(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆர்வம் மிஞ்சிக் கரைமீது மோதுவதால் ஓய்ந்து போய் திரும்பும் அலைபோலிருந்தது கிரீசன் உள்ளம். இளமையில் இன்பக் கனவெல்லாம் வாழ்க்கையின் பாறைகளில் உடை பட்டுக் கிடந்தன. எதிரிலிருந்து அம்பர் ஊதுவத்தியினின் நீலப்புகை சுருள் சுருளாய்க் கிளம்பி, காற்றில் கரைந்து கொண்டிருந்தது. அறை முமுதும் ஒரே மணம்.
“ஆ! இந்த நீலப்புகை வெளியில் கரைந்து போவது போல் நானும் போய்விடலாகாதா? இவ்வளவு தொல்லையும் ஒழிந்து போகுமே அப்பொழுதுதான் இவர்களுக்கெல்லாம் என் அருமை தெரியுமோ என்னமோ!… ஆனால் ஊதுவத்தி எரிந்தால்தானே மணம் வீசுகிறது. வெறுமனேயிருந்தால் ஈர்க்குச்சிக்கு சமம் – இப்படி ஆண்கள் எரிவதால்தான் குடும்பத்தில் மணம் பாய்கிறதென்று இந்தப் பெண்களுக்கு தெரிய வேண்டாமா?…ஆனால் அவர்களும்தான் உயிரை விடுகிறார்கள்” என்று முன்னுக்குப் பின் முரணான அலைகள் சித்தத்தில் எழுந்து கொண்டிருந்தன.
வெளியே பார்த்தான். மாடி ஜன்னலுக்கு எதிர்த்தாற் போல் ஒரு பாஞ்சாலி மரம் பூத்திருந்தது. காட்டுத்தி அதற்கு உவமையாகாது—அவ்வளவு ஜுவச் சிவப்பு: கிட்டத்திலிருந்த சம்பங்கிச் செடியிலிருந்து லேசான வாடை சோம்பிச் சோம்பி வந்துகொண்டிருந்தது. வானத்தில், அமைதியாய்ச் செல்லும் ஆகாய விமானப் படைபோல் ஒரு வரிசை நாரைகள் வடக்கு நோக்கிச் சென்றன.
தெருப்புறத்திலிருந்து ஒரு பிச்சைக்காரியின் குரல்,
” வாராயோடி பெண்ணே வள்ளி!
வாகான திருத் தோணிக்கு”
என்ற வயிற்றை வளர்க்கும் வித்தையில் உயிரைப் பறி கொடுத்து நின்றது கிரீசன் உள்ளம் நெகிழ்ந்தது. மாடியி லிருந்தபடியே “அடியே! பிச்சைக்காரிக்கு ரெண்டு அரிசி போட்டுப் போகச் சொல்லு. கத்தறாளே” என்றான்.
“ஆமாம், உங்களுக்கும் வேலையில்லை. அவளுக்கும் வேலையில்லை. தினம் இதுதான் வேலையா?’
“குறைஞ்சா போயிடும்? பாவம்! ஏழைகள்!”
“எனக்குக் கை வேலையாயிருக்கு, பாவமாம்! நாம்ப ளெல்லாம் ரொம்ப சுகத்தைக் கண்டுவிட்டோம்… இப்படி பைத்தியமாட்டாமா பேசாதிங்கோ.”
“சுகம்,” “பைத்தியம்” என்ற பதங்களைக் கேட்டு கிரீசன் சித்தம் பழய யோசனையிலாழ்ந்தது. கண்கள் எட்டின வானத்தடியை நாடின. இங்கே இருக்கிறது இன்ப உலகம் என்றது நீலவானம். பாஞ்சாலிமரத்தின் பூ என்னிடம் என்றது. ஊதுவத்தி என் புகையில் என்றது. மனைவிகள் மனோபாவம், பணவிஷயம், விதிமுதலிய தத்து வங்கள், கிரீசன் உள்ளத்தில் சேர்ந்தாற்போல் எழுந்தன.
அடுத்த வீட்டு வாசலிருந்து பிச்சைக்காரியின் குரல் விதந்து வந்தது. “ஆமாம் நாம்தான் வள்ளி, இயற்கை அன்னைதான் தோணி. சுப்பிரமணிய சுவாமிதான் இன்ப உலகம் இப்படியே ஜன்னல் வழியாய்க் கிளம்பி, பாஞ்சாலி மரத்தில் ஒரு அடி வைத்து, அந்த மேகமண்டலத்தி லிருக்கும் அமர ராஜ்யத்திற்குப் போய் விட்டால் எவ்வளவு இன்பமாயிருக்கும்!” என்று ஒரு கற்பனை தோன்றிற்று.
அக் கற்பனையை “அப்பா” என்ற கீச்சுக்குரல் சிதைத்தது.
‘‘ஏண்டி ஜயா’” என்று திரும்பினான் கிரீசன்.
“அப்பா வாத்தியார் ஒரு ரூபாய் பணம் வாங்கிக்கிண்டு வரச் சொன்னார். புஸ்தகம் எல்லாம் அவர் தராராம்.”
“ஆமாம் போன வாரம் வாங்கிக்கிண்டு போனியே?”
“அது நோட்டுக்கு. இதோ பாரு ஆறு நோட்புக்.”
“இப்பொத்தான் ஞாபகம் வரது. பாக்கி சில்லரை குடுத்தாரா?”
“சில்லறையில்லை. அப்புறம் தரேன்னார்.”
“இதோட எத்தனை அப்புறமாச்சு.”
“சும்மா வாத்திரை நச்சு நச்சிண்ணு கேட்டா அடிக்க மாட்டாரா அப்பா?”
“சரி போ, புத்தி கொள்முதல். நான் வாங்கித்தரேன் புஸ்தகம்.”
“உனக்குத் தெரியாது அப்பா!”
“புஸ்தகத்துக்குப் பேர் எழுதிக்கிண்டு வாயேன்.”
” அதெல்லாம் முடியாதப்பா. எழுதித் தரமாட்டார். நீ ஒரு ரூபாய் குடுக்கரையா இல்லையோ, சொல்லிப்பிடு” என்று ஐயா கிரீசன் முழங்காலைக் கெட்டியாய்க் கட்டிக்கொண் டாள்.
“குடுக்கல்லே.”
“அப்படின்னா பள்ளிக்கூடத்துக்குப்போய் வெய்யில்வே நிக்கறேன்.”
“சரி பிராணத்தை வாங்கு” என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கி வந்து ரூபாயை எடுத்துக் கொடுத் தனுப்பிவிட்டு மறுபடியும் மாடிக்கு வந்து உட்கார்ந்தான். பேனாவும் பேப்பரும் எடுத்துக்கொண்டு ஏதாவது எழுதலாம் என்று யோசித்தான். ஐந்து நிமிஷம் சென்றிருக்கும். கீழிருந்து மனைவியின் குரல் மேலே வந்தது. “நீங்க மாடிலே இருக்கேளா?”
“ஆமாம் இருக்கேன்.”
‘‘கொஞ்சம் கீழே வாங்கோ.”
“என்ன சமாசாரம்?”
”வெறுமனே கூப்பிடுவேனா.”
“காரியமா இருக்கேன்.”
“இந்த எழுவுதான். எனக்கு மாடிக்கு வர தெம்புகூட இல்லை.” என்று சொல்லிக்கொண்டே மாடிக்கு மனைவி வந்து சேர்ந்தாள்.
“கீழே வாங்கோ இன்னா என்னை இங்கே இழுத்தடிக்க ரேளே. என்ன வெட்டி முறிக்கிற காரியம்? வெள்ளைக் கடுதாசையெல்லாம் கருப்பா அடிச்சிக்கிண்டு.
“பிரசங்கம் பண்ணாதே. சமாசாரத்தைச் சொல்லேன்.”
“கீழே ஒரு அம்மாமி வந்திருக்கா.”
“ஊம்”
“ஊருக்குப் புதுசாம். பெண்ணுக்கு வைத்யம் பண்ண அழைச்சிண்டு வந்திருக்காளாம்.”
“வைத்யம் எனக்கென்ன தெரியும்?”
“ஐயய்யே! என்ன பரிகாசம் வேண்டிக் கிடக்கு!”
“சரி, ஊம்.”
“அந்த அம்மாமி ஒரு பெரிய ஈயத் தவலை எடுத்துக் கிண்டு போனா.”
“திருடி விட்டாளா?”
“போங்கோன்னா, அதான் எடக்காப் பேசாதிங்கோ இங்கறது…அதை கடையிலே போடப் போறேன் செலவுக்குப் பணமில்லே. கிழங்காட்டமா இருக்கு. கடையிலே போட மனசாகல்லே. நீங்க வாங்கிக்கிண்டா கூலி மிச்சம். இன்னு தெருவிலே போற பொம்மனாட்டிகளையெல்லாம் கேட்டுக்கிண்டே போனா. எல்லாரும் வேண்டாம்னூட்டா, அந்த அம்மாமியைப் பார்த்தா கண்டிராவியா இருக்கு.”
“பாவம்!”
“அதான் நான் வாங்கலாம்னு பாக்கறேன்.”
“குசாலா வாங்கேன்.”
”பதினைஞ்ச சேராம். அழகா இருக்கு…பதினைஞ்சு மூணு…பதினைஞ்சு மூணு நாற்பத்தி அஞ்சணா லாபம்…”
“அம்மாமிக்கா?”
“செ! நமக்கு…பதிமூணனா மேனிக்கு பதினைஞ்சு சேருக்கு என்ன ஆச்சு?”
“அதிருக்கட்டும். பிச்சைக்காரிக்கு அரிசி போட கை ஒழியல்லே இன்னூட்டு அம்மாமியோட வியாபாரம் பண்ண பொழுது எப்படி அம்புட்டுது?”
“இந்தாங்கோ, ஏட்டிக்குப் போட்டியா பேசாதிங்கோ.. கணக்கை நேராச் சொல்லுங்கோ…”
“பன்னிரண்டு ரூபா, மூணு அணா”
“சரி பதினோரு ரூபாய் குடுங்கோ. அவ்வளவுதான் இன்னு சொல்லி, சரிக்கட்டி அனுப்பி விடறேன்.”
“சபாஷ்!…இவ்வளவு பெரிய ஈயத்தவலையை என்ன பண்றது? தினப்படிக்கு உதவுமா? இல்லேன்னா தினம் வீட்டிலே ஈயத்தவலைக்காக கல்யாணம், கார்த்திகை பண்றதா? இவ்வளவு பெரிசு நமக்கு வேண்டாம்னு நினைக்கறேன்.”
“நீங்க நினைக்கிறதுக்கு என்ன? ஒரு சமயா சமயத்திலே அல்லு அசலிலே போய் பல்லைக் காட்டிக்கிண்டு நான் போய் பாத்திரம் இரவல் கேக்கரேனோ நீங்களோ?.. இதை வாங் கிப்போட்டா என்னதான் செய்யப்படாது? அரையாடம் எண்ணை வைக்கலாம். மூனு மரக்கால் மாவடு போடலாம். அம்பது பேருக்கு இட்லிக்கு அரைச்சுக் கரைச்சு வைக்கலாம். …நீங்க என்னமோ லேகியம் பண்ணி வச்சிருக்கேளே- அதைக்கூட இதிலே வைக்கலாம். என்னதான் செய்யப் படாது? உங்களுக்கென்ன தெரியும்? மண்ணாங்கட்டி! ஜம்பமா இப்போ வேண்டாம்னா கஷ்டப் படறது நான்னா. நெஜம்மா ஓங்களுக்கு ஆசையே கிடையாது.”
கிரீசனுக்கு வெலவெலத்து விட்டது; வேறு ஆட்சேபணையைக் கிளப்பினான்.
“கையிலே பணமில்லையே?”
“இன்னிக்குத் தேதி அஞ்சுதானே ஆச்சு? வாங்கின சம்பளம்?”
“நான் ஒரு பைஸா கூட செலவழிச்சுக்கல்லே. புடவைக் காரனுக்கு-”
“எல்லாம் எனக்குக் குடுத்துட்டேன்னுட்டு நைஸாச் சொல்றேளா?… நீங்கவேணா ஈயத்தவலை வாங்க வேண்டாம்.”
“அடி அசடு! அப்படிச் சொல்லல்லே. அப்புறம் பால்காரி, தயிர்க்காரி, கடைக்காரன், வீட்டு வாடகை, எல்லாம் குடுத்தேன். கணக்கு சரியாயிடுத்து.”
“அப்படின்னா அடுத்தாத்து ஹெட்மாஸ்டரைக் கேட்டு வாங்குங்கோ. அடுத்தவாரம் குடுத்துடுவோம்.”
“அவர்கிட்டே பணம் வச்சுக்கற வழக்கமில்லையே. இருக்காதே.”
“இருக்காது இருக்காது இன்னு பல்லவி பாடுங்கோ! இவ்வளவு ஆட்சேபனை சமாதானம் செஞ்சு வாங்கறதைவிட சும்மா இருக்கலாம். ஊம், ஒங்க பிடிவாதத்தையே சாதிச்சுக்கோங்கோ. ஆனால் ஒண்ணு. இந்த ஈயத்தவலை போனா அப்புறம் வராது. லட்சம்பேர் அப்படியே கொத்திக் கிண்டு போயிடுவா – எலியை கருடன் கொண்டு போராப் பிலே. சொல்லிப்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு மனைவி மாடிப்படிக்கு வந்து தயங்கித் தயங்கி இறங்கினாள்.
“தேவி தோல்வி கண்டதில்லை என்று தேவி பாகவதம் சொல்கிறது” என்று கண்ணை சிமிட்டிக் கொண்டே ஹெட்மாஸ்டர் வீட்டுக்குக் கிரீசன் கிளம்பினான்.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.