கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,804 
 
 

“டேய் கபாலி… உன்னையெல்லாம் அந்த சாமி சும்மாவே விடாதுடா… இந்த கையால ரிக்ஷா வலிச்சு வலிச்சு, எம்மாந் துட்டு தந்திருப்பேன். உனக்கு நன்றியே இல்லையேடா… தோ… கொசுறு துட்டு அம்பது ரூவா, அத கடனா கேட்டா அழுவுறே… தூ.”

கபாலியை தண்டிக்கும்படி, கடவுளிடம் மாரி, “ரெக்கமண்ட்’ செய்து கொண்டிருக்க, அதை பற்றி துளிகூட கவலைப் படாத கபாலி, காஜா பீடியை, லயிப்பாய் புகைத்துக் கொண்டிருந்தான்.

அலட்சியமாய் பீடியை புகைத்தபடியிருந்த கபாலியின் பனியனை பற்றி இழுத்தான் மாரி. முன்னமே சாயபு கடை பரோட்டாவைப் போல் கிழிந்திருந்த அவனுடைய பனியன், மாரியின் முரட்டு கைபட்டு, இன்னும் கிழிந்தது.

அவர்களது செல்ல விளையாட்டில், எரிச்சல்பட்ட டீக்கடை முனிஸ், அவர்களை அந்தாண்ட போகச் சொல்லி விரட்டினான். எரிச்சல் மண்ட முனிசை பார்த்த இருவரும், அங்கிருந்து விலகி நடந்தனர்.

“டேய் கபாலி… டீயாவது வாங்கித்தாடா.” அவனுடைய தோள் மீது, கைகளை விசிறிப் போட்டபடி, இருவரும் முன்னே நடக்க, அங்கிருந்தவர்கள், அவர்கள் இருவரையும் எரிச்சலோடும், வெறுப்போடும் பார்த்தனர்.

டைமண்ட் குப்பத்தில், இது நித்தமும் அரங்கேறும் நிகழ்ச்சி. பொறுப்பும், நாணயமும் வாசனைக்கு கூட அறியாதவர்கள், இந்த வகையறாக்கள். கொஞ்சம் அப்படி, இப்படி மனிதர்களை பார்த்தே பழகிய குப்பத்து மக்களுக்கே கூட, எந்நாளும், மாரி, கபாலி மற்றும் அவர்களுடைய நண்பர்களை பார்க்கையில், வெறுப்பாய்த் தான் இருக்கும்.

“மாரியண்ணே… உன்னை தேடி கெய்வி ஒண்ணு வந்திருக்கு,” என்று சொன்னான் ராசு.

“டேய் மாரி… என்னடா ஒன்னத்தேடி கெய்வியெல்லாம் வருது… என்ன விஷயம்?” கபாலி நக்கலாய் கேட்க, மாரி அவனுடைய முகத்தில் குத்தினான்.

“டேய் சோமாரி… நாங்க அனுமாருக்கு அக்கா புள்ளீங்கடா…” என்று துண்டு பீடியை, வாயோரத்தில் கடித்துக் கொண்டு, லுங்கியை முழங்கால் வரை உசத்தி கட்டிக்கொண்டு, ராசு காட்டிய திசையில் மாரி நடக்க, அவனை பின் தொடர்ந்தான் கபாலி.

இருபது அடி தூரம் நடந்து, பெரிய சந்தை ஒட்டிய முக்குச்சந்தின் பூட்டிய கடை வாசலில், அந்த கிழவி அமர்ந்திருந்தது. பக்கத்தில் ஏழெட்டு வயதுள்ள பெண்பிள்ளை ஒன்று.

“தா மாரி… இந்த ஆயா தான் உன்னை கேட்டுச்சு… இந்தா ஆயா, இவன்தான் மாரி…” செக்கோஸ்லோவாக்கிய அதிபரை, சீன பிரதமருக்கு அறிமுகம் செய்தவன்போல், தன் வேலையை முடித்து கொண்டு கிளம்பினான் ராசு.

கிழவியை உற்றுப் பார்த்தான் மாரி, அழுக்கு வெள்ளை சட்டை, பின் கொசுவம் வைத்துக் கட்டிய நூல் சேலை, கையில் மஞ்சள் பை.

எழுபது வயசிருக்கும்; இல்லை அதைவிட குறைந்த வயசா கூட இருக்கலாம்… வறுமை வயசை கூட்டி காண்பிக்கிறதோ!

“யார்மே… எதுக்கு என்ன தேடினே?”

அந்தக் கிழவி, மாரியையும், அவனுக்கு பின் நின்ற கபாலியையும் பார்த்து, திருப்தியுறாத கண்களால், அவர்களின் பின்புறமாய் எதையோ தேடியது.

“உன்னை இல்ல… மாரிய பார்க்கணும்!” என்று அப்பாவியாய் சொன்னாள் கிழவி.

“தோடா… நாந்தான் மாரி!” சலிப்பாய் சொன்னான் மாரி, ஒரு நொடி கிழவியின் கண்களில், ஆயாசமும், அயர்ச்சியும், தவிப்பும், நெகிழ்வும் வந்து விலக, தன் பையில் இருந்து, ஒரு கசங்கிய பேப்பரையும், சின்ன போட்டோவையும் எடுத்துக் காட்டியது.

அந்த துண்டு சீட்டில், ஏதோவொரு இரட்டை இலக்க கதவு எண் கொண்ட முகவரியும், கீழே டுமிங் குப்பம் என்றும் இருந்தது. போட்டோவில் மீசையும், தாடியுமாய், ஒரு இளைஞனின் நிழலுரு.

“நெனச்சேன்… ஆயா இந்த பேப்பர்ல டுமிங் குப்பம்ன்னு போட்டு இருக்கு… ஆனால், நீ வந்திருக்கிறது டைமண்ட் குப்பமில்ல,’ தன்னுடைய நாலாம் வகுப்பு படிப்பாற்றலை மாரி காட்டியபோது, கபாலிக்கு சிரிப்பு முட்டியது.

“போட்டோல யாரு… உம் மவனா… இன்னா விஷயம்?” மாரி கேட்டபோது, கிழவிக்கு கண்ணீர் முட்டியது.

“ஆமாம் ராசா… ஒத்தை புள்ள… கழுத்து புருஷன் போனாலும், வவுத்து புருஷன் இருக்கேன்னு, மனசை தளர விடாம, காத்துகிட்டு இருந்தேன். இப்ப கொம்பு உச்சியில நிற்கிற குரங்காட்டம், நிக்கவும் முடியாம, இறங்கவும் தெரியாம தவிக்கேன்!”

கிழவியுடைய கெக்க பெக்க பேச்சு, மாரிக்கு சிரிப்பாக வந்தது என்றாலும், அமைதியாய் இருந்தான். கிழவியே தொடர்ந்தது…

“நாலு வருசத்துக்கு முன்னாடி, இந்த புள்ளைக்கு மூணு வயசா இருந்தப்ப வீட்டை விட்டு போனவன் போனவன்தான்… ஒண்ணு உன்னை பெத்தவளுக்கு நீ கட்டுப்படணும்; இல்ல, உனக்காக புள்ளைய பெத்து தந்தவளுக்கு கட்டுப்படணும்… எதுவும் இல்லாம திரிஞ்சா, யார் என்ன செய்யுறது?” கிழவி புலம்பியது.

“சரி ஆயா… நீ இன்னாத்துக்கு இங்க வந்த… இன்னும் சொல்லல?”

“எம்மவன தேடித்தேன்… இரண்டு வருசத்துக்கு முன்னாடி, அவன் இங்க இருக்கிறதா சொல்லித்தான், இந்த காயிதம் போட்டான். ரெண்டோரு தரம், காசும் போட்டு விட்டான். “இந்த நாடோடி பொழப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தேன். ஆத்தா நான் இங்கன சாப்பாட்டு கடையில் வேலை பாக்குறேன். நாலுக் காசு சேர்ந்ததும், அங்க வர்றேன். நாம் கிளப்பு கடை போடலாம்’ன்னு எழுதினான். அத்தோடு சரி, அப்புறம் அவன் எதுவும் எழுதல, பணமும் அனுப்பல.”

உண்மையில் கிழவியின் வார்த்தைகள், “மெர்ஸ்’ ஆகத்தான் இருந்தது இருவருக்கும்.

“எனக்கும் எழுபது வயசாயிடுச்சு… நானும் எம்புட்டு நாளைக்கு அவனோட பொண்டு, புள்ளைகளை காபந்து செய்யறது, “பொசு’க்குன்னு என்னோட உசிரு நின்னு போச்சுன்னா, இதுக அனாதையாவுல போயிடும்… அதுக்குத்தான், நான் இம்புட்டுத் தூரம் தேடி வந்தேன்…

“எப்படியாவது அவன் கால்ல, கையில விழுந்து, வூட்டுக்கு வரச் சொல்லி கேட்கணும் சாமி, அவன்ட்ட இதுகளை ஒப்படச்சுட்டா, வேற என்ன வேணும்… எந்த உதவியும் வேணாம்?”
அந்த வயசான கிழத்தியின் வார்த்தைகள், மனசை புரட்டியது இருவருக்கும்.

“ஆயா… அந்த போட்டோவை இப்படிக் குடு, பக்கத்துலதான் டுமிங் குப்பம் கீது… வா ஒரு நடை போய் பார்ப்போம்!”

இரண்டொரு சந்துக்களையும், தெருக்களையும் கடந்து, அவர்கள் நடந்த முடிவில், டுமிங் குப்பம் வந்தது.

“இன்னும் எம்புட்டுத் தூரம் ஆத்தா நடக்கணும்… கால் வலிக்குது. நாம போற இடத்துல அப்பா இருக்குமா… நாம இப்பயே பார்த்துடு@வாமா?” அந்த பெண் குழந்தை, ஓயாமல் கேள்வி கேட்டது.

“வாய் ஓயாம கேள்வி கேட்காத தனலட்சுமி கண்ணு… உங்கய்யனை பார்த்ததும், ஓடிப்போய் காலைக் கட்டிக்கிட்டு, “நீ வூட்டுக்கு வா அப்புச்சி… நீ இல்லாம, அம்மாவும், அண்ணனும் அழுவறாங்க’ன்னு சொல்லணும் சரியா?”

பாட்டியும், பேத்தியும் ஒருவருக்கொருவர் அங்கலாய்த்தபடி வந்தனர்.

மஸ்தான் பாய், ஒர்க்ஷாப் வந்ததும், அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்ற, அவரிடம் சென்று விசாரித்தனர். அவருக்கு அந்த மாரியை தெரிந்திருந்தது.

“அட இவனா… நம்ம நாகேஷுட்ட கேளுப்பா… அதான், “மெஸ்’ வச்சிருப்பான்ல, அவன்கூடத்தான் இவன பாத்திருக்கேன்… அவனைப் போய் கேளு.”

கிழவியையும், பேத்தியையும் மஸ்தான்சாப் கடையில் உட்கார வைத்து விட்டு, நாகேஷுடைய மெஸ்சுக்கு, கபாலியும், மாரியும் வந்தனர்.

நாகேஷ்தான் கடையில் இருந்தான். போட்டோவை வாங்கி பார்த்த நாகேஷின் முகம், சட்டென்று சிறுத்து வதங்கியது.

“இவனா… இவன் பூட்டானேப்பா…”

நம்பாமல் பார்த்தான் மாரி.

“இவன் பேரு மாரின்னுதான் நெனக்கேன்… ஊர் நாட்டுக்காரபய, நம்ப கையிலதான் வேலையா இருந்தான். சட்டுன்னு ஒருநா, பெரிய ஓட்டலுக்கு வேலைக்கு போய்ட்டான் … அத்தோட அவனை நான் மறந்துட்டேன்…

“திடீர்ன்னு ஒருநா, நம்ம தோஸ்த் ஒருத்தன் வந்து, “மாரி நெஞ்சுவலியில செத்து பூட்டான்… அவனோட ஊர் நெலவரம் எதுவும் தெரியல… நாமளே எடுத்து போட்ரலாம்’ன்னு கூப்புட்டான். அதுனால, நானும் போய் தூக்கி போட்டுட்டு வந்தேன்… அவனோட பையில தேடிப் பார்த்தோம்; விலாசம் போன் நம்பர் எதுவும் இல்லை… அது சரி… நீ ஏன் இம்புட்டு நாக்கழிச்சு இவனை தேடுற?”

அவனிடம் பதில் கூறாமல், இருவரும் திரும்பி நடந்தனர்.

அவர்களின் மனசு முழுக்க, கிழவியின் முகமும், அந்த பெண் குழந்தையின் முகமும் நிழலாடியது.

“பாவம் கெய்வி… இம்மா வயசில், எம்புட்டு நம்பிக்கையா, மவனை தேடி வந்திருக்கு… அதனிடம் போய், அவன் செத்துப் போனதா எப்படி சொல்றது?’ இருவருக்குள்ளும், ஒரே எண்ணம்தான்.

இவர்களைப் பார்த்ததும், ஓடோடி வந்தது கிழவி. இவர்களுடைய பதிலுக்காக, முகத்தையே பார்த்தது.

“ஆயா… ஒண்ணும் கவலைப்படாதே… உம்மவன், பம்பாய்ல ரொம்ப சவுகரியமா இருக்கானாம்… பெரிய ஓட்டல்ல வேலையா இருக்கானாம்… இங்கிருந்து போய் மூணு மாசம் ஆகுதாம்… வருவான்; நிச்சயம் அவன்… ஒருநா உன்னை தேடி வருவான்… நீ விசனப்படாம போ…

“அப்பறம் உன் மவனோட பழைய மொதலாளி, அவனோட சம்பள பாக்கி, ஐநூறு ரூபாயை, உன் கையில தரச் சொன்னாரு… டேய் கபாலி, அதை ஆயா கையில குடு…” மாரி கையை நீட்டி கண்சிமிட்டி, கபாலியிடம் இருந்து, பச்சை ஐநூறு ரூபாய் நோட்டை வாங்கித் தந்தான். கிழவி முகமெல்லாம் பூரிக்க, வாங்கிக் கொண்டது.

“தம்பி… இது காசில்லை; எம் மவன் உசிருக்கான நம்பிக்கை… எங்கிருக்கானோன்னு வந்தேன்… ஆனா, அவன் இருக்கான். நிச்சயம் ஒருநாள் வருவான்னு, நான் நம்பித்தான் போறேன்… அவன் வந்துடுவான்; நிச்சயம் வந்துடுவான்!”

கிழவி, பேத்தியை கையில் பிடித்துக் கொண்டு, கம்பீரமாய் நடந்து போனது.

“ஏன்டா மாரி பொய் சொன்ன?”

கபாலி கிசுகிசுப்பாய் கேட்டான்.

“அந்த ஆயா இப்ப சொல்லிச்சே… “நான் நிம்மதியா போறேன்’னு இதுக்காகத்தான்டா… அந்த நிம்மதிய நாம ஏன் கெடுப்பானேன். கெய்விக்கு தெரிஞ்சதும், அது மவன் உசிரு பொழச்சா வரப் போறான்?

“அது மனசுக்கு, அது மவன், உசிரோட இருந்துட்டே போகட்டும்… எத்தனையோ, ஐநூறு ரூபா தாளை பாத்திருக்கோம். இன்னைக்கு தான்டா, அந்த பச்சை நோட்டோட ஈரம், என் உள்ளங்கையில ஒட்டிக்கிச்சு…” நெகிழ்வாய் மாரி சொன்னதும், அவனுடைய ஈர மனசின் வலியை உணர்ந்தவனாய், கிழவி சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான் கபாலி.

– பிப்ரவரி 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *