‘என்ன சட்டம், என்ன ஒழுங்கு, இந்த ஊருக்கு இணையே இல்ல’ இதையே ஓராயிரம் முறை சொல்லியிருப்பேன். காலை வைக்கக் கூசும் ரயில் நிலையத்தரைகள், எறும்பின் சுறுசுறுப்புடன் பல இனமுகங்கள், சாலையில் வரிசையாய் வழுக்கிக் கொண்டோடும் வாகனங்கள், விண்ணைத்தொட்ட கட்டிடங்கள், கருத்துடன் வளர்க்கப்படும் சாலையோர மரங்கள், எங்கும் நிறைந்திருக்கும் சுத்தம் எல்லாவற்றையும் பட்டிக்காட்டானாய் வாய்பிளந்து பார்த்தேன். ‘சாங்கி’ விமானநிலையம் வந்திறங்கி, ‘பூலோகம் தானா?!’ என்று வியந்த அந்த நாளை என் வாழ்நாளில் மறக்கவேமுடியாது.
நான்கு வருடங்களுக்கு முன், எங்களூரான கருப்பூரிலிருந்து பாதிக்கிராமம் மீனம்பாக்கம் வந்திருந்தது. பஸ்ஸில் பயணிகளில் பாதிக்கும்மேல் என் சொந்தங்களும் கிராம ஆட்களும். நான் ஏதோ பெரியபடிப்புப் படித்து உத்தியோகத்திற்காகப் போவதுபோல. எனக்குக் கிடைத்திருந்தது சாதாரணப் ‘பணிப்பெண்’ உத்தியோகம் என்பதையும் கடந்து, ‘சிங்கப்பூருக்குப் போறா எங்கொழுந்தியா”, என்று என் அக்கா வீட்டுக்காரரும், மற்றவர்களும் பெருமைப்பட்டதற்குக் காரணம், இந்த ஊரின்பால் அவர்களுக்கிருந்த ஆகர்ஷணமேயன்றி எனது வெளி நாட்டுப் பயணம் அல்ல. நான்கு பேரிடம் கௌரவமாகச் சொல்லிக் கொள்ளலாமே. ‘இந்த விதவைக்கு வந்த வாழ்வப்பாரேன்டா’, என்று உள்ளுக்குள் பொறாமைப் பட்டவர்களும் அதில் அடங்கினர். பிள்ளைகள் சோகம் அப்பிய முகத்துடன் விடைகொடுத்தனர்.
அன்று நினைத்துக் கொண்டேன். இன்னும் சில வருடங்களில் பெரியவனை அதேபோல ஏற்றிவிடவேண்டுமென்று; நல்ல உத்தியோகத்திற்கு. அதற்கான ஆயத்தமுயற்சி தான் இரண்டு மகன்களையும் மாமியாரிடம் விட்டுவிட்டு நான் கிளம்பியது. பேரன்களைப் பார்த்துக்கொள்ளும் முழுப்பொறுப்பையும் அவர் ஏற்றதால்தான் என்னால் இன்று இங்கு பொருளீட்ட முடிந்தது.
அப்போது பெரியவனுக்குப் பதினேழும் சின்னவனுக்கு பதினொன்றுமே முடிந்திருந்தது. இப்போதோ மூத்தவன் பொறியியல் கல்லூரியில் மூன்றாவது வருடத்தில். நான்கு வருடத்தில் ஒருமுறைகூட ஊருக்குப் போகத்தோன்றவில்லை. விமான டிக்கெட் பணத்தை ஊருக்கு அனுப்பினால் உபயோகமாகவாவது இருக்கும் என்றே நினைத்து வந்தேன். சென்றமாதம் பெரியவன்,” எனக்கு ஒரு பைக் வாங்கணும்மா,..”, என்றதுமே துளியும் தயங்காமல், “ம், வாங்குவோம். அடுத்தமாசம் பணமனுப்பறேன், நீ நல்லப் படிப்பா “, என்று சொல்லியிருந்தேன் அவனிடம் போனில். அவனை ஆளாக்கிவிட்டால், இளையவனின் கல்விப்பொறுப்பைத் ஏற்றுக்கொள்வான் என்ற பெரும் நம்பிக்கை.
வந்த புதிதில் ஒவ்வொன்றும் புதுமையாக இருந்தது. சின்னச்சின்ன விஷயத்தையும் ஆர்வமாய் ஆசையாய் பார்த்துப்பார்த்து ரசிக்கவும் ஊரோடு ஒன்றவுமே கிட்டத்தட்ட ஒரு வருடமானது. மூங்கில் கழிகளில் துணிகளை உலர்த்திக் க்ளிப்போட்டு, ஜன்னலிற்கு வெளியே கொடுத்து அங்கிருந்த துளைகளில் நுழைத்துவைக்கும் வித்தையை எனக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பதற்குள் ரோகிணி எடுத்த விடுப்பும் கூட முடிந்துவிட்டிருந்தது.
என்னைக் காட்டிலும் ஏழெட்டு வயது இளையவரேயானாலும் ‘அம்மா’ என்றே நான் என் முதலாளியான ரோகிணியை அழைத்துவந்தேன். ‘மேடம்’ என்றழைக்க ஏனோ என் நாக்குக்குக் கடைசிவரை வரவேயில்லை. வெளிறியவண்ணப் புடைவையைத்தவிர வேறு உடைக்குள் புகவும் என்னுடல் ஒப்பவில்லை.
அவர்களது ஒன்றரை வயதான செல்லமகள் ஸ்வேதாவும் ‘ஆண்டி, ஆண்டி’ என்று என்னோடு ஒட்டிக்கொண்டாள். குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்து வந்தேன். என்னால் அவர்களுக்கோ அவர்களால் எனக்கோ பிரச்சனை என்று ஒன்று வந்ததே இல்லை.ரோகிணியும் சரி, அவளது கணவரும் சரி என்னை நடத்தும் விதம் சிங்கைநாளிதழ்களில் பணிப்பெண்களை முதலாளிகள் துன்புறுத்தும் செய்திகளைக் கேலி செய்வதாய் இருக்கும். எங்கள் ‘திலோக் ப்ளாங்கா’ வட்டாரம் என்மனதில் பதிய ஒருவருடம் பிடித்தது.
மின்தூக்கியைப் பயன்படுத்த மட்டும் எனக்குத்தயக்கம். யாரேனும் உடனிருந்தால் மட்டுமே ஆறாவது மாடிக்குச் செல்ல லி·ப்டைப் பயன்படுத்தினேன். தனியே இருந்தால், விறுவிறுவென்று படிகளில் ஏறிவிடுவேன். ஸ்வேதா கூட, “என்ன ஆண்டி, இப்பிடி பயப்படறீங்க?”, என்று கேலிசெய்வாள்.
மின்தூக்கியில் தனியே ஏறவேண்டிய நிர்பந்தம் அன்றுதான் ஏற்பட்டது. ஸ்வேதாவைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பும் போது வழியில் செல்வி ஸ்டோரில் எனக்குத் தேவையான ‘ஹமாம்’ சோப்பு வாங்க வேண்டியிருந்தது. எதிர் பூக்கடையில் பூக்கட்டிக்கொண்டிருந்த ஆள் புதிதாகத் தெரிந்தான். பூக்கடை முதலாளி கண்ணில் படவில்லை. கொஞ்சம் பூஜைக்கு உதிரிப்பூ வாங்கிக்கொண்டே, “முன்னாடியிருந்த ஆள மாத்திட்டாங்க போல?”, என்று சாதாரணமாய்க் கேட்டேன். ” ஆமாக்கா. போனவாரத்துலேருந்து நாந்தாம்பூக்கட்டறேன். நீங்க எந்தூருக்கா?”, என்று வெகுநாட்கள் பழகியவன் போல பதில் சொன்னான் அந்த இளைஞன்.
தன்னுடைய ஊரிலிருந்து வந்தவராய் இருந்தால் தன்குடும்பத்தினரையே பார்த்தமகிழ்ச்சி இவர்களுக்கு. நானும் நின்று பேசினேன். ‘பெர்மிட்’ இருக்கறவங்களுக்கு ஒரு மணிநேர பூக்கட்டும்வேலைக்கு பத்து வெள்ளியென்றால், ‘பெர்மிட்’ இல்லாதவங்களுக்கு அதில் பாதிகொடுத்தால் போதுமாம். அவன் பெர்மிட் இல்லாமல் பாஸ்போர்ட்டையும் ‘தொலைத்து’ விட்டவனாம். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிடிபட்டால் தீர்ந்தான்.
நிலம், நகை என்று ஏகமாய்விற்றுவிட்டு நான்கு வருட வேலையென்று அழைத்துவரப்பட்டு, ஆறுமாதம் முடிவதற்குள் வேலை செய்த காண்ட்ரேக்டர் கையை விரித்துவிட்டதில் தலைமறைவு வாழ்க்கை. “தங்கச்சிகல்யாணம் முடியறவரைக்காச்சும் கெடைக்கறவேலைல ஏதாவது சம்பாரிச்சு அனுப்பணும்கா.” பார்க்க மிகவும் பாவமாய் இருந்தது.
நேரமானதை உணர்ந்தவுடனே வீட்டை நோக்கிவிரைகையில் சொடசொடவென்று முன்னறிவிப்பேயில்லாமல் மழை பெருந்தூறலாகக் கிளம்பியது. அடுக்குமாடிக் கீழ்த்தளங்களில் புகுந்து நிற்காமல் நடந்தேன். ஆனாலும், ஆடைகள் நனைந்துவிட்டன. சமையல்வேலை இருந்ததால், வேறு வழியில்லாமல் தனியாக லி·ப்டில் ஏறினேன். ஏறும்போது பாதியிலேயே ஒரு குலுக்கலுடன் நின்றது. பகீரென்று அடிவயிற்றில் பயம் கௌவியது.
இன்னும் ஆறாம் மாடியும் வந்திருக்கவில்லை என்பது புரிந்தது. கதவைத்திறக்கும் பொத்தானை அழுத்திப்பார்த்தேன். ஹ¥ஹ¥ம், கதவு திறக்காமல் சதிசெய்தது. உள்ளே புழுக்கமும் இருட்டும் சேர்ந்து ஒரே அவஸ்தையாக இருந்தது. யாரும் வராமல், கதவைத் திறக்காமல் அங்கேயே செத்துவிடுவோமோ என்றெல்லாம் விபரீதக்கற்பனைகள் தோன்றின. கண்டுபிடித்து உடலை எடுக்கும்போது அழுகியிக்குமோ என் சடலம். சிங்கப்பூரில் செத்தால் என் சாவும்கூட என் கிரமமக்களுக்கு பிரமிப்புச் செய்திதானோ. அப்படிச் செத்துவிட்டால் சின்னவனைப் பெரியவன் ஆளாக்குவானா?,…
லி·ப்டின் உள்ளேயிருந்த மணியை அழுத்தியபடியிருந்தேன். கணங்கள் யுகங்கணாகத் தோன்றின. சாதாரணமாகவே பயந்தவளான எனக்கு மிகவும் பயமாயிருந்தது. முகத்தில் முத்துமுத்தாய் வியர்த்தது. உள்ளங்கைகள் ஜில்லிட்டுவிட்டன. ஆடைகள் ஈரத்தினால் உடலோடு ஒட்டிக்கொண்டன. என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் மின்தூக்கியில் சிக்கிக்கொண்டது ரோகிணிக்கு எப்படித்தெரியும் என்ற கவலைவேறு அரித்தது.
வெகுநேரம் கழித்து கொட்டித்தட்டும் சத்தம் கேட்டது. பேச்சுக்குரல்களும் உடன் கேட்டன. மின்தூக்கியைப் பழுதுபார்த்தனர். சில நிமிடங்களில் அசைந்து மேலேறத்தொடங்கியது. கதவு திறந்தது, ஆறாம் மாடியில். வெளியே சின்னதும் பெரியதுமாய் இரைந்துகிடந்த ஆயுதங்களைக் கீழே குத்தவைத்து உட்கார்ந்திருந்த மலாய்க்காரர் ஒவ்வொன்றாகப் பொருக்கிப் பெட்டியில் போட்டுக்கொண்டிருந்தார். அவர் கொஞ்சம் நகர்ந்து வழிவிட்டதும் நான் சிறையிலிருந்து விடுதலையான பெரும் நிம்மதியோடு வீட்டை நோக்கி விரைந்தேன். என் பின்னாலேயே ஒரு சீனர் ஓடிவந்து ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார். அவர் தான் மின்தூக்கியைப் பழுதுபார்க்கும் வேலைக்கு சூபர்வைஸர் என்று கூறிக்கொண்டே என்னை உடன்வரச்சொன்னார். கைக்கடிகாரத்தைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி! இருபது நிமிடங்களுக்கு மேல் உள்ளேயிருந்திருக்கிறேன். வேலையெல்லாம் கிடந்தன. இதில் இந்த ஆள் வேறு எதற்குக்கூப்பிடுகிறான் என்று யோசித்தபடியே பின்னால் போனேன்.
லி·ப்டின் தரையில் தேங்கியிருந்த சிறு குளத்தைக்காட்டி,”யூ பாஸ்ட் யூரின்?”, என்றதும் எனக்கு மிகவும் கூச்சமாகிவிட்டது. எத்தனை முறை ‘நோ லா’ என்று சொல்லியும் விடாமல் கேட்டார் அவர். நான் மறுபடியும் ஓடோடி வீட்டியடைந்து கதவைத் திறந்து ஆடைகளைக்களையுமுன் குக்கரில் சாதமும் பருப்பும் மட்டும் வைத்தேன்.
அப்போது வாயிற்கதவு திறக்கும் ஓசை கேட்டது. ரோகிணிதான் வந்திருந்தாள். கூடத்தை எட்டிப்பார்த்தால் அவசர அவசரமாய் எதையோ தேடுவது தெரிந்தது. “இங்க ஒரு ‘யெல்லோ ·பைல்’ இருந்திச்சே பார்த்தீங்களாம்மா? ஆமா, ஏன் ஒரு மாதிரியிருக்கீங்க? டிரெஸ்ஸெல்லாம் வேற ஈரமாயிருக்கு?”, என்று அக்கறையோட கேட்டதும், மழையில் நனைந்ததையும் லி·ப்டில் மாட்டிக்கொண்டதையும் சொன்னேன். “எப்பயும் ஏறவே மாட்டீங்களே. ரொம்ப பயந்திட்டீங்களா?”, என்றதற்கு பதில் சொல்லும் முன், வாசற்கதவில் நிழலாடியது. அதே சீனர் மறுபடியும் ரோகிணியிடம் லி·ப்டில் சிறுநீர் கழித்தேனாவென்று என்னைக்கேட்டுச் சொல்லச் சொன்னான். ரோகிணி என்னைத் திரும்பிக் கேட்டுவிட்டு நான் இல்லையென்றதும் அவரிடம், ஆடையில் இருந்த மழைத்தண்ணீர் தான் சொட்டிசொட்டித் தேங்கியிருக்கும் என்று கூறி அனுப்பினார்.
ரோகிணி தன் ·பைலை எடுத்துக்கொண்டு மறுபடியும் ஆபீஸ¤க்குப் போனதும், நான் உடைமாற்றிக்கொள்ள குளியலறைக்குப்போனேன். ஒவ்வொன்றாய் அவிழ்க்கும்போது தான் சந்தேகம் தட்டியது. வீச்சம் என் சந்தேகத்தை உறுதி செய்தது. அடடா, அந்தச்சீனர் சொன்னது சரிதான். அதீதபயத்தில் என்னையும் அறியாமல் சிறுநீர் கழித்திருந்தேன். சாதாரணமாகவே அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையிலோ எம்ஆர்டியிலோ பயணித்தால் இயற்கையில் அழைப்புக்கு உடனே பதிலளிக்கமுடியாமல் நெளிவதுண்டு நான். ஆனால், என் புலன்களைக் கூடவா பயம் மந்தித்துவிட்டது. நினைக்கவே அகமும் புறமும் கூசியது.
ரோகிணியும் அவள் கணவரும் தங்கள் வியாபாரவிஷயமாக சீனாவிற்குப் பயணப்பட்டனர்.ஐந்து நாட்களிலேயே வந்துவிடுவதாயிருந்தனர். ரோகிணியின் தாய் வீடு நடக்கும் தொலைவிலேயே இருந்ததால் தேவைக்கு அவர்களைத் தொடர்புகொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர்.
அவர்கள் போய் இரண்டு நாட்களிலேயே வந்திருந்த தபால்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ரோகிணியின் அம்மாவீட்டிற்குப் போனேன். அங்கிருந்த ஸ்வேதாவின் தாத்தா எல்லாவற்றையும் பிரித்துப்படித்தார். ஒரு உரையைப் பிரித்துப்படிக்கும்போது மட்டும் முகம் வெளிறிப்போய் என்னை நிமிர்ந்து பார்த்தார். ” ஏம்மா, இது உங்கவிஷயமாத் தான் வந்திருக்கு. நாளைக்கே நீங்க ‘சபார்டினேட் கோர்ட்’டுக்குப் போகணுமாம். உங்களோட ‘யூரின்’ சாம்பிள் எடுத்து உடனேயே பரிசோதனைக்கு அனுப்பணும்னு போட்டிருக்கு.”
எனக்கு திடீரென்று முகத்தில் யாரோ பளாரென்றரைந்தது போலிருந்தது. அன்று நடந்ததை நான் முழுவதும் மறக்க ஆரம்பித்திருந்தேன். பயத்திலும் கூச்சத்திலும் கண்களில் கண்ணீர் திரண்டுவழியத் தயாராய் இருந்தது. “கவலப்படாதீங்க. நானே அழைச்சிகிட்டுப்போறேன். ஒண்ணும் பிரச்சனையிருக்காது.” ரோகிணியிடம் கூடச்சொல்லவில்லை அன்று. பெரியவரிடம் எப்படிச்சொல்வது.
போனோம் அடுத்தநாள். அந்தச்சீனரும் வந்திருந்தார் கோர்ட்டுக்கு. ‘சாம்பிள்’ எடுத்து ஒப்பிட்டு விட்டுச் சொன்னார்கள், அன்று நான் பொய் சொல்லியிருக்கிறேன் என்று. சிறுநீர் கழித்ததும், அதைவிட நான் அதை மறுத்ததுமே குற்றமானது. மறுபடியும் மறுபடியும் கேட்டும் நான் பொய் சொன்னேன் என்பதையே குற்றமாகச்சொன்னார்கள். “வாட் இஸ் திஸ்லா மிஸ்டர்.கணேசன்? இவங்க உங்ககிட்டகூட சொல்லல்லயா? ஐ’ம் வெரிசாரிலா. வீ காண்ட் டூ எனிதிங்க், பை”, என்று கிளம்பிவிட்டார் பெரியவர் ஏற்பாடு செய்திருந்த வழக்குரைஞர்.
மின்தூக்கியில் நான் பயந்ததோ, மாட்டிக்கொண்டு வெகுநேரமானதோ, ஐம்பதை நெருங்கும் என் வயதோ, அறிவோ, உடலுபாதையோ அங்கிருந்த ஒருவருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. மனிதநேயம் மறந்து சட்டம் கொடூரமாய் என்னைக் கசக்கியது. மூன்று நாட்கள் சிறை அல்லது எழுநூற்றைம்பது வெள்ளி அபராதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைக்கேட்டதும் அவமானம், வருத்தம், பயம் எல்லாம் சேர்ந்த கலவையில் என் கால்களிரண்டும் வலுவின்றிக்குழைந்து போயின. அழ ஆரம்பித்துவிட்டேன்.
உடனே கட்டுவதற்குக் கையில் போதியபணமில்லாதிருந்ததால் பெரியவர் பணத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டு வருகிறேனென்றுவிட்டுக் கிளம்பினார். அவர் முகத்தில் ஈயாடவில்லை. யார் கண் தான் பட்டதோ தெரியவில்லை, யாருமே எதிர் பாராமல் என்னால் அவர்களுக்கும், ஏன் எனக்கே கூட பெரும் பிரச்சனை. நான் மெச்சிய ஒழுங்கும் சட்டமும் மனிதத்தை மறந்தது என்றுணர்ந்ததுமே திடீரென்று எனக்கு வாழ்வளித்த ஊர் என் மனக்கண்ணில் வெறுமையாகி ஈரமற்றுப் போனது. என் நிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய என்னையொத்த மத்தியவயதுப் பெண் ஒருத்தி கூடவா இந்த ஊரில் இல்லாமல் போனாள்?
பெரியவர் அடுத்த நாள் மாலையில்தான் அபராதத்தைக்கட்டினார். நானும் விடுவிக்கப்பட்டேன். அந்த ஒன்றரை நாள் சிறைவாசம் என்னுடைய மனதை மிகவும் பாதித்துவிட்டது. கைதிகளின் கழிப்பறைகளைக் கழுவும் பணி எனக்கு முற்றிலும் வேறுலகத்தை அறிமுகப்படுத்தியது. அவமானம் என்னை யோசிக்கக்கூட விடாமல் பெரும்துயரில் ஆழ்த்தியிருந்தது. பசியும் தூக்கமும் முற்றிலும் தொலைந்திருந்தன. ரோகிணியிருந்திருந்தால், உடனே என்னை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போயிருப்பார். என் கெட்டநேரம் தான் அவரை வெளியூருக்குத் துரத்தியிருந்தது.
அடுத்தநாளே ரோகிணியும் வந்துவிட்டார். ” எங்கிட்டச் சொல்லக்கூடவாம்மா உங்களுக்குக் கூச்சம்? நாம அப்பவே அந்தச்சீனனோட பேசி இத வளரவிடாம செஞ்சிருக்கலாமேம்மா”, என்றதும் சிறையில் ஒரு நாளிருந்த வேதனையில் உடைந்து அழுதுவிட்டேன்.நான் பட்ட துன்பமும் என் அழுகையும் அவரையும் மிகுந்த வருத்ததில் ஆழ்த்தியது.
“என்ன ஊருக்கு அனுப்பிடுங்கம்மா. வந்தபுதுசுல இருந்த கொஞ்சதைரியங்கூட எனக்கு இப்பயில்ல. இனிமே ஊருக்குப்போக மட்டும் தான் நான் வீட்டவிட்டு வெளியில போவேன்.” ரோகிணி எவ்வளவோ எடுத்துச்சொன்னார். என் மகன்களின் எதிர்காலம் குறித்த அக்கறையினாலும், என்னுடைய விலகலினால் அவர்களது வாழ்க்கையில் திடீரென்று ஏற்படக்கூடிய குழப்பங்களை நினைத்தும் என்னைச் சமாதானம் செய்யமுயன்றார். இன்னும் நான்கு வருடங்களுக்கு நானே அவர்கள் வீட்டில் இருப்பேன் என்ற அவரின் நம்பிக்கை தகர்க்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை.
ஒரே வாரத்தில் இருபது வயது ஏறிவிட்ட ஆயாசத்தையும் தன்னம்பிக்கையின்மையையும் சிறைவாசம் எனக்குக் கொடுத்திருந்தது. கோர்ட், ஜெயில், போலீஸ் ஸ்டேஷன் படியேறுவதையும் அவமானமாய் நினைத்து வளர்க்கப்பட்ட எனக்கு உயிரே போனதுபோலிருந்தது. நான் பட்ட மனக்கஷ்டத்தைக் காணச்சகிக்காமல் ரோகிணி ஒருவழியாக என்னை ஊருக்கு அனுப்பச் சம்மதித்தார்.
இந்தியாவுக்குத் தொலைபேசினோம். விவரங்கள் முழுவதும் சொல்லி, வருவதாகச் சொன்னதுமே மாமியாரும் இளையவனும் முதலில் கவலையடைந்து பதறினர். ஊர்திரும்பும் என்திட்டத்தைச் சொன்னதுமே மகிழ்ச்சியோடு வரச் சொல்லிவிட்டனர். இரண்டு வாரங்களில் கிளம்பலாம் என்று ரோகிணி சொன்னதும் வீட்டுவேலைவில் கவலையை மறக்க முயன்ற எனக்கு ஸ்வேதாவையும் ரோகிணியையும் விட்டுவிட்டு போவதை நினைத்து ஒருபுறம் வருத்தப்படாமல் இருக்கவும் முடியவில்லை. மறுபுறம் என்னுடைய சொற்பசாமான்களைக் கட்ட ஆரம்பிக்கலாமாவென்றும் தோன்றியது.
இரண்டு நாட்களிலேயே பெரியவனிடமிருந்து போன் வந்தது. மகிழ்ச்சியோடு ‘வந்துடும்மா’, என்று சொல்வானென்று எதிர்பார்த்துப் போனைக் கையில் வாங்கினேன். எடுத்ததுமே, “ஏம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு திடீர்னு கிளம்பி இங்க வரேங்கற?”, என்றதும் வாயடைத்து நின்றேன்.
– திசைகள்.காம், ஆகஸ்ட் 2004, Fetna (USA) annual soveneir book, 2004