உதவும் கரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 8, 2024
பார்வையிட்டோர்: 1,071 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாஸ்கருக்குப் போனமாதம்தான் கல்யாணம் ஆகியிருந்தது. ஒருமாதம் விடுமுறையில் சீரங்கம் போனபோது தீடீரென்று ஒரு வரன் குதிர்ந்திருப்பதாக அம்மா சொன்னாள். பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று கெளசல்யாவை. முகூர்த்த நாள் பார்த்து, சத்திரம் பார்த்து கல்யாணம் முடிவதற்குள் அவனுடைய ஒரு மாத விடுமுறை ஏறக்குறைய காணாமல் போயிருந்தது. ஐந்து நாட்கள் மட்டுமே அவன் கௌஸல்யாவுடன் இருக்க முடிந்தது. அதிலும் பாதி உறவினர் விருந்து உபசாரத்தில் கழிந்து விட்டிருந்தது. ஆசை அறுபது நாள் என்பது மைக்ரோ சிப்பில் போட்ட மாதிரி அறுபது மணி நேரத்தில் முடிக்க வேண்டி இருந்தது. அதற்கப்புறம் ஆடி வந்து சதி பண்ணியதில் இன்னும் ஒரு மாதம் தள்ளிப் போயிற்று.

இன்று கௌஸல்யா அவன் வேலை பார்க்க்கும் ஊருக்கு வரப்போகிறாள். பாஸ்கருக்கு வங்கியில் வேலை. தெரியாத்தனமாக பதவி உயர்வுத் தேர்வை எழுதித் தொலைத்து, அதிகாரியாக ஆகியிருந்தான். கொல்கத்தாவிலிருந்து கயா செல்லும் வழியில் ஒரு கிராமத்துக் கிளையில் போஸ்டிங். ஊர் சரியான கிராமம். பாஸ்ஞ்சர் ரயில்கள் மட்டும்தான் இங்கே நிற்கும். அதுவும் ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ. இப்போதுகூட கௌஸல்யா வரப்போகும் பாஸஞ்சர், கொல்கத்தாவிலிருந்து மாலை ஆறு மணிக்குக் கிளம்பி, ஆடி அசைந்து, இரவு பதினொன்றரைக்குத்தான் வந்து சேரும். அதுவும் அவ்வளவு நிச்சயமில்லை.

பாஸ்கர் மனதை மேலும் சில விசயங்கள் குழப்பிக் கொண்டிருக்கின்றன. கௌஸல்யாவுடன் மாமனாரோ மாமியோரோ வரமாட்டார்கள். சென்னை வரை வந்து, ரயில் ஏற்றி விட்டு அவனுக்கு தந்தி அடித்திருந்தார்கள். கொல்கத்தாவில் கௌஸல்யா அவளுடைய அத்தை பையன் வீட்டில், மாலை வரை தங்கிவிட்டு, ரயில் ஏறியிருப்பாள். அத்தை பையனாவது கூட வந்திருக்கலாம். அவனாலும் முடியவில்லை. அவனுக்கு தனியார் நிறுவனத்தில் உத்யோகம். லீவு கிடைக்காது லேசில். அவன் மனைவியும் நிறைமாத கர்ப்பிE.

அந்த ஸ்டேசனில் அந்த இரவு நேரம் அவ்வளவாக நடமாட்டம் இல்லை. பாஸ்கர் வங்கி மேலாளரிடம் கேட்டு, வங்கியின் மோட்டார் சைக்கிளை எடுத்து வந்திருந்தான். லக்கேஜ் அதிகமாக இருந்தால், ஸ்டேசன் மாஸ்டர் அறையில் வைத்துவிட்டு, காலையில் வண்டி ஏற்பாடு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான். பதினொன்றரைக்கு வர வேண்டிய ரயில் வரும் சுவடே தெரியவில்லை. ஸ்டேசன் மாஸ்டர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

பாஸ்கர் மெல்ல ஸ்டேசன் மாஸ்டர் அறையை நோக்கி நடந்தான். அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மெல்ல அவரை தட்டி எழுப்பி, தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில், ரயில் பற்றி விசாரித்தான். வழியில் ஏதோ ஆக்ஸிடெண்டாம். ரயில் இரண்டு மணி நேரம் தாமதம் என்று சொல்லிவிட்டு, மறுபடியும் தூங்கப் போய்விட்டார்.

ஆன்ஸிடெண்ட் என்றால் எந்த ரயில்? கௌசல்யா வரப்போகும் ரயிலா? அல்லது அதற்கு முந்தைய ரயிலா? ஆக்ஸிடெண்ட் என்றால் உயிர் சேதம் உண்டா? பெயர் விபரம் ஏதேனும் கிடைக்குமா? பாஸ்கரின் மனதை ஆயிரம் கேள்விகள் குடைந்தன.

இரண்டு மணி நேரம் கழித்து, அவன் எதிர்பார்த்த ரயில், ஆடி அசைந்து வந்தது. அது ஒன்றும் ஆக்ஸிடெண்ட் ஆனமாதிரி தெரியவில்லை. பாஸ்கருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. கடைசி ஆள் இறங்கி வரும்வரை பாஸ்கர் காத்திருந்தான். ஆனால் கௌஸல்யா வரவில்லை.

கௌஸல்யா என்ன ஆனாள்? அவளுக்கு ஏதேனும் ஆகியிருக்குமா? ஒரு வேளை அவளுக்கு ஏதேனும் ஆகியிருந்தால், உலகம் தன்னை எப்படிப் பார்க்கும். புது மனைவியை முழுசாகக் கூடப் பார்க்காமல் தொலைத்த கணவனுக்கு சமூகத்தில் என்ன இடம்? அவன் துரதிருஷ்டம்தான் அவளை அடித்துப் போட்டு விட்டது என்று பேசுவார்களா?

ரயில் மெல்ல அவனைக் கடந்து போனது. வினாடி நேரத்தில் அதன் முன் பாய்ந்து விடலாமா என்று கூட ஒரு யோசனை வந்தது. கௌஸல்யாவின் முகம் ஒரு வினாடி அவன் கண் முன் வந்து போனது. கல்யாண போட்டோக்களை, அலுவலக நண்பர்களிடம், அந்த ஊரில் தெரிந்தவர்களிடம் எல்லாம் இந்த ஒரு மாதத்தில் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டது தப்போ என்று தோன்றியது. இப்படியே இன்னும் ஒரு மணி நேரம் ஸ்டேசனிலேயே உட்கார்ந்திருந்தான்.

பெருத்த பிரயாசைக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் வீடு வந்து சேர்ந்த போது, உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டு, வாசல் கதவு திறந்தது.

வாசற்படியில் கௌஸல்யா நின்று கொண்டிருந்தாள். பின்னாலிருந்து பைஜாமா ஜிப்பாவோடு ஒரு பஞ்சாபி இளைஞன் எட்டிப் பார்த்தான். பாஸ்கரைப் பார்த்தவுடன் கௌஸல்யா உடைந்து அழுதாள். இவர்தான் என்னை பத்திரமா இங்கே கொண்டு வந்து சேர்த்தார் ‘ என்று திரும்பி அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

“ இவர் பெயர் அர்விந்த் கோஸ்வாமி” என்றாள் கௌசல்யா. அந்த இளைஞன். களையாக இருந்தது அவன் முகம். அவன் டர்பனெல்லாம் கட்டியிருக்கவில்லை. டர்பன் கட்டும் பஞ்சாபி இல்லையோ? அவன் பஞ்சாபியே இல்லை! உத்திராகண்ட் மாநிலமாம். பிழைப்பு தேடி இங்கே வந்த குடும்பமாம். முதலில் கொஞ்சம் சந்தேகமும், பொறாமையும், கோபமும் கூட வந்தது பாஸ்கருக்கு. பொழுது போகாமல் பார்த்த, புரியாத, மிஸ்டர் அன்ட் மிஸ்ஸ் ஐயர் படம் ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கணவனைப் பார்க்கும் ஏக்கத்துடன் வரும் மனைவி, தனியிடத்தில், மழையில், அழகான இளைஞனுடன் இருக்க நேர்ந்தால், என்ன ஆகியிருக்கும்? என்கிற விபரீத கற்பனைகள் பாஸ்கரின் மனதில் ஓடின.

சரி! விபத்து என்கிறார்களே? இவள் எப்படி தப்பித்தாள்? இவன் காப்பாற்றினானா? என்ன விபத்து? கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன பாஸ்கரின் மனதில்.

மெல்ல உள் நகர்ந்து, ஒரு நாற்காலியில், துவைத்த துணி போல உட்கார்ந்தான் பாஸ்கர்.

சட்டென்று இன்னொரு விசயம் மூளையைத் தாக்கியது. எப்படி உள்ளே வந்தார்கள்? எத்தனை காலம் ஆயிற்று. சகஜமாக இருக்கிறார்களே? இடத்தையும் தனிமையையும் பயன்படுத்திக் கொண்டு விட்டார்களா?

எதிரே கோஸ்வாமி

ஒரு மௌன ஸ்வாமியாக உட்கார்ந்திருந்தான். நாகரீகம் காரணமாக அவனை நோக்கி புன்னகைத்தான். எப்படிக் கேட்பது? இவன் இரவு இங்கேயே இருக்கப் போகிறானா? இன்று மட்டும் தானா? இல்லை இரவுகளா?

“டீ போட்டேங்க! சப்பாத்தியும் டாலும் செஞ்சிருக்கேன்! அர்விக்கு அரிசி ஒத்துக்காதாம்!”

“அர்வி!!“ என்ன செல்லம் கொஞ்சுகிறாள். திட்டமிட்ட சந்திப்பா இது? ஏற்கனவே தெரிந்தவனா?

“சார் யாருன்னு..?”

“ஓ! மறந்தே போய்ட்டேன்! இவரு இந்த ஊராம்.. பக்கத்து கிராமம். நல்லா படிச்சிருக்காரு.. ஆனா வேலைதான் கெடைக்கலை. அதனால ரயில்லே தினமும் ஏதாவது பொருளை விக்கற வேலையை செஞ்சுகிட்டு இருக்காரு! இந்த மணிகள் கோர்த்த பணப்பை கூட இவருக்கிட்டே வாங்கினது தான். அவங்க அக்கா தான் செய்வாங்களாம்! அவங்க ஒரு விதவை.. பால்ய விவாகத்தால முளைச்ச விதவை.. இங்கே மறுமணம்லாம் ஊர் பஞ்சாயத்து ஏத்துக்காதாம். அதனால் இவரு அக்காவுக்கு ஒத்தாசையா இருக்காராம்”

“இப்ப உனக்கு ஒத்தாசையா வந்துட்டானாக்கும்!’ என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர். அப்புறம், இவர் டிஃபரண்ட்லி ஏபிள்ட்! மூளை சரியா வளரலை. எதையும் மெதுவாத்தான் செய்வாரு. ஆனா அதுதான் என்னை காப்பாத்திச்சு”

பாஸ்கர் நிமிர்ந்து உட்கார்ந்தான். சுவாரஸ்யம் அவனைத் தொற்றிக் கொண்டது. என்ன? என்பது போல புருவங்களை உயர்த்தினான்.

“இங்கெல்லாம் ரொம்ப மோசங்க! ரயில் ஏதோ விபத்துன்னு தாமதமாச்சு. அப்ப நான் தூங்கிட்டிருந்தேன். அதனால எனக்குத் தெரியலை. இதுக்கு முன்னால ஏதோ ஒரு ஸ்டேசன்ல, நான் இந்த ரயில் இங்கே வரவேண்டிய நேரத்துக்கு இறங்கிட்டேன். பாத்தா உங்களைக் காணோம்? பயமா போயிடிச்சு..அப்பத்தான் இவரு இந்த மணி பைகளை எல்லாம் மாட்டிக்கிட்டு வந்தாரு. இவருக்கு ஸ்டேசன் மாஸ்டருங்க எல்லாம் சிநேகிதம் போல. அதனால் உடனே மாஸ்டரை எழுப்பி பாதி ஸ்டேசன் தாண்டியிருந்த ரயிலை நிக்க வச்சுட்டாரு. கூடவே என் பைகளைத் தூக்கிட்டு ஓடிப் போய், ரயில் ஏறினோம். அந்த அவசரத்துல இவர் விக்கறதுக்கு வச்சிருந்த பைகள் எல்லாம் எங்கியோ விழுந்துடுச்சி. “

ஆச்சர்யமாக அவனைப் பார்த்தான் பாஸ்கர். அரவிந்த் புரிந்தது போல புன்னகைத்துக் கொண்டிருந்தான். வந்து கொஞ்ச நேரம் தாங்க ஆச்சு. உங்க முகவரியை காட்டினேன். அதுக்கு ஒரு குறுக்கு வழி இருக்கறதா சொல்லி, ஸ்டேசனுக்கு அந்தப் பக்கம் இறக்கி விட்டு, என்னை இங்கே அழைச்சிக்கிட்டு வந்துட்டாரு.. வாசல் விளக்கு ஆணியிலே ஒரு சாவி மறைவா மாட்டி வச்சிருப்பேன்னு நீங்க கடிதம் எழுதினது ஞாபகம் வந்துச்சு. தேடி எடுத்து உள்ளே வந்துட்டோம்.”

இனிமே தான் க்ளைமேக்ஸ் என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர்.

“என்னை உள்ளே அனுப்பிட்டு கதவை பூட்டி சாவியை என்கிட்டே கொடுத்துட்டாரு இவரு. இதுவரைக்கும் வெளியேதான் இருந்தாரு. உங்க பைக் சத்தம் கேட்டவுடனே தான், நான் இவரை உள்ளே கூப்பிட்டேன். மூளை வளரலேன்னாலும், என்ன கண்ணியம் பாருங்க”

வாசலில் நிழலாடியது. வடக்கத்தி புடவையில் ஒரு பெண்மணி நின்றிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அரவிந்த் துள்ளி எழுந்தான்.

‘மேரா பெஹன்’ என்று குழறினான்.

அவள் அப்படியே கௌசல்யாவை உரித்து வைத்திருந்தாள். கொஞ்சம் வயது கூட அவ்வளவுதான்.

அக்காவும் தம்பியும் கும்பிட்டு விடை பெற்றார்கள். அரவிந்த் கைகளில் ஐநூறு ரூபாய் நோட்டை வைத்து அழுத்தினான் பாஸ்கர்.

மணிப்பை நஷ்டத்திற்கு அல்ல..மணியான மனிதத்திற்காக!

– மார்ச் 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *