நாகநாதனுக்கு அன்று காலை அஞ்சலில் வந்த கடிதத்தைப் படித்தவுடன் இருப்பு கொள்ளவில்லை. ‘அவசரமாக திருச்சி போறேன்.ரெங்கராஜன் வீட்டுக்கு. இப்ப எதுவும் கேட்காதீங்க’ என்று வீட்டு நபர்களிடம் சொல்லிக் கிளம்பி எப்படியோ வைகை எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறி விட்டான். எப்போது இந்த ரயில் கிளம்பும், சீக்கிரம் போய் திருச்சி சேர்ந்து அங்கிருந்து அருகே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ணச்சநல்லூர் போய் தன் குழந்தைப்பருவ நண்பன் ரெங்கராஜனை பார்க்கலாம் என்று மனதில் எண்ணியவாறு உட்கார்ந்து இருந்தான். இருவரும் அந்த ஊர்க்காரர்கள்தான். ஆனால் இருவரும் சந்தித்து தற்போது இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. அவ்வூரில் இருக்கும் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்து பின்னர், திருச்சியில் தேசியக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தனர்.
அந்த ஊர் காவிரியின் நீர் வளத்தால் நல்லதொரு விவசாயப் பகுதியாகவும், நெல் விற்பனையாளர்கள், அரிசி ஆலைக்கு சொந்தமானவர்கள் இப்படியாகவும் இருக்கும் ஊர். காலப்போக்கில் தற்போது எல்லா கிராமங்களும் மாறிவிட்டது போல் மண்ணச்சநல்லூரும் நகர வாழ்க்கையின் தாக்கத்தில் இயங்கும் ஊர். சற்றேறக்குறைய முப்பதாயிரத்திற்கும் கீழே மக்கள் தொகை அமைந்துள்ளது. காவிரிக்கரை அருகில் என்பதால் பசுமையான காட்சிகள் நிறைந்தவை இன்றும் மனதிற்கு இதம் தரும்.
நாகநாதன், ரெங்கராஜன் பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தங்களிடம் இருந்த நிலம், தோட்டங்களை விற்பனை செய்து விட்டு திருச்சியில் குடியேறினர். ஆனால் ரெங்கராஜனின் பெரியப்பா நாராயணன் அந்த ஊரிலேயே இருந்ததால், தங்களின் ஒரு தோட்டத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டு ‘அண்ணா, நீ கவனிச்சுக்கோ இதை, எப்பவாவது என் வாரிசுகள் இங்கே வரேன்னு சொன்னாங்க அப்படின்னா அவங்க கிட்ட கொடு’ என்று ரெங்கராஜன் அப்பா தியாகராஜன் தன் சகோதரனிடம் கூறிவிட்டு கிளம்பினார். ரெங்கராஜன் மேற்படிப்பு படித்து, மும்பையில் வேலையில் சேரும் வரையில் அவன் பெரியப்பாவுடன் தொடர்பில் இருந்தான். அதற்குப் பிறகு சென்ற மாதம் அவரிடம் பேசி திரும்பவும் ஊருக்கு வருவதாகச் சொல்லி இப்போது வந்து அவர்களின் பழைய வீட்டில் தங்கி இருக்கிறான். இந்த விவரம் உண்மை நண்பனான நாகநாதனுக்கு கடிதம் மூலம் தெரிய வந்ததும், அவனைப் பார்க்கத்தான் போய்க்கொண்டு இருக்கிறான்.
நாகநாதன் குடும்பத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு வீடும், மாமரங்கள், தென்னை மரங்கள் கொண்ட தோட்டமும் இருந்தன. அவைகளை அப்போது சந்தையில் நிலவி வந்த நல்ல விலைக்கு அவன் அப்பா ரெத்தினம் விற்று விட்டதால், திருச்சிக்கு இடம் பெயர்ந்தனர்.
இதன் பின்னர் நாகநாதனும், ரெங்கராஜனும், கல்லூரிக்கல்வி முடிந்து வேலை தேடும் வரை ஒன்றாகவே இருந்தனர். இருவரும் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி என் பல நகரங்களுக்கு பயணம் செய்து வேலைக்கு விண்ணப்பித்தும், அங்கு வசித்து வந்த தம்முடைய உறவினர்கள் உதவி மூலமாகவும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் இடைவெளிக்குப்பின் நாகநாதனுக்கு பெங்களூரிலும், ரெங்கராஜனுக்கு மும்பையிலும் ஒரே நேரத்தில் நல்ல வேலை அமைந்தது. அதற்குப் பிறகும் இருவரும் தொடர்பில் இருந்து வந்தனர். பணியில் அமர்ந்த நான்காவது வருடத்தில் இரண்டு மாத இடைவெளியில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. நாகநாதனுக்கு முதலில் நடந்த திருமணத்திற்கு ரெங்கராஜன் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். அதேபோல் இரண்டு மாதங்கள் கழித்து நடந்த ரெங்கராஜன் திருமணத்திற்கு நாகநாதன் தன் மனைவியுடனும் பெற்றோர்களுடனும் சென்றிருந்தான்.
நாகநாதன் மனைவி நளினாவின் சொந்த ஊர் தஞ்சாவூர். அங்கிருந்து பல வருடங்கள் முன்பு அவர்கள் குடும்பம் சென்னைக்கு மாறினர். ரெங்கராஜன் மனைவி தேவகி செங்கல்பட்டைச் சேர்ந்தவள். அவர்கள் குடும்பத்தார் வெகுகாலம் முன்பே வேலையை தேடி மும்பையில் குடியேறினர். திருமணம் நிச்சயம் ஆகும் நேரத்தில்தான் இது ரெங்கராஜனுக்கு தெரிய வந்தது. திருமணத்திற்கு பின் ரெங்கராஜன் தன் பெற்றோர்களை மும்பை அழைத்துச் சென்று விட்டான். சென்னை வீட்டை விற்று வந்த தொகையுடன் வங்கி கடன் மூலமாக ஒரு வீட்டை மும்பை வெளிப்புற நகரில் வாங்கிக் கொண்டனர்.
இப்படியாக இவர்கள் இருவரின் நட்பும், தொலைபேசி தொடர்புகளும், கடிதம், மின்னஞ்சல் மூலமாக செய்தி பரிமாற்றங்களும் சில வருடங்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. ஆனால் இருவருக்கும் வாழ்க்கையின் அடுத்த கட்டமாக குடும்ப நிர்வாகம், பணியில் பதவி உயர்வு, வேலை மாற்றம், சொந்த வீடு கனவை நிறைவேற்றுதல் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தல், இப்படியான எல்லா நடுத்தர குடும்பத்தினருக்கும் இருந்து வரும் லட்சியங்களை அடைய தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருக்கையில் இருவரின் இடையில் தொடர்புகள் குறைந்து, சில வருடங்களில் நின்றே போய் விட்டது.
இதனிடையே நாகநாதனுக்கு பதவி உயர்வுடன் வேலை சென்னைக்கு மாற்றல் ஆகிவிட, நளினா அவள் பார்த்து வந்த வேலையை விட்டாள். நாகநாதன் தன் பெற்றோர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு கூட்டி வந்து எல்லோரும் ஒன்றாக வசித்தார்கள். நாகநாதனுக்கு இரண்டு பையன்கள், பிரசாத், திலக் என்ற பெயரில். சென்னைக்கு வந்து தன் வேலை முன் அனுபவம் மூலமாக நளினா ஒரு வேலையில் அமர்ந்தாள். இரண்டு மகன்களும் நல்ல முறையில் படித்து வருவதோடு மட்டுமன்றி நல்ல பழக்கங்களையும் வளர்த்துக் கொண்டனர்.
பிள்ளைகள் வளர்ந்த காலங்களில் முதியோர்கள் இருவரும் இறைவனடி சேர்ந்து விட்டனர். நாகநாதன்,நளினா இருவரும் தம் உழைப்பினாலும், அளவான அவசியமான செலவுகளை மட்டுமே செய்து சேமித்த பணத்தைக் கொண்டு சொந்த வீட்டையும் கட்டி முடித்தனர். பிரச்னைகள் அனைத்தையும் இருவரும் அவ்வப்போது நேரம் ஒதுக்கி கலந்தாலோசித்து முடிவு எடுத்து வந்ததால் குழப்பங்கள் இல்லாமல் நாட்களை நகர்த்த முடிந்தது. இந்த ஆலோசனைகளில் பல முறை தன் வாரிசுகளையும் ஈடுபடுத்தி வந்தனர்.
பிரசாத் கல்லூரி படிப்பு முடித்து கட்டுமானத்துறை வேலையில் இருக்கிறான். திலக் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி வாழ்க்கையில் வந்துள்ளான். நாகநாதனும், நளினாவும் அந்த இரவு உரையாடல்களில் ‘ காலம் எத்தனை சீக்கிரம் போய் விட்டது! இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தது கூட இன்னும் அச்சு மாறாமல் மனசுல காட்சிகளா ஓடுதே? ஆனால் அதைக் கடந்த காலம்னுதான் பார்க்க வேண்டிருக்கு. அம்பது வயசை நெருங்கி வந்து திரும்பப் பாக்கறப்போ திகைப்பா இருக்கு’ என்று பேசிக்கொண்டிருந்தனர். ‘ அது மட்டுமா, நீங்கல்லாம் லெட்டர் எழுதிட்டுதான் தகவல் தெரிவிப்பீங்க, அர்ஜன்ட்னா டெலிகிராம் கொடுப்பீங்க, எப்பவாவது போஸ்ட் ஆஃபீஸ் போய் ஃபோன்ல பேசுவீங்க.இப்ப பாருங்க, கையில மொபைல் போனுக்குள்ள அத்தனையும் அடக்கம் ஆயிடுச்சு!’ என்று அவர்கள் வாரிசுகள் பங்குக்கு சொன்னார்கள். ‘அதுவும் உண்மைதான், நாங்க ரெண்டு விதமான சூழ்நிலையிலேயும் இருந்திருக்கோம்’ என்று நளினா ஆமோதித்தாள்.
தேவகியுடன் திருமணம் முடித்து ரெங்கராஜன் நிறைவான வாழ்க்கையை தொடங்கினான். அவள் வந்த அதிர்ஷ்டத்தில் அவனுக்கு பதவிஉயர்வு கிடைத்தது. இரண்டு வருடங்களில் இன்னும் பெரிய பதவியில் வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தில் சேர்ந்தான். இதே நேரத்தில் தேவகியும் பெயர் பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் நல்ல பதவியில் அமர்ந்தாள்.அவள் அந்தக் கல்வி பயின்று பணிகளில் முன் அனுபவமும் இருந்ததால் வேலை கிடைக்க எளிதாக இருந்தது.
இருவருக்கும் பிறந்தவர்கள் இருவர். மூத்தவள் பெண் ரேணுகா, அடுத்தவன் பையன் ஜெகதீஷ். இருவரும் படிப்பு தவிர மற்றும் சில விளையாட்டு நிகழ்வுகள், பேச்சு, எழுத்து போட்டிகள இவைகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வந்தனர். புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அதிகம் படித்து ஆராய்ச்சி உலகத்தில் ஈடுபாடு கொண்டு அத்துறை தொடர்பான படிப்புகளை பயின்று வந்தாள் ரேணுகா. விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்ட ஜெகதீஷ் கால்பந்து விளையாட்டுப் பயிற்சியில் சேர்ந்து பயின்று வந்தான்.
இதனிடையே ரெங்கராஜன் தந்தை மாரடைப்பால் யாரும் எதிர்பாராத வகையில் காலமானார். அவர்கள் குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த நிகழ்வு. ஊரிலிருந்து அவன் பெரியப்பா வந்திருந்தார். தன் தம்பி மேல் மிகுந்த அன்பு கொண்டவர் அவர் என்பதால் கடைசியாக முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்புடன் வந்திருந்தார்.
அடுத்த ஆறு மாதங்களில் ரெங்கராஜன் நிறுவனம் அவனை அமெரிக்கா அனுப்ப உத்தேசித்து அவனிடம் அதைத் தெரிவித்தனர். ரெங்கராஜன் அம்மா உள்பட அனைவரும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவனுக்கு உபதேசித்தால், அமெரிக்கா சென்றவன், ஆறு மாதங்களில் அனைவரையும் அழைத்துச் செல்ல வந்திருந்தான்.
“பெரியப்பா, எனக்கு அமெரிக்காவில வேறொரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவில வேலை கிடைச்சிருக்கு.அவங்க வீடு மத்த வசதிகளும் தர உறுதி கொடுத்திருக்காங்க.அதனால இங்கேருந்து எல்லாரையும் அம்மா உள்பட அங்கே அழைச்சிட்டு போகஏற்பாடு செஞ்சுக்கிட்டு மும்பை வந்திருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல இங்கேருந்து புறப்படுவோம். நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க.” என்று ரெங்கராஜன் அவன் பெரியப்பாவிடம் கூறியபோது அவர் “ரெங்கா, என்னிக்கும் என் அன்பும், நல்லாசிகளும் உனக்கு உண்டு. உன் நல்ல வளமான எதிர்காலத்துக்கு நான் தினமும் கடவுளை வேண்டறேன்.நல்லதே நடக்கும். சந்தோஷமாப் போய் வா. என்னிக்காவது கிராமத்துப் பக்கம் வரணும்னு தோணிச்சுன்னா அப்போ தகவல் கொடு. உன் வீடும் தோட்டமும், பத்திரமா எங்கிட்ட இருக்கும்.கவலையே வேண்டாம். இந்த பெரியப்பா நாராயணன் காலமானாலும் என் பையன் திருஞானம் அதை நல்லா கவனிச்சுக்குவான்” என்று அன்புடனும் உறுதியுடனும் கூறினார்.
மிகவும் உயர்ந்த நிலையில் அமெரிக்காவில் ரெங்கராஜன் குடும்ப வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. அடுத்த இருபது வருடங்களில் எவ்வளவோ சுக, துக்கங்கள், ஏற்றுங்கள், இறக்கங்கள் இவைகளுடன் தன் தாயார் இறைவனடி சேர்ந்ததையும் ரெங்கராஜன் சந்திக்கும்படியாக நேரிட்டது. ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக அவனை சம்மட்டியால் தாக்கியது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதுதான் தேவகிக்கு ஏற்பட்ட ‘மூளைக்காய்ச்சல்’! அவள் உடல் நிலையில் சில நாட்களில் சோர்வு இருப்பதையும், தலைவலி அவளுக்கு இருப்பதையும் பார்த்த ரெங்கராஜன் மருத்துவப்பரிசோதனைகள் செய்தபோது இந்த அதிர்ச்சியான செய்தி தெரியவந்தது.
ரேணுகா, ஜெகதீஷ் இருவரும் இடிந்து போய் விட்டனர். ரெங்கராஜன் தன் மனக்கஷ்டங்களை மறைத்துக் கொண்டு வாரிசுகளை தைரியப்படுத்தி ஆறுதல் கூறினான். இரண்டு வருடங்கள் தேவகிக்கு தொடர்ந்து வைத்தியங்கள் செய்து வந்தும் பயனற்றுப்போய் அவள் இவ்வுலகிலிருந்து விடை பெற்றாள். இது ரெங்கராஜனை மிகவும் உலுக்கி விட்டது.”இனிமேல் சரியாகிவிடும்.நன்றாகத்தேறி வருவாள்” என்று மிகவும் நம்பிக்கொண்டிருந்த ரெங்கராஜன் குடும்பத்தினர்க்கு அவளின் மறைவு இடியாக இறங்கியது. அதன் பின்னர் அவனுக்கு அங்கிருக்கும் பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் ரேணுகா மருத்துவத்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி மேலாளர் பதவியில் சேர்ந்தாள்.
அதன் பின் ரெங்கராஜன் ” ரேணு, ஜகு, நான் இந்தியாவுக்கு நம்ம கிராமத்துக்கு போறதா முடிவு பண்ணிட்டேன். நீங்க இங்கே சமாளிப்பீங்க இல்லையா? ஜகு இன்னும் ரெண்டு வருஷத்தில படிச்சு முடிச்சுடுவான். உங்களுக்கு இந்த வீடு இருக்கு இங்கே. அக்கம்பக்கம் எல்லாம் நமக்கு நல்லா பழக்கமானவங்கதான். ஆறேழு மாசத்துக்கு ஒரு தடவை நான் வரேன். எனக்கு அங்க போய் தோட்ட வேலைல ஈடுபட்டேன்னா கொஞ்சம் நிம்மதியும், மாறுதலும் கிடைக்கும்னு நினைக்கிறேன்.இங்க இருக்க, இருக்க அம்மா நெனைவு என்னைக் கொல்றது. நீங்க ரெண்டு பேரும் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்.” என்றான். ரேணுகா உடனே” அப்பா, நீங்க தனியா போகவேண்டாம் இந்த தடவை. ஜகுவுக்கு அடுத்த பதினஞ்சு நாள்ல வெகேஷன் லீவு.நானும் பத்து நாள் லீவு சொல்லிட்டு வர்றேன். எல்லோரும் சேர்ந்து போகலாம். அதுக்கப்புறம் நாங்க இங்க வந்துடறோம். நாம தினமும் வாட்ஸப்ல பேசலாம். நாங்க தனியா ஹேண்டில் பணணிப்போம்.கவலைப்படாதீங்க. நீங்க தைரியமா இருக்கணும். அதான் எங்களுக்கு முக்கியம்” என்று கூறினாள். ” அக்கா சொல்றது கரெக்ட் அப்பா. சேர்ந்தே போகலாம். உங்க ஹெல்த்தை வீணாக்கிக்காதீங்க, அப்பா.ரொம்ப குழப்பிட்டு டிப்ரஷன் லெவலுக்கு போய்டாதீங்க ” என்று ஜகதீஷ் சொன்னான்.
இது நடந்த இரண்டு வாரங்களுக்கு பின் அவர்கள் மூவரும் மண்ணச்சநல்லூர் வந்து அவர்களுக்காக தயாராக சுத்தம் செய்து, புதிதாக வண்ணம் பூசி பொலிவுடன் இருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஒரு மாதம் முன்பே ரெங்கராஜன் அவன் முடிவை திருஞானத்திடம் பேசியபோது தெரிவித்தான். அதன்படி திருஞானம் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, வீட்டையும் தயார் செய்து வைத்திருந்தான். அது மட்டுமின்றி அவர்கள் வீட்டோடு இருந்து உதவிகள் செய்யவும், சமையல் பணிகளைச் செய்யவும் நல்ல நபர்களை நியமித்திருந்தான்.
அப்பாவுடன் சேர்ந்து வந்த ரேணுகா, ஜகதீஷ் இருவரும் கிராமத்து வாழ்க்கையை அனுபவித்து விட்டு அவர்களின் சித்தப்பா திருஞானத்திடம் “அப்பாவைப் பாத்துக்கங்க சித்தப்பா, ஏதா இருந்தாலும் எங்களை கூப்பிட்டு பேசுங்க, எந்த நேரம்னு எல்லாம் பாக்க வேண்டாம்.நாங்க யாராவது அவெய்லபிலா இருப்போம்” என்று கூறிவிட்டு கிளம்பினார்கள்.
நாகநாதனுக்கு வந்த கடிதத்தில் ஒரு கைபேசியின் எண்ணை ரெங்கராஜன் குறிப்பிட்டிருந்தான். திருச்சி வரும் முன்பே நாகநாதன் அதற்கு தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் ரெங்கராஜன் குரல் ஒலித்தது. ” ஹலோ, நாகு, நீ இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். நீ நிச்சயம் அந்த லெட்டரைப்பாத்தா கிளம்பி வருவேன்னு எனக்கு தெரியும். எங்கே இருக்கே இப்போ” என்றான். ” திருச்சிதான் வந்திட்டிருக்கேன் . ஆறுமணிக்கு ஜங்ஷன் வந்துடுவேன். நீ வருவியா ஸ்டேஷனுக்கு?” என்று நாகநாதன் கேட்டான். “நிச்சயம் வரேன். ஜங்ஷன் வெளில வந்து வெயிட்டிங் ஹால்ல இரு. நான் இப்பவே கிளம்பிட்டேன். வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கறேன். எல்லாம் இங்கே வந்து பேசலாம்” ரெங்கராஜன் பதிலளித்தான்.
திருச்சி ரயில் நிலையத்தின் வாயிலுக்கு வந்த நாகநாதன், சற்று தூரத்தில் நின்றிருந்த ரெங்கராஜனை பார்த்து அவனருகே ஓடினான். அவனைக் கண்ட ரெங்கராஜனும் வேகமாக வந்தான். இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். மிக நீண்ட கால இடைவெளியில் சந்தித்ததால் இருவராலும் பேச முடியவில்லை. “எப்படிடா இருக்கே” என்ற கேள்வியுடன் கண்ணீர் மல்க வேறு வார்த்தைகள் எதுவுமின்றி ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். ஒரு நிமிடத்திற்கு பின்னர், ” வாடா, நாகு, என் கார் அங்கே பார்க் செஞ்சிருக்கேன். முதல்ல வீட்டுக்கு போய் ஏதாவது சாப்டுட்டு பேசலாம்.நிறைய சேதி இருக்கு.”என்ற ரெங்கராஜனிடம் ” ஆமாம், எனக்கும் நிறைய பேசவேண்டிருக்கு உங்கிட்ட”. என்று சொல்லி நாகநாதன் அவனைப் பின்தொடர்ந்தான்.
வீட்டுக்கு செல்லும் வழியில் இருவரும் தங்களுடைய பள்ளிப்பருவ நாட்கள் பற்றியும், இருவரும் சேர்ந்து சுற்றிய இடங்களில் நடந்தவைகளை பற்றியும் பேசிச் சென்றனர். இருந்தாலும் ரெங்கராஜன் சற்று உற்சாகக்குறைவுடனே இருந்ததை புரிந்து கொண்டான் நாகநாதன். ‘ எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் கேட்கலாம் ‘ என்று முடிவு செய்து, இயல்பாக பேசிச் சென்றான்.
வீட்டை அடைந்தவுடன் அங்கிருந்த திருஞானத்தை நாகநாதனுக்கு அறிமுகப்படுத்தினான் ரெங்கராஜன். ” அடேங்கப்பா, திருஞானமா இது, எப்பவோ சின்ன குழந்தையா இருக்கும்போது பாத்தது.” என்று கை குலுக்கி அவனைத் தோளில் தட்டினான் நாகநாதன்.
நாகநாதன் பயணக்களைப்பை நீக்க குளித்துவிட்டு புதிய சுறுசுறுப்புடன் வந்தபோது உணவு தயாராக மேசையில் வைக்கப்பட்டிருந்தது. “வாடா, நாகு, டிஃபன் ரெடி. இட்லி, சேவை, தோசை மூன்றும் இருக்கு. எது வேணுமோ சாப்பிடு. வேற ஏதாவது வேணும்னா சொல்லுடா. இதெல்லாம் நீ அப்போ விரும்பி சாப்பிட்டதை ஞாபகம் வச்சுட்டு செய்ய சொன்னேன். சாப்டுவீல்ல?” என்று கேட்டான் ரெங்கராஜன். ” டேய், இப்பவும் அந்த ஐட்டங்கள் எல்லாம் பிடிக்கும் டா.ரொம்ப தேங்க்ஸ், நீ இன்னும் நினைவு வச்சிருக்கியே இதை.அதுவே எனக்கு சந்தோஷம்.” என்று நாகநாதன் சொல்லி அவனருகே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். இருவரும் அதிகம் ஏதும் பேசாமல் உண்டு முடித்தனர். திருஞானமும் அவர்களுடன் சாப்பிட்டான். பிறகு ” ஓ.கே சித்தப்பா, நான் வீட்டுக்குப் போறேன். கொஞ்சம் வேலை இருக்கு.நாளைக்கு காலைல பத்து மணிக்கு வரேன். ஏதாவது தேவைப்பட்டா போன் செய்யுங்க.ஓ.கே.நாகு ஆங்கிள்.நல்லா ரெஸ்ட் எடுங்க. எங்கே எடுக்க போறீங்க, இவ்வளவு நாள் கழிச்சு பாத்துக்கறீங்க, இன்னிக்கு நைட்டு முழுக்க பேசிட்டு தான் இருப்பீங்க. ” என்று சிரித்தபடியே கூறி விடை பெற்றான்.
திருஞானம் சென்றதும் உள்ளே சென்று காப்பி எடுத்து வந்தான் ரெங்கராஜன். “உனக்கு வேணும்னா உள்ளே ஃப்ளாஸ்க்ல காபி இருக்கு. எப்ப வேணுமோ எடுத்துக்கடா.” என்று ஒரு கோப்பையை அவனிடம் நீட்டினான். ” அதெல்லாம் விடுடா. வரும்போதே கவனிச்சேன். நீ ஏதோ கவலையோடு இருந்தே. அதைத்தவிர மன அழுத்தம் உள்ளவங்க இருக்கற மாதிரி ஒருவித வருத்தம் கலந்த தொனி உன் பேச்சுல இருந்தது போல தோணிச்சு எனக்கு. நீ எப்ப இங்க வந்தே? என் அட்ரஸ் எப்படி கிடைச்சது உனக்கு? ஏன்னா சென்னையில் இந்த வீடு கட்டி மாறினதுக்கப்புறம் உனக்கு நான் தெரிவிக்கலன்னு நினைக்கிறேன். நீ மட்டும்தான் வந்திருக்கியா? உனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்னு நினைக்கிறேன்.ரைட்? தேவகி எப்படி இருக்கா?” நாகநாதன் பல கேள்விகளை ஒரே மூச்சில் கேட்டு முடித்தான்.
அதைக்கேட்டு அவனருகே வந்த ரெங்கராஜன், நாகநாதனைக்கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான். திடுக்கிட்டு போய் நாகநாதன் ” என்னடா ஆச்சு, என்னடா, ஏண்டா அழறே? ” என்று கேட்க, ரெங்கராஜன் ” என்னை விட்டுடுடா, நான் கொஞ்சம் உன் தோள்ல சாஞ்சு அழுதுடறேன்.” என்று சொல்லி ஒரு நான்கு நிமிடங்கள் வரை அழுது பிறகு சற்றே சாந்தமாகி, அவன் சந்தித்தவைகளையும் தேவகியின் அகால மரணம் பற்றியும் சின்னச்சின்ன கேவல்களுக்கிடையே குழந்தை போல தன் துக்கங்கள் அனைத்தையும் நாகநாதனிடம் கொட்டித் தீர்த்தான்.
விக்கித்துப் போனான் நாகநாதன் இவை அனைத்தையும் கேட்டு. அவனும் கண்ணீரில் மிதந்தான்.பிறகு மெதுவாக அவன் முதுகை தடவிக் கொண்டே சாந்தப்படுத்தி, ” கவலைப்படாதே! நான் கொஞ்ச நாள் உன்னோட இருப்பேன். நமக்கு எழுதிய விதியை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது. உனக்கு ஒரு சேன்ஜ் வேணும்னா சென்னை வந்து எங்க வீட்ல தங்கலாம். எனக்கு ரெண்டு பசங்க.பிரசாத் பெரியவன், ஆர்கிடெக்ட். சின்னவன் திலக் காமர்ஸ் படிக்கறான் சி.ஏ படிக்க ஆர்வத்தோடு இருக்கான்.” என்று கூறினான்.
“ரொம்ப தேங்க்ஸ்டா நாகு. என் பொண்ணு ரேணுகா மெடிக்கல் ஃபீல்டுல இருக்கா. பையன் ஜகதீஷ் ஃபேஷன் சம்மந்தப்பட்ட படிப்புகளை படிக்கிறான்.ஆமாம், எல்லாம் சொன்னே, நளினா பத்தி ஏதும் சொல்லலையே, எப்படி இருக்கா? எவ்வளவு காலமாச்சு பேசி! இந்த லைஃப் ரேஸ்ல கொஞ்சமாவது ஜெயிக்க நிறையவே தியாகம் செய்ய வேண்டியிருக்கு இந்த காலத்துல.
நாம சின்னவங்களா இருந்த காலத்தில இந்த கண்றாவிகள் எல்லாம் கிடையாது. கணினி, செல் ஃபோன், லேப்டாப், வைஃபை, ப்ளூ டூத், இயர் பட், இன்னும் என்னவெல்லாமோ இருந்து தொல்லை தருது. தேவையாவும் இருக்கு .இதெல்லாம் மனுஷங்களை தள்ளி தூரத்தில் வைக்கத்தான் உதவியாக இருக்கே ஒழிய சேர்ந்து வாழ ஒரு உதவியாக இருக்கற மாதிரி எனக்கு தெரியல. நாமும் அப்படியே இதுக்குள்ள போய் இப்ப பாரு இருபது, இருபத்தி மூணு வருஷம் கழிச்சு சந்திக்கும்படி ஆயிடுச்சு.சரி, நளினா எப்படி இருக்கா, அதை சொல்லு” என்றான் ரெங்கராஜன்.
“எல்லாம் சொல்றேன். நீ எப்படி என் அட்ரஸ் கண்டுபிடிச்சே,அதை சொல்லுடா! ஆச்சரியமா இருக்கு எனக்கு” என்று நாகநாதன் கேட்டான். “ஓ, அதுவா, முதல் வாரத்தில் நான் இங்க வந்தவுடனேயே அந்த வேலைல இறங்கிட்டேன். நம்ம ரெண்டு பேருக்கும் நல்லா தெரிஞ்சவங்க, பழகினவங்களை நேரா போய் பாத்தேன். உனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். உறையூரில் ஒரு தடவை உன்னோட தூரத்து உறவுன்னு சொல்லி ஏதோ கல்யாண விஷயமா வேதாசலம் அப்படிங்கற நபரை பாத்துட்டு வர உங்கப்பா சொன்னபோது நானும் உங்கூட வந்தேன் தெரியுமா, அவரப்போய் பார்க்கப் போனேன். அவருக்கு வயசானாலும் நல்லா ஞாபகம் வச்சிருக்காரு எல்லாத்தையும். அவரு பையன் மூர்த்தி நம்பரை கொடுத்து ஃபோன் செய்யச் சொன்னாரு. அவன் உங்க வீட்டுக்கு வந்திருக்கான்னும், உன்னை ரெண்டு, மூணு தடவை சந்திச்சு பேசி உன் உதவியால ஒரு வேலை கிடைச்சதுன்னும் சொல்லிட்டு, நீ புதுசா கட்டி போன வீட்டு விலாசத்தையும் தந்தான். ஆனால் உன் மொபைல் நம்பர் அவன் கிட்ட இல்லேன்னும் சொன்னான். அது கிடைச்ச ரெண்டு நாள்ல உனக்கு லெட்டர் எழுதி அனுப்பினேன். இதான் விவரம் ” என்ற ரெங்கராஜன்” சரி, இப்ப நீ சொல்லு ” என்றான்.
“டேய், நளினா எனக்கு மனைவி மட்டும் இல்லடா, ஃபிரெண்ட், நல்ல ஆசிரியர், பெத்தவங்க எப்படி பாத்துகிட்டாங்களோ அந்த மாதிரி ஒரு பாச உணர்வு, நான் துக்கப்படக்கூடாது,கஷ்டப்படக்கூடாது அப்படின்னு எல்லாத்துக்கும் நல்ல கோ ஆபரேஷன் செய்யும் அக்கறை எல்லாம் கலந்த எனக்கு கிடைச்ச அதிர்ஷ்ட பெண்மணி. அவளை கேக்காமல் எதையும் செய்ய மாட்டேன். அவளை ஆலோசிக்காமல் ஏதாவது ஒண்ணு செய்ய முனைஞ்சா அது எனக்கு சரியா வராதுங்கற நம்பிக்கை மனசுல பதிஞ்சிடுச்சு. அவளும் நல்லவிதமாத்தான் ஐடியா கொடுத்து எனக்கு ஊக்கம் கொடுக்கறா இன்னிக்கு வரைக்கும். அதனால அவளைக் கேட்டுத்தான் முடிவெடுப்பேன் எதுவானாலும்.
சரி, நீ என்ன பண்றே, என்னோட கிளம்பி வா.வந்து பத்து நாள், எதுக்கு பத்து நாள், எத்தனை நாள் எங்களோட இருக்கணும்னு தோணுதோ அவ்வளவு நாள் இரு. நாளைக்கு காலைல இந்த ஊர் பூமிநாதன் கோவிலுக்கு போய்விட்டு அதுக்கப்புறம் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை இதெல்லாம் போய் பழைய நினைவோட சுத்திட்டு வருவோம். நாளை மறுநாள் சென்னைக்கு கிளம்புவோம். என்ன சொல்ற?” என்று நாகநாதன் கேட்டான்.
“நாளை மறுநாள் வேண்டாம். தோட்டத்தில் பின் சுவர் பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு. அதை நாளை மறுநாள்தான் மேஸ்திரி வந்து செஞ்சு தரேன்னு இருக்காரு. திருஞானம் அன்னிக்கு வெளியூர் போறான். அதனால, இன்னிக்கு ட்யூஸ்டே, நாம ஃப்ரைடே போகலாம். என் கார்லயே போய்டலாம். நீ எப்படி, கார் வச்சிருக்கியா, ரொம்ப ஸிம்பிளா இருக்கற ஆளாச்சே, அதான் கேட்டேன் “. எனக்கூறி சிரித்தான்.
“கார் எல்லாம் இருக்குடா, அது கூட நளினாதான் செலக்ட் பண்ணி பிரசாத்தும் அவளும் முடிவெடுத்தாங்க.நான்தான் ட்ரெயின்ல வரணும்னு நினைச்சு காரை எடுத்துட்டு வரலை.” என்றான் நாகநாதன்.
அடுத்த நாள் அவர்கள் இருவரும் பழைய நினைவுகளுடன் திருச்சி,ஸ்ரீரங்கம், மற்ற பல இடங்களை சுற்றி வந்தனர். இரவு வெளியே உணவருந்தி விட்டு வீட்டுக்கு வந்து அந்த நாட்களின் நிகழ்வுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நாகநாதனின் கைபேசி ஒலித்தது. பிரசாத் அழைத்தான். ” ஹலோ, பிரசாத், நல்லா இருக்கேன்டா. இல்லை, ரெங்கராஜன் அங்கிள் மட்டும்தான் இருக்காரு. பசங்க எல்லாம் வந்துட்டு பத்து நாள் தங்கிட்டு திரும்ப போய்ட்டாங்க. பாவம், தேவகி ஆன்ட்டி ஈஸ் நோ மோர்.ஆமாம்பா, கஷ்டம்தான். எஸ், இங்கதான் இருக்காரு, பேசுறியா, இதோ அவர்கிட்ட தரேன் இரு” என்று சொல்லி விட்டு, “ரெங்கா, என் பையன் பிரசாத் லைன்ல, உன்னோட பேசணுங்கறான்.” என்று கூறி கைபேசியை அவனிடம் கொடுத்தான்.
“ஹலோ, பிரசாத், ரெங்கராஜன் பேசறேன். ஹௌ ஆர் யூ? உன் தம்பி திலக் எப்படி இருக்கான்?அம்மாவை கேட்டதா சொல்லு” என்று ரெங்கராஜன் சொல்ல, ” அயம் ஃபைன் அங்கிள். திலக் நல்லா இருக்கான். அப்பாவும் அம்மாவும் உங்களைப் பத்தியும், உங்க ரெண்டு பேரோட நட்பு பத்தியும் நிறைய சொல்லியிருக்காங்க. ஆன்ட்டி காலமானது ரொம்ப வருத்தமான செய்தி. மை டீப் கண்டொலன்ஸஸ்.எங்களுக்கும் அந்த நிலைதான். கஷ்டமா இருக்கு.என்ன செய்றது? மனசை கொஞ்சம் கொஞ்சமா சமாதானம் செஞ்சுக்க வேண்டிருக்கு.அப்பா உங்களை பாத்ததுல நல்லா ஹேப்பி மூட்ல இருக்காதுன்னு அவர் பேசற விதத்திலயே தெரியுது.” என்றான் பிரசாத்.
“என்னப்பா மன சங்கடம்? அப்பா ஒண்ணும் சொல்லையே, அம்மாதான் அவருக்கு எல்லாமே, அம்மாவைக் கேட்டுத்தான் எல்லாத்தையும் செய்வேன் இந்த நாள் வரையில், நாங்க எல்லாரும் அப்படித்தான். அப்படின்னு சொன்னாரு. வேற ஏதும் சொல்லவே இல்லையே.” என்றான் ரெங்கராஜன்.
அப்போது பிரசாத், “அங்கிள், நீங்க அப்பாவோட கிளம்பி இங்க வர முடியுமா? வந்தா தெரிஞ்சுப்பீங்க. எங்க அம்மாதான் எல்லாம்னு அவர் சொன்னது நிஜம்தான். அதுக்கப்புறம் நீங்க இங்க வாங்க, பேசலாம். இப்ப அப்பாகிட்ட எதையும் கேட்காதீங்க தயவு செஞ்சு” என்றான்.
“ஓ.கே. நாளைக்கே கிளம்பி வரேன். நான் எதுவும் அவனை கேட்க மாட்டேன். அப்பாகிட்ட ஃபோனை தரேன் ” என்று சொல்லி ரெங்கராஜன் “நாகு, பிரசாத் லைன்ல, நான் பேசிட்டேன் ” என்று கூறி அவனிடம் கைபேசியை நீட்டினான்.பிறகு ஒரு நிமிடம் நாகநாதன் பேசிவிட்டு திரும்ப வந்து ரெங்கராஜனிடம் ” என்னடா, என் பையன் என்ன சொல்றான்?”என்றான். அதற்கு பதில் கூறாமல் ” நாகு, நாம நாளைக்கே சென்னை கிளம்பலாம். நான் திருஞானம் கிட்ட காலைல அந்த சுவர் வேலையை அவன் ஊருக்கு போயிட்டு வந்ததுக்கப்புறம் பாத்துக்க சொல்லிடறேன். எனக்கு இங்கேயிருந்து கிளம்பி உன்னோட வரணும்னு மனசுல முடிவு எடுத்துட்டேன். காலைல டிஃபன் சாப்பிட்டு கிளம்பிடலாம் “. என்றான் ரெங்கராஜன்.
அதேபோல் திட்டமிட்டபடி ரெங்கராஜன் திருஞானத்திடம் பேசிவிட்டு, காலை உணவை முடித்து இருவரும் கிளம்பி விட்டனர். வழியில் எவ்வளவோ அவர்கள் பேசிக்கொண்டாலும், ரெங்கராஜன் மனதில் பிரசாத் சொன்ன வார்த்தைகள் முன்னே நின்று கொண்டே இருந்தது. தன் நண்பன் வீட்டில் அந்த பிரச்னை எதுவாயிருந்தாலும் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் பயணம் செய்து கொண்டிருந்தான்.
மதியம் சென்னை அடைந்து நாகநாதன் வீட்டிற்கு போகும் முன்பு, காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு ரெங்கராஜன் போய் பழங்கள், பூ, இனிப்பு வகைகளை வாங்கி வந்தவன். ” நாகு, நீ பாக்கற பார்வை புரியுது. எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி? அப்படின்னு நினைக்கிறே! இப்பதான் உன் குடும்பத்தை ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கப் போறேன். வெறும் கையோடு போய் நிக்க மனசில்லேடா அதனாலதான்” என்றான்.
குரோம்பேட்டையில் இருந்த நாகநாதன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வீட்டு வாசலில் பிரசாத், திலக் இருவரும் இவர்கள் வருகையை எதிர்பார்த்து வெளியே நின்றிருந்தனர். காரிலிருந்து இறங்கிய ரெங்கராஜனுக்கு இருவரையும் அடையாளம் கண்டு கொள்ள நேரம் ஆகவில்லை. ” பாரு, கரெக்டா உனக்கு ப்ராமிஸ் செஞ்சபடி வந்து சேந்துட்டேன்.உங்க அப்பாவையும் பத்திரமா அழைச்சுட்டு வந்துட்டேன். அம்மா கிட்ட சொல்லு” என்று சிரித்தபடியே பிரசாத்தை பார்த்து ரெங்கராஜன் கூறினான்.
எல்லோரும் உள்ளே சென்றனர். “அங்கிள், நான் லன்ச் ஆர்டர் பண்றேன்.நீங்க என்ன சாப்டறீங்க?”என்றான் பிரசாத். ” உனக்கு அந்த கவலையே வேண்டாம்.நான் டிஃபன், வெரைட்டி ரைஸ் எல்லாம் வாங்கிட்டேன். இஷ்டப்படி சாப்பிடுங்க” என்று ஒரு பெரிய பையை நீட்டினான். ” அம்மாவை கூப்பிடு. இந்த பழம், பூவெல்லாம் நளினா கிட்ட நானே தருவேன்” என்று சொல்ல, ” அப்பா, நீங்க என்ன எதுவும் சொல்லலையா? “என்று பிரசாத், நாகநாதனை கேட்க, “இல்லைடா, அவன் இருந்த நிலையில்..” என்று கூற ஆரம்பிக்கும்போது, ரெங்கராஜன் ” டேய், என்னடா மறைக்கிறே, நான் நளினாவை உடனே பாக்கணும். அவகிட்ட பேசிக்கிறேன்” என்று சத்தமாகப் பேசினான். அதற்குள் திலக் ” அப்புறமா சாப்பிடலாம். அவரை அந்த ரூமுக்கு அழைச்சிட்டு போங்க முதல்ல” என்று கத்தினான். ” வாடா, ரெங்கா, வந்து பாரு” என்று அவன் கையை பிடித்து அழைத்துக்கொண்டு பின்பக்கம் இருந்த அறைக்குள் நாகநாதன் அழைத்துச் சென்றான். பதட்டத்துடன் ரெங்கராஜன் வேகமாக நடந்தான்.
அறையின் உள்ளே நான்கடி உயரம், மூன்றடி அகல சட்டத்திற்குள் நளினா புன்னகையுடன் கூடிய படம் நின்று கொண்டிருந்தது. அதைப்பார்த்த ரெங்கராஜன் ஏதும் கேட்கும் முன்னரே “போய்ட்டா டா,அவ திடீர்னு என்னை விட்டுப் போய்ட்டா ரெங்கா, என் தங்கம், என் வலது கையா இருந்தவளை எமன் கொண்டு போய்ட்டாண்டா ரெங்கா! நான் எதைச் சொல்வேன்டா நீ இருக்கற நிலைல. ” என்று கதறியபடி அவனைக் கட்டிப்பிடித்து குலுங்கினான் நாகநாதன்.
பிரசாத்தும், திலக்கும் அப்பாவின் முதுகைத் தடவியபடியே அழுது கொண்டிருந்தார்கள். அழுதபடியே ரெங்கராஜனிடம் ” அப்பா நல்லா அழட்டும் அங்கிள். மனசுல அதிர்ச்சியையும், தாங்க முடியாத துக்கத்தையும் தேக்கி வச்சு எங்ககிட்ட தைரியமா இருக்கற மாதிரி நடிச்சிட்டே இருந்தாரு. நாங்க பாக்காதபோது தனியா இந்த ரூமுக்கு வந்து அழுதிட்டிருப்பாரு. மூணு மாசமா இதான் நடக்குது இங்க. நாங்க ரெண்டு பேரும் அவரை எங்கயாவது ஹில் ஸ்டேஷன் அழைச்சிட்டு போகலாம்னு ப்ளான் செஞ்சிருந்தோம். நல்ல வேளையாக உங்களை பாக்க வந்தாரு.உங்க லெட்டர் வந்த உடனே கொஞ்சம் தெளிவா ஆகிட்டாரு” என்று பிரசாத் சொல்ல, “டேய், நாகு, என்னடா இவ்வளவு பெரிய துக்கத்தை மறைச்சு எனக்கு தைரியம் சொல்லிட்டிருந்தியேடா, என் பேர்ல உனக்கு எவ்வளவு அன்பு இருக்கோ அவ்வளவு எனக்கும் உன் மேல இருக்குடா, அழாதடா, நண்பா, நானும் நீயும் இப்போ ஒரே கோட்டிலதான் இருக்கோம் டா. ரெண்டு பேரும் சேர்ந்து இதிலிருந்து வெளியே வர முயற்சி செய்வோம் நாகு.” என்று தழுதழுத்தபடியே ரெங்கராஜன் கூறினான்.
சற்றே அழுகையை அடக்கி சமாதானம் ஆகி நாகநாதன் ” நீ சொன்னது கரெக்ட் டா.இவ்வளவு நாளுக்கு அப்புறம் சந்திக்கறப்ப, ரெண்டு பேரையும் இப்படி ஒரு கோட்டில நிறுத்திட்டாரே கடவுள். எனக்கு எல்லாம் வெறுத்து போச்சு டா. அவள் திடீர்னு ஏதோ நெஞ்சை வலிக்குதுன்னா, டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போறதுக்குள்ளேயே நாற்காலியில் சாஞ்சபடியே காலமாயிட்டா. அதை இப்ப நினைச்சாலும் அடி வயித்துல வலி வருது. நல்ல வேளை, உன் லெட்டரை பாத்து உன்கிட்ட சொல்லி ‘ஓ’ ன்னு கதறலாம்னு வந்தா, நீயும் அதே நிலை. நான் என்ன செய்ய? மௌனமாக இருந்துட்டேன்” என்றான்.
ரெங்கராஜன் உடனே ” ஒருவருக்கொருவர் நம்ப குடும்பம் இப்போ துணையா இருக்கணும்னு முடிவு செய்வோம் இந்த நிமிஷத்துல, நளினா படத்துக்கு முன்னாடி. அமெரிக்காவில எனக்கு இருக்கற கான்டாக்ட வச்சு உன் ரெண்டு பசங்களையும் நல்ல ஸ்டேஜுக்கு கொண்டு வந்துடறேன். என்னோட மண்ணச்சநல்லூர் வந்துடு நீ. இதை வாடகைக்கு விட்டுடு. இதெல்லாம் திலக் படிப்பு முடிஞ்சதும் செய்யலாம். ” என்று அழுத்தமாக ரெங்கராஜன் பேசினான்.
“நடக்கக்கூடாதது நம்ப ரெண்டு குடும்பத்திலும் நடந்திடுச்சு. பசங்க நல்லா முன்னேறி வரதை பாத்து ஆறுதல் அடையலாம். என்ன விதியோ, மட்டமான விதி நம்ப ரெண்டு பேருக்கும் அமைஞ்சிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா தைரியத்தை கூட்டித் தான் வரணும். ஒண்ணும் செய்ய முடியாத நிலை இப்போ ” என்றான் நாகநாதன்.
பிறகு எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி அமைதியாகி உணவருந்தினர்.அடுத்த நடவடிக்கைகள் பற்றி கலந்து ஆலோசித்தனர்.
அன்றிரவு அந்த நால்வரும் ‘ இப்படி இந்த இரு பெண்மணிகளும் எதிர்பாராத வகையில் மறைந்து தங்களின் குடும்பத்தை இவ்வளவு வருடங்கள் இடைவெளிக்குப்பின் இணைக்கும் பாலம் போன்ற ஒரு கோடு போட்டுவிட்டு சென்ற பெண் தெய்வங்களே’ என்று சொல்லி மனதை தேற்றிக் கொண்டிருந்தனர்.