ரெண்டு நாளைக்கிண்ணாலும் வாய்க்கும் ருசியாத் திங்கட்டுமே’ என்ற கரிசனத்துடன் மாமியார் செய்துவைத்துப் போன கத்தரிக்காய் – முருங்கைக்காய் – சேனைத் தீயல், தீர்ந்தது. புதுமணமக்களைக் குடி இருந்து வந்தவர்கள் ஒரு மாதத்துக்கு வேண்டிய வெஞ்சண சாமான்கள் வாங்கிப் போட்டிருந்தனர். ஊரில் இருந்து கொணர்ந்த அரிசி, இரண்டு மாதத்துக்குக் காணும். அஞ்சாறு நெற்றுத் தேங்காய்கள் கிடந்தன. காய்கறிகள் இன்னும் சில நாட்களுக்கு வாங்க வேண்டியது இருக்காது.
ஒரே காம்பவுண்டுக்குள் தெருவைப் பார்த்து வரிவரியாய் வாசல் வைத்து ஏழு வீடுகள் பொது முற்றமும் நீண்ட படிப்புரையும், படிப்புரையில் ஏறி, வாசல் தாண்டினால் சின்ன வாழறை, அடுத்துப் படுக்கை அறை, தாண்டினால் அடுக்களை, பின்புறம் குளிமுறி-கக்கூஸ் புறவாசல் ஓட்டுக்கூரை வீடு, காற்றுக்குப் பஞ்சமில்லை.
வேலாண்டிப் பாளையம் கோவையின் குளிர்ச்சியான பகுதிகளில் ஒன்று. குளிர்ச்சிக்குக் காரணம் வேம்பு, புங்கு, வாத நாராயணன், புளி, ஆல் எனச் சொன்னால் அதிசயப் படமாட்டீர்கள் அல்லவா? நகரம் வெகு தூரத்தில் இருந்தது. கோவையின் வடக்கு வெளிக்கிளமம் அது. மரங்களும் மாடுகளும் தெருக்களும் மனிதர்களும் இணக்கமாக இருந்தனர்.
தண்ணீர் ஒரு பிரச்னைதான். நகரத்துக்கும் அதன் வெளிச்சுற்றுக் கிராமங்களான பூளை மேடு, சிங்கநல்லூர், நஞ்சுண்டாபுரம், குனியமுத்தூர், பேரூர், வேலாண்டிப்பாளையம், கவுண்டம் பாளையம், கணபதி என கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவாணி அணை வேலை முடிந்தால் குடி தண்ணீருக்குப் பஞ்சமிருக்காது என்றனர்.
காம்பவுண்டில் பொதுவான உப்புத் தண்ணீர்க் கிணறு ஒன்று கிடந்தது. எட்டிப் பார்த்தால் இரண்டு பனைமரங்களை நட்டமாய் நிறுத்தலாம், ஒன்றின் மேல் ஒன்றாக. நல்ல தண்ணீருக்கு சைக்கிளின் கேரியரின் இரு புறமும் குடங்கள் கட்டி மூன்று மைல்கள் தினமும் இரண்டு திருப்பு போய்வர வேண்டும்.
சப்பைத் தண்ணீரில் சமைக்க முடியாது, குடிக்க ஒவ்வாது, துவைக்க-குளிக்க சோப்புப் பதையாது. கோரிய பாத்திரங்களில் சுண்ணாம்பு போல் தண்ணிர்த் தடம் வறடு பிடித்துக் கிடக்கும். பயிர் பச்சைகள், தாவரங்கள் ஏதோ ஒரு தொழில் நுட்பத்தில் சப்பைத் தண்ணீரில் செழித்து வாழக் கற்றுக் கொண்டிருந்தன.
தண்ணீர்ச் செழிப்புள்ள நாஞ்சில் நாட்டுக் காரியான, அதுவும் தேரேகால் புதூர்க்காரியான, பாக்கியத்துக்கு கோயம்புத்தூரின் தண்ணீரை நினைத்தால் பகீர் என்றிருந்தது. அடுக்களையில் பாதி இடம் தண்ணீர் நிறைந்த குடங்கள், பானை, குட்டுவம், போளி என அடைத்துக் கொண்டிருந்தன. காணாக் குறைக்கு புறவாசலில் இரண்டு உருண்டையான கள்ளிப்பலகை, மூடி போட்ட சிமெண்ட் தொட்டிகள், குடி இருந்து வந்தவர்கள், சோப்புத் திரிந்து பிரிவதைப் பார்த்து அழுக்குத் துணிகளை ஊரில் கொண்டு போய்த் துவைக்கலாம் என்று மூட்டை கட்டி எடுத்துப்போய் விட்டனர்.
”சவம் ரெண்டு நாளு இந்த உப்புத் தண்ணியிலே குளிச்சதே தலையெல்லாம் சடை பிடிச்சாச்சு. இனி ஊருக்குப் போயி சீவிச் சிக்கு எடுக்கணும். ஒந்தலை முடியை ஒழுங்காப் பாத்துக்கட்டீ… ஊருக்கு வரச்சிலே மூணு முடியைக் கொண்டுக் கிட்டு வராதே, என்னா? என்றாள் அத்தை.
நாகரஜனுக்கு ஃபவுண்டரி வேலை, பக்கம் தான். குறுக்குப் பாதையில் சைக்கிளில் போய் வந்து விடுவான். பாக்கியம் நாஞ்சில் நாட்டுப் படாகை ஒன்றின் மூத்தபிள்ளை வீட்டுப்பெண் அல்ல என்றாலும் சோற்றுக்குத் தட்டில்லை.
பதினொன்று படித்துக் கொண்டிருந்தவளைப் பிடித்து, படிப்பையும் நிறுத்தி கல்யாணம் செய்து அனுப்பிவிட்டனர். நிச்சயதார்த்தம் முடிந்ததுமே பள்ளிக்கு அனுப்பவில்லை. சமைந்த பிறகு பதினொன்று வரை படிக்க வைத்ததே பெரிய விஷயம். அடுக்களைப் பக்கமும் போகாமல்தான் வளர்ந்தாள். மனதிருந்தால் பாக்கியம் வீட்டில் செய்த வேலை எல்லாம் – தேங்காய் திருவுவது, தோசைக்கு மாவாட்டுவது, உள்ளி உரித்துக் கொடுப்பது, சில சமயம் வீடு தூத்து வருவது, வண்டிக் காளை மாட்டுக்குப் பருத்திக் கொட்டை அரைப்பது.
இருபது நாட்களில் தொடக்கக் கல்வியில் ஆரம்பித்து வித்வான் படிப்பு வரை சமையல் எங்ஙனம் கற்றுத் தேர்வது? தீப்பெருக்கி, உலை வைப்பதில் இருந்து தொடங்க வேண்டும். பித்தளை நாழி, உழக்கு, ஆழாக்கு முகவைகள் கொண்டு வந்திருந்தாள். இரண்டு பேருக்கு ஒரு நேரத்துக்கு எவ்வளவு அரிசி வடிக்க வேண்டும் என்ற கணக்கே இனிமேல் தான் தீர்மானம் ஆக வேண்டும்.
அதிகம் எழுதாத பள்ளி நோட்டுப் புத்தகத்தில் அத்தியாவசியமான குழம்பு, துவரன் எனக் குறித்துக் கொண்டு வந்திருந்தாள். என்றாலும் தீவிர அறுவை சிகிச்சைக்கு முன்பான நோயாளி மனநிலை… சாவேனோ பிழைப்பேனோ?
அடுக்களையில் விறகடுப்பு, கொடி அடுப்புடன் சேர்த்து. அம்மி, ஆட்டுக்கல் குழவிகள் கிடந்தன. ஊர்ப்பக்கம் போல கருங்கல் அல்ல, சிவத்த வெள்ளைக் கல்லில் அடித்தவை.
புறப்படுமுன் அம்மா ஆட்டி விரவி வைத்துவிட்டுப் போன தோசை மாவில் காலை தோசை சுட்டுக் கொடுத்து, மத்தியானத்துக்கும் நாலு தோசை சம்புடத்தில் அடுக்கி, ஊரில் இருந்தே குடித்துக் கொண்டு வந்திருந்த மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெய் விட்டுக் குழைத்துக் கொடுத்து அனுப்பினாள். நல்ல வேளையாகத் தோசை தயாரிப்பதில் சிக்கல் இருக்கவில்லை.
புதுக் குடித்தனம், புதுப் பெண் என்பதால் அக்கம் பக்கம் என்ன ஏது எனக் கேட்டுக்கொண்டார்கள். பாக்கியத்தின் நாஞ்சில் நாட்டுத் தமிழ் கேட்டுச் சிரிக்க என்று தேவைக்கு அதிகமாகவே விசாரிப்பு.
முன் முற்றத்தில் நாலைந்து தென்னைகள் நின்றன. வேம்பொன்று நின்றது. வேம்பு பழுத்தால் கிளிகள் வரும் என்றார்கள். பங்குனியில் தான் வேம்பு பூக்கும் போலும். மூன்றாவது வீட்டு மாமி, வாசலில் நின்று, பூத்திருக்கும் வேப்பமரம் பார்த்து, ஏழாவது வீட்டுப் பெரியம்மாவிடம் வேப்பம் பூ ரசம் வைக்கும் பக்குவம் விளம்பிக் கொண்டிருந்தாள்.
பாக்கியம் வீட்டுப் புறவாசலில் ஒரு பப்பாளி காய்த்து நின்றது. அடிப்பாகம் கிடந்த நீட்டு உருண்டைக் காய்களில் சில மஞ்சள் அடிக்க ஆரம்பித்திருந்தன. ஊரில் பப்பாளியைச் சும்மா கொடுத்தால் கூட வாங்கமாட்டார்கள். எவராவது ஆசைப்பட்டுப் பறித்துக் கொண்டு போனால் அது ஊரேல்லாம் பாட்டாகும்.
’ஓ’ மத்தவன் பப்பாளி பறிச்சுக்கிட்டுப் போறான் பாத்துக்கோ’ என்று கருச்சிதைவுக்குப் பப்பாளி தின்றால் போதும் என்றொரு பாதி உண்மையும் கேலிக்குக் காரணம் ஆகலாம். இந்த ஊரில் அண்ணாச்சி கடையில் பழுத்த பப்பாளி பறித்து விலைக்கு அடுக்கி இருந்தார்.
பப்பாளி மரத்துக்குப் பக்கத்தில் கனகாம்பரம், சோற்றுக் கற்றாழை, வாழை மூடு, முன்பு குடி இருந்தவர் நல்லவண்ணம் பேணி இருந்தனர். இரண்டு மைனாக்கள், இரண்டு தேன் சிட்டுக்கள், நாலைந்து அணிற்பிள்ளைகள், ஒரு ஓணான் எனப் பந்தியில் வந்து புதுப் பெண்ணை விசாரித்து விட்டுப் போயின. காகங்களுக்கு இனி அடுத்து விருந்து வந்தால் கரைந்தால் போதும். நாஞ்சில் நாட்டில் இருந்து முன்னூறு மைல் தாண்டி யார் அவ்வளவு சீக்கிரம் வந்து விடப் போகிறார்கள் என்று யோசித்தபோது பாக்கியத்துக்கு கண்கள் பொங்கி வந்தன.
காலையிலும் மாலையிலும் உழக்குப் பசும்பாலுக்கு சொல்லியாயிற்று. கணவன் ஃபவுண்டரிக்குப் போனப்பின், வீடு தூத்து வாரி, பாத்திரங்கள் தேய்த்து, துணிகள் துவைத்து, சற்று நேரம் படுத்து எழுந்து எனப்பொழுது பறந்தது. மூன்றரை மணிக்கு வந்தான். நாகராஜன் தேயிலை போட்டுக் கொடுத்தான். மறு வீட்டுப் பலகாரங்கள் முறுக்கு, முந்தரிக் கொத்து கிடந்தன. மாலை, பக்கத்து மாரியம்மன் கோயிலுக்குப் போய்வரலாம் என்றான்.
”சும்மா இருக்க விட்டால் தானே! கோயிலுக்குப் போணும்ணா திரும்பியும் ஒருக்கக் குளிக்கணும்னு சொன்னா யாரு கேக்கா?” என்று செல்லமாய்ச் சிணுங்கிக் கொண்டாள்.
“ராத்திரிக்கு என்ன செய்யப் போறே?” என்றான்.
“முருங்கைக் காயும் மாங்காயும் போட்டு புளிக்கறி வச்சு காணத் தொவையலு அரைக்கலாம்ணு பாக்கேன்”
தோசை சுடுவதைப் போல அல்ல புளிக்கறி வைப்பது. நாகராஜன் நல்ல ருசித்துச் சாப்பிடுகிறவன். திருமணமாகி, மாறி மாறி மறுவீடுகள் போய் வந்த போது பாக்கியம் கவனித்திருக்கிறாள். மறுவீட்டு விருந்துகளில் ஆண்கள் முதலில் சாப்பிட உட்காரும் போது, இலை போட்டுப் பரிமாறுகையில், புதுமணப் பெண்ணும் பரிமாற வேண்டும் என்பது மரபு.
வீட்டில் நாகராஜன் சாப்பிடுவதைப் பார்த்த பாக்கியத்தின் அம்மா ஒரு முறை சொன்னாள்… ”ஏட்டி, ஒனக்க மாப்பிளை நல்ல சாப்பாட்டு ராமனா இருப்பான் போல்ருக்கே?”
போஜனப் பிரியன் என்றோரு திசைச் சொல் உண்டு. கெளரமாகச் சொல்வார்கள். ‘சாப்பாடு ராமன்’ எனில் இழிவு என்பது போல. கழிப்பறை என்றாலும் கக்கூஸ் என்றாலும் லெட்டின் என்றாலும் செயப்படு பொருள் ஒன்று தானே! சொல்லுக்கு என்று தனி அசிங்கம் வந்து விடுமா என்ன?
சுடு சோற்றில் கொதிக்கப் பருப்பூற்றி, தேங்காய் எண்ணெயில் வறுத்த உளுந்து பப்படம் நொறுக்கிப் போட்டு புத்துருக்கு நெய் ஊற்றிப் பிசைந்து, உருண்டை பிடித்து, அதை மிளகாய்ப் பச்சடியில் அல்லது நாரத்தங்காய்ப் பச்சடியில் தொட்டுத் தின்பதைக் காண நாவூறும் பாக்கியத்துக்கு. ஒரு கவளம் தரமாட்டானா என்றிருக்கும். அதுபோல் சாம்பார் ஊற்றிப் பிசைந்த சோற்றுக்கு வெள்ளரிக்காய் தயிர்க்கிச்சடி. சம்பாரத்துக்கு மாங்காய்க் கோசு இலையில் பிரதமன் ஊற்றுமுன் கனிந்த பாளையங் கோடன் வாழைப்பழம் நசுக்கி, பிரதமன் மேல் பப்படம் நொறுக்கி வாரிக் குடிக்கும் போது தொட்டுக்கொள்ள மிளகாய் பச்சடி.
தாயார் நாக்கை நல்ல நீட்டி வளர்த்திருப்பாள் போலும். உண்பதில் அப்படி ஒரு பாண்டிதியம். காரிகை கற்று கவி பாடுவது போல்.
”ஓட்டி, ஒனக்கு இன்னும் ஒரு ஓடைந்தண்ணி ரசம் கூடச் சரியா வய்க்கத் தெரியாது. இவ்வளோட எப்படிக் குடித்தனம் நடத்தப் போறையோ?” என்றாள் பாக்கியத்தின் அப்பன் கூடப் பிறந்த அத்தை.
வகுப்பறையில் பாடம் கூட இத்தனை கவனித்துக் கேட்டிருக்க மாட்டாள். அம்மாவின், அத்தையின், மதனியின் சமையல் குறிப்புக்களை கோனார் கைடு போல வாசித்தாள்.
கல்யாணம் உறுதியானபின், மதியம் பதினோரு மணிக்கு, நடுத்தெருவில், பாம்பு பிடிக்கரவன் வந்தான். இடக்கையில் நீண்ட பச்சைப் பாம்பு சுற்றிக்கொண்டு வலது கையால் அதைப் பிடித்து உருவச் சொன்னாள் அத்தை. பயத்தில் பாக்கியத்துக்கு தொடை இடுக்கில் சிறுநீர் பாய்ந்து விடும் போன்றிருந்தது.
”புதுப் பொண்ணு, பயப் படாம உருவு, நாளைக்குக் கை மணம் மாப்பிளையைக் கெறங்க அடிக்கணும்” என்று மதனி பரிகாசம் செய்தாள்.
கல்யாணம் ஆன புதிதில், மறு வீடு வந்திருந்த போது, நாகராஜன் வீட்டில் சாப்பிட உட்கார்ந்தான். நல்ல காய்வுள்ள மொரல் கருவாடு வாங்கி அம்மா புளிமுளம் வைத்திருந்தாள். கூட அட மாங்காய் போட்டு, பிஞ்சுக் கத்திரிக்காய் வருத்து போட்டு மணம் நாலு வீடு வீசியது. பக்கத்தில் உட்கார்ந்து பரிமாறினாள் பாக்கியம். சுடச் சுட வடித்த சம்பாப் புழுங்கலரிசிச் சோற்றின் மீது குளிரப் புளி முறம் ஊற்றினாள். பக்குவமாய் சோறு விரவி, இரண்டு கவளம் நாகராஜன் விழுங்கியதும் சற்றுக் கொஞ்சலாய்ப் பாக்கியம் கேட்டாள்.
”கொளம்பு எப்படி இருக்கு? கொள்ளாமா?”
குனிந்த தலை நிமிராமல் நாகராஜன் சொன்னாள், “மயிரு மாரி இருக்கு!”
கதவோரம் நின்று கேட்டுக் கொண்டிருந்த மாமியார் பதைந்து உள்ளே ஓடியதை அவன் கவனத்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை புதுப் பெண்டாட்டிதான், வைத்து விளம்புகிறான் என நினைத்தாள் போலும்!.
அடுக்களைக்குள் ஓடிப்போன மாமியார், பரந்த மீன் சட்டியின் மூடியை அகற்றி, வாயகன்ற சிரட்டை அகப்பையில் புளிமுளம் கோரி, நாக்கை நீட்டி, அதில் ஒரு சொட்டு விட்டு, சப்புக் கொட்டி ருசி பார்த்தாள்.
“ஆமா! அவ்வோ சொல்லுவது சரியாத்தாலா இருக்கு? ரெண்டு உப்புப் பரல் கூடிப் போச்சு. புளியும் மட்டாத்தான் இருக்கு” என்று தனக்குள் கூறிக்கொண்டு வெளியே மகனுக்கு சத்திமாய்க் குரல் கொடுத்தாள்.
“எட்டி, ஓன் மாப்பிளையை பையச் சாப்பிடச் சொல்லு… இன்னா, கொஞ்சம் போலக் கைப்புளி ஊத்திக் கொதிக்க வச்சுக் கொண்டாறன்” என்றாள் அவசரமாக.
பிளேக் மாரியம்மன் கோயிலுக்குப் போய்வந்து உடை மாற்றக் கூட நேரம் இல்லை.
“நம் மூடு முத்தாரம்மன் போல இல்ல, கேட்டேளா? பாத்தாலே பயமாட்டுல்லா இருக்கு? நம்ம அம்மன்னா என்ன சாந்த மாட்டுள்ள மொகம்?” என்று பேசியவாறு பறத்தம் பறத்தமாக வைத்தாள்.
உலையில் அரிசி களைந்து போட்டாள். தேங்காய் உடைத்துத் திருவினாள், வத்தல் மிளகாய், நல்லமிளகு, ரெண்டு சின்ன உள்ளி, மஞ்சள் துண்டு வைத்துச் சதைத்து மைபோல் அரைத்தாள். அம்மிப் பால் திரட்டினாள். மாங்காய், முருங்கக்காய் நறுக்கி, உப்புப் போட்டு வேகவைத்து, அரைத்ததைச் சேர்த்து, புளி ஊற்றிக் கொதிக்க வைத்தாள். அரிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு தாளித்துக் கொட்டினாள், நுரைத்து ஒரு கொதி வந்ததும்.
காணப் பருப்பு, வறுத்து உடைத்துத் தோல் நீக்கியது, ஊரில் இருந்து கொணர்ந்தது இருந்தது. காணப் பருப்பை அம்மியில் வைத்து, தலையில் தண்ணீர் தெளித்து ஒன்றிரண்டாய் அரைத்தபின் தேங்காய்ப் பூ, மிளகாய் வத்தல், சீரகம், உப்புக்கல், வெள்ளாய்ங்கப் பற்கள் சேர்த்து அரைத்து எடுத்தாள். சோறு வெந்து விட்டதா என கையகப்பையில் பருக்கை எடுத்து நசுக்கிப்பார்த்து சோறு வடித்தாள்.
வீட்டில் மரச் சாமன்கள் என்று எதுவும் இல்லை. மேசை, நாற்காலி, முக்காலி, கட்டில், பீரோ என்று யாவும் ஒவ்வொன்றாய் இனிதான் வாங்க வேண்டும். சாயங்காலமே விரித்திப் போட்ட இலவம் பஞ்சு மெத்தை மீது, பவானி சமுக்காளம் விரித்து, சாட்டின் உறை போட்ட தலையணை வைத்து, கால் மேல் கால் போட்டுப் படுத்தவாறு குமுதம் படித்துக்கொண்டிருந்தான் நாகராஜன், தமிழன் என்றால் அது படிக்கா விட்டால் எப்படி?
கொடியடுப்பில் குடிக்க செம்புத் தோண்டியில் வெந்நீர் வைத்து விட்டு நிமிர்ந்தாள் பாக்கியம். பங்குனிப் புழுக்கம், முகமெல்லாம் வியர்த்துச் சொட்டியது. புறவாசல் போய் கைகால் முகம் கழுவி, ஈரிழை ஜெயக்கொடி துண்டால் துடைத்து, லேசாகப் பவுடர் போட்டு, பொட்டு வைத்து நாகராஜன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
“ஒரு ஃபேன் வேண்டணும், கேட்டுட்டளா?”
“வேங்குவோம்”
“பின்ன, பாட்டுக் கேக்கதுக்கு சின்னதாட்டு ஒரு ரேடியோ”
அது வாங்குவோம்…. ஒண்ணொண்ணா வாங்குவோம்…”
“சாப்பாடு தேளா?
கழற்றி வைத்திருந்த கைக்கடிகாரம் எடுத்து மணி பார்த்தாள் எட்டே முக்கால் தாண்டியிருந்தது. “சரி, ஏந்தி”
அடுக்களை தூத்து, மூலையில் ஏதுக்கி, வாரியலைச் சாய்த்து வைத்து, கையைக் கழுவி, சில்வர் தட்டம் எடுத்து வைத்து, அடுக்களைக் கைப்பிடித் துணி பிடித்து சோற்றுப் பானை, புளிக்கறிச் சட்டி, துவையல் அரைத்து வைத்திருந்த கிண்ணம், குடிக்க வெண்ணீர் கலந்து ஆற்றிய சோறு வடித்த தண்ணீர், காலையில் உறையூற்றி வைத்திருந்த தயிர்ப்பரணி, ஊரில் இருந்து கொணர்ந்த நார்த்தங்காய் ஊறுகாய்ப் பரணி…
சாரம் உடுத்தி இருந்த கெட்டியவன், தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தாள். முன்னால் வைத்த தட்டத்தைத் தூக்கி, சொட்டி நின்ற தண்ணீரை வடித்தான். கையகப்பையால் சுடு சோறு தோண்டி தட்டத்தில் வைத்தாள் பாக்கியம். முதல் சோற்றுக்கு காணத்துவையல் போட்டு, இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றினாள்.
சோறு கிளுகிளுவெனப் போயிற்று நாகராஜன் முகம் ஒரு வக்கிரம் காட்டிற்று.
”சோத்தைக் கொழச்சிற்றியா?” எனக் கேட்ட குரலில் கடுமை தெளித்தது.
பாக்கியம், முகம் பதைக்க,” இல்லே, சரியா தண்ணி வடியல்லே போல்ருக்கு!” என்றாள்.
”வடியல்லியா? கொளம் மாதிரி கெட்டிக்கெடக்கு” என்றான், மேலும் குரலில் கடுப்பை ஏற்றி.
ஒரு உருண்டை பிசைந்து வாயில் வைத்தான். முகம் மற்றொரு வக்கிரம் காட்டியது.
”ஏன், நல்லால்லியா?”
“மண்ணு மாரி இருக்கு… சரி, புளிக்கறியை ஊத்து” என்றபடி முதலில் பிசைந்த சோற்றை ஒதுக்கி வைத்து விட்டு, கொஞ்சம் சோற்றில் புளிக்கறி விட்டுப் பிசைந்து ஒரு கவளம் வாயில் வைத்தான்.
”இவன், அவன் தம்பி அங்கதன்”. உப்பும் இல்லே, உறப்பும் இல்லே, புளிப்பும் இல்லே… அரிசி களஞ்ச கழனியை விட்டுப் பெசஞ்ச மாரி இருக்கு…. என்ன எளவு பொங்கிக் கறி வைக்கப் படிச்சுக்கிட்டு வந்தே?”.
குரலில் காட்டம் கூட்டி, விரலில் வேகம் காட்டித் தட்டத்தைத் தள்ளினான்.
”வேற ஒரு தட்டம் எடு மூளி “எனச் சீறினான். எலிபோல் விறைந்து, இன்னொரு தட்டம் எடுத்து முன்னால் வைத்தாள். அதில் இரண்டு அகப்பைச் சோறு போட்டு, கஞ்சி வடித்த தண்ணீர் ஊற்றி, உப்புப் பரல் போட்டுப் பரசி,நாரத்தங்காய் ஊறுகாய் கூட்டி, குடித்து விட்டு எழுந்தான்.
ஒதுக்கிய தட்டத்தை இழுத்து வைத்து சாப்பிடத் தொடங்கிய பாக்கியத்தின் கண்கள் தேவைக்கு அதிகமாகத் தட்டில் உப்புச் சொரிந்தவாறிருந்தன.
நாகராஜன் – பாக்கியம் தம்பதியினருக்கு, திருமணமாகி, இது வெள்ளி விழா ஆண்டு, ஒற்றைக்கு ஒரு மகன், சாஃப்ட்வேர் என்ஜினியர், டெக்சாசில் இருக்கிறான். ஃபவுண்டரி மேனேஜராகப் பணிபுரிந்த நாகராஜன் தனது கைனடிக் ஹோண்டாவில் லஞ்சுக்கு வீட்டுக்கு வந்தார். கல்யாண நாள் ஆனதால் பருப்பு, அவியல், இஞ்சிப் பச்சடி வைத்து கடலைப் பருப்பு பிரதமனும் செய்திருந்தாள் பாக்கியம்.
சுடுசோற்றில் தண்ணீர் விட்டு உப்புத்தூள் தூவி, நார்த்தங்காய் ஊறுகாய் கூட்டி, கஞ்சியாகக் குடித்து எழுந்துபோனார் நாகராஜன். அவர் எழுத்து போனபின், அதே தட்டத்தில் சோறு போட்டு, அவியல் வைத்து, பச்சடி வைத்து, பருப்பு ஊற்றிப் பிசைந்து உண்ணத் தொடங்கினாள். பாக்கியம் சோற்றில் சில துளிக் கண்ணீர் சொட்டிற்று. கண்கள் என்பன எப்போதும் ஊறும் உப்புக் கிணறு போலும்.
நன்றி: https://nanjilnadan.com/2010/08/14/உப்புக்-கிணறு/