அந்தோனி வீட்டிற்கு வெள்ளை அடிக்க வரும் போது மீரா அப்பொழுதுதான் நித்திரைப் பாயால் எழும்பி முகம் கழுவுவதற்காகக் கிணற்றடியை நோக்கிப் போய்க் கொண்டிரு ந்தாள். அது எந்த வருடமென்று அவளுக்குச் சரியாக ஞாபகமில்லை அப்போதெல்லாம் கிணற்றுத் தண்ணீர் தான். மின்சாரமே கிராமத்துக்கு வராத நிலையில் குழாய்த் தண்ணீர் ஏது. கிணற்றிலே நீர் மொண்டு வாளியாலே அள்ளிக் குளிக்கிற அனுபவமே ஒரு தனிச் சுகம் மீராவுக்கு அது நிரம்பப் பிடிக்கும். பள்ளிப் படிப்பு முடிந்து, அவள் வீட்டில் இருந்த நேரம். அம்மாவுக்கு ஒத்தாசையாக வீட்டு வேலை செய்வதிலேயே பொழுது கரைந்து போகும். மிகுதிப் பொழுதைக் கழிக்கப் புத்தகம் வாசிப்பாள். சிறு வயதிலிருந்தே அது சுவாரஸ்சியமான ஒரு பொழுது போக்கு அவளுக்கு. நாவல் சிறு கதை வாசிப்பதென்றால், தன்னையே மறந்து விடுவாள். சில சமயம் இதற்காக அம்மாவிடம் திட்டும் வாங்கியிருக்கிறாள். அம்மாவுக்கு உதவியாக அவள் மட்டுமல்ல பெரியக்கா சிவகாமி வேறு இருக்கிறாள். அவள் ஒரே சங்கீதப் பித்துப் பிடித்து அலைபவள். நன்றாகப் பாடக் கூடிய குரல் வளம் கொண்டவள். கர்நாடக சங்கீதத்தை ஒரு குருவிடம் கற்று வருகிறாள். தற்போது கல்யாணம் நிச்சயக்கப்பட்டு இருப்பதால் பாடுவதை மறந்து தன் வருங்காலக் கணவன் பற்றிய, சுகமான கற்பனைகளில் அவள் மூழ்கிக் கனவுகள் காண்கிற பரவச நிலை அவளுக்கு .
வருகிற தை மாதம் அதற்கான நாள் கூடி வருகிறது. உள்ளூர் மாப்பிள்ளை தான். ஏற்கனவே பரிச்சயமான முகம் தான். தூரத்துச் சொந்தமும் கூட .சகாதேவனென்று பெயர். கொழும்புக் கச்சேரியில் கிளார்க் வேலை அவனுக்கு. அவர்களுடைய கல்யாணத்தின் பொருட்டே வீட்டுக்கு வெள்ளை அடிக்க இன்றைய அந்தோனியின் வருகை. அந்தக் காலத்தில் வர்ணப் பெயிண்ட் வேலையெல்லாம் கிடையாது. பெ¦ரிய தொட்டியில் சுண்ணாம்பு ஊற விட்டுச் சுவருக்கு அடிக்கிற வெள்ளை பளிச்சென்று கண்னைப் பறிக்கும், கீழே சரி பாதி காவிநிறம்,
பெரிய வீடாதலால் இதற்கே ஒரு மாதம் பிடிக்கும். அந்தோனியின் ஆட்கள் மாதக் கணக்காய் இங்கு தங்கியிருந்து இதைக் கச்சிதமாகச் செய்து முடிப்பர் . அந்தோனிக்கு இது கை வந்த கலை. கனத்த குரலில் பேசிக் கொண்டே காரியமே கண்ணாயிருப்பான். அவன் குருநகரிலிருந்து சைக்கிளிலேயே துரித கதியில் வந்து சேருவான். மீன் பிடிக்கிற மீனவனாகப் பிறந்தாலும் ஏனோ இந்தத் தொழிலுக்கு வந்து விட்டான்.ஒரு நேர்மையான கிறிஸ்தவப் பிரஜை அவன். வீட்டின் அறைச் சுவர்கள் நெடிதுயர்ந்து நிற்பதால் மிகநீளமான தும்புத் தடி கொண்டு, அவன் வெள்ளை அடிக்கிற வேகத்தைப் பார்க்க வேண்டும் அவ்வளவு துரித கதியில் அவன் கை இயக்கம் செயல் படும் மீராவுக்குச் சிறு வயதிலிருந்தே அவனிடம் ஒரு தனி ஈடுபாடு. அவனும் வாய் நிறைய அன்பொழுகத் தங்கைச்சியென்று பிரியமாக அவளை அழைப்பான். பருவம் வந்த பிறகும், அந்த நெருக்கம் அவன் மகன் டேவிட்டையும் விட்டு வைக்கவில்லை. அவனும் தந்தைக்கு உதவியாக அங்கு வருவான். அப்போது ஏற்பட்ட பரிச்சயம். அவன் ஒரு கட்டுடல் கொண்ட கம்பீரமான இளைஞன். நிறம் அந்தோனி மாதிரிச் சற்றுக் கறுப்புத் தான். எனினும் அவனின் ஆண்மைக் களை கொண்ட கம்பீர அழகுக்கு அது ஒரு குறையாகப்படவில்லை. அவன் ஒரு தொழிலாளி என்ற எல்லை மீறிப் போகாத களங்கமற்ற நினைப்போடு மீரா சகஜ பாவத்துடன், அவனுடன் மனம் விட்டுப் பழகுவாள். பேசி உறவாடுவாள்.
