(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இண்டயொரு பொழுதும் இரிக்கி. நாளக்கி பஜ்ரு வெளிச்ச உடனே மாமாட மகளுக்குச் செற கழியுது.”
அவுத்துக்கனி மாமாட மகள் அலிமாமச்சி ஒலகந் தெரிஞ்சவ. அவவும் ஈரா இருந்தவ. அவட புருசனார் மகுத்தான வருசந்தான் நான் அவருக்கு வாண்டன். நேத்தெண்டாப் போல இரிக்கி. மூணு வருசம் எவ்வளவு சுறுக்கா ஓடிப் பறிஞ்சிற்று. ஈரா இரிக்க எண்டா லேசிப்பட்ட காரியமா? தலக்கி எண்ண பூசாம, சர்வாங்கத்தில பூணாரம் போடாம, வெள்ளப் புடவையல்லவா உடுத்த வேணும்.
அலிமாமச்சி செல்லுகமாதிரி ஈரா எண்டா செறவாசந்தான். அதுகும் கொறஞ்ச நாள நாலுமாசமும் பத்தரப் பொழுதும் இரிக்கவேணும். அலிமா மச்சி இத்தா இரிக்கக் குள்ள நான் தாலி அறுக்காத புதுப்பொண். அவக்கு இத்தா வேலி கட்ட நானும் பச்சக் கிடுகு எழச்சன். இவள் செரியான கை சுறுக்கக் காறி எண்டு எல்லாப் பொண்டுகளும் கதச்சிக் கதச்சிக் கண்வெச்சாளுகள். எல்லாரும் ஒரு பாயெழச்சா, நான் ஒரு பாயத்தலக்கட்டிப் போட்டு, அடுத்த பாய் அடிப்போட்டு ரெண்டு குத்துக் குத்திருவன். மூணு குத்துக் குத்தினா ஒருபாய்.
”என்ர சீதேவிக்காக்காக்கு நாளையோடு சொவக்கத்து வாசல் தொறபட்டுறும்”
ஈன கதக்கவ என்ர மூத்த மதினிதான். அவர்ர உடப் பொறப்புகள்ள அல்லாவுக்கு மத்திக்கமா நடக்கிறவள். என்ர நலவ நட்டுகள் அவள் தான் கவனிக்கிறவள். அல்லாகுத்தாலா அவளுக்கு இருலோகத்திலயும் நல்ல வாட்சியத்தக் கொடுப்பான். நான் இத்தாவ உட்டு வெளியான ஒடனே அவருக்கு சொவர்க்கத்து வாசல் தொறந்துருமாம். பொண்டாட்டிமார் இத்தா இருந்தா புருசன்மார்ர பாவதோசங்கள் கொறையுமாம்! ஆக்கினையும் கொறயுமாம்.
அப்படி இல்லகா புள்ள ஈரா இரிக்கத்தால ஆம்புளக்கி அங்குத்து வழியில ஒண்டுமில்ல. அவர் மகுத்தாகுற அண்டைக்கும் ஊடு கூடியிருக்கலாம் அப்படியெண்டா அந்தப் புள்ள அவருக்குத்தான் எண்டு ஆக்களுக்கு எம்பின காட்டத்தான் இத்தா இரிக்க. பொண்புடிக்கக் கூடிய மொறகாற ஆம்புளயளப் பாக்காம இரிக்கத்துக்குத்தான் இத்தா இரிக்க. புரிசனார் மகுத்தான அண்டக்கி வேற புரிசனுக்கு வாழ்க்கப்டலாம் எண்டதுதான் மம்மதியா மார்க்கம். மறுபுரிசனுக்கு வாண்டா பொறக்க புள்ள, அவர்ரய, இவர்ரய எண்டு தெரியாமப் போகும் இதுக்காகத்தான் இத்தாவில காத்திருக்க.”
என்ர சுப்ஹானஹுத்தஆலா! இப்புடியா சங்கதி. ஆசியத்து மூத்தம்மா ஈமான் இஸ்லாமெல்லாந் தெரிஞ்சவ. ஒரு ஒகுத்து தொழுக உடமாட்டா மிருவடிக் கால்லதான் நடப்பா. அவ சொன்னா செரிதான். அவபள்ளிக் கொடம் வெச்சி புள்ளயளுக்கு குறான் ஒதிக்குடுக்கவ. நான் எண்ணிக் கிருந்ததெல்லாம் ஆகிறாசமானிலே அவருக்கு நன்ம கெடக்கிமெண்டுதான். இத்தா ஊட்டுக்கயும், வாப்பா, காக்கா, தம்பி, எல்லாரும் வாறதான். வேற ஆம்புளயள்தான் வரப்படா என்டற இதுக்குத்தானாக்கும். அப்ப புள்ளத்தாச்சிமாரும் வரப்படா வகுத்தில இருக்கது ஒருவேள ஆம்புளப்புள்ளயா இரிக்கும் எண்டு செல்லுகதெல்லாம் இந்த சனத்திர புலுடாதான். வகுத்துக்க இரிக்க ஆம்புளப்புள்ள புள்ள தந்திரும. இந்த சனங்கள் மார்க்கத்தப் பத்தி வௌங்கி இருக்கதும் கொறவுதான். ஆசியத்து மூத்தம்மா செல்லிக் காட்டாட்டி எனக்கிம் தெரியாதே.
அங்கித்து வெளியிலே நீதான் ஒம்புருசனுக்குப் பொண்டாட்டி. அவர் தான் ஒனக்குச் சோடு. அவன் முந்தி முடிச்ச தட்டுவாணிகள் தான் தலாக்குச் செல்ல வெச்சிற்றாளுகள். அடங்காமாரிகள்.
பாவம் மூத்தம்மாக்கென்ன தெரியும். நான் அவருக்கு ஆகிறத்தில சோடியாம். என்ர மனஞ் செல்லுது நான் அவருக்குச் சோடியில்ல எண்டு. முந்தி மூணு பொண்டாட்டிமார ஒருத்திக்கி பின்னால ஒருத்தியா முடிச்சார். அவளுகளும் ரெண்டு மூணு வருஷம் இருந்து போட்டு வேணாம் வேணாம் எண்டுட்டாளுகள். அவளுகள் தான் என்ன செய்வாளுகள். ஆளெண்டால் பார்வக்கி லெட்சணந்தான். காணி பூமிக்கி கொறச்சலா மாடு கண்டுக்கு கொறச்சலா? நகநட்டு இல்லியா? ஒகுத்துக்கு ரிசுக்கு கொடுக்கல்லியா? இதெல்லாம் இருந்தா மட்டுங்காணுமா? நானும் எண்ணிக் கக்கிசப்பட்டிட்டு தாங்க ஏலாமத்தானே மையதீன் மச்சானோட தொடுப்பு வச்சன்.
அவருக்கு வாழுகத்துக்கு முந்தி மையதீன் மச்சான் எங்கட ஊட்ட பாய் வாங்க வருவார். என்னோட வௌயாடினவளுகளுக்கெல்லாம் நடையில ஒரு புள்ள, கக்கத்தில ஒரு புள்ள அவளுகளக் காணக்காண எனக்கு வெப்பிசாரம் தாங்காது ஒருவரும் இல்லாத நேரத்தில் கொளறுகதுந்தான். உம்மா தான் என்ன செய்வா. அவவும் தாலியறுந்த கைம்பொண்டாட்டி. எனக்கி மாப்புள்ள எடுக்க அவ்வால தவ்லத்துக் காணுமா? இப்படி இரிக்கக்கதான் மையதீன் மச்சான் பாய் வாங்க வருவார். நல்ல எளந்தாரி மொட்டத்தல இல்லாம சோக்கும் கீக்குமா இருந்தார். என்ன ஒரு சாதியா பாக்கத் தொடங்கினார். எனக்கிம் அவர ஆனக் கிடுகுக்கால பாத்துக்கிட்டிருந்தா பசியே வாறதில்ல.
இப்படி இரிக்கக்கதான் அவர் மூணாவது பொண்டாட்டிய தலாக்குச் சொல்லிப் போட்டு என்னவந்து முடிச்சார். அவருக்கும் சாச்சாட வயது. ஒரு நாளைக்காவது புரிசன் பொண்டாட்டியா இரிக்காட்டி வாண்டுதான் என்ன புரசணம். போட்டத் தெரத்திக்கிட்டு வந்து சாவல் மிரிக்கிறதக் கண்டா என்ர கல்வே உருகிப் போகும்.
நான்தான் என்ன செய்யிற. மையதீன் மச்சான் றோட்டில போறத்தக் கண்டாலே அவர விழுங்கிரத்தான் எனக்கி மனம். அவரும் என்னோட கேலி கதப்பார். செலநேரத்தில் கவியும் பாடுவார்.
“முந்தின தொளுப்பறிகள் செய்யாத பாக்கிசத்த நீ செஞ்சிரிக்காய். அவளுகள்ள வகுத்தில ஆண்டவன் ஒரு காயக் குடுக்கல்ல ஒண்ட வகுத்தில தான் காச்சிரிக்கி நாலுமாசமெண்டத் துடிக்குமே.
இப்ப பத்துப் பதினஞ்சி நாளாத்தான் துடிப்பு புள்ளக்கி. உசிர் வந்தாத்தான் துடிக்குமாம். எனக்கி இதுகளென்ன தெரியும். இதுதான் எனக்கிம் தலப்புள்ள.
“ஆச அருமக்கி எங்கட காக்காக்கு ஒரு புள்ளக்கிணாட்ட இல்லயெண்டு எவ்வளவு கக்கிசப்பட்டம் அந்த நாயன் ஒரு புள்ளக் குஞ்சிய காக்காபொண்டிக்குக் குடுத்துற்று காக்காவ எடுத்திற்றான். மீரா சாய்வு ஆண்டவர்களே அதயாலும் ஆலிசம் இல்லாம தலப்படுத்திக் குடுத்துரு காக்காட சொத்துக்கு வகுத்துப் புள்ளதான் உருத்தாளி”
வல்ல பெரிய நாயன் பூப்போல என்ர வகுத்துச் செமயக்காத்து அத நோய் நொம்பலம் இல்லாம வளத்துத் தந்திர வேணும். அவருக்கு வாண்ட சங்கக்காக எம் புள்ளக்காவது ஆதனஞ் சேரட்டும். எனக்கி அவரோட எரக்கந்தான். மையதீன் மச்சான் வந்து போனாத்தான் கல்வுக்கு குளுமை. மகுத்தாகிற மாசத்தில எண்ணம் நெறவேறிச்சி. அவருக்கு இருமல் வருத்தமெண்டு புளியந்தீவு ஆசுவத்திரிக்கிக் கொண்டு போய்த்தாங்க ஊட்டில நான் தனிய. முன்னடுக்கால ஒருவர்ர கண்கடயிலயும் படாம வந்து போவார்.
“அப்ப நாளக்கி செவகு தொழுதாப் போல வாறன் மக்காள்”
ஆசியத்து மூத்தம்மா போறா இத்தாவில இருந்து வெட்டக் கெறங்க அவதான் பாத்தியா ஓதுவா. வாழப்பழம், பிசுக்கோத்து, சாம்புறாணி எல்லாம் வாங்கி வெக்க வேணும்.
(யாவும் கற்பனை)
– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஒக்டோபர் 2007, எம்.ஐ.எஸ்.ஹபீனா கலீல், மருதமுனை.