கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 20,814 
 

கட்டை விரலால் உன்னி உன்னிப் பறந்தது ஊஞ்சல். டிக்கெட் டிக்கெட் என்று ஒரு குழந்தை எல்லார் கையிலும் குப்பைக் காகிதத்தைத் திணித்துக் கொண்டிருந்தது. “ ஏலேலோ ஐலசா ” என்று சின்னக் குரலில் மெலிதாய் ஒன்று ராகமிழுத்தது. சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, ஒன்று எழுந்து நின்றது. ‘ வேகமா அண்ணி , வேகமா … ’ என்று ஒன்று ‘ மானம் ’ வரைக்கும் கையை மல்லாந்து விரித்தது.

பார்க்கப் பார்க்க இவனுக்குச் சிரிப்பாய் வந்தது. அண்ணிக்கு என்ன வயசிருக்கும்? ஐம்பது…? வெட வெட வென்று இந்த உயரத்தையும் நெகிழ்ந்து போகாத உடம்பையும் பார்க்கும்போது நாற்பதுதான் சொல்லலாம். நாற்பதோ … ஐம்பதோ , இப்படி ஓர் அரைக் கிழவி இந்தச் சின்னக் குழந்தைகளுக்குச் சமானமாக உட்கார்ந்து ‘ கப்பல் ’ ஒட்டிக் கொண்டிருக்கிறாள் என்றால் சிரிப்பு வராமல் என்ன செய்யும் ?

படை படையாய்த் திரண்டு வந்திருக்கின்ற இந்தப் பசங்களில் இவள் யாருக்கும் அண்ணியில்லை ! பத்துப் பன்னிரண்டு வருஷம் பிள்ளையில்லாமல் இருந்துவிட்டு, கொஞ்சம் எட்டின சொந்தத்தில் இவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டபோது, இவன் கூப்பிட ஆரம்பித்த சொல் அது. அதென்னமோ, அப்போது அம்மா என்று கூப்பிடத் தோன்றவில்லை. இவன் ஸ்வீகாரம் வந்தபோது எட்டு வயசிருக்கும். கண் சிரிக்கும். மூக்கு ஒழுகும். அந்த ‘ ட்ரவுசர் ’ பருவத்து நாட்களில், அண்ணி என்ற அந்த வார்த்தையின் சப்தம் இவனுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். இதுவே இந்தப் பதினைந்து வருஷத்தில், இந்த நாலு வீட்டுக் காம்பவுண்டிற்கும், அக்கம்பத்திற்கும் பெயரும் உறவுமாகிப் போனது.

இத்தனைக்கும் அண்ணிக்குக் குழந்தை இல்லை. மூஞ்சியில் அடித்த மாதிரியான இந்த ஏமாற்றத்திற்கு அப்புறமும் அவள் வக்கரித்துப் போயிவிடாமல் இருந்தாள். அப்புறமும் அவள் வக்கரித்துப் போய்விடாமல் இருந்தாள். ஊரையே ஸ்வீகரித்துக் கொண்ட மாதிரி எல்லாரிடமும் பிரியமாய் இருந்தாள். கட்டிப் பிடித்துக் கசகசக்காத பிரியம் இழுத்து வைத்துக் கொண்டு இறுகடிக்காத பிரியம். அதிகம் பேசக்கூடாச் செய்யாத பிரியம். நிதானமாய், அழகாய் செய்கைகளில் காட்டுகிற பிரியம். சொந்த வீட்டில் கிழிசல் பனியனும், அழுக்கு வேஷ்டியுமாகச் சுற்றி வர முடிகிற மாதிரியான இயல்பான பிரியம்.

இந்தப் பிரியத்தில் சுற்றுப்புறம் முழுதும் செழித்தது. அவன் அதன்பின் ஈரத்தில் நனைந்து , எத்தனையோ உயிர்கள் நெடுநெடுவென்று உயர்ந்தன.

அதில் இந்த புவனாவும் ஒருத்தி. பிறந்ததிலிருந்து இவனுடன் முடிச்சுப் போட்டுப் பேசப்பட்டு சில மாதங்களுக்கு முன், இவனுக்கு அப்போது வேலையில்லை என்ற காரணத்தால் வேறொருவனுக்கு மனைவியாகிப்போன பக்கத்து வீட்டுப் பெண். இவனுக்கு இதில் பெரிய துக்கமில்லை. என்றாலும் ஏமாற்றம். இவன் தனக்குள் குறுகிப் போனான். வேலையில்லை என்று சிறுமைப்பட்டதில் பெரிய காயம்.

இதையெல்லாம் இவன் சொல்லாமலேயே அண்ணி புரிந்து கொண்டிருந்தாள். புவனாவைப் பற்றி இவனிடம் பேசத் தயங்கினாள். இதற்குப்பின் இவனிடம் இன்னும் அன்பாகப் பழகினாள். இன்னும் நிதானமாகப் பேசினாள். எதற்காகவும் இவன் வதைபடக்கூடாது என்கிற ஜாக்கிரதையோடு நடந்து கொண்டாள். அப்போதெல்லாம் அண்ணியைப் பார்க்கிறபோது, இவன் மனம் கசிந்து போவான்.

இவன் வீட்டுக்கு வந்தபோது அண்ணி வாசல் திண்ணையில் உட்கார்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் எழுந்து வந்தாள். முகம் கழுவிக் கொண்டு வந்து ஊஞ்சலில் உட்காரக் காத்திருந்தாள். காப்பியைக் கொடுத்துவிட்டு …

“ இன்னிக்கு சரசு வந்திருந்துச்சு … ” என்று மெதுவாய் ஆரம்பித்தாள்.

“ என்னவாம் … ? ”

“ புவனாவையும் மாப்பிள்ளையையும் ‘ மறுவீடு ’ அழைக்கிறாங்களாம் நாளைக்கு ” – இவன் முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தாள்.

“ சர்தான் … ”

“ அண்ணிக்குப் பெரிய பந்தி போடுதாங்களாம். நம்ம கூடத்திலே பேடலாமான்னு கேட்டிச்சு. சரின்னுட்டேன். ஊஞ்சலைக் கழட்டி ஓரம் போடலாம், வாயேன்…”

இவன் ‘ விருட் ’ டென்று எழுந்து கொண்டான். ஊஞ்சல் குலுங்கிக் கோணல் மாணலாய் ஓர் ஆட்டம் ஆடி ஓய்ந்தது. அண்ணி பலகையைத் துடைத்து உட்கார வசதியாய் ஒரு பக்கம் வைத்தாள். சங்கிலியை வளைத்துத் தொங்கவிட்டாள். கதவுக்குப் பின்னாலிருந்து சின்னத் துடைப்பமாய் ஒன்றைக் கொண்டு வந்தாள். ஐந்தே நிமிஷத்தில் பெருக்கி மெழுகி பெரிசாய்க் கோலம் போட்டாள். கூடம் திடீரென்று அழகான மாதிரி இவனுக்குப்பட்டது.

இவன் வளைத்துக் கட்டியிருந்த சங்கிலியைப் பார்த்தான். புவானாவிற்கும் அவள் மாப்பிள்ளைக்கும் போட்ட மாலை மாதிரி கிடந்தது அது. அன்றைக்கு முழுதும் அது கைபடும் போதெல்லாம் இவன் மனசைப்போல, ‘ புவனா புவனா ’ என்று குலுங்கியது. ஆகிருதியும், பலமும் உள்ள யானையைக் கட்டிப் போட்ட மாதிரி, இரும்பு இரும்பாகப் பேசியது. பலத்தைக் காண்பித்து விடும்படி, ‘ புல் அப்ஸ் ’ எடுக்கச் சொன்னது. இவனுடைய சந்தோஷத்தின் வக்ரத்தை வெளிப்படுத்துகிற மாதிரி, விருந்துக்கு வந்த குழந்தையைக் கம்பி மடக்கில் உட்கார்த்தி வைத்து அழப் பண்ணுகிற உற்சாகம் கொடுத்தது.

விசேஷம் முடிந்து கழற்றிப் போட்ட பலகையை மாட்ட எடுக்கும்போதுதான் கவனித்தான். கீழே கிடந்தபோது அதில் நிறைய கால்கள் நடந்திருக்கின்றன. பாதமும் புழுதியும் ஊஞ்சலில் நடந்து ஊஞ்சலில்லாத இடத்தில் குதித்து மறைந்திருந்தன. அவை புவனாவின் ஞாபகம் மாதிரி அழித்தாலும் போகாததாக இருந்தன. அழித்த அடையாளமும் சேர்ந்து அசிங்கமாக மாறியது.

ரேழியில் நிழல் தட்டியது. படித்துக் கொண்டிருந்த புஸ்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தான். பக்கத்து வீட்டு சரஸ்வதி அக்கா. இவனைப் பார்த்து லேசாகச் சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். கொஞ்சங்கூட தயக்கமோ, கூச்சமோ இல்லாத நடை. சொந்த வீட்டிற்குள் நடந்து புழங்குகிற மாதிரி என்ன உரிமை ! என்ன ஸ்வாதீனம் !

“ அண்ணி… கூப்பனும், ஏனமும் தந்துவிட்டுப் போறேன். பால் வாங்கி வைச்சுடுறீங்களா ? ”

“ சரி … வைச்சுட்டுப் போ. எங்கன, சினிமாக்கா … ? ”

“ ஆமாம் அண்ணி … ”

“ அவரு ஊர்ல இல்லியாக்கும் … ? ”

“ கேம்ப் போயிருக்காரு, இல்லினா இப்படிக் கிளம்ப முடியுமா ? கொன்னுப் போட்டுடுவாங்க … ”

காலையிலே வடகம் பிளிஞ்சுட்டு இருந்தியே, புவனாவுக்கு சீர் போவுதாக்கும் … ? ”

“ ஆமாம் அண்ணி ! அது உண்டாகியிருக்காம். மாப்பிள்ளை தபால் போட்டிருக்காக. ‘ அவுங்க ’ வந்ததும் போய்ப் பார்த்துவிட்டு வரலாம்னு இருக்கேன் … ”

சரஸ்வதி போகும்போது இவனைப் பார்த்துச் சிரித்து விட்டுப் போனாள்.

இவன் புஸ்தகத்தை மூடி விசினான். என்னவென்று சொல்ல முடியாத வேதனையாக இருந்தது. வாசலில் வந்து நின்றான். இலைவட அசங்காத புழுக்கமாக இருந்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே மழை ‘ பட பட ’ வென்று இறங்கியது. வானுக்கும் பூமிக்கும் வெள்ளிச் சரிகையாய் மினுங்கிக் கொண்டிருக்கும் மழை.

அண்ணி புறவாசலுக்கு ஓடிவந்து , பக்கத்து வீட்டின் முற்றத்தில் கிடந்த வடகம் பிழிந்திருந்த பாயைப் பரபரவென்று இழுத்து உள்ளே போட்டாள். சாய்ந்து அடிக்கிற சாரலிலிருந்தும் காப்பாற்ற வேண்டியிருந்தது. “ கல்யாணி … இதக் கொஞ்சம் பிடி. உள்ளாற கொண்டு போட்டுடுவோம் … ” என்று இவனையும் உதவிக்கு அழைத்தாள்.

“ சரசு … வடகத்தைப் பிளிஞ்சு போட்டுட்டு, சினிமாவுக்குப் போயிடுச்சு பாவம் … அம்புட்டுப் பாடும் வீணாப் போச்சே … ! புள்ளைத்தாச்சிப் பொண்ணுக்கு எடுத்துப் போறது … ”

இந்த இரக்கத்தின் மீது இவனுக்கு எரிச்சல் வந்தது.

“ ஆமாம் அப்படியாவது, என்ன சினிமா வேண்டிக் கிடக்கு … அபத்த சினிமா … ”

“ எலேய் … கோடைமழை வரப்போவுதா இல்லியானு சோசியம் பார்த்துக்கிட்டா வடகம் பிளிவாங்க ” என்று அவள் பரிந்து கொண்டு வந்தபோதுதான் அது நடந்தது …

பறந்து பறந்து வந்த ஊஞ்சல் இவள் முதுகில் இடித்து லாத்தியது. மழையில் நனைந்து ஏற்கனவே கூழாய் நெகிழ்ந்திருந்த வடகம் காலை வாரிவிட, அண்ணி பாயில் சறுக்கிக் குப்புற விழுந்தாள். சில்லுமூக்குப் பெயர்ந்து மூக்கினடியிலும், நெற்றிப் பொட்டிலும், ஊன்றிக்கொள்ள முன்வந்த கையிலும் காயம். ரத்தம் பிசுபிசுவென்று கசிந்து கொண்டிருக்கும் காயம். சதையின் சிகப்பு விழித்துக் பார்க்கிற அளவு பெரிய காயம்.

அத்தனை குழந்தைகளும் விக்கித்துப் போய் நின்றன. ஊஞ்சலை விட்டு இறங்கின. ஓரமாய் நின்றன. அந்தக் குழந்தைகளின் கண்களில் மிரட்சி எட்டிப் பார்த்தது. சிலவற்றின் தொண்டையில் பயம் அழுகையாய் விசும்பியது. வலி, காயம், பயம் எதுவுமே என்னவென்று தெரியாத மிகச் சின்னக் குழந்தை ஒன்று அண்ணியின் முகத்தில் அப்பிக் கொண்ட மாவைக் கண்டு சிரித்தது.

இவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ‘ பிடித்துத் தள்ளுவதையும் தள்ளிவிட்டு என்ன இளிப்பு … ’ பாய்ந்து வந்து கைக்குக் கிடைத்த பையன்களைப் பிடித்துச் சாத்தினான்.

“ டேய் , டேய் … பச்சைப் புள்ளைங்களைப் போய் ஏண்டா அறைஞ்சுக் கொல்ற … ” இத்தனைக் காயத்திலும், இந்த வலிகளுக்கு நடுவேயும் அண்ணி அந்த வால்களுக்குப் பரிந்து கொண்டு வந்தாள்.

அண்ணி செத்துப் போனாள் …

அவளைக் கடைசியாய் இந்த ஊஞ்சல் பலகையில்தான் படுக்க வைத்துக் குளிப்பாட்டினது. இவன் நெஞ்சாரப் பிரியம் செலுத்தின எல்லா ஸ்வீகாரக் குழந்தைகளும் சுற்றி நின்றன. புவனாவும் அவள் மாப்பிள்ளையும் கூட. இவள் யாரையும் பார்க்காமல் கேட்காமல் அந்த ஊஞ்சல் மேல் கிடந்தாள். அத்தனை பேரும் குடங்குடமாய் ஊற்றின தண்ணீர் அவள் மேல் … அந்த ஊஞ்சல் மேல்.

ரொம்ப நாளைக்கு அந்த ஊஞ்சலைப் பார்க்கும் போதெல்லாம் அந்த ஈரம் காயவே இல்லை என்று இவனுக்குத் தோன்றும்.

சில ஈரங்கள் காய்கிறதே இல்லை …

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *