உன் பங்கு…என் பங்கு…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 21,376 
 
 

“எனக்கு அப்பவே தெரியும். நான் எத்தனை படிச்சு, படிச்சு சொன்னேன். கேட்டியா? ரொம்ப மேதாவியா உன்னை நினைச்சு செஞ்சே, இப்ப என்ன ஆச்சு? அத்தனையும் போச்சு” – அப்பா.

“பணம், பணமுன்னு பறந்தியே, இருக்கிற வேலை போதாதா? ஏன் அகலக்கால் வைக்கணும்” – அம்மா.

“சொல்றவனெல்லாம் முட்டாள்னு நினைப்பு. சொல்லச் சொல்லக் கேட்காம அதிகப் பிரசங்கித் தனமா நடந்தே, இப்ப அனுபவி. உன்னால எங்களுக்குக் கெட்ட பெயர் – அண்ணா.

அத்தனை பேருடைய சொல்லம்புகளையும் தலை குனிந்தவாறே தாங்கிக் கொண்டான் ரகுவரன்.

பிஸினஸ்னா அப்படித்தான்! மேலே துhக்கிவிட்டாலும் விடும். இல்லே ஒரேயடியாக் கீழே இறக்கி விடும். இந்தச் சின்ன விஷயம் கூடவா தெரியாது.

அட, தோல்வியுற்றவனுக்கு ஆறுதலா இரண்டு வார்த்தை சொல்ல வேண்டாம். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாமலாவது இருக்கலாம்? ஆனால் இந்த உலகமே கீழே விழுந்தவனை எழுந்திருக்க விடாம மிதிக்கிறது தான் பழக்கம். அந்தப் பழக்கத்திற்கு இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

இவர்கள் எல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டவள் சியாமளி தான்! ஏன்னா, அவள் அப்பா போட்ட நாற்பது பவுனும் அம்பேல்!

அவள் ஆரம்பத்திலேயே எதிர்த்தாள். “இருக்கிற சம்பளம் போதும். சிறுகக் கட்டிப் பெருக வாழணும்! சைடு பிஸினஸும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். சொல்றதைக் கேளுங்க!”

இதையெல்லாம் மீறித்தான் செயல்பட்டான். இப்போ? அத்தனை பணத்தையும் சுருட்டிக் கொண்டு நண்பர்கள் ஓடி விட்டார்கள்.
இவர்களுடைய சொல்லம்புகளே இப்படி யென்றால் மனைவியினுடையது எப்படி இருக்குமோ என்று அவன் தெரிந்து கொள்ள விழைந்தான்.

மெல்லத் திரும்பிப் பார்த்தான்.

அடுப்படி கதவோரம் சியாமளி சலனமின்றி நின்று கொண்டிருந்தாள்.

“உன் பங்கை ஆரம்பி!” என்பது போல் அவளிடம் சென்றான்.

“சாப்பிட வாங்க”, அமைதியாகக் கூறினாள்.

இந்த அமைதி அடுத்து ஏற்படப்போகும் புயலுக்கு அறிகுறியோ? உரலுக்குள் தலையை விட்டாகிவிட்டது உலக்கைக்குப் பயந்து ஆகுமா?

“சியாமளி, ஏன் அமைதியா இருந்து என்னைக் கொல்றே? உன் பங்கையும் ஆரம்பி” கண்கள் கலங்கக் கூறினான்.

“இதோ பாருங்க, ஒண்ணை செய்யறதுக்கு முன்னே நல்லா யோசிக்கணும். முடிஞ்சப்புறம் அதைப்பேசி, நினைத்துக் கவலைப்படறதிலே என்ன லாபம்? மேற்கொண்டு ஆக வேண்டியதை கவனிப்போம் போனதைப்பத்தியே இனிமேலும் நினைக்காதீங்க, பேசாதீங்க! எழுந்து வாங்க சாப்பிட!” அமைதியாகக் கூறினாள்.

சோறுபோட மட்டுமல்ல, சோர்ந்த நேரத்திலும் கைகொடுப்பது ஒரு மனைவியின் கடமை என்பதை உணர்த்திய சியாமளியின் அன்பில் நெகிழ்ந்து போனான் ரகுவரன். அந்த அன்பில் போனதையெல்லாம் இனி மீட்டுவிடலாம் என்ற தெம்பு பிறந்தது.

– 06-08-1986

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *