இருவரும் ஒன்றே

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 19,811 
 

மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவள் எதிரில் பாங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள்.

“”என்னப்பா… நல்லா இருக்கியா… பார்த்து ரொம்ப நாளாச்சு… நானும் லாக்கருக்கு வரணும், பாங்குக்கு போகணும்னு அவர்கிட்டே சொல்லிட்டு இருக்கேன். நேரம் கிடைக்கலை.”

“”போன வாரம் கூட சார் பாங்க் வந்தாரே. டெபாசிட் பணம் அஞ்சு லட்சத்தை ஏதோ அவசரத் தேவைன்னு பாங்க் மானேஜர்கிட்டே பேசி, வாங்கிட்டுப் போனாரு. நான்தான் அவருடன் இருந்தேன்.”

ஒரு கணம் துணுக்குற்றவள்,

“”ம்… ஆமாம். மறந்துட்டேன். சரி… அடுத்த வாரம் வரேன். வரட்டுமா. வேலை இருக்கு.”

அவனிடம் அவசரமாக விடைபெற்றாள்.

“”வினோ… நம்ப மதுமிதா பேரில் நல்ல சேமிப்பு பணத்தை டெபாசிட் பண்ணிடுவோம். சேவிங்க்ஸ் அக்கௌண்டில் இருந்தா தேவைப்படும் போது எடுக்கிற மாதிரி இருக்கும். அஞ்சு வருஷத்துக்கு பிக்ஸட் டெபாசிட்டில் போட்டா.. அவ காலேஜ் படிப்புக்கு உதவியாக இருக்கும். என்ன சொல்ற!

“”நீங்க சொல்றது நல்ல யோசனையாக இருக்கு. அப்படியே செய்வோம்.”
அவர்கள் பிஸினஸில் லாபம் கிடைத்த பணத்தையெல்லாம், போன வருடம் தான் மகள் பெயரில் டெபாசிட் செய்தார்கள். அதை எடுத்திருக்கிறார் என்றால் அப்படி என்ன தேவை. அதுவும் அவளிடம் கூட சொல்லாமல் வினோதினி புரியாமல் தவித்தாள்.

“”வினோ, உனக்கு விஷயம் தெரியுமா. அப்பா போனில் பேசினாரு.
நம்ப அனுவுக்கு அமெரிக்கா வரன் பார்த்துட்டு இருக்காங்கன்னு சொன்னேன் இல்லையா. அது முடிவாகிடுச்சாம். பணம், நகை சீர் வரிசைன்னு அதிகம் செலவாகும்னு அப்பா யோசிச்சாரு. ஆனா நல்ல இடமா இருக்கு, கூட குறைச்சு போனாலும் எப்படியாவது சமாளிச்சுடலாம்னு பேசி முடிச்சுட்டாங்களாம். அடுத்த மாசம் நிச்சயம் பண்றாங்க. அப்பா சொன்னாரு.”

இப்போது தான் வினோதினிக்கு எல்லாம் தெளிவாக விளங்கியது. தங்கை கல்யாணத்திற்காக தான் அஞ்சு லட்சத்தை எடுத்திருக்கிறார். இருந்தாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், அவ்வளவு பெரிய தொகையை தூக்கிக் கொடுத்திருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“”நல்ல விஷயம் தான். பணம் நிறைய செலவாகும் போலிருக்கே. மாமா கல்யாண செலவுக்கு பணம் வச்சிருக்காரா.”

“”என்ன இப்படி கேட்டுட்டே… அனுவுக்கு கல்யாணத்துக்காக அப்பா ரொம்ப வருஷமா பணம் சேர்த்துட்டு வர்றாரு. நல்லா தடபுடலா சிறப்பா செய்வாரு பாரேன்.”
கணவனைக் கூர்ந்து பார்த்தவள்,

“”நாம் ஏதாவது பணம் கொடுக்கணுமா.”

“”ம்கூம்… அப்பா நிச்சயம் வாங்க மாட்டாரு. மாசம் செலவுக்கு பணம் கொடுத்தால் கூட, வேண்டாம் சங்கர் என்கிட்டே போதிய அளவு பணம் இருக்கு. எல்லா விஷயத்தையும் ப்ளான் பண்ணிச் செய்யறதால எனக்குப் பண விஷயத்தில் தட்டுப்பாடே வந்ததில்லை. நீ கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கிறே. உன் குடும்பத்துக்கு சேர்த்து வைன்னு சொன்னாரு. நாம பிரியப்பட்டு அனுவுக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. அனுவுக்கு ஒரு ப்ரேஸ்லெட்டும், பட்டுப்புடவையும் எடுத்துக் கொடுப்போம்.”

மௌனமாக இருந்தாள் வினோதினி. எனக்குத் தெரியாமல் அப்பாவிடம் பணத்தைக் கொடுத்தது மட்டுமில்லாமல் என்ன நாடகம். இருக்கட்டும். அவர் வாயாலேயே உண்மையை வரவழைக்க வேண்டும்.

நிச்சயதார்த்த வீடு கலகலப்பாக காட்சியளித்தது. வினோதினியின் பெற்றோரும் சம்பந்தி வீட்டு நிச்சயதார்த்த விழா என்பதால் வந்திருந்தார்கள்.
சங்கரும் மாமனார், மாமியாரைக் கூட்டத்தில் விடாமல், அவர்கள் தங்க ஹோட்டல் ரூம் ஏற்பாடு செய்திருந்தான்.

வினோதினியிடம் நகைகளைக் காண்பித்த அவள் மாமியாரும் சங்கர் பணம் கொடுத்ததைப் பத்தி வாய் திறக்காமல் இருந்தது வேண்டுமென்று அவளிடம் மறைக்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது.

“”வினோ, அனுவுக்கு வாங்கின நகைகள் நல்லா இருக்காம்மா. இப்ப இருக்கிற விலைவாசியிலே வாங்க முடியுமா. ஆரம்பத்திலிருந்து இரண்டும், மூணுமாக பவுன் வாங்கினது நல்லதாப் போச்சு. உங்க மாமா எதிலும் முன் ஜாக்கிரதை. அனு பெயரில் போட்டு வச்சிருந்த அஞ்சு லட்சம் பணத்தைத் தான் சீர் சாமான்கள் வாங்கறதுக்கும், கல்யாணச் செலவுக்கும் பயன்படுத்திட்டு இருக்காரு. சங்கரும் பணம் எதுவும் தேவைப்படுதான்னு கேட்டான். அதான் தாராளமாக பணம் இருக்கே. வேண்டாம்னு சொல்லிட்டோம்.”

வினோதினிக்கு மாமியார் மீது எரிச்சல் வந்தது. அவர் தான் என்கிட்டே மறைக்கிறார் என்றால், எல்லாரும் சேர்ந்து கொண்டு தான் சொல்லி வைத்தாற் போல பேசுகிறார்கள்.

“”சரி வினோ… உங்க அம்மா, அப்பா வந்திருக்காங்க. அவங்களுக்கு எந்தக் குறையயுமில்லாமல் பார்த்துக்க. ஹோட்டல் ரூமில் இருக்காங்க. அவங்க மண்டபம் வர்றதுக்கு ஞாபகமாக சங்கர்கிட்டே சொல்லி கார் அனுப்பி வச்சுடுமா.”
எல்லாம் அவர் கொடுத்த அஞ்சு லட்சம் வேலை செய்யறது. சம்பந்தி மேல் என்ன கரிசனம்?

“”அண்ணி, நிச்சயத்துக்குப் புடவை எடுக்கும்போது, அப்பா உங்களுக்கும் எடுத்திருக்காரு. புடவை உங்களுக்குப் புடிச்சிருக்கா.”

கையில் மெரூன் வண்ணத்தில் கெட்டி ஜரிகை போட்ட பட்டுப்புடவையுடன் நிற்க,
“”நல்லா இருக்கு. எனக்கு எதுக்கு. கல்யாண பெண் உனக்கு எடுத்தா பத்தாதா. எதுக்கு தேவையில்லாத செலவு.”

“”என்ன அண்ணி அப்படிச் சொல்லிட்டிங்க. இந்த வீட்டுக்கு ஒரே மருமகள். உங்களுக்குச் செய்யறது செலவாகிடுமா. கல்யாணத்துக்கு என் மருமகளுக்கு ஏதாவது நகை வாங்கணும்னு அப்பா சொல்லிட்டிருக்காரு தெரியுமா?”

இவர்கள் காட்டும் அன்புக்கும், கரிசனத்துக்கும் பின்னால் ஒளிந்திருப்பது தன் கணவன் கொடுத்த பணம்தான் என்பது புரிய, அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

நிச்சயதார்த்த வைபவம் நல்லபடியாக முடிய, வந்த விருந்தினர்கள் விடை பெற, அம்மாவிடம் வந்தாள் வினோதினி.

“”அம்மா உன்னோடு உட்கார்ந்து பேசவே நேரமில்லை. வந்தவங்களை கவனிக்கவே நேரம் சரியா இருந்தது. அப்புறம் சொல்லும்மா தம்பி நல்லா படிக்கிறானா?”

“”ம்… நல்லா படிக்கிறான். இரண்டு நாளா ஹோட்டலில் சாப்பிட்டுக்கிட்டு காலேஜ் போயிருப்பான். நாங்களும் கிளம்பணும். அப்பாவும் பிஸினஸ் விஷயமாக பெங்களூரு போகணும்னு சொன்னாரு. உன் மாமியார் உன்னைப் பத்தி பெருமையாகச் சொன்னாங்க. மனசுக்கு சந்தோஷமாக இருந்துச்சு.”

அதற்குள் அங்கு வந்த வினோதினியின் மாமியார், “”வினோ, உள்ளே ஸ்வீட் பாக்கெட், பழங்கள் எல்லாம் நிறைய இருக்கு. அம்மாகிட்டே கொஞ்சம் கொண்டு வந்து கொடும்மா.”

சொன்னவள், “”சம்பந்தி கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னால வந்திருந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்.”

“”அது எங்க கடமை. கட்டாயம் வர்றோம். இது எங்கவீட்டுக் கல்யாணம்.”
ஸ்வீட் பாக்கெட்டுகளையும், பழங்களையும் அம்மாவிடம் கொடுத்த வினோதினி, “”அப்பா எங்கேம்மா” அம்மாவிடம் கேட்க, “”மாப்பிள்ளையோட மாடியில் பேசிட்டிருக்காரும்மா. இனி ஹோட்டல் ரூமை காலி பண்ணிட்டுக் கிளம்பணும். நேரமாச்சு நீ போய் அப்பாவைக் கூட்டிட்டு வாம்மா.”

மாடி ஏறியவள், அவர்கள் பேசுவதில் தன் பெயர் அடிபட அங்கேயே தயங்கி நின்றாள்.

“”மாமா, உங்களையும் நான் என் அப்பா ஸ்தானத்தில்தான் வச்சிருக்கேன். நீங்க ஏன் இதை பெரிய விஷயமாக நினைக்கிறீங்க. பிஸினஸில் பணத் தட்டுப்பாடு வர்றது சகஜம் தானே. இப்பதான் ஹரியை காலேஜில் சேர்த்திருக்கீங்க. உங்ககிட்டே கையில் ரொக்கமாக பணமில்லை. நான் பாங்கில் டெபாசிட் பண்ணின பணம் எனக்கு இப்பத் தேவையில்லை. அதான் எடுத்துக் கொடுத்தேன். உங்க பிஸினஸ் நல்லபடியாக சகஜ நிலைக்கு வந்ததும் மெதுவா திருப்பித் தரலாம். ஒன்றும் அவசரமில்லை. என் அப்பாவுக்கு ஒரு கஷ்டம்னா, நான் பார்த்துட்டு இருப்பேனா… அது மாதிரிதான் நீங்களும் ஒண்ணும் நினைக்க வேண்டாம் மாமா. உங்க பிஸினஸை நல்லபடியா பாருங்க.”

“”மாப்பிள்ளை, இது உங்க பெருந்தன்மையைக் காட்டுது. பணம் கொடுத்து உதவினதுமில்லாம, இது விஷயம் வினோதினிக்குத் தெரிய வேண்டாம். அப்பாவுக்கு பிஸினஸில் நஷ்டம் வந்துடுச்சு சிரமப்படறாருன்னு, கஷ்டடப்படுவான்னு சொல்லிட்டிங்க. எனக்கென்னவோ வினோதினிக்கு தெரிவிக்கலாம்னு தோணுது.”

“”வேண்டாம் மாமா எதுக்கு. அவளைப் பொறுத்தவரை இது தெரிஞ்சு பெரிசா ஒண்ணும் ஆகப் போறதில்லை. அவ என்னைக்குமே கொடுப்பதைத் தடுப்பவ கிடையாது. இப்ப என் தங்கை கல்யாணத்துக்கும் ஏதும் பணம் கொடுக்கணுமான்னுதான் கேட்டா. அவளுக்கு நல்ல மனசு. எங்க அப்பா, அம்மாவை பெத்தவங்க ஸ்தானத்தில் வச்சு வினோதினி அன்பாகப் பழகறா… நானும் உங்களை அதே நிலையில் தான் வச்சுப் பார்க்கிறேன். எங்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. எங்க ரெண்டு பேருக்கும் பெத்தவங்க நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான். சரி மாமா. நேரமாச்சு. கீழே நம்மைத் தேடுவாங்க. வாங்க போகலாம்.”

தன்னைப் பெற்றவர்களை, தாய் தந்தையாக நினைத்து உதவிய கணவனை நினைத்துப் பெருமிதப்பட்டவள், தன் மேல் கணவனும், அவன் குடும்பத்தினரும் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயத்திற்கு சிறிதும் தகுதியில்லாமல் இருப்பதை உணர்ந்து, வெட்கப்பட்டவளாக வந்த சுவடு தெரியாமல் கீழே இறங்கினாள்.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)