காலை ஆறு மணியிலிருந்து பரமசிவத்தின் வீட்டுப் போனும், கைபேசியும் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தன. பரமசிவமும் விடாமல் எடுத்து நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார்.
காலை ஒன்பது மணி வரை அவருக்கு அதே வேலையாக இருந்தது. போன் மணி ஓய்ந்தவுடன், கம்பியூட்டரில் உட்கார்ந்து பேஸ்புக்கைத் திறந்தார்.
பேஸ்புக்கில் முன் பின் பார்த்து அறியாத சுமார் நூறு பேர் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லியிருந்தார்கள். பொறுமையாக உட்கார்ந்து எல்லோருக்கும் தன் நன்றியைச் சொல்லி விட்டு, ஒரு மணி நேரம் கழித்து தன் மனைவி பாக்யத்தின் அருகில் வந்தார்.
“இத்தனை பிறந்த நாள் வாழ்த்துச் செய்திகள் வந்திருக்கிறதே, உங்க முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷமே காணோமே? ” என்று கேலியாகக் கேட்டாள் பாக்யம்.
பரமசிவம் இளமையில் ரொம்பக் கஷ்டப் பட்டவர். ஈரோடு கடை வீதியில் கைவண்டி இழுத்து தன் வாழ்க்கையைத் தொடங்கி படிப்படியாக முன்னுக்கு வந்தவர். இப்பொழுது அவருக்கு ஈரோட்டில் ஒரு ஸ்பின்னிங் மில் சொந்தமாக இருக்கிறது!அதைத் தவிர நான்கைந்து பஙு
கை வண்டி இழுத்தே தன் ஒரே மகன் அருள் மொழியை கஷ்டம் தெரியாமல், எம்.பி.ஏ. வரை படிக்க வைத்தார். தற்பொழுது ஒரு பெரிய நிறுவனத்தில் கோவையில் நிர்வாக இயக்குநராக அவன் இருக்கிறான். பரமசிவத்தின் தற்போதைய அந்தஸ்த்துக்கு ஏற்ப ஒரு பெரிய இடத்தில் திருமணமும் செய்து வைத்து விட்டார்.
மாமனார் சீராக வாங்கிக் கொடுத்த தனி பங்களாவில் கோவை ஆர்.எஸ். புரத்தில் சந்தோஷமாகத்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்.
அருள் மொழிக்கு இன்று அப்பாவின் பிறந்த நாள் என்று நன்றாகத் தெரியும். அவனுக்கு திருமணம் ஆகும் வரை, வீட்டில் அவன் தான் அப்பாவுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வான்.
அதனால் மகனுடைய பிறந்த நாள் வாழ்த்தை காலையிலிருந்து ஆவலோடு அவர் எதிர் பார்த்து, ஏமாந்து போய் விட்டார். பாக்கியத்திற்கும் அதுவும் தெரியும்!
“ஏண்டி என் பிறந்த நாள் அதுவுமா நக்கலாச் சிரிக்கறே?…”
“உங்களுக்கு வயசாச்சே தவிர அந்தளவுக்கு புத்தி வளருலே?…”
“என்னடி….நீ சொல்லறே?…”
“சுயமாக சம்பாதித்த சொத்து முழுவதையும் தன் பெயரிலேயே வைத்திருக்கும் வயசான அப்பாவை, கல்யாணம் ஆன மகனும் மருமகளும் மதிக்க மாட்டாங்க!…சொத்து அவங்க பேருக்கு மாறாத வரை உங்க வாழ் நாள் நீடித்துக்கொண்டு போவது ,அவர்கள் சந்தாஷப் படக்கூடிய செய்தியல்ல!….வெளியில் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் உங்க இறந்த நாள் செய்திதான் அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்!….”
“ஏண்டி இப்படி அறிவு கெட்டதனமா பேசறே?…”
“தன் பெயரில் சொத்து வைத்திருக்கும் முதியவர்கள் தன் கடைசி காலத்தில் சந்திக்க வேண்டிய இந்த கசப்பான உண்மை சுடும்!….”
பாக்கியத்தின் இந்த ஆணித்தரமான பேச்சு பரமசிவத்தை சிந்திக்க வைத்தது!
– பொதிகைச்சாரல் டிசம்பர் 2016