கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 2,641 
 
 

‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு..! ‘- சமாச்சாரமாய் முன்னே ஜோடியாய் நடந்து சென்றுகொண்டிருக்கும் கந்தனையும் , காளியையும் கண்டு ஒதுங்கி, தாண்டித்தான் சென்றாள் கல்யாணி.

அப்படி ஒதுங்கிப் போனவளை சும்மா விட மனசில்லை கந்தனுக்கு. இவன் வளைத்தும் அவள் வளையாத ஆத்திரம் அவனுக்கு.

“மச்சி ! ஒரு விடுகதை போடுறேன். விடை சொல்றீயா…?” சும்மா வந்த காளியிடம் வழிய பேச்சுக் கொடுத்தான்.

கல்யாணி காதில் விழ வேண்டுமென்பதற்காகவே குரலை உயர்த்தி உரக்கச் சொன்னான்.

“சொல்றேன் ..!” இவன் சூதுவாது தெரியாத அப்பாவி காளி . பதில் சொன்னான்.

“கஞ்சித் தண்ணிக்கே வழி இல்லே. கல்லூரிக்குப் போறாளாம் ஒருத்தி. அவ யாரு.? ..” ராகம் போட்டு கேட்டான்.

கல்யாணிக்கு…. ‘

அவன் யாரைச் சொல்கிறான்..? ‘என்று புரிய சொரக்கென்றது.

காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு நடந்தாள்.

விபரம் தெரியாத காளி…

“தெரியாது !” சொன்னான்.

“புரிலயலையா..? கொஞ்சம் உடைச்சு சொல்றேன். முயற்சி பண்ணு..”என்றவன்….

“ஆத்தாக்காரி செமகட்டை. கொலுத்துக்காரி. இப்போ யாருன்னு சொல்லு..? ”

“த்தூ..!” காறித்துப்ப வேண்டும்போல் இருந்தது கல்யாணிக்கு.

அவர்கள் ஆம்பளை. ஒருவருக்கிறவர். ! – அடக்கிக்கொண்டாள்.!

யோசித்த காளி…

“தெரியல சாமி !” ஒத்துக்கொண்டான்.

கந்தன் விடவில்லை. கல்யாணியை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே…

“எல்லாம் நம்ப ஊர் குட்டிதான் மச்சான். ஆள் படிக்கப் போறாளா..? இல்லே எங்காவது படுக்கப் போறாளா… தெரியல. ஆனாலும்… எனக்குள் ஒரு சந்தேகம் மச்சி. ஆத்தாக்காரி படு நெருப்பு. தொட்டா கொன்னுடுவாள். பார்த்தா பொசுக்கிடுவாள்.பொண்ணு மட்டும் எப்படி தாறுமாறாய் இருக்க முடியும்..?” என்றான்.

கல்யாணிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. வெடுக்கென்று திரும்பி அவனை அக்னியாய்ப் பார்த்தாள்.

காளிக்கு இப்போதுதான் கந்தன் இவளை சொல்கிறான் ! என்கிற உண்மை நிலவரம் புரிய…. பயம் வந்தது. முகம் கலவரமாகியது.

வம்பு வேண்டாம் ! என்று கல்யாணியை முந்திச் செல்லாமல் நடை வேகத்தை மட்டுப் படுத்தினான்.

கந்தனும் வழி இல்லாமல் நடையைத் தளர்த்தினான்.

கல்யாணிக்குள் கோபம் ! எட்டி நடையைப் போட்டாள்.

‘அவன் வாயை முறைத்து அடக்கியாகி விட்டது. இன்னும் ஊரில் இவனைப் போல் எத்தனைப் பேர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்களோ..?! ‘- நினைக்க கல்யாணிக்குள் வயிற்றைக் கலக்கியது.

அன்றாடம் உழைப்பு,கூலி கொண்டு வந்தால்தான் அடுப்பில் நெருப்பு எரியும் நிலை. இப்படி ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருத்தி எப்படி கல்லூரிவரை சென்று படிக்க முடியும்..? என்கிற சந்தேகம்எல்லோருக்கும்.

அரசாங்க பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புவரை இலவசம்.என்றாலும் விதவை, ஏழை என்பதால் மகளைக் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தாள் கல்யாணி.

அதற்கு மேல் முடியாதென்று நிறுத்தி விட்டாள். நான்காம் நாளே சேதி கேள்வி பட்டு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் இவள் வீட்டுப் படியேறினார்.

“ஏன்ம்மா நிறுத்துனீங்க..?” கேட்டார்.

கல்யாணி தன் நிலைமையை எடுத்துச் சொன்னாள்.

“புரியுதும்மா. உங்க மகள் ரம்யா நல்லா படிச்சி அதிக மதிப்பெண்கள் எடுத்து எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்காள். மேற்கொண்டு நல்ல படிப்பு படித்தால் நல்ல வேலைக்குப் போவாள். அப்போ உங்கள், அவள் எதிர்காலம் சிறப்பா இருக்கும்.”என்றார்.

“சரிங்க. பணம்….? ”

“அதைப் பத்திக் கவலைப் படாதீங்க. அதுக்குப் பொறுப்பு நான். நீங்க திருப்பித் தரவேண்டிய அவசியமில்லே. பொண்ணை மட்டும் மேல படிக்க சம்மதம் சொல்லுங்க. இவள் என்ன படிச்சா சீக்கிரம் வேலைக்குப் போகலாம். அதுக்கு என்ன படிப்பு என்பதை பத்தியெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ! நல்லா படிச்சி முன்னுக்கு வரவேண்டியவளை வறுமை காரணமா முடக்கிடக்கூடாதென்கிறதுதான் என் ஆதங்கம்.” சொன்னார்.

இவள் தலையசைக்க…

ரம்யா அருகிலுள்ள நகரத்திலிருக்கும் கல்லூரிக்குச் செல்கிறாள். பட்டப் படிப்பு படிக்கிறாள்.

அதுமட்டுமில்லை. அவள் படிப்பு விசயத்தோடும் நிற்கவில்லை.

கல்யாணி நான்கு நாட்களாக ஜுரம். வேலைக்குச் செல்லவில்லை. உடன் மருத்துவரிடம் அழைத்துச் சென்று… மருந்து மாத்திரைகள் வாங்கி குணப்படுத்தி விட்டாள் ரம்யா.

உடல் உபாத்திரவத்தில் ஒன்றும் சொல்லாமல் முடியலாம் போனாலும்….நேற்று…

“என்னிடம் சல்லிக் காசு வாங்காம என் மருத்துவ செலவுக்கு ஏதுடி பணம்…?” உள்ளுக்குள் ஓயாமல் உறுத்திய கேள்வியைக் கேட்டும் விட்டாள்.

“அது ஏன் உனக்கு…? எனக்கு வர்ற உதவித் தொகையில் உனக்கு செலவு…” சொன்னாளேத் தவிர விபரம் சொல்லவில்லை.

இவளும் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இது போல் ஒரு முறை இல்லை. இரண்டு மூன்று முறைகள்.

எப்படி பணம் புரள்கிறது…?

ரம்யா ஓய்வு நேரத்தில் தையல் அது இதுவென்று கற்று சம்பாதிக்கிற மாதிரியும் தெரியவில்லை. கல்லூரிக்குச் சரியான நேரத்தில் சென்று சரியான நேரத்தில் திரும்புகிறாள்.

அப்படி இருக்கும்போது பணம் வர வழி …?

இவளுடன் சிமெண்ட் சட்டி துக்கும் வீராயிக்கு விசனம்.

“ஒரு புள்ளைய படிக்க வைக்கவே தாவு அறுந்து போகுது. அதுவும் அஞ்சாம் வகுப்பு. அத்தினிக்கும்….. புத்தகம், நோட்டு, பென்சில், பேனா, பை, செருப்பு, கால் சட்டை, மேல் சட்டை எல்லாம் கொடுத்து புள்ளையைக் குளிப்பாட்டி பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போகலை. அது மட்டும்தான் அரசாங்கம் செய்யல. அதுவும் செஞ்சிடுச்சின்னா…நமக்கு அந்த தொல்லையும் இல்லே. இதுக்கே எனக்குக் கஷ்டமா இருக்கு. நீ எப்படி உன் பொண்ணை பெரிய படிப்பு படிப்பு வைக்கிறே…?” கேட்டே விட்டாள்.

“அரசாங்கம் உதவி செய்யுது. உதவித்தொகை தருது.!” மகள் சொன்னதையே அவளிடமும் சொன்னாள்.

அவளும் அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை.

இவள் எப்படி தானும் படித்துக் கொண்டு எனக்கும் செலவு செய்கிறாள்…?

ஒரு வேளை இவர்கள் சொல்வது மாதிரி பணம் பண்ணுகிறாளா..?!!! – கல்யாணி மனசுக்குள் முடிச்சிப் போட்டுக் கொண்டு வேலைகளைப் பார்த்தாள்.

மாலை வழக்கம் போல் ஆறுமணிக்கு கல்யாணி வீடு திரும்பும்போது ரம்யா எப்போதும்போல் கல்லூரி விட்டு வீட்டில் இருந்தாள்.

தரையில் இருந்த புத்தகத்தின் மேல் ஒரு கடிதம் இருந்தது.

“ரம்யா !” அழைத்தாள்.

“என்னம்மா..? ”

“யார் கடிதம்…? ”

“எனக்கு உதவி செய்யிறவருக்குக் கடிதம்..! ”

“காட்டுப் பார்ப்போம்..? ”

எடுத்துக் கொடுத்தாள்.

பெறுநர் முகவரியில்…சந்திரசேகரன், சென்னை முகவரி.

‘காதலனோ…?! ‘- பிரித்தாள்.

உயர்திரு ஐயா !

தங்கள் தாயாரின் இரண்டாமாண்டு கண்ணீர் அஞ்சலி விளம்பரத்தைத் தினசரியில் கண்டேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் அவர்கள் ஆத்மா சாந்தியடைய எனது வேண்டுதல்கள். நிற்க…ஆசிரியரின் வழி காட்டுதலாலும் அரசாங்க உதவித் தொகை, உங்கள் உதவியினாலும் நான் நன்றாகப் படிக்கிறேன். அத்துடன் உங்கள் உதவிப் பணம் என் தாயின் நோய் தீர்க்கும் மருந்தாகவும் அமைகிறது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். !

இப்படிக்கு…. ரம்யா ! கையெழுத்துப் போட்டு முடித்திருந்தாள்.

கல்யாணி புரியாமல் மகளைப் பார்த்தாள்.

“அம்மா! சில நடிகர்களைப் போல் பெரிய பெரிய பணக்காரங்களும் என்னைப் போல் ஏழை மாணவ, மாணவிகளைத் தத்தெடுத்துப் படிக்க வைச்சு சத்தம் போடாம நல்ல காரியம் பண்றாங்க. அப்படி என்னைப் படிக்க வைக்கிறவர்தான் இந்த சந்திரசேகரன். வயசு 50. பணம் எனக்கு மட்டும் உதவாம உனக்கும் உதவுதே…அதான்ம்மா. இந்த நன்றிக் கடிதம்.

இதுக்கு வழிகாட்டுதலே என் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்தான்ம்மா. இந்த மனிதரை அவர் இனம் கண்டு. தன் கடிதம் மூலம் உதவி செய்ய வைத்தார்ம்மா. என் வாழ்க்கையில மறக்க முடியாதவர்கள் இந்த ரெண்டு பெரிய மனிதர்கள்ம்மா.” பாசமாய் சொல்லி தழுதழுத்தாள்.

கல்யாணிக்கு நெக்குருகியது. மகளை நெஞ்சோடு இழுத்து அணைத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *