இறைவன் கொடுத்த வரம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 8,920 
 

“தாத்தா” என்ற குரல் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ராமசுப்புவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

வழக்கமாக பேரன் தனுஷ் பள்ளி விடுமுறைக்கு தாத்தாவைப் பார்க்க கிராமத்திற்கு வருவது இயல்புதான் என்றாலும் இந்தமுறை  நிச்சயம் தன் மகன் சிவகுமர், தனுஷை அனுப்பமாட்டான் என்று எண்ணியிருந்தார்.

அதற்கு காரணம் இருந்தது.

முந்தைய தினம் தொலைபேசியில் சிவா பேசியபோது தனுஷின் மேற்படிப்பு செலவுக்கு கிராமத்திலிருந்த நிலத்தையும், வீட்டையும் விற்று உதவி செய்யுமாறு கேட்டதற்கு, இல்லை என்று மறுத்ததுடன் முதல் முறையாக மிகுந்த கோபமும் கொண்டார்.

ராமசுப்பு பொதுவாக யாரிடமும் கடிந்துகொள்பவரில்லை.  அவருடைய இரண்டாவது மகள் சுசீலா திடீரென பதிவு திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நின்றபோது கூட, “வீட்ல பெரியவங்க கிட்ட சொல்லியிருந்தா, அக்கா கல்யாணம் முடிஞ்சதும், நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து நாங்களே செஞ்சி வச்சிருப்போமே, ராஜத்தை இனிமே யார் கட்டிக்குவாங்க” என்று வருத்தப்பட்டாரே தவிர கடிந்துகொள்ளவில்லை.

“இனி சுசீலாவுக்கும் இந்த குடும்பதிற்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை” என்று அவர் சிவகுமார் தான் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்தான்.  “அறியாத வயசு, ஏதோ செஞ்சிட்டா” என, ராஜம் பரிந்து பேச, கோபத்தில் சிவா வீட்டை விட்டு வெளியேறினான்.

சிறிது நாட்களில் ராமசுப்பு, தன் மனைவி வத்சலா காலமான பிறகு தன்னந்தனியாய் ராஜத்திற்கு திருமணம் முடிக்க மிகுந்த சிரமப்பட்டார். பின்பு நல்ல அந்தஸ்து, பதவி, நல்ல கட்டுக்கோப்பான குடும்பம் என மருமகன் வேணுகோபால் அமைந்தது அவளது அதிர்ஷ்டம் என்றே எண்ணினார்.

என்னதான் சிவா வீட்டை விட்டு வெளியேறினாலும் அவனும் தன்மகன் தான் என்றெண்ணி சூட்டோடு சூடாக அவன் திருமணத்தையும் முடிக்க நினைத்து, மருமகன் வேணுகோபாலின் தங்கை ரமாவை பேசி  நிச்சயம் செய்திருந்தார்.

அந்த நேரத்தில் சிவகுமார் தான் ராமசுப்புவின் நீண்ட  நாள் நண்பர் விஸ்வநாதன் மகள் கோமதியை விரும்புவதாகவும், அவளைத்தான் மணக்க விருப்பதாகவும் கூறினான். பின்பு சொந்த பந்தங்களை அழைக்காமல் கோமதியை பதிவு திருமணமும் செய்துகொண்டான்.

இவ்விஷயத்தை கேள்விப்பட்ட வேணுகோபல் இனி ராஜம் தன் குடும்பத்தினரைப் பார்க்கவும், பேசவும் கூடாதென தீர்மானமாக கூறிவிட்டார்.

தான் செய்தது தவறுதான் என்றெண்ணியோ என்னவோ சுசீலாவும் வீட்டுக்கு வருவதில்லை.

அன்றிலிருந்து தனிமையில் இருந்த ராமசுப்புவுக்கு வருடத்திற்கு ஒரிருமுறை (அதுவும் கோமதியின் வற்புறுத்தலின் பேரில்) கிராமத்திற்கு வரும் பேரன்  மட்டுமே சற்று ஆறுதல்.

முன்தினம் போனில் கோபமாக பேசியும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பேரனை தன்னிடம் அனுப்பியது அவருக்கு சற்றே பெருமிதமாக இருந்தது.

அன்றும் தனுஷ், வழக்கம் போல் பாசத்துடன் ஓடி வந்து தாத்தாவை அணைத்துக்கொண்டான்.   “தாத்தா,  இந்த முறை நான் உங்க கூட ஒரு வாரம் தான் இருக்க முடியும், அடுத்த வாரம்  ’நீட்’ எக்சாம் வருதுல்ல” என்றான்.

“சந்தோஷம், படிக்கிறதுக்கு புஸ்தகமெல்லாம் கொண்டுவந்திருக்கியா என்ன?” என்றார் சந்தேகத்துடன்.

“அமாம் தாத்தா, நிறைய படிக்கணும்” என்றான்.

மருத்துவம் படிக்க வைப்பதற்க்காகத்தான் சிவா தன்னை பண உதவி கேட்டிருப்பான் என்று யூகித்துக்கொண்டார்.

ஒருவாரம் போனதே தெரியவில்லை ராமசுப்புவுக்கு.  பேரன் ஊருக்கு சென்ற பின்பு, வீடே வெறிச்சோடிப்போயிருந்தது.

என்ன நினைத்தரோ திடீறென சிவாவுக்கு போன் போட்டு, “சிவா, போனவாரம் நீ சொன்னியே அது மாதிரியே செய்துடலாம், எனக்கப்புறம் நில புலன்களையெல்லாம் யாரும் பாத்துப்பீங்கன்னு எனக்கும் தோணலை, ஆனா ஒரு விஷயம்” என்று நிறுத்தினார்,

“என்ன, வெளிப்படையாவே சொல்லுங்க”? என்றான் சிவா

“வேர ஒண்ணுமில்லை எல்லாத்தையும் வித்துட்டு நான் என்ன செய்யறது எங்க போறதுன்னு  ஒண்ணும் புறியலையே?” என்றார், அப்பாவியாக

“நான் இருக்கேன், கோமதி இருக்கா, எங்க கூட வந்திடுங்கப்பா,  பாத்துக்கமாட்டோமா என்ன?!” என்றான் சிவா.

“அப்படியா, சரி அப்படியே செய்வோம்” என்றார் சிந்தனையுடன்.

போனில் சொல்லிவிட்டானே தவிர, அப்பாவின் வார்த்தைகள் சிவாவை என்னவோ செய்தது.

தன்னால் பிரிந்த குடும்பத்தை, மீண்டும் ஒன்று சேர்க்க முடியுமா என்ற சிந்தனையுடன்  கோமதியைப் பார்த்து, “கோமு, நாம பெரியக்காவையும், சின்னக்காவையும் போய் பார்த்துட்டு வருவோமா” என்று கேட்டான்.

சிறிது நேரம் யோசித்தவள் “ஸண்டே போவோம்ங்க, , எல்லாரையும் பார்த்தா மாதிரி இருக்கும்” என்றாள்.

ஞாயிற்றுக்கிழமை.

விடிந்ததும் விடியாதாதுமாக, எழுந்து, ட்ரிம் செய்து, குளித்து நேர்த்தியாக  உடையணிந்து, ஆயத்தமான சிவாவை ஆச்சரியமாக பார்த்தாள் கோமதி.

“என்ன கோமு இன்னும் ரெடியாகலை? என்றான் அவளைப்பார்த்து.

“இதோ பத்தே  நிமிஷம்“ என்று அவளும் ஆயத்தமானாள்.

வெளியே வந்தவுடன், “இன்னம் ‘கத்திரி’ ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளார என்னங்க வெயில் இப்படி அடிக்குது, பேசாம வெயில் தாழ ஒரு அஞ்சு மணிக்கு போகலாமா?” என்றவளை

“இல்லை கோமு இன்னைக்கு போயே தீரணும், கொஞ்ச நாளாகவே மனசை ஏதோ பாரம் அழுத்துற மாதிரி இருக்கு” என்றான்.

கோமதி பைக்கில் அமர்ந்ததும் ஸ்டார்ட் செய்தவன் மிகுந்த வேகத்தில் செலுத்தினான். ஒரு இருபது நிமிட பயணத்திற்கு பின் ஒரு குறுகலான சந்தில் சென்றுகொண்டிருந்தபோது, பெரிய மதில் சுவருடன், பூவேலைப்பாடுகளுடன் இருந்த கிரில்கேட்டை காட்டி கோமதி, “அந்த வீடுதாங்க, நம்பர் 24ன்னு போட்டிருக்கு” என்றாள்.

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் இருந்த கூர்க்காவிடம் விஷயத்தை சொல்லி இருவரும் உள்ளே சென்றனர்.

முகப்பிலிருந்த தோட்டம், கோமதியை வெகுவாக கவர்ந்தது. வித்தியாசமான பூச்செடிகளை காம்பவுண்டு ஓரத்தில் பயிரிட்டிருந்தார்கள். நடுவே நீர்வீழ்ச்சி போன்றதொரு அமைப்பு, சுற்றிலும் பசுமை போர்த்தியது போன்று, அழகாக செதுக்கப்பட்ட புல்வெளி, அதனை சுற்றிலும் கருங்கற்களால் போடப்பட்ட நடைபாதை என்று வேணுகோபால் வீட்டை ரசித்து கட்டியிருந்தார்.  “கார்டன், சூப்பராயிருக்குல்ல” என்றாள் கோமதி கண்கள் விரிய.

“ராஜத்துக்கு சின்ன வயசிலேர்ந்தே ‘ஹார்டிகல்சர்ல’ இன்ட்ரஸ்ட்” என்றான் பெருமிதத்துடன்.

நீண்ட நடைபாதையை கடந்து மெதுவே உள்ளே சென்றார்கள்.

முதல் முதலாக அவர்கள் வீட்டுக்கு செல்கிறோமே, யார் என்ன சொல்வார்களோ என்று நினைத்தவனுக்கு,  “வாங்க, வாங்க” என்று வேணுகோபால் வரவேற்றது, இதமாக இருந்தது.

கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு “இப்ப தான் வழிதெரிஞ்சதா?” என்றாள் ராஜம்.

“வாப்பா, வந்து மொதல்ல உக்காரு, வெயில்ல வந்திருக்காங்க, முதல்ல குடிக்க எதாவது கொடு ராஜம்,” என்றவர் சிவாவை பார்த்து என்னப்பா ஏதாவது முக்கியமாக விஷயமா?”என்றார் கனிவுடன்.

“இல்லை மாமா சும்மா பாத்துட்டு போலாம்னுதான் வந்தேன்” என்றான் சிவா.

“அதுசரி, ஒரு போன் பண்ணியிருந்தா, எல்லருக்கும் சேர்த்து சமைச்சிருப்பேனில்ல, இப்படி போன் கூட செய்யாம திடுதிப்புனு வந்து நிக்கிறயே” என்றாள் ஆதங்கத்துடன்

“அதெல்லாம் வேண்டாம், ராஜம் இன்னைக்கு ஒரு நாள் எல்லாரும் ஒண்ணா   நல்ல ஹோட்டல்ல போய் சேர்ந்து சாப்பிடுவோம்”. என்றான் சிவா.

“அதுவும் கரெக்ட் தான், நாக்குக்கு ருசியா சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு” என்றார் வேணுகோபால், ராஜம் முறைப்பதையும் பொருட்படுத்தாமல்.

“ஆமா அவந்திகா எங்க?” என்றான் இருவரையும் பார்த்து.

மாடியில படிச்சிட்டிருக்கா இரு கூப்பிடுறேன், என்று மாடிப்படி அருகில் சென்று “அவந்தி உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க” குரல் கொடுத்தாள்.

“யாரு?” என்றாள் அவள் மாடியிலிருந்தவாறே.

“உன் மாமா வந்திருக்கார்டீ, கீழே வா”என்றாள் சலிப்புடன்.

“மாமா?” என்ற கேள்வியுடன் இறங்கி வந்தவளுக்கு கோமதியை விட சிவா அன்னியமாக தோன்றினானோ என்னவோ அமைதியாக சென்று கோமதியின் அருகில் அமர்ந்துகொண்டாள்.

“இது தான் உன் முறை மாமன்” என்று ‘முறை’யில் சற்று அழுத்தத்துடன் அறிமுகம் செய்தவள், சிவாவிடம் திரும்பி,“ கேக்கவே மறந்துட்டேன் அப்பாவை போய் பாத்தியா எப்படி இருக்கார்” என்றாள்.

“அதைப்பத்தி தான் உங்கிட்ட சொல்லவந்தேன் ராஜம் என்று, நடந்ததை அவளிடம் விவரித்தான்.

“அட அப்ப கூடிய சீக்கிறம் நம்ம வீட்லயும் ஒரு டாக்டர்?” என்றாள் ராஜம் குதூகலத்துடன்

“எல்லாம் நல்லபடியா நடந்தா,” என்றான் சிவா

ராஜம் “கட்டாயம் நடக்கும் கவலைய விடு”  என்ற போது,

சிவா கோமதியைப் பார்த்து “கோமு நீ அக்காவீட்ல கார்டன் சுத்தி பாக்கணும்னு சொல்லிட்ருந்தல்ல, அவந்தியை கூட்டிட்டு போய் பாரு” என்றவன்  “ஆமா இப்ப கூட வீட்ல தொட்டா சிணுங்கி செடி வளர்க்கிறையா என்ன? என்றான் ராஜத்தை பார்த்து.

“உங்கக்காவே ஒரு தொட்டாசிணுங்கிதானே” என்றார் வேணுகோபால் இடைமறித்து.

“என்னை   நக்கலடிக்கிறதே உங்க வேலை, என்றவள், லெஃப்ட் சைட் கார்னரில் தொட்டில வச்சிருக்கேன், அவந்தி கூட்டிட்டு போய் காட்டு” என்றாள்.

அவர்கள் சென்றதை உறுதி செய்துகொண்டு சிவா சிறிது நேரம் கழித்து, “அப்பாகிட்ட சொல்லிட்டேனே தவிர எனக்கு கோமதியை நினைச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்றான்.

“ஏன் கோமதிக்கென்ன? என்றாள் ராஜம்.

“அதுக்கில்லை, இப்பல்லாம் என்கிட்டயே சிடுசிடுன்னு கோவிச்சுக்குறா, அப்பாகிட்டேயும் அதே மாதிரி கோவிச்சுக்கிட்டான்னா அவரால வெளில சொல்லவும் முடியாது, அதுனால” என்று நிறுத்தினான்.

“சேச்சே கோமதி தங்கமான பொண்ணு,” என்றாள் ராஜம்.

“இரு அவன் எதோ சொல்ல வரான், சொல்லிமுடிக்கட்டும்” என்றார் வேணுகோபால்.

“ஒண்ணுமில்லை மாமா, அக்கா வாரம் ஒரு முறை, ரெண்டு முறை அப்பாவை வந்து பாத்துட்டு போனால் அவருக்கும் ஆறுதலா இருக்கும், மத்தபடி அவருக்கு மனசில ஏதாவது வருத்தமிருந்தா பகிர்ந்துக்கவும் முடியும் அதான்”

“ச்சீ, அவ்வளவுதானா, நானே என்னமோ எதோன்னு பயந்துட்டேன், கண்டிப்பா வர்றேண்டா” என்று உறுதியளித்தாள் ராஜம்.

“ஓரு பேச்சுக்கு கூட எங்கிட்ட போகட்டுமான்னு கேக்கலைப்பா உங்கக்கா” என்றார் வேணுகோபால் பொய்யான கோபத்துடன்.

அவர்கள் சம்மதித்தது அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. பேசி முடிப்பதற்கும், அவந்தியும், கோமுவும் வருவதற்கும் சரியாக இருந்தது.

“பசிக்குது,  எல்லாரும் கிளம்புவோமா?” என்றார் வேணுகோபால்..

அனைவரும் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சென்றனர்.

வெயிலுக்கு இதமான எ.சி.யில் சாப்பிடும்போது, ராஜத்திற்கு சிறுவயதில் அனைவரும் ஒன்றாக சாப்பிடுவது நினைவுக்கு வந்தது.

“சிவா, அடுத்த முறை இதுமாதிரி வெளில வந்தா சுசீலாவையும் அப்பவையும் கூட  சேர்த்துக்கணும்” என்றாள்

“சுசீலா ஃபேமிலியோட, அப்பாவையும் சேர்த்து கூட்டிட்டு வருவோம் போதுமா?” என்றான் சிவா.

நீண்ட நாட்களுக்கு பிறகு, ராஜத்துடன் உணவருந்தியது சிவாவுக்கும் நிறைவாக இருந்தது.

பின்பு சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் விடைபெற்றனர்.

பைக்கில் சுசீலா வீட்டுக்கு செல்லும்போது, சிவா, “தொணதொணன்னு பேசிட்டே வருவ, இன்னைக்கி என்னவோ ரொம்ப சைலன்டா வர” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

“அதுவா, நீங்க உங்க ராஜம் அக்காகிட்ட என்னை பத்தி பேசும்போதே நான் வந்துட்டேன், நீங்க பேசினதை கேட்கும்போது கொஞ்சம் வருத்தமா இருந்தது அதான்,  ஆமா நான் எப்ப உங்ககிட்ட சிடு சிடுன்னு நடந்துகிட்டேன்,” என்றால் வருத்தம் தோய்ந்த குரலில்.

சிவா தான் முன்பே இது பற்றி அவளிடம் சொல்லாததற்கு வருந்தினான். பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி, பின்பு நீண்ட நாட்களாக தன் மனதிலிருந்த உறுத்தலை விளக்கினான் “ அதனால வாரம் ஒரு முறை, ராஜமும், சுசீலாவும் வந்தாங்கன்னா அப்பாவுக்கு ஆறுதலாக இருக்கும்னு நினைச்சேன், மத்தபடி உன் மேல எந்த குத்தமும் இல்லை” .

“அப்ப வாரம் ஒருமுறை வந்துட்டு போ ராஜம்னு  நேரவே கேட்கவேண்டியது தானே” என்றாள் கோமதி சமாதானமடையாமல்.

“கேக்கலாம் ஆனா அதை அவ  பெரிசா எடுத்துக்க மாட்டா, மருமகள் சரியா பாத்துப்பாளான்னு தெரியலைன்னா, கொஞ்சம் சீரியஸா எடுத்துகிட்டு கட்டாயம் வருவா அதுனாலதான், நீ தப்பா எடுத்துக்கமாட்டேன்னு   நினச்சேன். அவ்வளவுதான்”

இப்போது கொஞ்சம் சமாதானமடைந்த கோமதி, “அப்படின்னா சரி”

“அப்புறம் எனக்காக நீ இன்னொரு உதவி செய்யணும்” என்றான் பீடிகையுடன்.

“சொல்லுங்க, என்னால முடிஞ்சா கட்டாயம் செய்யறேன்” என்றாள்”.

“சுசீலாக்கா வீட்லயும் நீ அவங்க வீட்டு தோட்டத்தை சுத்திப் பாக்கறா மாதிரி  போகணும்” என்றான் அவளைப் பார்த்து.

சிறிது நேரம் யோசித்த கோமதி, “சுசீலாக்கா வீடு ஃப்ளாட் வீடுங்க, இது மாதிரி தனி வீடு கிடையாது, அவங்க வீட்டுக்கு போறதுக்குள்ள வேற ஏதாவது யோசிங்க” என்றாள் ஒரு மெல்லிய புன்னகை கலந்த ஆமோதிப்புடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *