இவனும் அவனும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,060 
 
 

“தடுக்கி வுழுந்தா பல் டாக்டர் மேலதான் வுழணும். நம்ப ஏரியாவிலேயே அத்தினி பல் டாக்டருங்க இருக்காங்க. இதுக்காக திருவான்மியூரிலிருந்து தண்டையார்பேட்டைக்குப் போகணுமா? உலகத்திலேயே ஒங்க ஒருத்தருக்குத்தான் தனியா ஊர்க்கோடியில ஒரு டாக்டர்!’

ராதாவின் ஆசீர்வாதத்தோடு கிளம்பும்போது ரவியின் மனத்திலும் அதே கேள்விதான் எழுந்தது.

“ஏன் நம்மால இங்கேயே ஏதோ ஒரு டாக்டர்கிட்டே போக முடியல? பல்லுக்கு, தண்டையார்பேட்டை; கண்ணுக்கு, சைதாப்பேட்டைன்னு பேட்டைப் பேட்டையா ஓடிக்கிட்டிருக்கோம்?’

இவனும் அவனும்டாக்டர்தானில்லை. முடி வெட்டிக்கொள்வதுகூட எங்கேயோ திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் இருக்கும் சலூனில் செய்து கொண்டால்தான் திருப்தி.

பழக்கம்தான் காரணமோ?

அப்பா காலத்திலிருந்தே பழக்கம். அப்பாவுடன் சென்ற பழக்கம். இப்போது அப்பா இல்லாத போதிலும் அந்த இடங்களுக்குச் செல்லும்போது, அப்பாவுடன் இருப்பதைப் போன்ற உணர்வு தோன்றுகிறதே? அதனாலா?

“நமக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்த பிறகும் இன்னமும் குழந்தைத் தனமாய்ப் பாதுகாப்பைத் தேடி ஓடுகிறோமா?’ நினைக்கும்போதே சிரிப்பு வந்தது ரவிக்கு.

எண்ணங்களின் துணையோடு பஸ்ஸில் பயணித்தபோது, நேரம் போனதே தெரியவில்லை. தண்டையார்பேட்டை வந்துவிட்டது.
பல் டாக்டரிடம்போனால் எப்போதும் நேரமாகும். டாக்டர் ரொம்ப சாவகாசமாக அப்பா காலத்துக் கதைகளைப் பேசி… சிகிச்சையளித்து, “கவலைப்படாதே! உன்னோட முப்பது பல்லுக்கும் நான் ஜவாப்தாரி!’ என்று கூறி சிரித்து வழியனுப்புவார். இரண்டு ஞானப்பற்கள் சரியாக வளரவில்லை என்று எடுக்கப்பட்டு விட்டதால் ரவிக்கு, கணக்குப்படி இப்போது முப்பது பற்கள்தான்.

இன்று டாக்டரிடம் கும்பலேயில்லை. நேரே உள்ளே போன ரவி, டாக்டர் ஆசனத்தில் அமர்ந்திருந்த இளைஞனைக் கண்டு திகைத்துப் பின்னடைந்தான்.

“டாக்டர் நாராயணன்…’

“அப்பா காலமாயிட்டாரே! போன மாசம்… எல்லோருக்கும் தெரிவிக்கணும்னு ஹிந்து பேப்பர் “அபிச்சுவரி!’யில கூட குடுத்திருந்தோமே?’

ரவிக்குத் தடுமாற்றத்தில் என்ன பேசுவதென்றே புரியவில்லை.

“ஐயாம் ஸாரி! எனக்குத் தெரியாமப் போச்சு! ரொம்ப வருஷப் பழக்கம்! எங்கப்பாவுக்கே இவர்தான் வைத்தியம் பண்ணியிருக்காரு!’

“அப்படியா? உக்காருங்க சார்! நான் இப்போதுதான் பெங்களூர்ல பி.டி.எஸ். முடிச்சுட்டு வந்தேன். அப்பாவோட சேர்ந்து “ப்ராக்டீஸ்’ பண்ணணும்னு நெனச்சிக்கிட்டிருந்தப்போ திடீர்னு எதிர்பாராம இப்படி நிலைமை!’ என்று கூறி பல் வலிக்கு சிகிச்சையளித்து வாசல்வரை மரியாதையாக வந்து வழியனுப்பினான் அந்த இளைஞன்.

வெளியே வந்த போதுதான் “டாக்டர் நாராயணன்’ என்ற பெயர்ப் பலகைக்குக் கீழே “டாக்டர் ராம்குமார்’ என்ற பெயர்ப் பலகை புதிதாக மாட்டப்பட்டிருப்பதைக் கவனித்தான் ரவி.

“காலச்சக்கரம் சுழலுகிறது. இவன் அப்பாவோடு நான் பாதுகாப்பாக உணர்ந்த காலம் போய், டாக்டர் பிள்ளை, பாதுகாப்பைத் தேடி அப்பாவுக்குத் தெரிந்த கஸ்டமர்களைத் தேடுவானோ?’

“டாக்டர் நாராயணன்’ என்ற பெயர்ப் பலகையைக் கடைசியாக ஒருமுறை ஏறிட்டு விட்டுத் திரும்பினான் ரவி.

பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது, “திருவான்மியூரிலேயே ஒரு பல் டாக்டரைப் பழகிக் கொள்ள வேண்டியதுதான்’ என்று மனசு தீர்மானித்துக் கொண்டது.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *