உதிர்தலில்லை இனி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 146 
 
 

“எப்பத்தான் இந்த ரோட்டுகளைத் திருத்தப் போறாங்களோ தெரியாது.” குழிகளும் பள்ளங்களுமாக இருந்த அந்த ரோட்டிலை பஸ் ஒவ்வொருக்காவும் விழுந்து விழுந்து எழும்பேக்கை டிரைவர் பெரிய குரலிலை அலுத்துக்கொள்கிறார்.

இப்படிக் கஷ்டப்பட்டுப் போறன், பிறகு திரும்பி வரக்கே ஏன் போனன் எண்டு கவலைப்படுறதுதான் இப்பவெல்லாம் ஒரு வழமையாய் போச்சுது. போன முறை ஒரு மனுசி நான் ஆர் எண்டு தெரியாமல் ஆலத்தி எடுக்க வாங்கோ என்று கூப்பிட, ஏதோ நான் ஆலத்தி எடுக்கப் போயிடப் போறன் எண்டு பொம்பிளையின்ரை தாய் அவசரப்பட்டுப் பாய்ந்தோடி வந்து, “இல்லை, இல்லை, மலர் நீர் வாரும்”, எண்டு இன்னொரு ஆளைக் கூப்பிட்டு விட்டது ஞாபகத்துக்கு வர மனசு லேசாய் வலித்தது.

மங்கலமான ஒரு மனைவியாக, பிள்ளைகளைப் பெற்ற ஒரு மகராசியாக இல்லாத நான் வாழ்த்துவதற்காக ஆலத்தி எடுக்கிறதை ஆரும் விரும்பாயினம் எண்டு எனக்குத் தெரியும். எப்பவும் அந்த நேரங்களைத் தவிர்க்கிறதுக்காக நான் தூரத்திலை போய் நிக்கிறதுதான் வழமை. ஆனால் சில வேளையிலை இப்படி மாட்டுப்பட்டு முகத்திலை அடிச்சமாரி மற்றவை சொல்லுறதைக் கேட்கிறதும் இப்ப என்ரை தலைவிதியாய்ப் போச்சுது.

பஸ்தரிப்பிலிருந்து செல்வம் அக்கா வீட்டை நடந்து போக ஒன்பது மணி தாண்டிட்டுது. கேற்றைத் திறந்த என்னைத் தாண்டிக் குறுக்காலை போன அந்தப் பெரிய கறுப்புப் பூனையின்ரை வயித்தைப் பாத்தால் குட்டி போடுற காலம் ரொம்பவும் அண்மித்துவிட்ட மாதிரியிருந்தது.

முன்முற்றம் முழுதுமான பெரிய பந்தலும், வாழைக்குலைகளும், பல நூற்றுக்கணக்கிலை கதிரையளும், பந்தல் நிறைஞ்ச ஆட்களுமாய் அவவின்ரை வீடு பெரிசாய் அமளிப்படுது. அங்குமிங்கும் நிறையப் பேர் போய் வருகினம். முன்பக்கமாய்ப் போகக் கூச்சப்பட்டு, பந்தலைச் சுற்றிப் பின்பக்கமாய் குசினிப் பக்கம் போன என்ரை மனசு திக்கென்றது.

அவரா அது, நம்பமுடியவில்லை. ஒரு காலத்திலை என்ரை விரல்களாலை மிகவும் உரிமையோடை ஆசையாக நான் கோதிக்கோதி விளையாடிய அந்தச் சுருட்டை முடி போய், அவரின்ரை முன்பக்கத் தலை சற்று வழுக்கையாய் இருந்தது. காத்திருந்து காத்திருந்து பேசிய அந்தக் கண்களை வேகமாகத் தவிர்த்துக்கொண்டாலும் ஆள் கொஞ்சம் நிறத்து, நிறை வேறு போட்டிருந்தது எனக்குத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஆளுடன் பேசிக்கொண்டிருந்த அவரின் கையிலிருந்த பிள்ளை அவரின் முகவாயைத் தடவித் தடவி “டாட், டாட்” என அவரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.

மனசிலை வெறுமையும் ஆக்ரோசமும் அதே நேரம் என்னவென அறியாத ஒரு படபடப்பும் சூழ்ந்து கொண்டன. எதற்காக, எப்போ இவர் இங்கை வந்தார்?

அவர் கனடாவுக்குப் போட்டார் என்ற செய்தி கேட்ட நாளிலிருந்துதான் வழியிலை எங்கையாவது அவரைச் சந்திச்சுடுவனோ என்ற குழப்பமின்றி, அசௌகரியமின்றி வீட்டை விட்டு என்னாலை வெளியிலை வரமுடிஞ்சுது. ஒரு கோவிலுக்கு, கலியாணத்துக்கு எண்டு தயக்கமின்றிப் போக முடிஞ்சுது. இப்ப, இப்படி, இங்கை திடீரென எதிர்பாராமல் அவரைக் கண்டதிலை என்ன செய்கிறதென்றே எனக்குத் தெரியேல்லை. வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய் விடுவமோ என நினைச்ச போது செல்வம் அக்கா என்னைக் கண்டிட்டா.

“விமலா, இப்பத்தான் வாறியோ? வா, வா. சுபா உன்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தவள். அவளுக்கு உன்னிலை நல்ல விருப்பம்தானே”, என்று சுபாவின்ரை அறைக்கு கூட்டிக் கொண்டுபோறா, அக்கா.

“எனக்குக் கொஞ்சம் சுகமில்லை. உங்களுக்காண்டித்தான் வந்தனான். நேரத்தோடை வீட்டை போனால் நல்லம் எண்டு நினைக்கிறேன்”, என்கிறன் நான்.

“நீ என்ன சொல்லுறாய் எண்டு எனக்கு விளங்குது. அவரைச் சத்தியமாய் நான் கூப்பிடேல்லை. அவையின்ரை வீட்டிலை இப்ப இருக்கிற பிள்ளை எங்களோடை நல்லமாரி. அவளுக்குத்தான் சாமத்தியத்துக்குச் சொன்னது. அவர் கனடாவிலிருந்து வந்ததும் எனக்குத் தெரியாது. இப்ப கொஞ்சம் முந்தித்தான் அவரைக் கண்டனான். அவருக்குச் சொல்லுற மாதிரிச் சொல்லி அவரை அனுப்பச் சொல்லி நான் இவரிட்டைச் சொல்லுறன். நீ யோசிக்காதை”, என அவ என்னை ஆசுவாசப்படுத்துகிறா.

சுபாவைக் கட்டியணைத்து முத்தமிட்டு விட்டு குசினிக்குள்ளை போறன். வாறவைக்குத் தேத்தண்ணி போடுற பொறுப்பை எடுத்த என்ரை மனசிலை பழைய நினைவுகள் வந்து ரீங்காரமிடுகின்றன.

மனைவி திடீரென மாரடைப்பில் இறந்து போக, பிள்ளைகளை வளர்க்கக் கஷ்டப்பட்ட அவருக்காகப் பரிதாபப்பட்டு, விழுந்து கட்டிக் கொண்டு உதவி செய்கிறன், நான். அவரின்ரை பிள்ளைகளும் என்னுடன் நல்லா அணைந்து கொள்கிறார்கள். போதாதற்கு அம்மாவும் “பாவம் அதுகள், என்ன செய்துகள் எண்டு போய்ப்பார்” எண்டு அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறா. அவரின்ரை மூத்த மகள் சாமத்தியப்பட்டதுடன் என்ரை பல மணித்தியாலங்கள் அவர் வீட்டிலேயே கழிகின்றன. அப்படியான ஒரு நாளில் அவருக்குக் கடுமையான் காய்ச்சல் என சூப் வைத்துக் கொண்டு போகிறன்.

“நீர் இப்படி எங்களுக்காக கஷ்டப்படுவதற்கு என்ன பிரதியுபகாரம் பண்ணப்போறனோ தெரியாது”, என அவர் கண்கலங்குகிறார்.

“மனிசனுக்கு மனிசன் உதவுறதில்லையோ, எனக்கு இதிலை ஒரு கஷ்டமும் இல்லை. அதைவிட நான் செய்யிறது வேறை ஆராவது மூலம் எனக்குத் திரும்பி வரும்”, என ஆறுதல் சொல்றன், நான்.

“இந்த இரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும் என்னட்டை விட்டிட்டு அதுவும் என்ரை கையிலை ரதி சீவனை விட்ட காட்சியை என்னாலை மறக்கேலாமலிருக்கு” என அவர் கலங்கிறார். பிறகு என்ரை கையைப் பிடிச்சு, “என்ரை பிள்ளையளுக்கு ஒத்தாசையாயிருப்பதற்கு மிகப்பெரிய நன்றி”, என்கிறார்.

வெளியிலை தொங்கவிடப்பட்டிருந்த சின்னத் தண்ணித் தொட்டி ஒன்றில் அமைதியாகத் தண்ணி குடித்துக் கொண்டிருந்த குருவி ஒன்றை எங்கிருந்தோ வந்த பருந்தொன்று அலாக்காகத் தூக்கிக் கொண்டுபோகிறது.

அப்படிக் கதைத்துக் கொண்டிருக்கும்போது, என்ன நடந்ததோ, எப்படி நடந்ததோ எனத் தெரியாமல், அவரும் நானும் ஒருவரின் அணைப்பில் ஒருவர் இருந்ததை உணர்ந்து என்னை நான் விலத்திக் கொள்கிறேன்.

ஆனால் எப்படியோ அது பிறகும் தொடரத் தொடங்குகிறது. நானும் இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்படத் தயாராகிறேன். அவராகச் சொல்லட்டும் எனக் காத்திருந்த போது ஒரு நாள், “பிள்ளையளுக்காண்டி நான் தனியா வாழவேணும் அல்லது பிள்ளையளின்ரை நன்மைக்காகக் கலியாணம் கட்டுறதெண்டால் அவையின்ரை சித்தியைத்தான் கட்டவேணும்”, என்கிறார்.

நான் எதுவும் போசாமலிருக்க அவரே அதை நியாயப்படுத்துகிறார். “பிள்ளையளாலை தங்கடை தாயின்ரை தானத்திலை ஆரையும் ஏற்றுக் கொள்ளேலாதுதானே… சித்தி எண்டால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளுவினம் எண்டு நான் நினைக்கிறன். பொம்பிளைப் பிள்ளையளுக்கு ஒரு தாய் வேணும் எண்டு ஊரும் அதை ஏற்றுக்கொள்ளும்…. அதோடை உம்மையும் யோசித்துப் பாத்தன். இது உமக்கும் நல்லது. நீர் பாவம், உம்மடை வயசுக்கேத்த இன்னொரு ஆளைக் கலியாணம் கட்டி சந்தோஷமாக வாழவேணும். உமக்கென ஒரு குடும்பம் அமையவேணும், விமலா. வீணா நனைச்சுச் சுமக்க ஆசைப்படாதையும்… எனக்கும் வயசாகுது. வளர்ந்த பிள்ளைகள் வேறை…. நான் சொல்றதை நீர் விளங்கிக்கொள்வீர் எண்டு நான் எதிர்பாக்கிறேன். உம்மை மாதிரி என்னை ஆரும் கவனிக்கப் போறதில்லை. உம்மை இழக்கிறதாலை எனக்குத்தான் நட்டம் எண்டும் எனக்குத் தெரியும்….ஆனால் எல்லாத்தையும் யோசிக்கேக்கை எனக்கு இதைத் தவிர வேறை வழி தெரியேல்லை….”, எண்டு என்னவெல்லாமோ சொல்லுறார்.

எதிர்கட்சியிலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொள்ளும் கம்பளை எம். பி. திரு. சுனில் விமலசேகராவுக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்படவிருக்கின்றது எனத் தகவலறிந்த அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என ரீவியிலை நியூஸ் வாசிப்பவர் தன்பாட்டுக்கு வாசிக்கிறார்.

“இதை நான் ஒரு கடமையாகத்தான் செய்யிறன் எண்டதுகூட உமக்கு விளங்குமோ தெரியாது, உம்மை ஆரும் கட்டுவான்கள். ஆனால் குஞ்சு, பாவம், உமக்குத் தெரியும் தானே, உருவமும் நிறமும் அவளுக்கு எதிரா இருக்குது. இந்த வழியிலை அவளுக்கும் ஒரு உதவி செய்ததாகவும் இருக்கும்…”

“உங்களாலை என்னெண்டு இப்படிக் கதைக்கேலுது? இது என்ன நன்மை தீமைகளை கூட்டிக் கணக்குப் பாக்கிற விஷயமா? இப்படி ஒரு நிலைமை வரும் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை”, வாய்விட்டு அழுகிறேன்.

என்ரை நெஞ்சை ஆரோ பாறங்கல்லாலை அமுக்குவது மாதிரி பெரிதாக வலிக்கிறது. “உங்கடை உறவை என்னாலை விடேலாது, எனக்கு நீங்கள் வேணும், உங்கடை அன்பு வேணும்”, வெட்கத்தை விட்டுக் கெஞ்சுறன்.

அவர் வரும்போது சாத்த மறந்த எங்கடை வீட்டுப் படலை காத்தின்ரை வேகத்திலை அடிபட்டுச் சாத்தப்படும் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இன்றி என்ரை அழுகை காத்துடன் கலக்கிறது,

என்னுடைய ‘நன்மைக்காகவும்’ என என்னுடன் கலந்தாலோசிக்காமல் தானாக அவர் எடுத்த முடிவு என்னைச் சுக்கு நூறாக உடைத்து விடுகிறது. இரண்டு வருஷமா எனக்குள்ளை வளர்த்த காதலையும் கரிசனையையும் என்னாலை தூக்கி எறிய முடியேல்லை. நித்திரையற்ற இரவுகளும். வற்றாத கண்ணீருமாக வாழ்க்கை அலுத்துப் போகிறது.

இரண்டாம் கலியாணம் முடிஞ்சு, அவர் இன்னொரு ஆளுக்கு மீண்டும் புருஷனாக வாழ ஆரம்பிச்சாப் பிறகும் நான் எனக்குள் அவருடனேயே வாழ்ந்து என் வாழ்வையே சூனியமாக்கிக் கொள்கிறேன். சம்மந்தங்கள் பேசிவந்த போது என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியேல்லை. காலப்போக்கில் மறந்திடுவன், மனசுக்கு ஒரு திருப்பம் வேணும் எண்டெல்லாம் அம்மா பலதைச் சொன்னா. ஆனால் மனசுக்கை அவரை வைச்சுக்கொண்டு பொய் வாழ்க்கை வாழ என்னாலை ஏலாது எண்டு வந்த திருமணங்களை எல்லாம் மறுக்கிறன். இப்ப அம்மாவும் இல்லாமல் போனாப் பிறகு என்ரை வாழ்க்கையை ஒருத்தியாக ஓட்டுறதிலை, தன்னந்தனிமையிலை மனசு நொந்துபோய் மனசல்லாடுகிறேன்.

செல்வம் அக்கா வந்து, “அவர் போட்டார். நீ வா. சுபாவுக்கு முழுக வாக்கப் போறம்”, என்று சொல்லிப் போட்டுப்போறா.

அவர் போனால் என்ன போகாட்டால்தான் என்ன, என்ரை வாழ்க்கையிலை அவரின்ரை உறவு விதைச்ச விசனங்களை நான் ஏன் இன்னும் காவித் திரிகிறன் என மனம் முதல் முதலாக என்னையே கேள்வி கேட்டது. அவரை நம்பினது என்ரை பாவம், என்ரை ஊழ்வினை என்று எனக்கு நானே பச்சாதாபப்படுவதும், பிறகு அதற்குக் காரணகாரியம் தேடித் தேடி இறந்த காலத்திலேயே வாழ்ந்து எனக்குள்ளேயே மீள மீள மடிந்து போவதும்…….., இப்ப எனக்கு என்னிலை எரிச்சலும் கோவமும் வந்தன.

ஒரு பச்சோந்தியின்… வெறும் சந்தர்ப்பவாதியின் அன்பை என்னாலை மறக்கேலாமல் இருக்குது எண்டு என்ரை வாழ்க்கையை நான் அடகு வைச்சிருக்கிறன். என்ரை அன்பின்ரை பெறுமதியை உணராத, என்னைப் பாவிச்ச அந்தச் சுயநலவாதிக்காக உருகிறது எவ்வளவு முட்டாள்தனம்.

என்னை அறியாமலேயே எனக்குள்ளை ஊறிப்போயிருக்கும் கலாசாரமும் பெண்ணடிமைத்தனமும்தான் இதற்கும் காரணமா? அவர் ஆம்பிளை, போற வழி நல்லதாய் தெரியவில்லை எண்டு தனக்குச் சாதகமான வழியைத் தேடியிருக்கிறார். சந்தோஷமாக வாழுறார். நான் பொம்பிளை, இனி எனக்கு என்ன வாழ்க்கையெண்டு என்னை நானே அழிச்சுக் கொள்றனா?

நான் வாழ்ந்து காட்டவேணும். என்னை நான் மாற்றியாக வேண்டும் எனத் திடீரென எங்கிருந்தோ என்ரை மனசுக்குள்ளை வேகம் வர கொஞ்சம் உற்சாகம் பிறக்கிறது. கண்ணைத் துடைத்துக் கொண்டு குசினி அலுமாரியில் இருந்த கண்ணாடியில் முகத்தைச் சரிசெய்து கொள்கிறேன், நான்.

”விமலா, நீ தான் முதலிலை பிள்ளைக்குப் பால் வைக்க வேணும் வா”, எண்டு செல்வம் அக்கா சத்தமாக் கூப்பிடுறா.

– தூறல், ஒக்ரோபர் – டிசம்பர் 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *