கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: May 2, 2024
பார்வையிட்டோர்: 384 
 
 

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 5-10

1. வேதாந்தி

அன்று பகல் எல்லோரும் அடுத்த ஊருக்குப் பெண் ‘பார்க்க’ ப் புறப்படுவதாக இருந்தார்கள். பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஸ்வர்ணம் கவனித்துக் கொண்டிருந்தாள். பாதி விழிப்புடன் படுத்திருந்த ரகுபதியின் காதுகளில் வீணையுடன் இழைந்துவந்த மத்யமாவதி ராகம் விழுந்து பரவசமூட்டியது. மத்ய மாவதியுடன் ஸரஸ்வதி, அநேகமாகப் பாட்டை முடித்து விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் ரகுபதியின் படுக்கை அறை வாயிற்படியில் ஸரஸ்வதி வந்து நின்று, “அத்தான்! இன்றைக்குக்கூட என்ன இவ்வளவு தூக்கம்! சாவித்திரியைக் கைப்பிடிக்கப் போகும் சத்தியவானாகிய நீ இப்படிச் சோம்பேறியாக இருக்கலாமா அத்தான்? காபி ஆறிப்போகிறதாம். அத்தை ஒரு பாட்டம் சமையலறையில் இருந்து கொண்டு கத்துகிறாள். ஹும் . . ஹும். எழுந்திரு! அத்தான் எழுந்திரு! இல்லாவிட்டால் திருப்பள்ளியெழுச்சி பாடினால்தான் எழுந்திருப்பாயோ?” என்று பரிகாசம் தொனிக்க உற்சாகத்துடன் ரகுபதியின் அரைத் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.

ரகுபதி ஆச்சரியத்துடன் ஸரஸ்வதியின் முகத்தைப் பார்த்தான். பிறகு, “அப்படியானால், நேற்று வந்து போனார்களே அவர்கள் வீட்டுப் பெண்ணுக்குச் சாவித்திரி என்று பெயரா, ஸரஸு?’ என்று கேட்டான்.

“ஆமாம் அத்தான்! புராணத்துச் சாவித்திரிக்கும் இவளுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். அப்பா, அம்மாவுக்கு ரொம்ப செல்லப் பெண்ணாம் – பாட்டி ஒருத்திக்கு அருமைப் பேத்தியாம்! நாலு பேருடன் பிறந்தவளாக இருந்தாலும், தனிக் காட்டு ராணிமாதிரி அதிகாரம் செய்வாளாம்!”

ஸரஸ்வதி, குறும்புப் புன்னகையுடன் தலைப் பின்னலை கையில் முறுக்கிக்கொண்டே ரகுபதியைப் பார்த்து இவ்விதம் கூறினாள்.

“ஓஹோ! உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே, ஸரஸு! நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. நீ சங்கீதம் பயில்வதை விட்டு விட்டு, ஏதாவது பத்திரிகாலயத்தில் வேலைக்குச் சேர்ந்தாயானால், இந்தமாதிரி சரடு விடுவதில் அர்த்தம் உண்டு!” என்றான் ரகுபதி சிரித்துக்கொண்டே.

”ஐயையோ, சரடா? இல்லை. அத்தான், நிஜமாகத்தான் சொல்லுகிறேன். பெண்ணின் தகப்பனாரே அத்தையிடம் தன் பெண்ணைப்பற்றிய பிரதாபங்களை வாய் ஓயாமல் அளந்து கொண்டிருந்தார்! ” என்றாள் ஸரஸ்வதி.

அவர்கள் இருவரும் மேற்கொண்டு தொடர்ந்து வம்பளப்பதற்கு முடியாமல், அடுப்பங்கரையிலிருந்து அதிகாரத்துடன் ஒரு குரல் அவர்கள் இருவரையும் அதட்டியது.

”ஸரஸு! பேச ஆரம்பித்தால் ஓய மாட்டாயே நீ? அவனுந்தான் என்ன? பாட்டுப் பைத்தியம்; பேச்சுப் பைத்தியமும்கூட” என்று அத்தை ஸ்வர்ணம் அதட்டினாள்.

ஸரஸ்வதி மாடிப் படிகளில் மெதுவாக இறங்கினாள். “சிந்தை அறிந்து வாடி, செல்வக் குமரன் – சிந்தை அறிந்து வாடி” என்று பாடிக்கொண்டு, அத்தானைப் பார்த்துக் கலகலவென்று! சிரித்தாள் அந்தப் பெண் ஸரஸ்வதி. சிரிப்பில் சேர்ந்துகொண்ட ஸ்வர்ணம், ஸரஸ்வதியின் அருகில் வந்து வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவிக் கொடுத்தாள். பிறகு, ”ஸரஸு! நீ என்னதான் உன் அத்தானுடன் கபடமில்லாமல் பழகினாலும், பிறர் தவராக நினைப்பார்கள், அம்மா. போகிற இடத்திலெல்லாம் நீ பேசாமல் இருக்கிறதில்லை. இந்தக் காலத்தில் நல்லது எது, கெட்டது எது என்பதை யார் ஆராய்ந்து பார்க்கிறார்கள்? நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. ஸரஸு!” என்றாள் ஸ்வர்ணம்.

ஸரஸ்வதி, அன்புடன் அத்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.

”நான் தான் உங்களுடன் பெண் பார்க்க வரப்போகிற இல்லையே, அத்தை. நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று கபடமில்லாமல் கேட்டாள்.

ஸ்வர்ணத்தின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. துஷ்டத்தனம் செய்யும் குழந்தையைத் தாய் அதட்டியதும், அதன் பிடிவாதம் அதிகமாவதைப்போல் இருந்தன, ஸரஸ்வதியின் பதிலும், செய்கையும்.

”உன்னை நான் என்ன சொல்லிவிட்டேன் ஸரஸு? லக்ஷனமாக, கன்னிப் பெண்ணாக நீ என்னுடன் வராமல், அழகாக இருக்கிறது நான் ரகுவை அழைத்துப்போய் அவர்கள் எதிரில் நிறுத்துவது? நீ வராவிட்டால், பாட்டுப் பரீக்ஷையைத்தான் யார் நடத்துவது? போ, போ. புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து கொள், போ” என்று உரிமையுடன் ஸரஸ்வதியை அதட்டினாள் ஸ்வர்ணம்.

அதென்னவோ வாஸ்தவம். அத்தான் ஒரு பாட்டுப் பைத்தியம் என்று தெரிந்த ஸரஸ்வதி, பெண் பார்க்கப் போகும் இடங்களிலெல்லாம் ஒரு சிறிய சங்கீதப் பரீட்சையே வைத்து விட்டாள் எனலாம். சில பெண்கள் அறுபது கீர்த்தனங்கள் பாடமென்று சொல்லி விட்டு, ஸ, ப,வுக்கு வித்தியாசம் தெரியாமல் விழித்தார்கள். சிலரின் சங்கீதம் ஒரே சினிமா மயமாக இருந்தது! கச்சிதமாக நாலு பாட்டுகள் பாடுகிறேன் என்று அதுவரையில் பார்த்த பெண்கள் யாரும் முன் வரவில்லை. ஸரஸ்வதி ஒரு தினம் விளையாட்டாக ரகுபதியிடம், “அத்தான்! உனக்குத் தான் வீணை வாசிக்கத் தெரியுமே. சங்கீதமே தெரியாத பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டுவிடேன்.’ பிறகு நீயே பாட்டுக் கற்றுக்கொடுத்துவிடலாம்” என்றாள்.

“ஆமாம்.. கல்யாணம் ஆன பிறகு, பிள்ளைகள் மாமனார் வீட்டில் இருந்து கொண்டு, மேற்படிப்புப் படித்துப் பாஸ் செய்கிற லக்ஷணத்தைப்போலத்தான் இதுவும் இருக்கும்!” என்றாள். அத்தை ஸ்வர்ணம் சிரித்துக் கொண்டே .

“அத்தானுடைய சுபாவம் அப்படி இல்லை அத்தை. அவனுக்கு லட்சியம் ஒன்றுதான் முக்கியம்” என்றாள் ஸரஸ்வதி.

படுக்கையில், பாதி திறந்த விழிகளுடன் பழைய நினைவுகளில் மனத்தை லயிக்க-விட்டிருந்த ரகுபதிக்குப் பளிச்சென ஞாபகம் வந்தது இந்தச் சம்பாஷணை. அதோடு, யார் லட்சியவாதி; அவனா, ஸரஸ்வதியா என்ற கேள்வியும் எழுந்தது. எப்படிப் பார்த்தாலும், தன்னை விட ஒருபடி மேலாகவே கண்டான் அவளை. நல்ல சங்கீத ஞானமும், நிறைந்த சாரீர சம்பத்தும் பெற்றவள் அவள். அழகில் மட்டுந்தான் குறைந்தவளா? தாழம்பூ மேனியும் சுருண்டு, அடர்த்தியாக, அலை பாயும் கூந்தலும் மருண்ட விழிகளும் குளிர்ந்த உதடுகளும் தாமரை மலர் போன்ற கரங்களும் பெற்று அழகியாகத்தான் இருந்தாள். அதோடு ‘ குடும்பப் பெண்’ என்பதற்கு இலக்கணமாக விளங்குபவள். உஷக்காலத்தில், வெள்ளி முளைத்திருக்கும்போது எழுந்து, முகம் கழுவி, பொட்டிட்டு, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, வீணையுடன் இழையும் மெல்லிய காலில் பாட ஆரம்பித்து விடுவாள் அவள். அவள் பாட்டைக் கேட்ட பிறகுதான் அந்த வீட்டில் மற்றவர்கள் எழுவார்கள்.

எனினும் ஒரே ஒரு குறை அவளிடம். அதுவும், ரகுபதியால் ஏற்பட்ட குறைதான். பால்யத்தில் ரகுபதியின் மாமன் மகளாகிய ஸரஸ்வதியும், அத்தான் ரகுபதியும் ஒன்றாக விளையாடியபோது ரகுபதி விளையாட்டாகப் பின்புறம் வந்து அவள் கால்களை இடறி விட்டபோது ஸரஸ்வதி விழுந்துவிட்டாள். சாதாரண விளையாட்டு, வினையாகி ஒரு கால் எலும்பு முறிந்து, நிரந்தரமான ஊனம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் குறை ஸரஸ்வதியின் மனத்திலும் அழியாத – வடுவை ஏற்படுத்திவிட்டது. என்னதான் அழகாக இருந்தாலும், என்னதான் சங்கீதம் தெரிந்திருந்தாலும், ஊனம் ஊனந்தானே! ரகுபதியும் பெரியவனாகிய பிறகு, தான் தவறுதலாகச் செய்துவிட்டதை நினைத்து வருந்தியிருக்கிறான். ”இசைக்கும், கலைக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விடுகிறேன் அத்தான். எனக்காக நீ ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்” என்று ஸரஸ்வதி ரகுபதிக்கு எவ்வளவோ முறைகள் தேறுதல் கூறியிருக்கிறாள்.

ஆனால், ஒவ்வொரு தினமும் ஸரஸ்வதி, உள்ளம் உருகிப் பாடும் போதெல்லாம் ரகுபதி இந்தப் பழைய சம்பவத்தை நினைத்துக் கொண்டு ஏங்குவான். தானே அவளை மணந்து கொண்டு விட்டால் அவளிடம் இருக்கும் குறையைப் பாராட்டாமல் இருக்க முடியும் என்று நினைத்து, அவளிடம் அவன் அதைப் பற்றிப் பிராஸ்தாபித்தபோது, அவள் ஒரு குழந்தையைப்போல் கபடமில்லாமல் சிரித்தாள். வெண்கல மணி ஒலிப்பதுபோல் கலகலவென்று சிரித்து விட்டு, “அத்தான்! பாபம் செய்தவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியந்தான். விளையாட்டாக நேர்ந்து விட்ட தற்காக உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்ள வேண்டுமா? நாலு பேர் எதிரில் நொண்டிப் பெண்ணை, மனைவி என்று அழைத்துச் செல்ல வேண்டுமா? உனக்கும் எனக்கும் என்றும் இந்தச் சகோதர அன்பே நிலைத் திருக்கட்டும், அத்தான்” என்று பெரிய வேதாந்தியைப்போல் கூறிவிட்டாள் ஸரஸ்வதி. இந்தப் பதிவைக் கேட்டு ரகுபதி ஒன்றும் பேச முடியவில்லை. வாதப் பிரதாபாதங்களுக்கு இடமில்லாமல் அவள் அளித்த பதில் ரகுபதியின் தாய் ஸ்வர்ணத்தைக்கூடப் பிரமிக்கச் செய்துவிட்டது. அத்துடன் அவர்கள் அந்த யோசனையைக் கைவிட்டு விட்டார்கள். ரகுபதிக்கு வேறு இடத்திலிருந்து ஜாதகங்கள் வர ஆரம்பித்தன. இரண்டொரு இடங்களுக்குப் போய்ப் பெண் பார்த்தும் வந்தார்கள். இந்தப் பேட்டிப் படவங்களில் ஒன்றுதான் அன்று நடைபெறவிருந்தது . அதற்குத்தான் இத்தனை அமர்க்களமும்.

2. மாமியார் நாட்டுப்பெண்

இதே மாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று அறிந்து ஒவ்வொருவரும் ஓடி ஆடிக் குதூகலத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒரு தரம் நிலைக் கண்ணாடியின் எதிரில் நின்று தன்னைக் கவனித்துக்கொள்வதில் முனைந்திருந்தாள். சாவித்திரியின் தாய் மங்களம் – வழக்கமாகத் தன் மாமியாருக்குப் பயப்படுகிறவள்கூட – அன்று தானும் கூடிய விரைவில் மாமியார் ஆகப்போகிறோம் என்கிற பெருமிதத்தில், சற்று இரைந்தே பேசிக்கொண்டிருந்தாள். சாவித்திரியின் தங்கை சீதாவுக்குத் தான் வீட்டிலே அதிகம் வேலைகள் காத்துக்கிடந்தன. சரசரவென்று மாடிக்கும் கீழுக்கும் ஹாலுக்கும் காமரா அறைக்குமாகத் தன் மேலாடை பறக்கத் திரிந்து கொண்டிருந்தாள் அவள்.

பெண்ணுக்குக் கல்யாணமென்றால் தாய்க்குத்தான் அதில் பெருமையும் பங்கும் அதிகம் என்று கூறலாம். பிள்ளை வீட்டார் வந்து சாவித்திரியைப் பார்த்துத் தம் சம்மதத்தை அறிவிப்பதற்கு முன்பே மங்களம் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசைகளைப் பற்றித் தன் கணவர் ராஜமையரிடம் பேசினாள்.

“மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்கு வைர மோதிரம் போடுவதாகச் சொல்லிவிடுங்கள். இப்போது சாவித்திரிக்குக் கணிசமாக நாலு வளையல்கள் செய்தாக வேண்டும். மோதிரச் செலவையும் சமாளிக்க முடியாது. அப்புறம் சம்பந்திகள் எதிரில் வழவழ
என்று பேசிவிடாதீர்கள்” என்றாள் மங்களம் காபியை ஆற்றிக் கொண்டே.

ராஜமையர், “ஹும்.. ஹும்..” என்று தலையை ஆட்டினார். அவருக்குப் பதில் சாவித்திரியின் தமையன் சந்துரு பேச ஆரம்பித்தான்: ”உன் பெண்ணுக்குத்தான் ஒரு ஜதை வளையல்கள் குறைவாக இருக்கட்டுமே அம்மா. மாப்பிள்ளைக்கு இப்பொழுதே மோதிரம் போட்டுவிடலாம். நாலு பேருக்குத் தெரிந்து எந்த மரியாதையையும் செய்தால் நன்றாகச் சோபிக்கும்” என்றான் சந்துரு.

அந்த வீட்டில் தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்கக் கூடாது என்கிற சுட்சியைச் சேர்ந்தவள் சாவித்திரியின் பாட்டி. ஆகவே, “ரொம்ப நன்றாக இருக்கிறதே! கல்யாணம் பண்ணுகிற குழந்தைக்குக் கை நிறைய வளையல்கள் வேண்டாமாடா, அப்பா?” என்று கேட்டாள் பாட்டி.

இவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கும் ராஜமையர் தலையைக்கூட அசைக்காமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கம்பீரமாகப் புன்னகை செய்து கொண்டு படுத்திருந்தார். குடும்பத் தலைவர் என்கிற அந்தஸ்து எவ்வளவு பொறுப்பு வாய்ந்தது என்பதை நினைத்தே அவர் யோசனையில் ஆழ்ந்திருந் தார் என்று கூறலாம். வீட்டிலே கல்யாணச் சீர் வரிசைகளைப் பற்றி ஒவ்வொருத்தர் அபிப்பிராயம், ஒவ்வொரு விதம் இருக்கிறது. பணச் செலவை எப்படியோ சரிக்கட்டி சமாளிக்கும் திறன் அவரிடந்தானே இருக்கிறது? அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவ்வாறு எண்ணித்தான் அவர் புன்னகை புரிந்திருக்க வேண்டும்.

ராஜமையர் காபி சாப்பிட்ட டவராவையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு மங்களம், “ஒன்றுக்கும் உங்கப்பா வாயைத் திறக்கமாட்டார். வீடு பற்றி எரிந்தால்கூட, ‘அதென்ன புகைச்சல்?’ என்று கேட்கிறவராயிற்றே!” என்று கூறிக் கொண்டே விசுக்கென்று சமையற்கட்டிற்கு எழுந்து சென்று விட்டாள்.

அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ராஜமையர், “சீதா! அவர்கள் எல்லோரும் வருவதற்கு மூன்று மணி ஆகும். அதற்குள் சாவித்திரியின் அலங்காரமெல்லாம் முடிந்து விடும் அல்லவா?” என்று மகளைக் கூப்பிட்டு விசாரித்தார்.

சீதா ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்தவள், தகப்பனார் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இரு கரங்களிலும் நான்கு பட்டுப் புடைவைகளை வாரி எடுத்துக் கொண்டு அவர் கேட்டதற்குத் தலையை மட்டும் அசைத்துவிட்டு அந்த வீட்டுக் காமரா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அந்த அறைக்குள் சாவித்திரி, பீரோவிலிருக்கும் ஒவ்வொரு புடைவையாக எடுத்து மத்தியான்னம் பிள்ளை வீட்டார் வரும்போது எதை உடுத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்று ஆராய்வதில் முகாந்திருந்தாள். அவளிடமிருந்த ஏழெட்டுப் பட்டுப் புடைவைகளில் ஒன்றாவது அவள் மனத்துக்குப் பிடித்ததாக இல்லை. கடையிலிருந்து வாங்கும்போது என்னவோ அந்தப் புடைவைகளை ஆசையுடன் தான் வாங்கிக்கொண்டாள். நாழிக்கொரு மோஸ்தரும், வேளைக் கொகு அலங்காரமுமாக மாறி மாறி வரும் புடைவை ரகங்களைப் பார்த்தபோது அந்தப் புடைவைகள் அவருக்குப் பழைய ரகங்களாகத் தோற்றமளித்தன. சலிப்புடன் அவள் பீரோவைப் பட்டென்று மூடும்போது, சீதா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையிலிருந்த புடைவைகளைச் சோபாவில் போட்டு விட்டு, “எதையாவது சீக்கிரம் நிச்சயம் பண்ணு சாவித்திரி. எனக்குக் கொள்ளை வேலை காத்துக் கிடக்கிறது” என்று கூறினாள் தமக்கையிடம்.

சாவித்திரியும் சீதாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் குணத்தில் ஒருவருக்கொருவர் அதிக வித்தியாசத்தைப் படைத்தவர்கள். எவ்வளவு ஆடை, ஆபரணங்கள் இருந்தாலும் சாவித்திரியின் மனம், போதும் என்று ஒப்புக் கொள்ளாது. சீதாவுக்கோ சாதாரண வாயில் புடைவை இருந்தால் போதும். இருவருக்கும் பெற்றோர்கள் ஒரே மாதிரி ஆடை, ஆபரணங்கள் வாங்கி அளித்திருந்தாலும் சீதாவின் பொருள்கள் தாம் சாவித்திரிக்குப் பிடித்தமானவைகளாக இருக்கும்.

சாவித்திரி, சோபாவில் கிடந்த புடைவைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னுடைய-வையாக இருந்தால் நலங்கிவிடுமே, மடிப்புக் கலைந்துவிடுமே என்று யோசனை செய்திருப்பாள். சீதாவின் புடைவைகள் தாமே அவைகள்! அவைகள் எப்படிப் போனால் என்ன! புடைவைகளை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு, “ஏண்டீ, இந்தக் கனகாம்பரக் கலர் ‘கிரேப்’ புடைவையை உடுத்துக் கொள்கிறேனே. நீயும் இதைத்தான் ’செலக்ட்’ பண்ணி இருக்கிறாயா என்ன?” என்று நிஷ்டுரமாகக் கேட்டாள் சீதாவைப் பார்த்துச் சாவித்திரி.

“ஹும்.. ஹும்.. பெண் பார்க்க வருவது உன்னையே தவிர என்னை அல்ல சாவித்திரி! உனக்குத்தான் தெரியுமே, எனக்கு இந்தப் பகட்டான புடைவை யெல்லாம் பிடிக்காது என்று”.– சாவதானமாகப் பதிலளித்த சீதா, தான் பொறுக்கி எடுத்த புடைவையை வைத்துவிட்டு மற்றவைகளைத் திரும்பவும் பீரோவில் அடுக்கி வைப்பதற்கென்று தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்,

இதற்குள்ளாகச் சமையலறையில் சிறு பூகம்பம் ஒன்று ஏற்பட்டது என்று கூறலாம். ஜப மாலையை உருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த பாட்டி, தன் நாட்டுப் பெண் மங்களத்தைப் பார்த்துத் திடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்.

“என்ன உயர்வு என்று இந்த வரனை நிச்சயம் பண்ணி இருக்கிறீர்கள்? பிள்ளைக்கு வேலை இல்லையாமே! சொத்து இருந்து விட்டால் போதுமா? புருஷனாய், லக்ஷணமாய், வேலை பார்க்காமல், பொழுது விடிந்து பொழுதுபோனால் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு! கேட்கச் சகிக்கவில்லையே!” என்று பாட்டி கோபத்துடன் கூறிவிட்டு, வேகமாக ஜபமாலையை உருட்டினாள்.

மங்களத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அந்த நாளில் ராஜமையர் உத்தியோகம் பண்ணிக் கிழித்தது அவளுக்குத் தெரிந்ததுதானே? இருந்த வேலையையும் ஒரே நாளில், ‘சத்தியாக்கிரகம் பண்ணி ஜெயிலுக்குப் போகிறேன்’ என்று ஆரம்பித்து, ராஜிநாமா செய்தவர் ஆயிற்றே! பிறகு சீதா பிறக்கிறவரைக்கும் பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்தே குடும்பம் நடத்தவில்லையா? மாமியாருக்கு இதெல்லாம் மறந்து போனதைப்பற்றி மங்களத்துக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டன. அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த நெய்யில் முந்திரிப் பருப்பையும் திராக்ஷையையும் போட்டு வறுத்துக்கொண்டே, மாமியாருக்குப் பதில் கூறாமல் இருந்தாள் மங்களம்.

உருட்டிக் கொண்டிருந்த ஜபமாலையைச் சம்புடத்தில் வைத்துவிட்டு. இரண்டு உத்தரணி ஜலத்தை ‘ஆசமனீயம்’ செய்தாள் பாட்டி. பிறகு, “கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேராம்?” என்று கேட்டாள் நாட்டுப் பெண்ணை.

இனிமேலும் பதில் கூறாமல் இருக்க முடியாது என்று தெரிந்து. “ஒரே பிள்ளை தான்; பிக்கல், பிடுங்கல் ஒன்றும் கிடையாது. தகப்பனார் வேண்டியது சம்பாதித்து வைத்திருக்கிறார். பிள்ளைக்குச் சங்கீதம் என்றால் ரொம்ப ஆசையாம். சீக்கிரத்திலேயே சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பிக்கப் போகிறானாம்!” என்றாள் மங்களம்.

“பாட்டுப் பள்ளிக்கூடம் வைப்பது ஒரு உத்தியோகமா! போகிறதே இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் புத்தி! ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிப் பரீக்ஷை பாஸ் பண்ணிவிட்டுச் செருப்புக் கடை வைத்துச் சம்பாதிக்கிறேன் என்று ஆரம்பிக்கவில்லையா நம்ப சுப்ரமணியின் பிள்ளை குண்டு! கர்மம், கர்மம்!” என்று தலையில் இரண்டு போட்டுக் கொண்டாள் பாட்டி.

பாட்டிக்கு வயசு எழுபது ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தனக்குத் தெரியாமல் நடக்கக்கூடாது என்கிற எண்ணம் வாய்ந்தவள். ‘பிள்ளைகளை வளர்த்துப் பெரியவர்கள் ஆக்கியாயிற்று. பெண்களும் புக்ககம் போய் விட்டார்கள். பேரன் பேத்திகள் வீடு நிறைய இருக்கிறார்கள். செய்த வேலைகள் போதும், இனி ஓய்வு பெறலாம்’ என்கிற எண்ணம் பாட்டிக்குக் கிடையாது. ‘நாம் ஒன்றிலும் தலையிடக் கூடாது: கிருஷ்ணா, ராமா என்று காலத்தை ஓட்டவேண்டும்’ என்று பாட்டி அநேக முறைகள் மனத்தை வைராக்கியத்துக்கு இழுத்து வந்திருக்கிறாள். அந்த வைராக்கியம் அரை நிமிஷங் கூட நிலைக்காது. மாமியாருக்கும் நாட்டுப் பெண்ணுக்கும் ஏதாவது ஒரு காரணத்தைப்பற்றித் தினம் சண்டையும் பூசலும் ஏற்படும். இருவரும் நாள் கணக்கில் பேசமாட்டார்கள். ஆனால், பாட்டி சாப்பிடாமல், மங்களம் அந்த வீட்டில் ஜலபானம் பண்ணமாட்டாள். வயசான மனுஷி என்கிற மரியாதையும் அபிமானமுந்தான் காரணம். ராஜமையருக்கு இலை போட்டுப் பரிமாறும்போதே, மாமியாருக்கும் இலை போட்டு விடுவாள் மங்களம், மாமியார் சொன்ன சொற்கள் மனத்தை வாட்டி எடுத்தாலும், அவருக்குச் செய்யும் சிசுருஷையில் கொஞ்சம் கூடக் குறைவு இராது.

ராஜமையர் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். மனைவியைத் தனிமையில் சந்திக்கும்போதெல்லாம், “மங்களம்! நீ சாப்பிட்டாயா? உடம்பைக் கவனித்துக் கொள்ளாமல் வேலை வேலை என்று பறக்கிறாயே!” என்று அன்புடன் கடிந்து கொள்வார்.

“ஆமாம், வேலை செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் எனக்கு யார் சோறு போடுகிறார்கள்!” என்று நிஷ்டுரமாகக் கேட்பாள் மங்களம். “உங்கள் வீடா? அடி அசடே! வீட்டுக்கு நீதானே எஜமானி? நீதானே இந்தக் கிருகத்தில் அன்னபூரணியாக இருக்கிறாய்? நான் கூட உன்னிடந்தானே, ‘தேஹி’ என்று வர வேண்டும்” என்று கூறி, அவள் கரங்களை அன்புடன் பற்றித் தம் கைகளில் சேர்த்துக்கொள்வார். அவருடைய இன்ப ஸ்பரிசத்தில் ஆயிரம் வருஷங்களின் கஷ்டங்களை மறந்து விடுவாள் மங்களம்.

இவ்விதம் மனஸ்தாபம் மூண்டு எழுந்தாலும் அன்பு நீரால் அத்தம்பதிகள் அதை அணைத்து விடுவார்கள். மேலே பற்றி எரிய வழி இல்லை அல்லவா?

அடுப்பிலிருந்த வாணலியை இறக்கிவிட்டு மங்களம், மாமியாருக்கு இலை போட்டாள். பஞ்சபாத்திரத்தில் ஜலத்துடன் ‘நச்’ கென்று இலை முன்னால் வந்து உட்கார்ந்த பாட்டி, “ஆமாம். பிக்கல், பிடுங்கல் இல்லை என்று சொன்னாயே. உனக்கு மாத்திரம் இங்கே என்ன பிடுங்கல்? இந்த வீட்டுக்கு யார் வரக் காத்துக் கிடக்கிறார்கள்? கூப்பிட்டால் வரப்போகிறார்கள். இல்லாவிட்டால் இல்லை” என்று மனஸ்தாபத்தைப் பாதியில் நிறுத்த இஷ்டமில்லாமல் தொடர்ந்து ஆரம்பித்தாள்.

மங்களத்தின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. சமையலறைப் பக்கம் ஏதோ வேலையாக வந்த சந்துரு தாயின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்து. அவளை ஜாடையாகக் கூப்பிட்டான்.

“மாப்பிள்ளை வந்து நாளைக்குப் பேரன், பேத்தி எடுக்கப் போகிறாய். எதற்கெடுத்தாலும் குழந்தை மாதிரி அழுது கொண்டு நிற்கிறாயே அம்மா. பாட்டி சொல்வதைக் காதில் வாங்காமல் உன் வேலையைக் கவனிக்க மாட்டாயா?” என்று சந்துரு அவளை அன்புடன் கடிந்து கொண்டான்.

3. பாடத் தெரியுமா?

மாலை நான்கு மணிக்கு ஸரஸ்வதி, ஸ்வர்ணம், ரகுபதி மூவரும். ராஜமையர் ரயிலடிக்கு அனுப்பி இருந்த மாட்டு வண்டியில் சாவித்திரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

“வாருங்கள் அம்மா! வா ..ம்மா!” என்று மங்களம் வாய் நிறைய உபசாரத்துடன் கூப்பிட்டு, எல்லோரையும் உள்ளே அழைத்துப் போனாள். ”இவன்தான் என் மூத்த பையன் சந்திர சேகரன்” என்று ராஜமையர் தம் பிள்ளையை வரப்போகும் மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தார். “இப்படி உட்காருங்கள் மாமி” என்று கூறி, சீதா, ரத்தினக் கம்பளம் ஒன்றை எடுத்து விரித்து உபசரித்தாள். ஸரஸ்வதியும் ஸ்வர்ணமும் அமர்ந்து, லோகாபிராமமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சம்பிரதாயப்படி சிற்றுண்டியும் காபியும் சாப்பிட்டு முடிந்த பின்பு ஸரஸ்வதி தன்னுடன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் முதலியவைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்தாள்.

”பெண்ணை வரச்சொல்லுங்கள் மாமி” என்றாள் ஸரஸ்வதி. வீணையைப் பழிக்கும் அவள் குரல் இனிமையைக் கேட்டுச் சந்துரு. அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான். சாந்தமும் அழகும் கொண்ட அந்த முகவிலாசத்தை அவன் – இதுவரை பார்த்த – எந்தப் பெண்ணிடத்திலும் கண்டதில்லை என்று நினைத்தான். ஆனால், கருணை வடியும் இந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் ஒன்று லேசாக அவன் மனத்தில் தோன்றியது. எங்கே பார்த்திருக்க முடியும்? போன வருஷம் வடக்கே போய் வந்தானே அங்கே யாரையாவது கண்டிருப்பானா? சிறிது நேரம் யோசனையில் மூழ்கி இருந்தான் சந்துரு. திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாகக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்தைப் பார்த்தான் சந்துரு. அந்த முகத்தில் நிலவும் கம்பீரமும் சாந்தமும் இந்தப் பெண்ணிடம் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. அது போதாதா அவளை எழிலுள்ள வளாகக் காட்டுவதற்கு! சகல கலாவாணியாகிய ஸரஸ்வதி தேவியின் கடாட்சத்துக்குப் பாத்திரமானவள்தானே இந்தப் பெண்ணும்! வெகு அற்புதமாக வீணை வாசிக்கிறாள். அகத்தின் அழகு முகத்தில் சுடர்விடாதா! அறிவுக் களை என்பது அலாதியானது அல்லவா!

சந்துருவின் கண்களை ஸரஸ்வதியின் நீண்ட நயனங்கள் சந்தித்துப் பூமியை நோக்கித் தாழ்ந்தன. அவன் தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் பார்ப்பதை அறிந்த ஸரஸ்வதி. ”அத்தான்! பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்; பிறகு ஏதாவது குறை சொல்லாதே!” என்று கூறி, முறுவலித்தாள்.

சந்துரு சுய நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி, பெரியவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தாள்.

“உம்….. பெண்ணை நல்லதாக ஒரு பாட்டுப் பாடச் சொல்லுங்களேன், மாமி” என்றாள் ஸரஸ்வதி.

“எங்கள் வீட்டில் யாருக்குமே நன்றாகப் பாடத் தெரியாதே” என்று கூறினாள் சீதா, ஸரஸ்வதியைப் பார்த்து.

தெரியாது! சமைக்கத் தெரியாது. குடும்பம் நடத்தத் தெரியாது. பாடத் தெரியாது. பேசத் தெரியாது! இந்தத் ’தெரியாது’ என்கிற சொல் எவ்வளவு பேரைக் காப்பாற்றுகிறது. தெரியுமா? ‘பாவம்! அவனுக்கு ஒன்றுமே தெரியாது!’ என்று பிறரை அநுதாபப்படச் செய்கிறதும் இந்தத் ’தெரியாது’ என்கிற சொல்தான்.

“இந்த வீட்டில் யாரோ பாட்டுக் கற்றுக்கொள்ளுகிறார்கள். அதற்கு அத்தாட்சியாக அதோ தம்பூர் வைத்திருக்கிறது. ஏன் ஸார்! ஒரு வேளை படித்துப் படித்து என்னத்தைப் புரட்டப் போகிறோம் என்று. நீங்கள் பாட்டுக் கற்றுக்கொள்கிறீர்களோ?” என்று கேலிப் புன்னகையுடன் ரகுபதி சந்துருவைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் சாவித்திரியைக் குறும்பாகப் பார்த்தான்.

சாவித்திரி, கோபத்தால் முகம் சிவக்கச் சீதாவைப் பார்த் தாள். ‘நாளெல்லாம் வள வளவென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பாயே. இப்போது என்ன ஒரே பேசா மடந்தை ஆகி விட்டாய் நீ?’ என்று கேட்பதுபோல் சாவித்திரி கோபக் கண் களால் தன் தங்கையைப் பார்த்தாள்.

சீதா, அர்த்த புஷ்டியுடன் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அப்புறம் ரகுபதியின் பக்கம் திரும்பி, “வீணாகச் சாவித்திரியின் பேரில் சந்தேகப்படாதீர்கள்.. நான் தான் இந்த வீட்டில் பாட்டுக் கற்றுக்கொள்கிறவள். எனக்காகத் தான் தம்பூர் வாங்கியிருக்கிறார்கள். சாவித்திரி அதைத் தன் விரலாலும் தொட்ட தில்லை!” என்று கூறிவிட்டுக் ‘களுக்’ கென்று சிரித்தாள்.

“அப்படியானால் யாராவது பாட்டுத் தெரிந்தவர்கள் தான் இரண்டு பாட்டுகள் பாடக்கூடாதா? என்ன ஸரஸு! இந்தப் பூனை யும் பாலைக் குடிக்குமா என்று உட்கார்ந்திருக்கிறாயே? நீதான் பாடேன். கல்யாணப் பெண்தான் பாடவேண்டும் என்று எந்தச் சாஸ்திரத்திலாவது சொல்லியிருக்கிறதா?” என்று ரகுபதி உரிமையுடன் ஸரஸ்வதியிடம் கூறினான்.

“பாடித்தான் ஆகவேண்டும் என்றால், கட்டாயம் பாடிவிடுகிறேன், அத்தான்” என்று சரஸ்வதி கூறிவிட்டு, சீதாவின் பக்கம் திரும்பி, “சீதா! நீ போய்த் தம்பூரை எடுத்து வா அம்மா” என்றாள்.

ஸரஸ்வதி பாடப்போகிறாள் என்பதைக் கேட்டவுடன் சந்துருவின் மனம் சந்தோஷத்தில் ஆழ்ந்தது. தம்பூரை மீட்டிக் கொண்டு மெல்லிய குரலில் அவள் பாட ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர். ‘ஆஹா! இவ்வளவு அழகும் சங்கீத ஞானமும் உடைய பெண்ணைவிட்டு, அசலில் இவர்கள் பெண் தேடுவானேன்?’ என்று சந்துரு நினைத்து வியந்தான். மங்களமும் இதையே நினைத்து ஆச்சரியப் பட்டாள். கூடத்தில் மாட்டியிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்திலிருந்தே, மானிட உருக்கொண்டு இந்தப் பெண் வந்து உட்கார்ந்து பாடுகிறதோ என்று ஐயம் ஏற்படும் நிலையைச் சிருஷ்டித்து விட்டாள் ஸரஸ்வதி. அவள் உள்ளம் உருக, ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்கிற பாடலைப் பாடியபோது, எல்லோர் உள்ளமும் அந்தப் பக்திப் பிரவாகத்தில் லயித்து, அதிலேயே அழுந்தி விட்டன என்று கூறலாம். ஸரஸ்வதி, கச்சிதமாக நான்கு கீர்த்தனங்கள் பாடித் தம்பூரை உரைக்குள் இட்டு, மூடி வைத்துவிட்டு, உட்கார்ந்தது தான் எல்லோரும் சுய நினைவை அடைந்தார்கள்.

”நன்றாகப் பாடுகிறாளே! இந்தக் குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று மங்களம் ஸ்வர்ணத்தைப் பார்த்துக் கேட்டாள். ஸ்வர்ணம் சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு, கண்ணீர் திரையிட, “இல்லை. அவளுக்குத்தான் பகவான் ஒரு தீராத குறையைக் கொடுத்துவிட்டானே!” என்றாள் ஸ்வர்ணாம்பாள்.

ஸரஸ்வதிக்கு ஏதோ குறை என்று கூறியதும், அங்கிருந்தவர்களுக்கு அது என்ன வென்று அறிய ஆவல் ஏற்பட்டது. அவர்கள் அதை எப்படிக் கேட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் கேளாமலேயே ஸ்வர்ணாம்பாள் ஸரஸ்வதியின் கால் ஊனத்தைப்பற்றி மங்களத்திடம் கூறினாள். மேலும் அவள். “அவள்” அத்தானுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தது. தாயில்லாததால், குழந்தையிலிருந்தே நானும் அவளை வளர்த்து விட்டேன். அவளுக்குத்தான் கல்யாணம் செய்து கொள்ளவே இஷ்டமில்லையாம். ‘முதலில் எல்லோரும் சம்மதப்பட்டுச் செய்து கொண்டு விடுவீர்கள் அத்தை. காலப்போக்கில் உங்கள் மனமெல்லாம் எப்படி எப்படியோ மாறிவிடும்’ என்று கூறுகிறாள்.

“அத்தானுக்குப் பாட்டுப் பிடிக்கிறது என்று என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்று வைத்துக்கொள் அத்தை. கொஞ்ச நாளைக்குள் அதுவும் அலுத்துவிடும். ‘போயும் வந்தும் இந்த நொண்டியைத் தானா என் தலையில் கட்டிக்கொண்டு அழவேண்டும்!’ என்று அவன் மனம் சலித்துப்போகும். வேண்டாம், அத்தை’ என்று வேதாந்தம் பேசுகிறாள் ஸரஸ்வதி” என்று ஸ்வர்ணாம்பாள் மங்களத்திடம் கூறினாள்.

ஸரஸ்வதி லஜ்ஜையுடன் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, “என்ன அத்தை இது? போகிற இடத்திலெல்லாம் என் ராமாயணம் பெரிசாக இருக்கிறதே” என்று கேட்டாள்,

“ராமாயணம் என்ன? வயசு வந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் வைத்திருந்தால், காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள நினைப்பது எல்லோருக்கும் சசஜந்தானே?” என்றாள் ஸ்வர்ணாம்பாள்.

பெண் வீட்டாருக்குப் பிள்ளையைப் பிடித்துவிட்டது. பிள்ளை வீட்டாரின் அபிப்பிராயமும் ஒன்றாகத் தான் இருந்தது. சாவித்திரியின் சம்மதத்தை, ஸரஸ்வதி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கூடத்தில் இருந்தவர்கள் ஏதோ வேலையாக வெளியே சென்றதும் ஸரஸ்வதி, சாவித்திரியின் அருகில் சென்று உட்கார்ந்தாள். பிறகு சங்கோசத்துடன், ”என் அத்தானை உனக்குப் பிடித்திருக்கிறதா? சொல்லிவிடு. நான் ரகசியமாக இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடுகிறேன்” என்று கேட்டாள். சாவித்திரி மெதுவாகத் தலையை அசைத்து விட்டு மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.

”பெண்ணின் மன ஆழத்தை இன்னொரு பெண்ணே புரிந்து கொள்வது கஷ்டம்” என்பதை ஸரஸ்வதி உணர்ந்திருக்க மாட்டாள். சிலர் வெகுளியாக இருக்கிறார்கள். மனத்தில் ஒன்றையும் ஒளித்து வைக்கமாட்டார்கள். படபடவென்று பேசிவிடுவார்கள். சிலரின் மன ஆழத்தில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன -என்பதையே எவ்வளவு முயன்முலும் புரிந்து கொள்ள முடியாது. ஸரஸ்வதி வெள்ளை மனம் படைத்தவள்; கபடம் இல்லாதவள்; சூதுவாதுகளுக்கு மனத்தில் அவள் இடமே அளிக்கவில்லை.

சாவித்திரி, வார்த்தைகளையே அளந்து பேசும் சுபாவம் படைத்தவள். உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் காட்டி, ஒரு நொடிப் பொழுதில் எல்லோரையும் மட்டந் தட்டிவிடுவாள் அவள். பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருக்கும் சாவித்திரியை ஸரஸ்வதி கேலியாகப் பார்த்து, ”இப்பொழுது என்னிடம் ஒன்றும் சொல்ல மாட்டாய். அப்படித் தானே? அத்தானிடமே நேரில் சொல்லப் போகிறாயாக்கும்! ஹும்…………” என்று பெருமூச்சு விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றாள்.

இவ்வளவு நேரமும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டிக்கு இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது. ” இதென்னடீது அதிசயம்! பெண் பார்க்க வந்தால் அவளைப் பாடச் சொல்றதைத் தான் கண்டதுண்டு; கேட்டதுண்டு. இங்கே தலைகீழ்ப் பாடமா பயிருக்கே! யாரோ ஒருத்தி வருகிறாள்; இல்லாத உறவெல்லாம் கொண்டாடி; புருஷா இருக்கிறதையும் பார்க்காமே பாட்டுக் கச்சேரி செய்கிறாள். இதுகளும் பேஷ் பேஷ்னு தலையாட்டுகிறதுகள்! ஹும் . . . . நன்றாகவே யில்லை” என்று சரளி வரிசை பாட ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவளை யாரும் சட்டை செய்வதாக இல்லை. குறை சொல்வது தான் அவள் கூடப் பிறந்த குணமாயிற்றே என்று உதறிவிட்டு, மேற்கொண்டு ஆகவேண்டியதைக் -கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

4. அவளுக்கு அவ்வளவு சுதந்தரமா?

பிள்ளை வீட்டார் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டுச் சாப்பிடும் கூடத்தில் ஒரே இரைச்சலும், சிரிப்புமாக இருந்தது. எப்பொழுதும் பிறருடைய குற்றங் குறைகளையே சிலர் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும் ஒரு சிறு குறைகூட அவர்கள் மனதில் படுவதில்லை.

“ஆமாம், என்ன பிரமாதமாக வீடு கட்டிவிட்டான்? முக்கால் அடிச் சுவர் வைத்து சேற்றைப் பூசி ஒழுங்கு பண்ணி விட்டானாக்கும்” என்று வாடகை வீட்டில் இருந்து கொண்டே வீடு கட்டுகிறவர்களைப் பழிக்கும் சுபாவமுடையவர்களை நாம் தினமும் சந்திக்கிறோம். எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் பிறரைப் பழிக்கும் சுபாவம் உடையவள் சாவித்திரி. எவ்வளவோ அருமையுடன் வளர்க்கும் பெற்றோரிடமே அவளுக்குக் குறை உண்டு. அன்றும் வழக்கம்போல் சாப்பிட்டுக் கொண்டே ஆரம்பித்தாள் சாவித்திரி :

“நானுந்தான் பார்க்கிறேன். அந்தப் பெண் ஸரஸ்வதிக்கு என்ன அவர்கள் வீட்டில் அவ்வளவு சுதந்தரம்? வெட்கம் இல்லாமல் காலைச் சாய்த்துக்கொண்டு இவள் பெண் பார்க்க வரவில்லை என்று யார் அடித்தார்கள்?”

“ஆமாண்டி அம்மா, நானும் கவனித்தேன். ‘அத்தான், அத்தான்’ என்று வயசுவந்த பிள்ளையோடு என்ன குலாவல் வேண்டி இருக்கிறதோ!” என்றாள் பாட்டி. சாதாரணமாக ஏதாவது அகப் பட்டால்கூட கண், காது, மூக்கு வைத்துப் பேசுபவள் ஆயிற்றே பாட்டி? பேத்தியிடம் அதிக வாஞ்சை கொண்டவள் அவள். இந்த விஷயத்தில் மங்களத்துக்கும், பாட்டிக்கும் பல தகராறுகளும், சண்டைகளும் கிளம்புவது அந்த வீட்டில் சர்வ சகஜம்.

“சிறு குழந்தை மாதிரி உனக்கு யார் பேரிலாவது ஏதாவது சொல்லிக் கொண்டே யிருக்க வேண்டும். இந்த புத்தியை விட்டு விடு, சாவித்திரி!” என்று சந்துரு அதட்டிக் கூறி அவளைக் கண்டித்தான்.

“என்னடா அப்பா, அப்படிச் சொல்லிவிட்டேன்? நீ பிரமாதமாக அவளுக்குப் பரிந்துகொண்டு கிளம்புகிறாயோ” என்று வெடுக்கென்று கேட்டு அவனைப் பொசுக்கிவிடுவது போல் நிமிர்ந்து பார்த்தாள் சாவித்திரி.

“கிளம்புகிறது என்ன? உள்ளதைச் சொன்னால் உனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே! பிறருடைய குறைகளைப்பற்றியே நீ பேசிக்கொண்டிருந்தால் உன்னிடம் எவ்வளவு குறைகள் இருக்கின் றன என்பதை உனக்கு ஆராய்வதற்கே பொழுது இல்லாமல் போய்விடும்: இனிமேல் உன் கல்யாணத்துக்கு அப்புறம் நீயும், ஸரஸ்வதியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டியவர்கள். இருவரும் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து பழக வேண்டியவர்கள். அப்படியில்லாமல் சண்டை பிடித்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா, சாவித்திரி?” என்று இதுவரையில் மெள்னமாக இருந்த ராஜமையர், பெண்ணை அன்புடன் கடிந்து கொண்டார். அதிக அவசியம் நேர்ந்தாலன்றி அவர் பேசமாட்டார். தாய்க்கும், தம் மனைவிக்கும் ஏற்படும் மனஸ்தாபங்களைக்கூட அவர் காதில் போட்டுக் கொள்வதில்லையே!

ஒரு குடும்பத்தில் எஜமானனுடைய நிலைமைதான் மிகவும் பரிதாபமானது. ஏனெனில், மாமியார் – மருமகள் சண்டையில் யாருக்குச் சமாதானம் கூறுவது என்பது மிகவும் கடினமான பிரச்னை. “பெற்று வளர்த்து நான் கஷ்டப்பட்டது எனக்கல்லவா தெரியும்? நேற்று வந்தவள் வைத்தது ‘சட்டமாகி விட்டது. இந்த வீட்டில்’ என்பாள் மாமியார். – “அன்பும் ஆதரவும் வேண்டுமென்று பெற்றோர், உற்றோரை எல்லாம் விட்டுவிட்டு இவரே கதி என்று வந்திருக்கிறேனே; என் மனசை ஏன் இப்படிப் புண்ணாக அடிக்கிறார்கள்?” என்பாள் மருமகள். பெற்ற தாயும், வாழ்க்கைத் துணைவியும் குடும்பத் தலைவனது அன்புக்குப் பாத்திரமானவர்கள். இது கடினமான – பிரச்னை தானே?

நாளடைவில் பாட்டியின் சண்டை – சச்சரவுகள் சகஜமாகி விட்டன. மங்களத்தின் மனம் மறத்துப் போய்விட்டது. இரண்டு வேளை சாப்பாடு ஜீரணமாகிறமாதிரி மாமியாரின் கடுஞ் சொற்களையும் ஜீரணித்துக்கொண்டாள் மங்களம். தாய்க்கு ஏற்பட்டிருந்த சகிப்புத் தன்மையில் ஓர் அணு அளவு கூட சாவித்திரிக்கு இல்லை. அவள் குழந்தைப் பருவத்தில் பாட்டியும், அம்மாவும் சண்டை பிடித்துக் கொண்டதெல்லாம் பசுமரத்தாணி போல் சாவித்திரியின் மனதில் பதிந்து போயிருந்தது. பாட்டி, அம்மாவை ஓட ஓட விரட்டியமாதிரி தானும் விரட்டினாள். எடுத்த்தெற்கெல்லாம் ‘ஹடம்’ பிடித்தாள். அதைப் பாட்டியின் சலுசையால் சாதித்துக்கொண்டாள்.

ராஜமையர் சாவித்திரியைக் கடிந்து கொண்ட பிறகு சிறிது நேரம் எல்லோரும் மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாவித்திரிக்குக் கோபம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருந்தார்கள். ‘கடு கடு’ வென்று முகத்தை வைத்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் அவள் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்த சீதா, “யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எனக்கு ஸரஸ்வதியை ரொம்பவும் பிடிக்கிறது. சிரித்துச் சிரித்துக் கபடம் இல்லாமல் பேசுகிறாளே” என்றாள்.

”உனக்கு யாரைத்தான் பிடிக்காது? எல்லோரையும் பிடிக்கும்!” என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டுச் சாப்பிடும் தாலத்தை ‘நக்’ கென்று நகர்த்திக்கொண்டே அவ்விடம்விட்டு எழுந்தாள் சாவித்திரி.

இதுவரையில் இவர்கள் சச்சரவில் தலையிடாமல் இருந்த மங்களம் சலிப்புடன், “என்ன சண்டை இது, சாப்பிடுகிற வேளையில்? அரட்டை அடிக்காமல் ஒரு நாளாவது சாப்பிடுகிறீர்களா?” என்று கோபித்துக்கொண்டாள். அதற்குமேல் எல்லோரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டார்கள்.

ராஜமையர் வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவியபடி சமையற்கட்டில் வந்து மங்களத்தின் எதிரில் உட்கார்ந்து கொண்டார். சிறிது பொறுத்து, ”வர வர உனக்கு என்னைக் கவனிக்கவே அவகாசம் இல்லாமல் போய்விட்டது மங்களம்! சாப்பிட்டு கை அலம்புகிறதற்கு முன்னாடியே தயாராக வெற்றிலை மடித்து வைத்துக்கொண்டு காமரா அறையில் வந்து நிற்பாயே. இப்பொழுது என்னடாவென்றால் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு மூன்றையும் தேடி நானே எடுத்துப் போட்டுக்கொண்டு உனக்கும் தட்டில் வைத்துக்கொண்டு வந்து கொடுக்க வேண்டியிருக்கிறது” என்று பாதி நிஷ்டுரமாகவும் பாதி கேலியாகவும் கூறினார்.

மங்களமும் பொய்க்கோபத்துடன் அவரைப் பார்த்து, “நாளைக்கே மாப்பிள்ளை வரப்போகிறான். பிறகு நாட்டுப் பெண் வருவாள். இன்னும் உங்களுக்கு நான் நடுங்க வேண்டாமா? நடுங்கிச் செத்ததெல்லாம் போதாதா?” என்று கேட்டாள்.

“பார்த்தாயா மங்களம், அப்பொழுதே சொல்லவேண்டும் என்று இருந்தேன். குழந்தைகள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஏகப் பட்டதாகத் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரில் பேசவேண்டாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். பிள்ளைக்கும், அவனைச் சேர்ந்தவர்களுக்கும் சாவித்திரியை மிகவும் பிடித்து விட்டதாம். என் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டுவிடு” என்றார் ராஜமையர்.

மங்களத்துக்கு இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்தது. “சின்ன வயசிலிருந்தே செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டீர்கள் உங்கள் பெண்ணை! நான் என்ன கேட்கிறது அவளை? அவள் ஏதாவது என்னை மதித்துப் பதில் சொல்லுவாளா? நீங்களே கேளுங்கள். முதலில் அவளுக்குப் பிடித்தாகவேண்டும். அப்புறம் உங்கள் அம்மாவுக்குப் பிடிக்கவேண்டும் ….”

மங்களம் இந்த வார்த்தைகளை உரக்கவே சொன்னாள். பாட்டியோ பலகாரமெல்லாம் முடிந்து கூடத்தில் ஊஞ்சலில் படுத்து அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆகவே மாமியாரைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் நிஷ்டுரமாகப் பேச முடிந்தது.

“”நம் காலத்தைப்போல் இல்லையே. பெண் பார்ப்பதற்குப் பிள்ளை வீட்டார் போவார்களே தவிர, பிள்ளையை அவ்வளவாக அழைத்துப்போகும் வழக்கம் இருந்ததில்லை. பெரியவர்கள் பார்த்துச் செய்துவைத்த கல்யாணங்களில் நூற்றில் தொண்ணூறு அழகாகவே அமைந்தன. பிள்ளைக்குப் பதினைந்து வயசும் பெண்ணுக்கு ஒன்பது வயசும் என்று பார்த்துச்செய்த கல்யாணங்களில் எழுபது வயசுவரையில் தம்பதிகள் அன்யோன்யமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மனசுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஆயிரம் தடவை பெண், பிள்ளை சம்மதத்தைக் கேட்டு நடத்தும் கல்யாணம் நூற்றுக்குத் தொண்ணூறில் ‘நான், நீ’ என்ற சச்சரவுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்” என்று ராஜமையர் கூறினார்.

அப்பொழுது சமையலறைப் பக்கம் வந்த சந்துரு தாயைப் பார்த்து, ‘ஏன் அம்மா! நீ அப்பாவை முதலில் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாயா?” என்று விஷமச் சிரிப்புடன் கேட்டான்.

”ஏண்டா, எனக்கென்ன குறைச்சல்? பாட்டி காதில் விழுந்தால் உனக்குப் பிடித்திருக்கிற சனியை விடுவித்து விடுவாளே! கறுப்பாக இருக்கிறேன் என்றுதானேடா கேலி செய்கிறாய்? ‘ யானை கறுத்தால் ஆயிரம் பொன்’ என்று சொல்லுவார்கள். ஆண்பிள்ளை எப்படி இருந்தால் என்ன? புருஷ காம்பீர்யம் என்பது ஒன்று இருந்தால் போதும்” என்றார் ராஜமையர்.

மங்களம் முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டு, “போகிறது. அந்த மட்டும் பழமொழியைச் சொல்லியாவது ஆறுதல் அடைகிறீர்களே! பிள்ளையும், பெண்களும் என் நிறத்தைக் கொள்ளாமல் இருந்திருந்தால் உங்கள் பெண்களுக்கு வரன் தேட காலுக்கு விளக்கெண்ணெய்தான் போட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள்!” என்று ஒரு போடு போட்டாள்.

“அதான் நான் கறுப்பு என்று அந்த நாளில் உன் வீட்டார் என்னைக் கொஞ்சமாகவா ஏசினார்கள்? உன் அத்தை கூட, ‘பலாச்சுளை மீது ஈ உட்கார்ந்தமாதிரி’ என்று எனக்கும், உனக்கும் ‘பச்சை’ பூசும்போது பந்தலிலேயே சொல்லவில்லையா மங்களம்?”

“ஐயோ! எனக்கு நாழிகை ஆகிறது. தடி தடியாய் அததுகள் தின்றுவிட்டு ரேடியோ கேட்கப் போய்விட்டதுகளே. போதாக்குறைக்கு நீங்கள் வேறே எதையாவது பேசிக் கொண்டு!” என்று கூறிவிட்டு மங்களம் அடுக்களையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் .

5. டில்லியிலிருந்து

கல்யாணத்திற்காக ராஜமையர் விசேஷ ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார். வீட்டைச்சுற்றி பெரிய கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. விருந்தினர்கள் தங்குவதற்காகவும் சம்பந்தி வீட்டார் தங்குவதற்காகவும் இரண்டு வீடுகள் வேறு வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஜில்லாவிலேயே கைதேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்தார். சீர் வரிசைகளும், மற்ற ஏற்பாடுகளும் விமரிசையாகவே இருந்தன. ‘இன்னொரு பெண் இருக்கிறாளே; கொஞ்சம் நிதானமாகத்தான் செலவு செய்யுங்களேன்” என்று மங்களம் அடிக்கடி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பிரபலமான நாதஸ்வர வித்வானை வரவழைக்க அவர் ஏற்பாடு செய்திருந்தார். மாப்பிள்ளை ரகுபதிக்குச் சங்கீதம் என்றால் பிடித்தம் அதிகம் என்று சந்துரு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். ‘பாட்டுக் கச்சேரிக்கு நல்ல பாடகராக யாரையாவது அமர்த்தலாம்’ என்று ராஜமையர் கூறியபோது, சந்துரு அவரைத் தடுத்துவிட்டான். எங்கே ஸரஸ்வதியின் வீணாகானத்தையும், தேனைப்போல் இனிக்கும் அவள் குரல் இனிமையையும் கேட்க முடியாமல் போய்விடுமோ என்கிற கவலை தான் காரணமாக இருக்கவேண்டும். ”அந்தப் பெண்தான் கொள்ளைப் பாட்டு பாடுகிறாளே” என்று மங்களம் வேறு கூறினாள்.

புடைவைகள் வாங்கும் பொறுப்பைச் சாவித்திரியின் இஷ்டப் படி விட்டுவிட்டார்கள். “நம் ஜவுளி தினுசுகளே அறுநூறு ரூபாய்க்குமேல் போய்விட்டதே. இன்னும் மாப்பிள்ளைக்கு எடுக்கும் ஜவுளிகளையும் நீங்களே வாங்குவதாக ஒப்புக் கொண்டிருக்கிறீர்களாமே” என்று கவலையுடன் மங்களம் ஜவுளிக்கடைப் பட்டியலைப் பார்த்துக் கேட்டாள்.

”த்ஸு! பிரமாதம்… முதல் முதலில் குழந்தைக்குக் கல்யாணம் செய்கிறோம். விட்டுத் தள்ளு இதையெல்லாம். செலவைப் பார்த்தால் முடியுமா?” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி முடித்துவிட்டார் ராஜமையர்.

கணவன் வார்த்தையைத் தடுத்துப் பேசி அறியாத மங்களம் பதில் எதுவும் கூறாமல் பட்சணங்களுக்குச் சாமான் ஜாதா மனத்துக்குள் தயாரித்துக்கொண்டிருந்த போது வாசற் கதவை திறந்து கொண்டு தந்திச் சேவகன் உள்ளே வந்து தந்தி ஒன்றை ராமையரிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

தந்தியைப் பிரித்துப் பார்த்தவுடன் அவர் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. சில வருஷங்களாகப் பார்க்காதிருந்த அவர் சகோதரி பாலமும், அவள் குழந்தையும் வருவதாகச் செய்தி எத்திருந்தது.

“பாலம், நாளைக் காலை வண்டிக்கு வருகிறாளாம். மாப்பிள்ளை ராமசேஷு தந்தி கொடுத்திருக்கிறார். நாத்தனாரும், மதனியும் வருஷக் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் விஷயங்களைப் பேசித் தீர்த்துவிடுவீர்கள்” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அந்தச் செய்தியைத் தாயினிடம் தெரிவிப்பதற்காக ஊஞ்சலில் படுத்திருக்கும் அம்மாவைத் தேடிக்கொண்டு போனார் அவர்.

நாத்தனார் வரப்போகிறாள் என்பது தெரிந்தவுடன் மங்களம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். பாலம் எங்கே வர முடியாதென்று எழுதி விடுகிறாளோ என்று மங்களம் – கவலைப் பட்டுக்கொண்டிருந்தாள். “கல்யாணத்தில் சம்பந்திகளைக் கவனிப்பது போல் தன்னையும் கவனிக்கவில்லை என்று பாட்டியிட மிருந்து புகார்கள் கிளம்பும். பாலம் வந்து விட்டாளானால், ‘உன் அம்மாவின் வேலைகளை நீ கவனித்துக் கொள்’ என்று அவளிடம் ஒப்படைத்துவிடுவேன். மாப்பிள்ளைக்கு ’அவளை முன்னாடி அனுப்பச் சொல்லிக் கடிதம் போட்டுவிடுங்கள்” என்று ராஜமையரைத் தினம் தொந்தரவு செய்துவந்தாள் மங்களம்.

பாலத்தின் கணவர் ஒரு வியாதிக்கார மனுஷர். நல்ல கல்வி ஞானமும், சம்பாதிக்கும் திறமையும் அவருக்கு . இருந்த போதிலும் ஆரோக்ய பாக்கியத்தை இழந்து சதா மருந்து சாப்பிட்டுக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே கடந்த ஏழு வருஷங்களாக அன்பைச் சொரிந்த தமையனையும், ஆசையுடன் பராமரித்த மதனியையும், தாயையும் மறந்து கணவனுடனேயே பிறந்தகம் வராமல் தங்கிவிட்டாள் பாலம், எட்டு மாதக் குழந்தையாக டில்லிக்குப் போன பத்மா இப்பொழுது எட்டு வயதுக் குழந்தையாக மாறி இருந்தாள்.

ஊரிலிருந்து அடுத்த நாள் காலையில் ராமசேஷவும், பாலமும், பத்மாவும் வண்டியிலிருந்து இறங்கிய போது வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்கள்.

“வாடி அம்மா பாலம்! வா அப்பா ராமு” என்று ராஜமையர் தங்கையையும் அவள் புருஷனையும் வரவேற்றார்.

பழக்கம் இல்லாத புது மனிதர்களைப் பார்த்து பத்மா, தாயின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தாள். “பத்மாதானே இது? வாடி என் கண்ணே ” என்று பாட்டி ஆசையுடன் பேத்தியை இழுத்துக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தை வருடினாள்.

“மன்னி! நீதான் என்ன இவ்வளவு கிழவியாகிவிட்டாயே? மாப்பிள்ளை வருவதற்கு முன்னாடியே கிழமாகப் போய் விட்டாயே மன்னி!” என்று பாலம் சந்தோஷத்தில் சொன்ன வார்த்தைகளையே திருப்பித் திருப்பிச் சொன்னாள்.

இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷ மிகுதியில் நேரம் போவது தெரியாமல் நின்றுகொண்டே பேசினர். நாத்தனாருடன் எவ்வளவோ பேசவேண்டுமென்று நினைத்திருந்த மங்களம் பிரமித்துப்போய் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்,

“என்ன அம்மா, அத்தையை விழுங்கிவிடுவதுபோல் பார்க்கிறாயே! அத்தை எந்தக் கடையில் டில்லியில் அரிசி வாங்கினாள் என்று கேட்க வேண்டும்போல் இருக்கிறதா உனக்கு?” என்றான் சந்துரு.

“ஆமாம், ஆமாம்; பாலம் கொஞ்சம் பருத்துத் தான் இருக்கிறாள்” என்று தலையை ஆட்டிப் பிள்ளை கூறுவதை ஆமோதித்தார் ராஜமையர்.

”சரி, சரி, மணி ஆகிறது. அவாள் எல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சோ? எழுந்து ஸ்நானம் செய்யப் போகட்டும்” என்று கூறி மங்களம் உள்ளே சென்றாள்:

சாப்பாடு முடிந்த பின்னர் பாலம் சாவித்திரிக்காக வாங்கியிருக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், புடைவைகளைப் பார்வை யிட்டாள். வெள்ளியில் வாங்கியிருந்த குடத்தைப் பார்த்து விட்டு, “ஆமாம் மன்னி! குடம் பித்தளையில் வாங்குவது தானே? வெள்ளிக் குடத்திலா சாதாரணமாக நாம் ஜலம் கொண்டு வருகிறோம்?” என்று கேட்டாள்.

“அதென்னவோ அம்மா! பெட்டியிலே தூங்குவதற்காக எத்தனை புடைலைகள், நகைகள், பாத்திரங்கள் செய்தாக வேண்டுமோ? அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தைப் பயனுள்ளதாகச் செலவழித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். நாலு பேர் மெச்சிப் புகழவேண்டும் என்பதற்காகவே பணத்தை இப்படி விரயம் செய்யவேண்டி இருக்கிறது” என்றாள் மங்களம்.

“என்னதான் பணம் காசு இருந்தாலும் நம் கல்யாணத்தின் போதெல்லாம் இந்த மாதிரி டாம்பீகச் செலவு குறைவாகத்தான் இருந்தது; இல்லையா மன்னி? இப்படிக் கண்டபடி பணத்தை வாரி இறைக்கிறார்கள். சாப்பாட்டுப் பண்டங்களை அழ்க வைத்தும் ஊச வைத்தும் குப்பையிலே கொட்டுகிறார்கள். டில்லியில் ஒரு கல்யாணம் நடந்தது. தடபுடலாக ஒர வைபவமாகத்தான் நடத்தினார்கள். வந்தவர்கள் வந்தபடி இருந்தார்கள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்காக இரவு பகலாக உழைத்த வேலைக்காரர்களுக்கு நிறுத்துத்தான் சாப்பாடு போட்டார்களாம். பலகாரங்களைப் பூட்டிவைத்து ஊசிப்போன பிறகு எடுத்துக் கொடுத்தார்களாம்! எப்படி இருக்கிறது விஷயம்?” என்று ஆத்திரத்துடன் பேசினாள் பாலம்.

“அத்தை, டில்லிக்குப் போன பிறகு நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டு இருக்கிறாள். அடிக்கடி சட்டசபை கூட்டங்களுக்குப் போவாயாமே, அத்தை!” என்று கேலி செய்தாள் சாவித்திரி.

“என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேனே, முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டு. ஏண்டி சாவித்திரி! உனக்கு வரப்போகிற ஆத்துக்காரர் எப்படி இருக்கிறார்? சிவப்பா, கறுப்பா” என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்டாள் பாலம்.

“போ அத்தை! நான் சரியாகக் கவனிக்கவில்லை” என்று வெட்கத்துடன் கூறினாள் சாவித்திரி.

“பொய்யைப் பார் பொய்யை! இவள் மனசில் தான் என்ன இருக்கிறதோ? கேட்டுக் கொள் அத்தை. மாப்பிள்ளைக்குப் பாட்டு என்றால் ஆசையாம். இவளை அவர் பாடச்சொன்ன போது இவள் அவரை விழித்துப் பார்த்தாளே? அப்பொழுது அவர் சிவப்பா, கறுப்பா என்று தெரியவில்லையாமா இவளுக்கு?” என்று கேட்டுச் சீதா, சாவித்திரியை மேலே பேசவிடாமல் தடுத்தாள்.

“இந்த வாயாடியுடன் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது?” என்று கூறிவிட்டு சாவித்திரி ‘சடக்’ கென்று எழுந்து அப்பால் சென்றாள்.

– தொடரும்…

– இருளும் ஒளியும் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1956, கலைமகள் காரியாலயம், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *