அன்பை அனுபவித்திருக்கிறீர்களா நீங்கள்? அதுவும் உன்னதமான, தூய்மையான அன்பை? இப்பப் போய் நாகராஜன் என் நினைவுக்கு வந்தான். எல்.கே.ஜி இலிருந்து நான்காம் வகுப்பு வரை நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தோம். “கோகிலா! கோகிலா! என்று அவன் அழைப்பதே அருமையாக, அன்பாக இருக்கும். என்ன பேசுவது? எதைப்பற்றி பேசுவது? ஒன்றும் தெரியாமல் பேசிக்கொண்டே இருப்போம். அவனை டீச்சர் அடித்தால் எனக்கு ஏன் அழுகாச்சியா வருது? நாகா, படிப்பில் சுட்டி என்றாலும் குறும்புகள் செய்து அகப்பட்டுக் கொள்வான். எனக்குப் பிடிக்கும் என்பதற்காக, அவன் வீட்டில் விளைந்த கொய்யாப்பழங்கள் அனைத்தையுமே, எங்கள் வீட்டிற்கே கொணர்ந்துவிடுவான். அடுத்து வந்த ஆண்டில் அவன் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி, அவன் குடும்பத்தோடு வெளியூர்சென்றுவிட எனக்குள் வெறுமை சூழ்ந்தது, அதன் பிறகு எங்கள் வீட்டில் நான் எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தேன். “நாகு ஊருக்குப் போனதிலிருந்து இவள் இப்படித்தான்” என்று என் பாட்டி அலுத்துக்கொண்ட போதுதான் எனக்கு அவன் மேல் இருந்த என் அன்பின் ஆழத்தை உணர முடிந்தது. ஆனால், இப்பப் போய் ஏன் நாகுவின் ஞாபகம் வரவேண்டும்?அன்பு, பாசம், காதல், கரிசனம், இரக்கம் ஆகிய எல்லா உணர்வுகளும் ஒரே மாதிரியான, மனதின் வெளிப்பாடுதான். மற்ற உணர்வுகள், பேராசை, கோபம் போன்றவை மனதின் மறு பக்கம்.
இப்போ ஏன் எனக்கு நாகுவின் ஞாபகம் வரவேண்டும்? அதுவும் எழுபது வயதில்?இந்த நிலையில்?என் அருகே என் அன்புக் கணவரின் உயிரற்ற உடல் கிடத்திவைக்கப்பட்டிருக்க , சுற்றம் என்னைச் சூழ்ந்துகொண்டு, என் துக்கத்தில் பங்கேற்று அழுது புலம்பிக் கொண்டிருக்க?! குழந்தைப் பருவத்து அன்பு என் கண்கள் வழியே கண்ணீரில் கரைந்து வெளியேறியது. இந்த எண்ணக் குமிழிகள் எங்கிருந்து கிளம்புகின்றன? மனதிலிருந்து என்றால், அது நிரம்பியபின் இப்படி கண்ணீராகவும் வழியக்கூடியதா? மனதிற்குள் என்னத்தைதான் போட்டு நிரப்பி வைத்திருக்கிறேன்?
சம்பந்தா சம்பந்தமில்லாமல், என் கல்லூரித் தோழன் ஜெயராமன் என் நினைவுக்குள் நுழைந்தான். ஓரக்கண்ணால் அவனை அடிக்கடி பார்த்து பரவசமான நாட்களை எண்ணிப் பார்கிறேன். ஏதேதோ சாக்குப் போக்கு காரணங்களுடன், அவனுடன் பேச சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு அவனிடத்தே செல்வேன். ஆனால், வெட்கத்தினால் பேச நா எழாமல் பேச்சின்றி திரும்பிவிடுவேன். ஒரு நாள், அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டபோது உடைந்துதான் போனேன். அந்த நினைவில் இப்பொழுது கூட என் கண்ணீரின் திவலைகள், என் ஆருயிர் கணவர் மீது சிந்திச்சிதறுகின்றனவே.
அதன் பிறகு, கல்யணத்தில் விருப்பம் ஏதும் இல்லாமல் மேலே படிக்க ஆரம்பித்தேன். படிப்பது ஒன்றே என் குறிக்கோள் என்பது போல பாடங்களில் ஒன்றி பி.ஜி முடித்தேன்.அனேக மெடல்கள், விருதுகளுடன் கல்லூரிப் படிப்பு முடிவுற்றது. பிடித்தமான வேலை ஒன்றும் கிடைக்கப்பெற்றேன். காலம் வேகமாக ஓடியது. எத்தனை நாட்கள்தான் அம்மா, அப்பாவின் பேச்சை தட்டிக் கழிக்க முடியும்? அவர்கள் பார்த்த வரனை எனக்கும் பிடித்துவிட்டது. நிச்சய தாம்பூலமும் ஆயிற்று என்னைப் பார்க்கவென்று என் அலுவலகத்திற்கே அடிக்கடி வர ஆரம்பித்தார் அவர். எங்கள் இருவரின் அன்பும் தழைத்தது. மலர்ந்து மணம் வீச ஆரம்பித்தது. புயலும் வீசியது. அதில் மலர்கள் தாங்குமா என்ன? அவருடைய தங்கை திவ்யா; விபத்தொன்றில் உயிரிழக்க நேரிட்டது. எங்கள் திருமணம் தள்ளிப் போடப்பட்டு, பின்பு நிறுத்தப்பட்டது. திவ்யாவின் சாவுக்கு சென்ற நான், அழமாட்டமல்( எந்த உரிமையில்? )மௌனமாகத் திரும்பினேன். அப்போது அடக்கி வைத்திருந்த சோகம், திவ்யாவின் சாவிற்கும், எங்கள் திருமணம் நின்றதற்கும் சேர்த்து இந்த நிமிடத்தில் மனது அடம் பிடிக்க நான் வாய் விட்டு அழுகிறேன்.
இங்கே சவமாக கிடத்தி வைத்திருக்கும் உடலுக்கு சொந்தக்காரரை நான் நாற்பது வருடங்களுக்கு முன் மணம் செய்து கொண்டேன். என்னுள் ஊற்றேடுத்த அன்பு ப்ரவாகத்தை இவரிடம் கொட்டித் தீர்த்தேன். எங்கள் இல்வாழ்க்கை அன்பும் பண்பும் நிறைந்த நிறைவான அறவாழ்கை ஆகும். நான்கு மணி மணியான குழந்தைகளைப் பெற்றோம். சீண்டலும் சிணுங்கலுமாக ஆரம்பித்த வாழ்க்கை இன்று கண்ணீரும் கம்பலையுமாக முடிவுக்கு வந்துவிட்டிருகிறது. என் இதயத்திற்குத்தான் எத்தனை அடிகள்.?.வலிக்கிறதே .
அப்பா! அப்பா! என்று அரற்றிக் கொண்டிருந்த என் பிள்ளைகள் ஐயோ! அம்மா! அம்மா! என்றும் கதறிக்கொண்டிருந்த சப்தம் எங்கோ தூரத்தில் கேட்டது. புறப்பட்டுவிட்டேன் என் ஆருயிர் கணவனே! உன்னோடுதான் நான் இனி.