வீட்டில் சந்தேகக் கண் கொண்டு யாரும் அதைப் பார்ப்பதில்லை. வீட்டிற்குக் கூலி வேலை செய்ய யார் வந்தாலும், கீழ் நிலைக்கு இறங்கி வந்து, மீரா அவர்களோடு மனம் விட்டுப் பழகுவாள்.. டேவிட்டோடும் இதே மனோ நிலை தான் அவளுக்கு. அவன் ஒரு தொழிலாளி மட்டுமல்ல கை தேர்ந்த ஒரு நடிகனும் கூட. பாஷையூரிலே மேடையேறுகிற நாடகங்களிலெல்லாம் அவன் தான் கதாநாயகனாக நடிப்பதுண்டாம். அவனுக்கு ஒரு பெரும் மனக்குறை. தன்னோடு ஜோடி சேர்ந்து நடிப்பதற்குப், பெண் நடிகை கிடைக்காதால் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பதாக, அவன் மனம் குமுறுவான்.
ஒரு சமயம் இது பற்றி மீராவோடு கதைக்கும் போது மனம் திறந்து அவன் கேட்டான்.
“மீரா! எனக்கு ஓர் ஆசை.அது நடக்கிறது. உங்கடை கையிலைதானிருக்கு “
“நானா? என்ரை கையிலையா? என்ன சொல்லுறியள் டேவிட்?”
“ஒரு கதாநாயகியாய் உங்களை நினைச்சுப் பார்க்கவே எனக்குத் தாங்க முடியாத சந்தோஷமாயிருக்கு. ஒரு கதாநாயகிக்குரிய அத்தனை லட்சணங்களும் உங்களிடம் இருப்பதாக நான் நம்புகிறன். எனக்கு ஜோடியாக மேடையேறி நடிக்க நீங்கள் வருவியளே?”
இதைக் கேட்டதும் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவளுள் மெளனம் கனத்தது. பிறகு ஏதோ யோசனை வந்தவளாய் அவன் மீது சந்தேகம் கொண்டு கேட்டாள்.
“எதை வைச்சுக் கொண்டு என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வி கேட்டனீங்கள்?”
“ஏன் கேட்கக் கூடாதா? அப்படி நடிக்காமல் விடுவதற்கு உங்களிட்டை என்ன குறையிருக்கு நல்ல அழகிருக்கு…………….என்று அவன் முடிக்கவில்லை
ஆவேசமாய் குறுக்கிட்டுஅவள் கேட்டாள்.
“இப்படியெல்லாம் யோசிச்சுப் பார்க்க எப்படி உங்களாலை முடிஞ்சுது? நான் இதை எதிர்பார்க்கேலை. நீங்கள் ஆர்? என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா? சீ இதைக் கேட்கவே எனக்கு அருவருப்பாக இருக்கு. இது என்னைப் பெரிசாய் பாதிச்ச ஒரு மான இழப்பென்று நான் துடிச்சுப் போறன். இனி மேல் உங்கடை சகவாசமே எனக்கு வேண்டாம். நான் போறன் “
“ஒரு நிமிடம் நில்லுங்கோ அப்படி என்ன நான் பெரிசாய்க் கேட்டுப் போட்டன்? இது ஒரு குற்றமா? கேள்வி கூட இல்லாமல் போனால் என்ன மிஞ்சும்? சொல்லுங்கோ”
“அது எனக்குத் தெரியாது. எதையும் இணைச்சுப் பார்க்கிறதுக்கு நியாயமான ஒரு தகுதி வேணும் என்று நான் நம்புகிறன். . அதைக் கோட்டை விட்ட பிறகு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு?”
“இப்ப என்ன சொல்ல வாறியள்?”
“இந்த உங்கடை நினைப்பே என்ரை சுய கெளரவத்துக்கு ஒரு பெரிய இடி விழுந்த மாதிரி.., இந்த மான இழப்புக்கு ஈடாய் நீங்கள் எதைத் தந்தாலும் இப்ப என் மனம் கொதிக்குதே! அது ஆறப் போறதில்லை”
என்று அவள் கோபம் படபடக்க மூச்சிரைக்கச் சொல்லி விட்டுப் போன பிற்பாடு அவன் தனக்குள் கர்வமின்றிச் சொல்லிக் கொண்டான் “இது தான் பணக்கார வர்க்கத்தின் திமிருக்கு அடையாளம் அப்படி நானென்ன பிழையாய்க் கேட்டுப் போட்டன் . ஒரு சாதாரண ஏழைத் தொழிலாளி தான் நான். இந்த மீரா என்ன பெரிய கொம்பா? ஏதோ கொஞ்சம் பணமிருக்கு என்றதாலை அதுக்குப் போய் என்னவொரு சுய கெளரவச் செருக்கு இவளுக்கு. போயும் போயும் என்னோடு நடிக்க இவளைப் போய்க் கேட்டேனே. கலையை வழிபடுகிற எனக்கு நல்லாய் வேணும். உண்மையான கலை ஈடுபாடு என்பது வெறும் உடல் நினைப்புகளுக்கு அப்பாற்பட்ட மெய் மறந்த ஒரு தவ நிலை. இது கை கூட வேணுமென்றால் அதுக்கும் கொடுத்து வைச்சிருக்க வேணும் இவளுக்கு அந்தக் கொடுப்பனை இல்லையென்றால் , எனக்கென்ன மனவருத்தமென்று அவன் தன்னையே தேற்றிக் கொண்டான்.