இலக்கியாசிரியரின் மனைவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 4,324 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இதோ பார், காமு , தபாலில் என்ன வந்திருக்கிறது பார்.”

“என்னத்தை வரும்? வழக்கமாக வரதெல்லாந்தான் வந்திருக்கும், வேறு என்ன? உங்கள் கதை ரொம்ப அற்புதமாக இருக்கிறது என்று தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் ஒரே மனசாக அபிப்பிராயப்படுகிறார்கள் என்றும், அந்த அற்புதக் கதைக்குச் சம்மானமாக நாலு ரூபாயில் மணியார்டர் கமிஷன் கழித்து மூணே முக்காலே அரைக்கால் ரூபாய்க்கு மணியார்டரும் வந்திருக்கும். வேறே என்ன வரப்போகிறது? என்றாள் காமு.

“ஒரு மணியார்டர் இல்லை; இரண்டு மணியார்டர் வந்திருக்கு இன்று.”

“நம் தரித்திரம் விடிந்து விடும்!”

“ஒரு குட்டி நாவல் உடனே தேவையாம். நூறு ரூபாய் தருகிறாராம் ராமசாமி.

“உடனே தேவை என்பதற்கு உங்கள் வியாக்கியானம் ஆறு மாசத்தில் என்று. நூறு ரூபாய் என்பதற்கு உங்கள் ராமசாமியின் வியாக்கியானம் மாசம் ஒரு ரூபாயாக நூறு மாசத்தில் என்று. இதெல்லாம் என்னிடம் சொல்வதோடு இருக்கட்டும். வேறு யாராவது நாலு பேர் கேட்டால் சிரிப்பார்கள்!”

“நீ இலக்கியாசிரியனுடைய மனைவியாக இருக்க லாயக்கற்றவள். யாராவது குமாஸ்தாவைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொண்டிருக்க வேணும், நீ” என்றான் சுவாமிநாதன்.

“நீங்கள் யோசனை பண்ணியிருக்கலாகாதா? பெண் பார்க்க வந்தபோது, ‘இந்தப் பெண், ஏதுடா, நம்மைப்போன்ற உயர் இலக்கியாசிரியனுடைய மனைவியாக இருக்க லாயக்கில்லையே, வேறு எங்கேயாவது பார்க்கலாமே’ என்று நீங்கள் சற்றே யோசித்திருக்க வேணும்” என்றாள் காமு.

“ஏதாவது கன்னா பின்னா என்று பேசி என் வாயைக் கிளப்பாதே! எனக்குக் கோபம் வரும்.”

“இலக்கியாசிரியனின் கோபத்துக்கு என்ன மதிப்பு என்று இலக்கியாசிரியனுடைய மனைவியாகிய எனக்குத் தெரியாதா?” என்றாள் காமு புன்சிரிப்புடன்.

“சரி, சரி; உள்ளே போ. தினம் தபாலில் கதை கேட்டு நாலு கடுதாசு வருகிறது. உன்னோடு வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு போது போக்க எனக்கு நேரமில்லை. போ உள்ளே, போ” என்றான் இலக்கியாசிரியன்.

“கைக்காரியத்தை விட்டு விட்டு வந்து நிற்க நானும் தயாரில்லை. அப்புறம் கிடைக்கிற சோறும் சரியாகக் கிடைக்காது. நீங்கதான் ‘காமு’ வைக் கூப்பிட்டேன். வந்தேன்.”

“சரி போ. உன்னைக் கூப்பிட்டது பிசகுதான். போ. கதை கட்டுரை வேணும் என்று கடிதம் எழுதுகிறவர்களுக்கெல்லாம் எழுதித் தர எனக்கு ராவணனைப் போல இருபது கைகள் இருந்தால் கூடப் போதாது போல் இருக்கு…” என்று தன் பெருமையைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டான் சுவாமிநாதன்.

“நீங்கள் இருபது கையிலேயும் எழுதி எழுதிச் சம்பாதித்துப் போட்டால் கூட இந்த ஒத்தைக் குடும்பத்தைச் சரியானபடி சம்ரக்ஷணை செய்யப் போதுமானது வரப்போவதில்லை, எழுத்து மூலம்…”

சுவாமிநாதன் நிமிர்ந்து ஒரு விநாடி அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். அதில் வருத்தமும், விசனமும், தெரிந்தனவே தவிரக் கேலி தெரியவில்லை. அவன் சொன்னான்: “பாரேன் இந்த மாசம். கடிதம் போட்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும் பத்துப் பன்னிரண்டு தருவதாக எழுதியிருக்கிறார்கள். கேட்டிருப்பவர்களில் ஒரு நாலு பேருக்கு பிகுப் பண்ணிக்கொண்டு எழுதாமல் இருந்து விடுவேன்.”

“தவிடு தின்பதிலே ஒய்யாரம் வேறு!

“மற்றவர்கள் எட்டுப் பேரும் ஆளுக்கொரு பத்து ரூபாய் அனுப்பினால் இந்த ஜனவரிக்குக் குறைந்த பக்ஷம் எண்பது ரூபாய் வந்து விடும்…”

“வரும் எண்பது ரூபாயை எப்படிச் செலவு செய்வது என்ற யோசனையிலே காலைப் போது போகிறதோ!” என்றாள் காமு, கேலியாக.

“ஒப்புக் கொள்கிறேன். நீ சொல்வதும் உண்மைதான். என் கதைகளில் வரும் நாயகர்களிற் பலர் வேண்டுமானால் லக்ஷம், கோடி என்று பணம் படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால் எண்பது ரூபாயைச் சேர்ந்தாப்போல நான் பார்த்து வருஷக் கணக்காக ஆகிவிட்டது. இப்போது கையில் கிடைத்தால் எப்படி அதைச் செலவு செய்வது என்று தடுமாறினாலும் தடுமாறுவேன்.”

“ஐயோ பாவம்!” என்றாள் காமு.

அவள் குரல் திடீரென்று பரிதாபத்துக்கு மாறியதைக் கேட்டு சுவாமிநாதன் மறுபடியும் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். காமு மேலும் சொன்னாள்.

“இதென்ன பிழைப்பு வேண்டிக்கிடக்கிறது. எழுதுங்கள். ஒருவருக்குமே புரியாத நல்ல நல்ல கதைகளாக எழுதுங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஏதாவது பிழைக்கும் வழி தேடிக் கொள்ளுங்களேன். ஏதாவது உத்தியோகம்…”

“உத்தியோகம் புருஷ லட்சணம் என்கிறாய் நீ.”

“இல்லாவிட்டால், ஒன்றுமே சம்பாதிக்காமல், அப்பா வைத்துவிட்டுப் போன செல்வத்தையும் நாளடைவில் கரைத்து விட்டு, பெண்டாட்டியையும் பிள்ளையையும் தெருவில் நிற்க விடுவதுதான் புருஷ லட்சணமோ?”

“எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்று சொல்லிக் கொள்ள உனக்கு ஆசை.”

“என்னவோ! உலகத்திலே நாலு பேர் இருக்கிற மாதிரி எல்லாம் இருக்க வேணும் என்றுதான் எனக்கு ஆசை.’

“மந்தை ஆட்டிலே நானும் ஓர் ஆடாக இருக்க வேணும் என்கிறாய் நீ, அவ்வளவுதானே!”

“வேண்டாம், வேண்டாம். ஆடாக இருக்கவேண்டாம். இலக்கியாசிரியனாகவே இருங்கள்!” என்று காமு சற்றுக் கோபமாகவே சொல்லிவிட்டு விறுக்கென்று உள்ளே போய் விட்டாள்.

2

நாளடைவில் வேறு வழி காணவில்லை . இலக்கியாசிரிய னாகியிருக்க வேண்டிய சுவாமிநாதன் டில்லியில் குமாஸ்தாவாகி விட்டான்.

எழுதுவதில் தான் அதிர்ஷ்டமில்லையே தவிர அவனுக்கு, குமாஸ்தா வேலையில் போதிய அதிர்ஷ்டம் இருந்தது. எண்பது ரூபாயில் ஆரம்பித்தான். ஆனால் இரண்டு வருஷங்களுக்குள் ளாகவே அவன் சம்பளம் இருநூறுக்கு உயர்ந்துவிட்டது. அதற்கு மேல் பதவி உயராது. சம்பளம் வருஷா வருஷம் உயரும். அவனுடைய ஐம்பத்தைந்தாவது வயதில் நானூறை எட்டும். இருநூறு ரூபாய் உதவிச் சம்பளத்துடன் அவன் ரிடையர்’ ஆகலாம்.

இலக்கியாசிரியனாகிப் பெயரும் புகழும் சம்பாதித்திருக்க வேண்டிய தான் இப்படிக் கேவலம் ஒரு குமாஸ்தாவாக வாழ்க்கை நடத்த நேர்ந்ததை எண்ணி அவன் முதலில் கொஞ்சநான் வருத்தப் பட்டான். ஆனால் இந்த வருத்தமோ அமைதியின்மையோ நீடிக்க வில்லை. மாதாந்தர வருவாயுள்ளவர்களின் சுக சௌக்கியங்களுடன் அவனுடைய நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சுலபமாய்க் கழிந்து கொண்டிருந்தன. தபால்காரன் என்ன கொண்டு வருவானோ என்று தினம் எதிர்பார்த்து நிற்க வேண்டியதில்லை. நாளடைவில் சுவாமி நாதனுக்கு அவனுடைய புது வாழ்க்கையில் பிடிப்பும் திருப்தியும் ஏற்பட்டுவிட்டன.

அவனுடைய பழைய நண்பர்களிற் சிலர், பத்திரிகாசிரியர் களாக இருந்தவர்கள், அவனுக்கு எப்பொழுதாவது கடிதம் எழுதுவார்கள். ஏதாவது விசேஷ இதழுக்குக் கதை வேண்டுமென்று கேட்டு எழுதுவார்கள். முதலில் கொஞ்ச நாள் சுவாமிநாதனுக்கும் எழுதவேண்டும் என்றுதான் ஆசை. ஏதாவது எழுத ஆரம்பிப்பான். ஆனால் ஆரம்பிப்பதுடன் நின்றுவிடும். ஓய்வு குறைவு என்பது மட்டும் அல்ல. குமாஸ்தா வாகிவிட்ட உடனேயே எழுத்தாளனின் சக்திகளும் சிறிது சிறிதாகக் குறைந்து போய் விட்டனபோல் இருந்தது. தவிரவும் ஆபீஸ் வேலை, புது நண்பர்கள், குழந்தைகள், டெல்லிச் சமூகத்தில் இருநூறு ரூபாய் சம்பாதிக்கும் குமாஸ்தாவுக்கு உரிய ஸ்தானத்திலிருந்து நழுவாமல் இருப்பதற்கானது செய்தல் இப்படியாக அவன் பொழுது கழிந்து கொண்டிருந்தது. பொழுது இன்பகரமாகவே கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

பின்னர் சில நாட்களில் கதை எழுத ஆரம்பிப்பதைக் கூட அவன் நிறுத்தி விட்டான். ஒரு நோட்டுப் புஸ்தகத்தில் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் பெரிய பெரிய நாவல்களுக்கும் குறிப்புகள் எழுதி வைத்துக்கொண்டான். அதுவும் சில நாட்களில் நின்றுவிட்டது. எழுதுகிறவர்களையும் பத்திரிகைகளையும் பற்றிக் குமாஸ்தாக்களுக்கே இருக்கக்கூடிய ஓர் அலக்ஷியத்துடன் நாளடைவில் பேசவும் தலைப்பட்டான். இலக்கியம், கலை என்று முன்னெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கிய உறவு கொண்டாடிக் கொண்டிருந்தானோ அவ்வளவுக்கவ்வளவு இப்போது அவற்றினின்றும் ஒதுங்கிவிட்டான்.

அவனிடத்தில் இவ்வளவு மாறுதல்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கவனித்துக் கொண்டு வந்த காமுவுக்குத்தான் ‘திக்’ கென்றிருந்தது. மகோன்னதமான இலக்கிய வாழ்க்கையினின்றும் தன் கணவரை நெட்டித் தள்ளிக் கொண்டு வந்து அவரைச் சாதாரண குமாஸ்தா வாக்கிவிட்டது தன் செயலும் சொல்லுந்தான் என்று உணர்ந்து அவள் வருந்தினாள். இந்த மாறுதல்களுக்கெல்லாம் தானே ஆதிகாரணம் என்று அறிந்து அவள் நெஞ்சு, ‘குறுகுறுத்தது. வேறு என்ன செய்வது? மறுபடியும் எழுத அவரைத் தூண்டுவது என்று முயன்றாள்.

“அதெல்லாம் அந்தக் காலம்!” என்றான் சுவாமிநாதன். “இந்தப் பத்திரிகாசிரியன்களுக்கெல்லாம் என்ன வேலை? ஏதாவது உத்தியோகத்திலிருப்பவன், இருந்தவன், கன்னாபின்னா என்று எழுதிக் கொடுத்துவிட்டால் அதைப் போட்டு விட்டு ‘ஆஹா, ஊஹு!’ என்று குதிப்பார்கள். இரவு, பகல் கண்விழித்து ஜீவகளை ததும்ப யாராவது ஏழை எழுத்தாளன் எழுதிக் கொடுப்பதைப் படித்துக் கூடப் பார்க்காமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள். தப்பித் தவறிப் பத்திரிகையில் போட்டாலும் சம்மானம் தம்பிடி அனுப்ப மாட்டார்கள். ஏழை எழுத்தாளர்களுக்குப் போட்டியாக நான் இனிமேல் எழுதப் போவதில்லை . இந்தப் பத்திரிகாசிரியர்களுக் கெல்லாம் உதவியே செய்யக் கூடாது. தமிழ்ப் பத்திரிகை உலகம் ஆபாசங்கள் நிறைந்தது. அந்தச் சகதியில் நானும் காலை விடுவானேன்?” என்று நீண்ட பிரசங்கம் நிகழ்த்தினான் சுவாமி நாதன்.

“உங்களுக்கு எழுத வராவிட்டால் அதற்காகத் தமிழ்ப் பத்திரிகை உலகமும் இலக்கிய உலகமும் ஊழல்கள் நிறைந்தவை என்று இகழ்வானேன்?” என்றாள் காமு.

“எனக்கு எழுத வராது என்று நினைக்கிறாய்? உம்?”

“எழுதுங்களேன், பார்க்கலாம்”.

“உனக்காக எழுதுகிறேன் பார். ஒரே ஒரு கதை எழுதுகிறேன். அதை எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பமாட்டேன். உனக்காக எழுதுகிறேன்” என்றான் சுவாமிநாதன்.

ஆனால் காமுவுக்காகக்கூட அவனால் கதை எழுத முடியவில்லை.

3

ஏதோ விளையாட்டாகத்தான் காமு கதை எழுத உட்கார்ந்தாள். ஆனால் அது வினையாகவே அவளைப் பற்றிக்கொண்டது. வீட்டு வேலை, குமாஸ்தாக்களின் மனைவிமார் சமூகத்தில் உரிய ஸ்தானம், குழந்தைகள், கணவர்-இவ்வளவு கடமைகளுடன் எழுதுவதும் ஒரு கடமையாக அவளைப் பிடித்துக் கொண்டது. ஆரம்பத்தில் ஆத்ம திருப்தியை மட்டும் உத்தேசித்து எழுதினாள். இரண்டொன்று எழுதி, எழுத்துப் படிந்தவுடன் ஏதாவது புனைபெயருடன் பத்திரிகை களுக்கும் அனுப்பிப் பார்க்கலாமே என்று ஆசை தட்டிற்று.

தன்னுடைய உண்மையான உணர்ச்சிகளை எல்லாம் உள்ள படியே விவரித்து அவள் கதை எழுதினாள். இலக்கியாசிரியன் கடைசியில் குமாஸ்தாவான கதையைத் தனக்கு எட்டியவரையில் எழுதி அதற்கு, ‘இலக்கியாசிரியனின் மனைவி’ என்று மகுட மிட்டு, ‘குமாரி’ என்ற புனைபெயருடன் அனுப்பினாள்.

அவள் கதை எழுதியதோ, அதைப் பத்திரிகை அனுப்பியதோ அவள் கணவனுக்குத் தெரியாது. நல்ல வேளையாக கதை வெளியான இதழ் ‘ஜயந்தியை’ யும் அதற்குச் சம்மானமாக வந்த ரூபாய் இருபத்தைந்து மணியார்டரையும் தபால்காரன் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தபோது அவள் கணவன் ஆபீஸுக்குப் போயிருந்தான்; வீட்டில் இல்லை. அந்த இதழை அவன் கண்ணிலே காட்டாமல் தன் பெட்டிக்குள் போட்டுப் பத்திரப்படுத்திவிட்டாள்.

ஆனால் அந்தப் பத்திரிகை ‘தமிழர் கிளப்பு ‘க்கு வந்திருந்தது. அதில் சுவாமிநாதன் அந்தக் கதையைப் படித்துவிட்டு வந்து இரவு அதைப்பற்றித் தன் மனைவியிடமும் சொன்னான். ”நம்மைப் பற்றி அறிந்தவர்கள்தான் யாரோ அந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான். ”யார் என்று தெரியவில்லை . ‘ஜயந்தி’ யின் ஆசிரியன் எனக்குச் சிநேகிதன்தான். இந்தக் கதையை எழுதியது யார் என்று நாளைக்கே எழுதிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றான்.

‘குமாரி’க்குத் திக்கென்றது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “கதை அவ்வளவு நன்றாக இருந்ததா என்ன?” என்று கேட்டாள். “நானும் படிப்பேனே? கொண்டுவந்திருக்கக் கூடாதா?” என்றாள்.

“கதை நன்றாகவே இருந்தது” என்று தன் கணவன் சொன்னதைக் கேட்க அவளுக்குப் பரம திருப்தியாக இருந்தது.

குமாஸ்தா சுவாமிநாதன் மறுநாள் பொழுது விடிவதற்கு முன்னரே ‘இலக்கியாசிரியனின் மனைவி’யையும் அதன் ஆசிரியையையும் பற்றி மறந்து போய்விட்டான். குமாஸ்தாவின் வாழ்க்கையில் எவ்வளவோ கவலைகள், வேலைகள், ஆசைகள், நிராசைகள் கேவலம் ஒரு கதையைப் பற்றி-, அது எவ்வளவு நல்ல கதையானால் தான என்ன?- ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?

ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ‘ஜயந்தி’ யில் அதே ‘குமாரி’ எழுதிய இன்னொரு கதை வெளிவந்திருந்ததைக் கண்டவுடன் சுவாமிநாதனுக்கு முதல் கதையும் ஞாபகத்துக்கு வந்தது. இந்தத் தடவையும் மறந்துவிடாமல் உடனே உட்கார்ந்து ‘ஜயந்தி ‘ யின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினான், யார் அந்தக் ‘குமாரி’ என்று விசாரித்து. பத்து நாட்களில் ‘ஜயந்தி’யின் ஆசிரியரிடமிருந்து பதிலும் வந்துவிட்டது. புனைபெயர் வைத்துக் கொள்ளும் ஆசிரிய ஆசிரியைகளின் உண்மைப் பெயரை வெளியிட இயலாதது பற்றி வருந்துவதாக ஆசிரியர் பதில் எழுதிவிட்டார்.

அந்தக் கடிதத்தைச் சாமா தன் மனைவியிடம் காண்பித்தான். அவன் சொன்னான்: ” யார் என்று சொல்ல இயலாதாம்! யாராவது இருந்தால் தானே, சொல்ல! அவனே பெண்ணின் பெயரைப் போட்டுக் கொண்டு எழுதியிருப்பான்; அவ்வளவுதான். தமிழ்ப் பத்திரிகை உலகம் மகா மோசமானது; மட்டமானது. அதில் என்ன நடக்கும், என்ன நடக்காது என்று யாரும் சொல்ல முடியாது. புருஷர்களே புடைவை கட்டிக்கொண்டு எழுத வந்துவிடுவார்கள்…”

‘குமாரி’ என்பது யார் என்று தெரிவித்துவிடலாமா என்று யோசித்தாள் காமு; சற்றுத் தயங்கினாள். அதற்குள் சுவாமிநாதன் சொன்னான்.

“பார்! ‘புடவை கட்டிய புருஷர்கள்’ என்று நான் ஒரு கதை எழுதி அனுப்புகிறேன், இன்றே எழுதி அனுப்புகிறேன். அவன் அதை வெளியிடாமல் மட்டும் இருக்கட்டும்; பார்க்கிறேன்.”

உறுமிக்கொண்டே சுவாமிநாதன் பேனாவை எடுத்துக் கொண்டு எழுத உட்கார்ந்தான். அன்று ஏதோ லீவு; ஆபீஸில்லை. அப்படியும் ‘புடவை கட்டிய புருஷர்கள்’ முதல் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் ஓடவில்லை.

காமு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் ஒன்றுமே வாய்திறந்து சொல்லாமல் புன்சிரிப்புடன் நின்றாள்.

மேலும் இரண்டு மாதங்கள் சென்றன. அந்த இரண்டு மாதங்களில் ‘ஜயந்தி’யில் ‘குமாரி’யின் கதைகள் இன்னும் இரண்டு வெளியாயின. அவையும் நன்றாகவே இருந்தன என்று சுவாமிநாதன் ஒப்புக்கொண்டான். ஆனால் யாரோ புடைவை கட்டிய புருஷன்தான் அவற்றையெல்லாம் எழுதியிருப்பான் என்று தன் மனத்தில் ஊர்ஜிதம் செய்துகொண்டான்.

ஒரு வருஷத்தில் தங்கள் இதழ்களில் வெளிவரும் கதைகளில் சிறந்ததற்கு நூறு ரூபாய் பரிசு அளிப்பது ‘ஜயந்தி காரியாலயத்தாரின் வழக்கம். எந்தக் கதைக்குப் பரிசு என்பதை ‘ஜயந்தி’யின் வாசகர்களே ‘ஓட்டுக் கொடுத்துச் சொல்வது வழக்கம். அந்தப்படியே அந்த வருஷமும் வாசகர்களின் அபிப்பிராயம் கோரப்பட்டது. அவ்வருஷத்திய ஜயந்தி இதழ்களில் வெளிவந்த கதைகளில் ‘குமாரி’ எழுதிய ‘இலக்கியாசிரியரின் மனைவி’ என்ற கதைதான் சிறந்தது என்று ‘ஜயந்தி’ வாசகர்களில் நூற்றுக்கு எண்பது பேர் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள். அவ்வருஷத்திய ‘ஜயந்தி’ப் பரிசு ‘குமாரி’ என்பவளுக்கு வழங்கப்படும் என்று ஆசிரியர் அறிவித்திருந்தார். அத்துடன் ‘குமாரி’ என்பவரின் உண்மைப் பெயரும் விலாசமும் வெளியிடப்பட்டிருந்தன.

அந்த இதழ் டில்லிக்கு வந்து சேர்ந்த அன்று சுவாமிநாதன் ‘கிளப்பு க்குப் போகவில்லை . ஆகவே அவனுக்குத் தகவல் தெரியாது. இரவில் அவனை அகஸ்மாத்தாகச் சந்தித்த நண்பன் ஒருவன்தான் விஷயத்தைச் சுவாமிநாதனுக்குச் சொன்னான். அவன் திடுக்கிட்டுப் போனான். அவன் எதிர்பார்க்காத விஷயம் அது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ஒன்றும் அறியாதவன் போல அவன் காமுவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் தெரிந்ததை அதிகநேரம் அடக்கி வைத்துக்கொண்டிருக்க முடிய வில்லை. நேராகவே கேட்டுவிட்டான்.

“குமாரி” என்பது நீதானாமே? ‘ஜயந்தி ‘யிலே உன் பெயரும் விலாசமும் போட்டிருக்கிறதாமே!” என்றான்.

பதில் என்ன சொல்வது என்று அறியாமல் தடுமாறினாள் காமு. பல வருஷங்களுக்கு முன் தான் தன் கணவனிடம் சொல்லிய தெல்லாம் அவளுக்கு ஞாபகம் வந்தது. தான் சற்றுக் கடுமையாகவே அப்போது பேசினதாக அவளுக்கு ஞாபகம். அவள் கண்கள் நிறைந்துவிடும் போல் இருந்தது. அழுகையை ஒருவாறு அடக்கிக் கொண்டு சொன்னாள். ”சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள்தான் எழுதவே மாட்டேன் என்கிறீர்கள். நானாவது எழுத வருகிறதா பார்க்கலாமே என்று ஆரம்பித்தேன்” என்றாள்.

மாஜி இலக்கியாசிரியன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அவளையே உற்றுப்பார்த்துக் கொண்டு நின்றான்.

காமு சொன்னாள்: “எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான்.”

அவள் வேறு என்னவெல்லாமோ சொல்ல விரும்பினாள். ஆனால் அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.

“இவ்வளவு கெட்டிக்கார மனைவி எனக்கு இருப்பது எனக்கே இன்றைக்குத்தான் தெரியவந்தது!” என்றான் சுவாமிநாதன். அவன் என்ன சொல்வானோ என்று பயந்திருந்த காமு அவன் குரலில் தொனித்த பெருமையைக் கண்டு திக்பிரமை அடைந்தாள்.

அன்றிரவு வெகுநேரம் வரையில் இருவரும் தூங்கவில்லை. பழைய காலத்திய, அதாவது சுவாமிநாதன் இலக்கியாசிரியனாக இருந்த நாட்களைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டு வெகு நேரம் கண் விழித்திருந்தார்கள்.

மறுநாள் காலையில் சுவாமிநாதன் சாப்பிட்டு விட்டுக் கோட்டை மாட்டிக்கொண்டு ஆபீசுக்குக் கிளம்பும்போது, அவனுக்கு வெற்றிலை கிழித்துக் கொடுத்துக்கொண்டே, காமு சொன்னாள்: ”குமாஸ்தாதான் என்றாலும் இலக்கியாசிரியையின் கணவன் என்பதை மறந்து விடாதீர்கள்! கன்னா பின்னா என்று யாராவது நண்பர்களிடம் ஆத்துக்காரியைப் பற்றிப் பிதற்ற ஆரம்பித்து விடாதீர்கள் !” என்று எச்சரிக்கை செய்தாள்.

“போடி, போக்கிரி!” என்றான் சுவாமிநாதன். அவனுக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

– 1955, க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *