இருளும் ஒளியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2024
பார்வையிட்டோர்: 1,041 
 
 

அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

36. கானல் நீர்

விசாலமான ஏரியில் காற்றினால் எழுப்பப்பட்ட சிற்றலைகள் நெளிந்து சுருண்டன. சுரீரென்று வான வீதியில் பவனி வரும் சூரியனின் பொன் கிரணங்கள் நீரில் தவழ்ந்து விளையாடின. நல்ல மழை காரணமாக ஏரி தளும்பி வழிந்தது. அதற்கடுத்த வயல்களில் நல்ல விளைச்சல், குழந்தையைக் காக்கும் தாயைப் போல, கிராமவாசிகள் பயிர்களைக் கண்ணின் கருமணிபோலக் காத்து வந்தார்கள். அவர்கள் வாழ்வும், தாழ்வும் அதில் தானே இருக்கிறது. ‘டைப்’ அடித்துப் பிழைப்பவர்களாக இருந்தால் ஓர் இடத்தில் வேலை போனால் இன்னொன்று என்று தேட இட மிருக்கிறது. தொழிலாளிகள் அவர்கள் கற்ற தொழிலைத்தான் போஷித்து வளர்க்கவேண்டி இருக்கிறது. அவர்களை வாழவைக்கும் மண்ணை நம்பிக் குடியானவர் வாழ்கிறார்கள். அதில் கிடைக்கும் பலாபலன்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

மணி மணியாய்க் கதிர்களில் நெல் மணிகள் அரும்பி இருந்தன. ஆயிற்று; கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. மார்கழியும் போனால் தைப் பொங்கலுக்கு முன்பே அறுவடை செய்துவிடுவார்கள். உழைப்பின் பலனை அனுபவித்து உள்ளம் நிறைவு பெறுவார்கள். வீட்டில் பெட்டி, படுக்கையைக் கூடத்தில் வைத்துவிட்டு ரகுபதி ஏரிக்கரைக்கு வந்து, உட்கார்ந்திருந்தான். தொலைவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டரை மணி பஸ் வந்து போய்விட்டது என்பதற்கு இந்தச் சவாரி வண்டிகள் தான் அத்தாட்சி. ஏனெனில், வெளியூரிலிருந்து வருபவர்கள் ரெயில் நிலையத்திலிருந்து கிராமத்துக்கு வருவதானால் மத்தியான்னம் இந்தப் பஸ்ஸிலாவது அல்லது மாலை ஐந்தரை மணி பஸ்ஸிலாவது தான் வரமுடியும். அப்படிப் பிரயாணிகளைக் கருணையுடன் சுமந்து வரும் பஸ் அவர்களை ஏரிக்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவிலேயே சாலையில் இறக்கிவிட்டுப் போய்விடும். கால்களில் தெம்புள்ளவர்கள் நடந்து கிராமத்தை அடைந்து விடுவார்கள். இல்லாவிடில் மாட்டு வண்டியில் வந்து சேர்வார்கள். சிறிது நேரம் வண்டியைக் கவனித்த ரகுபதி அசிரத்தையுடன் அங்கன வேறு பக்கம் ஓட்டினான். ‘யாரோ வருகிறார்கள்’ என்று அலட்சியமாக இருந்தான். அவன் அலட்சியத்தை முந்திக் கொண்டு தச்சரியம் கிளம்பியது.

‘என்ன? ஸரஸ்வதியா வருகிறாள்? இவளுக்கு என்ன ஜோஸ்யம் ஏதாவது தெரியுமா? சமயசஞ்சீவியாக இருக்கிறாளே’ என்று எண்ணி வியந்தான். அவன் நேருக்கு நேர் பார்க்கவும் அஞ்சினான். ஏதோ ஒருவித வெட்கம் அவனைச் சூழ்ந்துகொண் டது. குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி வந்து நின்றாள்.

“அத்தான்! இந்த ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று நிதானமாக அவனைக் கேட்டாள் ஸரஸ்வதி.

ரகுபதி சங்கோஜத்துடன் தலையை நிமிர்ந்து பார்த்தான். குற்றவாளியைப்போல் மென்று விழுங்கினான். வார்த்தைகள் தடுமாற, “நீயா வந்திருக்கிறாய் ஸரஸு?” என்று அழைத்தான்.

“ஆமாம், அத்தான்! மைசூரிலிருந்து நேற்றுப் புறப்பட்டேன். உன் கடிதம் வந்தது! இனி தாமதிப்பதில் பிரயோஜனமில்லை என்று புறப்பட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருப்பேன். சில கச்சேரிகளுக்கு ஒப்புக்கொண்டதால் வர முடியாமல் போய்விட்டது. ஏரிக்கரையில் நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்து இங்கேயே இறங்கிவிட்டேன்.”

”இன்று மாலை நானும் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன், ஸரஸு. நீயும் வருகிறாய் அல்லவா?” என்று கேட்டான் ரகுபதி.

“ரொம்ப அழகாக இருக்கிறதே. வராமல் எனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்ட ஸரஸ்வதி சற்றுத் தணிவாக, “அத்தான்! தீபாவளிக்கு நீ ஊருக்குப் போக வில்லையாமே. அத்தைக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும், அத்தான்? பாவம்……..”

“போகவில்லை ஸரஸு. பெண்களைத்தான் சஞ்சல புத்தியுள்ளவர்கள் என்று நம் பெரியவர்கள் வர்ணிக்கிறார்கள். ஆனால் உன்னிடம் நிரம்பியிருக்கும் மனோ உறுதி எனக்கு இல்லாமல் போய்விட்டது. பாதி வழியிலேயே நான் இங்கு வந்துவிட்டேன். நீயானால், மைசூர் பிரயாணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறாய்” என்றான்.

“இங்கே எதற்காக வந்தாய் யாருக்காக வந்தாய்? உன்னை நாடுபவளை நீ நாடிப் போகாமல் கானல் நீரை நம்பி வந்திருக்கிறாயா? தங்கத்தை என்ன என்று நினைத்துக் கொண்டு வந்தாய் அத்தான்? மலையிலிருந்து பள்ளத்தில் வழியும் அருவி பார்ப்பதற்கு ரம்மியமாகத்தான் இருக்கும். தொலைவில் நின்று அதன் அழகை நினைத்து வியக்கலாம். பார்த்து ரஸிக்கலாம். தவறிப் போய் அதில் காலை வைத்தோமானால் பரலோகம் போக வேண்டி யது தான். நீ மணமானவன். உன்னுடைய கடமையைப் புறக் கணித்துவிட்டுத் தங்கத்தைப் பார்க்க நீ வந்திருக்கக் கூடாது. அந்தப் பெண் பாவம் வெகுளி, அவளுக்கு என்ன தெரியும் அத்தான்?” என்று படபடவெனக் கூறினாள் ஸரஸ்வதி.

ரகுபதி செயலிழந்து நின்றுவிட்டான். ‘ஸரஸ்வதி சங்கீதத்தில் தான் தேர்ந்தவள். தர்ம சாஸ்திரத்திலும் தேர்ந்தவளா?’

‘படபடவென்று வார்த்தைகளைக் கொட்டி அத்தானைக் கோபித்துக்கொண்டோமே’ என்று ஸரஸ்வதி வருந்தினாள். பிறகு சமாதானம் அடைந்து, “ரொம்பவும் இளைத்துப்போய் விட்டாய் அத்தான். அத்தை பார்த்தால் உருகிப்போய் விடுவாள். வா, வீட்டிற்குப் போகலாம். தங்கத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. வா!” என்று அன்புடன் அவனை அழைத்தாள்.

ரகுபதி பேசுவதற்கோ, தர்க்கிப்பதற்கோ ஒன்றும் இல்லை; மறுமொழி கூறாமல் ஸரஸ்வதியுடன் அவன் வீட்டை நோக்கி நடந்தான். அவர்கள் வீட்டை அடையும் போது மாலை மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. கொல்லைப் பக்கம் மாட்டுத் தொழுவத்திலிருந்து தங்கம் ஸரஸ்வதி வருவதைக் கவனித்துவிட்டாள். சந்தோஷத்தால் அவள் மனம் துள்ளியது: துள்ளி ஓடும் கன்றைப்போல, “ஸரஸு அக்கா!” என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டு முற்றத்துக்கு வந்து ஸரஸ்வதியை இறுகச் சேர்த்து அணைத்துக்கொண்டாள் தங்கம்.

“என்னைப் பார்ப்பதற்குத்தானே அக்கா இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்? என்னிடம் உள்ள வாஞ்சையினால் தானே அக்கா – இங்கே வந்தாய்?” என்றெல்லாம் சந்தோஷம் தாங்காமல் கேட்டாள்.

“ஆமாம், அதற்காகத்தான் வந்தேன். தங்கம் நீ எப்படி இருக்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான் வந்தேன்” என்று ஸரஸ்வதி கூறி அவளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

ஸரஸ்வதியின் பேச்சுக் குரலைக் கேட்டு அலமு உள்ளிருந்து முற்றத்துக்கு வந்தாள். வந்தவள் திகைப்பும், பயமும் ஒருங்கே அடைந்தவளாக, “நீயா வந்திருக்கிறாய் ஸரஸு? உன் அத்தானைப் பார்த்தாயா? தீபாவளிக்கு ஊருக்குப் போகாமல் இங்கே வந்து உட்கார்ந்து விட்டான். என்ன சொன்னாலும் கேட்கவில்லையேடி. அம்மா; நான் என்ன பண்ணுவேன் சொல். மன்னிக்குத் தெரிந்தால் என்னைத்தான் குற்றம் சொல்லுவாள். நீ என்ன சொல்லுவாயோ என்று பயந்து செத்தேன் போ” என்று ஸரஸ்வதி எதையும் கேட்பதற்கு முன்பே படபடவென்று பேசினாள் அலமு.

‘அலமு அத்தைக்குப் பயமா? அதுவும் என்னிடம் ஏற்பட்ட பயமா?’ என்று ஸரஸ்வதி நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.

‘அவள் எல்லோரும் பயப்படும்படியாகவா இருக்கிறாள்? தர்மத்தைக் கண்டு அதர்மம் அஞ்சுகிறது. சத்தியம் அசத்தியத்தை வெல்லுகிறது. பொறுமை கோபத்தை விரட்டுகிறது. நன்மை தீமையை அழிக்கிறது. அவ்வளவு தான்! ஸரஸ்வதியைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. நற்குணங்களைப் போற்றும் அந்தப் பெண் சாதாரணமானவள்.’

ஸரஸ்வதி புன்சிரிப்புடன் அலமுவைப் பார்த்துச் சிரித்து விட்டு உள்ளே போய்விட்டாள்.

37. விமோசனம் உண்டா?

சந்துரு தன் தாயிடம் கூறியபடி ரகுபதியைப் பார்த்து முடிவாக விஷயங்களை ஒழுங்குபடுத்துவது என்கிற தீர்மானத்துக்கு வந்து விட்டான். ஸரஸ்வதி இருந்தால் இந்த விஷயத்தில் மிகவும் உதவி செய்வாள் என்றும் நம்பினான். பலவிதமான குழப்பங்களுக்கிடையில் ஸரஸ்வதியின் அழகிய முகமும், கருணை ததும்பும் கண்களும் அவன் மனத்தைப் பூரிக்கச் செய்தன. ஸரஸ்வதியை எதிர்பாராமல் கிராமத்தில் சந்தித்தால் அவன் ஆசை பூர்த்தி ஆகிவிடும். ஆகவே உற்சாகத்துடன் சந்துரு கிராமத்துக்குக் கிளம்பினான்.

இடையில் ஸரஸ்வதி கிராமத்தின் முக்கியமான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாள். தங்கமும், அவளும் ஆந்திரீகமாகக் கூடிப் பேசினர். ரகுபதி தன்னிடம் அசட்டுத்தனமாக நடந்து கொண்டதையெல்லாம் தங்கம் ஸரஸ்வதியிடம் விவரித்தாள், கோவிலில் புஷ்பக் குடலையைப் பற்றி அவன் இழுத்ததையும், தான் அவனைக் கடிந்து பேசினதையும் கூறிவிட்டுத் தங்கம், ’பாவம்’ என்று வருந்தினாள்.

இதையெல்லாம் கேட்டபோது ஸரஸ்வதியின் மனம் வெட்கத்தால் குன்றிப்போனது. உயர்ந்த லட்சியவாதியாகிய ரகுபதி குறுகிய காலத்துக்குள் இவ்விதம் மாறிவிட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. தங்கத்தின் மாசற்ற குணத்தையும், உறுதியையும் கண்டு வியந்தாள்.

”தங்கம்! உன்னை நான் ஊரில் ஒரு தடவை நீ புத்திசாலி என்று தெரிவித்தேனே. அந்த வார்த்தை பொய்க்கவில்லை. நீ ரொம்பவும் புத்திசாலி. மிகுந்த கெட்டிக்காரி. சாவித்திரியைப் பாராமல் உன்னை முதலில் நான் பார்த்திருந்தால் அத்தானுக்கு உன்னையே கல்யாணம் செய்து வைத்திருப்பேன், இவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டிருக்காது” என்று பாராட்டினாள் ஸரஸ்வதி.

“போ, அக்கா! நீதான் என்னைக் கெட்டிக்காரி என்று கொண்டாடுகிறாய் புத்திசாலி என்று புகழ்ந்து பேசுகிறாய். நான், பெற்றவர்களுக்கும் உறவினர்காருக்கும் பாரமாக இருக்கிறேன். எனக்குக் கல்யாண ஆகவில்லையே என்று அம்மா வீட்டைவிட்டு வெளியிலேயே வருவதில்லை. பெரியம்மா வேறு மரம்மாதிரி நிற்பதாகச் சொல்கிறாள். கன்னிப்பெண், வாழாமல் வீட்டுடன் இருப்பதால் தான் தரித்திரம் பிடுங்குவதாக பெரியம்மா கோபித்துக்கொள்கிறாள். எனக்கு விமோசனம் ஏற்படுமா அக்கா? என்னை மணந்துகொள்ள யாராவது முன் வருவார்களா?” என்று கண்ணீர் வழியக்கேட்டு, ஸரஸ்வதியின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பினாள் தங்கம்.

ஸரஸ்வதியின் மனம் துடித்துப் போய்விட்டது. ‘எல்லா வசதிகளும் இருக்கும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி அப்பா மைசூரில் பன்முறை கேட்டாரே. இன்றைக்கு ‘சரி’யென்று தலை அசைத்தால் கல்யாணம் நடந்துவிடும். அப்பாவை அழைத்து வந்து இந்தப் பேதைப் பெண்ணைக் காட்டாமல் போனேமே. வாழ வழி தெரியாமல் ஆயிரக் கணக்கில் பரிதவிக்கும் தமிழ் நாட்டுக் கன்னிகைகளைத் தங்கம் ஒருத்தியின் மூலமாகப் பார்த்துவிடலாம். இப்படி இருக்கும் போது எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம்? பணமில்லையா? அழகில்லையா? எனக்குக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமா? தங்கத்துக்குத்தான் முதலில் வாழ வழி செய்யவேண்டும். ஆமாம்!’ என்று ஸரஸ்வதி தனக்குள் பேசிக்கொண்டாள்.

மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருக்கும் தங்கத்தின் முகத்தைப் பரிவுடன் நிமிர்த்தி, “தங்கம்! கட்டாயம் உனக்குக் கல்யாணம் நடக்கும். உனக்கு நல்ல கணவன் கிடைப்பான். என் மனம் அவ்விதம் கூறுகிறது. அதை நம்புகிறேன். அழாதே அம்மா!” என்று தேற்றினாள்.

தங்கம் மறுபடியும் தன் முத்துப் போன்ற பற்கள் தெரிய நகைத்தாள்.

”இந்த ஊரில் உள்ள குடியான ஜனங்களும் அப்படித்தான் சொல்கிறார்கள், அக்கா. அர்ச்சுனராஜா மாதிரி எனக்குப் புருஷன் கிடைப்பானாம். திடமான நம்பிக்கையுடன்
சொல்கிறார்கள்; நீயும் சொல்கிறாய் அக்கா!” என்றாள்.

ஸரஸ்வதி அர்த்த புஷ்டியுடன் தலை அசைத்து, “ஏழை ஜனங்கள் உள்ளார்ந்த அன்புடன் கூறும் வாக்கு பொய்க்காது. உள்ளம் நிறைந்து பேசுகிறார்கள். தங்கள் எதிரில் வளர்ந்து பெரியவளான நீ நன்றாக வாழவேண்டும் என்று விரும்பு கிறார்கள்” என்று கூறினாள்.

சோர்ந்திருந்த தங்கத்தின் மனத்தில் உற்சாகம் குமிழியிட்டது. ”அக்கா! நீயும், நானும் சேர்ந்து பாடி எவ்வளவு நாட்களாயின? பாடலாமா அக்கா?” என்று கேட்டாள்.

“ஆஹா, பாடவாம்”” என்று ஸரஸ்வதி ஆமோதித்ததும் அந்த வீட்டுக் கூடத்திலிருந்து இன்னிசை பெருகியது.

”பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான். …”

பாடிக்கொண்டே தங்கம் சிந்தித்தாள். ‘பரம ஏழையாகிய எனக்கு நல்ல கணவனாக ஒருவன் கிடைப்பான் என்று ஸரஸு அக்கா சொல்கிறாள். மாயமாக அந்த ‘ஒருவன்’ என்று வருவானோ? அவன் எப்படிப்பட்டவனோ? முருகவேள் அதற்குக் கிருபை செய்வானா?” என்று பலவாறு நினைத்தாள் அவள்.

நல்லவர்களை வாழ்விக்கும் இறைவன் அருள் புரிந்தான். தெருவில் வந்து நின்ற வண்டியிலிருந்து சந்துரு இறங்கி உள்ளே வந்தான். இதுவரையில் அறையில் உட்கார்ந்திருந்த ரகுபதி, தங்கமும், ஸரஸ்வதியும் பாடுவதைக் கேட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்திருந்தான். சந்துருவின் வரவை யாரும் எதிர்பார்க்க வில்லை. ஒரு நிமிஷம் ரகுபதியின் மனத்தில் கோபம், ரோஷம், வெட்கம், அவமானம் முதலிய உணர்ச்சிகள் தோன்றின. தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் அவன்.

வீட்டுக்கு வந்தவர்களை ”வாருங்கள்” என்று வாய்குளிர அழைப்பது நமது சிறந்த குணங்களில் ஒன்று. வரவேற்காத வீட்டு வாசலை மிதிப்பதற்குக்கூட உள்ளம் கூசுகிறது.

சந்துரு தயங்கினான். பாட்டைப் பாதியில் நிறுத்தி விட்டாள் ஸ்ரஸ்வதி. தன் அழகிய கண்களை உயர்த்தி, “நமஸ்காரம், வாருங்கள். ஊரில் எல்லோரும் சௌக்கியந்தானே?* என்று விசாரித்தாள்.

தங்கம் எழுந்து இரண்டெட்டில் உக்கிராண அறைக் கதவருகில் போய் நின்று, வந்தவர் யாராய் இருக்கும் என்று யோசித்தாள். சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட கேசமும், ஆழ்ந்து சிந்திக்கும் கண்களும் உயர்ந்த உருவமும் கொண்ட அந்தச் சுந்தர புருஷனை, ஆறு முகனேதாள் தனது பிரார்த்தனையைக் கேட்டு அனுப்பி இருக்கிறானோ என்று எண்ணிப் பூரித்துப் போனாள். திடீரென்று எதிர்பாராதவிதமாக –மாயமாக வந்து நிற்கும் புருஷன் – தன்னை வாழ்விக்கத்தான் வந்திருக்கிறானோ என்று எண்ணி எண்ணி மாய்ந்துபோனாள் தங்கம்.

சந்துரு ஸரஸ்வதியைக் கனிவுடன் பார்த்து. “எல்லோரும் சௌக்கியந்தான். அம்மாவுக்குத்தான் உடம்பு சரியில்லை . பலஹீனமாக இருக்கிறாள்” என்று கூறிவிட்டு, “மாப்பிள்ளை! தீபாவளிக்கே நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஸரஸ்வதியும் வருவாள் என்று அம்மா நினைத்துக் கொண்டிருந்தாள்” என்றான்.

“நான் வந்திருக்கவேண்டியது தான்! அத்தானும், நானும் ரெயிலடி வரையில் ஒன்றாகத் தான் வந்தோம். அவசரமாக என் தகப்பனாரைப் பார்ப்பதற்கு மைசூர் போயிருந்தேன். வராமல் விட்ட பிசகை இப்பொழுது தான் உணர்கிறேன்!” என்றாள் ஸரஸ்வதி.

“யார் பேரில் பிசகிருந்தாலும் அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுவதுதான் மனிதப் பண்பு. சாவித்திரி ரொம்பவும் மாறிவாட்டாள். அவள் மனசிலே தன் கணவனை எப்பொழுது சந்திக்கப் போகிறோம் என்கிற ஆவல் மிகுந்திருக்கிறது. தன் செய்கையை நினைத்து வெட்கப்படுகிறாள் என்றே தோன்றுகிறது. ரகுபதி! பெண்ணின் மனத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு சீதா என்னிடம் ஒரு சிறு நோட்டுப் புஸ்தகத்தைக் கொடுத்தாள். படித்தேன். நீந்தத் தெரியாதவன் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதை யாராவது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவனைக் காப்பாற்ற எப்படியும் முயலுவார்கள். சாவித்திரி கண்ணீர் விட்டுப் பல இரவுகள் அழுதிருக்கிறாள் என்பதை அந்தச் சிறு புஸ்தகம் விளங்க வைத்துவிட்டது.

“மாடியிலே நிலவு வீசுகிறது. களைத்து வீடு வந்த கணவருக்கு நான் எந்த வகையில் இன்பமளித்தேன்? கோபத்தால் பொருமினேன், ஏன்?”

“கணவர் தூங்கிவிட்டார். அமைதியாகத் தூங்குகிறார். அவர் அமைதி என் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. பொறாமைத் தீயில் மனம் வெந்து போகிறது.”

“இன்னும் என்னென்னவோ எழுதி இருக்கிறாள். தன் தவறை உணர்ந்துவிட்டாள் என்றே நினைக்கிறேன். அசட்டுப்பெண்! உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்கலாம். மனசைக் கொட்டிக் கதறி இருக்கலாம். ஓடிவந்து உங்கள் காலில் விழுந்திருக்கலாம். என் தங்கை குழந்தைப் பருவத்திலிருந்தே பிடிவாதத்தில் வளர்ந்தவள். அந்தப் பிடிவாதமும், போலிக் கௌரவ முந்தான் அவளைத் தடுத்திருக்கவேண்டும்!” என்று சந்துரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டே போனான்.

ஸரஸ்வதி ரகுபதியைத் திரும்பிப் பார்த்துக் கண்டிப்பு நிறைந்த குரலில், “அத்தான்! அவருடன் ஊருக்குப் புறப்படு, உன் மனைவியை அழைத்துவா, அத்தான். இது பரீக்ஷைக்கூடம் அல்ல; கேள்விகள் தயாரித்துக் கேட்பதற்கும், அவர் பதில்கள் அளிப்பதற்கும். சாவித்திரி தன் குற்றங்களை உணர்ந்து விட்டாள் என்பதே போதுமானது. உன் லட்சியத்தைக் குறுகிய பாதையில் நடத்த வேண்டும் என்பதில்லை. சாவித்திரி ஒருத்தி சங்கீதம் பயின்றுவிட்டால் உன் லட்சியம் நிறைவேறிவிடுமா? ஆர்வத்துடன் சங்கீதத்தைப் பயில்வதற்கு எவ்வளவோ பெண்கள் காத்திருக்கிறார்கள். பரந்த மனப்பான்மையுடன் அவர்களுக்கு உதவி செய்தால் லட்சியம் நிறைவேறிவிடும். இதற்காக இனிக்க வேண்டிய இல்வாழ்வைக் கசப்பாக்கிக் கொள்ளாதே” என்றாள்
ஸரஸ்வதி.

சந்துரு அப்படியே அயர்ந்துவிட்டான். ‘ நாவிலே கலைவாணி நர்த்தனம் புரியும்போது ஸரஸ்வதி ஏன் இவ்வளவு அழகாகப் பேசமாட்டாள்! இந்தப் பெண்ணைப் பார்த்து எப்படி என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்பது?’ என்று புரியாமல் விழித்தான் சந்துரு.

38. ‘இன்னும் கோபமா?’

அழகே உருவமாக இருந்த சாவித்திரி சில மாதங்களில் எப்படித்தான் மாறி விட்டாள்? கண்களைச் சுற்றிக் கருமை படர்ந்திருந்தது. ‘கொழு கொழு’வென்று இருந்த கன்னங்கள் ஓட்டி உலர்ந்து போயிருந்தன. அவளுடைய சிவப்புக்கூட மாறி விட்டதாக வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். மகளைப் பார்த்துப் பார்த்து மங்களம் தனிமையில் கலங்கினாள். ஒவ்வொரு தினம் இரவில் சாப்பிடாமலேயே போய்ப் படுத்து விடுவாள் சாவித்திரி. நொடிக்கு ஒருதரம் ஆழ்ந்த பெருமூச்சு விடுவாள். மனக் கஷ்டத்தை யாரிடமாவது கொட்டி அழுது விடலாம் என்றால் அநுதாபத்துடன் யார் கேட்கப் போகிறார்கள்? சீதா இன்னும் விளையாட்டுப் பெண்ணாகவே இருக்கிறாள். ஒரு நொடியில் விஷயத்தைச் சொல்லித் தம்பட்டம் அடித்து விடுவாள். அப்பாவிடம் போய் ‘என்னை உங்கள் மாப்பிள்ளையிடம் அனுப்பி விடுங்கள்’ என்று எப்படிச் சொல்வது? சந்துருவின் எதிரில் நிற்கவே அவளுக்குப் பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது. தப்பித் தவறி ஏதாவது சொல்லிவிட்டால், ‘உன்னை யார் போகவேண்டாம் என்கிறார்கள்? புறப்படு போகலாம்’ என்று மூட்டை கட்ட ஆரம்பித்துவிடுவான்.

சந்துரு ஊருக்குப் புறப்பட்டுப் போன பிறகு சாவித்திரி காரணமில்லாமல் மகிழ்ச்சி யடைந்தாள். ஒரு சமயம் கலங்கினாள். ‘அவர் வந்துவிடுவார்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ‘வராமல் இருந்துவிட்டால் நானே போய்விடுகிறேன். பிறந்த வீட்டில் எல்லோராலும் உதாசீனம் செய்யப்படுவதை விட.. அவர் கால்களில் விழுகிறேன்’ என்று வைராக்கியத்துக்கு மனசைத் தயார் செய்தாள்.

மங்களம், வெந்நீர் அடுப்பு ‘பூ’ என்று ஊதினால் கூட, மாப்பிள்ளை வந்துவிடுவான் என்று நம்பி மகிழ்ந்தாள். ‘அடுப்பு ஊதுகிறது. உன் அகமுடையான் வந்து விடுவான் – சாவித்திரி’ என்று பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னாள். பெற்ற மனம் பித்துக் கொண்டது என்பதற்கு அவள் ஓர் உதாரணம்.

“காக்கை கத்துகிறது. அத்திம்பேர் வரப்போகிறார்” என்று சொல்லி ஆனந்தப்பட்டாள் சீதா. அந்த வார்த்தைகளை மறுபடியும் அவள் சொல்லிக் கேட்கவேண்டும் போல் சாவித் திரிக்குத் தோன்றியது.

“ஏண்டி சாவித்திரி! அத்திம்பேர் வரும் போது நீ எந்தப் புடைவையைக் கட்டிக் கொள்ளப் போகிறாயடி? கல்யாணத்துக்கு முன்பு உடுத்திக்கொண்டாயே முதன் முதல் கனகாம்பர வண்ணப் புடைவை, அதைத்தானே?” என்று அக்காவைக் கேட்டாள் சீதா.

“போடி! அது ஒன்றும் வேண்டாம். அதைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு அதைக் கொடுத்துவிடுகிறேனடி அம்மா” என்றாள் சாவித்திரி மகிழ்ச்சி பொங்கும் குரலில்.

“ஏனோடி அம்மா! ரொம்ப ‘ ஆகி’வந்த புடைவையோ இல்லையோ? அவசியம் எனக்கு வேண்டியதுதான். அதைக் கட்டிக்கொண்டு என் சுயம்வரத்துக்கு நான் நிற்க வேண்டியதுதான் பாக்கி!” என்றாள் சீதா.

சகோதரிகள் இருவரும் ‘கலகல’ வென்று சிரித்தார்கள்; சாவித்திரி இப்படிச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆயின? காகம் கத்தியது வீண்போகவில்லை. மனித உணர்ச்சிகளை அறியாத அடுப்பு ஊதியதும் பொய்க்கவில்லை. சந்துருவும், ரகுபதியும் வந்து சேர்ந்தார்கள். சாவித்திரி காமரா அறையிலிருந்து திருட்டுத்தனமாகக் கணவனைப் பார்த்தாள். துடிக்கும் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். ‘வந்துவிட்டாரே’ என்று மெல்ல வாய்க்குள் சொல்லிக்கொண்டாள். நிலைக் கண்ணாடி முன்பு நின்று விரலின் நுனியைமைச் சிமிழில் தோய்த்துக் கண்களுக்கு மை தீட்டிக்கொண்டாள். வாசனை வீசும் கதம்பத்தைத் தலையில் வைத்துக்கொண்டாள். புருவத்தின் இடையில் திலக மிட்டுக்கொண்டு, கோணல் சிரிப்புடன் கண்ணாடியில் தன் அழகைக் கவனித்தாள் சாவித்திரி. ‘கட்டாயம் என் கருவிழிகளைக் கண்டு அவர் மயங்கவேண்டும். சிரிக்கும் உதடுகளைக் கண்டு பரவசமடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் என் அன்பினால் அவரை வெல்லவேண்டும்; அடிமைப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் சிறந்த வழி!’ என்று உவகை எய்திய சாவித்திரி ஆசை தீரக் கணவனை ஜன்னல் வழியாகவே பார்த்துக் களித்தாள்.

அன்று, வழக்கமாகக் கூடத்தில் காணப்படும் மங்களத்தின் படுக்கையைக்கூடக் காணோம். மறுபடியும் மாப்பிள்ளை வந்து ‘டானிக்’ கொடுத்து அவளைப் பிழைக்க வைத்துவிட்டான்!

தினசரி படிப்பதில் முனைந்திருந்த ராஜமையர் தம் மூக்குக் கண்ணாடியை நிதானமாகக் கழற்றி வைத்தார். பிறகு நிமிர்ந்து பார்த்து. “வா அப்பா ரகுபதி. அம்மா வரவில்லையா? ஸரஸ்வதி எங்கே?” என்று அழைத்தார். மாப்பிள்ளை மீது அவருக்கு ஏற்பட்டிருந்த கோபம் ஒரு நொடியில் மறைந்து போனது ஆச்சரியந்தான். வயதிலும், அனுபவத்திலும் பெரியவராகிய அவர் மாறியது ஒன்றும் வியப்பில்லை. யர் மாழு விட்டால் மங்களம் அவரை லேசில் விடமாட்டாள்.

“அத்திம்பேரே! நிஜமாகவே வந்து விட்டீர்களே! தீபாவளிக்கு வந்திருந்தால் ஒற்றை வரும்படி. அப்படி வராமற் போனதற்கு இப்பொழுது இரட்டிப்பாக வரும்படி தரப்போகிறீர்கள். தீபாவளிச் சீருடன், கார்த்திகைச் சீரும் சேர்ந்து கிடைக்கப் போகிறது” என்று கேலியாகச் சீதா கூறிச் சிரித்தாள்.

இவர்கள் பேச்செல்லாம் மங்களத்துக்கு ரசிக்கவில்லை. “ஒருவரை-ஒருவர் பிரிந்து மாதக் கணக்கில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவோ பேசவேண்டி இருக்கும். ‘தொண தொண’ வென்று இவர்களுக்கு என்ன வேலை’ என்று நினைத்தாள் அவள்.

ரகுபதி எழுந்து சற்று வெளியே போனபோது. “இந்தாருங்கள்! எல்லாச் சமாசாரங்களையும் ஆற அமரக் கேட்டுக் கொள்ளலாம்; ஒன்றும் கொள்ளை போய்விடாது. அவன் பெண்டாட்டியோடு அவனைப் பேசவிடுங்கள்” என்று கூறிவிட்டு விருந்து தயாரிப்பதற்குச் சமையலறைக்கு விரைந்தாள்.

கூடத்துக்கு வேலையாக வந்த சீதா குறும்புத்தனமாகச் சிரித்து, ”அத்திம்பேரே! அதோ உங்கள் சிறை இருக்கிறது. காவல்காரியும் அங்கேதான் இருக்கிறாள்!” என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.

தனியாக விடப்பட்ட ரகுபதி, சீதா காட்டிய அறையைப் பார்த்தான். பிறகு துணிவுடன் எழுந்து அறைக்குள் சென்றான். சாவித்திரிக்கு ஒரு கணம் தன் கால்களின் கீழ் இருக்கும் பூமி நடுங்குவதுபோல் இருந்தது. கட்டிலைக் கையால் பிடித்துக் கொண்டாள். அவனை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினாள். ரகுபதியின் மனம் அன்பு நிறைந்தது அல்லவா? “சாவித்திரி! இன்னும் என் மேல் உனக்குக் கோபமா?” என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றித் தன் கைகளுடன் சேர்த்துக்கொண்டான்.

உதடுகள் துடிக்க அவள், ‘இல்லை’ என்னும் பாவனயாகத் தலை அசைத்தாள். அவன் கரங்களைப் பற்றித் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

”எல்லாவற்றையும் மறந்து விடுவோம் சாவித்திரி! புதிய வாழ்க்கை தொடங்குவோம்!” என்று ஆர்வத்துடன் அவள் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்தான் ரகுபதி.

கண்கள் கலந்து உறவாடின. காதலர்களைத் தனியாக விட்டுவிடுவோம்.

39. கிருகப் பிரவேசம்

மறுபடியும் ஸ்வர்ணம் தன் நாட்டுப் பெண்ணை வரவேற்க. ஆடி ஓடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அடுத்த நாள் கார்த்திகைப் பண்டிகை. சமையலறை-யிலிருந்து ’படபட’ வென்று நெல் பொரியும் சத்தம் கேட்டுக்கொண்டே யிருந்தது. பாகீரதி அம்மாமிதான் மறுபடியும் ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்ய வந்திருந்தாள். காலம் மாறிப்போய்விடும். குழந்தைகள் பெரியவர்களாகிறார்கள். வாலிப வயதுடையவர்கள் நடுத்தர வயதை அடைகிறார்கள். பிறகு கிழத்தன்மையை அடைகிறார்கள். மனிதர்கள் உருவத்தில் மாறுதல் ஏற்படலாம். குணத்திலே மாறுதல் அடையக்கூடாது. நேற்றுவரை சகஜமாகப் பழகியவர்களிடம் இன்று ‘நீ யார்? உன்னால் எனக்கு என்ன ஆகவேண்டும்?’ என்கிற தோரணையில் பழகக்கூடாது. பாகீரதி அம்மாமி என்றும், எப்பொழுதும் ஒரே சுபாவத்தையுடையவள். ரகுபதி மனைவியை அழைத்து வருகிறான் என்று கேள்விப்பட்ட வுடனேயே ஸ்வர்ணத்திடம் வந்தாள். ‘பண்டிகைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன்’ என்று கூறினாள். இவள் சாதாரணமாகத்தான் படித்திருக்கிறாள். கோர்வையாக நாலு வார்த்தைதள் கூடப் பேசத் தெரியாது. படித்த பெண்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களே; சற்றுமுன் பார்த்தவர்களை மறந்துபோய் விடுகிறார்கள்! நாமாகப் பேச முயன்றாலும் தங்களுக்கு அவசர ஜோலி இருப்பதாக ஓடிப்போய்விடுவார்கள். இது ஒரு அசட்டு நாகரிகம்!

வெல்லப் பாகின் வாசனை ‘கம்’ மென்று வீசிக்கொண்டிருந்தது. வேலைக்காரப் பெண் நெற்பதரையும், பொரியையும் பிரித்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். முறத்தி லிருந்த பொரியைப் பாத்திரத்தில் கொட்டிவிட்டு ஸ்வர்ணத்தைப் பார்த்து அவள். “ஏனம்மா! சின்ன அம்மா வந்தால் திருப்பிக் கோவிச்சுகினு பிறந்த வூட்டுக்குப் போயிடுமா என்ன?” என்று கேட்டாள்.

“யார் பேரிலே அவள் கோபித்துக்கொள்ளப் போகிறாள்? நானும், ஸரஸ்வதியுந்தான் வெளியூருக்குப் போகப்போகிறோமே. கோபமோ, – சமாதானமோ இதில் தலையிட இங்கே யாரும் இருக்கப்போவதில்லை” என்றாள் ஸ்வர்ணம்.

“இந்த வீட்டுக்கு உன் சின்ன அம்மா தான் எஜமானி. இத்தனை வருஷ காலம் அதன் எஜமானியாக இருந்தது போதும். அத்தையம்மாவின் இடுப்புச் சாவி இடம் மாறப் போகிறது. வீட்டைச் சின்ன அம்மா பாத்துக்குவாங்க” என்றாள் ஸரஸ்வதி.

“பாத்துக்குவாங்க! அவ்வளவு இருந்தா இவங்களைப் பிடிக்க முடியாதம்மா. வாய்க்கு ருசியா புருசனுக்குச் சமைத்துப் போடத் தெரியாட்டியும் இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை போங்க!”

ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் ஊருக்குப் போகப் போகிறார்கள் என்பதை நினைத்து வேலைக்காரப் பெண் கண் கலங்கினாள். புது எஜமானி எப்படி இருப்பாளோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.

கார்த்திகைச் சீருடன் சாவித்திரியும், ரகுபதியும், சந்துருவும், மங்களமும் வந்து சேர்ந்தார்கள். ஸரஸ்வதி முன்னைப் போல் ஆரத்தியுடன் ஓடிச் சாவித்திரியை வரவேற்கவில்லை! மனத்தில் தாக்கிய காயம் ஆழமாகப் போய்விட்டது. அதன் வலியை எவ்வளவு தான் அவள் மறக்க முயன்றாலும் அது வலித்துக்கொண்டேதான் இருந்தது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிளவுக்கே தான் காரணமானவள் என்று நினைத்து ஸரஸ்வதி ஒதுங்கிவிட்டாள். அவளுடன் வந்திருந்த தங்கம் சிரித்த முகத்துடன் ஆரத்தியைக் கொண்டுவந்தாள்.

“ஏதோ, கிழக்குப் பக்கமாக நில்லுங்கள்” என்றாள். “கௌரீ கல்யாணமே வைபோகமே” என்று பாடினாள். எல்லோரும் சிரித்தார்கள். எல்லோர் முகத்திலும் புன்னகை தவழ, மனத்தில் திருப்தியான இன்ப அலைமோத இந்தப் ‘புனர் கிருகப் பிரவேசம்’ நடைபெற்றது.

அன்பு கனிந்த பார்வையுடன் ஸரஸ்வதியைத் தேடிய மங்களம் அவளுடன், பேசச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண் டாள். “ஸரஸ்வதி! எங்கள் ஊருக்கு வரக்கூடாதென்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாயா? தீபாவளிக்கு வருவாய் என்று நினைத்திருந்தேன். உன் அத்தானுடன் வருவாய் என்று நினைத்து ஏமாந்தேன். இப்பொழுது நானாகவே உன்னைப் பார்ப்பதற் கென்று வந்துவிட்டேன். ஏனம்மா வரவில்லை?” என்று விசாரித்தாள்.

“வராமல் என்ன மாமி? எனக்கு எல்லோரும் ஒன்றுதான். தாயன்புக்காக ஏங்கியவள் நான். உடன் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையே என்று பார்க்கும் பெண்களை எல்லாம் என் சகோதரிகளாகவே நினைக்கிறேன். கணவன் – மனைவிக்குள் ஆயிரம் இருந்தாலும், சாவித்திரி என்னை அழைத்திருக்க வேண்டாமா? அவளுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?-“

ஸரஸ்வதி கண்ணீர் விட்டு அழுது யாரும் அதிகமாகப் பார்த்ததில்லை. கஷ்டத்திலேயே வளர்ந்து, தாயை இழந்து அவதிப்பட்டவள் அவள். பிறருடைய துன்பங்களை உணர்ந்தவள். அவள் மனம் புண்ணாகித்தான் அழுதிருக்க வேண்டும்.

சந்துருவின் மனம் வாடிப்போய்விட்டது. ரகுபதி முகம் சோர, வேறுபக்கம் திரும்பிக் கொண்டு விட்டான். ஸ்வர்ணம் அங்கு நிற்கவேயில்லை. சாவித்திரி தலை குனிந்து உள்ளேபோய் விட்டாள். மனச்சாட்சி என்பது ஒன்று உண்டென்றால் அவள் தவறுகளுக்கு அதுவே பதில் கூறும்.

அமைதியாக இருந்த கூடத்துக்குத் தங்கம் உள்ளிருந்து ஓடி வந்தாள். “பாகிலே பொரியைப் போடுவதா? பொரியிலே பாகை ஊற்றுவதா, அக்கா? எது சரி சொல் பார்க்கலாம்?” என்றாள் சிரித்துக்கொண்டு.

ஸரஸ்வதியின் முகம் மலர்ந்துவிட்டது.

“நீதான் சொல்லேன். எனக்கு இதெல்லாம் தெரிந்து என்ன ஆகவேண்டும் சொல். நான் என்ன வீட்டுக்குள் பொரி உருண்டையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறேனா? உனக்குத்தான் கல்யாணம் நடக்கப்போகிறது. எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்” என்றாள் அவள்.

இதைக் கேட்ட சந்துருவின் முகம் வாடிப்போய்விட்டது. ‘ஸரஸ்வதி என்ன சொல்கிறாள்? தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளா? இது என்ன ஏமாற்றம்?’

சாப்பிடும் கூடத்தில் மங்களமும், ஸ்வர்ணமும் பேசிக் கொண்டிருந்தார்கள். “அவள் சம்மதப்படுவாள் என்று எனக்குத் தோன்றவில்லை அம்மா. அவள் போக்கே விசித்திரமாக இருக்கிறது. வட நாட்டுக்கு யாத்திரைக்கல்லவா கிளம்பி இருக்கிறாள்? கல்லை அசைத்தாலும் அசைக்கலாம். அவள் உறுதியை அசைக்க முடியாது” என்றாள் ஸ்வர்ணம்.

சந்துரு மனசைத் திடப்படுத்திக்கொண்டான். ‘ஆகட்டும். ஸரஸ்வதியையே கேட்டுவிடுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டான். ஆனால் ஸரஸ்வதியைத் தனியாகவே அவனால் சந்திக்க முடியவில்லை. எப்போதும் அவள் பின்னால் தங்கம் ‘அக்கா, அக்கா’ என்று அழைத்துக்கொண்டிருந்தாள். ‘ அந்தப் பெண் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். கேட்டுவிடுவது’ என்று தீர்மானித்துக்கொண்டு அவர்களிருவரும் இருந்த இடத்தை நாடிச் சென்றான்.

ஸரஸ்வதி புஷ்ப மாலை கட்டிக்கொண்டிருந்தாள். சந்துரு வந்து நிற்பதை ஏறிட்டுப் பார்த்த தங்கம் வெட்கத்தால் குன்றிப் போனாள். “அக்கா! அவர் வந்திருக்கிறார்” என்றாள். சந்துரு சிரித்துக்கொண்டே, ‘ஒரு முக்கியமான விஷயம். நானும் அம்மாவும், சாவித்திரியைக் கொண்டுவந்து விடுவதற்காக இவ்வளவு தூரம் வரவில்லை-“

“நீங்கள் வந்திருக்கும் சமாசாரம் எனக்குத் தெரியுமே! என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாகச் செய்வதற்கு வந்திருக்கிறீர்கள்; அவ்வளவு தானே-” என்று கூறிவிட்டு ஸரஸ்வதி யோசித்தாள். பிறகு தைரியத்துடன் நிமிர்ந்து சந்துருவைப் பார்த்து, “நண்பரே! சிறந்த குணசாலியான பெண்ணை மணக்க ஆசைப்படுகிறீர்கள். கலை ஆர்வத்தில் மூழ்கியிருக்கும் நான், உங்களுடைய அருமை மனைவியாக இருக்க முடி யாது. என்னுடைய வழியே அலாதியானது. லட்சியப் பாதையில் செல்பவர்கள் லட்சியவாதிகளைத் தாம் மணந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படி இராமல் போனால் ரகுபதியும். சாவித்திரியும் போலத்தான் இருக்க வேண்டும். வீட்டின் ஒளியாக, கிருஹலக்ஷ்மியாக, சகதர்மிணியாக இருக்க வேண்டிய பெண், கலை ஆர்வம் கொண்டவளாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்முடைய ஹிந்து சமுதாயம் வகுத்திருக்கிற அரிய விஷயங்களைத் தெரிந்தவளாக இருந்தால் போதும். கணவனிடம் அன்பு காட்டத் தெரிந்தால் போதும். பெற்ற குழந்தைகளை வளர்க்கத் தெரிந்தால் போதும். வீட்டை ஒளி யுடன் வைத்துக்கொள்ளத் தெரிந்தால் போதும். சங்கீதம் தெரிந்த வித்வாம்சினியாகவோ, எழுதத் தெரிந்த எழுத்தாளி யாகவோ, ஆடத் தெரிந்த அதிசயப் பெண்ணாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குணத்தில் சிறந்த பெண் திலகங்கள் நிறைந்த தமிழ் நாடு இது. இதிலே எந்தக் கன்னிகையாவது உங்களைக் கட்டாயம் மணக்க வருவாள். இதோ! இந்தப் பெண் ஏழை என்கிற காரணத்தால் வாழ்வு கிடைக்குமா என்று ஏங்குகிறாள். நீங்கள் மனம் வைத்தால் அவளை வாழவைக்கலாம். தங்கம் எல்லாவிதத்திலும் சிறந்தவள். என்னைவிடச் சிறந்தவள். எனக்காவது பாடத் தெரியும் என்கிற எண்ணம் உண்டு. அவள் மனசிலே ஒரு விதமான அகம் பாவமும் இல்லை.”

ஸரஸ்வதி கொஞ்சநேரம் பிரசங்கம் புரிந்தாள். தங்கம் ஆத்திரத்துடன் ஸரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “அக்கா! அக்கா! என்ன இப்படிப் பேசுகிறாயே?” என்று அதிசயப்பட்டாள்.

சந்துருவின் மனத்தில் புதைந்து கிடந்த பிரச்னைக்கு விடை கிடைத்துவிட்டது. ஸரஸ்வதி லட்சியப் பெண். உன்னதப் பாதையில் நடக்கிறவள். சாமானிய வாழ்விலே அவள் சிக்கி உழலமாட்டாள் என்பதும் தெரிந்து போயிற்று.

அவன் ஒரே வார்த்தையில் பதில் கூறினான். “ஆகட்டும் ஸரஸ்வதி! உன் விருப்பப்படியே தங்கத்தின் பெரியம்மாவைக் கண்டு பேசுகிறேன்” என்றான்.
அவன் அங்கிருந்து சென்ற பிறகு தங்கம் ஸ்ரஸ்வதியின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள்.

“அக்கா!” என்று தேம்பினாள்.

“என்னை விட்டுவிடு அசடே. உனக்குத்தான் அர்ச்சுனன் கிடைத்துவிட்டானே. நான் எதற்கு?” என்று ஸரஸ்வதி தங்கத்தின் கண்ணாடிக் கன்னங்களில் லேசாகத் தட்டினாள்.

40. இருளும் ஒளியும்

அந்த ஊரிலிருக்கும் கோதண்டராமனின் ஆலயம் அன்று ஜகஜ்ஜோதியாக விளங்கியது. பிராகாரத்தைச் சுற்றிவந்த ஸரஸ்வதி அழகிய மனம் உருகும் காட்சி ஒன்றைக் கவனித்தாள். வயது முதிர்ந்த கிழவி ஒருத்தி, கோவில் பிராகாரங்களுக்கு விளக்கேற்றிக் கொண்டே வந்தாள். ‘இவள் எதற்காகக் கோவிலுக்கு விளக்கேற்ற வேண்டும்? ஆசைக்காதலன் கிடைக்க வேண்டும் என்று தவம் புரிகிறாளா? வீட்டை விளங்கவைக்க மகப்பேறு வேண்டும் என்று வேண்டுகிறாளா? செல்வம் கொழிக்க வேண்டும் என்று விளக்கேற்றிக் கும்பிடுகிறாளா?’-ஸரஸ்வதியின் ஆச்சரியம் எல்லை கடந்துவிட்டது. மெதுவாக அவளருகில் சென்று ஸரஸ்வதி, “பாட்டி” என்று அழைத்தாள். “உங்களுக்கு என்ன கோரிக்கை நிறைவேறுவதற்காக இப்படி விளக்கேற்றி வணங்குகிறீர்கள்?” என்று கேட்டாள்.

கிழவியின் கண்களில் கண்ணீர் பெருகியது. “அம்மா! சில வருஷங்களுக்கு முன்புகூடக் கண்கள் சரியாகத் தெரியாமல் இருந்தன. பெரிய பெரிய சிகிச்சைகள் செய்து கொள்ளப் பணம் இல்லை. கோதண்டராமனை நம்பினேன். பார்வை கிடைத்தது. என் கண்களுக்கு ஒளி தந்தவனுக்கு நான் விளக்கேற்றுகிறேன் அம்மா. ஒளிமயமாக இருப்பவனை ஒளியின் மூலமாக வணங்குகிறேன்.”

பொருள் நிறைந்த அவள் வார்த்தைகளைக் கேட்டு ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. எல்லோருடைய வாழ்விலும் ஒளி அவசியம். இரவாகிய இருளைக் கண்டால் சகல ஜீவன்களும் அஞ்சுகின்றன. நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்து, இருளை விரட்டி ஒளியைக் காண விழைகின்றன. அருணோதயத்தை எதிர்பார்த்து நிற்கிறோம். ‘ நல்லபடியாகப் பொழுது விடியட்டும்’ என்பதில் வாழ்விலே ஒளி வீசட்டும் என்கிற அர்த்தம் மறைந்து காணப் படுகிறது.

‘ரகுபதி – சாவித்திரியின் வாழ்வில் ஒளி வீசட்டும். தங்கமும் சந்துருவும் ஒளியுடன் வாழட்டும். என் கலை வாழ்விலே ஒளி வீச ஆண்டவன் அருள் புரியட்டும்’ என்று பிரார்த்தித்துக் கொன்டே ஸரஸ்வதி வீட்டை அடைந்தாள்.

சாவித்திரியும், தங்கமும் அகல் விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் ஒரே ஒளிமயம். கூடத்திலே முருகனின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
‘முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும்” வள்ளி நாயகன் கம்பீரமாகக் காட்சியளித்தான்.

உள்ளே வந்த ஸரஸ்வதி தன் வீணையை எடுத்து வைத்துக் கொண்டாள். பிறகு செஞ்சுருட்டியில் திருப்புகழைப் பாட ஆரம்பித்தாள்:

“தீட மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம
-அருள் தாராய்”

தங்கத்தின் மனத்தில் வெகு நாட்கள் வரை- ஏன், என்றும் அப்பாடல் இடம் பெற்றது. அடிக்கடி அதைப் பாடி மகிழ்ந்து கொண்டேயிருந்தாள் தங்கம்.

(முற்றும்)

– இருளும் ஒளியும் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1956, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *