உன்னை நீ நம்பு

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 17,295 
 
 

கொஞ்ச நாட்களாகவே எதைத் தொட்டாலும் பிசகிக்கொண்டு இருந்தது. அதிர்ஷ்ட தேவதை அறிவிப்பின்றி அகன்றது போல் அடுத்தடுத்து ஆயிரம் சறுக்கல்கள் அணிவகுத்தன. ஒரு மந்திரம் போல் கையில் புரண்ட காசு, திடீரென்று காணாமல் போனது. செலவு மூச்சுத் திணறியது. காரியங்கள் கை மீறின. கடனுக்கு வாய்தா சொல்லி பொய்கள் தீர்ந்து போயின. என் கம்பீரம் தொலைந்தது. அகத்தின் அழகு முகத்தில் அசடு தட்டியது. சிரிப்பு குறைந்தது. எதற்கெடுத்தாலும் நான் சிடுசிடுப்பதாக என் மனைவி புடவை ஓரத்தை நனைத்தாள். நான் எதுவும் செய்ய இயலாதவனாக ஓர் எரிநட்சத்திரத்தைப் போல எரிந்துகொண்டே விழுந்துகொண்டு இருந்தேன்.

அடுத்த மாதம் சீட்டு எடுத்துவிட்டால், கப்பல் மூழ்கிவிடாமல் காப்பாற்றிவிடலாம் என்று நானும் லலிதாவும் பரஸ்பரம் தைரியம் சொல்லிக்கொண்டோம். வியாபாரத்தில் என் துரதிருஷ்டம் லலிதாவை நூல் புடவையில் வைத்திருந்தது. காதில் இருந்த கம்மலை வைத்து அவள் போன மாதம் சீட்டு கட்டினாள். துவாரம் தூர்ந்துவிடாமல் காதில் ஈர்க்குச்சி செருகியிருந்தாள். பித்தளைச் சங்கிலியில் அவள் கழுத்தே கருத்துவிட்டது. ஆயினும் லலிதா என் மேல் அன்பு மாறாதவள். அவள் அருகில் இருந்தால் போதும். உலகை இன்னொரு தரம் ஜெயித்துவிடலாம்.

அன்று இரவு லலிதாவும் நானும் விரல்கோத்து அணைத்தாற் போல் நம்பிக்கையுடன் தூங்கினோம். அதிர்ச்சி எங்கள் கதவை அடுத்த நாள் தட்டியது. காலையில் பால் வரவில்லை. கொஞ்சம் போல் மழை பெய்ததால், தாமதமாக வரும் என்று கடுங் காபி குடித்தோம். நியூஸ் பேப்பர் பிராயணம் முடிந்தது. வாஷ்பேசின் முன் முகத்தில் முளைத்த கவலை ரேகைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். லலிதா பரபரப்பாக வந்தாள். தெருவில் யார் வீட்டுக்கும் பால் வரவில்லை. சீட்டு பிடிக்கிற பால்காரர் சங்கரபாண்டியின் குடும்பம் காணாமல் போய்விட்டது. முதல் நாள் இரவு வாசலில் டெம்போ ஒன்று நெடுநேரம் நின்றிருந்தது. மாட்டுக்கு சீக்கு வந்து மருத்துவரிடம் கொண்டுபோவதாகச் சொன்னார்கள். யாருக்கும் சந்தேகம் வரவில்லை. காலையில் வீடு பூட்டியிருந்தது. கொல்லைப்புறத்தில் மாடுகள் அவிழ்ந்து நிராதரவாகச் சுத்திக்கொண்டு இருந்தன.

சீட்டு கட்டியவர்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தோம். ஒவ்வொரு மாதமும் குறித்த தேதிக்குள் கட்டுவதற்கு என்ன பாடுபட்டு இருப்போம்? சங்கரபாண்டி பணத்தை வாங்கும்போது எப்படி வெண்ணெயாய் பேசுவான்? அவன் வீட்டுப் பெண்களின் தடித்த தொங்கட்டான்களை நம்பித்தான் இத்தனை பேர் சீட்டு சேர்ந்தது. கடைசியில் இப்படி கழுநீர்ப் பானையில் கைவிடுவான் என யாருக்குத் தெரியும்?

கூடி கூடிப் பேசியதில் கும்பலின் ஆத்திரம் கூடியது. ஜன்னலை உடைத்துப் பார்த்தபோது உள்ளே தெளிவாக எதுவும் தெரியவில்லை. யாரோ கதவை உடைத்தார்கள். திபுதிபுவென்று சங்கரபாண்டியின் வீட்டுக்குள் ஆவேசமாகப் பிரவேசித்தோம். அவசரத்தில் காலி செய்ததால் வீட்டில் அநேகம் பொருள்களை அப்படியே விட்டிருந்தார்கள். பீரோவில், பணமோ நகைகளோ இல்லை. மற்றபடி வீட்டு உபகரணங்கள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. அவரவரும் கையில் கிடைத்த பொருளை எடுத்துக்கொண்டு வீட்டைச் சூறையாடினோம். என் பங்குக்கு ஒரு கிரைண்டர்தான் கிடைத்தது. குறுக்கு வழியில் அதைத் தூக்கிக்கொண்டு யாரும் பார்க்காமல் வீட்டுக்கு ஒரு வெறியோடு மூச்சிரைக்க ஓடி வந்தேன். லலிதா கிரைண்டரை வீட்டுக்குள் சேர்க்கவில்லை.

மறுநாள் காலை போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்டவர்கள் கும்பலாகப் போய் புகார் கொடுத்தோம். சீட்டுப் பணம் போனதற்கு லலிதா வாய்விட்டு விகாரமாக அழுததை சன் நியூஸில் இரண்டு நாட்கள் காட்டினார்கள். கதையில் முக்கியத் திருப்பமாக சங்கரபாண்டியின் குடும்பம் அடுத்த வாரம் வீடு திரும்பியது. மதுரையில் ஒரு திருமணத்துக்குத் தாங்கள் போயிருந்ததாகவும், வீடு திரும்புவதற்கு முன் தங்களிடம் சீட்டு கட்டியவர்கள் தங்கள் வீட்டைச் சூறையாடி லட்சக்கணக்கான பணம், நகைகள், பொருள்களைத் தூக்கிச் சென்றுவிட்டதாகவும் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுத்தார்கள். சங்கரபாண்டி போலீஸ் துணையுடன் எங்கள் வீட்டிலிருந்த கிரைண்டரை எடுத்துப் போனான். சூறையாடிவர்கள் பட்டியலில் என் பெயரும் சேர்ந்தது. விஷயம் அடுத்து எப்படி வெடிக்கும் என்று புரியாமல் நானும் லலிதாவும் கதிகலங்கி நின்றோம்.

லலிதாவின் தோழி பத்மாவதி சொன்னாள் என்று சோழிங்கநல்லூர் சாமியாரைப் பார்க்க முடிவு செய்தோம். அவர் விஷயங்களைப் புட்டுப் புட்டு வைப்பதுடன் எளிதான பரிகாரங்களையும் சொல்லுவார். தவிரவும் அவரைப் பார்ப்பதற்கு கையில் இரண்டு எலுமிச்சம் பழங்களும், 11 ரூபாயும் இருந்தால் போதும் என்பதால் அன்றைக்கே உற்சாகமாக பழைய பேப்பர் போட்டு பணத்தைத் தேற்றிக்கொண்டு லலிதாவும் நானும் சோழிங்கநல்லூர் புறப்பட்டோம்.

சாமியார் வீட்டின் முன் பெரியதாகக் குடிசை போட்டுப் பாய் விரித்திருந்தார்கள். சாமியார் சப்பணமிட்டு தியான நிலையில் கண் மூடியிருந்தார். அவர் அருகே நாக்கு வெளியே தள்ளிய காளியின் படம். அதன் கீழே அம்பாரமாகக் குங்குமம் குவிந்திருந்தது. நடுவே பளபளக்கிற பித்தளை சூலம். அதன் உச்சியில் எலுமிச்சம்பழம் ஒன்று செருகியிருந்தது. காற்றில் சாம்பிராணி புகை தவழ்ந்தது. சாமியார் கண் மூடிப் பரவச நிலையில் இருந்தார். குறி கேட்க வந்தவர்கள் சுற்றிலும் எத்தனை பேர் இருந்தாலும் தன் பிரச்னையை வாய்விட்டுச் சத்தமாகச் சொல்ல வேண்டும்.

”சாமியார் இப்போ கடவுள் மாதிரி. அதுக்கு ஒளிவு மறைவு கிடையாது. கூச்ச நாச்சமும் தெரியாது. பொட்டிலே அடிச்ச மாதிரி கேள்வி கேட்கும். அதுகிட்டே பொய் சொல்ல முடியாது. எதிர்லே ஆள் வந்து உட்கார்ந்ததுமே அவன் யாருன்னு அதுக்குத் தெரிஞ்சுடும். வந்தவனுக்கு என்ன பிரச்னை. அதுக்கு என்ன தீர்வுன்னு டக்குனு பிடிபட்டுவிடும். அது உன்னைப் பார்க்காது. தியானத்துல இருக்கு. உன் வார்த்தைதான் அதுக்குக் கேட்கும். காதுல விழற வார்த்தைக்கு அது வாய்லே சொல்ற வார்த்தைதான் பதில். தலையை ஆட்டிட்டு தட்சணையை வெச்சுட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்” என அக்கம் பக்கத்தில் சாமியார் பற்றி நிறையப் பேசினார்கள்.

எங்கள் டோக்கன் எண் 132. வரிசையில் வருபவர்கள் தவிர, சாமியார் திடீரென்று அறிவிப்பு செய்வார். ”சேலத்துலேர்ந்து சொந்தத் தம்பிக்கு விஷம் வைக்கலாமான்னு ஒரு அண்ணன்காரன் யோசிச்சிட்டிருக்கான். அவனை வரச் சொல்லு.” சேலத்துக்காரர் அசந்துபோய் எதிரே வந்து அசடு தட்டி உட்காருவார். சாமியார் உரத்த குரலில் மானத்தை வாங்குவார். ”எலே, நீ அவன் பொண்டாட்டியை மயக்கி உன் தம்பிக்குத் துரோகம் செஞ்சே. அவன் பதிலுக்கு உன்னைக் குடிக்கவெச்சு உன் சொத்தை எழுதி வாங்கிட்டான். தானிக்குத் தீனி சரியாப் போச்சு. அதான் கலியுக தர்மம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இனி அழுது பிரயோஜனம் இல்லே. எங்கிட்டே நீ வந்ததே தப்பு. ஓடிப்போயிடு.” சேலத்துக்காரர் அவசரமாக எழுந்துகொண்டார். அவர் எத்தனை அசந்தாலும், தட்சணை 11 ரூபாய்தான். அதற்கு மேல் சாமியார் வாங்குவதில்லை.

டோக்கன் வரிசையில் அடுத்தபடியாக ஒரு நடுத்தர வயதுக்காரர் சாமியார் முன் வந்து உட்கார்ந்தார். ”ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டேன் சாமி. எதும் முடியலே. உப்பு விக்கப் போனா மழை பெய்யுது. மாவு விக்கப் போனா காத்தடிக்குது. எல்லாம் நஷ்டம் சாமி.”

சாமியார் தியானத்தில் திட்டுவார். ”சோம்பேறி. அப்புறம் ஏன் உப்பையும் மாவையும் விக்கிறே? பேசாமே உப்புமாக் கடை வைய்யி. பங்காளி காசு குடுப்பான். கேட்டுப் பாரு. கஷ்டத்தைப் பாத்து மலைக்கிறவன் மனுஷன் இல்லே. அவன் கோழை. வாழ்க்கையை ஒருத்தன் எதுத்து நின்னு உழைச்சுப் போராடி ஜெயிக்கணும். உழைச்சா கூலி உண்டு. உழைக்காம மழை பெய்யுது, காத்தடிக்குதுன்னு வீட்டுக்குள்ளே பம்மிக்கிட்டு குந்திக்கிட்டிருந்தா பொழைப்பு எப்படி ஓடும்? போ. பஸ் ஸ்டாண்ட்ல ரெண்டு ரூபாய்க்கு கடலை வாங்கித் தின்னுக்கிட்டே யோசி.”

சாமியார் தியானத்தில் முறுவலித்தார். ”இந்த மனுஷப் பயலுவ செய்யிறதை நினைச்சாலே சிரிப்பு வருது. சரியான கோட்டிப் பயலுவ. அடுத்து யாரு? சீட்டுப் பணம் கட்டிச் சிக்கல்லே இருக்காரு ஒருத்தரு. அவரை வரச் சொல்லு.”

நானும் லலிதாவும் சாமியாரை நமஸ்கரித்து உட்கார்ந்தோம். ”வாய்யா, கிரைண்டரு. உனக்கு உன் சம்சாரம்தான் ஆதரவு. இவளை விட்டுடாதே. இவதான் உனக்கு அச்சாணி. ரெண்டு மாடும் இணையா இருந்தா, எதையும் ஜெயிச்சுரலாம். மழை அடிக்கிறப்போ உப்பும், காத்தடிக்கிறப்போ மாவும் வித்துட்டுப் போனானே ஒருத்தன்… அவனுக்குச் சொன்னதுதான் உனக்கும். தப்பு எங்கேன்னு யோசி. எல்லாம் சரியாயிடும். இப்ப இல்லேன்னா, அப்புறம். இந்தத் தடவை இல்லேன்னா, அடுத்த தடவை. ஓடிட்டே இருந்தாத்தான் நிக்க முடியும். புரியுதா? உழைப்புதான் ஜெயிக்கும்.”

”எத்தனை உழைச்சும் பயன் இல்லியே சாமி?”

”கஷ்டம்தான். யாருக்கு உழைச்சே? உனக்காகத்தானே உழைச்சே. பிறகு ஏன் அலுத்துக்கிறே? தொடர்ந்து முயற்சி செய். தெய்வ பலம் சேர்த்துக்க. உன் குலதெய்வம் எது?”

”பழனி முருகன்.”

”அது இஷ்ட தெய்வம். வரும், போகும். உன் குலதெய்வம் எது?”

”ஆங்கூர் வரலக்ஷ்மி.”

”பலே. துடியான தெய்வமாச்சே. அந்தம்மாவைக் கடைசியா எப்பப் போயிப் பாத்தே?”

”பாத்ததேயில்லே. ஊர்ல சொத்தும் இல்லே. சொந்தம்னு யாருமே இல்ல. நான் போனதில்லே.” ”அங்கேதான் தப்பு. உன் அப்பன், பாட்டன், முப்பாட்டன்னு காலங்காலமா உன் குலத்தைக் காப்பாத்திட்டிருந்த ஒரு சக்தி உன்னைக் காப்பாத்தாமச் சும்மா கெடக்கு. இவ யாரு? உன் குலம், கோத்திரம் தெரிஞ்சவ. உன் குடும்ப டாக்டர். அவளை நீ பார்க்காமே அலட்சியம் செஞ்சுட்டே. என்ன ஆச்சு? தொட்டாப் பிசகுது. கல்லா காத்து வாங்குது. அம்பாள் பார்வை உன் மேலே இல்ல. இன்ஷூரன்ஸ் இல்லாமே நிக்கிற. அவ இருந்தா அது புல்லட் புரூஃப். ஊர்ல என்ன இருக்குன்னு கேக்கறியே. அது ஊர்ல உன்னையே நெனைச்சுக்கிட்டு என்னடா, மேட்டுத் தெருவிலேர்ந்து இன்னார் மகன் இன்னார் பேரன் இன்னும் நம்மளை வந்து பாக்கலியே. நேர்ல வந்து ஆஜர் ஆவாம அவனுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியல்லியேன்னு ஏங்கிக்கிட்டிருக்கு. அப்பிடி விடலாமா? அதனால அவளைப் போய்ப் பார். உன் சீட்டுப் பணம் போனது போனதுதான். புத்திக் கொள்முதல். இனி யாரையும் நம்பாதே. உன்னை நம்பு. குலதெய்வத்தைக் கூட வெச்சுக்க. அடுத்து ஒரு முயற்சி செய். அதுலேர்ந்து படிப்படியா நல்லாயிடுவே. கிளம்பு.”

சாமியார் சொல்லிவிட்டார். ஆனால், ஊருக்குப் போய் குலதெய்வத்தைப் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதாக இல்லை. நாங்கள் மொத்தம் நான்கு பேர். நான், லலிதா மற்றும் வகைக்கு ஒன்றாக இரண்டு குழந்தைகள். தவிரவும் லலிதாவின் அம்மாவும் எங்களுடன்தான் இருந்தாள். பெண்களிடம் முக்கியமான பிரச்னைகளில் விட்டுக்கொடுத்துவிட்டால், அவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள். கையில் காசின்றி குலதெய்வத் தரிசனம் தள்ளிக்கொண்டே போனது. லலிதாவின் கனவில் ஆங்கூர் வரலக்ஷ்மி வந்தாள். அதற்கு அடுத்த நாள் அடகுக் கடை நோட்டீஸ் வந்தது. சேட்டிடம் நேரே போய்ப் பேசி நகைகளைத் தீர்த்ததில் கையில் கொஞ்சம் பணம் வந்தது.

அதிகாலையில் பஸ் பயணத்தை அனைவரும் ரசித்தோம். காற்றில் லலிதாவின் கூந்தல் காலை வெயிலில் பொன்நிறமாகத் தகதகத்தது. ஜன்னலில் குழந்தைகள் ராஜேஷூம் ரம்யாவும் உலகத்தின் பிரமாண்டத்தை வியந்துகொண்டு இருந்தார்கள். பஸ் கூடவே ஓடி வந்த சூரியனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். தெருவோடு போன யானையைத் தலை வலிக்கும் வரை திரும்பிப் பார்த்தார்கள். விழுப்புரத்தில் லலிதாவின் அம்மா ஆசாரம் மறந்து பரோட்டா சாப்பிட்டாள். மதியம் கொஞ்சம் நேரம் உறக்கத்தில் கழிந்தது. வழியில் கோயில் பார்க்கலாம் என இறங்கி பஸ் மாறினோம். அது நடுவே பிரேக் டவுன் ஆகி மாற்று பஸ் வருவதற்கு ஆறு மணி நேரம் தமாதமாகிவிட்டது. இரவின் பெரும்பகுதி புலம் பெயர்ந்த அகதி கள் போல் நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்தோம்.

லோக்கல் பஸ் பிடித்து நாங்கள் ஆங்கூரில் இறங்கியபோது விடிந்துவிட்டது. மெயின் ரோட்டில் அடகுக் கடைகளும், நெடுக வேளாண்மைத் துறை விளம்பரப் பலகைகளும் தவிர, ஊரில் உருப்படியாக வேறு எதுவும் இல்லை. இருந்த ஒரே டீக்கடையில் கிராமவாசிகள் மம்பட்டியான் போர்வை போர்த்தி சோம்பலாய் உட்கார்ந்திருந்தார்கள். டேப்பில் எல்.ஆர்.ஈஸ்வரியின் அம்மன் பாட்டு.

”வரலக்ஷ்மி கோயில் எங்கே இருக்கு?”

”ஆங்கூர் வரலக்ஷ்மியா? ரெண்டு கிலோ மீட்டர் உள்ளே போகணும்.”

ஒற்றையடிச் செம்மண் பாதையில் வழி கேட்டோம். உள்ளூர்க்காரர் இறங்கி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பேச்சு வளர்த்தார்.

”ஐயருக்குத் தகவல் சொன்னீங்களா?”

”எந்த ஐயரு?”

”கோயில் ஐயரு. அவரு இங்கே இல்லியே. ஆனைக்காவுல வீடு. முன்னாடியே சொன்னாதான் வருவாரு.”

”அப்ப தினப்படி பூஜையெல்லாம் எப்படி?”

”தினப்படி பூஜையா? அதெல்லாம் நின்னு போயி எத்தனையோ வருஷமாச்சு. யார் வர்றாங்க கோயிலுக்கு? பொழைப்பு தேடிப் பல திசைல ஆளுங்க போனதுல ஊர் சூன்யமாயிடுச்சு. இப்ப ஆளை விட ஊர்ல கோயிலுங்க அதிகம். அதனால, கோயிலு வெளவால் அடைஞ்சு போச்சு. எப்பவாச்சும் குலதெய்வத்தைப் பாக்கணும்னு உங்களாட்டம் யாராவது வருவாங்க. முன்னாடியே தகவல் சொன்னா ஐயர் வருவாரு. அபிஷேகம், அலங்காரம் எதுவானாலும் சரி. ஐயரு ஆனைக்காவுல வாங்கிட்டு வந்தா உண்டு. ஆங்கூர்ல கற்பூரம்கூடக் கெடைக்காது.”

”ஐயரைப் பார்க்க முடியாதா?”

”செல்போன் நம்பர் இருக்கு. தர்றேன். ஆனா, ஐயரு ஆறு கோயில் டியூட்டி பாக்கறாரு. அதைத் தவிர, கேட்டரிங், ரியல் எஸ்டேட், எல்.ஐ.சி-ன்னு நெறைய ஜோலி. கால்ல சக்கரம். உங்க நேரம், அதிர்ஷ்டம் கிடைக்கிறாரான்னு பார்க்கலாம்.”

செல்போனில் கோயில் ஐயர் பவ்யமாகப் பேசினார். உடனடியாக ஆங்கூருக்கு வருவதில் அவருக்கு எதுவும் சிக்கல் இல்லை. ”நீங்கள் இவ்வளவு தூரம் பயணப்பட்டு குலதெய்வத்தைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். அர்ச்சனையா? அபிஷேகமா? அன்னதானமா? பட்ஜெட்டைச் சொல்லிவிட்டால் அதற்குள் தடபுடல் பண்ணி விடலாம். வசதி இல்லேன்னாலும் பரவாயில்லை. உங்க ளுக்காக வருகிறேன். கையில் டூ வீலர் இருக்கிறது. எல்லாம் பெரியவர்கள் ஆசீர்வாதம்.”

ஆற்றங்கரையில் வரலக்ஷ்மி கோயில் பாழடைந்திருந்தது. காட்டுக் கொடி மேலே படர்ந்து வாசல் கதவு மூடிவிட்டது. கோபுரத்தில் விரிசல் விழுந்து செடிகள் முளைத்திருந்தன. ஒற்றைப் புறா சடசடத்து அமர்ந்தது. குட்டைச் சுவர் தாண்டி ஆடுகள் கோயிலுக்குள் மேய்ந்துகொண்டு இருந்தன. வரலக்ஷ்மியின் மூக்குத்தி வெளிச்சத்தில் ஆங்கூரில் திருட்டு பயமே கிடையாது என சிறு வயதில் என் பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. லலிதாவும் அவள் அம்மாவும் அருகே ஒரு வீட்டில் சிநேகிதம் கொண்டாடி திண்ணையில் உட் கார்ந்துகொண்டார்கள். குழந்தைகள் ரம்யாவும் ராஜேஷூம் தூண்களைச் சுற்றி விளையாடிக்கொண்டு இருந்தன. ஐயர் வருவதற்குள் காட்டுச் செடிகளை வெட்டிச் சுத்தம் செய்தேன். என் குலதெய்வத்திடம் எனக்கு ஆக வேண்டிய காரியங்கள் நிறைய இருந்தன. கோயில் பூட்டு துருப்பிடித்திருந்தது. ஐயர் வந்து திறந்துவைத்தால் உள்ளே அம்மன் கதி என்னவென்று பார்த்துவிடலாம்.

ரமேஷ் ஐயர் பைக்கில் வந்து இறங்கினார். சட்டைஅணிந்து குடுமி வைத்த 28 வயதுப் பையன். தோளுக்குக் குறுக்கே கிரெடிட் கார்ட் ஆசாமிகள் போல் பை ஒன்றை மாட்டியிருந்தார். ”ஸாரி. லேட்டாயிடுத்து.ரிஜிஸ்ட்ரேஷன் ஒண்ணு இருந்தது. அதை முடிச்சுட்டு எல்.ஐ.சி. விஷயமா ஒருத்தரைப் பாக்கப் போனேன். அங்கே டைம் போனதே தெரியலே, வாங்கோ.”

கோயில் பூட்டு திறந்தது. உள்ளே மதுரை வீரன் குதிரை பாசி படர்ந்து நின்றது. ஐயர் ஸ்தல புராணம் சொன்னார். ஆங்கூர் வரலக்ஷ்மி, அதிரூப லாவண்யவதி. ஆற்றங்கரையில் தோழிகளுடன் அவள் குளிக்கும்போது காமுகன் ஒருவன் அவளைப் பார்த்துவிட்டான். அவளை அடைந்துவிடலாம் என அவன் நெருங்கியபோது, அவள் அபயக் குரல் கேட்டு ஊர்க் காவல் தெய்வம் மதுரைவீரன் அவளைக் காப்பாற்றக் குதிரையில் பாய்ந்து வந்தான். அதற்குள் வரலக்ஷ்மி காமுகனைக் கொன்று தன் காலடியில் போட்டிருந்தாள். அதைப் பார்த்து மதுரைவீரன் வாயடைத்துச் சிலையானான். வரலக்ஷ்மி, காலடியில் காமுகனை மிதித்தபடி தானும் சிலையானாள். அவள் தோழிகள் ஏழு பேரும் சப்த கன்னிகள் ஆனார் கள். விநாயகர், முருகன் சந்நிதிகள் பின்னாளில் வந்தவை.

ஐயர் தண்ணீர் கொண்டுவரப் போனார். லலிதாவும் அவள் அம்மாவும் எதிர் வீட்டில் துடைப்பம் வாங்கி தரையில் ஆட்டுப் புழுக்கைகளை அகற்றிச் சுத்தம் செய்தார்கள். கோயில் பூராவும் புதர் மண்டியிருந்தது. சந்நிதிகளை வலம் வருகிற பாதையில் சரளைக் கற்கள் காலைப் பதம் பார்த்தன. விநாயகர் தலையிலிருந்து ஓணான் ஒன்று குதித்து ஓடியது. குழந்தைகள் ராஜேஷூம் ரம்யாவும் எல்லாவற்றையும் ஒரு மர்ம சீரியல் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆங்கூர் வரலக்ஷ்மி ஒட்டடைக்கு நடுவிலே இருந்தாள். அவள் மூக்குத்தி காணாமல் போய் துவாரம் தூர்ந்துவிடாமல் லலிதாவைப் போலவே குச்சி ஒன்று வைத்திருந்தாள்.

இதுதான் எங்கள் குலதெய்வம். எந்தையும் தாயும் திருமணமாகி இங்கே வந்திருப்பார்கள். திருமண மாலை யில் உதிர்ந்த ரோஜா இதழ்கள் இங்கே தரையில் விழுந்து இருக்கும். என் அப்பா என் தாத்தாவுடன் இங்கே வந்து இருப்பார். இது என் பாட்டியின் கால் பட்ட இடம். என்னைக் காணாமல் ஆங்கூர் வரலக்ஷ்மி இத்தனை வருடங்களாக ஏங்கிக்கொண்டு இருந்தாள்.

பூஜை முடிந்து ஐயர் கற்பூரம் காட்டினார்.

நானும் லலிதாவும் கோயிலின் நிலையைப் பற்றி தனியே கொஞ்சம் நேரம் பேசினோம்.

கோயிலைச் சீரமைத்து கும்பாபிஷேகமே செய்துவைக்கலாம். எங்களுக்கு அவ்வளவு வசதி இல்லை. கோயில் பாதையைச் சரிசெய்து புதர்களை அகற்றி, குறைந்தபட்சம் கோயிலைச் சுத்தம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று ஐயர் சொன்னார். லலிதா யோசித்தாள். குழந்தை ரம்யாவைக் கூப்பிட்டு அவள் கொலுசு, வளையல், தோடு முதலியவற்றைக் கழட்டினாள். முதலில் அழுத குழந்தை அது அம்மனுக்கு என்று தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டது. மெயின் ரோடு வரை கூட வந்து அடகுக் கடையில் ஐயர் பணத்தை வாங்கிக்கொண்டார்.

எங்கள் குலதெய்வ நேர்த்திக்கடன் இவ்வாறு இனிதே முடிந்தது. பதிலுக்கு வரலக்ஷ்மி செய்கிறபோது செய்யட்டும்!

– 18-03-09

Print Friendly, PDF & Email

1 thought on “உன்னை நீ நம்பு

  1. ஆசிரியர் கடைசி வரியில் தன்னை மொத்தமாக இஷ்ட தேவதைக்கு ஒப்புவித்தது தான் முத்திரை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *