அவன் பயப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றும் பயந்து கொண்டே இருந்தான் அதனால் இன்றும் பயப்படுகிறான். அவனிற்கு பயம் மேசை மீதுள்ள அந்த இரண்டு கவர்களலாலும், காரணம், அந்த இரண்டு கவர்களின் கீழ் உள்ள காகிதங்கள் கூறவிருக்கும் விடயங்கள் யாவும் அவன் அறிந்ததே, ஒன்று அவனை கையெழுத்து போட விடாமல் இருப்பதற்காக, மற்றையது அதற்கு நேர் எதிர், கையெழுத்திட வைப்பதற்கு. அவனிடம் இருந்த சகல தைரியத்தையும் ஒன்று திரட்டி அவற்றை வெளியெடுத்து வாசித்தான்,
1வதுமடல்: அப்பா, நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் ஆனால் நானோ நலமாக இல்லை. உங்களது விவாகரத்து விகாரம் பற்றி கேள்விப்பட்டேன். உங்கள் முடிவின் முன், என் கருத்துகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் செவிசாயுங்கள்.
2 வதுமடல்: அவனீஷ், எழுதுவது அனுஷுலா. நீ விவாகரத்து பத்திரங்களை நிராகரிக்க முன் நான் சில விடயங்களை முன் வைக்க விரும்புகிறேன், அதன் பின் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை, நீ ஒரு எழுத்தாளனல்லவா ? அரைகுறையாக சொன்னாலும் முழு விடயத்தையும் புரிந்திடுவாய் என நம்புகிறேன்.
1 வதுமடல்: என் அடி மனதில் உங்கள் மீது நான் அளவில்லாத அன்பு வைத்துள்ளேன். அம்மா கூறியது போல் நீங்கள் ஒரு கோழையாக, ஒரு நிறைவற்ற மனிதனாக இருந்தாலும் எனக்கேதும் கவலை இல்லை. சிறுபராயம் முதல் நீங்கள் எழுதிய வசனங்கள் தான் என்னை இந்த லோ காலேஜில் நிறுத்தியது, நீங்கள் எழுதிய காதல் தான் என் உள்ளத்தை புரட்டி போட்டது, நீங்கள் எழுதிய அன்புதான் உங்கள் மீது நிலைத்துள்ளது. நீங்கள் யாராயினும் பரவாயில்லை என்னைப் பொருத்தமட்டில் நீங்கள்தான் இவ்வுலகிலேயே சிறந்த தந்தை.
2 வதுமடல்: காலேஜ் காலங்களில் நீ எழுதிய புத்தகங்கள் தான் என்னை உன் மீது காதல் கொள்ள வைத்தது மற்றபடி வேறொன்றுமல்ல ஜஸ்ட் ஹோர்மோன்ஸ் யூ ஸீ. நான் கடந்த 18 வருடங்களாக உன்னை சகிப்துக் கொண்டு வாழ்ந்தேன் என்றால் அதற்கு ஆதிரா மாத்திரமே காரணமாவாள்.
1 வதுமடல்: அம்மாவா, அப்பாவா? என்ற நிலையிலுள்ளேன் நான். அம்மாவிடம் பேசிய போது அவா விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை ஆனால் அதற்காக நீங்கள் என்னை விட்டு விலக கூடாது. நீங்கள் நான் ஒரு லோயர் ஆகுவதை பார்க்க வேண்டும். நீங்கள் நான் சரலை கல்யாணம் செய்வதை பார்க்க வேண்டும். நான் என் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்வதை பார்த்து ஆசிர்வதிக்க வேண்டும், இன்னும் எத்தனை கனாக்கள்?, அம்மா கடைசிவரை இது எவற்றையும் அனுமதிக்கமாட்டார். சரலிற்கு கூட அம்மாவின் முடிவுகள் பிடிக்கவில்லை. நீங்கள் தானே எங்கள் காதலை ஆதரித்தீர்கள் நீங்கள் மட்டும் இல்லையென்றால் அம்மா கடைசிவரை சரலை ஏற்க மறுத்து விடுவா. நீங்கள் விலக வேண்டியது பற்றாத குறையாக உங்களால் ஏற்படுத்தப்படும் வெற்றிடத்தை நிரப்ப வேறு எவனோவாம். என்னால் உங்கள் இடத்தில் வேறு எவரையும் என் இறுதி நாள் கனவில் கூட கற்பனை செய்ய முடியாது.
அவனீஷின் கண்ணீர் துளிகள் அக்காகிதத்தை நனைத்தவாரு வழுக்கிச் சென்றன.
2 வதுமடல்: எங்கள் என் மகளின் வாழ்க்கையிலிருந்து உன்னை விலக்க முயல்கிறேன் அவனீஷ். ஏனென்றால், அவளும் நாளைய தினம் உன்னை போல் ஒருவனுக்கு கை காட்டினால் அவளது வாழ்க்கையும் சீரழிந்து விடும். உனக்கு பதில் உன்னை விட பல மடங்கு தைரியசாலியாய் ஒருத்தனை தான் தேர்ந்தெடுத்துள்ளேன். என்னை நம்பு, நான் ஆதிராவிற்கு என்றுமே சிறந்ததை தான் தேர்ந்தெடுப்பேன்.
1 வதுமடல்: சரலை மணம் முடிக்கும் வரை என் பெயரிலிருந்து உங்கள் பெயரை அகற்றி இன்னொருவரின் பெயராக மாற்றுவதில் எனக்கு சம்மதமில்லை. தயவு செய்து அந்த பத்திரங்களை கிழித்து எறிந்து விடுங்கள். என்றென்றும் உங்கள் அன்பு மகள், ஆதிரா.
2 வதுமடல்: நீ ஆதிராவின் வாழ்கை சிறப்பாக அமைய வேண்டுமென விரும்பினால் நாளை கோர்ட்டில் உன் சிக்னேட்யரோட விவாகரத்து பத்திரங்களை ஒப்படைத்து விட்டு. உன் நண்பி, அனுஷுலா.
வாசித்து முடித்து விட்டு இரண்டையும் மேசை மீது வைத்து விட்டு சிந்திக்க தொடங்கினான், ஒரு சில நிமிட சிந்தனைகளின் பின், அவன் உதிரம் அந்த இரு கவர்கள் மீதும் சிதறிக் கிடந்தது.
ஆசிரியர் குறிப்பு:
மேலதிகமாக- கதையின் கதாபாத்திரத்திரங்களின் பெயர்களின் அர்தங்களிடையேயான விளக்கம்,
அம்மா = சூரியன்
அப்பா = பூமி
மகள் = சந்திரன்
சரலை = நேர்கோட்டு/நேர்கோட்டு பாதை
பூமியை அழிக்கும் சூரியனிற்கும், பூமியிற்கும் இடையில் தவிக்கும் நிலா. பூமி அற்று போனதும் நிலா சூரியனின் பாதையிலிருந்து விடுபட்டு நேர்கோட்டு பாதையில் பயணிக்கும்.