இல்லாள் இல்லாத இல்லம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 7,053 
 

என் மனைவி சரஸ்வதி தூக்கத்தில் இறந்து விட்டாள். அவள் சொன்ன மாதிரியே நடந்து விட்டது. அடிக்கடி என்னிடம், “நான் யாருக்கும் தொந்திரவு தராம தூக்கத்துலயே போயிடனுங்க…” என்று சொல்வாள்.

அதை இப்போது செயலாக்கி விட்டாள்.

எப்பொழுதும் காலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து விடுபவள் இன்று காலை ஆறு மணியாகியும் படுத்திருந்தாள். நான் அவளை, “குட்டிம்மா….குட்டிம்மா” என்று சொல்லி அசைத்துப் பார்த்தேன். சின்ன சத்தத்திற்கே எழுந்து கொள்பவள், நான் உலுக்கியும் அசையவில்லை.
எனக்குப் பயமாகிவிட்டது.

எதிர் பெட்ரூமில் தன் மனைவியுடன் தூங்கிக்கொண்டிருந்த என் மகன் ராகுலை மொபைலில் அழைத்தேன். என் குரலில் தெரிந்த பதட்டத்தை உணர்ந்து ஓடி வந்தான். “அம்மா, அம்மா” என்று உலுக்கிப் பார்த்துவிட்டு, சட்டை மாட்டிக்கொண்டு அடுத்த தெருவில் இருந்த டாக்டரை காரில் அழைத்து வந்தான்.

அதற்குள் என் மருமகள் ஜனனி வெந்நீர் போட்டு எடுத்து வந்தாள்.

டாக்டர் சரஸ்வதியை சற்று நேரம் சோதித்துவிட்டு “ஷி இஸ் நோ மோர்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

ராகுல் உடனே சரஸ்வதியின் சகோதர, சகோதரிகளுக்கும் என் நெருங்கிய உறவினர்களுக்கும் மொபைலில் சொல்லிவிட்டு, சரஸ்வதியின் மொபைலில் அவள் அலுவலக நம்பரைத் தேடி அம்மா இறந்துவிட்ட செய்தியைச் சொன்னான். இன்னும் சில முக்கியமானவர்களுக்கு தகவல் சொல்லப் பட்டதும் நானும் ராகுலும் முதல் மாடியின் பெட்ரூமிலிருந்து சரஸ்வதியை மிகவும் மெதுவாக, கவனமாக, கஷ்டப்பட்டு தரைத் தளத்திலிருந்த கூடத்திற்கு இறக்கி தரையில் கிடத்தினோம். ஒரு மெல்லிய வெள்ளை நிற போர்வையால் போர்த்தி, கால் கட்டை விரல்களை சேர்த்துக் கட்டி, மூக்கில் பஞ்சடைத்தோம்.

என் அருமை மனைவி இனி என்னைப் பார்த்து சிரிக்க மாட்டாள். என்னிடம் பேச மாட்டாள். முப்பத்தி மூன்று வருடத்திய தாம்பத்திய வாழ்க்கை திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. இறப்பு என்பது நம் அனைவருக்கும் ஏற்படும் நிரந்தர உண்மையாயினும் சரஸ்வதி இல்லாமல் நான் இனி எப்படி…. எனக்கு அவள் இறந்த துக்கத்தைவிட அவள் இல்லாத வெற்றிடம் பெரிதாகத் தெரிந்தது. என்னுடைய ஒவ்வொரு அசைவையும் முன் கூட்டியே உணர்ந்து என்னை ஒரு குழந்தை மாதிரி கவனித்துக் கொண்டவள் அவள்.

“குட்டிப்பா, குட்டிப்பா” என்று என்னை அன்புடன் அழைக்கும் அந்தக் குரல் இனி கேட்கவே கேட்காது. அவளுடனான இந்த 33 வருட தாம்பத்திய வாழ்வில் முதல் பத்து வருடங்களைத் தவிர அவளை அன்பால் கட்டிப்போட்ட ஒரு நல்ல பொறுப்புள்ள கணவனாக சந்தோஷமாக இருந்தேன்.

அந்த முதல் பத்து வருடங்கள் என் அம்மா அப்பா சொல்படி பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தேன். அவர்கள் சரஸ்வதியை படுத்தி வைத்த பாடு இருக்கிறதே… அதற்கு நானும் மறைமுக உடந்தையாக இருந்தேன் என்பதை நினைத்தாலே அசிங்கமாக இருக்கிறது. இத்தனைக்கும் என் அம்மா அப்பாவின் விருப்பத்துடன் லெளகீக முறைப்படி சரஸ்வதியை ஒழுங்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் என் பெற்றோர்கள், என் தம்பி எவளையோ ஒரு கனபாடிகள் பேத்தியை திருவானைக்காவலில் காதலித்து அவனுடன் ஓடி வந்தவளைத்தான் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடினர். கடைசியில் என் அப்பா ரிடையர்ட் ஆனபோது கிடைத்த அவருடைய பல லட்சங்கள் பணத்தை ஸ்வாகா செய்து விட்டனர்.

குறைந்த பட்ச வாழ்வியல் ஒழுக்கம் வேறு, பக்தி என்பது வேறு என்பதை என் பெற்றோர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம். என் அம்மா பக்தி, பக்தி என்று கோவிலைச் சுற்றி வருவாள்… மார்கழியில் காலை நான்கு மணிக்கே எழுந்து குளித்துவிட்டு பஜனை பண்ணுவாள். அப்பா எப்போதும் பட்டை பட்டையாக வீபூதி இட்டபடி காட்சியளிப்பார்… முருகா முருகா என்று அடிக்கடி சொல்வார். திருச்செந்தூர் போவார். ஆனால் சரஸ்வதியைப் பார்த்தால் இருவரும் கரிச்சுக் கொட்டுவார்கள். அவளிடம் குற்றம் தேடுவார்கள். அவளைப் பற்றி என்னிடம் பிலாக்கணம் பாடுவார்கள். அவர்கள் பக்தியெல்லாம் ஒரு வெளி வேஷம், திருட்டுத் தனம் என்பதை நான் பிறகு மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டேன்.

பல வருடங்களுக்கு முன் நான் சரஸ்வதியுடன் பெங்களூர் அல்சூரில் குடியிருந்தேன்… ஒரு மார்கழி காலையில் நான்கு மணிக்கு பஜனை பண்ணும்முன் என் அம்மா சரஸ்வதியிடம் காப்பி கேட்டாள். “பல் தேய்த்துவிட்டு வந்து போட்டுத் தரேன்” என்று சொன்னவளிடம் “உடனே ஏன் காப்பி தரவில்லை?” என்று பெரிதாக சண்டை போட்டாள்.

அந்தச் சண்டை பெரிதாகி நானும் மடத்தனமாக என் அம்மாவுடன் சேர்ந்துகொண்டு சரஸ்வதியை திட்டிவிட்டு அம்மாவுடன் நானும் ஊருக்குப் போவதாக சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றேன். .

கைக் குழந்தையான என் மகன் ராகுலை தனியாக வைத்துக்கொண்டு பாஷை தெரியாத ஊரில் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்து சரஸ்வதி தன் ஊரான ஸ்ரீரங்கம் சென்று விட்டாள். குழந்தையுடன் சென்றுவிட்ட அவளின் அந்தப் பிரிவு என்னை மிகவும் வாட்டியது.

திருநெல்வேலியிலிருந்த என் அப்பா எனக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி
எங்களைச் சேர்த்து வைக்கும் அக்கறையில்லாமல் என்னைத் தூண்டிவிட்டு எங்கள் சண்டையை ஊதிப் பெரிதாக்கினார். எனக்கு வேறு கல்யாணம் செய்து வைப்பதாகவும், கவலைப்பட வேண்டாமென்றும் தூபம் போட்டார். அதுமட்டுமின்றி வீட்டிற்கு வேறு பூட்டு போட்டு பூட்டிவிடும் படியும் சரஸ்வதி திரும்பி வந்தால் மாற்றுச் சாவியை உபயோகித்து வீட்டிற்குள் செல்லக் கூடாது எனவும் என்னிடம் போனில் சொன்னார். எவ்வளவு பெரிய குள்ள நரித்தனம்? ஆனால் நான் அவர் சொன்னதைச் செய்யவில்லை.

டிசம்பர் 24 ம் தேதி இரவு ஒரு கிறிஸ்துமஸ் பார்ட்டியில் இருந்தேன். அன்றைய தினங்களில் மொபைல் வசதி கிடையாது. என்னைப் பார்ப்பதற்காக என் அப்பா, என் தங்கை தம்பியை அழைத்துக்கொண்டு என்னிடம் சொல்லாமல் திடீரென அன்று இரவு பத்து மணிக்கு பெங்களூர் வந்தார். என் வீடு பூட்டியிருந்தது. அதனால் அருகே கிடைத்த ஒரு மட்டமான ஹோட்டலில் அறை எடுத்து அனைவரும் தங்கினர்.

நான் பார்ட்டி முடிந்து மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்தேன். காலையில் ஏழரை மணிக்கு என் வீட்டு ஓனர் என்னிடம், “என் அப்பா இரவு வந்ததாகவும், எனக்காக காத்திருந்ததாகவும், ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு காலை வருவதாக சொல்லிச் சென்றதாகவும்” சொன்னார். நான் உடனே அல்சூரில் உள்ள ஹோட்டல்களில் அவரைத் தேடி கடைசியில் அந்த மட்டமான ஹோட்டலில் என் தங்கை தம்பியுடன் கண்டுபிடித்தேன்.

வேறு பூட்டு போட்டு சரஸ்வதியை வீட்டினுள் வரவிடாது செய்யச் சொன்னவர், அதே வீடு பூட்டியிருந்ததால் தானே தன் மகள், மகனுடன் ஒரு இரவு முழுவதும் மட்டமான ஹோட்டலில் தங்க நேர்ந்தது அவர் வணங்கும் முருகன் கொடுத்த தண்டனைதான். .

இப்படியாக சரஸ்வதிக்கு அவர்கள் செய்த அராஜகத்தை சொல்லிக்கொண்டே போகலாம்… அவர்களின் இந்தக் கழிசடையான எண்ணங்களைப் புரிந்து கொள்ள எனக்கு பத்து வருடங்கள் ஆனது.

அதன் பிறகுதான் பக்திக்கும், நேர்மையான எண்ணங்களுக்கும், நல்ல பண்பாட்டுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். பக்தி என்பது நம்மைப் பற்றி நாமே உதார் விட்டுக் கொள்ளும் ஒரு பம்மாத்து, அவ்வளவுதான்.

அதன் பிறகு அவர்கள் இறக்கும் வரை பட்டும் படாமல் அவர்களை தள்ளியே வைத்திருந்தேன்.

எனக்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகளில் நம்பிக்கை இல்லை. எனவே மறுநாள் காலையில் பெங்களூர் மெடிகல் காலேஜிலிருந்து ஒரு ஆம்புலென்ஸ் வந்து சரஸ்வதியை அள்ளிச் சென்றது.

மாதங்கள் ஓடின…. என் அருமை மருமகளும், மகனும் என்னை நன்கு பார்த்துக் கொள்கிறார்கள்தான் என்றாலும், சரஸ்வதி என்னிடம் காண்பித்த ஒட்டுதலும், வாஞ்சையும், புரிதலும் அவர்களிடம் இல்லை. ஒரு கடமையாகத்தான் என்னை நல்ல விதமாக கவனித்துக் கொண்டார்கள்.
தனிமையில் அவ்வப்போது எங்கள் திருமண ஆல்பத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதில் சரஸ்வதியைப் பார்த்து ஏங்குவேன்….

கணவன் இறந்த பின்பு ஒரு மனைவி தன் எஞ்சிய வாழ்நாளை எதிர்கொண்டு சமாளித்து வாழ்ந்து விடலாம். ஆனால் மனைவி இறந்தபின் ஒரு கணவன் தன் எஞ்சிய வாழ்நாளை ஓட்டுவது என்பது மிகவும் பரிதவிப்பானது, வேதனையானது, கொடுமையானது. அந்தக் கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன்.

இல்லாள் இல்லாத இல்லம் சுடலை. சுடலை என்றால் சுடுகாடு. மனைவி இல்லாத வீடு சுடுகாடுதான்.

எனக்கும் வயதாகிவிட்டது. பிணியும், மூப்பும் என்னை ஆட்கொள்ளாது அடுத்தவர்களுக்கு தொந்திரவு தராமல் இறந்துவிட வேண்டும்.

என்னுடைய ஒரே ஆசை, அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் எனக்கு சரஸ்வதியே மறுபடியும் மனைவியாக வர வேண்டும்… இன்னமும் கூடுதலான ஒரு நல்ல புரிதலோடு அதிகமான அன்புடன் அவளை நான் கவனித்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமா? சொல்லுங்களேன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *