அன்று காலேஜிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய வந்தனா என்றுமில்லாமல் சோகத்துடன் வாட்டமடைந்து இருப்பதை அவள் தாயார் கமலா கண்டுபிடித்துவிட்டாள்.
அதற்கான காரணத்தைக் கேட்டபோது, வந்தனாவிற்கு அழுகையே வந்துவிட்டது.
“வரவர பஸ்லே காலேஜுக்குப் போயிட்டு வர்றதே ஒரு நரக வேதனையா இருக்கு. கூட்டத்தை சாக்கா வச்சிகிட்டு பசங்க இடுப்பைக் கிள்ளறாங்க. பின்பக்கத்தை கையாலே தட்டறாங்க. பஸ் வளைவுகளிலே திரும்பும்போது. வேணும்னே மேலே விழறாங்க.. உடம்போட உரசிகிட்டே நிக்கறாங்க.. . கேவலமான சேட்டைகளெல்லாம் பண்றாங்க. ரொம்ப வெறுப்பாவும், அருவருப்பாவும் வேதனையாயும் இருக்கு..இவங்க கொட்டத்தை தைரியமா முன்வந்து அடக்க யாருமே இல்லையேன்னு நினைக்கறப்போ மனசு கஷ்டப்படுது….பேசாமே காலேஜுக்கே முழுக்குப் போட்டுடலாமான்னு கூட சில சமயங்களிலே தோணுது…”என்றாள் புலம்பியவாறே.
அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த அவள் அண்ணன் நிரஞ்சனுக்கு கோபமும் ஆத்திரமும் தலைக்கேறின, தங்கையின் மனநிலையைக் கண்டு உள்ளம் கொதித்தது. அண்ணன் என்ற முறையில் அவள் பிரச்னைக்கு முடிவு கட்ட ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது.
“நாளைக்கு நானும் வர்றேன் உன் கூட. யார்யார் அப்படியெல்லாம் மிஸ்பிஹேவ் பண்றான்னு எனக்கு ஜாடையாலே அடையாளம் காட்டு. அது போதும்..என் நண்பர்கள் உதவியோட அவங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன்.. அயோக்கியப்பசங்க!
எவ்வளவு கஷ்டங்களையும் அவமானங்களையும் சகிச்சிகிட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக பெண்கள் காலேஜுக்கோ வேலைக்கோ போறாங்கன்னு இந்த மரமண்டைங்களுக்கு ஏன் புரியறதேயில்லை?.
இவனுங்களெல்லாம் ஒரு அக்கா தங்கையோடு பிறந்தவங்கதானே..ஏன் இவங்க அம்மாவே ஒரு பெண்தானே..அவங்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட அக்கிரமம் நடந்தால் இவங்களுக்கு எப்படிஇருக்கும்? பயந்துகிட்டு சும்மா இருந்தா சரிப்பட்டு வராது. இந்தப் பொறுக்கிகளுக்கு குளிர் விட்டுப் போயிடும். யாராவது இதை ஒரு சவாலா எடுத்துகிட்டு துணிஞ்சு தைரியமா போராடிக் குற்றவாளிங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தால் தான், பெண்கள் காந்தி நினைச்ச மாதிரி எந்த வித பயமும் இல்லாமே வெளியே சர்வசாதாரணமாப் போய்வர முடியும்..”என்று வீராவேசத்தோடு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துகொண்டிருந்தபோது……………
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத்திறந்த போது, இரண்டு போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
“இங்கே நிரஞ்சன்ங்கறது யாரு?”
நிரஞ்சன் திடுக்கிட்டான். அவன் முகம் கலவரமடைந்தது.
“நாந்தான்..என்ன விஷயம்?”– வாய் பயத்தால் குழறக் கேட்டான்.
“நீங்க 12-B பஸ்லே காலேஜ் பெண்களை கிண்டல், கலாட்டா செய்து அவர்களிடம் சில்மிஷம் செய்வதாக எங்களுக்கு ரிப்போர்ட்கள் வந்திருக்கு..விசாரிக்கணும்..நடங்க ஸ்டேஷனுக்கு” என்றார்கள் அதட்டலாக.
அவன் அம்மாவும் தங்கை வந்தனாவும் அதிர்ச்சியால் சிலையாகி நின்றார்கள் !
– ஜூலை 19 2007