இவர்களைப் பிரித்தது…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 6,238 
 
 

இதெல்லாம் எப்படி உண்டாகிறது என்று தெரியலை. அந்தக் குடும்பங்களுக்குள் உள்ள ஒற்றுமைபோல அந்த ஊரிலேயே கிடையாது.

நாலு அண்ணந்தம்பிகள்; ராம லெட்சுமண பரத சத்துருக்காள் போல, எந்தப் பாவிச் சிங்கம் வந்து இந்தக் காளைகளைப் பிரிச்சதுண்ணு தெரியலை. நாலுபேருக்கும் கல்யாணம் ஆனவுடன், நீளமான அந்த வீட்டை மூணு ஓலைத் தடுக்குகளால்ப் பிரித்து நாலு பகுதிகளாக்கி குடும்பங்களை ஆரம்பித்தார்கள்.

ஒரு வசதிக்காகத்தான் நாலு குடும்பமாக இருந்தார்களே தவிர பொட்டச்சிகளுக்குள்ளெ ஒருநா ஒரு பொழுதுகூட வாய்ச் சத்தம் வந்தது கிடையாது. அப்படியே மீறி வந்தாலும் அந்த ஆம்பிளைகளின் ஒரு திரட்டு முழியிலெ அடங்கிப் போகும்.

பூர்வீக நிலம் எட்டு ஏக்கர் கரிசக்காட்டை குடும்பத்துக்கு ரண்டு ஏக்கர் வீதம் பாகவஸ்தி செய்துகொண்டாலும் சேர்ந்தேதான் அதில் பாடுபட்டார்கள்.

பண ஏர் ஒன்றுக்குத்தான் செலவு; மற்றபடி களையெடுப்பு, களைசெதுக்கு, பயிர் கலைப்பிக்கிறது, அறுவடை, எல்லாம் நாலு குடும்பங்களும் சேர்ந்து சேர்ந்தே ஒவ்வொருத்தர் நிலத்திலும் மொய் ஆட்களாகப் போய் செய்து முடித்துவிடுவதால் அந்தக் குடும்பங்களி லிருந்து ஒரு மணி தானியமோ ஒரு கூறுப் பருத்தியோ வெளியே போகிறதில்லை .

விரதம், பண்டிகை முதலிய குறிப்பிட்ட சில நாட்களுக்குத் தான் கடையில் அரிசி இதெல்லாம் வாங்கி ஒரு தேரம் நெல்லுப்பருக்கை; மத்தப்படி ஆண்டு அறுவதும் அவர்களுடைய நிலத்தில் விளைகிறதைத் தான் சாப்பிட்டு வந்தார்கள். “நாகரீகம்” வந்து புகாததால் கண்ட மேனிக்கு துணிமணிகளுக்கும் செலவில்லை.

ஒண்ணே ஒண்ணைச் சொல்லவேண்டுமென்றால் ‘காப்பித் தண்ணி’ ஒண்ணுதான் கொஞ்சம் செலவு. அது வந்து எப்படியோ குடும்பங்களுக்குள்ளே பிசாசாய்ப் பூந்துகொண்டது. எப்படி அதை விரட்ட என்றுதான் தெரியாமல்த் தத்தளித்தார்கள்.

அந்த ஊருக்கு “அய்ஸ்கூல்”வந்தது. மாடு மேய்க்கிற நேரம்போக பாக்கி நேரத்தில் “சின்னப் பள்ளிக்குடம்” போய்வந்த பிள்ளைகள் அய்ஸ்கூலுக்குள்ளேயும் நுழைந்தார்கள். சுத்துப்பட்டிப் பிள்ளைகளும் ஆணும் பெண்ணும் அடைக்கத் திரண்டு வந்தார்கள், பைக்கட்டு களையும் தூக்குச்சட்டிகளையும் சுமந்துகொண்டு.

சீருடைகள் அணிந்து பள்ளிப்பிள்ளைகள் கவாத்து டிரில்) பழகுவதும் குழாய்க் கால்ச்சட்டைகள் மாட்டிக்கொண்டு தினுசு தினுசாக சீவப்பட்ட வாத்தியார்களின் சேக்குத் தலைகளும், கலர் கலராக வண்ணாத்திப் பூச்சிகளைப்போல் ஆடை அணிகள் அணிந்து கொண்டு வரும் வாத்தி அம்மாக்கமார்களின் நாகரீகமும் அந்தக் கிராமத்தை ஒரு கலக்கு கலக்கியது.

கொஞ்ச காலத்துக்கெல்லாம் பலபேர் படிப்பாளிகளாகி ‘சர்க்கார் வேலை’ அது இது என்று போக ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தநாலு அண்ணந்தம்பி குடும்பங்களில் மூத்தவனின் பிள்ளை களில் ஆறுபேரில் நாலுபேர் சூட்டிக்கையாய்ப் படித்துப் பேர் வாங்கினார்கள். அதில் ஒருத்தன் மட்டும் மாடுகளையும் காட்டு வேலைகளையும் செம்மையாய்க் கவனித்துக்கொண்டான்.

நடுவுள்ளவனின் பிள்ளைகளுக்கு சொல்லி வச்சதுபோல படிப்பு வரலை. அந்தப்பிள்ளைகள் மூணு பேருமே தாய் தகப்பன்களோடு கரிசக்காட்டு மண்ணில்தாம். மண்ணைக் கிளறிக்கொண்டு மண்புழுக் களாய்க் கிடந்தார்கள்.

மூணாவதுகாரனின் பிள்ளைகளுக்கு படிப்பு வந்தது. நாலாவதான இளையவன் வீட்டுப் பிள்ளைகளுக்கும் அந்தப் படிப்பு ராசி இல்லை.

இந்தச் சமயத்தில்தான், வெறும் தட்டிகளாய் குடும்பங்களைப் பிரித்துக் காட்டிக்கொண்டிருந்த ஓலைத்தட்டிகள் மண்சுவர்களாக வளர்ந்து திருத்தமாக வீடுகளைப் பிரித்தது.

***

இந்தச் சுவர்கள் வைத்த முகூர்த்தமோ என்னவோ, சகோதரக் குடும்பங்களுக்குள் பேச்சு வார்த்தைகள் இருந்தாலும் அவர்களுக் கிடையே ஒரு சையோத்தியம் இல்லை.

நடுவுள்ளவன் வீட்டுப் பெண்டுகள் தாங்கள் கொஞ்சநஞ்சம் சேர்த்து வைத்திருந்த சிறுவாட்டை ஐப்பசி கார்த்திகை மாசங்களில் அஞ்சிபத்துக்கு அடகு வைப்பவர்களிடமிருந்து பெறுகிற வட்டிப் பணம் மூத்தவன் வீட்டுப் பெண்டுகளுக்குப் பொசபொசப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்போது மூத்தவன் வீட்டில் படித்த நாலு பிள்ளைகளில் மூணு பேர் “சல்க்கார் வேலை”க்குப் போய் மாசாமாசம் சுளைசுளையாய் பணம் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த சமயத்தில்தான் மூத்தவன் குடும்பத்துக்கு மந்தையில் ரண்டு ஏக்கர் உரக்கால்ப் புஞ்சையை விலைக்கு வாங்கினார்கள்.

மூணாவதுகாரனின் பிள்ளைகளில் ரண்டுபேர் வாத்தியார் வேலைக்குப் போனார்கள்.

இளையவன் வீட்டில் வழக்கம்போல் காட்டுவேலைக்குப் போனால் உண்டு; இல்லையானால் சிரமந்தான் சாப்பாட்டுக்கு, அதுவும் அய்ப்பசி கார்த்திகை மாசங்களில் ரொம்பக் கஷ்டப்படும்.

பிள்ளைகள் வேலைக்குப்போய் சம்பாதிக்காதபோது குடும்பங் களுக்குள் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசனையாகவும் மொய்யாள் செய்துகொண்டும் கஷ்டமில்லாமலிருந்தது; பசிக்காமல் சாப்பிட முடிந்தது.

இப்போது ஒண்ணாவது, மூணாவது குடும்பத்தில் வந்த பக்க வருமானம் விவசாயத்தில் போட்டு எடுக்கத் தோதாக இருந்தது.

ரண்டாவது, நாலாவது குடும்பங்களுக்கு சொசைட்டி ‘லோன்’ அது இது வாங்கினாலும் திரும்பக் கட்ட வேண்டியதிருந்ததால் அது வந்தது போலவே போய்விடும்.

பணத்தினிடமுள்ள ஒரு கெட்டகுணம் சேர்ந்த இடத்திலேயே வந்து சேர்ந்துகொண்டிருக்கும்; அதுமட்டுமில்லாமல் அதுக்கே உண்டான வேறு பல குணங்களையும் புத்திகளையும் கொண்டுவந்து சேர்த்துவிடும்.

முக்கியமாய் பழியாய்ப் பொய் சொல்ல வைக்கும்.

கையில் பணம் இருக்கும் போது – முந்தாநாள் மணியாடர் வந்தது தெரிந்து – தம்பி வந்து கேட்கும்போது “பைசா கெடையாது; செலவுக்கே ரொம்பத் திண்டாட்டம்” என்று சொல்ல வைக்கும். அண்ணன் முகத்தை ஏறிட்டுப்பார்ப்பான் தம்பி; மனங்கசந்து, அத்தோடு பேச்சு வார்த்தை நின்று போய்விடும். ஏற்கெனவே அண்ணனிடம் வாங்கிய அஞ்சிபத்தும் திரும்பக் கொடுக்கமுடியாமல் வேற பாக்கி நிற்கும்.

***

ஒருநாள் சின்னவனுடைய கடைக்குட்டியும் மூத்தவனுடைய கடைக்குட்டியும் உப்புக்கட்டி விளையாட்டு விளையாண்டு கொண்டி ருந்தார்கள். விளையாட்டில் இப்பொ மூத்தவனுடைய பிள்ளையை இளையவனுடைய பிள்ளை சுமந்து செல்லவேண்டிய முறை. மூத்தவ னுடைய பிள்ளை அவனுடைய அய்ஸ்வர்யத்தைப் போல புஷ்டியாக இருந்தான். இளையவனுடைய பிள்ளை அவனுடைய ஏழ்மையைப் போல நோஞ்சானாக இருந்தான். அவன் முதலில் இவனை தூக்கிச் சுமந்தபோது சந்தோஷமாக இருந்தது இவனுக்கு.

– இப்பொ இவனால் அவனைத் தூக்கிச் சுமக்கமுடியாமல்த் திணறித் திண்டாடினான். தூக்கிச் சுமக்கும் “குதிரையை மேலே உட்கார்ந்துகொண்டிருப்பவன் சந்தோஷ ஆரவார அதிகாரம் பண்ணுவது வழக்கம். முதலில் இவன் செய்வதைப்போலவே அவனும் இப்பொ முதுகில் ஏறிக்கொண்டு அட்டகாசம் பண்ணுகிறான்.

இளையவன் பிள்ளைக்கு எல்லையைப் போய் மிதித்துவிட்டு வருவதற்கு முன்னால் திணறிப் போய்விட்டது. இப்படி ‘முக்கா முக்கா மூணு தரம்’ போய் வரணும்.

என்ன கஷ்டப்பட்டாலும் சின்னவன் பிள்ளைக்கு சந்தோஷம் தான்! முக்கித்தக்கிச் சுமந்துகொண்டு ஓடமுடியாமல் ஓடினான், எங்கே தடமாடி விழுந்துவிடுவானோ என்று பார்க்கிறவர்களுக்குத் தோன்றும். 2 மற்றப் பிள்ளைகள், இவன் திணறுகிறதைப் பார்த்து சிரிக்கிறார்கள். அவர்கள் சிரிக்கச் சிரிக்க இவனுக்கு வீம்பு அதிகமாகிறது. இந்தச் சமயம் பார்த்து கால்ச்சட்டை வேறு அவிழ்ந்து போய்விட்டது! “அய் அய்!” என்று மற்ற பிள்ளைகள் குதித்துக் குதித்துக் கைதட்டுகிறார்கள். மேலே முதுகில் இருந்தவனுக்கு விஷயம் தெரிந்து, குனிந்து காதோரம் இறங்கிக் கொள்ளட்டுமா என்று கேட்கிறான். வேண்டாம் வேண்டாம் என்று இவன் ஆக்ரோஷமாகச் சொல்லுகிறான். இந்தச் சாக்கிலாவது நின்று கொஞ்சம் தைப்பாறலாமே என்று தோன்றுகிறது இவனுக்கு. ஆனாலும் இவனுடைய விடாப்பிடியும் துணிவும் குழந்தைகளுக்கு சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது.

அவசரமாக அந்தவழியே நல்ல தண்ணீர் எடுக்கப் போய்க்கொண் டிருந்த சின்னவன் மனைவியிடம் அடுத்த தெரு பெண்குழந்தை போய் “அத்தெ அத்தெ ஒங்க அப்பண்டைப் பாருங்கெ” என்று சிரித்துக் கொண்டே காட்டினாள்.

திரும்பிப் பார்த்தவளுக்கு முதலில் ஒண்ணும் புரியவில்லை அப்புறம்தான் தெரிந்தது; தன் பிள்ளைமீது தன்மீது தன் குடும்பத்தின் மீது கொழுப்பும் வஞ்சகமும் மோசடியும் எப்படி ஏறி சவாரி செய்து அமுக்குகிறது என்று.

அதுவும் தனது குடும்பத்தைச் சேர்ந்த தாயாதியே மேலே ஏறி நசுக்குவதென்றால் பெற்றமனம் கேட்குமா.

வேகமாய்ப் போய், சவாரி செய்துகொண்டிருந்தவனை தலை மயிற்றைப் பிடித்து கீழே இழுத்துப்போட்டாள். மூச்சு இரைத்தது அவளுக்கு; ‘அவஞ் சாகமாட்டாமெக் கெடக்கிறவன் மேலெ இவ்வளவு பெரிய எருமெ மாடு ஏறி ஒக்காந்திருக்கயெ அறிவுகெட்ட முருகம்; நீ சோத்தத் திங்கியா என்னத்தெத் திங்கடா?” என்று கேட்டுவிட்டு, ஆவேசமாக தன்பிள்ளையைப் போட்டு மொத்து மொத்தென்று மொத்தினாள்.

“எம்மா நாங்க வெளையாடுறோம்; எம்மா நாங்க வெளையாடு ரோம்மா. ஒண்ணுமில்லையம்மா; நாங்க சும்மா தாம்மா வெளையாடு றோம்” என்று தன் மகன் எவ்வளவு கத்திச் சொன்னானோ அவ்வளவுக்கு அதிகமாகக் கிடைத்தது அடி.

தலைமயிற்றைப் பிடித்து தனது பிள்ளையை கீழே இழுத்துப் போட்டதையும் வைதுகொண்டிருப்பதையும் கேள்விப்பட்ட மூத்த வனின் பெண்டாட்டிக்கு ஆங்காரம் வந்தது.

“எப்பிடி ஏம்பிள்ளையெ இந்த மானங்கெட்ட சிறுக்கி தொடப் போச்சி. பாரு அவளெ இப்பொ நா என்ன செய்யறேண்ணு. அவ கப்பையைச் கிழிக்கலைண்ணா ஏம்பேரை மாத்திவச்சிக் கூப்பிடு” என்று புறப்பட்டு வந்துவிட்டாள். தனது மகள் சுப்பக்கா எவ்வளவு தடுத்தும் அவள் கேட்கலை.

தெருவே திமிலோகப்பட்டது. சண்டையான சண்டை இல்லை. தன்னை மறந்து ஆடினார்கள் ரண்டுபேரும். எத்தனையோ நாள், எப்போதோ…. யார் யாராரிடமோ தாங்கள் பட்ட சிறுமைகள் அவமானங்கள் துக்கங்கள் அத்தனைக்கும் இப்பொ எதிர்எதிரே நின்று கொண்டிருப்பவள் தான் காரணம் என்பதுபோல ஆங்காரமாய் வெறியோடு நாய்கள் போல் சண்டையிட்டார்கள்.

முன்னாலேயும் இப்படி சண்டை ஆரம்பம் ஆகும்தான்; ஆனால் அந்தந்த வீட்டு ஆம்பிளைகள் உடனுக்குடன் அமத்தி அதை சாந்தப் படுத்திவிடுவார்கள்.

இப்போது, இந்த சத்தக் கூக்குரல் அவர்களுக்கும் கேட்கத்தான் செய்தது.ஆனால், ஏனோ அவர்களால் ஒன்றும் செய்யத் தோன்ற வில்லை, இது நீடிக்கட்டும் என்று காத்திருப்பதுபோலவும், முற்றினால் தாங்களும் பாய்ந்து, கலந்து கொள்ளவேண்டும் என்று ஒரு துடி இருப்பதுபோலவும் தெரிந்தது.

சுப்பக்காள் தான் கண்ணீர் விட்டாள்.

அவள் மூத்தவனின் மகள். அக்குடும்பங்களில் பிறந்த தலைமகள். நாலு குடும்பங்களும் சேர்ந்து பாசத்தைப் பொழிந்து முத்தம் தடவி வளர்க்கப்பட்டவள். எட்டாவது வயசில் கடுமையான காய்ச்சல் வந்து, இளம்பிள்ளைவாதத்தால் கைகால் முடங்கிப் போனவள். கால்கை சுருங்கி நடமாட முடியாத முடமாகிப் போனதாலேயே குடும்பத்த வர்கள் அனைவரின் விசேஷ அன்புக்கும் பிரியத்துக்கும் பாத்தியப் பட்டிருந்தாள். உடம்பு முடமாகிப் போனாலும் பாசத்தையும் அறிவையும் கொண்டிருந்தாள்.

தனது சித்தப்பன்மார்களுக்கும் அப்பனுக்கும் கூட புத்தி சொல்லுவாள்.

முன்னெல்லாம் ஏதொரு காரியமானாலும் சித்தப்பன்மார்களின் குடும்பத்தவர்கள் இங்கே ஓடி ஓடி வருவார்கள். யோசனை கேட்பார்கள். இப்பொ ஒரு வீட்டுச் சத்தம் ஒருவருக்குக் கேட்காமல் ஊடுசுவர் பலமாக வைத்தாகிவிட்டது.

அழுதுகொண்டே கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சுப்பக்கா யோசித்தாள்.

ஏன் இப்படி இந்தக் குடும்பங்கள் ஆனது?

குடிக்க கஞ்சிக்குக் கஷ்டப்பட்டபோதெல்லாம் எவ்வளவு பிரிய மாகவும் ஒற்றுமையாகவும் இருந்தோம். யோசித்து யோசித்துப் பார்த்தும் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

இப்போது பசியில்லாமல் சாப்பிடுகிறோம். கையில் ஓரளவு காசு புரள்கிறது. செழிப்பம் தலைதூக்கி வருகிறது. முன்னைவிட இப்போது அதிக ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் அல்லவா இருக்கவேண்டும்: அப்படி இல்லையே; தனது அம்மாவின் குரல் தெருவில் ஆவேசமாய்க் கேட்டது “அடீ ஒங் குடும்பத்தையே கருவறுத்துர்றேன் பாரு”

சின்னச்சித்தியின் குரல் அதைவிட பலமாக கீச்சுக் குரலில் “ஒன்னையும் ஒம்பிள்ளைகளையும் கண்டந்துண்டமா வெட்டிப் போட்டுட்டு நாஞ் செயிலுக்குப் போகலே…… என்னெ சொடக்குப் போட்டுக் கூப்பிடட்டும் இந்த ஊரு”.

துக்கத்தையும் பதட்டத்தையும் மறந்து சுப்பக்காவுக்கு சிரிப்பு வந்தது.

– சும்மா, 17 ஜூலை 1984

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *