உன்னுள்ளே நான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 2,465 
 
 

அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.

இரண்டு.. மூன்று.நான்கு. நிமிடங்கள்… நிற்காமல் கரவொலி அந்த சங்கீத அரங்கத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது.

சிவப்புநிற வெல்வெட் திரை கீழே இறங்கி மீண்டும் மேலே ஏறியதும் மனு மேடை மீது தோன்றினான்.

மறுபடியும் அரங்கம் ஆரவாரத்துடன் அவனை எதிர்கொண்டது..

இதுபோன்ற ஒரு பியானோ இசையை வாழ்க்கையில் ஒருபோதும் கேட்டதேயில்லை என்பதற்கு அதுவே போதுமான சாட்சி.

இன்னும் இரண்டு நிமிடங்கள் ஆசையுடன் அவன் முகத்தை பார்க்கமாட்டோமா என்பதற்குள் அவன் குனிந்து அனைவரையும் மூன்று முறை வணங்கிவிட்டு திரைக்குப் பின்னால் மறைந்து விட்டான்..

“இவ்வளவு நாளா எங்க இருந்தான்?”

“இவனோட அம்மா..அப்பா.ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும்!’

“பதிமூணு வயசுதான் ஆச்சாம்…!!!”

“ஆரம்பத்தில அறிமுகம் செஞ்சு வச்சாரே. பழுப்பு நிற கோட்டு போட்டுக்கிட்டு. அதுதான் மனுவோட அப்பா பிரபு..!!!”

“பின்னாடி மஞ்சள் ஸாரி தான் அம்மா போல இருக்கு..!”

“Mozart ன் Turkish March . இன்னும் அந்த Band ஒலி காதிலேயே நிக்குது.”

“Beethoven ‘ Moon light Sonata..’ மட்டும் என்னவாம்.??? அப்பப்பா..மனு ஒரு அதிசய குழந்தைதான்”

யாருக்குமே மனுவைப் பற்றி இரண்டு அபிப்பிராயம் இருக்கவே முடியாது.

“மனு ஒரே பையன்தானாமே.அம்மா.. இரண்டு பேரும் டாக்டர்களாம்..மனு ஊட்டி கான்வென்ட்ல படிக்கிறானாம்”

“படிப்பிலேயும் படு சுட்டியாம்.. இருந்தா அப்படி இருக்கணும்..”

மனுவைப் பற்றி எல்லோருக்கும் எல்லாமே தெரிந்திருந்தது. ஆனால் அனேகம் பேருக்கு தெரியாத ரகசியம் ஒன்று.

பதிமூன்று வருஷங்களுக்கு முன்னால்.. கொச்சின் ஆஸ்பத்திரி ஒன்றில்…

“ஸார்.மீராவோட ஹஸ்பெண்ட்…???”

“நான் தான் பிரபு..”

“இந்தாங்க, பிடிங்க. ஆண் குழந்தை.”

பிரபுவுக்கு நம்பவே முடியவில்லை. தனக்கா..??தனக்கா இந்த பூக்குவியல்.?? இந்த தங்கப் புதையல்..???

அவன் கண்ணைப் பார்த்து ‘குவா.குவா’ என்றது.

தேன் வந்து பாய்ந்தது காதினிலே…!!!

“மீரா.மீரா.. எப்படி இருக்கா..???”

“நல்லா இருக்காங்க.. இருங்க…ஒரு நிமிஷம்…”

மறுபடியும் ‘குவா..குவா.’ சத்தம்..

மறுபடியும் கதவைத் திறந்து கொண்டு வந்த நர்ஸ்..

“பிடிங்க. போனஸ்! கூட யாரும் வரலியா?”

“நான் மட்டும் தான்..”

“பரவாயில்லை. எங்கையிலேயே குடுங்க!”

இரண்டு கைகளிலும் அள்ளிக் கொண்டான்.அச்சு அசல் கார்பன் காப்பிகள்…

“மீராவப் பாக்கலாமா?”

“இன்னும் மயக்கத்தில இருக்காங்க. சிசேரியன்.பயப்பட ஒண்ணுமில்ல”

***

மீராவும் பிரபுவும் மருத்துவக் கல்லுரியில் ஒன்றாகப் படித்தபோது பெற்றோர்கள் விருப்பத்தை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்..

ஜாதி. மதம்.அந்தஸ்து எல்லாமே எதிர்த்து நிற்பதாய் பெற்றோர்கள் நினைத்தனர். இருவரின் மனம் ஒத்துப்போனதை யாரும் ஒரு பொருட்டாய் நினைக்கவில்லை.

ஆரம்பத்தில் இருவரும் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.

மூன்று வருடங்களில் எத்தனை இடமாற்றம்…???

மீராவின் வயிற்றில் புதிய உயிர் உருவான தருணம் அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு அர்த்தமுள்ளதாயிற்று..

அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்று கேட்டவுடன் மகிழ்ச்சியும் இரட்டிப்பானது..

கொச்சிக்கு மாற்றலானவுடனே பிரசவவேதனை.

“கங்ராஜுலேஷன்ஸ்..!! மீரா, பிரபு.நல்ல வேளை. நீங்கள் கடைசி நிமிஷம் பிரசவத்திற்கு இங்க வந்திட்டீங்க. இரண்டு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமா இருக்காங்க.

மனு..வினு..!

இருவரில் யார் மனு..?? யார் வினு..???

மீராவுக்கும்..பிரபுவுக்குமே தெரியாது.

“மீரா. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணாதன்னு எத்தனை தடவை சொல்றது? மனுவுக்கே இரண்டு தடவை பாலக் குடுத்திட்டேன். அவனும் குடிக்கிறான் பாரு. குண்டப்பா”

“சே. குழந்தையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதீங்க”

இவர்கள் அடையாளம் தெரியாமல் தவிக்கிறார்கள் என்றுதானோ என்னவோ இயற்கையே ஒரு மாற்றத்தை கொண்டு வந்து குடுத்து விட்டதோ?

மனுதான் முதலில் முகத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான்.பின் குப்புறப் படுப்பது. தலையைத் தூக்கிப் பார்ப்பது.

உட்காருவது.நடப்பது. எல்லாமே!

வினு முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பான். ஆனால் சிரிக்க மாட்டான்.நடப்பதற்கே இரண்டு வருடங்கள் ஆனது.

இரண்டு பேரும் டாக்டர்களானதால் அவ்வளவாக அதைப்பற்றி கவலைப்படவில்லை.

சிலசமயம் குழந்தைக்கு குழந்தை வளர்ச்சிப் படிகள் மாறுபட வாய்ப்புண்டு… ஆனாலும் மனதில் ஒரு அரிப்பு.. நெருடல்.!!!!

‘வினு’ என்று கூப்பிட்டால் திரும்பியே பார்க்க மாட்டான்.

பசித்தால் பால் பாட்டிலை மனு காட்டும்போது வினு அம்மா கையைப் பிடித்து இழுப்பான்.. இல்லையென்றால் தரையில் புரண்டு அழுவான்..

வினுவைப் பார்க்கும்போதெல்லாம் மீராவுக்கு வயிற்றைப் பிசைந்தது.

“பிரபு . நமக்கு இரட்டை குழந்தைங்கன்னுகூட எதிர் பாக்கலியே..

மனு..வினுவைப்பாத்துட்டு நமக்கு இவ்வளவு பெரிய அதிர்ஷ்டமான்னு சந்தோஷப்படாத நாளில்லை.

இதுக்கு ஒண்ணே பிறந்திருக்கலாம். நாம என்ன பாவம் பண்ணினோம்..???”

“மீரா..என்ன பேச்சு பேசற.இரண்டுமே சரியில்லாம கூட பொறந்திருக்கலாம்..

வினுவைப் பாத்துக்க மனு நமக்கு கிடைச்சிருக்கான்னு நினச்சுக்கோயேன். நெகடிவ் எண்ணத்த மாத்து..

உன்னோட ஃபிரண்ட் மனநலமருத்துவர் கருணாவ போய்ப் பார்க்கலாம்..

முதல்ல அவனோட நிலமை என்னன்னு சரியா புரிஞ்சுப்போம்..

இந்த காலத்தில எல்லாத்துக்கும் சிகிச்சை இருக்குன்னு டாக்டர்களான நமக்கே தெரியாதா.???”

எல்லா மருத்துவ டெஸ்ட்டும் வினு ‘ Autism spectrum disorder ‘ பாதித்த குழந்தை என்பதை உறுதி செய்தது. அதுவும் ‘non verbal’.

மனு பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டான்.

“அம்மா.ஏம்மா. வினு பள்ளிக்கூடம் வரமாட்டானா?”

“வருவான்.இப்போ இல்ல. இன்னும் இரண்டு வருஷம் கழித்து!”

மீராவின் முழு கவனமும் வினு மேல்தான்..மனு என்று தனக்கு இன்னொரு குழந்தை இருப்பதையே மறந்து விட்டாள்.

ஆனால் பிரபு நிதானத்தை இழக்கவில்லை. மனுவை எப்படியாவது வெற்றியின் உயரத்தை தொட வைத்து அதன் மூலம் வினுவுக்கு எவ்வளவு பாதுகாப்பு அளிக்க முடியமோ அதைச் செய்வது ஒன்றே வாழ்க்கையின் லட்சியம் என்று தீர்மானம் செய்து விட்டான்…

ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மனுவுக்கும் வினுவுக்கும் பெரிய ஒற்றுமை இருந்தது! அது இசையில் உள்ள நாட்டம். அதுவும் மேற்கத்திய இசை.

இருவருமே குழந்தைப் பருவத்தில் இருந்து பாடல்கள் கேட்காமல் தூங்க மாட்டார்கள்.அதுவும் வினு இசை நின்றதுமே அழ ஆரம்பித்து விடுவான்.

வினு கட்டுப்படுவதும் இசை ஒன்றுக்குத்தான்.

குழந்தைகளுக்கு ஐந்து வயதிருக்கும்.

“மீரா. மனுவையும் வினுவையும் எப்பவும் சேத்து வைக்கப் போறது இசைதான்னு எனக்குள்ள ஏதோ ஒண்ணு சொல்லுது. அதுவும் பியானோ ஒலிக்கு வினு அடிமையாய்ட்டான்னே தோணுது. நான் ஒரு பியானோ வாங்கலாம்னு தீர்மானம் பண்ணிட்டேன். மனுவுக்கு ஒரு டீச்சர ஏற்பாடு பண்ணலாம்..வீட்ல எப்போதும் சங்கீதம் கேட்டுகிட்டே இருந்தா வினுவோட நடத்தையிலேயும் நல்ல மாற்றம் தெரியும். நான் சொல்றது உனக்கு சரின்னு படுதா?”

“பிரபு .!! சூப்பர் ஐடியா.. ஆனால் நம்மால இப்போ பியானோ வாங்க முடியுமா.?? ரொம்ப விலை இருக்குமே!”

“அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு.முதல்ல ஒரு வருஷத்துக்கு வாடகைக்கு எடுத்துக்கலாம்.அவர்களுடைய ஆர்வத்தைப் பொறுத்து சொந்தமா வாங்குவோம்..!!!!

இப்போதெல்லாம் வீட்டில் பியானோ இசை கேட்டுக்கொண்டே இருந்தது..

பிரபு சொன்னமாதிரியே வினு ரொம்பவே மாறிவிட்டான்.மனு வாசிப்பதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பான்…

இசைக்கு இத்தனை சக்தியா.???

ஒரு நாள் மதியம் மூன்று மணி இருக்கும்.எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மீரா சிறிது கண்ணயர்ந்தாள்.

இப்போதெல்லாம் அவள் மாலை ஆறிலிருந்து ஒன்பது வரை ஒரு கிளினிக்கில் செலவிடுவதோடு சரி.மீதி நேரம் வினுவோடுதான்..

திடீரென்று பியானோ ஒலி..JS.Bach ன் ‘ Well tempered clavier ‘ மிகவும் கடினமான இசைக் கலவை. ..

‘எங்கிருந்து வருகிறது ?? வினு அவன் அறையில் ஏதோ விளையாடிக்கொண்டிருப்பான்..!!!

ஆடியோ ஏதும் வைத்ததாய் நினைவில்லை..

மீரா சத்தம் போடாமல் எழுந்திருந்து பியானோ இசை வரும் இடத்தை நோக்கிச் சென்றாள்..அங்கு அவள் கண்ட காட்சி..??? ?

மீராவுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது.வினுதான் பியானோ முன் அமர்ந்திருந்தான்..தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருந்தான்.

முன்னால் நோட்ஸ் ஒன்றும் இல்லை.கண்ணை மூடிக்கொண்டு பியானோ கீயைக் கூடப் பார்க்காமல் ஒரு தேர்ந்த இசைக் கலைஞனைப் போல அவன் வாசித்துக் கொண்டிருப்பது கனவா.நிஜமா.??

மீராவுக்கு உடலெல்லாம் புல்லரித்தது.இது தன் குழந்தையா.??

யார் சொல்லிக் கொடுத்தார்கள்.?

மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தவள் இசை நின்றதும் அவனை அப்படியே அவனைக் கட்டிபிடித்து மாறி மாறி கன்னத்தில் முத்தமிட்டாள்.கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது..

“கண்ணா..வினு.உனக்குள்ள இத்தனை பெரிய திறமையா.???? எங்களுக்கு எப்படி தெரியாம போச்சு.??

ஸாரிடா வினு.நீ எங்களையெல்லாம் முட்டாளாக்கிட்ட.அப்பா கிட்ட உடனே சொல்லணும்…”

மீரா பேசிக் கொண்டே போனாள்.. ஆனால் வினு எதையும் காதில் வாங்காமல் ..ஒன்றுமே நடக்காத மாதிரி.

பழையபடி அவனுடைய அறைக்குள் நுழைந்து.விட்ட இடத்திலிருந்து விளையாடத் தொடங்கினான்.. இதுவும் ஒரு விளையாட்டுதான் என்பதைப் போல..!

மீராவுக்கு இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளா விட்டால் தலை வெடித்துவிடும் போல இருந்தது.பிரபு paediatric conference க்காக டெல்லி போயிருந்தான்..

சாதாரணமாய் அவனை எப்போதுமே வேலைக்கிடையில் தொந்தரவு செய்ய மாட்டாள்.

ஆனால் இன்று அதைப்பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை..

“பிரபு..!! நீ பிஸியா இருப்பேன்னு தெரியும்.. ரொம்பவே முக்கியமான செய்தி..!”

“எதாவது சீரியசான செய்தியா.??? மதிய உணவு இடைவேளைக்கப்புறம் இரண்டாவது செஷன் ஆரம்பிக்க அஞ்சு நிமிஷம் தான் இருக்கு..சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு..”

எப்படியோ தட்டுத் தடுமாறி சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது.!!!

பிரபுவுக்கு நம்ப முடியவில்லை.

“மீரா. எல்லாத்தையும் விட்டுட்டு உடனே வரணும்னு இருக்கு..ஆனா இப்போதான் என்னோட பேப்பர் பிரஸன்ட்டேஷன். ராத்திரியே flight பிடிச்சு வந்திடுவேன்..!!!!

***

“மீரா.நீ என்ன நெனக்கிற.???? எனக்கென்னவோ வினு ஒரு Savant னு தோணுது..!!!

“அப்படின்னா?”

பிரபுவும் மீராவும் இரவு உணவு முடிந்து வரவேற்பறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். மனுவும் வினுவும் உறங்கி விட்டார்கள்.

“Savant’ னா lsland of geniusனு சொல்லலாம்..

இதுமாதிரி ஆட்டிசம் பாதிப்பு இருக்கிற ஒரு சில குழந்தைகள் அபரிமிதமான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவாங்க .

அவுங்க மூளையிலுள்ள நரம்புகள் தனித்தன்மையை பெற்றிருக்கும்.

உதாரணத்துக்கு சிலர் கணக்கில் ஜீனியஸ்ஸா இருப்பாங்க.சிலர் அற்புதமா வரை வாங்க.

வினுமாதிரி சில குழந்தைங்க இசையில அபார ஞானத்தோட இருப்பாங்க. ‘ photographic memory ன்னு கூட சொல்லலாம்..

“பிரபு.இவனோட இந்தத் திறமைய உலகமெல்லாம் தெரிய வைக்கணும்..இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? முதல்ல அவனோட கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணுங்க”

“மீரா .இரு.அவசரப்படாத .நானும் முதல்ல உன்ன மாதிரிதான் யோசிச்சேன்..ஆனா அதைவிட சூப்பர் ஐடியா ஒண்ணு வச்சிருக்கேன்.!!!!”

“என்ன சொல்ற பிரபு?”

அவன் சொன்னதைக் கேட்டு மீராவுக்கு ஆத்திரமாய் வந்தது. அப்படியே பிரபுவின் கழுத்தை நெரித்துக் கொல்லலாம் போல தோணியது.

“நிறுத்து பிரபு. நீயெல்லாம் ஒரு அப்பாவா? You are so cruel!”

பிரபு அப்படி என்னதான் சொன்னான்?

“மீரா. நான் சொல்லப்போறது நிச்சியமாக உனக்கு அநியாயமாய்த் தெரியலாம்.ஆனா பொறுமையா கேட்டா கடைசில அதில் இருக்கிற நியாயம் கண்டிப்பா புரியும்”

பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தான்..

“மனுவுக்கும், வினுவுக்கும், இப்போ பன்னிரண்டு வயசு முடிஞ்சாச்சு. மனு படிக்கிற பள்ளியில அவன புகழாத டீச்சர் இல்ல. படிப்பு..விளையாட்டு.. கல்சுரல் ஆக்டிவிடி.. இப்படி எத எடுத்தாலும் அவனுக்கு ஈடாக பள்ளியில யாருமே இல்ல. அவனுக்கும் மேற்கொண்டு வெளிநாட்டில போய் நரம்பியல் மருத்துவத்திலே ஆராய்ச்சி பண்ண ஆசை. ஆனா நம்மால அவன வெளிநாட்டில படிக்க வைக்கிற அளவுக்கு சக்தி இல்ல!”

“பிரபு, இதுக்கும் வினுவுக்கும் என்ன சம்பந்தம்?”

“பொறுமையா கேளு. பியானோ வாசிக்கிறதில வினுவை மிஞ்ச மனுவுக்கு இந்த ஜென்மத்தில் முடியாது. ஆனா வினுவுக்கு தனக்கு இவ்வளவு திறமை இருக்குன்னு புரிஞ்சுகொள்ளக்கூடிய சக்திகூட கிடையாது. அவனுக்குக் கிடைக்கும் புகழோ, பாராட்டோ, அங்கீகாரமோ அவன எந்த விதத்திலும் பாதிக்கப் போறதில்லை. அதுவும் அவனுக்கு ஒரு விளையாட்டுதான்!”

“அதுனால?”

“நீ சொன்னபடி வினுவின் திறமைய வெளில கொண்டு வர நேரம் வந்தாச்சு. ஆனா அவன் வாசிக்கப் போறது வினுவா இல்ல.மனுவா! ஆமா.மனுதான் இசை நிகழ்ச்சிகள் பண்ணப்போறான்.வெளி உலகத்த பொறுத்த வரையில்!”

“நீ பேசறது தலையும் புரியல. வாலும் புரியல பிரபு!”

“நாம ஒரு நாடகம் ஆடப்போறோம். வினு பியானோ முன்னால உக்காந்தா போதும். அவன யாரும் தடுக்கவே முடியாது. He’ll give nothing but his best! மனு வாசிக்கப் போவதாகத் தான் நாம் எல்லா பேப்பரிலும் விளம்பரம் பண்ணப்போறோம். Backstageல..நீ.. நான்..மனு..வினு. தவிர யாரும் இருக்கக் கூடாது. நான் முதல் நிகழ்ச்சியின் பெயரை கூறினதும் திரை விலகும்.பியானோ முன்னால் வினு உட்காரந்திருப்பான். அவன் வாசித்து முடித்ததும் திரை மூடும். மனு திரைக்கு முன்னால் வந்து வணங்கிவிட்டு போவான்.அடுத்த பாடல்.. அதற்கடுத்தது..இப்படி மொத்த இசைக் கச்சேரியும் நடக்கும். இதில முக்கிய பங்கு உன்னுடையதாய்தான் இருக்கப் போகுது!

“நான் என்ன பண்ணனும்?”

“நீதான் யாருக்கும் தெரியாம வினுவ கூட்டிட்டு வந்து உக்கார வைக்கப்போறதும். திரும்பி கூட்டிட்டு போறதும். உன் ஒருத்திக்கு தான் அவன் கட்டுப் படுவான்”

“நிறுத்து பிரபு. நீ மனசாட்சி இல்லாம பேசற! உன்னால எப்படி இந்தமாதிரி கேவலமா யோசிக்க முடியுது. வாசிக்கிறது வினு.பேரு மனுவுக்கா.??? இதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன். எப்படி இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் உன் மனசுல தோணுதோ! அவனுக்கு எதையும் புரிஞ்சுக்கிற திறமையில்லைனுதானே இப்படி கீழ்த்தரமான சிந்திக்கிற? உன்னைக் கணவன் என்று சொல்லவே எனக்கு அருவருப்பா இருக்கு!”

“மீரா, மனுவும்.வினுவும் எனக்கு இரண்டு கண்கள். ஒரு கண்ண நானே குத்திப் பேனா. நான் சொல்றத நிதானமா கேளு!”

“நான் சொன்னது உனக்கு நினைவில்லையா? மனு வெளிநாட்டில் போய் மருத்துவ துறையில் ஆராய்ச்சி பண்ணப்போறதே மனுவுக்காகத்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் உதவித்தொகை மட்டும்தான். இசை நிகழ்ச்சிகள் மூலம் அவனுக்கு இதை சாதிக்க முடியும்..”

“மீரா! நீ உணர்ச்சி பூர்வமா சிந்திக்கிற! ஆனா நான் அறிவுபூர்வமா சிந்திக்கிறேன். இதில் வருத்தப்படவோ. ஆத்திரப்படவோ..ஒண்ணுமேயில்ல..இது வினுவ எந்த வகையில் பாதிக்கும் சொல்லு..அவனுக்கு இந்த புகழும். பாராட்டும். ஒரு தூசிக்கு சமம். அவன் எல்லாம் துறந்த ஞானி மாதிரி மீரா..நீ இத நெனச்சு உன்ன வருத்திக்காத! மனுவுக்கும் இதில் சம்மதமேயில்லை.அவனுக்கு கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது.நாளைக்கு உண்மை தெரிய வந்தால்!!

ஆனால் பிரபு எப்படியோ இரண்டு பேரையும் சம்மதிக்க வைத்துவிட்டான். நாடகத்தின் முதல் கட்டமாய் கொச்சியிலிருந்து பெங்களூரு மாற்றம். வினுவை கூடியமட்டும் யார் கண்ணிலும் காண்பிப்பதில்லை என்றும் தீர்மானம் பண்ணிவிட்டான் பிரபு. ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.. அவன் ஒரு சிறப்புக் குழந்தை என்ற மட்டில் சிலர் அறிந்து வைத்திருந்தார்கள். மனுவின் முதல் நிகழ்ச்சிக்கு முன்பாக இரண்டு.. மூன்று.முறை யாருக்கும் தெரியாமல் ஒத்திகை நடந்தது.

மனுவின் முதல் இசை நிகழ்ச்சி. மிகப் பெரிய அளவில் விளம்பரம்..!!!

‘குழந்தை நட்சத்திரம், இந்தியாவின் பெருமை’ என்றன விளம்பரங்கள்.

இசை நிகழ்ச்சி அன்று வினுவைத்தவிர‌ மற்ற மூவருமே பதட்டத்தில் இருந்தார்கள்.

வாசிக்கப் போகும் வினுவோ அமைதியின் இருப்பிடமாய். மிகவும் நிம்மதியாய் அவனுடைய அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்தான்.!

***

‘மனு இந்தியாவுக்குக் கிடைத்த இசை மேதை.. பதிமூன்று வயது இசைப் புயல். கூடிய விரைவில் உலக அரங்குகளில் கால் பதிக்கும் போகும் இன்னிசை இளவரசன்…’

ஒரு குழப்பமும் இல்லாமல் இசை நிகழ்ச்சி நடந்தது போலவே மூவரும் நடத்திய நாடகமும் அரங்கேறியது.

முதலில் மனுவுக்கு ஒரு குற்ற உணர்ச்சி தோன்றினாலும் எல்லா பத்திரிகையிலும் தன் பெயரைப் பார்க்கும்போது ஒரு போதை தலைக்கேறியது, பிரபு நினைத்ததை சாதித்து விட்டான். அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களெல்லாம் நான்.நீ.என்று போட்டி போட்டுக் கொண்டு இருகரம் நீட்டி உதவித் தொகையுடன் அவன் விரும்பிய படிப்பைத் தொடர அழைத்தது மனுவுக்கு கனவு போல் தோன்றியது. மீரா மட்டும் இடையில் மன உளைச்சலில் யாரோடும் பேசாமல் வினுவுடன் தனியாக இருப்பதையே விரும்பினாள். மனு கல்லுரிக்குச் செல்ல வேண்டிய நாள் நெருங்கி விட்டது.

‘மனுவின் கடைசி இசை நிகழ்ச்சி..தவற விடாதீர்கள். உங்களின் ஆசியுடன் மேற்படிப்புக்கு அனுப்பி வையுங்கள்…’

மனு இப்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டான்.இசை நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்பே எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது விட்டது. மனுவின் முகம் இரண்டு நாளாகவே வாடியிருந்தது. எதையோ பறி கொடுத்த மாதிரி.

“மனு…ஏன் ஒரு உற்சாகமே இல்லாம இருக்க.??? எல்லாத்தையும் விட்டுட்டு வெளிநாட்டுக்கு போறோமேன்னு கவலையா?”

“தெரியலப்பா. எனக்கு இந்த முறை இசை நிகழ்ச்சிக்கு போறதில துளியும் விருப்பமில்லை.”

“Its ok son..ever everything will be alright. Cheerup!”

***

மனு திரையின் முன்பு தோன்றியதுமே கரவொலி விண்ணைப் பிளந்தது. இதோ முதல் பாடல். திரை விலகியது!

‘MOZART ன் – Piano Concerto No. 20′ யுடன் இசை நிகழ்ச்சி ஆரம்பித்தது. ‘Liszt – La Campanella. Ravel – Gaspard de la Nuit. ..’

இசைத்த அத்தனை பாடல்களும் மிகவும் கடினமான இசை வடிவில் அமைந்த பாடல்கள். இதுபோன்ற இசை நிகழ்ச்சியை எவருமே கேட்டிருக்க முடியாது.

‘Encore . Encore.’ ( once more. once more.!!) என்ற குரல்கள்.நாலாபக்கத்திலிருந்தும். எல்லோருடைய ஆசையையும் பூர்த்தி செய்தான்.நிதழ்ச்சி முடியும் போது மணி சரியாக பத்து. திரை விழுந்ததும் மனு வருகைக்காக காத்திருந்தது கூட்டம். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதிர்ச்சி என்று கூட சொல்லலாம். மீண்டும் திரை விலகியது. அவர்கள் காண்பது என்ன.???

மனுவைப் போலவே இன்னொருவன்.பியானோ முன்னர் அமர்ந்திருந்தான். மனு அவனை அணைத்த வண்ணம் மேடையின் முன்னால் தோன்றினான்.

“அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும்.. நான் கூறப்போகும் செய்தி நிச்சயம் அதிர்ச்சி அளிக்கும். தயவுசெய்து நான் கூறுவதைப் பொறுமையாக கேட்குமாறு வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.! இவன் வினு. நானும் வினுவும் இரட்டைப்பிறவிகள்.

***

மனு ஒன்று விடாமல் கூறியதைக் கேட்டதும் கூட்டத்தில் பெரிய சலசலப்பு. சிலர்

“ஓ. .. ..நோ…”என்று கூக்குரல் எழுப்பினார்கள். சிலர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்..

“இப்போது என் தாய்.தந்தையை . அறிமுகப் படுத்துகிறேன்.”

அவர்கள் பயந்ததற்கு மாறாக கைதட்டல் அரங்கத்தையே அதிர்வடைய வைத்தது.

பாரிஸ் போகும் விமானத்தில் மனு.வினு. மீரா,பிரபு. நால்வரும் அமர்ந்திருக்கிறார்கள்..வினுவின் இசைக்கச்சேரி. பாரிஸில்!

“மனு..திடீர்னு நீ இப்பிடி செய்வன்னு எதிர்பார்க்கவேயில்ல. ஏன் இந்த கடைசி நிமிட மனமாற்றம் .??”

“அப்பா. கொஞ்சம் நாளாகவே எனக்கு மன அழுத்தமா இருந்தது.எல்லாத் துறையிலும் சிறப்பா என்னால பிரகாசிக்க முடிஞ்சுது..ஆனா வினு?

அவனுக்கிருக்கும் ஒரே திறமை இசை.கேவலம்.மேல்படிப்புக்காக அவனிடமிருந்து அந்தத் திறமையைத் திருடி நான் என்ன உயரத்தை அடைந்தாலும் அதற்கு என்ன பயன் இருக்கும்.???

அவனுக்கு நாம் நடத்தும் நாடகம் எல்லாம் புரியாது என்று நினைக்கிற நாம்தான் முட்டாள்கள்.

இப்ப பாருங்க.வினு உலகம் புகழும் இசைக்கலைஞனாகி விட்டான்..!!!! அவன்தான் என்னை படிக்க வைக்கப்போறான்.. இதில் நான் அடையப்போகும் புகழ்தான் உண்மையான பலனைத்தரும்..”

வினுவைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான் மனு.

மனுவின் கையை அழுத்திப் பிடித்தான் வினு.

‘உன்னுள்ளே நான்!’ என்று அவன் கூறாமல் கூறியதை மனுவால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்…!!!’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *