லையாவின் உள்ளமும் அளவில்லாத ஆனந்த அனுபவத்திலே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதுவரை அவன் உணர்த்திராத மகிழ்ச்சி அங்கு நிரம்பியது. தனது கவிதா சிருஷ்டியில் சொக்கிவிடுகிற கவிஞன் மாதிரி தன் கைத்திறனிலே பூரித்துப் போகிற ஓவியன் போல் – தன்னுடைய குரலின் ஏற்ற இறக்கங்களில் மெய்மறந்து திளைத்து அற்புத இசை பொழிந்து களிக்கிற சங்கீதக் கலைஞன் போல, அவனும் காற்றாடி விடும் அனுபவத்தில் ஆழ்ந்து நின்றான்.

தினந்தோறும் அதே வேலையாக முனைந்துவிட்டான் அவன். புதிய பட்டங்கள் செய்து பறக்க விடுவதில் அவனுக்கு அதிக உற்சாகம் ஏற்பட்டது. வானவெளியில் தடங்கலற்று. மிதக்கும் வேறு காற்றாடிகளை அறுத்து விழத் தட்டுவதிலும் ஆர்வம் பிறந்தது அவனுக்கு. மேலே எவ்வுகிற பட்டத்தோடு தானும் உயர்ந்துவிடுவது போன்ற நம்பிக்கையும் ஆனந்தமும் ஏற்படுவது இயல்பு என்கிற மனத் தத்துவத்துக்கு உயிர்ப் பிரமாணமாக மாறி நின்றான் அந்தச் சோமாறி.

எப்படியானால் என்ன! “நான் உயர்ந்தவன்” என்று நிரூபித்துவிட்ட பெருமையோடு தலை நிமிர்ந்து நடக்கலானான் செல்லையா. பார்வதி அம்மாள் வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

‘திறமைசாலிகளை உலகம் உரிய முறையில் போற்றுவதில்லை. மேதாவிகளை சொந்தத் தாய்கூட மதிப்பதில்லை!” என்றுதான் செல்லையா எண்ணினான். அதற்காக அவன் வருந்தவில்லை. அவன்தான் எதற்காகவும் கவலைப்படுவது கிடையாதே “விண் உண்டு; காற்று உண்டு; பறக்க விடக் காற்றாடியும் உண்டு” என்று தேர்ந்துவிட்ட பிறகு அவனுக்குப் புதுசாக ஏதாவது கவலை வந்துவிட முடியுமா என்ன?.

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *