கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 2,069 
 
 

நான்கு நாட்களாய்ச் சேர்ந்துவிட்ட அழுக்குத் துணிகள் அனைத்தையும் பெரிய வாளியில் சோப்புத்தூள் போட்டு ஊற வைத்தாள் சங்கரேஸ்வரி. லேசாக சத்தம் எழுப்பிய வளையலை ஞாபகமாகக் கழற்றி சாமிப்படத்தின் முன் வைத்தாள். தொலைக்காட்சியில் ஒரு கண்ணும் மனைவியின் மேல் ஒரு கண்ணும் வைத்தபடி படுத்திருந்த முத்துவீரன், ‘அதைப் போய் ஏன் கழட்டுற?’ என்றான்.

‘படத்தைப் பார்க்காம இங்க என்ன பார்வை?‘ என்று செல்லமாக சலித்துக் கொண்டாள் சங்கரி. ‘என் பொண்டாட்டி நான் பார்க்கிறேன்‘ என்று முத்துவீரன் சொல்ல, ‘அப்ப எதுக்கு டிவி தண்டத்துக்கு ஓடுது. அணைச்சுப் போடுங்க‘ என்று விடாமல் வாயாடினாள் சங்கரி. ‘பார்க்க மட்டும் தானே செய்யிறேன். அது கூடக் கூடாதா?‘ என்று விளையாட்டாகச் சொன்னாலும் அவன் வார்த்தையில் உள்ள வலி வெளிப்படத்தான் செய்தது.

அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் சங்கரி. கை தன்னைப் போல் பக்கவாட்டில் படுத்திருந்தவனை எடுத்து நேராகப் படுக்கப் போட்டது. ‘பாருங்க, நல்லாப் பாருங்க.. நான் வேணா கண்ணு முன்னாடியே உக்காந்துக்கட்டா?’ என்று அவனது கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தவள், இன்னும் நெருக்கமாக வந்து ஒயர் கட்டிலின் மேல் தன் இரு கைகளையும் முன்பக்கமாகக் கோத்து முகத்தை அதில் வைத்துக் கொண்டாள். முத்துவீரன் சிரித்தான். லேசாக வெட்கம் வந்தது சங்கரிக்கு.

அப்படியே டிவியைத் திரும்பிப் பார்த்தவள், ‘இந்தப் படத்தை நூறு தடவைக்கு மேல போட்டுருப்பான்’ என்றாள். முத்துவீரன், ‘நான் அம்பது தடவை பார்த்திருப்பேன், நீயும் இருநூறு தடவை சொல்லியிருப்ப’ என்க, ‘ஆமா‘ என்று சொன்னபடியே சங்கரி எழுந்தாள். அதற்கு மேல் அவளுக்கு அங்கு அமர்ந்திருக்க நேரமில்லை. ‘ஆளைப் பாரு.. ஆளை. நான் போறேன். வேலை கிடக்கு’ என்று எழுந்து அந்த ஒற்றையறை வீட்டின் வாசலை நோக்கிப் போகப் போனவள், வாயில் பக்கமாக ஏதோ அரவம் கேட்கவும், ‘இல்ல.. அப்புறமாப் போறேன்’ என்றபடி மீண்டும் வந்து கணவன் அருகில் அமர்ந்தாள். முத்துவீரனும் வாசலை எட்டிப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. சங்கரியின் முகம் ஏதோ யோசனைக்குள்ளாகி மீண்டும் இயல்பானது போல் தெரிந்தது. ‘ஏன் வேலை பார்க்கும் போது வளையலைப் போட்டுக்கிட்டா என்ன?’ என்றான் திடீரென்று. அந்த வளையலை எவ்வளவு ஆசையாக சங்கரி வாங்கினாள். அதைப் போட்டுக் கொண்டு கையை முன்னும் பின்னுமாக ஆட்டுவதும், போடும் ஒவ்வொரு உடைக்கும் இந்த வளையல் மேட்ச் ஆகுதா? மேட்ச் ஆகுதா? என்று அடிக்கடி கேட்பதும் நினைவுக்கு வந்தது. இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த கவரிங் வளையல் நிறம் மாறாமல் இருப்பது பெரிய விஷயம்.

முத்துவீரனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனது பக்கவாட்டில் தொங்கிய சிறு நீர்ப்பையை சோதித்துப் பார்த்தாள் சங்கரி. ‘அரை மணி நேரம் கழிச்சு கொட்டுறேன்’ என்றவளிடம் ‘இன்னைக்கு டியூப் மாத்தி விடுறியா? நேத்தேலயிருந்து லேசா வலிக்குது’ என்றான் வீரன். காலண்டரைப் பார்த்து தேதியை எண்ணி, ‘அப்ப நேத்தே சொல்றதுக்கு என்ன? பத்தொம்பது நாளாச்சு. மாத்திற வேண்டியதுதான்’ என்று முத்துவீரனை நிமிர்த்தி சாய்வாகப் படுக்க வைத்தாள். சிறுநீர்ப் பையைப் பக்குவமாக பிரித்து கொண்டு போய் கழிப்பறைக்குள் ஊற்றி வந்தாள்.

‘ராஜவைத்தியம் தான் எனக்கு’ என்றான் முத்துவீரன். ‘ராஜாவுக்கு ராஜவைத்தியம் தான் கொடுக்கணும்’ மீண்டும் கணவனின் கன்னத்தைப் பிய்த்து முத்தம் கொடுத்தவள், மூக்கையும் பிடித்து நன்றாக ஆட்டினாள். ‘நீங்கதான் என்னை ராணி மாதிரி வச்சிருக்கீங்கள்ல.. அப்ப நான் ராஜா மாதிரி வச்சுக்கணும்ல?’ என்று அவள் சிரித்துக் கொண்டே கூற, ‘ராஜா மாதிரி.. நான்?’ என்றவன், அந்த ஒற்றை அறையை சுற்றிலும் பார்வையை ஓட்டிப் பெருமூச்சு விட்டான்.

‘அதை விடுங்க. இப்பவே டியூப் மாத்திரலாமா?’ என்றாள் சங்கரி. காலையில் இருந்து ஓய்வில்லாமல் அவள் சுழல்வதைப் பார்த்தவன், ‘இல்லை.. ராத்திரிக்கு மாத்திக்கலாம். கொஞ்ச நேரம் படு’ என்றான். ‘இன்னும் ஒரு அம்பது தூள் சுத்திட்டன்னா நிம்மதியாப் படுப்பேன்’ என்று சொல்லிக் கொண்டே பீடித் தட்டை எடுத்துக் கொண்டு கணவனின் அருகில் அமர்ந்தாள்.

‘எங்க?அம்பது தூள் சுத்தறதுக்குள்ள அருண் வந்துருவான்.. அவனோட உனக்கு நேரம் சரியாப் போகும்..’

‘மகாராஜா இளவரசனோட மல்லுக்கட்ட வேண்டியது தான்’ என்றவளின் கைகள் லாவகமாகப் பீடி இலைகளை ஒரே அளவாக அச்சில் வைத்து கத்தரிக்க ஆரம்பித்தன. எண்ணம் அவளது அந்த வாரத்தின் வருமானத்தையும், உத்தேசமான செலவையும் கணக்கிட்டு கொண்டிருக்க, கைகள் தம் வேலையைத் தொடர்ந்தன.

‘கொஞ்ச நேரம் படுடி சங்கரி’ என்று முத்துவீரன் மீண்டும் சொல்ல ‘இதோ அஞ்சு நிமிஷம்’ என்று கூறிவிட்டுக் கூடுதலாகப் பத்து நிமிடம் செலவழித்து தன் வேலையை முடித்துவிட்டே தலை சாய்த்தாள்.

ஒரு வருடம் முன்பு வரை சங்கரியை வீரன் மகாராணி போல் தான் வைத்திருந்தான். அவள் வீட்டையும், குழந்தையையும் மட்டும் கவனித்துக் கொண்டு சந்தோஷமாக வலம் வர, உழைத்துக் கொண்டு வந்த அனைத்துப் பணத்தையும் அவள் கையில் தான் கொடுத்தான்.‌ தெருவிலேயே அவளிடம் தான் நன்றாகக் காசு புழங்கும். அவ்வப்போது சங்கரியிடம் கடன் வாங்கும் பெண்கள், தன் கணவன் வீரனைப் போல் இல்லையே என்று அங்கலாய்த்து விட்டுத் தான் செல்வார்கள். அப்போது அவளும் ராணி மாதிரித் தான் உணர்ந்தாள்.

தென்னை மரத்தில் ஏறிய முத்துவீரன் கால் வழுக்கிக் கீழே விழும் வரை எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. விழுந்ததில் கழுத்தெலும்பில் முறிவு ஏற்பட்டு விட, மூன்று மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக அலைந்து திரிந்து, கழுத்துக்குக் கீழ் எதுவும் செயல்படாத நிலையில் கணவனைக் கொண்டு வந்து வீட்டில் படுக்க வைத்தாள் சங்கரி.

‘முழு நேரமும் படுக்கையில் தான் இருப்பானாம்ல இனிமே? எத்தனை நாள் இருக்க முடியும்? ஒரு வாரம் கிடையில கிடந்தாலே புண்ணு கிண்ணு வச்சு நாறிரும்னு சொல்றாங்க’ என்று உறவினர்கள் சொன்னதையும் மீறி மருத்துவமனையில் சொல்லி அனுப்பியதை இம்மி பிசகாமல் கடைப்பிடித்து, கணவனை அப்படியே பூப்போல் பாதுகாக்கிறாள் சங்கரி.

சிறுநீர்ப்பைக்குக் கட்டுப்பாடு இருக்காது என்பதால் எப்போதும் டியூப் போட்டுத் தான் இருக்க வேண்டும் என சொல்லிவிட்டார்கள். இந்த வாழ்வும் அவளுக்கு பழகிவிட்டது. ‘கணவனை உயிரோடு கொடுத்தாயே கடவுளே.. அது ஒன்றே போதும்’ என்று சிரிப்புடனே இருக்கிறாள்.

ஓரிரு மாதங்களாக அந்த சிரிப்பு மங்கத் துவங்கியிருக்கிறது. பரிதாபமாகப் பார்த்த பெண்கள் எரிச்சலுடன் பார்த்தனர். மாடி வீட்டில் இருக்கும் முத்துவீரனின் அண்ணனும் அண்ணியும் கூட நடவடிக் கையில் நிறைய வித்தியாசத்தைக் காட்டினர். முதல் மாதத்தில் ஓடி ஓடி எதுவும் வேண்டுமா என்று கேட்ட அண்ணி வெளிப்படையாகவே சலிக்க ஆரம்பித்து விட்டாள். இத்தனைக்கும் சங்கரி ஒன்றும் சாப்பாட்டிற்காக யாரிடமும் போய் நிற்கப் போவதில்லை.

‘வெளியூர்ல ஒரு வேலை இருக்கு போறியா?’ என்று கேட்கும் ஷாப் கடைக்கார அண்ணனின் பார்வையும், வாசலிலே காய்கொண்டு வரும் கிழவனின் பார்வையும் மாறியிருப்பதை சங்கரியால் புரிந்து கொள்ள முடிந்தது. முத்துவீரனின் அண்ணன் முனியசாமி சும்மா சும்மா எட்டிப் பார்ப்பதும், நேற்று முன்தினம் சரியாக இவள் பாத்ரூமைத் திறக்கப் போகும் நேரம் தாள் போடாமல் குளித்ததும், எதேச்சையானதாகத் தெரியவில்லை. ஒரு வேளை கணவனின் பார்வை கொழுந்தன் மனைவியின் மேல் படித்திருக்கிறது என்பதைத் தெரிந்த பின்பு தான் நன்றாக இருந்த லட்சுமியும் முறுக்கிக் கொள்கிறாளோ என்னவோ. இது எல்லாவற்றையும் முத்துவீரனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். இதுவரை மனைவி கவனிக்கவில்லை என்று கணவனும், கணவன் கவனிக்கவில்லை, இப்படியே இருக்க வேண்டும் என்று சங்கரியும் மாறி மாறி மனதுக்குள் வேண்டிக் கொண்டது தான் மிச்சம்.

நடக்கவியலாமல் கிடப்பவனின் மனைவி காய்ந்து போய்த்தான் கிடப்பாள் என்பது பார்க்கும் ஆண்களின் மனதிலெல்லாம் எப்படித்தான் பதிந்தது என்று எவ்வளவு யோசித்தாலும் சங்கரிக்குப் புலப்பட மாட்டேன் என்றது. அதேபோல் சங்கரியின் தலையாயக் கடமையே மற்றவர்கள் கணவன்களை வளைத்துப் போடுவது தான் என்பது போல் பார்க்கும் பெண்களின் மனநிலையும் புரியத்தான் மாட்டேன் என்றது. ஒரு சமயம் இத்தனை நாட்களில் சிறுகச் சிறுக அவர்கள் தன்மேல் வளர்த்த பொறாமையால் இப்படிப் பார்க்கிறார்களோ என்றும் நினைப்பாள் சங்கரி.

தெருவிலேயே ஆறு மணியானால் வீட்டுக்குள் வந்த ஒரே ஆண் முத்துவீரன் தான். சம்பாதித்த பணத்தை அப்படியே கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தவன் ஊரிலேயே இவன் ஒருவனாகத் தான் இருப்பான். அவன் ஒருவன் சம்பாத்தியத்தில் கோவில், குளம், சினிமா, உடைகள் என்று அந்தச் சின்னக் குடும்பம் நிறைவுடன் இருந்ததுதான் யாருக்கும் பொறுக்கவில்லை போல. முதல் சில மாதங்கள் உச்சுக்கொட்டி விட்டு, இப்பொழுது கரித்துக் கொட்டுகிறார்கள்.

இருபது நிமிடம் கூடத் தூங்கியிருக்க மாட்டாள் சங்கரி. பரபரப்பாக எழுந்து அமர்ந்தாள். மணியைப் பார்த்த முத்துவீரன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘இன்னும் கொஞ்ச நேரம் படுன்னு சொல்லப் போறீங்க.. துணியை ஊறவச்சு எவ்வளவு நேரம் ஆச்சு? அருண் வந்துருவான். உலை வைக்கிறேன்’ என்று அவனைப் பேச விடாமல் எழுந்து போனாள் சங்கரி. தலை வலிப்பது போல் இருந்தது முத்துவீரனுக்கு.

கழுத்துக்குக் கீழ் உணர்ச்சி மிகக் குறைவாகவே இருந்தாலும் சிறுநீர்ப்பையில் மாட்டியிருக்கும் கத்தீடர் தரும் அசவுகரியத்தை அவனால் உணர முடிந்தது. தலைவலியும் கூட அதனால் இருக்கும் என்று தோன்ற, இரவு சாப்பாட்டுக்கு மேல் சங்கரியை மாற்றிவிடச் சொல்லலாம் என்று நினைத்துக் கண்ணை மூடினான்.

கடந்த இரண்டு தடவையாக சங்கரி தான் சிறுநீர்க் குழாயை மாற்றுகிறாள். ஏதோ அரசின் புதிய திட்டம் என்று, படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான கத்தீட்டர்கள், கையுறைகள், யூரோ பேக்குகள் மூன்றையும் வீடுதேடி வந்து கொடுத்தார்கள். அப்படியே குழாய் மாற்றுவதற்கான பயிற்சியையும் கொடுத்தார்கள்.

வேலைகளை முடித்து குழாய் மாற்றத் தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு அவள் வந்தமர்ந்த போது சங்கரியின் முகம் கசங்கிப் போயிருந்தது. வழக்கத்துக்கு அதிகமான அண்ணனின் நடமாட்டமும், கீழே அமர்ந்து அவன் புகைத்துத் தள்ளுவதையும் முத்துவீரன் கண்களிலும் படத்தான் செய்தது. தூக்கி வளர்த்த அண்ணனா இப்படி என்று நம்ப முடியவில்லை அவனுக்கு. ஒரு வேளை தன்னுடைய பிரமையா இதெல்லாம் என்றும் நினைத்தான். அப்புறம் ஏன் சங்கரியின் முகம் தெளிவற்றிருக்கிறது என்று அவன் யோசனை ஓட, பழைய டியூபை அகற்றினாள் சங்கரி. புதிய டியூபை நுழைப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. லேசாக அழுத்தம் கொடுத்தாள். கண்மூடித் திறப்பதற்குள் களகளவென்று இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. எப்போதும் போல சலனமின்றிப் படுத்திருந்தான் வீரன். பெருக்கெடுத்து வடிந்த இரத்தத்தைப் பார்த்தவுடன் சங்கரிக்கு படபடப்பாக வந்தது. கையில் கிடைத்த துணிகளை எல்லாம் வைத்து அழுத்தினாள்.

‘என்னங்க.. ரத்தமா வருது‘ என்று அவள் பதற, அப்போதுதான் படுத்திருந்த அருண் எட்டிப் பார்த்தான். ‘டேய் பெரியப்பாவைக் கூப்பிடுடா’ என்றாள் சங்கரி. அருண் கூப்பிடுவதற்கு முன்பாகவே முனியசாமி உள்ளே ஓடி வந்தான். தம்பியின் ஆணுறுப்பிலிருந்து வடிந்த இரத்தம், அவன் லுங்கியை நனைத்திருந்ததையும் சங்கரி அதை அழுத்திப் பிடித்திருப்பதையும் பார்த்தவனுக்கு என்னவோ போல் வந்தது.

‘மச்சான்! வண்டி எடுங்க மச்சான்‘ என்றாள் சங்கரி. பல மாதங்களுக்குப் பின் இன்று தான் அவனிடம் பேசுகிறாள். சுதாரித்துக் கொண்ட முனியசாமி வண்டியை எடுத்து வெளியே நிறுத்த, அரவம் கேட்டு மேலிருந்து லட்சுமியும் ஓடி வந்தாள். லட்சுமியும் சங்கரியும் முத்துவீரனைக் கைத்தாங்கலாகப் பிடித்து முனியசாமியின் பின் அமர வைக்க, வேறு வழியில்லாததால் சங்கரி அவனுக்குப் பின்னால் ஏறி அமர்ந்து முத்துவீரனை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

‘விலக்கு வரைக்கும் போயிட்டோம்னா ஆட்டோ ஏதாவது வரும்’ என்றபடி முனியசாமி வண்டியைச் செலுத்த, முக்கால்வாசி தூரம் கடந்த பின்பே ஒரு ஆட்டோ தென்பட்டது. இவர்கள் மூவருமாகத் திணறலுடன் வருவதைப் பார்த்து ஆட்டோக்காரனே நிறுத்த, வீரனை ஆட்டோவுக்கு மாற்றி மருத்துவமனைக்குச் சென்று சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆனது. சங்கரிக்குக் குற்றவுணர்ச்சி குறையவே இல்லை. யார் மேலோ உள்ள கோபத்தைக் குழாய் மாட்டும் போது காட்டி விட்டேனோ என்ற பதட்டத்திலேயே இருந்தாள். மீண்டும் மீண்டும் அவள் அது குறித்துப் புலம்ப, ‘ஒண்ணும் பிரச்சனை இல்லம்மா.. சில சமயம் இப்படி எங்களுக்கே ஆகுறதுண்டு. இப்பப் பாருங்க, ரத்தம் நின்னுடுச்சு.‌ ஊசி போட்டிருக்கோம்.. நாலு நாளைக்கு டயாபர் மாட்டி விடுங்க. புண்ணு ஆறட்டும். இதைவிட சின்ன சைஸ் டியூபா அடுத்த தடவை போட்டுக் கலாம்‘ என்று அவளை ஆசுவாசப்படுத்தினார் டாக்டர்.

வெகுவாகப் பதற்றம் குறைந்திருக்க, கிளம்ப வேண்டுமே என்று வெளியே வந்து பார்த்தாள் சங்கரி. முனியசாமி தொடர்ச்சியாகப் பீடி பிடித்துக் கொண்டிருந்தான். அந்த ஆட்டோ போய் விட்டிருந்தது. ‘வேற ஆட்டோ கூப்பிடுங்களேன்‘ என்று சங்கரி சொன்னதற்கு, முனியசாமி ஒரு மாணவனைப் போன்ற பணிவுடன் ஓடினான். ஆட்டோவில் சங்கரியையும் வீரனையும் ஏற்றியபின் வண்டியில் கூடவே மெதுவாக ஓட்டி வந்தான். அவனது உடல்மொழியில் புதிய மாற்றம் பிறந்திருப்பது சங்கரிக்குத் தெரிந்தது. நிம்மதியுடன் வீரனின் உணர்வுகளற்ற தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

வீட்டை அடைந்த போது, அருண் தூங்கியிருக்க, லட்சுமி இவர்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தாள். சில மாதங்களாய் சங்கரியைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் வரும் கடுகடுப்பை அப்போது காணவில்லை. ஆட்டோக்காரரும் முனியசாமியும் சேர்ந்து வீரனை உள்ளே கொண்டு வந்து படுக்க வைத்தனர்.

சங்கரி பிடித்துக் கொண்டாள். முனியசாமி சங்கரியின் மேல் பட்டுவிடக் கூடாது என்று கவனத்துடன் விலகி நின்றான். ஒன்றும் பேசாமல் அவன் மாடி ஏறிப் போனதும் சங்கரியின் அருகில் வந்திருந்த லட்சுமி, ‘தலைக்கு ஊத்தியிருக்க போல.. நைட்டியில லேசா கரையா இருக்கு. பாத்துக்கோ’ என்று கூறிவிட்டுச் சென்றாள். அப்போதுதான் தனக்கு மாதவிடாய் வந்திருப்பதைக் கவனித்தாள் சங்கரி. வீரனுக்கு நீராகாரத்தைச் சூடு செய்து கொடுத்துவிட்டுத் தன் உடையை மாற்றினாள். மதியம் ஊறவைத்த துணிகளையும் இன்னும் துவைக்கவில்லை. ரத்தக்கறை படிந்த வீரனின் உடைகளுடன் தன்னுடையதையும் சேர்த்துத் துவைக்க ஆரம்பித்தாள். கறையை பரட்பரட்டென்று பிரஷ்ஷால் தேய்க்கும் சத்தம் வீரனுக்குக் கேட்டது.

ஆயிரம் அறிவுரைகளும், இத்தனை நாள் வளர்ப்பும் கொடுக்காத மாற்றத்தை இந்த உதிரம் தானே முனியசாமிக்குக் கொடுத்தது என்று தோன்றியது சங்கரிக்கு. அவ்வளவு நாள் சேர்த்து வைத்திருந்த அழுத்தம், இரண்டு சொட்டுக் கண்ணீராய் அவள் கண்களிலிருந்து வெளியேறி துவைத்துக் கொண்டிருந்த துணியின் மேல் விழுந்து, சோப்பு நுரையுடன் சேர்ந்து ஓட்டையின் வழியாக வெளியேறியது. துணிகளை உலர்த்தி முடித்த கணம், வார்த்தையால் சொல்லவியலாத ஆசுவாசம் சங்கரியின் மனதில் நிறைந்திருக்க, வீரனும் தூங்கிப் போயிருந்தான்.

– ஜூலை 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *