உங்களுக்காகத்தானே உழைக்கிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 7,515 
 
 

தேவநேசன் வாழ்க்கையில் மிக நொந்து போனதன் பின்னரே ஓரளவு நல்ல நிலைக்கு வந்தான். இருந்தாலும் அவனது கடுமையான முயற்சி அத்துடன் நின்று போய்விடவில்லை. அவனுக்கு ஒரு அழகிய அற்புதமான மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அந்த ஐவர் அடங்கிய குடும்பம் ஐக்கியமாகவும் அன்புடனும் வாழ்ந்து வந்தது. ஆனால் தேவநேசனுக்கு மட்டும் அவர்களை சீரும் சிறப்புடனும் வாழ வைக்க முடியவில்லையே என்ற கவலை எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அதனால் அவன் இப்போதை விட இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டு கொண்டான்.

அதனால் இரவிலும் பல மணிநேரங்கள் அவன் மேலதிக வருமானத்துக்காக வேலை செய்தான். ஆனால் அவனது சம்பள அளவுத்திட்டம் இன்னும் குறைந்ந நிலையிலேயே இருந்ததால் அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தும் அது அவன் வருமானத்தில் பெரிய வித்தியாசத்தை காட்டவில்லை. அதனால் அவனுக்கு ஒன்று மாத்திரம் மிகத்தெளிவாக விளங்கியது. அவன் உயர் வருமானம் பெறும் தொழில் ஒன்றைப் பெறவேண்டுமாயின் அவனுக்கும் தற்போதைய கல்வித் தகைமைகளை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அவன் கடுமையாக யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்தான். சனி, ஞாயிறு தினங்களில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்துறை கல்வி நிறுவனத்தில் இணைந்து டிப்ளோமா பயிற்சிநெறியில் கல்வி பயில ஆரம்பித்தான்.

ஆனால் அவனது கடுமையான இந்த உழைப்பு அவன் குடும்பத்தில் சில சலசலப்புக்களை ஏற்படுத்தியது. அவன் இப்போதெல்லாம் அவன் மனைவி, பிள்ளைகளுடன் இருந்து சிரித்து, கதைத்து பேசி ஒரு வேளை உணவு உண்ட நாளே மறந்து போய்விட்டது. அணிலும் அணில் குஞ்சுகளும் போல் இருந்த அவர்கள் குடும்பத்தில் கலகலப்பே இல்லாமல் போய்விட்டது. ஒரு நாள் எப்படியோ அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து சிரித்துபேசி சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் மனைவியும் பிள்ளைகளும் இப்போதெல்லாம் தேவநேசன் தங்களுடன் கதைத்துப் பேச கொஞ்ச நேரம் கூட செலவிடுவதில்லை என முறையிட்டனர். அதற்கு அவன் “நான் ஏன் நாயாக பேயாக உழைக்கின்றேன். எல்லாம் உங்களை சந்தோசமாக வைத்திருக்கத்தானே” என்று கூறி அவர்கள் வாயை பொத்திவிட்டான். அவன் அப்படி சொன்ன பின்பு அங்கு நீண்டநேரம் மௌனம் நிலவும். அதில் அவர்களின் சோகம் அப்பிக் கொண்டிருப்பதை அவன் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை. அவர்களுக்காகத்தானே நான் இவ்வளவு கடுமையாக உழைக்கின்றேன் என்று அவன் சமாதானம் சொல்லிக்கொள்வான்.

ஒருவாறு அவன் இரண்டு வருடங்களில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தான். எல்லாப் பாடங்களிலும் அவனுக்கு டிஸ்டிஸ்ஸன் பாஸ் கிடைத்திருந்தது. அவனுக்குக கிடைத்த பெறுபேறுகளைக் கொண்டு அவனது நிறுவனம் சந்தைப்படுத்தல் நிறைவேற்று உத்தியோகத்தர் பதவியை வழங்கியது. அவன் முன்னர் சம்பாதித்ததை விடவும் இரண்டு மடங்கு வருமானம் கிடைத்ததில் அவன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். அவன் தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல உணவும் ஆடைத் துணிமணிகளும் வாங்கிக் கொடுத்தான். அவர்களும் சற்றே மகிழ்ச்சியடைந்தார்கள்.

இருந்தாலும் அவர்கள் இப்போதும் ஒரு சிறு பிளாட் வீட்டில் வாடகைக்கே குடியிருந்தார்கள். அது அவர்களுக்கு இடவசதி குறைந்ததாகவே இருந்தது. சொந்த பந்தங்களைக்கூட அழைத்து ஒரு வேளை சோறு போட முடியவில்லை என்ற கவலை அவர்கள் எல்லோருக்குமே இருந்தது. அடுத்து அவனது இலக்கு எல்லாம் வெள்ளவத்தையில் கொண்டமோனியம் வீடமைப்புத் திட்டத்தில் ஒரு விசாலமான வீட்டை சொந்தமாக வாங்கிவிடவேண்டும் என்பதுதான். அதற்கு அவனுக்குள்ள ஒரே வழி சந்தைப்படுத்தல் முகாமையாளராக பதவி உயர்வினை பெறுவதுதான். அந்த நோக்கத்தையடைய அவன் ஒரு பட்டதாரி என்ற தகைமையை பெற்றிருக்க வேண்டும்.

அவன் மீண்டும் தனிமையில் இருந்து கடுமையாக யோசித்தான். எவ்வாறு இந்த வயதில் ஒரு முகாமைத்துவ பட்டதாரியாவது. அவன் தன் நண்பன் ஒருவனிடம் ஆலோசனை கேட்டபோது அதற்கு சிறந்த இடம் சிறந்த இடம் திறந்த பல்கலைக்கழகம்தான் என்ற பதில் வந்தது. வேறு இடங்களில் செலவு அதிகம் என்று கூறினார்கள். அவன் விரைவிலேயே திறந்த பல்கலைக்கழகத்தில் தன்னை ஒரு முகாமைத்துவ பட்டதாரி மாணவனாக பதிவுசெய்து கொண்டான்.

அவன் மறுபடியும் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான். அவன் மனைவி பிள்ளைகளுடன் இருந்திருந்து உரையாடுவது கூட இல்லாமல் போய்விட்டது. இரவு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வரும் அவன் மிக அதிகாலையிலேயே எழுந்து போய்விடுவான். அவன் மனைவியும் பிள்ளைகளும் அவன் சேயல் கண்டு மிகவும் கவலை அடைந்தனர். எப்போதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவனிடம் அவர்கள் “ஏனப்பா இப்படி இரவு, பகல் பராது உழைக்கின்றீர்கள் எங்களுடன் ஒரு நாள் சந்தோசமாக இருக்கக்கூடாதா” என்று கேட்டபோது அவன் வழமையாக அவர்களுக்கு கூறும் பதிலையே கூறினான். “ இன்னும் கொஞ்ச காலம்தான் பொறுத்துக்கொள்ளுங்கள். நமது எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடும். நான் இன்னும் உங்களை நல்லா வைத்திருக்கத்தானே உழைக்கின்றேன்” என்று அவர்களை சமாளித்துவிடுவான். அவர்களும் வேறு வழியின்றி பொறுத்துக்கொள்வார்கள். அவர்கள் என்னதான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாலும் அதனை அவன் செவியில் போட்டுக் கொள்ளமாட்டான் என்பதும் அவர்களுக்குத் தெரிந்ததே.

“மனைவி மகள்களுடன் மகிழ்ச்சிகரமாக பொழுதைக் கழிக்க முடியவில்லையே. அவர்களுடன் நாலு வார்த்தை சந்தோஷமாக பேச முடியவில்லையே” என்ற ஆதங்கம் தேவநேசனுக்கும் இல்லாமல் இல்லை. எனினும் அவன் தன் இளமைக்காலம் முடிவடைவதற்குள் தன் அவாவை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்று கடும் பிரயத்தனப்பட்டான். அத்தகைய முயற்சியில் அவன் உடல் நிலை, மனநிலை என்பவையெல்லாம் பாதிக்கப்படுகின்றதே என்பதெல்லாம் அவன் கொஞ்சம் அக்கறை கொள்ளாத விடயங்கள். அப்போது நெஞ்சு வலித்த போதும் மார்பை இறுக்கிப்பிடிப்பது போல் வலி ஏற்பட்டபோதும் அதெல்லாம் சாதாரணமானதுதான் என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டு கவலையை நினைப்பில் இருந்து அகற்றிக்கொண்டான்.

என்றாலும் அவன் கிடைத்த வருமானத்தில் ஒரு குறித்த தொகையை குடும்பத்திற்கு செலவிட்டபோதும் கணிசமான தொகையை வங்கி சேமிப்பு கணக்கில் சேமித்தும் வந்தான். அவனது வருமானம் அதிகரித்தபோது மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவும் முகமாக பணிப்பெண் ஒருவளையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். அவனது வீட்டு விடயத்தில் மனைவி, பிள்ளைகளின் அன்றாட தேவைகளில் எந்த குறைபாடும் ஏற்படாத விதத்தில் பார்த்துக்கொண்டான்.

அவன் ஒரு மாதிரியாக தனது வழக்கமான தொழிலையும் மேலதிக வேலையையும் செய்துகொண்டே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்த பல்கலைக்கழகத்தில் படித்து தனது முகாமைத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்தான். அவன் தனது மேற்படிப்பில் காட்டிய அக்கறையையும் தொழிலில் காட்டிய கடும் உழைப்பையும் கருத்திற்கொண்ட நிறுவனம் அவன் எதிர்பார்த்தபடியே பொது முகாமையாளர் பதவியை வழங்கி உயர் சம்பளத்தையும் வழங்கியது. அதற்கு மேலதிகமாக வருடத்தின் சிறந்த ஊழியர் என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்தது .

அதன் பின் சில காலத்திலேயே அவன் எதிர்பார்த்தபடி வெள்ளவத்தையில் ஒரு கொண்டமோனியம் உயர் மாடிக்கட்டிடத்தில் நன்கு விசாலமான வீடொன்றை தன் மனைவியின் பேரில் தேவநேசன் வாங்கினான். அவர்கள் நண்பர்கள், உறவினர்களைக் கூட்டி விருந்துபசாரம் ஒன்றை வைத்து, புது வீட்டில் குடியேறினர். வானுயர்ந்த அந்த பலமாடிக்கட்டிடம் வெள்ளவத்தை கடற்கரையை பார்த்தவாறு அமைந்திருந்தது. அன்றிரவு சாப்பாட்டு மேசையில் ஒன்று சேர்ந்த தேவநேசன் குடும்பம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. தன் பிள்ளைகளையும் மனைவியையும் ஒன்றாக அணைத்துக் கொண்ட தேவநேசன் தான் இனி மேல் எந்தப் படிப்பையும் தொடர்வதில்லை என்றும் மேலும் பதவியுயர்வுகளுக்காக உழைக்கப் போவதில்லை என்றும் கூடிய நேரத்தை அவர்களுடன் கழிக்கப் போவதாகவும் அறிவித்தான். பிள்ளைகள் கைதட்டி குதுகளித்தனர்.

ஆனால் அன்றிரவு மகிழ்ச்சியுடன் படுக்கைக்குப் போன தேவநேசன் அடுத்த நாள் காலை எழுந்திருக்கவில்லை. படுக்கையிலேயே அவன் உயிர் பிரிந்து போயிருந்தது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *