இறுதி ஊர்வலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 9,662 
 
 

மருத்துவமனைக் கட்டிலில் கிழிந்த துணிபோல் கிடக்கும் நண்பன் குருவைப் பார்க்க பார்க்க வெற்றிவேலுக்கு சங்கடமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த குருவின் அம்மா எந்த உணர்ச்சியுமில்லாமல் மகனையே வெறித்துக் கொண்டிருந்தாள். அழுது அழுது அவள் கண்கள் வெளுத்துப் போயிருந்தன.

குரு எப்படி துறு துறுவென இருந்தவன்? நோயில்லை! நொடியில்லை!. விதியின் விளையாட்டு இப்படிக் கூடவா இருக்கும்? வெற்றிவேலுக்கு மீண்டும் அந்த ‘புதன்கிழமை’ சம்பவம் நினைவுக்கு வந்தது. குற்றஉணர்ச்சி குத்திக் கிழிந்தது.

‘எல்லாம் என்னாலதாம்மா!” நண்பனுடைய அம்மாவின் கைகளைக் பிடித்துக் கொண்டு உடைந்த குரலில் கூறினான். அவன் இப்படிச் சொல்வதும் ‘நீ என்னப்பா பண்ணுவ? எல்லாம் எந்தலைவிதி!” என்று பதிலுக்கு அந்த அம்மா சொல்வதும் நான்கு நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அலைபேசி அழைத்தது. மாமா பேசினார்.

‘வெற்றி! அக்காவுக்குப் பெண்குழந்தை பிறந்திருக்குடா! அத்தை உன்ன இங்க வரச் சொன்னாங்க”

‘மாமா! இங்க டாக்டர் இன்னும் வரல. பத்து மணிக்குத்தான் வருவாரு. வந்ததும் என்னன்னு விசாரிச்சுட்டு அப்புறம் வர்றேன்னு அம்மாகிட்ட சொல்லிடுங்க”

‘சீக்கிரம் வாடா!அக்கா உன்னைக் கேட்டுச்சு!”

இந்த மருத்துவமனையில் ஒரு சோகம். அந்த மருத்துவமனையில் ஒரு சந்தோஷம் பிறக்கப் போவது ஆண்குழந்தைதான்; என்று அக்கா சொல்ல பொம்பளைப்பிள்ளைதான் என மாமா சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அவர்தான் ஜெயித்திருக்கிறார். வெற்றிவேல் மட்டும் நல்ல மனநிலையில் இருந்திருந்தால் மாமாவோடு சேர்ந்து அக்காவை கலாய்த்திருப்பான்.

உயிர்நண்பன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவனுக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. குரு நல்லபடியாக பிழைத்துக் கொண்டால் போதும்! மனதில் அந்த ஒரு நினைவைத் தவிர வேறெதுவுமில்லை வெற்றிக்கு.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பதினோரு மணியளவில்தான் டாக்டர்கள் வந்தார்கள். குருவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த அட்டையில் ஏதோ எழுதினார்கள்.

‘டாக்டர்! இப்ப எப்படியிருக்கான்?”

‘பார்க்கலாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு புதிதாக ஒரு மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். மருந்து வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தான்.

‘அம்மா! அக்காவுக்குப் பெண் குழந்தைப் பிறந்திருக்குதாம்! நான் போய்ப் பாத்துட்டு உடனே வந்திடுறேன்” வெற்றி சொன்னதைக் கேட்டதும் குருவின் அம்மா தன் முகத்தில் சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தும் தோற்றுப் போனவளாக வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள். இவனை விட்டால் அவளுக்கு உதவிக்கு யாருமில்லை விஷயம் கேள்விப்பட்டும் கூட அவர்கள் சொந்தக்காரர்கள் யாரும் இன்னும் குருவை பார்க்க வரவில்லை.

‘நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கம்மா! நான் வர்றப்போ சாப்பாடு வாங்கிட்டு வந்துடுறேன். வர்றேம்மா!”

இந்த ஐந்து நாட்களும் வெற்றிவேல் வீட்டுக்குப் போகவேயில்லை. மருத்துவமனையிலேயே கழித்துவிட்டான். ‘அக்காவின் பிரசவநேரம் வீட்டில் எவ்வளவு வேலை இருக்கும்? என்ன செய்வது அவளுக்காவது அம்மா அப்பா வீட்டுக்காரர் மாமனார் மாமியார் என்று எல்லோரும் கூட இருக்கிறார்கள். குருவுக்கு தன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்?’ சமாதானப்பட்டுக் கொண்டான்.

மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த தன் இருசக்கர வாகனத்தைத் தேடினான். கண்ணாடிகள் உடைந்து பின் இருக்கைக் கிழிந்து தனியாக அடையாளம் தெரிந்தது அந்த வண்டி. வண்டியைப் பார்த்ததும் வெற்றிவேலின் ரத்த ஓட்டம் அதிகரித்தது. நெஞ்சு படபடத்தது. குருவோடு வெளியேச் சென்ற அந்த ‘புதன்கிழமை’ மத்தியானம் நினைவுக்கு வந்தது. வண்டியை உதைத்துக் கிளப்பினான். வண்டியின் சக்கரங்கள் முன்னோக்கிச் சுழல சுழல அவன் மனம் பின்னோக்கி ஓடியது.

போன புதன்கிழமை அப்படி விடிந்திருக்க வேண்டாம்! அன்று காந்தி ஜெயந்தி. கல்லூரி விடுமுறை காலையில் நிறைமாத கர்ப்பிணியான வெற்றியின் அக்காவை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அவன் அம்மா கூட்டிக் கொண்டுப் போயிருந்தாள். போன இடத்தில் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட அங்கேயே தங்கி விட்டார்கள். தகவல்; வந்ததும் வெற்றியின் பாட்டி சாப்பாடும் துணிமணிகளும் கொடுத்துவிட்டு வரும்படி தந்தனுப்பினாள். அவன் அப்படியே சென்றிருக்கலாம். போகும் வழியில் பக்கத்து தெருவில் இருக்கும் நண்பன் குருவின் வீட்டிற்குச் சென்றான். குரு வாசலில் மும்முரமாக துணி துவைத்துக் கொண்டிருந்தான்.

‘வாடா”

‘அக்காவ ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்க. சாப்பாடு குடுக்கறதுக்குப் போயிட்டிருக்கேன். கூட வாடா!

‘இல்ல வெற்றி! வீட்ல கொஞ்சம் வேலை இருக்குது. அம்மா தனியாச் செய்துகிட்டிருக்கும்”.

‘உடனே திரும்பிடலாம் வாடா!”

‘போயிட்டு வா தம்பி! நான் பாத்துக்கிறேன்” குருவின் அம்மா சொன்னாள். அவனால் மேலும் மறுக்க முடியவில்லை. சட்டையை மாட்டிக்; கொண்டு நண்பனின் பின்னால் ஏறி அமர்ந்தான். வண்டி கொஞ்ச தூரம் சென்றிருக்கும். ஓரிடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த அப்படி அப்படியே நின்றன. பட்டாசு சத்தம் காதைப் பிளந்தது. அந்த இடமே புகை மண்டலமாக இருந்தது.

‘என்னாச்சு?” பக்த்தில் நின்றிருந்த ஆட்டோக்காரரிடம் விசாரித்தார்கள்.

‘வேறென்ன யாராவது பணக்கார மனுஷன் மண்டையப் போட்டிருப்பான்” சலிப்போடு பதில் வந்தது.

‘நம்ம ஜனங்க அலாதியானவங்கடா! சாவ கூட எப்படி கொண்டாடுறாங்க பாரு? எவ்வளவு சந்தோஷமா ஒருத்தன வழி அனுப்பறாங்க!” எரிச்சலாகக் கூறினான் குரு. குருவுக்கு சமூக சிந்தனையும் பொறுப்புணர்ச்சியும் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. கல்லூரியிலும் சரி வெளியிலும் சரி அநியாயங்களை சகித்துக் கொள்ளவே மாட்டான்.

வாகனங்கள் மெல்ல நகர ஆரம்பித்தன. பட்டாசு கொளுத்தப்பட்ட அந்த இடம் வந்தது. சிதறிய காகிதங்கள் அந்த சாலையைப் போர்வை போல் மூடியிருந்தன. பட்டாசு சத்தம் ஓய்ந்தது பாண்டு வாத்திய சத்தம் காதைக் கிழித்தது. பக்கவாட்டுச் சாலையிலிருந்து அந்த இறுதி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. விலையுயர்ந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலத்துக்குப் பின்னால் ஊர்ந்து வந்து கொண்டிருந்தன. மீண்டும் ஒரு அரை மணி நேரத்திற்குப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

வெற்றி வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினான். இருவரும் இறங்கி நின்று கொண்டார்கள். ஊர்வலம் இவர்களுக்கு அருகில் வந்தது. மேளத்திற்கு ஒரு கூட்டம் குத்தாட்டம் போட்டுக் கொண்டு வந்தது. வெற்றி ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் கால்கள் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.

‘எவ்வளவு நேரம்டா? அவசர வேலையா எத்தனை பேர் போயிட்டிருப்பாங்க? பொறுப்பில்லாத ஜனங்க” குருவின் பேச்சுக்குப் பக்கதிலிருந்த பெட்டிக்கடைக்காரர் பதில் கூறினார்.

‘ஒண்ணுஞ் செய்யமுடியாது தம்பி!. எல்லாம் பணம் படுத்தற பாடு”.

கையிலுள்ள மாலைகளை வீதியெங்கும் பியத்துப் போட்டுக் கொண்டே வந்த ஊர்வலக்காரர்கள் சிலர் தெருமுனையில் இவர்கள் அருகில் வந்து நின்றார்கள். பிணத்தின் மேல் மாலை குவியலாகக் கிடந்தது. அதன் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் ஒவ்வொரு மாலையாக கழற்றி வீசிக் கொண்டே வந்தார்கள். அப்படி எறிந்த பெரிய மாலை ஒன்று சற்றுத்தள்ளி இரு சக்கர வாகனத்தில் காத்துக் கொண்டிருந்த ஒரு தம்பதியை நோக்கிப் பறந்தது. பின்னால் இருந்த அம்மா தன் மடியில் வைத்திருந்த குழந்தையின் மேல் பட்டுக் கீழே விழுந்தது. அந்தப் பெண்ணின் முகம் இருண்டது. பிணத்தின் மாலை ஒன்று தன் பிள்ளையின் மேல் பட்டு விட்டதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கோபத்தில் கையை நீட்டி ஏதோ கத்தினாள். யாரும் கண்டு கொள்ளவில்லை.

குருமூர்த்திக்கு நெஞ்சு கொதித்தது. ‘செத்தவன் எதாவது தொத்து வியாதில கூட செத்திருக்கலாம். அவன் மேலப் போட்ட மாலையை இப்படி மக்கள் நடக்கற பொது இடத்துல போடறது எவ்வளவு பெரிய காட்டு மிராண்டித்தனம். இருடா! இவனுகள நறுக்குன்னு நாலு வார்த்தைக் கேட்டுட்டு வர்றேன்”. வெகுண்டு கிளம்பினான்.

‘இது அரசியல் கூட்டம் குரு. வம்ப வில குடுத்து வாங்காதடா!” நண்பனை அடக்கினான் வெற்றி. உணர்ச்சி வேகத்தில் குரு சற்று சத்தமாகவே பேசியிருக்க வேண்டும். அவன் பேச்சு அருகில் நின்றிருந்த அந்த ஊர்வலக்காரர்கள் காதில் விழுந்து விட்டது.

கண்கள் சிவந்திருந்த முரட்டு ஆசாமி ஒருவன் இவர்களிடம் வந்தான்.

‘ஏய் தம்பி! ஊருக்கு புதுசா? என்னமோ காட்டுமிராண்டின்னு சொன்னியே? எங்க அண்ணனதானே சொன்ன?” வேண்டுமென்றே அவன் சீண்டுவது தெரிந்தது. வெற்றி அவனை சமாதானப் படுத்திவிட்டு குருவை இழுத்துக் கொண்டு வண்டியில் ஏற முயன்றான். அந்த ஆசாமி விடுவதாக இல்லை. வண்டியை மறித்தான். ‘நில்லுங்கடா!”. அதற்குள் அவர்கள் ஆட்கள் நாலைந்து பேர் கூடிவிட்டார்கள்.

‘டேய்! இவன் நம்ம அண்ணன தொத்து வியாதிக்காரன்னு சொல்றான்டா!”

‘ஏங்க! நான் செத்துப் போன உங்க அண்ணன குறை சொல்லல. ரோடுங்கறது பொதுச் சொத்து. அதை ஏன் இப்படி பாழாக்கறீங்கன்னுக் கேட்டேன் அவ்வளவுதான்” குரு தைரியமாகவே பேசினான். அடுத்த நிமிடம் காது வலிக்கும் அளவிற்கு ஒரு கெட்ட வார்த்தை வந்து விழுந்தது.
‘………….! யாருடா நீ? இவ்வளவு துள்ளுற? நீ என்ன வெளிநாட்டுக்காரனா?. இந்த ஊர்ல சாவு ஊர்வலம்னா இப்படித்தான் இருக்கும்னு தெரியாதோ?அதுவும் எங்க அண்ணன் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா? எங்கக்கிட்டேயே நீ சட்டம் பேசற?” என்றபடி குருவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான். குருவும் விடுவதாக இல்லை.

‘பெரிய மனுஷன்னா யாரு தெரியுமா? வாழறப்போ நல்லபடியா வாழணும். அதனால அவன் தோளுக்கு பூமாலைங்க விழணும். இல்லாத தப்பெல்லாம் பண்ணிட்டு செத்ததுக்கு அப்புறம் இப்படி போறவழிக்குப் பூப் போடக்கூடாது.”

நிலைமை விபரீதமாக மாறுவது வெற்றிக்கு புரிந்தது. ‘டேய் குரு அமைதியா வாடா? அண்ணா மன்னிச்சிடுங்க” அந்த கூட்டத்தை நோக்கிக் கும்பிட்டான். குருமூர்த்தியின் பேச்சில் கொதித்துப் போயிருந்த அவர்கள் வெற்றியை நெம்பித் தள்ளிவிட்டு குருவை சூழ்ந்து கொண்டார்கள். குரு தன் பேச்சிலிருந்த நியாயத்தை விடாமல் கத்திக் கொண்டிருந்தான். எதையும் காதில் வாங்காத அந்த நபர்கள் தங்கள் அண்ணனை அவமானப் படுத்தி விட்டதற்காக ஆக்ரோஷமாக அவனை தாக்கத் தயாரானர்கள்.

வெற்றிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சற்றுத் தள்ளி பளீச்சென்று கரை வேட்டியில் சிலர் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கட்சி பெரியவர்களாக இருக்கக் கூடும். வெற்றி அவர்களிடம் ஓடினான். நிலமையைச் சொல்லி தகராறை தீர்த்து வைக்கும்படி கேட்டு மன்றாடினான். அவர்கள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தான். வந்தவனுக்கு பேரதிர்ச்சி. அந்த ஆசாமிகள் குருவை அடித்து துவைத்து கீழே போட்டு விட்டுப் போயிருந்தார்கள். ரத்தக்களரியில் முனகிக் கொண்டிருந்தான். அருகில் சில விறகுக் கட்டைகள் கிடந்தன. சமாதானப் படுத்த வந்த பெரிய மனிதர்கள் இதைப் பார்த்ததும் ‘வாயைப் வச்சுகிட்டு சும்மா இல்லன்னா இப்படித்தான். சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போய் சேருப்பா!” என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். செத்தவர் சிரித்த முகத்தோடு போய்க் கொண்டிருந்தார்.

ஊர்வலம் மொத்தமும் கடந்ததும் தான் வெற்றிவேலுக்கு உதவிக்கு வந்தார்கள் சிலர்.

‘அந்த விறகு கடையிலிருந்து ஆளுக்கொண்ணு உருவிட்டு வந்துடானுங்க. இப்படி பொளந்து கட்டிட்டாங்களே பாவிங்க”

‘இவங்களையெல்லாம் சும்மாவிடக் கூடாது”

‘உடனே டாக்டர் கிட்ட தூக்கிட்டுப் போங்க தம்பி!”

அங்கிருந்தவர்கள் ‘பொறுப்போடு’ பேசினார்கள். ஒரு ஆட்டோக்காரர் உதவிக்கு வந்தார். அவர் உதவியோடு வெற்றி நண்பனை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டான். ‘தம்பி! அங்க பாருங்க உங்க வண்டியை அடிச்சு நொறுக்கியிருக்காங்க” ஆரம்பத்தில் குருவோடு பேசிக் கொண்டிருந்த அந்த பெட்டிக்கடைக்காரர் ஆட்டோ அருகில் ஓடிவந்து சொன்னார்.

‘இருக்கட்டும் அப்புறம் பார்த்துக்கறேன் கொஞ்சத் தள்ளி மட்டும் நிறுத்திக்குங்க” முன்பின் தெரியாத அவரிடம் வண்டியின் சாவியைக் கொடுத்தான்.

‘சீக்கிரம் போங்க!” வேகமெடுத்த ஆட்டோ மருத்துவமனை வாசலில் நின்றது. அங்கு ஏகப்பட்ட நடைமுறைகள் எல்லாம் முடிந்தபின் தான் முதலுதவியே கொடுத்தார்கள். மருத்துவர் பரிசோதித்தார்.

‘போலீஸீக்குச் சொல்லியாச்சா?”

‘ஆச்சு சார்”

‘எக்ஸ்ரேயும் ஸ்கேனும் எடுத்துப் பார்க்கணும். அப்புறம்தான் சொல்ல முடியும்!”

குருமூர்த்தியின் அம்மாவுக்கும் தன்னுடைய வீட்டிற்கும் நடந்ததை தெரிவித்து விட்டு எக்ஸ்ரே ரத்தவங்கி என்று ஒற்றை ஆளாக சுற்றித் திரிந்தான். அழுது கொண்டே வந்த குருவின் அம்மாவை தேற்றி உட்கார வைத்தான். வெற்றியின் அப்பாவும் அங்கு வந்து விசாரித்தார்.

‘குருவுக்கு அவன் அம்மாவத் தவிர யாருமே கிடையாது. டாக்டர் இன்னும் எதுவும் சொல்லலை. அவன் கண் முழிக்கிற வரைக்கும் நான் இங்க இருந்தாகணும். அம்மாக்கிட்ட சொல்லிடுங்க”. அப்பாவிடம் சொல்லி விட்டான். அவர் மறுப்பு எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

‘ஏ ஏ … ஏய்! நீ சாகறத்துக்கு என் வண்டிதானா கிடைச்சுது?” என்ற குரல் வெற்றியை நினைவுகளிலிருந்து நிஜத்துக்கு இழுத்து வந்து போட்டது. சுதாரித்துக் கொண்டவன் மன்னிப்புக் கேட்டு விட்டு நகர்ந்தான். மகப்பேறு மருத்துவமனையில் இவனைக் கண்டதும் அம்மாவுக்கும் அக்காவுக்கும் மகிழ்ச்சி.

‘வாடா வெற்றி! எவ்வளவு நேரம் கழிச்சு வந்து உன் மருமகளைப் பார்க்குற?”

‘இல்லக்கா! குரு . . . . . .

‘எப்படியிருக்கான்?’

‘ம.; தலையில மட்டும் பத்து தையல். கால்லயும் நல்ல அடி’

‘உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?”

’ஆபத்தான கட்டத்த தாண்டிட்டான்னு நர்சுதான் சொல்லிச்சு. டாக்டர் இன்னும் ஒன்னும் சொல்லல. கண்ணே முழிக்கலயே! மயக்கத்துலதான் இருக்கான்”

நண்பனைத் நினைத்து வெற்றி ரொம்பவே கவலைப்படுகிறான் என்று உணர்ந்த அம்மா குழந்தையைத் தூக்கி அவன் மடியில் வைத்தாள். கை கால்களை ஆட்டிக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் இளஞ்சிவப்பு விரல்களை வருடிக் கொடுத்தான்.

‘அன்னைக்கு மட்டும் அவன் எங்கூட வராம இருந்திருந்தா அவனுக்கு இந்த நிலமை வந்திருக்காது. எல்லாம் என்னால தான். அம்மா! நீ சாமியை எப்படி வேண்டுவியோ தெரியாது! என் ‡ப்ரண்டு நல்லபடியா குணமாகணும்” அம்மாவின் பக்தியின் மேல் வெற்றிக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை. அவள் எது வேண்டினாலும் அது நடக்கும்.

‘வேண்டியிருக்கேன்டா! அந்த புள்ள மீண்டு வரணும். எம் புள்ள முகத்துல சிரிப்பை பார்க்கணும்னு நம்ம குலதெய்வத்துக்கு வேண்டியிருக்கேன். நல்லதே நடக்கும்”. அம்மா ஆறுதலாகப் பேசினாள்.

சாப்பாடு வாங்கிக் கொண்டு; அப்பாவும் மாமாவும் அங்கு வந்து சேர்ந்தார்கள். குருவை பற்றி விசாரித்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது வெற்றியின் அலைபேசி அழைத்தது. குருவின் அம்மாதான்.

‘சொல்லுங்கம்மா! ”

“வெற்றி! குரு கண்ணு முழிச்சிட்டாம்பா. இப்பத்தான். மெதுவா பேசறான். உன்னதான் முதல்ல கேட்டான்”.

அம்மாவின் குரலில் உற்சாகம் தெரிந்தது. வெற்றிக்கு ‘அப்பாடா!’ என்றிருந்தது. எல்லோரிடமும் விஷயத்தை சொல்லிவிட்டு உடனே கிளம்பினான்.

அறை வாசலில் இவனைக் கண்டதும் ‘வா’! என்பதாக தலையசைத்தான் குரு. அருகில் சென்றதும் இவன் கைகளைப் பற்றிக் கொண்டான். வெற்றிக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி. அடுத்து வந்த இரு தினங்களில் குருமூர்த்தி கொஞ்சம் தேறினான். எழுந்து உட்கார ஆரம்பித்தான். ஊன்றுகோல் உதவியோடு மெல்ல நடந்துப் பார்த்தான்.

ஏறத்தாழ பதினோரு நாட்கள் மருத்துமனை வாசம் முடிந்து வீடு திரும்பத் தயாரானார்கள். மொத்தமாக ஒரு லட்சம் செலவாகியிருந்தது. குருமூர்த்தியின் அம்மா காதிலும் கழுத்திலும் பித்தளை மின்னியது. வெற்றி தன் பங்கிற்கு பணம் புரட்டிக் கொடுத்திருந்தான். வாசலில் மூட்டை முடிச்சுகளோடு ஏற்பாடு செய்திருந்த டாக்சிக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். நண்பனின் தோளை ஆதரவாகப் பற்றியபடி நின்று கொண்டிருந்த வெற்றிக்கு மருத்துமனை சுற்றுச் சுவரில் ஒட்டியிருந்த அந்த விளம்பர சுவரொட்டி கண்களில் பட்டது.

வள்ளல் ‘வெள்ளை’ முனிசாமி பத்தாம் நாள் நினைவு அஞ்சலி என்று ஒருவரின் புகைப்படத்தோடு இருந்த அந்த சுவரொட்டியை குருவுக்குச் சுட்டிக் காட்டினான்.

‘யாருன்னு தெரியுமாடா?”

‘ம்ஹ_ம்”

‘இந்தாளோட இறுதி ஊர்வலந்தான் உன்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்குது. அன்னைக்கு நாம பிரச்சனையில மாட்டினப்போ ‘ஜம்’முன்னு சுடுகாட்டுக்குப் போயிட்டிருந்தது இந்த மனுசன்தானாம்! விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்!”

குருவின் முகம் மாறுவதை கவனித்தவன்

‘டேய் குரு! இந்த ஆளு பேருக்கு முன்னால ‘பட்டத்தைப்’ பார்த்தியா? வள்ளல்!. பாடையில போகும்போது கூட நம்மகிட்டயிருந்து கொஞ்ச நஞ்சமில்ல லட்சக்கணக்குல பிடுங்கிட்டுப் போயிருக்காரு. நெஜமாவே பெரிய வள்ளல்தான் இல்ல?”

வெற்றியின் பேச்சிலிருந்த நகைச்சுவைக்கு இறுக்கம் மாறி சிரிக்கத் தொடங்கினான் குருமூர்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *