இளமையான கனவுகள்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,613 
 

கனவுகள் கதைகள் போலவே, குடும்பமாகவும் வரலாம், ஆன்மீகமாகவும் வரலாம், அமானுஷ்யமாகவும் வரலாம், ஆக்சன் மட்டும் திரில்லராகக் கூட வரலாம். எது எப்படி இருப்பினும், எத்தனையோ ஆண்டுகள் ஆயினும் நமக்கு நரைத்தால் கூட சில கனவுகள் இன்றும் இளமையாக நம்மை விரட்டிக் கொண்டே தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சில கனவுகளில் கரையலாம்.

சிறுவயதில் இருந்தே சற்று இறுக்கமான சூழலில் அதிக கனவுகள் வரும். பொதுவாகவே நம் மனது எதையாவது ஆழ்ந்த சிந்தனையில் யோசித்துக் கொண்டே தூங்கினால் நிச்சயம் அன்று ஒரு கனவு வரலாம். மேலும் பேய் படங்கள் அல்லது மிரட்டலான படங்களைப் பார்த்துவிட்டு தூங்கினால் கூட அன்று இரவில் நம் மனதை பாதித்த காட்சிகள் வேறு வடிவாய் நம் கனவில் வருவதுண்டு.

நான் 2013 இல் கல்லூரிப் படிப்பை முடித்தேன். ஏறக்குறைய சுமார் 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இருந்தாலும் கூட “நாளை காலையில் 10 மணிக்கு எனக்கு ஒரு தேர்வு இருப்பதாகவும், நான் காலையில் கண்விழிக்கும் போதே மணி 9:45 ஆகிவிட்டதாகவும், மேலும் நான் அந்த தேர்வுக்கு தயாராகாமலும் ஒன்றும் படிக்காமலும் குழம்ப” திடீரென விழித்துப் பார்த்தால் அத்தனையும் கனவு. இது ஒருவிதமென்றால் அப்படியே இன்னொரு விதமான கனவு.

நான் அனைத்தும் படித்திருக்கிறேன் தேர்வரையில் அமர்ந்திருக்கிறேன், திடீரென மேற்பார்வையாளர் இன்னும் 15 நிமிடங்கள் தான் உள்ளது என்று கூற நான் விழித்துக் கொண்டு, என் விடைத்தாளைப் பார்த்தால் அதில் ஒன்றுமே எழுதவில்லை. வினாத்தாளைப் பார்த்தாலோ அனைத்தும் தெரிந்த கேள்விகள், உடனே 35 மதிப்பெண்களாவது பெற்றுவிட வேண்டுமென்று வேகமாக எழுதுகிறேன். உடனே அந்த மேற்பார்வையாளர் நேரம் முடிந்தது என்று என்னிடமிருந்து என் விடைத்தாளை பறித்துக் கொண்டுசெல்ல, எழுதிய விடைகளின் மதிப்பை எண்ணினால் 25 கூட வந்திருக்காது. மன அழுத்தத்தில் விழித்தால் அத்தனையும் கனவு. இந்த கனவுகள் கிட்டத்தட்ட ஒரு 15 ஆண்டுகளாக வருகின்றது, இவை இன்றும் இளமையாகத் தான் இருக்கிறது.

ஒருமுறை இரவில் நல்ல உறக்கம். என் அருகில் இரண்டு பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன, எழுந்து அருகில் நல்ல உறக்கத்தில் இருந்த என் அம்மாவை எழுப்பி, பாம்பு! பாம்பு! என்று சொல்ல, என் அம்மா பதறிப்போய் எங்கே? எங்கே? என்று கேட்க, எனக்கு இது கனவு என்று தெரிந்தும் கூட அனிச்சை செயல் போல என் வாய் “இதோ பாருங்கள் இங்கு தான் செல்கிறது” என்று கூற, புரிந்துகொண்ட என் அம்மா டேய்! போய் தூங்குடா என்று கூறிவிட, நானோ அம்மா நிஜமா நிஜமா என்று புலம்பியவாரே தூங்களானேன். இப்படி பாம்பு கனவுகளே எக்கச்சக்கம் வந்ததுண்டு.

அடுத்து பேய்க்கு செல்லலாம். சிறுவயதில் “வா அருகில் வா” என்ற படத்தை பார்த்துவிட்டு இரவில் உறங்கச் சென்றேன். அதில் ஒரு காட்சியில் அந்த பொம்மை வீட்டின் மேற்புற ஷோகேஷில் இருந்து கையில் கத்தியுடன் பறந்து வந்து ராதாரவி சாரைக் கொல்ல முயற்சி செய்யும். அது அப்படியே எனக்கு நிகழ்வதைப் போல ஒரு கனவு. அந்த 10 வயதில் நமக்கு எப்படி இருந்திருக்கும். அந்த படத்திற்குப் பின் பல ஆண்டுகளாக கண்சிமிட்டும் பொம்மையைக் கண்டாலே எனக்கு ஆகாது. அதை வைத்தே என் குடும்ப நண்பர்கள் என்னை மிரட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஒருமுறை ஒரு கருப்பு சேலை உடுத்தி ஒரு பெண் கோரமான முகத்துடன் பேய் போல் என்னை விரட்டுகிறாள். நானும் மூச்சு வாங்க ஓடுகிறேன், வழியில் நின்ற சைக்கிளை எடுத்து வேகமாக அழுத்த அவளும் அதே வேகத்தில் என இடப்புறமாக ஓடிவர, சைக்கிளை அவள் மேலே போட்டுவிட்டு அதிலிருந்து கீழே குதித்து விடுகிறேன். அவளும் கீழே விழுந்துவிட, உடனடியாக அருகில் இருந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கி அவள் மூஞ்சியிலே போட சட்டென்று முழிப்பு வந்துவிட்டது.

உருவமொத்த கனவுகள். ஆம் சில நேரங்களில் ஒரே கனவையே நானும் என் அம்மாவும் ஒரே நாளில் காண்பதுண்டு. எடுத்துக்காட்டாக இருவருக்கும் ஒரே சாமியோ அல்லது கோவிலோ கனவில் வரும். சில நேரங்களில் இறந்த என் தந்தை இருவருக்கும் ஒரே நாளில் கனவில் வருவார். என் தந்தை கனவில் வந்தால் அடுத்த ஓரிரு நாட்களில் எதாவது நல்லது அல்லது கெட்டது நடப்பதாய் நாங்கள் உணர்கிறோம், அதை எங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் சில நேரங்களில் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

சரி இப்படி கனவென்றால் சோகமும், சிக்கலும் தானா என்று நீங்கள் கேட்டால் என் பதில் நிச்சயம் இல்லை என்றே கூறுவேன். சில நேரங்களில் கனவுகளால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லை இல்லை. கனவில் ஏதாவது பெண்ணைக் காண்பது அல்லது 90 களில் பிறந்தவர்கள் தங்களுக்கு திருமணம் நடப்பதைப் போல உணர்வது, மேலும் கனவில் அந்தப் பெண்ணின் முகத்தை சரிவர காணாவிட்டாலும் கூட அடுத்தநாள் முழுமையும் அதையே நினைத்து பல காதல் பாடல்களைக் கேட்டு உள்ளம் துள்ளல் போடுவதும் உண்டு. முன்பே உறவில் இருப்பவர்கள் உங்கள் மனதிற்கு நெருக்கமானவரின் கனவுத் தீண்டல்கள் கூட உங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்களாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட , என்னருகில் அமர்ந்து பேசிய என் நண்பனின் கண்கள் திடீரென வெள்ளை வெளிச்சமாக மாறி என் கழுத்தை இறுக்குகிறான், முடிவில் டேய் விடுடா! விடுடா! என்று கத்திக் கொண்டே விழித்தேன். குளிரூட்டப்பட்ட அறை என்பதால் கை கால்கள் எனக்கு விறைத்ததைப் போல உணர்வற்று இருந்தது. நேற்று கூட பாத் டப்பில் மிதக்கும் ஒரு பெண்ணின் சடலத்தின் கனவு.

பொதுவாகவே மோசமான கனவுகள் வந்தால் என் கைகளும் கால்களும் கட்டிப்போடப்பட்டு நான் அசையவே முடியாததைப் போல உணர்வதுண்டு. மேலும் மோசமான கனவுகளில் உச்சநிலையை அடைந்து நான் விழிக்கும் தருணம், என் கால்கள் இரண்டையும் யாரோ இரண்டடிக்கு மேலே தூக்கிப் பின் கீழே விட்டதைப் போல காலை உதறிக் கொண்டு எழுவென். இன்னும் உச்சநிலையில் போனால் அங்கு நடக்கும் நிகழ்விற்கு ஏற்றார்போல சத்தமாக கத்திவிடுவதும் உண்டு. உண்மையில் கனவு காண்பவரை விட, நள்ளிரவில் அவரது அருகில் படுத்துக் கொண்டு கனவு காண்பவரின் வாய் புலம்பல் சத்தத்தைக் கேட்டு பாருங்கள் நண்பர்களே! ஹாலிவுட் பேய் படத்தை விட திரில்லராக இருக்கும்.

இப்படிக் காலம் காலமாக எத்தனை வருடங்கள் ஆகியும் பல கனவுகள் முதிர்வே இல்லாமல் இன்றும் இளமையுடனே வளம் வருகின்றன.

Print Friendly, PDF & Email

1 thought on “இளமையான கனவுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *