கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 6,943 
 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டிரைவர், அந்தக் காரின் டிக்கியைத் திறந்து, மூட்டை முடிச்சுக்களையும் ஒரு மூங்கில் கூடையையும் கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது, காருக்குள் இருந்த மேகநாதன், அருகேயிருந்த அம்மாவை அனைத்துப் பிடித்தபடி கீழே இறக்கிவிட்டார். பாண்டியம்மாள், முட்டிக் கால்கள் வரை கருண்ட சேலையை சற்றே குனிந்து பாதங்கள்வரை பரப்பிவிட்டாள். பால்கனியில் சத்தம் கேட்டு, அங்கே சிரித்துக்கொண்டு நின்ற மருமகளைப் பார்த்துப் பதிலுக்குச் சிரித்துவிட்டு ஏதோ பேசப் போனாள். அதற்குள் மேகநாதன் கேட்டுவிட்டார்.

“வீடு நல்லா இருக்குதாம்மா..? நானே பிளான்போட்டு கட்டினேன். காண்ட்ராக்டர்கிட்ட விடாமல் வேலையாட்கள வைச்சுக் கட்டின வீடும்மா. வீடு எப்படிம்மா இருக்கு? நல்லா இல்லியோ?”

பாண்டியம்மாள், மகன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டே, அந்த வீட்டை வெளியே நின்றபடியே ஒட்டு மொத்தமாகப் பார்த்துவிட்டு, மீண்டும் மகனையே பார்த்தாள். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எப்படி பேசுவானோ, அப்படிதான் இப்பவும், பேகறான். பரீட்சை முடிவுகள் வெளியானதும், ஒடோடி வந்து தீமூடடிக் குழல் மாதிரி கையில் கருட்டி வைத்திருக்கும் பரீட்சைக் பேப்பர்களை அகலமாக்கியபடியே”எம்மாநான் கணக்குல தொண்ணுத்தளுகம்மா. விஞ்ஞானத்துல எண்பதும்மா.. என்று இதே மகன், இதேமாதிரி கண்களை மேல்நோக்கி, விழிகள் முட்டநிமிர்த்தி

“சீ… வாயை மூடுடி. தெருவில ஆட்கள் போறது வாரது தெரியாமல் தின்னுற பாரு. மாடு திங்கற மாதிரி.”

“நான் மாடுதான். ஹோலி கெள. நீங்கள் அசல் எருமை.”

“ஏங்க உங்களத்தான். இவள் கத்தலப் பாத்தீங்களா? உங்களுக்கு நான் எவ்வளவு சொன்னாலும் காதுல ஏற மாட்டேங்குது. இந்த வலிப்புக்காரியை எப்ப டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போகப் போறlங்க…?”

“உங்களுக்குத்தான் பைத்தியம். இதோ நிக்கானே இந்த அமுதனும்தான் பைத்தியம்.”

அமுதன், ஆனந்தியைப் பதிலுக்குத் திட்டலாமா அல்லது தீட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, மேகநாதன் அம்மாவைத் தாங்கிக் பிடித்தபடியே முறையிட்டார்.

“இந்த மூணு பேரும் என்னைப் படுத்துற பாட்டை பாரும்மா. நீயாவது இவங்களுக்கு கொஞ்சம் சொல்லும்மா…”

பாண்டியம்மாள், அந்தக் குடும்பத்துச் சண்டையை லேசாய் ரசித்தபடியே, மகனின் கையைப் பிடித்துக்கொண்டு, உள்ளே போனாள். அந்த வீட்டின் உட்பகுதியை சுற்றும் முற்றும் பார்த்தாள். அதற்கு மார்க்குப் போடவே தனக்கு தகுதி இல்லை என்பதுபோல மலைத்து நின்றாள். கடைந்தெடுத்த தேக்கு சோபாவில் போடப்பட்ட மெத்தை இருக்கைகளை நோக்கினாள். வெள்ளைக் கம்பிகளில் கருப்புக் கண்ணாடிகள் மறைத்த, மூன்று தட்டுக்களில் முதல் தட்டிலிருந்த டி.வி. செட்டையும், அதற்குமேல் அழகழகாய் இருந்த பொம்மைகளையும், கூரையில் பாளம் பாளமாய் சட்டம் போட்ட சதுரம் சதுரமான கண்ணாடி மினுமினுப்பையும் கண் பிசகாமல் பார்த்தாள். தரையில் போடப்பட்டிருந்த மெத்தை விரிப்பும், அதன் முகப்பில் மூன்றாகப் பிரிந்த இரும்புக் கிராதி அடைப்புக்களை மறைத்த நீலநிற கண்ணாடிக் கதவுகளையும் வாயகலப் பார்த்தாள். அவளுக்கு பெருமை பிடிபடவில்லை. மகனின் தலையைக் கோதிவிட்டாள். இதற்குள், மேகநாதனுக்கு ஒரு டெலிபோன். அவர் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டியதை சுவைத்தாள். ‘சின்ன வயதிலும் இப்படித்தான். தத்துப்புத்துன்னு எல்லாரும் மூக்குல விரல் வைக்கும்படியா பேகவான்.”

இதற்குள் மூன்று பேர் வெளியிலிருந்து வருகிறார்கள். மகன், அவர்களை உள்ளே உட்காரச் சொல்கிறார். ஆனால், அவர்களோ, உட்காருவதுபோல் நாற்காலி ஓரங்களில் குனிகிறார்கள். அவரிடம் குழைந்து குழைந்து பேசுகிறார்கள். பிறகு கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.

பாண்டியம்மாள், கண்ணில் நீராய் வழிந்த ஆனந்தத்தை முகமெங்கும் பரப்பி விடுகிறாள். சாதிச் சான்றிதழ் வாங்குவதற்காக கர்ணத்திடம் கால்கடுக்க நடந்து, ரெவின்யூ இன்ஸ்பெக்டரின் கால்களில் கண்போட்டு தவித்த தன் மகனை, இப்போது இந்தக் கோணத்தில் பார்த்து, அந்தத் தாய் கம்பீரப்பட்டது போல் உடம்பை நிமிர்த்துகிறாள். மேகநாதன், அவளது கவனத்தைக் கலைக்கிறார்.

“ஏம்மா.. அந்த கான்வாஸ்ல. அதான் அந்த திரையில் போட்ட படம் பாரும்மா. அதில கதிர் அரிவாளோட இருக்கவன் நம்ம தம்பி மாதிரி இல்லை.?”

பாண்டியம்மாள், மேற்குச் கவரில் தனித்துவமாய் தோன்றும், அந்தத் திரை ஓவியத்தைப் பார்க்கிறாள். நீரோடும் வாய்க்கால் வரப்போடு, ஆமணக்குச் செடிகளின் பின்னணியில், கதிர் வந்த நெற்பயிர்களின் மத்தியில் அரிவாளோடு ஒருத்தன். அழுத்தமான முண்டாகத் தலை. லேசாய் தூக்கலான சிங்கப் பற்கள்.

“நம்ம தம்பியக் கொண்டு வந்து அதுல நிக்கவைச்சது மாதிரி இல்லம்மா..?”

பாண்டியம்மாள்,பேச மறுக்கிறாள். சின்ன மகன் தாமோதரன் போலவே உள்ள அந்தப் படம், அவளுக்கு ஒரு பாடத்தை இருவேறு கோணத்தில் படித்ததுபோல் தோன்றுகிறது. ஒரே வயிற்றில் பிறந்தவர்களில் ஒருவன் காரோடும் சீரோடும் சூட்டோடும், கோட்டோடும், கால்பிடிக்க ஆளும், கைபிடிக்க சேவகனுமாய் வாழ்கிறான். அதே வயிற்றில் பிறந்த இன்னொருத்தன், கையில் தார்க் கம்போடும், உடம்பில் வெறும் பனியனோடும்.

பாண்டியம்மாள் இரண்டு கண்களும் இருவேறு காட்சிகளைப் பார்ப்பதுபோல் ஒன்றை ஒன்று இழுத்துக் கொள்கின்றன.

அவள் தடுமாறுகிறாள்.

‘அய்யோ… என் கண்ணே மூத்த மகன் மேல பட்டுடும் போலிக்கே… தெய்வமே இது என்ன நினைப்பு.?”

நாற்பத்தைந்து வயது மகன், பத்து வயது குழந்தைக் குரலில் பேசுகிறார்.

“குளிச்கட்டு பூஜைக்கு வாம்மா… உன்னை கூட்டிட்டு வந்தேன் பாரு காரு. அது போனவாரம் வாங்கினது. இன்னைக்கு ஸ்டேஷனுக்கு டிரைவரை ஏன் கூட்டிக்கிட்டு வந்தேன், தெரியுமா? நான் ஏன் ஒட்டிட்டு வரலே தெரியுமா? உன் கையால கார்ச் சாவியை வாங்கிட்டு, அப்புறமா ஒட்டணுமுன்னு தான். இருபது வருசத்துக்கு முன்னே ஸ்கூட்டருக்கு சாவி கொடுத்தே. ஒரு சின்ன விபத்துக்கூட நடக்கலம்மா…”

பாண்டியம்மாள், மகனைப் பார்த்து சுரத்தில்லாமல் சிரித்தாள். ஒட்டை மாட்டு வண்டியில் வயலுக்குச் செல்லும் சின்ன மகனின் நினைவு வந்துவிட்டது. அவன் வைத்திருக்கும் ஒட்டைச் சைக்கிள் உடனே நினைவில் ஓடியது. இவன் வாங்கிக் கொடுத்ததுதான். ‘பாவம், ஒரு கொடியில் பிறந்த இன்னொரு பூ இன்னும் விரியாமலே கருண்டு கிடக்குது.’

பாண்டியம்மாள், தன் தலையையே ஒரு திருப்பு திருப்பிக் கொள்கிறாள். சின்ன மகனிடம் இதுவரை காணாத கஷ்டத்தையும் நஷ்டத்தையும், பெரிய மகனின் வசதிகளே பூதக்கண்ணாடியாய், அவற்றைப் பெரிதாக்குகின்றன. அவள் திக்குமுக்காடுகிறாள். நான் பெத்த செல்வம் மேல நானே கண்ணு போடுறேனே என்று நாணிக் கோணுகிறாள். மனமார கொடுக்காத கார்ச் சாவியால் அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே என்பதுபோல், மகனின் கையை தனது இரு கரங்களுக்குள்ளும் இருத்திக் கொள்கிறாள். அவரோ, அதே சிறுவன்போல், மூங்கில் கூடையில் உள்ள ஒன்றை எடுத்து கடித்துக்கொண்டு அலைமோதிப் பேசுகிறார்.

“எம்மா… இந்த ஏழிலைக்கிழங்க… ஒரு கடி கடிச்சிட்டு கூடவே அதிரசத்தையும் ஒரு கடி கடிச்சேன். உடனே நீ, நீயும் உன்னோட ருசியுமுன்னு சிரிப்ப பாரு. ஞாபகம் இருக்காம்மா?”

பாண்டியம்மாள், அந்த பேச்சில் சின்ன மகனை மறந்துவிட்டு, மகன் கையிலிருக்கும் ஏழிலைக்கிழங்கை வாங்கி அதன் தோலை உரித்துவிட்டு, மீண்டும் அவன் கையில் திணிக்கிறாள். அவள் உடம்பைப்போல் தோற்றம் காட்டும் சிறிது காய்ந்து போன அதிரசத்தை மகனிடம் கடிக்கக் கொடுக்கிறாள். அவள் கண்கள், அருகேயுள்ள சாப்பாட்டு மேசைமேல் விழுகின்றன. அதன்மேல், பளபளப்பில் பழுத்த ஆரஞ்சுகளும், ஆப்பிள்களும் ஒரு கலர் கூடையில் கிடக்கின்றன. நான்கைந்து தட்டுக்கள். அவற்றில் சின்னச்சின்ன செதுப்பிடங்களில் விதவிதமான சட்டினி சாம்பார். பன்னிர்ப்பூ மாதிரியான இட்லிகள். தட்டுக்குப் பக்கத்திலுள்ள குட்டித்தட்டில் ஒன்றில் ஆம்லெட் இன்னொன்றில் முட்டைப் பொரியல்.

பாண்டியம்மாள், கண்முன்னால் அவை படப்பட, நெஞ்சத்தின் முன்னால், பழைய சோற்றை ஊறுகாயுடன் சாப்பிடும் சின்னவன் பிள்ளைகளின் முகங்கள் தோன்றுகின்றன. எப்போதாவது, சின்னவன், சந்தைக்குப் போய்விட்டு, காராப்பூந்தி வாங்கி வரும்போது, அந்தக் குழந்தைகள் அவன் கையை போட்டி போட்டு இழுப்பதும், மனதை இழுக்கிறது. அய்யோ.. என் பெரிய மவன் பிள்ளைகளை நான் பாவி கண்ணு போடறனே. கண்ணு போடறனே.”

பாண்டியம்மாள், அதுவரை கேட்டறியாத மருமகளின் போர்க்குரல் கேட்டு திரும்புகிறாள். தன்னைத்தானே ஒரு கற்று சுற்றிக் கொள்கிறாள். மருமகள், கணவனின் கழுத்தை பிடித்து இழுத்து வளைத்து, வாயிலிருக்கும் அதிரசத்தை எடுத்து எறிகிறாள். கையிலிருக்கும் ஏழிலைக் கிழங்கை தட்டிப் பறித்து, சிறிது விலகி நின்று, அவர் கால் மேலேயே கோபமாக வீசுகிறாள். அவளை அதட்டப்போவதுபோல், உதடுகளை குதப்பிய மாமியாருக்கு, விளக்கம் சொல்கிறாள்.

“இவருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கு. எப்படி ஏழிலைக் கிழங்கு சாப்பிடலாம்? நீரிழவு இருக்கு… எப்படி அதிரசம் சாப்பிடலாம்? கண்டதைத் தின்கிறது. அப்புறம் கை கால் வீங்கிக் கிடக்கிறது. உங்க பிள்ளைகிட்ட கொஞ்சம் சொல்லி வையுங்க..”

மருமகள், தன்னையே ஒரு அப்பீலாக நினைத்தாலும், பாண்டியம்மாளுக்கு அவளிடம் சண்டை போடவேண்டும்போல் தோன்றுகிறது. அதற்குள், மருமகளே அவளைக் குளியறைக்குள் கூட்டிப்போகப் போனபோது, மேகநாதன், “வெந்நீர் தயாரா. முதல்ல நான் குளிச்சிடறேன். அப்புறம் அம்மா குளிப்பாங்க… இல்லாட்டா வெந்நீர் ஆறிடும் பாரு…” என்கிறார்.

பாண்டியம்மாள், ஆச்சிரியம் தாங்க முடியாமல், மகனைப் பார்த்துக் கேட்டாள்.

“எதுக்குப்பா. சுட்டெரிக்கிற வெயிலுல வெந்நீர்வ குளிக்கப் போறே.?”

“ஒ. அதுவாம்மா. அது இருபது வருசமா நடக்கிற பெரிய கதை. டெல்லியில நான் முதல்ல வேலையில சேர்ந்தேன் பாரு. அப்போ உல்லன் கோட்டு வாங்கிறதுக்கு வைச்சிருந்த பணத்தில், தம்பிக்கு உடம்புக்குச் சுகமில்லேன்னு, ஐநூறு ரூபாயை அனுப்பிட்னேன் பாரு. அதனால. கொட்டுற பனியில திரிஞ்சேன். அப்புறம் படுக்கையில விழுந்தேனா. கடைசியில் என்னடான்னா. குளிரை எதிர்க்கிற சக்தியை உடம்பு இழந்திட்டுதுன்னு டாக்டர் சொன்னார். அதோட, எப்போதும் வெந்நீரைத்தான் பயன்படுத்தனுமுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு. தண்ணிர்ல குளிச்சேன்னுவையுங்க.. காய்ச்சல் வந்துடும்.மூக்கடைச்சுடும்.காது குடையும். ஞாபகம் இருக்காம்மா..? நம்ம தம்பி கிணத்துக்குள்ள கொழிஞ்சிச் செடியை வைச்சிட்டு வருவான். நான் தலைகீழாப் பாய்ஞ்க அதை எடுத்துட்டு வருவேன். காலம் எப்படி உடம்ப மாத்திட்டு பாரு.”

பாண்டியம்மாள், திடுக்கிடுகிறாள். மகனையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இப்போது எங்கேயோ உள்ள சின்ன மகன் வரவில்லை. இங்கேயே நிற்கும் பெரிய மகன் சின்னப்பிள்ளையாக நிற்பதுபோல் தோன்றுகிறது. இவளுக்கும் அந்தப் நகரத்து பிள்ளையை எடுத்து இடுப்பில் வைக்கவேண்டும் என்பதுபோல் ஒரு எண்ணம்.

பூஜை முடிகிறது. அவள் கார்ச்சாவியை மகனைக் கட்டிப்பிடித்து தன்னோடு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு கொடுக்கிறாள். பிறகு எல்லோரும், மேசைக்கு வருகிறார்கள். மாமியாரோடு சேர்ந்து உட்கார்ந்திருக்கும் மருமகள், தனது தட்டிலும் பிள்ளைகளின் தட்டுக்களிலும் மாமியார் தட்டிலும் ஊரிலிருந்து வந்த பேயன் பழங்களை வைக்கிறாள். அதிரசத்தை போடுகிறாள். வீட்டில் சமைத்த பொங்கல்… இட்லிகள்… உருக்கிவிட்ட தங்கம் மாதிரியான கேசரி.

வெறும் கேழ்வரகு கூழைத் துளாவிக் கொண்டிருக்கும் மேகநாதன், மீண்டும் அந்த அதிரசத்தின் பக்கம் கையை நீட்டுகிறார். அவர் மனைவி, அந்தக் கை பற்றிய அதிரசத்தை பறித்து, மகன் அமுதனிடம் கொடுக்கிறாள். அவன் அவரைப் பார்த்து அழகுக் காட்டி சிரித்தபடியே கடிக்கிறான்.

எல்லாரும் எதுவுமே நடக்காததுபோல் இயங்கிக் கொண்டிருந்தபோது, பாண்டியம்மாளால் இருக்க முடியவில்லை. மகனை கண்ணிர் மல்கப் பார்த்தபடியே, ஒரு இட்லியை ஒப்புக்கு எடுக்கிறாள். ஒரு கேசரி கவளத்தை கையில் வைத்தபடியே வாய்க்குள் போடாமல் உருட்டுகிறாள். வயிறு சரியில்லை என்று எழுகிறாள்.

மேகநாதன், அறைக்குள் போகிறார். சபாரி உடையோடு திரும்புகிறார். வரைவரையான சந்தனக்கலர். பக்கத்தில் மனைவி வந்து நிற்கிறாள். ஒரு வெள்ளைப்பட்டையை நீட்டுகிறாள். கிரிக்கெட்காரர்களின் காலில் வைத்திருப்பது மாதிரியான பட்டை அதை கழுத்திற்கு மாட்டிக்கொண்டு, மனைவி நீட்டும் ஒவ்வொரு மருந்தையும், ஒவ்வொரு குவளைத் தண்ணிரோடு வாய்க்குள் போட்டு, உள்ளே தள்ளிவிட்டபடியே மேகநாதன் அம்மாவுக்கு விளக்கம் அளிக்கிறார்.

“எனக்கு முதுகெலும்பு தேய்ஞ்சதுனால அடிக்கடி முதுகும் கழுத்தும் வலிக்கும். கீழே குனிஞ்சாலோ, ஸ்கூட்டர் ஒட்டினாலோ, எழுதினாலோ முதுகுப் பக்கம் பிராணனைபோறது வலி எடுக்கும். அதுக்கு இந்த கழுத்துக் கட்டு. சிலநேரம் மாரடைப் போன்னுகூட பயப்படும்படியா வலிக்கும். அப்படின்னா மாரடைப்பு எனக்கு வராதுன்னும் அர்த்தமில்லே. இதயக் குழாய்ல ஒரு ரத்தக்குழாய் அடைச்சிருக்கிறத மேலும் அடைக்கர்மல் இருக்கிறதுக்கு இந்த மருந்து ரத்தக் கொதிப்பை சரிக்கட்ட இந்த சாணிநிற மருந்து. இது நீரழிவுக்கு கோமளம் இந்த அல்சர் மருந்து எங்கே..? கிட்டத்தட்ட இப்பஎனக்குமாத்திரைகளே சாப்பாடும்மா.நீவாங்கிக்கொடுப்பியே பெப்பர்மிண்ட், வேர்கடலை மிட்டாய், கூடவே வேப்பில கசாயம். அப்படி ஆயிட்டு. ஒண்னு குறைஞ்சா போதும். படுக்கையில விழுந்திட வேண்டியதுதான்.”

மேகநாதன், சிரித்துக்கொண்டுதான் சொன்னார். புறநானூற்று போர்க்கள வீரர்போல கழுத்துப் பட்டையை அங்குமிங்குமாய் அசைத்து சரிப்படுத்திவிட்டு, “போயிட்டு வாரேம்மா.” என்றார்.

பாண்டியம்மாள், மகனையே பார்க்கிறாள். மருவி மருவி பார்க்கிறாள். இந்த மகனுக்கு சின்ன வயதில் வலிப்பு வரும்போது எப்படி துடித்தாளோ, அப்படி துடிக்கிறாள். பின்னர் கிராமத்தில் பின்னங் கொட்டை மாதிரி சதையும் எலும்பும் தனித்தனியே தெரியாமல் இறுகிப் போயிருக்கும் தனது இளைய மகனை மனதுக்குள் கொண்டு வருகிறாள். ஒருநாள் கூட, மண்டைக்குத்து, வயிற்று வலி என்று மருந்துக்குக்கூட சொல்லாத அந்த சின்ன மகன், அவளுள் ஒரு உறுத்தலை ஏற்படுத்துகிறான்.

பாண்டியம்மாள், இப்போது மனதுக்குள் வேறுவிதமாய் புலம்புகிறாள்.

“தெய்வமே. ஒரு கண்ணை நோயாயும், இன்னொரு கண்ணை நல்லாயும் வைச்சுட்டியே…? இந்த கொடியில பூத்த பெரிய பூவை வாடவச்கம், சின்னப் பூவை மலர வச்சும் வேடிக்கை காட்டுறியே. அய்யோ. நான் பெத்த மவன்தானே சின்னவனும். அவன்மேல என் கண்ணுபடுதே. தெய்வமே. தெய்வமே. கோழி மிதிச்சு குஞ்சும் நோகதது, மாதிரி என் கண்ணையும் அதே மாதிரி ஆக்கு.”

மேகநாதன், இன்னொரு தடவை, “போயிட்டு வாரேம்மா” என்கிறார். நித்தியகண்டமாய் வாழும் தான் பெற்ற பிள்ளை நிறைந்த ஆயுளோடு இருக்கவேண்டும் என்று நினைத்ததுபோல், அந்தத்தாய், அப்படிப்புறப்பட்ட மகனை இழுத்து பிடித்து தோளில் சாத்திக் கொள்கிறாள்.

– தினத்தந்தி பொன்விழா மலர் 1993.

– தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *