இவர்களென்ன மார்க்கண்டேயர்களா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 6,573 
 
 

சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தனை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள். அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம். மாப்பிள்ளை யேர்மனியாம். அப்ப அவருக்கு முப்பத்தெட்டு வயசு. சங்கவியை விட பதின்மூன்று வயசு கூட எண்டாலும் பரவாயில்லை. சீதனம் ஒண்டும் வேண்டாம் எண்டெல்லே சொல்லியிருக்கிறார். இனி இதுக்குள்ளை வயசைப் பார்த்துக் கொண்டிருக்கேலுமே! போதாதற்கு சங்கவிக்குப் பின்னாலை 23, 20, 16 எண்டு மூண்டு குமருகள் எல்லோ காத்துக் கொண்டு நிக்குதுகள்.

அதுதான் மாப்பிள்ளைக்கு தலை முன்பக்கத்தாலை வெளிச்சுப் போனதைப் பற்றிக் கூட ஒருத்தரும் அக்கறைப்படேல்லை. இந்த விசயத்திலை சங்கவி கோயில் மாடு மாதிரித்தான். பெரியாக்கள் எல்லாருமாப் பேசித் தீர்மானிச்சிட்டினம். அவள் தலையை ஆட்ட வேண்டியது தான் பாக்கி இருந்தது. அவளுக்கு வேறை வழியில்லை. ஆட்டீட்டாள்.

என்ன……..! அம்மா கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் எண்டு எல்லாச் சஞ்சிகைகளையும் வேண்டிப் படிச்சதோடை விடாமல், அதிலை வந்த தொடர்கதைகள் எல்லாத்தையும் சேர்த்துக் கட்டி வைச்சிருந்தவள். அந்தப் புத்தகங்களுக்கை இருந்த பொன்னியின் செல்வன், ராஜமுத்திரை போன்ற அரச கதையளை எல்லாம் வாசிச்சு வாசிச்சு, அதிலை வாற ராஜகுமாரர்களைப் போலவும் இளவரசர்களைப் போலவும் தனக்குள்ளை ஒரு இலட்சிய புருசனை வரித்து வைத்திருந்தவளுக்கு, இப்ப கறுப்பா, கட்டையா வழுக்கைத் தலையோடை ஒருவன் வரப் போறான். ஆனால் வெளிநாட்டிலை இருந்து வரப் போறான்.

கதைகளில் வந்த மாநிறமான வீரபுருசர்களைக் கற்பனையில் கண்ட சங்கவிக்கு யேர்மனிய மாப்பிள்ளைதான் இனி தன் புருசன் என்பதை மனதில் பதிய வைக்கச் சில காலங்கள் தேவைப்பட்டது. அது பல காலங்கள் ஆகியிருந்தால் கூட ஒன்றும் ஆகியிருக்காது. ஏனெண்டால் நியம் பார்க்காமல், புகைப்படம் பார்த்து, இரண்டு வருச கடிதக் குடித்தனத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளையைத் தூக்கி ஜெயில்லை போட்டுட்டாங்களாம். என்ன – அவர் ஒண்டும் பெரிய பிழை விடேல்லையாம். தூள் வித்தவராம். கறிக்குப் போடுற தூள் இல்லை. மற்றது.

யேர்மன் சட்டதிட்டங்களும் பொலிஸ் கெடுபிடியளும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. மாப்பிள்ளையோடை சேர்ந்து இன்னும் நாலுபேராம். சங்கவி ராஜகுமாரர்களையெல்லாம் களைந்து விட்டு யேர்மன் மாப்பிள்ளையை மனசுக்குள் குடி வைச்ச பிறகுதான் இந்தப் பிரச்சனை வந்ததெண்டபடியால், பிறகு யேர்மன் மாப்பிள்ளையையும் மனசிலிருந்து களைந்தெறிய சங்கவிக்குத் துணிவு வரேல்லை.

இனி என்ன செய்யிறது! கிறிமினல் குற்றவாளி என்ற பட்டப் பெயரோடை வெளியிலை வரப்போகும் மாப்பிள்ளைக்காண்டி இன்னும் ஐந்து வருசம் காத்திருக்க வேண்டி வந்தது. இதுவே இப்ப எண்டால் மாப்பிள்ளையை நேரே கொண்டு போய் நாட்டிலை இறக்கி விட்டிருப்பாங்கள். அந்த நேரம் அந்தக் கடும் சட்டம் வராதபடியால் மாப்பிள்ளையாலை யேர்மனியிலையே இருக்க முடிஞ்சுது. சங்கவி காத்திருந்தாள். மனசு ஒண்டையே சுத்திச் சுத்திக் காத்துக் கொண்டிருக்க வயசு மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் ஓடி 32ஐத் தொட்டு விட்டது.

ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு திருமணத்துக்காக சிங்கப்பூரை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமாக இன்னும் 3 வருசங்கள் தேவைப்பட்டுது.
அதிலையென்ன வந்தது இப்ப..? சங்கவி 35 ஐத் தொட்டு விட்டாள். அவ்வளவுதான். மனசு மட்டும் இன்னும் 25 போல் மிகவும் இளமையாய் கனவுகளுடன் காத்திருந்தது.

மாப்பிள்ளை எல்லாச் செலவையும் பார்க்கிறார் எண்டுதான் பேச்சு. ஆனால் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு வாறதுக்கு இடையிலை சங்கவின்ரை அம்மாவுக்குத்தான் கொஞ்ச ஆயிரங்கள் செலவழிஞ்சிட்டுது. எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தால் இன்னும் கூடப் போயிருக்கும். தனிய சங்கவியின்ரை 16 வயசுத் தங்கைச்சி பார்கவியையும் – அவளுக்கு இப்ப 26 ஆச்சு – அப்பா இல்லாத படியால் துணைக்கு மாமாவையும் தான் கூட்டிக் கொண்டு வந்தவள். அப்பா கடைசித் தங்கைச்சிக்கு 10 வயசா இருக்கக்கையே மாடு மிரிச்சுச் செத்திட்டார்.

சங்கவிக்கு காசெல்லாம் செலவழியுது எண்டு கொஞ்சம் அந்தரமாத்தான் இருக்குது. ஆனால் கல்யாணக் கனவுக்கு முன்னாலை அது சிம்பிள்தான். சிங்கப்பூருக்கு வந்து இரண்டு கிழமை பறந்தோடிட்டு. நல்ல காலமா சிங்கப்பூரிலை சங்கவியின்ரை தூரத்து உறவு மாமா குடும்பத்தோடை இருந்ததாலை ஹொட்டேல் செலவு இல்லாமல் தங்க வழி கிடைச்சிட்டு. மாப்பிள்ளை ஹொட்டேல் செலவை தான் பார்க்கிறன் என்று ஹொட்டேல்லை தங்கச் சொன்னவர். அவரும் எவ்வளவுக் கெண்டு தாறது. அவர் அங்கையிருந்து வந்தாப் பிறகு – இவ்வளவு நாளும் ஹொட்டேல்லை இருந்து சாப்பிட்ட காசைத் தாங்கோ எண்டு – கேக்கேலுமே..!

சங்கவிக்கு சிங்கப்பூரிலை ஒண்டும் தெரியாது. சின்னப் பிள்ளையா இருக்கேக்கை அப்பாவோடை போய்ப் பார்த்த ஒரு கறுப்பு வெள்ளை சினிமாப் படத்தின்ரை பெயர் மட்டும் ரங்கூன்ராதா என்று நல்ல நினைவாய் இருக்கு. அவ்வளவுதான் அவளுக்கு தான் இப்ப தங்கியிருக்கிற ரங்கூனைப் பற்றியும் தெரியும். அதையெல்லாம் அறியோணும் எண்ட ஆர்வம் கூட பெரிசாய் இல்லாமல், வரப்போற மாப்பிள்ளையையே மனசு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அரச கதைக் கதாநாயகர்கள் நினைவில் வந்து போனார்கள். கச்சை கட்டிய ராஜகுமாரிகளைப் போல் தன்னைக் கற்பனை செய்து கொண்டாள்.

அரண்மனைக்குச் சொந்தமான நீச்சல் தடாகத்தில் தான் குளித்துக் கொண்டிருக்க குதிரையில் வந்த மாப்பிள்ளை……… தன் அழகைக் கள்ளமாக ரசிப்பது போல………. சங்கவிக்குக் கன்னம் எல்லாம் சிவந்து…….. தனக்குள் தானே நாணி……!

குளித்து சேலை உடுத்தி முகத்தை நேர்த்தியாக்கி விட்டு நேரத்தைப் பார்த்தாள். இன்னும் மூன்று மணித்தியாலங்கள். – சே…… இந்த நேரம்……. ஏன் இப்படி நத்தை மாதிரி நகருது. – காத்திருப்பது சுகமானதுதான். ஆனால் எத்தனையோ வருசமாக் காத்திருக்கிறபோது தோன்றாத அவஸ்தை இறுதி நாளில் தோன்றுவது விசித்திரம்தான். நேற்றிரவிலிருந்து சங்கவிக்குள் இன்னவென்று சொல்ல முடியாத போராட்டம். இன்னும் காத்திருக்க வேணுமா..! என்ற ஏக்கம். மணித்தியாலங்களை எண்ணி எண்ணி இன்னும் இத்தனை மணித்தியாலங்கள் காக்க வேணுமே..! என்ற மலைப்பு.

மாப்பிள்ளையின் சொந்தங்கள் – அக்காமார், அண்ணாமார் எல்லாரும் சுவிஸ் யேர்மனி பரீஸ் என்று பரந்திருக்கிறார்கள். அவர்களும் இன்று சிங்கப்பூர் எல்லாரும் சேர்ந்து வருவதாகத்தான் திட்டம்.

சங்கவி பொறுமையிழந்து மீண்டும் நேரத்தைப் பார்த்தாள். குறிப்பிட்ட நேரம் தாண்டி விட்டது. அம்மா, தங்கைச்சி பார்கவி, மாமா எல்லாரும் கூட குளித்து வெளிக்கிட்டு மாப்பிள்ளையை வரவேற்க ரெடியாக இருந்தார்கள்.

ஆ……..வந்து விட்டார்கள். சங்கவியின் கால்கள் பின்னிப் பிணைந்து தடுமாறி….. முடியவில்லை அவளால்….. ஓடி விட்டாள் அறைக்குள்.

உள்ளிருந்து திறப்புத் துவாரத்தினூடாக வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். – எங்கை மாப்பிள்ளையைக் காணேல்லை. இவர் எங்கை போட்டார்..? வரேல்லையோ..? – மனசு பட படத்தது. இதயம் அடித்துக் கொண்டது. வண்ண வண்ணச் சேலையில் பெண்கள், சிட்டுக்களாய் குழந்தைகள்….. – இவர் மட்டும் எங்கே……? –

சங்கவீ……! வெளீலை வா. அம்மா கூப்பிட்டா. சங்கவி மெல்லிய ஏமாற்றத்துடன் வெளியில் வந்தாள். எல்லோரது பார்வையும் சங்கவி மீது மேய்ந்து பின் பார்கவி மீது பாய்ந்தன. சங்கவியின் கண்களோ மாப்பிள்ளையைத் தேடியது. – ம்..கும்….. காணவில்லை. எங்கை அவர் வரேல்லையோ….? – வெட்கத்தை விட்டுக் கேட்டு விட்டாள்.

எல்லோர் பார்வையும் ஒருமித்து அவர் பக்கம்… அதுதான் கொல் கொல்லென்று இருமிக் கொண்டிருந்த ஒருவர் பக்கம் திரும்பியது. – இவர்தானா அவர்..! – சங்கவியால் நம்ப முடியவில்லை.
கற்பனைச் சிறகுகள் ஒரு கணம் விரிய மறுத்தன. ஒரு கணம்தான். சுதாரித்துக் கொண்டாள்.
– 38வயது மாப்பிள்ளையும் பத்து வருசத்திலை 48வயசைத் தொட்டிருப்பார்தானே. என்ரை மரமண்டைக்குள்ளை இது ஏன் தோன்றேல்லை..? அது மட்டுமே 5வருசம் ஜெயிலுக்கை இருந்தவரில்லோ..! வருத்தம் பிடிச்சிருக்கும் தானே..! அவரும் அதுக்குப் பிறகு ஒரு போட்டோவும் அனுப்பேல்லை. ம்ம்….. ஆர் நினைச்சது….! இப்பிடிக் கேவலாமாப் போயிருப்பார் – எண்டு. மனசைச் சமாளித்தாள்.

ஒருவாறு சம்பிரதாயப் பேச்சுக்கள், சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு, அன்றைய பொழுதும் இருண்டு விட்டது. அதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஏதேதோ குசுகுசுத்தார்கள். மாப்பிள்ளையின் அக்கா கணவன் மாமாவை வெளியில் வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போனார்.

திரும்பி வரும் போது மாமா பேயறைஞ்சது போல வந்தார். அவர்கள் ஹொட்டேல் புக் பண்ணியிருப்பதாகச் சொல்லிப் போய் விட்டார்கள். சங்கவி எதிர் பார்த்தது போல மாப்பிள்ளை அவளுடன் தனியாக ஒன்றுமே கதைக்கவில்லை. கடிதங்களில் கதைத்த மாப்பிள்ளை இப்போது சற்று அந்நியப்பட்டுப் போனார் போல உணர்ந்தாள். மாமா நிறையப் பேசவில்லை. கவலையாக இருந்தார்.

சங்கவிக்கு – மாப்பிள்ளை வரமுன்னம் மனசுக்குள்ளை இருந்த குழுகுழுப்பான நினைவுகள் எல்லாம் இப்ப இல்லாமல் போய் விட்டன போல ஒரு வெறுமையாக இருந்தது. தங்கைச்சிதான் சும்மா சும்மா சீண்டிக் கொண்டிருந்தாள்.

இரவு நெடுநேரத்தின் பின் மாமா அம்மாவிடம் குசுகுசுப்பது சங்கவியின் செவிகளில் நாரசமாய் விழுந்தது. – 35வயசு வந்த பொம்பிளையை ஆராவது கலியாணம் கட்டுவினையோ எண்டு அத்தான் காரன் கேட்டான். சங்கவின்ரை தங்கச்சியை வேணுமெண்டால் மாப்பிள்ளை கட்டுறாராம். 35 வயசான சங்கவியைக் கட்டி என்ன பிரயோசனமாம்.

சங்கவிக்கு வானம் தரையில் இடிந்து விழுவது போன்றதொரு பிரமை.

எனக்கு மட்டும்தான் வயசு ஏறியிருக்கோ…….! அவருக்கு வயசென்ன இறங்கியிருக்கோ…….! 48 வயசுக் கிழடுக்கு 26 வயசுப்பெண் தேவைப்படுதோ…….! நாடி நரம்பெல்லாம் புடைத்து…….! கோபம் அனல் கக்கியது. நாளைக்கு வரட்டும் கேட்கிறன். சங்கவி மனசுக்குள் கறுவிக் கொண்டாள்.

– சங்கவிக்குத்தான் வாழ்க்கை அமையேல்லை. பார்கவியாவது வாழட்டும் – என்று அம்மாவும் மாமாவுமாகத் தீர்மானித்தது அவள் காதுகளில் விழவில்லை.

சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யில் கல்வி கற்றவர். கணிதத் துறையில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *