இளமையின் ரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 9,273 
 
 

குண்டுகளில் பலவகை உண்டு. வெடிக்கக்கூடிய குண்டுகளைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. இது ரசிக்கக்கூடிய குண்டு. அழகிய குண்டு. அந்த வகையைச் சேர்ந்தவள்தான் அசியா. வழமையாக அவள் அணியும் உடலிறுக்கமான காற்சட்டையும் மேற்சட்டையும் அவளது குண்டு போன்ற தோற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம்.

அசியாவைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது, இந்தோனேசியாவில்.

தினமும் மாலை ஐந்து மணியளவில் அவள் வேலை செய்யும் ரெஸ்ரோரண்டிற்கு முன்னே அசியா காணப்படுவாள். ஒரு பெண், தான் பணிபுரியும் ரெஸ்ரோரண்டின் முன்னே தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற் காணப்பட்டால், அதற்கு என்ன காரணமாயிருக்கும்? அது அவளது ஓய்வு நேரமாயிருக்கலாம். அல்லது குறிப்பிட்ட யாரையாவது கவர்வதற்காயிருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில்தான் நானும் அவ்வழியாற் போவேன். ஆனால் அது அசியாவைப் பார்ப்பதற்காக அல்ல. உடல் ஆரோக்கியத்திற்காக நடைபயிற்சி செய்வது என் வழக்கம்.

இந்தோனேசியாவில் அசியாவின் வயதையொத்த (பதினெட்டுக்கும் இருபத்தைந்திற்கும் இடைப்பட்ட வயது) பெண்கள் இதுபோன்ற வியாபார நிலையங்களிற் பணி புரிகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமும் மிகக் குறைவு. எங்கள் நாட்டுக் காசில் குறிப்பிடுவதானால் மாதாந்தம் ஆயிரம் ரூபாய்க்கும் கீழே! இந்தோனேசியச் சனத்தொகையில் ஐம்பத்துமூன்று சத விகிதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள். தங்கள் குடும்பங்களின் வறுமை நிலையைச் சரிக்கட்ட அவர்கள் குறைந்த சம்பளத்திலேனும் வேலை செய்யவேண்டியிருக்கிறது. சொற்ப சம்பளத்திற்காக நாள் முழுவதும் கடைகளிற் காய்ந்துகொண்டிருக்கும் இளம் குருத்துக்களைக் காண எனக்கு ஒருவித அனுதாபம் பிறக்கும். அவ்வித அனுதாபம் அசியாவின் மேலும் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் பாளித்தீவையும் ஜாவாவையும் இந்து சமுத்திரத்திலிருந்து ஜாவாக் கடலுக்கு இடைப்பிரித்துச் செல்லும் கடலோரத்தில், ஜாவாப் பகுதியில் ‘கெட்டப்பாங்’ எனும் கிராமம் உள்ளது. மலையும் மரங்களும் அதனால் மழையும் நிறைந்த செழிப்பான கிராமம். இங்குள்ள சிறிய துறைமுகத்துக்குத்தான் நான் பணியாற்றிய சீமெந்துத் தொழிற்சாலைக் கப்பல் வந்து சேர்ந்தது. கப்பல் வந்து தரிப்பதற்காக துறைமுகம் விசேசமாகத் திருத்தி அமைக்கப்பட்டது. இங்கு சில வருடங்கள் கப்பல் தரித்து நின்று ஒரு தொழிற்சாலையாக இயங்கும். அதனால் கப்பல் வருவதற்கு முன்னரே இங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பலருக்கு இங்கு வேலைகள் கிடைக்கும். வேறு கப்பல்களில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் சிமெந்து இந்தத் தொழிற்சாலையில் பக்ட் பண்ணப்பட்டு இங்கிருந்து இந்தோனேசியாவின் பல நகர்களுக்கு விநியோகம் நடைபெறப்போகிறது. ஒரு குடிசைக்குள் யானையொன்று நுழைந்தது போல, இந்தக் கப்பல் இங்கு வந்து சேர்ந்ததும் கிராம மக்கள் திரண்டு வந்திருந்தனர். வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார்கள். வானத்தில் வர்ண பலூன்களைப் பறக்கவிட்டார்கள். தங்கள் கிராமிய நடனம் ஆடி எங்களை வரவேற்றனர்.

ஏனைய துறைமுகங்களைப் போல் இங்கு கதவுகள் கட்டுப்பாடுகள் கூட இல்லை. சரியாகச் சொல்வதானால் இது வெளிநாட்டுக் கப்பல்கள் வந்துபோகும் துறைமுகமே அல்ல. இங்குள்ள ஏனைய தீவுகளிலிருந்து அரிசி, பருப்பு, ஆடு, மாடு போன்றவற்றை இறக்கி ஏற்றும் துறையாக இது பயன்பட்டு வந்திருக்கிறது.

எங்கள் கப்பல் தரித்து நின்ற இடத்துக்கு அண்மையில் பயணிகள் கடற் போக்குவரத்து இறங்குதுறை இருந்தது. பாளித்தீவுக்கு இங்கிருந்து வாகனங்களையும் பயணிகளையும் ஏற்றி இறக்கும் கப்பற்சேவை நடக்கிறது. பல உல்லாசப் பயணிகள் நாள் தோறும் சஞ்சரிக்கும் பகுதி இது. இவ்விறங்குதுறையைச் சூழ உள்ள பல ரெஸ்ரோரன்ட்டுகளில் ஒன்றிற்தான் அசியா பணிபுரிந்தாள்.

ரெஸ்ரோரன்ட் வாசலில் பூச்சாடிகள் இருந்தன. நான் போகும் போதெல்லாம் அவற்றுக்குத் தண்ணீர் விடுவது, சாடிகளை இடம்மாற்றி வைப்பது போன்ற வேலைகளில் அசியா ஈடுபட்டிருந்தாள். பொறுமையாக அவள் எப்போதும் அதே அலுவல்களைச் செய்வதைக் காண வேடிக்கையாயிருக்கும். ஒவ்வொரு முறை அவ்விடத்தை அடையும்போது (எதேச்சையாக) ஒரு முறை திரும்பிப் பார்ப்பேன். (சத்தியமாக ஒரே ஒரு முறைதான்!) அசியாவும் அவ்வேளைகளில் என்னைப் பார்த்திருக்கிறாள். அது தற்செயலான பார்வையாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவள் என்னைக் குறிப்பாகவே பார்க்கிறாள் என்பதை அடுத்த சில நாட்களுக்குள்ளே புரியக்கூடியதாயிருந்தது.

அன்றாடம் ஒருவரை ஒருவர் காண்கிறோம். முகத்துக்கு முகம் பார்க்கிறோம். ஆனால் எதுவுமே பேசுவதில்லை. எனக்குச் சங்கடமாக இருந்தது. எங்களுக்குள் ஏதோ ஒரு புரியாத அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் ஏதும் பேசாமற் போவது இங்கிதமல்ல என்ற சங்கடம். ஒன்றில் அசியாவுடன் பேசவேண்டும். அல்லது அவளைத் திரும்பிக் பார்க்காமலே போய்விட வேண்டும். ஆனாலும் பார்வை தானாகவே திரும்பிவிடும். வேறொன்றுமில்லை… சும்மா ரசனையுணர்வுடன்தான்! எனது தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டாளோ என்னவோ.. அவளிடத்தில் புன்னகை பூத்தது. இதமான நட்புணர்வுடனான புன்னகை!

அடுத்த சில நாட்களில் பாதையில் இறங்கிக் கிட்ட வந்துவிட்டாள். ‘தயவுடன் உள்ளே வாருங்கள்..!” கையை ரெஸ்ரோரன்டிற்குள் காட்டினாள்.

உள்ளே சென்று, மரங்களின் கீழ் காற்றோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தேன்.

‘என்ன குடிக்கிறீர்கள்….? பியரா…? மென்பானமா…?”

‘நான் இங்கு குடிக்க வரவில்லை. உன்னோடு பேசத்தான் வந்தேன்!”

‘நானும் பேசுவதற்காகத்தான் உங்களை அழைத்தேன்..”

இந்த உரையாடல்கள் ஆங்கிலத்திற்தான் நடந்தன. அவளுக்கு ஆங்கிலம் பேசுவதற்கு சரியாகத் தெரியாமலிருந்தது. சிரமப்பட்டு ஓரிரண்டு வார்த்தைகளையும் கைப் பாஷையையும் பயன்படுத்தித்தான் சொல்லவேண்டியவற்றைப் புரிய வைத்தாள். (ரெஸ்ரோரன்ட்டிற் பணி செய்வதால் “ப்ளீஸ் கம் இன்..!” போன்ற வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருந்தாள்.)

சைனா முகம். சிறிய கண்கள்.

‘உங்களைப் பார்த்தால் சைனாக்காரி போலத் தெரிகிறது..!”

அசியா சிரித்தாள். ‘எனது மூதாதையர்கள் சைனாவிலிருந்துதான் இங்கு வந்தார்கள்” (இதை அவள் எனக்குக் கூறியவிதம் வேடிக்கையானது) ‘மதேர்ஸ் மதேர்ஸ் மதர் கம் ஃபறொம் சைனா…” அதாவது அவள் அம்மாவின் அம்மாவின் அம்மா வந்தது சைனாவிலிருந்து என்பதை எனக்குப் புரியவைக்க முயற்சித்தாள்.

நான் எனது முகத்தை மிகவும் சோகமாக மாற்றிக்கொண்டேன். அது, ஆங்கில மொழியிற் பேசும் அவளது கஷ்ட்டத்தை நினைத்தல்ல. பிற மொழியொன்றை இந்த அளவுக்காவது பேச எத்தனிக்கிறாளே என்பது சந்தோஷப்படக்கூடிய விடயம்தான். ஆனால் எனது சோகமெல்லாம் அசியாவை நினைத்துத்தான். சொற்ப சம்பளத்துக்காகக் கடைகளிற் காய்ந்துகொண்டிருக்கும் பெண்கள்பற்றிய அனுதாபம்தான். என் அனுதாப உணர்வை அசியாவுக்கு வெளிப்படையாகவே காட்ட வேண்டுமென்று தோன்றியது. தனது நிலைக்காக இன்னொருவர் இரங்குவது அவளுக்கு ஆறுதலாக இருக்குமல்லவா?

‘அசியா… நீங்கள் இங்கு கஷ்ட்டப்பட்டு வேலை செய்வதைக் கவனித்திருக்கிறேன்.. உங்களுக்குச் சம்பளம் மிகக் குறைவு என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்காக நான் கவலைப்படுகிறேன்.”

‘இல்லை… நான் இங்கு சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை. இந்த ரெஸ்ரோரன்ட் எங்களுக்குச் செந்தமானது!” – (தனது சொந்தக் கடை என்பதற்கு அடையாளமாக) தன்னைத் தொட்டுக்காட்டிக் காட்டினாள்.

‘அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். இல்லாவிட்டால் நீ இவ்வளவு குண்டாக இருப்பாயா?” சமாளித்தேன்.

அவள் சிணுங்கினாள். ‘இல்லை… நான் நிறையச் சாப்பிடுவதில்லை..!”

‘அப்படியானால் மிகுதிச் சாப்பாட்டை என்ன செய்யிறீங்க..?”

சிரித்தாள். நான் எந்த நாட்டைச் சேர்ந்தவன்.. என்ன அலுவலாக இங்கு வந்திருக்கிறேன் போன்ற விடயங்களை விசாரித்தாள். பிறகு என்னிடம் கேட்டாள்.

‘வெயர் யூ கோ அன்ட் கம்… திஸ்.. ஸைட் ஓல்வேய்ஸ்..?”

அவளுடன் பேசிக் கொண்டிருந்த சொற்ப நேரத்துக்குள்ளேயே அவளது ஆங்கிலப் புலமையின் பொருளுணர்ந்து புரிந்துகொள்ளும் திறமை எனக்கு வந்துவிட்டது.

உடற்பயிற்சிக்காக நடப்பதாகக் கூறினேன். அவள் கண்கள் விரிந்து வியப்படைந்தாள். ‘உடற்பயிற்சிக்காக யாராவது இப்படி வேலை மினக்கெட்டு நடப்பார்களா?” என்பதுபோலக் கேட்டாள்.

‘உடற்பயிற்சி செய்யாவிட்டால் நானும் உன்னைப் போலக் குண்டாகிவிடுவேன்!” எனது இரு கைகளையும் அகட்டி விரித்து, அவளது சைஸை அபிநயித்துக் காட்டினேன்.

அதற்கும் சிணுக்கம்.

அசியா சிணுங்கும் ஸ்டைலிலுள்ள மருட்டும் சக்தியை புன்முறுவலுடன் ரசித்தேன். அப்போது என் முகத்தை வைத்த கண் வாங்காது பார்த்தாள் அசியா.

‘ஹாவ் வைஃப்?”

‘உனது மனைவியும் இங்கு இருக்கிறாளா?” என அசியா கேட்பதாக எண்ணி, ‘நோ..!” என்றேன்.

சற்று நேர மௌனத்திற்குப் பின், ‘லைக் மீ…?” எனத் தன்னைத் தொட்டுக் காட்டினாள்.

என்ன இது? தன்னை விரும்புகிறாயா என்று கேட்கிறாளா? எந்த அர்த்தத்தில்?

நானும் சமாளிப்பாகப் பதில் கூறினேன். ‘நீ அழகான பெண்… நல்ல பெண்… குண்டுப் பெண்… அதனால் எனக்கு விருப்பம்தான்…”

மூன்றாம் தடவையாக குண்டு என்ற பதத்தைக் கூறியதும் அசியா (பொய்க்)கோபம் காட்டினாள்.. ‘ஐ நோ ரோக் யூ..!” – அந்த நளினம் என்னைக் கவர்வதுபோல் நிலை தழும்பியது. எனினும் ஏதும் புரியாதவன்போல ‘சரி! எனக்கு நிரம்ப வேலை உள்ளது.. சீ யூ..” என பாசாங்கு காட்டி எழுந்து வந்துவிட்டேன்.

நடந்து வரும்போதுதான் பொறி தட்டியது. அசியா தவறாகப் புரிந்துவிட்டாளோ என்று தோன்றியது. “ஹாவ் வைஃப்?“ என அசியா கேட்டதற்கு, “இல்லை..” எனப் பதில் கூறினேன். ஆனால் அவள் கேட்டது, “மணம் முடித்துவிட்டாயா.?” என்பதாக இருக்கலாம். அதனாற்தான் “என்னை விரும்புகிறாயா?” என்று கேட்டாளோ?

ஐயையோ… எனக்கு ஏற்கனவே (ஒரு) மனைவி இருக்கிறாளே..!

அடுத்தநாள் நடைப் பயிற்சி போகும்போது அசியாவுக்கு இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்தலாம் என எண்ணிக்கொண்டேன். பொழுதுபடும்போது குளித்து அறையில் ஓய்வாக இருந்தேன். செக்யூரிட்டி கார்ட் வந்து கூறினான்..

‘உங்களைத் தேடி இரண்டு பெண்கள் வந்திருக்கிறார்கள்..!”

எனக்கு பதற்றம் ஏற்பட்டது.. இங்கு எந்தப் பெண்களையும் எனக்கு அறிமுகம் இல்லையே.. ஏற்கனவே ஒரு பெண்ணிடம் மாட்டிக்கொண்ட சூடு ஆறவில்லை! இப்போது இரண்டு பெண்களா? எப்படிச் சமாளிப்பது?

ஒருவேளை இது “அசியாவாக இருக்குமோ..” எனத் தோன்றினாலும், வந்திருப்பது ஒன்றல்ல… இரண்டு பேர்..! யாராக இருக்கும்?

வெளியே வந்தேன். கப்பல் மேற்தளத்தில் நின்று பார்த்தேன். அசியாதான்! இன்னொரு பெண்ணுடன் வந்திருந்தாள். என்னைக் கண்டதும் குதூகலத்துடன் கையசைத்தாள். மேலே வரும்படி கை காட்டினேன். ஸ்கூட்டரை நிறுத்திவிட்டுப் படியேறி வந்தாள்.

பெரிய கப்பல், படியேறி வந்ததில் அவளுக்கு மூச்சு வாங்கியது. அறைக்கு அழைத்துப் போனேன். அடுக்கு மாடி வீடுபோல அமைந்திருந்த கப்பலின் இருப்பிட உள்ளமைப்பை ஆச்சரியத்துடன் பார்த்தாள். உள்ளே வந்து அமர்ந்தாள். தனது ரெஸ்ரோரன்டிற் பணிபுரியும் பெண் என மற்றப் பெண்ணை அறிமுகமாக்கினாள்.

‘வந்தது ஏன்?” எனக் கேட்டேன். எனக்குச் சற்று படபடப்பாகவும் இருந்தது. அசியா வேறு பாதையில் மாறி வந்திருப்பாளோ என்றும் தோன்றியது.

‘உங்களைப் பார்க்கத்தான்..!”

நான் சந்தேகித்தது சரிதான். அவளது பதில் என்னை இன்னொருமுறை தடுமாற்றியது. எனினும் நிதானித்தேன். எனது மனைவியின் போட்டோவை எடுத்து வந்து அசியாவின் முன் வைத்தேன்.. ‘இவர்தான் என் மனைவி!” (என்போன்ற ஆண்களுக்கு ஒரு அட்வைஸ்.. இப்படி யாரிடமாவது மாட்டிக்கொண்டால், காட்டி நழுவிக் கொள்வதற்காகவாவது மனைவியின் போட்டோவை கைவசம் வைத்திருப்பது நல்லது)

அசியாவின் முகமாற்றத்தை உடனே கவனிக்கக் கூடியதாயிருந்தது.. ‘வைஃப் இல்லை என்று சொன்னீங்க?”

‘அது தவறு அசியா… என் மனைவி இங்கே இல்லை என்றுதான் சொன்னேன்..”

அசியா மௌனமாயிருந்தாள். என் பிள்ளைகளின் படங்களைக் கொண்டுவந்து காட்டினேன். மூத்த மகள் முதல் கடைசி மகன் வரை, எல்லோரையும் ஒவ்வொருவராகப் பார்த்தாள்.

மகன் அப்போதுதான் பிறந்திருந்த பால்குடி வயது. அவனைப் பார்த்ததும் அசியா முகம் மலர்ந்தாள்.

‘நம்ப முடியவில்லை!” எனக் கூறினாள்.. ”உங்களுக்கு இத்தனை பிள்ளைகளா..!” ஆச்சரியப் பார்வையுடன், ‘யூ லுக் யங்…!” என்றாள். ஏதோ இந்தோனேசியப் பெயரைக் கூறுகிறாளோ என உன்னிப்பாகக் கேட்டேன். மீண்டும் கூறினாள்.

‘யூ… லுக்… யங்…!”

அட, அப்படியா…? ‘நான் இளம் ஆள் அல்ல… இளமையான ஆள்…!” என ஜோக் அடித்து அசியாவின் மனநிலையை மாற்ற முயன்றேன்.

நன்றாக ஆங்கிலம் பேசிப் பழக விருப்பம் என்றும், வோக்கிங் போகும்போது ரெஸ்ரோரன்டிற்கு வந்துபோகும் படியும் கேட்டாள்.

‘சரி!” என்றேன்.

அவ்வப்போது போகும்போதெல்லாம் என் குட்டி மகனைப்பற்றி விசாரித்து மகிழ்வாள்.

0

(இனி வரும் இரு பத்திகளும் சுமார் ஒரு வருடக் கதையின் சுருக்கம்)

அசியா மிக நட்புணர்வுடன் பழகினாள். தனது பெற்றோரை அறிமுகப்படுத்தினாள். சிலவேளைகளில் கப்பலுக்கு வந்து போவாள். அவர்களது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. என் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பப் புதினங்களை அடிக்கடி விசாரித்தறிவாள். அவளது ஆங்கில ஞானமும் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்தது.

அசியாவுடனான நட்பு இந்தோனேசியாவில் நான் இருக்கும்வரை நீடித்தது. அங்கு நாணயப் பெறுமதி சரிவடைந்து, பொருளாதாரக் குழப்பங்கள் காரணமாக, சடுதியாக எங்கள் வேலைத்திட்டத்தை முடிக்கொண்டு போகவேண்டி வந்தபோது, எனக்குக் கன அலுவல்கள் செய்யக் கிடந்தன. நடைபயிற்சிக்கும் அசியாவைப் பார்ப்பற்கும் நேரம் கிடைக்கவில்லை. நாட்டை விட்டுப் போவதற்கு முன்னர் அசியாவை சென்று பார்க்கலாம் என எண்ணியிருந்தேன்.

முதல் நாள் உடுதுணிகளை அடுக்கிவிட்டுப் படுக்கச் சாமமாகிவிட்டது. வீட்டுக்குப் போகப் போவது, மனைவி பிள்ளைகளின் நினைவு, பிறந்த நேரத்திற் பிரிந்து வந்த மகனைக் காணப்போகும் பரவசம்… எல்லாம் எனது தூக்கத்தைக் குழப்பிக்கொண்டிருந்தன. அதிகாலையிற்தான் நான் உறங்கியிருக்கவேண்டும்.

யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தேன். செக்யூரிட்டிக் கார்ட் அசியாவை என் முன்னே விட்டுப் போனான். அவள் உள்ளே வந்தாள்.

‘ஏன் வந்தாய்? யாருடன் வந்தாய்?” எனக்குச் சரியாக உறக்கம் கூடக் கலையவில்லை.. தடுமாறினேன்.

‘இன்றைக்குப் போகிறீர்களா?” அவளிடத்தில் இப்படியான ஒரு முகத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அது கலக்கமா? கவலையா? தயக்கமா?

‘இநத நேரத்தில் யாருடன் வந்தாய்?” எனக்குக் கோபமும் வந்தது.

‘அப்பாவுடன்.. அவர் வெளியே நிற்கிறார்…!”

‘இப்ப இங்கு வருவதற்கு என்ன அவசரம் அசியா…?”

அசியா தன் கையிலிருந்த பார்சலை என்னிடம் தந்தாள். அவளது கண்களில் கலக்கம் தெரிந்தது. ‘திரும்ப வரமாட்டீங்களா…?”

‘தெரியாது… அநேகமாக வரமாட்டேன்…!” அது அவள் எதிர்பார்த்திராத பதிலோ என்னவோ? அவளது சிவந்த முகம் இன்னும் சிவந்தது.

அசியா சட்டென எனக்கு மிக நெருக்கமாக வந்து என் கன்னத்தில் முத்தமிட்டாள்! அது நட்பு ரீதியான, பிரிவாற்றாத முத்தமல்ல. வித்தியாசமானது.

நான் திகைத்து நிற்க, என்னைத் திரும்பிப் பார்க்காமலே வெளியேறிப் போனாள். அவள் தந்த பார்சலைத் திறந்து பார்த்தேன். அழகிய வெண் பஞ்சுப் பொம்மை ஒன்று! அதில் ஒரு துண்டு எழுதப்பட்டிருந்தது.. ‘உங்கள் குழந்தைக்கு!”

அந்த வெண்பஞ்சுப் பொம்மையின் முகத்தை இன்னொரு முறை பார்க்கவேண்டும்போலிருந்தது எனக்கு!

(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது – 2004)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *