உணர்ச்சியின் அடிமைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 8,307 
 
 

கல்யாணமாகி இன்னும் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. ஏன் – வெளியில் கட்டிய தோரணங்களே நன்றாக உலரவில்லையே?

அந்த வீட்டு மெத்தையில் ஓர் அறை. அதில் புத்தகத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபன்; அந்தக் கல்யாண மாப்பிள்ளைதான்!

ஏடுகள் புரண்டுகொண்டிருந்தன. கண்கள் களவு கண்டுகொண்டிருந்தன. மனம் சிருஷ்டித் தொழிலைக் கைக்கொண்டால் பிறகு எவ்விதம் இருக்கும்?

மேடைப்படிகளிலே ‘சிலிங், சிலிங்’ என்ற பாதரசம்; வாலிபன் முகத்தில் ஆவலின் பரபரப்பு அலைபோல் எழுந்தது.

காப்பிதான் வருகிறது!

ஆசை, காப்பியின் மேலா? அல்ல!

ஒரு பெண் – நாணமே உருவெடுத்த மாதிரி – ஒரு வெள்ளித் தம்ளரில் காப்பியைக் கொண்டு வைத்துவிட்டு, ஒதுங்கி வெளியே போக யத்தனித்தாள்.

அழகு எல்லாம் சாதாரணந்தான். ஐயோ அந்தக் கண்கள்!

“கண்ணா, எனக்கு ஒரு முத்தம்!” கண்களில் ஒரு மிரட்சி.

“என்ன கண்ணா?”

சற்றுத் தயக்கம். ஏதோ ஒரு மாதிரி உதட்டுடன் உதடு பொருந்திய சப்தம் வந்தது. இது முத்தமா? உயிர் இல்லை. இன்பம் ஏற்றும் மின்சாரம் இல்லை.

சுந்தரத்திற்கு – அவன்தான் – ஒரு பெருமூச்சு வந்தது. இவள் தனது கனவின் பெண் அல்ல – தகப்பனார் பார்த்துவைத்த பெண். எப்படியோ தன் வாழ்க்கையில் வந்து பின்னிக் கொண்டாள்.

இவனுடைய ஆவேசம் பொருந்திய முத்தம், “ஐயோ” என்ற எதிரொலியைத்தான் எழுப்பியது.

“கண்ணா எனக்கு ஒரு முத்தம்!”

ஐந்து நிமிஷம் தயக்கம். கரங்கள் மெதுவாகக் கழுத்தில் சுருண்டன. கேசம் கண்களை மறைத்தது. அதரங்கள் முகத்தில் சற்று உலாவி அதரத்தின் மேல் பறந்து விலகின. சுந்தரத்தின் முன் இருந்த இந்த இன்பமற்ற உடல் திரை விலகியது. சுந்தரத்தின் கண்களில் ஏமாற்றத்தின் கோபம், “போ! உனக்கு என் மேல் பிரியமே கிடையாதே! போ! போ!”

கமலாவின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்.

“போங்கள்! பக்கத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கக் கூடாதா…நீங்கள்…” கண்கள் சுந்தரத்தின் பக்கத்திலிருந்த வெற்றிலைச் செல்லத்தில் நீட்டிக்கொண்டிருந்த புகையிலைத் துண்டைக் கவனிப்பதுபோல் இருந்தன. முன்றானை தன்னை அறியாமலே உதட்டைத் துடைத்தன.

சுந்தரத்தின் கண்களில் ஓர் ஒளி! குதூகலம்! எழுந்தான். கமலாவை, ஆலிங்கனமா? – இவனுள் ஐக்கியமாகிவிட்டாள். முத்தங்கள்… நெற்றியில்… கண்களில்… அதரங்களில்… எவ்வளவு ஆவேசம்! என்ன உயிர்!

கமலாவிற்குக் கவலை அறியாத ஒரு புது உணர்ச்சி. அவள் அதரங்கள் அவளை அறியாமல் பதில் பேசின.

***

ஒன்றரை வருஷங்கள்!

தொட்டிலில் ஒரு குழந்தை.

“கண்ணா! கண்ணா! இதோ, இங்கே பார்! ஓடிவா!”

“என்ன” என்று கூறிக்கொண்டே சிரித்த கண்களுடன் வராந்தாவிற்கு ஓடி வந்தாள்.

“இங்கே வா! அதோ பார், இந்தக் கிளையில் அந்த அணிலை! எப்படி வாயில் குட்டியைக் கவ்விக்கொண்டு! இலை மறைத்திருக்கிறது; என் பக்கம் இன்னும் கிட்டவா! அதோ பார் அந்தக் கிளையில்” என்று அவளைத் தன் பக்கம் அணைத்தவண்ணம் தன் கைகளைக் காட்டினான்.

“ஆமாம்! ஆமாம்! ஐயோடி! எனக்கு வேண்டும். பிடித்து தரமாட்டீர்களா?” என்று அத்திசையை நோக்கியவண்ணம் கைகளை உதறினாள்.

சுந்தரத்தின் கண்களில் ஒரு குறும்புச் சிரிப்பு. பேசாமல் உள்ளே சென்றான். கமலா அதைக்கூடக் கவனிக்கவில்லை.

“இதோ வந்துவிட்டது! ஐயோடி! சீக்கிரம் வாருங்கோ!” என்று பதைத்தாள் கமலா.

சுந்தரம் ஒரு குழந்தையை – தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை, தங்கள் காதலின் லக்ஷ்யத்தை – எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் நீட்டிக்கொண்டு, “இதோ பிடித்துத் தந்திருக்கிறேன்! இதைவிடவா?” என்று சிரித்தான்.

கமலாவின் கண்களில் ஓர் அற்புத ஒளி! சுந்தரத்தை அப்படியே தூக்கி விழுங்கிவிடுவதுபோல் ஒரு முத்தத்துடன் அணைத்தாள். குழந்தை ‘வீல்’ என்று குரலிட்டுத் தான் இருப்பதைத் தெரிவித்தது.

உடனே குழந்தையைக் கையில் பிடுங்கி மார்பில் அணைத்துக் கொண்டு அவரைப் பார்த்தவண்ணம், “எனக்கு இரண்டு பாப்பா இருக்கே! என்னடி மீனு!” என்று குழந்தையுடன் அவன் மீது சாய்ந்தாள். மூவரும் ஒருவராயினர்.

***

இருபது வருஷம்!

சாயந்தரம்.

வெளி வராந்தாவில் ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. மீனுவின் குழந்தை.

இருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். நரைத்த தலை; தளர்ந்த உடல்.

கமலாப் பாட்டி, சுந்தரம் தாத்தாவுக்கு வெற்றிலை தட்டிக்கொண்டிருக்கிறாள்.

வெற்றிலைப் பொடியை வாயில் போட்டுக் கையைத் துடைத்து விட்டு, “கண்ணா ஒரு முத்தம்” என்று குழந்தையை நோக்கிக் கைகளை நீட்டினார்.

“மாத்தேன் போ!” என்று காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு சிரித்தது குழந்தை.

“தாத்தா கண்ணோ! பாட்டி கண்ணோ!” என்று குழந்தையை நோக்கிக் கமலம் கைகளை அசைத்தாள்.

“மாத்தேன் போ!” சிரிப்புத்தான்.

இருவரும் ஒத்துப் பேசியதுபோல் ஏகோபித்துக் குழந்தையை எடுக்கிறார்கள்.

சுந்தரம் தாத்தா, “மாத்தேன் போ” என்று திருப்பிக் கொண்ட கழுத்தில் முத்தமிடுகிறார். கமலம் மார்பில் முத்தமிடுகிறாள்.

இருவர் கண்களிலும் அதே ஒளி!

– மணிக்கொடி, 08-07-1934

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *