இருவேறு பார்வைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 4, 2013
பார்வையிட்டோர்: 10,718 
 
 

இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் ஹொஸ்பிட்டலைவிட்டு நான் திரும்பப் போவதில்லை.

மூன்றாவது தடவை ஒப்பரேஷன்.

முதன்முதலில் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது, ‘Fistula’ என்று அந்த இளம் டாக்டர் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். பென்குவின் போன்ற உதடுகளைக் கொண்ட அந்த பிலிப்பீன்ஸ் நாட்டுப்பெண், ஏதோ தனது பாஷையில் சொல்கின்றாளாக்கும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சிரிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்று பின்னர் புரியலாயிற்று. பயந்து விடாதீர்கள். ‘பிஸ்ரியூலா’ என்பது ஒரு வருத்தத்தின் பெயர். இந்தமாதிரி ஒரு வருத்தம் எமது நாடுகளில் வந்திருந்தால், அதைக் குணப்படுத்த எடுக்கும் செலவை ஈடு செய்ய வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டியிருந்திருக்கும். இங்கு அவுஸ்திரேலியாவில் எல்லாமே இலவசம். வருத்தங்களும் இலவசம். அது எனக்கு எப்படி வந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அது ஒரு சிறு சரித்திரம்.

ஒருமுறை எனது ஆசனவாயிலுக்கு அண்மையாக ஒரு கட்டி வந்தது. சாதாரணமாகத் தோன்றி மறையும் கட்டி போலத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. நாளடைவில் அது பெருத்து ஒரு குண்டுமணி போலாகிவிடது. நாட்டுமருந்தான ‘கறுப்புக்கழியை’த் தேடி கடை கடையாக அலைந்தேன். வெள்ளைக்காரன்ரை கடையிலை அது கிடைக்காது என அறிந்ததும், வியட்நாம் ‘சைனீஸ்’ கடைகளை நோக்கி நடையைத் திருப்பினேன். தென்படும் குட்டிப்போத்தல்கள் ரின்களை ஆராய்ச்சி செய்து மருந்து ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். பூசி சிலநாட்களில் கட்டி உடைந்தது. மாறி வருவது போன்று மாயை காட்டி, பின்னர் மீண்டும் உருக் கொண்டது. நாளாக அது ‘நாட்பட்ட புண்’ என்று பெயர் எடுத்துகொண்டது. வெட்கத்தில் டாக்டருக்குக் காட்டாமல் இருந்தது பெரியதொரு சங்கடத்தை உருவாக்கிவிட்டது. இப்போது திறந்தே கிடக்கும் புத்தகம் போலாகிவிட்டேன்.

புலம்பெயர்ந்து வந்த காலம். அப்பொழுதெல்லாம் வேலைக்கு மனுப் போட்டால் நேர்முகப் பரீட்சைக்குக் கூப்பிடுவதில்லை. அதற்கான பதிலும் கிடைப்பதில்லை. ரெலிபோன் செய்து விசாரித்த போது சில விஷயங்கள் புரிந்தன.

“நீங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சிறிது காலம் வேலை செய்திருக்கவேண்டும். உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலை செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்”

“முன் அனுபவம் என்பது ஏதாவது ஒரு வேலை சம்பந்தமானது. அது சுப்பர்மார்க்கெட்டாகவோ அல்லது ஏதாவதொரு தொழிற்சாலையாகவோ இருக்கலாம். நீங்கள் உங்களது சொந்தநாட்டில் செய்த வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் பிறகுதான் உங்களை நேர்முகத் தேர்வுக்குக் கூப்பிடுவோம்” என்று விளக்கம் தந்தார்கள்.

முதலில் ஒரு சுப்பர்மார்க்கெட் சென்று விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில் எனக்கு மேலும் வியப்பைத் தந்தது.
“உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் ஏதாவது வேலை செய்த முன் அனுபவம் உண்டா? சுப்பர்மார்க்கெட் என்று இல்லை. ஏதாவது … யோசித்துப் பாருங்கள்” அதே உரையாடலைத் திருப்பிப் போட்டார்கள். அவர்கள் உரையாடுவதில் கில்லாடிகள். சொன்னதையே நோகாமல் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். எங்கு சென்றாலும், “அவுஸ்திரேலியாவில் …” என்று ஆரம்பித்து விடுவார்கள்.

யார் அந்த அனுபவத்தை எனக்குத் தந்து என்னை அசர வைக்கப் போகின்றார்கள்?

ஒரு வேலையைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் அத்தனையையும் செயற்படுத்தினேன். விடாமுயற்சி. தன்னம்பிக்கை. தீவிர தேடுதல். Yellow Pagesஐப் பார்த்து எண்ணற்ற இடங்களுக்கு Resumeயுடன் Covering letterஐயும் இணைத்து அனுப்பினேன். கடித உறையின் மூலையில் சந்தணம் குங்குமமும் பூசத் தவறவில்லை.

கை மேல் பலன் கிட்டியது. சண்சைன் என்ற இடத்திலிருந்த ‘டயமண்ட் பிறஸ்’ என்னை வரவேற்றது. பாருங்கள் பெயர்களை – சண்சைன்(Sunshine), டயமண்ட் பிறஸ்(Diamond Press). ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வேலை! – free wayஇல் வாகனங்கள் விரைந்து செல்லும் வேகம். ‘அந்த’ வேகத்தில் சீனத்துப்பெண்கள், வியட்நாமியப்பெண்கள் எல்லாம் என்னமாய் வேலை செய்கின்றார்கள்! ஒருவேளை அவர்கள் தாய்நாட்டில் இருந்த போது இதைவிட இன்னமும் கடினமாக உழைத்திருப்பார்களோ?

அங்குதான் எனக்கு இந்த வியாதி ஆரம்பமாகியிருக்க வேண்டும். எந்தவொரு சரீரத் தொழில்களும் செய்து பழக்கப்படாத எனக்கு தொடர்ச்சியாக உடம்பை வருத்தியதில் உருவாகியிருக்கலாம். ஆபரேஷன் செய்யப் போனபோது பெரியதொரு விளக்கம் காத்திருந்தது. Anal Glands எனப்படும் சுரப்பிகள் அடைபடும்போது, அதிலிருந்து வெளிப்படும் வழவழப்பான நீர் வெளிப்படாமல் கிருமிகள் பாதிப்பதால் இந்த சீழ்க்கட்டிகள் ஏற்படுகின்றன. அந்தக் கட்டிகள் வெடித்த உடனே பெளத்திரமாக (Fistula) மாறிவிடும். அந்த வெடிப்பு உட்புறமாக வெடித்தால் complicated Fistula என்றும் வெளிப்புறமாக வெடித்தால் Low Fistula என்றும் சொன்னார்கள். நல்லவேளை எனக்கு வெளிப்புறமாக வெடிப்பு நிகழ்ந்திருந்தது. சத்திரசிகிச்சை மிகவும் எளிமையானது என்று வெளிநோயாளர் பிரிவு டாக்டர் சொல்லியிருந்தார். வெளிநோயாளர் பிரிவில் இருக்கும் டாக்டர்கள் சர்ஜரி (surgery) செய்வதில்லை. அவர்கள் consultation செய்யும் டாக்டர்கள். வெளிநோயாளர் பிரிவில் இருந்த டாக்டரை இரண்டு தடவைகள் சந்தித்து ஆலோசனைகள் பெற்றிருந்தேன். இருந்தும் எனக்கு ஆபரேஷன் செய்யவிருக்கும் டாக்டரைச் சந்திக்க முடியவில்லை. அவர் ஹொஸ்பிற்றலில் மிகவும் பிரபலம் ஆனவர். ஓய்வின்றி வேலை செய்பவர். 65 வயதைத் தாண்டிய அனுபவசாலி. அவர் செய்த ஆபரேஷன்களில் தொண்ணூறு வீதத்திற்கும் மேல் சக்ஸஸ் என்றார்கள்.

எனக்கு ஒரு புதன்கிழமை சத்திரசிகிச்சை. ஏழு மணிக்கு வைத்தியசாலையில் நிற்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்டோம். உச்சக்கட்ட குளிர்காலம். தெருக்கள் எல்லாம் பனிப்புகாரில் மூழ்கியிருந்தன.

படிவங்களைப் பூர்த்தி செய்தோம். ‘இரவு 12 மணிக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லை’ என்பதை உறுதி செய்து கொண்டார்கள். என்னதான் ஏழுமணிக்கு வரச் சொன்னாலும் எல்லாமே ஒன்பது மணிக்குப் பிறகுதான் ஆரம்பமாகியது. என்னைப்போல சிலர் முன்பே வந்திருந்தாலும், பலர் அனுபவப்பட்டவர்களாகவே இருந்தார்கள். மனைவி கவுண்டரில் இருந்த பெண்ணிடம் டாக்டரின் திறமை பற்றி மீண்டும் விசாரித்தாள். அவள் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டி ‘சுப்பர்’ என்றாள். பின்னர் நானும் மனைவியும் கதிரைகளில் அமர்ந்து ரெலிவிஷன் பார்க்கத் தொடங்கினோம். ரெலிவிஷனில் குழந்தைகளின் கார்ட்டூன் போய்க்கொண்டிருந்தது.

தீய சக்திகள் எம்மை நெருங்காமல் இருக்க, மந்திரம் ஓதி நூல் கட்டுவது போல – என் பெயர், பிறந்த திகதி, பதிவு எண் எல்லாம் கொண்ட ஒரு பட்டி என் மணிக்கட்டில் கட்டப்பட்டது. காதிற்குள் வெப்பமானி புகுந்து உடலின் உஷ்ணத்தைக் காட்டியது. எடை பார்த்து, எனிமா தந்தார்கள். ஆடை களைந்து அவர்கள் தந்த வெள்ளை ஆடைக்குள் புகுந்து கொண்டேன். நான் பயந்தது எல்லாம் அனித்தீசியாவுக்குத்தான். அனித்தீசியாவிற்குப் பிறகு எனக்கு இந்த வெள்ளை ஆடைக்கும் பயம்.
“மனைவிக்கு கை காட்டிவிட்டு, யம் பண்ணி பெட்டில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றார் ஸ்ரெச்சரை உருட்டி வந்தவர்.

அனித்தீசியா தரும் மனிதரின் முகம் எந்த நேரமும் சிரித்தபடி இருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் தனது பெயரை வாயிற்குள் முணுமுணுத்தபோது ‘சித்ர புத்ர’ என்று எனக்குக் கேட்டது. சேர்ஜரி டாக்டர் யமனாக இருக்கும்பட்சத்தில் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும். Dr. Death (Jayant Patel) என்றொருவர் குவீன்ஸ்லண்டைக் கலக்கிவிட்டுப் போன பின்னர், எந்த சேர்ஜரி டாக்டரைப் பார்த்தாலும் ஒரு பயம் வரத்தான் செய்கிறது. Dr. Death ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏராளமான நோயாளிகளை வெட்டிக்கொத்தி மேலுலகம் அனுப்பியவர். குவீனஸ் புத்தகத்தில் அவர் பெயர் வந்ததா என்று தெரியவில்லை. சித்ரபுத்ர, எனது பூர்வீகம் இன்ன பிற அவுஸ்திரேலிய நடப்புக்களை விசாரித்தவாறே தனது காரியத்தைத் தொடங்கினார். அவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது நேரம் பத்துமணியைத் தாண்டியிருந்தது. மீண்டும் விழித்துக் கொண்டபோது மணி பிற்பகல் ஒன்றரை. “Can you hear me? Can you hear me? What is your name?” என்று ஒருவர் என்னைத் தட்டி சளைக்காமல் கேட்டபடி இருந்தார். அனித்தீசியா மயக்கத்தை அவர் சோதிக்கின்றார். சோதனைக்கு ஒரு அளவு வேண்டாம்…! என்னுடைய பெயர் தெரியாமலா இவ்வளவு நேரமும் எனக்கு ஒப்பரேஷன் செய்தார்கள்?

வைத்தியசாலையில் இருந்த நாள் முழுவதும் அங்கிருந்த அழகிய •பிஷியோதிரபிஸ்ட் பெண்கள் அனைவரும் முரட்டுப்பெண்கள் போல நடந்து கொண்டார்கள்.

வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள், பார்பரா கிறகாம் (Barbara Graham) என்ற டிஸ்றிக் நேர்ஸ் (district nurse) ஒரு தூக்குப்பெட்டியுடன் வீட்டிற்கு வந்தார். அவரைப்பற்றி ஒரு ‘வைர’ வரியில் சொல்வதென்றால், ‘அவர் ஒரு புளோரிங் நைட்டிங்கேல்.’ தன்னுடைய பரம்பரை மருத்துவத்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்லுவார். மிகவும் அழகானவர். அவளின் மூக்கு சற்றுத் தூக்கலாக இருக்கும். நோயாளிகளைக் கண்ட மாத்திரத்தில் அவரின் மேலுதடு தானாக எழுந்து மூக்கின் துவாரங்களை மூடிக்கொள்ளும். ஆதியில் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு கழுத்து நீண்டதற்கு கூர்ப்புதான் காரணம் என்றால், பார்பராவின் மூக்கு மேல் நோக்கிச் சரிந்து கொண்டு செல்வதற்கும் கூர்ப்புதான் காரணம் என்பேன்.

பார்பராவிற்கு ஈடாக என் மனைவியையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. தினமும் அவர் வருவதற்கு முன்னர் salt bath எடுக்க வேண்டும். இருந்தும் இருவரது பணிவிடைகளும் பலன் தரவில்லை. மூன்றாவது வாரம் அடைகாத்திருக்கும் முட்டை ஓட்டை, முட்டி மோதும் குஞ்சு போல வெளித் தள்ளியது பெளத்திரம்.

முதாவது ஒப்பரேஷன் முடிந்து, லீவில் மூன்று வாரங்கள் வெற்றிகரமாக நின்றுவிட்டு மீண்டும் வேலைக்குப் போனேன். மேலுக்கு வரும்படி மனேஜர் சைகை செய்தார். அவரது அறை இரண்டாவது மாடியின் தொங்கலில் இருந்தது. நடப்பதற்குக் கஸ்டப்பட்டு மேலேறுவதைக் கண்ட டேவிட் “நில்லும்… நில்லும்” என்று சத்தமிட்டபடி கீழிறங்கி வந்தார். வந்தவர் என்னுடைய வருத்தத்தைப் பற்றிக் கேட்கவில்லை; சுகத்தை விசாரிக்கவில்லை.
“நீர் இலங்கையில் இருந்த போது என்ன வேலை செய்தீர்?” என்றார். மூன்றுவாரங்களாக அவர் இந்தக் கேள்வியை மனதில் தேக்கி வைத்திருக்க வேண்டும். கேள்வியின் தொனி அப்படியிருந்தது.
“ஆர்கிடெக்ட் (Architect) ஆக இருந்தேன்” என்றேன் நான்.
“அப்ப இங்கு என்ன செய்கின்றீர்?”
“அவுஸ்திரேலியா அனுபவம் தேடுகின்றேன்.”
“நான் உமக்கு reference letter தருகின்றேன். பொருத்தமான வேலைக்கு அப்ளை பண்ணும்.”
அடுத்தநாள் வேலைக்குப் போன எனக்கு அதிசயம். Reference letter உடன் வேலையிலும் சிறு மாற்றம் காத்திருந்தது. கணக்கியல் பிரிவில் ஒரு புது வேலை.

இரண்டுமாத காலங்களின் பின்பு மீண்டும் வைத்தியசாலை. மீண்டும் வெள்ளை ஆடை. அதே டாக்டர்கள், நேர்ஸ்மார். இப்பொழுதெல்லாம் இரத்தம் குத்தி எடுக்கும்போது பயம் வருவதில்லை. இறைக்கின்ற கிணறுதானே ஊறும். என்னதான் மனதளவில் தைரியம் இருந்தாலும் உடல் வலுவிழந்துவிட்டது. காலை பத்து மணிக்கு ‘ஜம்’ பண்ணி ஸ்ரெச்சரில் ஏறிய நான் கண் விழிக்கும் போது மாலை ஐந்து மணியாகி விட்டது.

மறுபடியும் பார்பரா வரத் தொடங்கினார். இந்தப்புனிதமான தொழிலுக்கு முகம் சுழிக்காத புன்னகை கொண்ட பார்பரா மிகவும் பொருத்தமானவர். வந்த முதல்நாள் றெஸ்ஸிங் செய்யும் போது கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். “இதென்ன இது? ஒரு வால் ஒன்று நீண்டு கொண்டு நிற்கின்றது? இத்தனைகால சர்வீசில் இப்படி ஒரு வால் முளைத்து நான் பார்த்ததில்லை” என்றார் பார்பரா. அன்று முழுவதும் அவர் சிரிப்பு அடங்கவில்லை. தடவிப் பார்த்ததில் பிளாஸ்ரிக் போன்றதொரு நாடா உடம்பிற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. “மறந்து போய் விட்டு விட்டார்களோ?” என்ற மனைவியின் கேள்விக்கு, “எனக்கும் தெரியவில்லை!” என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்கு ரெலிபோன் செய்தார் பார்பரா.
“அது Penrose drain tube. அதை நாங்கள்தான் வைத்தோம். காயமுள்ள இடத்திலுள்ள தேவையற்ற நீரை அகற்றுவதற்கும், அதன் தடத்தின் வழியே சென்று சரியான இடத்தைக் கண்டு பிடித்து ஒப்பரேஷன் செய்வதற்குமாக அதை வைத்திருக்கின்றோம்” என்று வைத்தியசாலையிலிருந்து பதில் தந்தார்கள். இங்கே கேட்டதற்கு மாத்திரம்தான் பதில் சொல்வார்கள். தேவையில்லாமல் ஒரு அங்குலம்தன்னும் கூட்டிச் சொல்லமாட்டார்கள்.
“இன்னுமொரு ஒப்பரேஷனா?” அதிர்ந்துவிட்டேன்.
“அந்த வாலை வைப்பதற்காகவா ஆறுமணி நேரம் ஒப்பரேஷன் செய்தார்கள்” மனைவி வியந்தாள். அந்த வாலின் நீளம் கூடியும் இடம் மாறியும் இருந்திருந்தால் பரிணாமத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பேன்.

ஒவ்வொருதடவை ஒப்பரேஷன் செய்த போதும் மூன்று கிழமைகள்தான் வேலையிலிருந்து விடுப்புத் தந்திருந்தார்கள். இந்தத் தொழிலும், தொழில் சாராததுமான ஆறுமாத அவுஸ்திரேலிய அனுபவத்தோடு, வேலைகளுக்கு மனுப் போடத் தொடங்கினேன்.

இப்பொழுதெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் எழுதி, ஒரு புளுகுமூட்டையை வேலைக்கு மனுப்போடும்போது அனுப்பி வைப்பேன். அந்தக் கவரிங் லெட்டர் என்னைக் ‘கவர்’ பண்ணக்கூடியமாதிரி இருக்கும். ஆர்கிடெக்ட் தொடர்பான நேர்முகப் பரீட்சை வந்தது. கதவைத் திறந்து நீங்களாகவே உள்ளே செல்லுங்கள் என்றார்கள். அதில் ஏதோ சூட்சுமம் இருந்திருக்க வேண்டும். கதவைத் திறக்க முடியாமல் இருந்தது. அத்தகைய கனம் கொண்ட கதவை திறந்து இழுக்க, விட்ட இடத்திலிருந்து என்னையும் இழுத்துக் கொண்டு சென்றது கதவு. கதவுடன் தொங்கியபடியே சென்றேன். பலசாலியாகவே உள்ளே சென்ற நான் மிகவும் நன்றாக இன்ரர்வியூ அற்றெண்ட் பண்ணியிருந்தேன். வெளியே வரும்போது மேலும் இருவர் கதவை இழுக்கக் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் 5 வருடங்களும் மற்றவர் 12 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் ஆர்கிடெக்ட்டாக வேலை செய்திருந்தார்கள். என்ன எக்ஸ்பீரியன்ஸ்? அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதற்கு ‘வாய்ச்சொல்’ ஒன்றே மூலதனம் என்பார்கள்.

மூன்றாவது தடவையாக ஒப்பரேஷனிற்கு நாள் குறித்துவிட்டார்கள். அதற்கு முன்னோடியாக வெளிநோயாளர் பிரிவிற்கு வந்து சந்திக்கும்படி கடிதம் போட்டிருந்தார்கள். அதற்காகத்தான் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றேன்.

காலை 11 மணியிலிருந்து காத்திருக்கின்றேன். இந்தத்தடவை எனக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரைச் சந்திக்காமல் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எனக்கு ஒப்பரேஷன் செய்தவரை சந்திப்பது மிகவும் கடினம் என்றார்கள். ஒவ்வொரு வார்ட்டிற்கும் அவர் சென்றுவர பிற்பகல் 3 மணியாகும் என்று சொன்னார்கள். பரவாயில்லை, காத்திருக்கின்றேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டேன். காத்திருப்பு வீண் போகவில்லை. 4 மணியளவில் டாக்டர் வந்தார். மிகவும் குண்டாகவும் வாட்ட சாட்டமாகவும் 40- 45 வயதிற்குள் மதிக்கக்கூடியவராகவும் இருந்தார்.
“என்னுடைய டாக்டர் வயது முதிர்ந்தவர். நான் அவரைத்தான் சந்திக்க வேண்டும். அவர் மிஸ்டர் பரகர்” என்றேன். வந்தவர் என்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்.
“இல்லை… இல்லை. நான் தான் உமக்கு ஒப்பரேஷன் செய்தேன். என்னுடைய பெயர் சாகிடி. நீங்கள் குறிப்பிடும் டாக்டர் என்னுடைய பொஸ்.”
“ஐயா… டாக்டர் ஐயா… இந்தமுறை எனக்கு மூன்றாவது தடவை ஒப்பரேஷன். தொடர்ந்தும் இப்படி இருந்தால் பவுல் கான்சர் (Bowel Cancer) வரும் என்று சொல்கின்றார்கள்” பயந்தபடியே நான் சொல்ல, டாக்டர் சாகிடி அங்குமிங்கும் பார்த்தார். பின்னர் எழுந்து நின்று தனது கதிரையை எனக்கு அண்மையாக நகர்த்திவிட்டு அதில் அமர்ந்தார்.

“இந்த ஒப்பரேஷனை மிகவும் அவதானமாகச் செய்ய வேண்டும். ஏதாவது சிறுபிழை நேர்ந்தால்கூட தொடர்ச்சியாக மலம் சலம் கழிக்க நேரிடலாம். நீங்கள் பிறைவேற் ஹெல்த் இன்சூரன்ஸ் (Private Heath Insurance) வைத்திருக்கின்றீர்களா? அப்படியாயின், நீங்கள் டாக்டர் பரகருக்கு வெளியே சனல் பண்ணிக் காட்டிவிட்டு, இங்கேயே ஹொஸ்பிட்டலில் தங்கி நின்று சர்ஜரி செய்து கொள்ளலாம். அப்படித்தான் வசதி படைத்தவர்கள் எல்லாரும் செய்கின்றார்கள்” காதிற்குள் கிசுகிசுத்தார்.

“நான் அவுஸ்திரேலியா வந்து ஆறுமாதங்கள்தான் ஆகின்றது. என்னிடம் லைவ் இன்சூரன்ஸ்கூட இல்லையே!” என்றேன் ஏக்கத்துடன்.
என்னைப் பொறுமையாக இருக்குப்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் ஒரு வயது முதிர்ந்த டாக்டருடன் வந்தார்.

“I am Faragher” என்றபடியே அந்த ஒடிசலான எனது டாக்டர் வந்தார். என்னைக் கதிரையில் அமரும்படி சொன்னார். மூச்சை இழுத்து விட்டார். “நடந்தவற்றைக் கூறுகின்றேன்” என்றார். அவர் குரல் இனிமையான சங்கீதம் போல இருந்தது.

“உங்களுக்கு இரண்டு தடவைகளும் இவர்தான் ஒப்பரேஷன் செய்தார். இவர் மிஸ்டர் சாகிடி (Zahedi). எனது அஷிஸ்டென்ற்” பரகர் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சாகிடி எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

“தயவுசெய்து இந்தத்தடவை நீங்கள்தான் எனக்கு ஒப்பரேஷன் செய்ய வேண்டும்! நீங்கள் அனுபவம் மிகுந்தவர்!!”
“முதன்முறையாக அந்த ஒப்பரேஷனை சாகிடி சுயமாகச் செய்தார். இரண்டாவது தடவை என்னுடைய மேற்பார்வையின் கீழ் செய்தார். பாருங்கள் எனக்கு இப்போது 65 வயதாகின்றது. நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் இந்த ஒப்பரேஷனைச் செய்வதற்கு இந்த ஹொஸ்பிட்டலில் யார் இருக்கின்றார்கள்? எல்லாருக்கும் அனுபவம் வாய்ந்த டாக்டர்தான் ஒப்பரேஷன் செய்ய வேண்டுமென்றால், இவர்களைப் போன்ற டாக்டர்மார் எப்போது ஒப்பரேஷன் செய்து பழகுவது? ஒரு டாக்டர் படித்து முடித்து வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகின்றது. டாக்டர் சாகிடிக்கு 45 வயதாகின்றது. அவரைப் போல இன்னும் இரண்டு டாக்டர்கள் என்னுடன் வேலை செய்கின்றார்கள்” அவர் சொல்வதை நான் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“சற்று நேரம் அமர்ந்து கொள்ளுங்கள். சீக்கிரம் வந்துவிடுவேன்” சொல்லிவிட்டு உள்ளே சென்றார் டாக்டர் பரகர்.

“உவன் சாகிடி என்னை சாகடிச்சுப்போட்டான். என்ரை உடம்பைக்கீறி விளையாடி இருக்கிறான்.”

சக டாக்டர்களுடன் உரையாடிவிட்டு சிரித்த முகத்துடன் திரும்பினார் டாக்டர் பரகர்.

“உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இந்தத்தடவை உங்களுக்கு நான்தான் ஒப்பரேஷன் செய்யப் போகின்றேன். திருப்திதானே!” என் கையை இறுகப்பற்றிக் குலுக்கினார். அவரது அனுபவம் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. நம்பிக்கைதானே வாழ்க்கை!

இரண்டொரு இளம் டாகடர்களுக்கு, என்னுடைய உடலை அனுபவமாக கற்றுக்கொள்வதற்குக் கொடுத்திருக்கின்றேன் என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து வெளியேறுகின்றேன். அப்படியே என்னுடைய தொழில் சார்ந்த அனுபவத்தைப் பயிற்சி செய்ய எனக்கும் யாராவது வேலை தரக்கூடும்.

ஹொஸ்பிட்டலைவிட்டு வெளியேறும்போது என் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது. கடைசியாகப் போயிருந்த நேர்முகப்பரீட்சை சம்பந்தமான தொலைபேசி அழைப்பு அது.

“நீங்கள் இந்தத்தடவை நேர்முகப்பரீட்சையில் வெற்றி பெறவில்லை. நீங்களும் நன்றாகச் செய்துள்ளீர்கள். ஆனால் உங்களைவிட அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தெரிவுசெய்துள்ளோம். தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.”

– சென்றிடுவீர் எட்டுத்திக்கும் (பரிசுபெற்ற பன்னிரண்டு சிறுகதைகள்), முதற் பதிப்பு:ஏப்ரல் 2014 , அக்கினிக்குஞ்சு வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *