இலக்கணங்கள் மாறலாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 99 
 
 

கேசவன் அழுத்திய அந்த அழைப்பு மணியின் மெல்லிய ரீங்காரம் வெளியில் நின்ற எங்களுக்கும் கேட்டது.

கதவைத் திறந்ததும், என்னை அன்புடன் ஆரத்தழுவிக் கொள்கின்றான், குமார்.

போட்டோவிலையும் ஸ்கைப்பிலும் மட்டும் நான் இதுவரை பார்த்த, மூத்தவள் சோபனாவும் இளையவள் வதனாவும் அவனுக்குப் பின்னால் நின்றபடி என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.

மனசை ஆக்கிரமித்த பல இனம்புரியாத உணர்வுகளுடன், அவர்கள் இருவரையும் அன்புடன் அணைத்து முத்தமிட்ட போது ‘பாவம், தாயில்லாப் பிள்ளைகள்’ என்று என்னையும் மீறி என் மனதில் பீறிட்ட பரிதாபம், என் கண்களைக் குளமாக்குகின்றது.

எனக்கு என்ரை தம்பியிலை கொள்ளை ஆசை. அவன் கலியாணம் கட்டினபோது எங்களை விட்டிட்டுப் போறான் என்ற தவிப்பிலை இரண்டு கிழமைக்கு மேலாக நான் அழுதிருக்கிறேன். அவனுக்குப் பிடித்த சாப்பாட்டை, அவனில்லாமல் சாப்பிட முடியாமல் தவித்திருக்கின்றேன். இருந்தாலும், அவனுக்கென்று ஒரு வாழ்க்கை வந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சியில் என்னை நான் ஆறுதல்படுத்திக் கொண்டேன்.

ஆனால், அந்த ஆறுதல் நிலைக்கவில்லை. அவனது வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முகாரியில் முடிந்து எங்கள் எல்லோரினதும் மனங்களையும் ரணமாக்கியது.

“என்ன அக்கா யோசினை? ஏதாவது குடிக்கத் தரட்டோ, அல்லது சாப்பிடுவமோ…?”, குமாரின் குரல் என் நினைவுமீட்டலுக்கு முற்றுப்புள்ளியிட, “சரி,சரி, சாப்பிடுவம், பிள்ளையளுக்கும் பசிக்கும்தானே”. நான் இருக்கையை விட்டு எழும்புகின்றேன்.

“நல்ல வடிவாய் வீட்டை வைச்சிருக்கிறாய்”, வீட்டின் நேர்த்தி மட்டுமன்றி, குசினியின் ஒழுங்கும் மனசுக்கு நிறைவைத் தர, மனசாரச் சொல்கிறேன்.
“அம்மா, உங்களுக்குத் தெரியும் தானே, மாமாவைப் பற்றி. அவர் எல்லாத்திலும் ஒழுங்குதான்.” கேசவனும் பாராட்டுகின்றான்.

“அக்கா, சாப்பிட்டிட்டு, சாப்பாடு எப்படியிருக்கு எண்டு சொல்லுங்கோ. உங்களவுக்கு ருசியாக எனக்குச் சமைக்கத் தெரியாது எண்டாலும், இப்ப நான் கொஞ்சம் பரவாயில்லை.” என்றவன், தனது பிள்ளைகளைப் பார்த்து, “ஆட்டிறைச்சியை சின்னன் சின்னான வெட்டி, மணக்க மணக்க, ருசியாச் சமைக்கிறதுக்கு, அக்காவை யாராலையும் வெல்லேலாது. அத்தானுக்கு வாற கோவம் எல்லாம் அக்கான்ரை சாப்பாட்டைப் பாத்தவுடனை வந்தவிடம் தெரியாமல் பறந்திடும்.” என்கிறான், குமார்.

“அப்பாக்கு அம்மான்ரை சமையல் மட்டுமில்லை, அம்மா செய்கிறதெல்லாம் பிடிக்கும். ஒரு மாசத்துக்கை திருப்பி அனுப்பிப் போடோணும் எண்ட ஒப்பந்ததிலைதான், இங்கை விட்டிருக்கிறார். இந்த வயசிலையும், எந்த நேரமும் அவருக்கு அம்மா பக்கத்திலை வேணும்.” சிரிக்கின்றான், கேசவன்.

“உனக்கும் வயசு போகேக்கைதான் அது விளங்கும், கேசு… இளமையிலை, பிஸி லைஃப்… அந்த நேரம், சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் பெரிசாத் தெரியாது. பிள்ளையளைப் பற்றி, வேலையைப் பற்றி, காசுபணத்தைப் பற்றிக் கவலைப்படுறதிலை காலம் போயிடும். ஆடி அடங்கி, பிறகு ஓய்ஞ்சிருக்கேக்கைதான் அன்பும் கரிசனையும் கவனிப்பும் உள்ள ஒரு உயிரின்ரை – அந்த உறவின்ரை – முக்கியத்துவம் வடிவாய் விளங்கும்….”

குமாரின் சொற்களினூடு தொனித்த அந்த ஏக்க உணர்வும் யதார்த்தமும் என் மனதை உறைய வைத்தது.

‘பாவம். இவன்ரை தனிமைக்கு ஒரு முடிவு கண்டுபோட்டுத்தான் நான் இலங்கைக்குத் திரும்பிப் போகவேணும்’. மனசு தீர்மானித்துக் கொள்கிறது.

சாப்பாடு முடிந்து, ஃபுருட்சலட்டுடன் வந்து சோபாவில் அமர்ந்த கேசவன், “மாமா, வழமைமாதிரி, உங்கடை சாப்பாடு, சுப்பர்!”, பெருவிரலை உயர்த்திக் காட்டுகிறான். எனக்கும் அது பெருமையாக இருக்கிறது.

பின்னர், என்னைக் கூட்டிப்போக திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை வருவதாகக் கூறி விடைபெற்றுப் போய்விட்டான், கேசவன்.

பிள்ளைகளை முத்தமிட்டு, படுக்கவைத்து, குட் நைற் சொல்லிப் போட்டு மீண்டும் வந்து எனதருகே அமர்ந்துகொண்டான், குமார்.

பலதும் பத்துமாக, ஊர்ப்புதினங்களை அலசிக் கொண்ட பின்னர், பலதடவைகள், போனிலும் கடிதத்திலும் நான் கேட்கக் கேட்க, அவன் தட்டிக் கழித்த கதைதான் என்றாலும் நேரில் கேட்கும் போது ஒரு மாறுதல் ஏற்பட மாட்டாதா என்ற நப்பாசையுடன், எனது மனதை அரிக்கும் கேள்வியை நான் மீண்டும் அவன் முன் வைக்கிறேன்.

“தம்பி, உன்ரை பொழுது பிள்ளையளோடையும் வேலையோடையும் போகுது எண்டு, நீ எனக்குச் சமாதானம் சொல்லுவாய். இருந்தாலும் கேட்கிறன், உண்மையைச் சொல்லு. தனிமை உன்னை வாட்டேல்லேயோ? ஏன், நீ திரும்பக் கலியாணம் கட்டக்கூடாது? ”

“அக்கா, தனிமை இல்லை எண்டு சொல்லேலாது… நேரத்துக்கு நேரம் ஒரு தவிப்பு வரத்தான் செய்யுது. ஆனா……”

“கவுன்சிலரா இருந்து எத்தனை வகைப் பிரச்சினைகளை நாளாந்தம் நான் கேட்கிறன். பசி மாதிரி எல்லாவிதமான இயற்கைத் தேவைகளும் எங்கள் எல்லாருக்கும் இருக்குது. எனக்கு அது விளங்கும். அதாலை, அக்காவோடை எப்பிடி இதுகளைக் கதைக்கிறது எண்டு தயங்காமல் என்னோடை மனம் விட்டுக் கதையப்பு!”

“சரியக்கா… எனக்குத் தேவை இருக்குது எண்டதுக்காண்டி, இன்னொருக்கா ஒரு நிரந்தர பந்தத்தை ஏற்றுக்கொள்ளுறதுக்கு நான் ரெடியில்லை.”

”உன்ரை பயம் எனக்கு விளங்குது, தம்பி… ஆனால், ஒருக்கா பிழையாய்போனால், நெடுகப் பிழைக்கும் எண்டு சொல்லேலாதுதானே!”

”அந்தப் பயத்துக்க்காக மட்டும் நான் இதைச் சொல்லேல்லை. என்ரை பிள்ளையளுக்கு நான் செய்யவேண்டியவைதான் எனக்கு முக்கியமாய்ப்படுது. அது தான் என்ரை கடமை எண்டு நான் நினைக்கிறன். அதுகள் மனம் நோகாமல் இருக்கவேணும்.”

மேசையிலிருந்த தண்ணியை எடுத்துக் குடிக்கிறான், அவன்.

பிறகு என்னைப் பார்த்து, “ அக்கா, இந்தப் பிள்ளையள், என்ரை அரவணைப்பிலை, நானே உலகமா, ஆறு வருஷமா வளருதுகள்… இனி, ஒரு புதுஆளை நான் இந்த வீட்டுக்கை கூட்டிக் கொண்டு வந்து, அந்த ஆளின்ரை வாழ்க்கைமுறையளை, அதுகளுக்கு அறிமுகப்படுத்திறதிலை எவ்வளவு சிக்கல் வரும் எண்டு சொல்லு பாப்பம்… அது மட்டுமில்லை, வேறுஆரோடையோ நான் அன்பாயிருக்கிறதை இந்தச் சின்ன வயசிலை அவளவையாலை சகிச்சுக்கொள்ளேலுமோ எண்டு யோசித்துப்பார்.”

“என்ன இருந்தாலும், பொம்பிளைப் பிள்ளையளுக்கு ஒரு அம்மா இருக்கிறது, நல்லமெல்லோ.”

“பெத்த அம்மாவையே வேண்டாம் எண்டு போட்டுத்தானே என்னோடை வந்து இருக்கிறாளவை. நீ நினைக்கிற மாதிரி பயப்பிடுறதுக்கு ஒண்டுமில்லை. நாங்கள் சுதந்திரமாய்க் கதைக்கிறம். மனசிலை இருக்கிறதைப் பரிமாறுறம், பிறகென்னத்துக்கு ஒரு புதுஅம்மா?”

“சரி, அவளவை கலியாணம் கட்டிப் போனப்பிறகு நீ என்ன செய்வாய்?, ஒரு கதைக்குக் கேட்கிறன்.”

“அதுக்கு இன்னும் ஒரு ஏழு, எட்டு வருஷமாவது இருக்குது. அதை அப்ப பாப்பம்.”

“அம்பதுக்குப் பிறகு, என்னெண்டடா கலியாணம் கட்டுவாய்?”

“அக்கா, இருபத்தி ஐஞ்சிலை கட்டி என்ன நடந்தது? அன்பும் பாசமும் வயசோடை சம்பந்தப்பட்டதில்லை, மனசோடை சம்பந்தப்பட்டது. இப்பவும் சொல்லுறன், எனக்கு நிரந்தர பந்தம் தான் வேண்டாம் என்கிறன்… என்னிலை அன்பு செலுத்தக்கூடிய. எனக்குச் சந்தோஷம் தரக்கூடிய, என்னோடை ஒத்துப்போற ஒரு உறவு கிடைச்சால், இப்பவும் அதுக்கு நான் ரெடி.”

“என்னடா, நீ சொல்லுறாய்? அப்பிடி ஆர் வரப்போயினம்?”

“அக்கா, இது கனடா, மனிசரையும் உறவுகளையும் மதிக்கிற ஒரு நாடு. அதுக்குத் தக்கதாக ஆட்களும் மாறேக்கை எதுவும் நடக்கலாம்…, ஆம்பிளையள் ரெடி எண்டாலும் பொம்பிளையள் இப்போதைக்கு வராயினம் எண்டது எனக்கு தெரியும்தான், பாப்பம்.”

“அப்பிடி ஒரு தேவையிருந்து, மனசு விரும்பினாலும் கூட ஊர் என்ன சொல்லுமோ, எண்ட பயம் பொம்பிளையளுக்கு இருக்கத்தானே செய்யும்… இது நடக்கிற கதையே?”

“சரி, நடக்காட்டில் போகட்டும், வந்தால் நல்லம் எண்டுதானே சொன்னனான். நாங்கள் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறம் எண்டதிலைதானே எல்லாம் தங்கியிருக்குது.”

“ம்… நீ சொல்லுற மாதிரி, பிள்ளைகளைப் பற்றி, அதுகளின்ரை மனசைப் பற்றி நாங்கள் அதிகம் யோசிக்கிறதில்லைத்தான்.”

“அக்கா, தனிமையைப் போக்க பல வழிகள் இருக்கு. தனி மனிசத் தேவைகளுக்கு அனேக மார்க்கங்கள் இருக்குது. ஆனால்… பிள்ளையளின்ரை மனசைப் பாதிக்காமல் அவையின்ரை வளர்ச்சிக்கு உதவ பெற்றாராலை மட்டும்தான் முடியும். நான் பெத்த பிள்ளையளை நல்லா வளர்க்க வேண்டியது என்ரை பொறுப்பு. அதை நான் செய்யிறதாலை கிடைக்கிற திருப்தி, எனக்குப் போதும். நீ வீணாக் கவலைப்படாதே.”

“கலாசாரம் எண்டது நிலையானதில்லை, அது நெடுக மாறிக்கொண்டுதானிருக்கும். என்றைக்கோ ஒரு நாளைக்கு எங்கடை சமூகத்திலும் அந்த மாற்றம் நடந்தாலும் நடக்கலாம், நான் இல்லையெண்டு சொல்லேல்லை. ஆனால் அது என்ரை தம்பியின்ரை வாழ்க்கைக்கு உதவத்தக்கதாக கெதியாக மாறுமோ எண்டது தான் என்ரை கவலை.”

எழும்பிப் போய் அவன்ரை தலையைக் கோதி, உச்சியில் முத்தமிடுகின்றேன், நான்.

“ஊருக்காண்டி இல்லாமல், தமக்காக வாழுறதுக்கு ஆராவது முன்னுக்கு வந்தால் பாப்பம்…. அப்பிடி ஒரு ஆள் கிடைச்சால், பிள்ளையளின்ரை உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்ததாம் இருக்கும், ஆளுக்கு ஆள் ஆதரவாய் இருந்ததாம் இருக்கும்…ம்.. சரி, நேரமாகுது, படுப்பம்.”

சொல்லிவிட்டு எழுந்தவன் தன் அறைக்குள் போய் லைற்றைப் போடுகின்றான்.

எனக்கென ஒழுங்கு செய்யப்பட்ட அறைக்குள் போன நான் கனத்த மனசுடன் லைற்றை அணைக்கின்றேன்.

– கனடா – தமிழ் எழுத்தாளர் இணையம் – சங்கப் பொழில் 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *