அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35
26. தாய்க்குப் பிறகு தாரம்
தீபாவளி அழைப்பைக் கையில் வைத்துக்கொண்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரகுபதி, ’கடிதம் யார் எழுதி இருக்கிறார்கள்? என்ன எழுதப்பட்டிருக்கிறது?’ என்று அறிந்து கொள்ள ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும்
ஆவலுடன் அவன் எதிரில் நின்றிருந்தார்கள்.
“கடிதம் போட்டுவிட்டார்கள் பிரமாதமாக! நான் குதித் துக்கொண்டு ஓட வேண்டியதுதான் பாக்கி!” என்று வெறுப்புடன் கடிதத்தை அங்கிருந்த மேஜைமீது வீசி எறிந்துவிட்டு ’விடுவிடு’ என்று வெளியே போய்விட்டான் ரகுபதி. ஸரஸ்வதி, ஸ்வர்ணத்தின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கவனித்துவிட்டு, “அத்தை! கடிதத்தை நான் படிக்கட்டுமா? ஒருவேளை கடிதம் சாவித்திரி எழுதியதாக இருக்குமோ என்று யோசிக்கிறேன். படிக்கட்டுமா அத்தை? அதில் ஒன்றும் தவறில்லையே?” என்று கேட்டாள்.
“இப்பொழுது நடக்கிறதெல்லாம் சரியாக இருக்கிறது! கடிதத்தைப் படித்தால்தான் தவறு ஏற்பட்டுவிடுமோ? படியேன்” என்றாள் ஸ்வர்ணம் பாதி கோபமாகவும், பாதி வருத்தமாகவும் ஸரஸ்வதியைப் பார்த்து. கடிதத்தை உறையிலிருந்து எடுத்து ஸரஸ்வதி படிக்க ஆரம்பித்தாள்:
அன்புள்ள ரகுபதிக்கு,
அநேக ஆசீர்வாதம். நீயும், உன் அம்மாவும், சௌ. ஸரஸ்வதியும் சௌக்கியமென்று நம்புகிறேன். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வருஷம் தலை தீபாவளி ஆதலால் உன் வரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சௌ. ஸரஸ்வதியின் கச்சேரி அரங்கேற்றத் துக்கு வரமுடியாமல் போய்விட்டது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும், புகைப் படங்களையும் பார்த்து ஆனந்தப்பட்டேன். ஸரஸ்வதியைக் கட்டாயம் உன்னுடன் அழைத்து வரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இப்படிக்கு.
சந்திரசேகரன்.
கடிதத்தைப் படித்து முடித்ததும் ஸரஸ்வதி கபடமில்லாமல் ’கல கல’ வென்று சிரித்து, ‘அத்தை! தலை தீபாவளி அழைப்பு மாப்பிள்ளைக்கா அல்லது எனக்கா என்பது புரியவில்லையே. வெறுமனே பத்துத் தடவை என்னைத்தானே வரும்படி சந்துரு எழுதி இருக்கிறார்?” என்றாள்.
“அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் உன் பேரில் கொள்ளை ஆசை. சாவித்திரியின் அம்மாவுக்குச் சதா உன் பேச்சுத்தான். சீதாவும் கல்யாணத்தின்போது எப்படி ஒட்டிக்கொண்டு இருந்தாள் பார்த்தாயா? நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறதே அந்தப் பெண் தான் அவர்கள் வீட்டிலேயே அலாதியாக இருக் கிறது!” என்று ஸ்வர்ணம் கூறிவிட்டு, “எப்பொழுது அவர்கள் மதித்துக் கடிதம் போட்டிருக்கிறார்களோ அவசியம் நீயும் ரகுபதியும் போய்விட்டு வாருங்கள். இந்தச் சந்தர்ப்பத்திலாவது இருவரின் மனமும் மாறி ஒற்றுமை ஏற்படட்டும்” என்றாள்.
ஸரஸ்வதி கடிதத்தை மறுமுறை மனதுக்குள் படித்துக் கொண்டாள். ‘இவருக்கென்ன என்னிடம் அலாதி அன்பு? வருந்தி வருந்தி அழைக்கிறாரே. ஒரு வேளை அவருக்கு என்னை-‘ என்று நினைத்த ஸரஸ்வதியின் மனம் அதற்குமேல் ஒன்றையும் யோசியாமல் தயங்கியது. பிறகு ஸ்வர்ணத்தை நிமிர்ந்து பார்த்து, “அத்தான் அவசியம் போக வேண்டியதுதான் அத்தை. நான் எதற்கு?” என்று கேட்டாள்.
” உன்னை வரச் சொல்லி அந்தப் பிள்ளை எழுதி இருக்கிறானே. முன்பு அவர்கள் இங்கு வந்திருந்தபோதும் கூப்பிட்டார்கள். போய் விட்டுத்தான் வாயேன், ஸரஸு” என்றாள் ஸ்வர்ணம்.
ஸ்வர்ணம் கூறுவதைச் சரியென்று ஸரஸ்வதியின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ‘ஏற்கனவே. என்னால் கணவன் – மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அதனால் பிறந்தகம் போயிருக்கிறாள் சாவித்திரி. ஊரிலும் என்னைப் பற்றியே தான் அவள் குடும்பத்தார் பழி கூறிக்கொண்டிருப்பார்கள். சில விஷயங்களில் ஆண்களின் சுபாவம் பரந்த நோக்கமுடையதாக இருக்கும். ஆகவே, சந்துரு என்னையும் வரும்படி கூப்பிடுகிறார். இதைப்போய்ப் பிரமாதமாக நினைத்துக்கொண்டு போவது தவறு’ என்று ஸரஸ்வதி தீர்மானித்துக்கொண்டாள்.
வெளியே சென்றிருந்த ரகுபதி திரும்பியதும் ஸ்வர்ணம் மறுபடியும் கடிதத்துடன் அவன் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டாள். தீவிரமான யோசனையில். ஈடுபட்டிருக்கும் மகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே, “ரகு! என் பேரில் கோபமோ, வருத்தமோ வைத்துக் கொள்ளாதே. விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அது வளர்ந்து கொண்டுதான் வரும். எதையும் பாராட்டாமல் தள்ளிவிட்டோ மானால் – விரோதம் வளர்வதற்கு இடமில்லையப்பா. தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வர வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தான் அந்தப் பிள்ளை கடிதம் போட்டிருக்கிறான். அவன் அழைப்பிலே எல்லோருடைய அழைப்பும் கலந்திருப்பதாக பாவித்துப் போய்வா. நான் தான் எவ்வளவு காலம் சாஸ்வதமாக இருக்கப் போகிறேன்? ’தாய்க்குப் பிறகு தாரம்’ என்று சொல்லுவார்கள். எனக்குப் பிறகு உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியவள் சாவித்திரிதான். அவளும் சிறியவள். உலகம் தெரியவில்லை. என் வார்த்தையைத் தட்டாதே. ரகு!” என்று உருக்கமாகக் கூறிவிட்டு மகனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
தாயின் கையிலிருந்த கடிதத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே , ”ஸரஸ்வதியும் வருகிறாள் இல்லையா?” என்று கேட்டான் ரகுபதி.
“உன்னுடன் ‘போய் வா’ என்றுதான் சொன்னேன். அவளுக்குத்தான் தனியாக ஏதோ லட்சியம், கொள்கை என்றெல்லாம் இருக்கிறதே. அவள் என்ன சொல்லப் போகிறாளோ?” என்றாள் ஸ்வர்ணம்.
இதுவரையில் இவர்கள் பேச்சில் தலையிடாமல் கையிலிருந்த “மீரா பஜனை’க் கீர்த்தனங்களில் லயித்திருந்த ஸரஸ்வதி, அத்தையைப் பார்த்து, ”இந்த விஷயத்தில் என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள். இன்றைய தினசரியில், அப்பா சர்க்கார் வேலையாக, அயல் நாட்டிலிருந்து சென்னை வந்து. மைசூர் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. நானும் மைசூர் போகப் போகிறேன், அத்தை. அத்தான் மட்டும் போய்வரட்டும். என்ன அத்தான் நான் சொல்கிறது?” என்று கேட்டாள்.
மூன்று வருஷங்களுக்கு மேலாகத் தகப்பனாரைப் பாராமல் இருந்த பெண்ணைத் தடை செய்வது நியாயம் என்று தோன்றாமல் போகவே ஸ்வர்ணமும், ரகுபதியும் ஸரஸ்வதியை அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. அத்துடன் ஸரஸ்வதியிடம் ஒரு சிறப்பான அம்சம் உண்டு. மனத்துக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும் சரி, கொள்கைக்கு முரணாக இருந்தாலும் சரி, அதனால் எவ்வளவு நன்மை ஏற்படுவதானாலும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ஸரஸ்வதி, சாவித்திரியின் வீட்டுக்குப் போனால் சட்டென்று சமரஸம் ஏற்பட்டுவிடும். சமத்காரமாகப் பேசி எல்லோர் மனதையும் கவர்ந்துவிடுவாள். பழைய விரோதத்தை எல்லோரும் மறந்துவிடுவார்கள். ஆனால் சாவித்திரி புக்ககத்தில் இருந்த நான்கு மாதங்களில் ஒரு தினமாவது ஸரஸ்வதியிடம் இன்முகமாகப் பேசியதில்லை. அவளாகவே வலுவில் சென்று சாவித்திரியிடம் பேசினாலும், அவளை மதிப்பதில்லை. கடைசியாக சாவித்திரி ஊருக்குப் புறப்படுவதற்கு முதல் நாள் அன்புடன் அவள் கேட்டுக் கொண்டதைக்கூடப் பாராட்டாமல் சென்ற பெண்ணுடன், நேருக்கு நேர் நின்று, ‘நான் வந்திருக்கிறேன், பார்! அழையா வீட்டுக்குச் சம்பந்தியாக!’ என்று கூறிச் செல்வதற்கு வெட்கமாக இராதா? அசட்டுக் கௌரவமும், முரட்டுப் பிடிவாதமும் உடைய பெண்ணிடம் போய் கைகட்டி நிற்கும் படியான நிலைமை ஸரஸ்வதிக்கு ஏற்படவில்லை. ‘ என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள்’ அவள் அத்தையிடம் கேட்டுக் கொண்ட பாவனை-யிலிருந்து அவள் மனத்தில் ஓடும் எண்ணங்களை ஸ்வர்ணம் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.
‘இந்த மட்டும் பிள்ளையாவது தீபாவளிக்குப் போகிறேன் என்று ஒப்புக் கொண்டானே’ என்று ஸ்வர்ணம் ஆறுதல் அடைந்தாள்.
27. தங்கத்துக்கு அர்ப்பணம்
கடலலைகள் போல் ஓயாமல் பொங்கிக்கொண்டிருந்த ஸ்வர்ணத்தின் மனம், மகனின் பதிலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது. தீபாவளிக்கென்று மகனிடம் கொடுத்தனுப்ப சாவித்திரிக்கு விலையுயர்ந்த புடைவையை எடுத்தாள். பல வர்ணங்களில் ரவிக்கைத் துண்டுகள் வாங்கினாள். கட்டு வெற்றிலையும், வாசனைப் பாக்கும், சீப்புப் பழமும், மணக்கும் கதம்பமும் வாங்கிக் கூடையை நிரப்பினாள். “மனைவியிடம் நல்ல மாதிரி பேச வேண்டும். பரிவாக நடந்து கொள்ள வேண்டும். ‘தஸ், புஸ்’ ஸென்று உன் கோபத்தைக் காட்டாதே” என்றெல்லாம் புத்திமதிகள் கூறினாள் ஸ்வர்ணம். “வேட்டகத்தில் பெரியவர்கள் ஏதாவது சொன்னாலும் பொறுத்துக்கொள், அப்பா!” என்றுவேறு மகனுக்குச் சொன்னாள். ரகுபதி எல்லா வற்றிற்கும் மௌனமாகவே தலையை அசைத்தான். மைசூர் பிரயாணத்துக்காகப் பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஸரஸ்வதி, ஸ்வர்ணம் கூறுவதை முழுவதும் கேட்டுவிட்டு, “எல்லா புத்திமதிகளையும் சொன்னாயே அத்தை. முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டாயே” என்றாள்.
“என்ன?” என்று ஸ்வர்ணம் அவளைத் திருப்பிக் கேட்டதும், அவள், ”எல்லோரிடமும் சரிவர நடந்து கொண்டு திரும்பி வரும்போது சாவித்திரியையும் அழைத்து வந்து விடு என்று சொல்ல வேண்டாமா?” என்று கேட்டு விட்டு பெருமை பொங்கும் முகத்துடன் ரகுபதியைத் திரும்பிப் பார்த்தாள்,
“அதற்குத்தான் நீ அவனுடன் போய் எல்லாவற்றையும் பொறுமையுடன் நடத்திக்கொண்டு வருவாய் என்றிருந்தேன். திடீரென்று நீதான் யாத்திரை கிளம்பி விட்டாயே!” என்று நிஷ்டுரமாகப் பதிலளித்தாள் ஸ்வர்ணம்.
தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே ரகுபதியும். ஸரஸ்வதியும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். ரெயில் நிலையம் வரையில் இருவரும் ஒன்றாகச் சென்று வெவ்வேறு வண்டிகளில் ஏறினார்கள். “அத்தான்! நான் திரும்பி வரும்போது நீ தனியாக இருக்கக்கூடாது. கட்டாயம் சாவித்திரியை அழைத்து வந்து விடு” என்று உண்மையான அன்புடனும் அநுதாபத்துடனும் ஸரஸ்வதி கூறி அவனை ரெயில் ஏற்றினாள். ரகுபதியின் வண்டி புறப்பட்டுச் சென்ற பிறகு அரை மணி கழித்துத்தான் ஸரஸ்வதியின் ரெயில் கிளம்ப வேண்டும். ரெயில் சென்ற திசையைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிறைந்த மனத்துடன் ஸரஸ்வதி பெருமூச்சு விட்டாள்.
தீபாவளி கொண்டாடிவிட்டு மனைவியுடன் ரகுபதி ஊருக்குத் திரும்பி விட்டான் என்று அறிந்தால், அவள் சமீபத்தில் ஊருக்குத் திரும்பக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டாள். ரெயிலில் ஒரு மூலையில் உட்கார்ந் திருந்த ரகுபதி சிறிது நேரம் வரையில் அங்கு என்ன நடைபெறு கிறது என்பதைக் கவனிக்கவில்லை. பித்துப் பிடித்தவன் போல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இரவின் அமைதியைக் கலைத்துக்கொண்டு வனப் பிரதேசத்தில் ’தட தட’ வென்று ரெயில் சென்றுகொண்டிருந்தது. அத்துடன் குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. தாயார் கொஞ்ச நேரம் சமாதானம் செய்து பார்த்தாள். பிறகு தகப்பனார் சீராட்டிப் பார்த்தார். அழுகை ஓய்ந்தபாடில்லை. இருவரும் மனம் சலித்தவர்களாக, “சனியனே! என்ன தான் வேண்டுமென்று சொல்லித் தொலையேன்” என்று இரைந்து கோபித்துக் கொண்டார்கள் குழந்தையை! குழந்தை அழுது கொண்டு தன் மழலை மொழியில், “நீ ஆண்டாம் போ…. பாட்டிதான் வேணும். பாட்டிகிட்டே தாச்சுக்கணும் போ” என்றது.
‘அப்பாடா’ என்று பெற்றோர் பெருமூச்சு விட்டனர். ஓடுகிற ரெயிலில் ஊரிலிருக்கும் பாட்டியை எப்படி வரவழைப்பது என்று புரியாமல் திகைத்தனர். இருவரும் படும் சிரமத்தைப் பார்த்து ரகுபதி கூடையை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு பெரிய ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான்.
”இந்தா பாப்பா! பாட்டியிடம் காலம்பற போகலாம்”, என்று கூறி அவைகளை குழந்தையிடம் கொடுத்தான். தங்க நிறத்தில் பளபளவென்று உருண்டு விளங்கும் பழங்களைத் தன் குஞ்சக் கரங்களால் குழந்தை வாங்கிக்கொண்டு சமாதானம் அடைந்தது. இந்தக் காட்சியை ரசித்த பெரியவர் ஒருவர். ”இதைத்தான் குழந்தை மனம் என்கிறது, ஸார்! நம்மால் லேசில் திருப்தியடைய முடியாத விஷயங்கள் பல இருக்கின்றன. அகங்காரமும், மமதையும் தலை தூக்கி நம்மை நசுக்கிவிடுகின்றன. லேசிலே மனம் பணியமாட்டேன் என்கிறது. குழந்தைகள் அப்படி இல்லை. ஒன்று வேண்டுமென்று ஹடம் பிடிப்பார்கள். வீம்பு பண்ணுவார்கள். ஆனால், அதையே நீடித்து நினைவு வைத்து கொள்ள மாட்டார்கள். சட்டென்று மறந்து போவார்கள்” என்று கூறினார்.
ரகுபதி மனைவியைப் பார்த்து வருவதற்காகத்தான் கிளம்பி இருக்கிறான். அவளிடம் எப்படியெல்லாம் ‘பவ்யமாக’ நடந்து கொள்ளவேண்டும் என்று தாயார் வேறு உபதேசம் செய்து அனுப்பி இருக்கிறாள். ஸரஸ்வதி ரெயில் நிலையத்தில் கூட ‘சாவித்திரியை அழைத்து வந்துவிடு’ என்று உத்தரவு போட்டிருக்கிறாள். ஆனால் அவன் அந்தராத்மா இருக்கிறதே அது லேசில் மசிந்து போகத் தயாராக இல்லை. படுக்கை அறையில், “உன்னை அடித்துவிட்டேன் என்று கோபமா சாவித்திரி?” என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியபோது, அவள் தன் கைகளை ஆங்காரத்துடன் உதறி விடுவித்துக்கொண்ட சம்பவத்தை அவன் மனம் மறக்கவில்லை. சாதாரண சிறாய்ப்புக் காயமாக இருந்தால் சீக்கிரம் குணமாகிவிடும். ஆழப்பதிந்து போன வெட்டுக் காயமாக அல்லவா ஏற்பட்டிருக்கிறது?
புகை வண்டி பெரும் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. அதன் வேகத்தைப்போல் ரகுபதியின் மனோ வேகமும் அதிக மாயிற்று. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் மனைவியை நாடிப் போகிறான்? மறுபடியும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? சிந்தனைச் சுழலில் ஜன்னலின் மேல் தலை வைத்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டான் ரகுபதி. விடியற்காலை சில்லென்று காற்றுப் பட்டவுடனேயே விழிப்பு ஏற்பட்டது. ரெயிலும் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு நிலையத்தில் நின்றிருந்தது. ஊரின் பெயரை உற்றுக் கவனித்தான். ‘ஆ! தங்கம் இங்கேதானே அருகில் கிராமத்தில் இருக்கிறாள்’ என்று நினைத்தான். “சாவித்திரி மன்னியோடு எங்கள் ஊருக்கு வாருங்கள்!’ என்று அழைத்துவிட்டுப் போனாளே! மன்னியும் வேண்டாம், பொன்னியும் வேண்டாம். நான் மட்டுந்தான் போகிறேனே. தங்கத்தின் ஊரில் தீபாவளி கிடையாதா என்ன? கூடை நிறைய இருக்கும் கதம்பம் தங்கத்தின் கருங்கூந்தலுக்குத் தான் அர்ப்பணம் ஆகட்டுமே! பெட்டியிலே வைத்திருக்கும் வாணங்கள், பட்டாசுகளைத் தங்கந்தான் வெடித்து ரசிக்கட்டுமே?” ரகுபதி பெட்டியையும், கூடையையும் அவசரமாக இறக்கிவிட்டுத் தானும் கீழே இறங்கினான். ரெயிலும் அவன் அறியாமையைக் கண்டு சீறுவது போல் ‘புஸ்’ ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிவிட்டது.
28. மைசூரில்
ரகுபதியும் ஸரஸ்வதியும் ஒன்றாகவே ரெயில் நிலையத்துக்கு வந்தார்கள். சற்று முன்பாக ரெயில்கள் கிளம்பின. இருவரும் ஒவ்வோர் ஊரைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு பிராயணச் சீட்டுகள் வாங்கியிருந்தார்கள். ரகுபதியின் பிரயாணம் பாதியில் நின்றது. சட்டென்று என்னவோ தோன்றவே ஒருவித யோசனையுமின்றி ரெயிலிலிருந்து அவன் இறங்கி விட்டான். ஸரஸ்வதியின் மனம் களங்கமற்று இருந்தது. இவ்வளவு காலம் மனத்தைப் பீடித்திருந்த கவலையும் ஒருவாறு நீங்கிவிட்டதல்லவா? அத்தான் ரகுபதி தன் மனைவியை அழைத்துவரப் புறப்பட்டுவிட்டான். இனிமேல் அத்தை ஸ்வர்ணத்தின் கவலைகளும் நீங்கிவிடும். ஆகவே, ரெயில் புறப்பட்டவுடன் படுக்கையை உதறிப் போட்டுக்கொண்டு படுத்தவள் விடியுமளவு நன்றாகத் தூங்கினாள். காலைக் கதிரவனது கிரணங்கள், ஓடும் ரெயிலின் ஜன்னல் வழியாகத் தன் மீது பட்டவுடன்தான் ஸரஸ்வதிக்கு விழிப்பு ஏற்பட்டது. செந்தமிழ் நாட்டைக் கடந்து மைசூர் ராஜ்ய எல்லைக்குள் ரெயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. காவிரி நதி பாய்ந்து வளம் பெற்று இருப்பதால் எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்த காடுகளும், சிறு குன்றுகளும், புதர்களும் நிறைந்து பார்ப்பதற்குப் ‘பசேல்’ என்று காட்சி அளித்தது. தமிழ் நாட்டிலே ‘சுரீரென்று மக்களைத் தாக்கும் கதிரவன், மைசூர் ராஜ்யத்தில் சற்று நிதானமாகவே பவனி வருகிறான். பனி தோய்ந்த பள்ளத்தாக்குகளில் புகை போல் பனி மூடியிருக்கும் மலைச் சாரலில் அவன் ஜம்பம் ஒன்றும் சாயவில்லை.
ஓடும் ரெயில் ஒரு சிறிய கிராமத்தினூடே செல்லும்போது தலையில் தயிர்க் கூடைகளுடனும், மைசூருக்கே உரித்தான செழுமையான காய்கறிகள் கூடைகளுடனும் பெண்கள் அணியாகக் கேழ்வரகுக் கொல்லைக்குள் புகுந்து செல்வதை ஸரஸ்வதி கண்டாள். காலை ஒன்பது மணிக்கு மேல் ரெயில், ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைந்தது. நிலையத்தில் அவளை அழைத்துப் போவதற்கென்று அவளுடைய தகப்பனார் வந்திருந்தார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அந்தஸ்து வாய்ந்தவர் என்பதற்கு அறிகுறியாக அவருடன் நாலைந்து பேர்கள் வந்திருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியதும் ஸரஸ்வதி அன்புடன், ”அப்பா” என்று அழைத்து அவர் அருகில் சென்று நின்றாள். ” எப்படியம்மா இருக்கி? நீ மட்டுமா தனியாக வந்தாய்?” என்று ஆதுரத்துடன் மகளைக் கேட்டு, ஆசையுடன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார். அவருடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். தகப்பனாரும், அவர் நண்பரும் பின் தொடர ஸரஸ்வதி வெளியே சென்று தயாராக இருந்த வாடகை மோட்டாரில் ஏறிக் கொண்டாள்.
‘அப்பாதான் எவ்வளவு மாறிவிட்டார்! மூன்று வருஷங்களுக்கு முன்புகூட இள வயதினர் போல இருந்தாரே! இப்பொழுது தலையில் லேசாக வழுக்கை விழுந்து விட்டதே!’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள் சரஸ்வதி.
‘குழந்தை நன்றாக வளர்ந்துவிட்டாள். சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த ஸரஸ்வதியின் புகைப் படத்தைப் பார்த்தே பரவசமாகி இருந்தேனே. நேரிலே பாயத்தால் புகைப்படம் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘மூக்கும், விழியும், அடக்கமும், மரியாதையுமாக என் ஸரஸ்வதி எப்படி இருக்கிறாள்! ‘அவள்’ இல்லையே இந்த ரத்தினத்தைக் கண்டு மகிழ்வதற்கு!’ என்று தகப்பனார் மகளைப் பார்த்துச் சந்தோஷமும், மனைவி இதைக்கண்டு அநுபவிப்பதற்கு இல்லையே என்று துக்கமும் எய்தினார். கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் துளிர்த்த நீரை அடக்குவதற்கு வெகு பிரயாசைப்பட்டார்.
அருகில் உட்கார்ந்திருந்த நண்பர் ஏறக்குறைய ஸரஸ்வதியின் தகப்பனார் வயதை உடையவர். அவர் பழகுகிற முறையிலிருந்து ஆப்த நண்பர் என்பது சொல்லாமலேயே விளங்கிவிட் டது. நட்பிலே பல தரங்கள் உண்டல்லவா? சிலர் தங்களுடைய வேலைகள் நடக்க வேண்டுமானால் மிகவும் நட்புரிமை பாராட்டுவார்கள். “உங்களைப்போல உண்டா?” என்பார்கள். அவர்கள் வேலை முடிந்து விட்டால் பிறகு, ” இருக்கிறாயா?” என்று கேட்பதற்குக்கூட அவர்களுக்கு வாய்வலித்துப்போகும்! சில நண்பர்கள் குழைந்து குழைந்து நண்பர்களிடம் வேலை வாங்கிக் கொள்வார்கள். தாங்கள் ஏதாவது செய்ய வேண்டுமானால் தூர விலகிவிடுவார்கள். ‘ரெயில் சிநேகம்’ என்று குறிப்பிடுகிறோம். ரெயிலில் சில மணி நேரங்கள் சந்தித்துப் பிரிகிறவர்களை அப்படிச் சொல்லுகிறோம். அருகிலேயே இருப்பார்கள் சில நண்பர்கள். அவர்களுடன் நாம் எவ்வளவு நட்புக்கொண்டு பழகினாலும் அவர்கள் விலகியே செல்வார்கள்.
பாரதத்திலே கர்ணனும், துரியோதனனும் பழகி வளர்த்த நட்பு மிகவும் சிறந்தது. உண்மையான நட்பு எந்த விதமான கட்டு திட்டங்களுக்கும் உட்பட்டதல்ல. பணக்காரன், ஏழை என்று வித்தியாசம் பாராட்ட அதில் இடம் இல்லை. இந்தக் காலத்திலே சிலர் தாங்கள் சிநேகம் பாராட்டுகிறவர்களின் சொத்து, அந்தஸ்து முதலியவைகளை ஆராய்ந்து பழகுகின்றனர். கண்ணனுக்கும், ஏழைக் குசேலருக்கும் அந்தஸ்தில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசந்தான். இருந்தபோதிலும், அந்த தூய நட்பைப்பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் உருகிக் கண்ணீர் பெருகி விடுகிறது. இந்த மாதிரியே ஸரஸ்வதியின் தகப்பனாரும், அவருடன் கூடவந்த நண்பர் கோபால தாஸரும் அந்தஸ்தில் மிகுந்த வித்தியாசம் உடையவர்கள். பால்யத்தில் இருவரும் விஞ்ஞானக் கல்வி பயில ஒன்றாக மைசூர் ராஜ்யத்தில் வசித்தவர்கள். ஸரஸ்வதியின் தகப்பனார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பாஷை தெரியாத கன்னட ராஜ்யத்தில் கோபால தாஸர் அவருக்குச் சிறந்த நண்பராக விளங்கினார். கல்விப் பயிற்சிக்கு அப்புறம் ஸரஸ்வதியின் தகப்பனாருக்கு அதிருஷ்ட வசமாக உயர் பதவி கிட்டியது. கோபால தாஸருக்கும் கிட்டி இருக்கும். ஆனால், தேச சேவைக்காக காந்தி அண்ணலின் அன்புக்குரல் அவரை அழைத்தது. தியாக அக்னியில் ஸ்புடம் போட்ட தங்கத்தைப்போல் இருந்தார் அவர். ஆகவே, பதவியும், உயர்வாழ்வும் அவருக்குக் கிட்டவில்லை. அவரும் அதில் ஆசை கொள்ளாமல் தேசப்பணியிலேயே தம் வாழ்நாளைக் கழித்து விட்டார். இடை இடையே, நண்பர்கள் சந்திக்கும் போதெல்லாம், ஸரஸ்வதியின் தகப்பனார் தம் நண்பரிடம் அவரைப் பல உத்தியோகங்களை வகிக்கும்படி அழைத்தார். பிரும்மசாரியாகிய அவருக்கு, தாம் சம்பாதித்து யாரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கவே நண்பரின். வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
அமைதி நிரம்பிய காவிரி நதிக்கரை ஓரமாகவே மோட்டார் சென்று கோபால தாஸரின் சிறு வீட்டை அடைந்தது. வீட்டிற்குப் பின்னால் ஓடும் நதியில் நொப்பும், நுரையுமாகப் புது வெள்ளம் செக்கச் செவேலென்று சுழித்துக்கொண்டு ஓடியது. காலைச் சூரியனின் தங்க நிறக் கிரணங்கள். சிவந்த தண்ணீரில் விழுந்து மேலும் அதைத் தங்கமய-மாக்கியது. நதியின் இரு மருங்கிலும் அடர்ந்த சோலைகள். வண்டுகள் ரீங்காரமிட்டன. பட்சிகள் இனிய குரலில் இசை பாடின. தொலைவில் திப்புவின் சமாதிக்கோவில் கம்பீரமாகக் காட்சி அளித்தது. நதிக்கரையை அடுத்த பழைய கோட்டை, கொத்தளங்கள் இடிந்து கிலமாகக் கிடந்தன. மனித வாழ்வின் க்ஷண கால இன்பத்தைப் பறை சாற்றும் சின்னங்கள் அவை.
ரெயில் பிரயாணத்தால் அலுத்துப்போய் ஸரஸ்வதி பகல் போஜனத்துக்கு அப்புறம் படுத்துத் தூங்கிவிட்டாள். அவள் விழித்து எழுந்தபோது மாலை ஆறு மணி இருக்கும். இப்படி தேகம் தெரியாமல் தூங்கியதை நினைத்து அவளே வெட்கிப் போனாள்.
“தூங்கி எழுந்தாயா அம்மா? வெளியே போய் இப்படி உலாவிவிட்டு வருவோமா?” என்று தகப்பனார் மகளை அழைத்தார்.
மூவரும் நதிக்கரை ஓரமாகவே மௌனமாக நடந்தனர். வெறுமனே ‘வள வள’ வென்று பேசுவதைவிட, அங்கு நிலவி யிருந்த அமைதியை ரஸிப்பதே பெரும்பொழுது போக்காக அவர்கள் கருதி இருக்க வேண்டும். ஸரஸ்வதியின் தகப்பனார் அன்று உற்சாகமாக இல்லை. ‘மகள் வளர்ந்து விட்டாள். தனக்கும் வயதாகிக்கொண்டு வருகிறது. அவளுடைய வருங் காலம் எப்படி?’ என்று அவர் மனம் ஓயாமல் அவரைக் கேட்டது. இதுவரையில் பேசாமல் இருந்த ஸரஸ்வதி, “அப்பா! இந்த நதிக்கரையும், அதோ தெரியும் ஸ்ரீரங்கநாதர் ஆலயமும், இந்த ஊரின் அமைதியுமாகச் சேர்ந்துதான் கோபால மாமாவை இப்படி எதிலும் பற்றில்லாமல் வாழச் செய்திருக்க வேண்டும். நான்கூட இங்கேயே தங்கிவிடலாம் என்று பார்க்கிறேன். இந்த ஊரிலேயே ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விட்டால் என்ன?” என்று ஆர்வத்துடன் தகப்பனாரை விசாரித்தாள்.
“நீ பேசுகிறது நன்றாக இருக்கிறதே குழந்தை! உன் அப்பாவுக்குத் தாம் தாத்தா ஆகவேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறது. நீ விவாகமே வேண்டாமென்கிறாயாம். ஒரு பெண் தனியாக வாழ்க்கை நடத்துவது கடினம் என்பது உனக்குத் தெரியாத விஷயமில்லையே. ஸ்ரீரங்கப்பட்டணம் வந்து நீ சன்னியாசினியாவதற்கு நான் ஒருகாலும் உனக்கு உதவி புரியமாட்டேன் ஸரஸ்வதி! ஆமாம்….” என்று சிரித்துக் கோபால தாஸர் ஸேரஸ்வதியை உரிமையுடன் அதட்டினார்.
ஸரஸ்வதி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, நண்பரைப் பார்த்துப் பணிவுடன், “இதென்ன மாமா, இப்படிப் பேசுகிறீர்கள்? எந்த விஷயத்திலும் ஆசை கொள்வதற்கு மனந்தானே காரணம்? என் மனம் என்னவோ கல்யாணத்தைத் தற்சமயம் விரும்பவில்லை. எங்கள் தமிழ் நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீவில்லி-புத்தூரில் பெரியாழ்வார் என்னும் மகானுக்குக் கோதை என்று ஒரு மகள் கிடைத்தாள். அத்தெய்வக் கன்னி சதாகாலமும் கண்ணனையே அகத்துள் இறுத்தி பக்தி செலுத்தினாள்; காதல் கொண்டாள்; அன்பு பூண்டாள். அகத்திலே அவனுக்கன்றி வேறு ஒருவருக்கு இடம் தர மறுத்தாள்; பெரியாழ்வார், மணப்பருவம் எய்தும் தம் மகளுக்குத் தகுந்த மணாளன் கிடைக்க வேண்டுமே என்று என் தகப்பனார் விரும்பியதைப் போலத்தான் விரும்பினார். ஆனால், அவள் உள்ளத்தை ஆட்கொண்ட மணிவண்ணன் அவளையும் ஆட்கொண்டு அருள் புரிந்தான். தம் மகளால் ஒரு படி உயர்ந்து விட்டார் தந்தை!” என்றாள்.
கோபால தாஸரின் கண்கள் அருவியாக மாறி இருக்க வேண்டும். காவிரியின் பிரவாகத்தைப்போல் அவர் கண்கள் கண்ணீரைக் கொட்டின. அவர் ஸரஸ்வதியின் வார்த்தை களுக்குப் பதில் கூறாமல் புரந்தரதாஸரின் அழகிய பாடலைப் பாட ஆரம்பித்தார்:
” பிருந்தாவனத்தில் ஆடுபவன் யார்?
சந்திர வதனனைப் பார்க்கலாம் வாடி-அடி தோழி!”
தொலைவில் கீழ்வானத்தில் சந்திரிகை முளைத்துவிட்டது. ’சிலு சிலு’ வென்று வீசும் மெல்லிய காற்றில் இந்த இசை வெகு தூரம் பரவி ஒலித்தது. ஸ்ரீரங்கப்பட்டண வாசிகள் இந்த இசை யைப் பல முறைகள் கேட்டு அகம் உருகி இருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான்.
29. வரவேற்பு
முற்றத்தில் துளசி மாடத்தின் முன்பு மணிக்கோலமிடும் தங்கத்தின் எதிரில் ரகுபதி அதிகாலையில் வந்து நின்றான். தலைப் பின்னல் முன் பக்கம் சரிந்து விழ, முதுகில் புரளும் மேலாக்கு நழுவ அவள் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கைகள் ‘சரசர’ வென்று புள்ளிகளை வைத்தன; புள்ளிகளைச் சேர்த்து அழகிய கோலமாக்கின. கோலத்தை முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது தான் அவள் சற்றும் எதிர்பாராத விதமாக ரகுபதி காட்சி அளித்தான் அங்கே! தங்கம் தன் அழகிய கண்களால் அவனைப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழித்தாள். பிறகு வழக்கமான சிரிப்புடன், ”ஓ! அத்தானா! வாருங்கள், வாருங்கள், எங்கே இப்படி? ஓஹோ! தீபாவளிப் பிரயாணமோ?” என்று கேட்டாள்.
“அத்தானேதான்! சாட்சாத் ரகுபதி தான். நீ ஊருக்கு வரும்போது யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தாயோ, அவனே தான்! தீபாவளி கொண்டாடத்தான் இங்கே வந்திருக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, கூடையைப் பிரித்துக் கட்டுக் கதம்பத்தையும், பழங்களையும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.
‘இதற்குள்ளாக உள்ளிருந்து வியப்புடன் அலமு அத்தை பரபரவென்று முற்றத்துக்கு வந்தாள். “வந்தாயாடா, ரகு! வா அப்பா. இப்பொழுதாவது வழி தெரிந்ததே உனக்கு!” என்று அவனை வரவேற்று உபசரித்தாள். தீபாவளி இன்னும் இரண்டு நாட்கள் தாம் இருக்கின்றன என்பதற்கு அறிகுறியாக அவ்வீட்டிலிருந்து ‘கம கம’ வென்று பலகாரங்களின் வாசனை வீசியது. துளசி மாடத்துக்குக் கோலமிட்டு முடித்தவுடன் தங்கம் கொல்லைப்புறம் சென்றாள். தவிடும், பிண்ணாக்கும் கலந்து பிசைந்து ஆசையுடன் கறவைப்பசுவுக்கு வைத்தாள். ‘தக தக’ வென்று தேய்த்து அலம்பிய பித்தளைச் செம்பில் நுரை பொங்கும் பாலைக் கறக்க ஆரம்பித்தாள். ‘சொர், சொர்’ரென்று பால் பாத்திரத்தில் விழ ஆரம்பித்தது. ரகுபதி, கையில் பல் துலக்கும் ‘பிரஷ்’ஷுடன் கொல்லைப்பக்கம் வந்தான். பாலைக் கறந்துகொண்டே தங்கம் அவனைப் பார்த்து. “அத்தான்! கையில் என்னவோ வைத்திருக்கிறீர்களே. அது என்னது? விலை ரொம்ப இருக்குமோ?” என்று கேட்டாள்.
“தூ பிரமாதம்! அதன் விலை ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய்களுக்கு மேல் போகாது” என்றான் ரகுபதி.
தங்கம் ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பிறகு அவனைப் பார்த்து. “அத்தான்! நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நம் பண்ணைக் குடியானவன் கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் ஒரு கட்டு வேப்பங் குச்சிகளைச் சீவி ஒழுங்கு படுத்தித் தருவான், விலை, கிலை ஒன்றும் நீங்கள் தர வேண்டாம். ஊருக்குப் போகும்போது எடுத்துப் போங்கள்!” என்றாள்.
ரகுபதி ‘கட கட’ வென்று சிரித்து விட்டான். அவன் இம்மாதிரி மனம் விட்டுச் சிரித்து எவ்வளவோ காலம் ஆயிற்று. கிணற்றிலிருந்து ஜலம் இழுத்துக் கைகால்களை அலம்பிக் கொண்டே , ”அது போகட்டும். காலையில் எழுந்தவுடன் துளசி மாடத்துக்குக் கோலம் போடுவது. அதன் பிறகு மாட்டிற்குத் தீனி வைத்துப் பால் கறப்பது. அதன் பிறகு?” என்று அவளைக் கேட்டான் ரகுபதி.
“அதன் பிறகு ஏரிக்குப் போய்த் துணிகளைத் துவைத்துக் குளிப்பது” என்று ஒய்யாரமாகப் பதிலளித்தாள் தங்கம்.
“இப்படியே நாள் பூராவும் ஒரு வேலை மாற்றி இன்னொன்று என்று செய்து கொண்டிருப்பாயாக்கும்! வேறு பொழுது போக்கு எதுவும் இல்லையா?” என்று மேலும் கேட்டான் ரகுபதி.
தங்கம் அவனுக்கு மறுமொழி கூறுவதற்கு முன்பே உள்ளிருந்து அலமு அவளைக் கூப்பிட்டாள். பால் பாத்திரத்துடன் உள்ளே சென்ற தங்கம், தட்டில் இட்லிகளுடனும், கையில் மணக்கும் காப்பியுடனும் கூடத்துக்கு வந்து. ரகுபதியின் முன்பு அவைகளை வைத்துவிட்டுத் தாழ்வாரத்திலிருந்த துணிகளை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டாள். இடுப்பில் குடத்தை ஒய்யாரமாகச் சாய்த்து வைத்துக்கொண்டு, “ஏரிக்குப் போய்விட்டு வருகிறேன், அத்தான்! வந்த பிறகு அதற்கு அடுத்தாற்போல் என்ன வேலை என்பதையும் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டாள்.
சூரியன் வானத்தில் மேலே வந்து விட்டான். சமையலறை யிலிருந்து கீரைக் குழம்பு ‘கம கம’ வென்று மணக்க ஆரம்பித்தது. வெறுமனே கூடத்தைச் சுற்றிச் சுற்றி வர ரகுபதிக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ‘வெளியே போய் வரலாம்’ என்று கிளம்பி, அலமுவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். வழியெல்லாம் ஓலை வேய்ந்த குடிசைகள். அவைகளை அடுத்து மரகத வண்ணத்தில் வயல் வெளிகள். அவைகளில் படிந்து ‘சல சல” வென்று ஓடும் நீரின் ஓசை. ஈர மண்ணிலிருந்து எழும் ஒருவித வாசனை. வழக்கமாக நகரவாசிகளில் பலர் அத்தர், சந்தணத் தின் மணத்தையே உணர்ந்தவர்கள். சுக போகத்திலேயே திளைப்பவர்கள். காலில் மண் ஒட்டிக் கொண்டால் முகத்தைச் சுளிப்பவர்கள்: இவர்களுக்கு, முழங்கால்கள் வரையில் சேற்றில் அழுந்தப் பாடுபடும் ஏழைக் குடியானவர்களைப்பற்றிச் சிந்திப்பதற்கே பொழுது இருப்பதில்லை. ஈர மண்ணிலிருந்து எழும் வாசனை யை நுகர்ந்து அநுபவிப்பதற்கும் பாக்கியம் செய்ய வில்லை
ரகுபதி சிறிது தடுமாற்றத்துடனேயே வரப்புகளின் மீது நடந்து சென்றான். அங்கே மனத்துக்கு ரம்யமான காட்சி ஒன்றைக் கண்டான். இசையும், கலையும். ஆடலும், பாடலும் நகரங்களில் மட்டும் இல்லை. சேறும், சகதியும், உழைப்பும், பலனும் நிறைந்திருக்கும் கிராமங்களிலும் அவை இருக்கின்றன என்பதை ரகுபதி உணர்ந்து கொண்டான். உடல் கட்டுடன் விளங்கும் இளமங்கை ஒருத்தி வயல்களுக்கு மடை கட்டிக்கொண்டிருந்தாள். சற்று எட்டி, ஏற்றக் கிணற்றிலிருந்து ஓர் ஆடவன் ஏற்றம் இறைத்துக்கொண்டே,
“வண்டி கட்டி மாடு கட்டி- ஏலேலமடி ஏலம்
மீனாக்ஷி அம்மை கூண்டு கட்டி – ஏலேலமடி ஏலம்”
என்று உர்த்த குரலில் பாட ஆரம்பித்தான். தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பெண், கணவனை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு கண்களில் காதல் கனல் வீச அவனைப் பார்த்துக் கொண்டே, ‘ அட! உனக்குத்தான் பாடத் தெரியுமோ?’ என்கிற பாவனையில் தலையை அசைத்துவிட்டு,
“கூண்டுக்குள்ளே போற பெண்ணே – ஏலேலமடி ஏலம்
அட! கூப்பிட்டாலும் கேட்கலையோ? – ஏலேலமடி ஏலம்”
என்று சவால் விடுப்பது போல் தீங்குரலில் பாடினாள்.
ரகுபதி அப்படியே அயர்ந்துவிட்டான். பாட்டிலேதான் என்ன இனிமை! எவ்வளவு அர்த்த பாவம்! மாட்டு வண்டி கட்டிக் கொண்டு காதலியும். காதலனும் எங்கோ பயணப்படு கிறார்கள். சாதாரண வண்டியல்ல. மதுரையம்பதியில் அரசு செலுத்தும் அங்கயற்கண்ணியின் வண்டி, ஸ்ரீ மீனாட்சியின் கூண்டு வண்டி!
அவன் உள்ளத்திலிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. மெதுவாக ஒன்றும் தோன்றாமல் மேலே நடக்க ஆரம்பித்தான் அவன். எதிரில் தங்கம் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள். உடம்பிலே ஈரப்புடைவை. தோளில் துவைத்த துணிகளின் சுமை. இடுப்பில் நீர் வழியும் குடம். தேர்ந்த எழுத்தாளனாக இருந்தால், அவளைக் குறைந்த பட்சம் இரண்டு பக்கங்களாவது வர்ணித்து விடுவான்? வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் எட்டாத அழகு அது. ஆகவே, அவன் வாயடைத்து அவளுடன் வீடு திரும்பி வந்து சேர்ந்தான்.
30. சாவித்திரியின் உள்ளம்
தீபாவளி பட்சணத்திற்காக மாவு அரைப்பதற்குத் தகர டப்பாக்களில் சாமான்களை நிரப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் மங்களம். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வரும் வீட்டில் நிலவ வேண்டிய உற்சாகம் அங்கே காணோம். தீபாவளி அழைப்பு அனுப்பியதைப்பற்றிச் சந்துருவும், சீதாவும், மங்களமும் மட்டும் அறிந்திருந்தனர். முன் ஜாக்கிரதையாக விருந்துக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வைத்துவிட்டாள் மங்களம்.
“வருஷா வருஷம் வருகிற பண்டிகைதானே? மாப்பிள்ளை வந்து சவரணையாகத் தலை தீபாவளி கொண்டாடுகிறது பாழாகத் தான் போகிறது! எதற்கு இப்படி ஒரேயடியாகச் சாமான்களை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறாயாம்?” என்று பாட்டி மங்களத்தைக் கேட்டாள். பாட்டியின் வார்த்தைகள் மங்களத்துக்குச் சுரீரென்று தைத்தன. “எதையாவது அச்சான்யமாகச் சொல்லிக்கொண்டு இருப்பதுதான் இந்தக் கிழத்துக்கு வேலை. வீட்டைச் சுற்றிச் சுற்றிவந்து. ‘அது எதற்கு; இது என்ன?’ என்று ஓயாமல் கேட்டுத்தான் என்ன பலனை அடையப் போகிறாளோ?” என்று மனத்துக்குள் மாமியாரை வெறுத்துக் கொண்டாள்.
தீபாவளி நெருங்கிவிட்டது என்பதற்கு அறிகுறியாக அவ்வப்போது வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. புடைவைக் கடைகளில் கூட்டம் நெரிந்தது. அசல் நெய்யுடன் மட்ட நெய்யைக் கலந்து புத்துருக்கு நெய் என்று வியாபாரிகள் பீற்றிக் கொண்டனர். பட்டாசுக் கடைகளில் சிறுவர் சிறுமியரின் கூட்டம். குடும்பத் தலைவருக்கு ஒரே தலைவலி, எப்படி ‘ பட்ஜெட்’டைச் சமாளிக்கப் போகிறோம் என்று.
குதூகலம் நிரம்பியிருக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துச் சாவித்திரி பெருமூச்செறிந்தாள். ‘சௌம்யமான மனத்தைப் படைத்தவர், ஸ்ரீராமர். குற்றமுள்ளவரிடத்தும் நன்மையைச் செய்கிறவர். நன்றியுள்ளவர். சத்தியம் தவறாதவர்’ என்றெல்லாம் வால்மீகி ராமாயணத்தில் வரும் வர்ணனையைச் சீதா உரக்கப் படித்துக் கொண்டிருப்பதைச் சாவித்திரி கேட்டாள். கவியின் அமர சிருஷ்டியாகிய ஸ்ரீ ராமசந்திரனின் கல்யாண குணங்களைக் கேட்டவுடன் சாவித்திரியின் உள்ளம் பாகாய் உருகியது. சிறு விஷயத்துக்காக ஏற்பட்ட இவ்வளவு மனஸ்தாபத்தையும், அதைத் தீர்ப்பதற்குத் தெரியாமல் தான் படும் அவஸ்தையையும் நினைத்து அவள் மனம் வருந்தியது. ரகுபதி உயர்ந்த குணங்களைப் படைத்தவன், ஏதோ சில விஷயங்களில் தவிர, பிறர் மனத்தை நோக வைக்கும் குணம் அவனிடமில்லை. தான் செய்த குற்றத்தை உணர்ந்து அவளிடம் நேராகத் தைரியமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அசட்டுக் கௌரவம் என்பது அவனிடம் லவலேசமும் இல்லை. இத்தகைய குணவானைக் கணவனாக அடைந்தும் அவனிடம் ஒத்து வாழ முடியாமல் போனது எதனால் என்று சாவித்திரி சாவதானமாக இப்பொழுதுதான் ஆராய ஆரம்பித்திருந்தாள். தீபாவளிக்குக் கணவன் வரவேண்டும். பரம சாதுவாகிய தன் மாமியார். பிள்ளையை அனுப்பி வைப்பார் என்றும் நினைத்துக் கொண்டாள், சாவித்திரி.
முற்றத்தில் காகம் உட்கார்ந்து கத்தும் போதெல்லாம், ‘ ஹோ! அவர் வருகிறார் போல் இருக்கிறது!’ என்று நினைத்து உவகை எய்துவாள்.
அன்று ராஜமையர் காரியாலயத்திலிருந்து திரும்பி வரும் போது கையில் பெரிய துணி மூட்டையுடன் வந்து சேர்ந்தார். காப்பி அருந்தி சற்று இளைப்பாறிய பின்பு மூட்டையைப் பிரித்து, “இது சாவித்திரிக்கு. இது சீதாவுக்கு, இது சந்துருவுக்கு. இது உனக்கு” என்று துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து மேஜை மீது வைத்தார்.
எலோருக்கும் போக ஒரு ஜதை சரிகை வேஷ்டி மிகுந் திருந்தது. சீதா குறும்புத்தனமாக அதைப் பார்த்துக் கொண்டே, * அப்பா! மாப்பிள்ளையை மறக்கவில்லை போல் இருக்கிறதே! ஜம்மென்று சரிகை – போட்டுப் பிரமாதமாக வாங்கியிருக்கிறீர்களே!” என்று கூறிச் சிரித்தாள். மாப்பிள்ளை வருவான் என்று ராஜமையரும் எதிர்பார்த்துத் தான் ஜவுளி எடுத்திருந்தார்.
“அடியே! இரண்டு பவுனில் கைக் கடியாரத்துக்குச் சங்கிலி பண்ணச் சொல்லி இருக்கிறேன். கையோடு இருக்கட்டுமே ஒன்று” என மங்களத்தைப் பார்த்துக் கூறினார் அவர்.
“அழைக்காத விட்டுக்குச் சம்பந்தியாக வரமாட்டானோ, உங்கள் மாப்பிள்ளை! ரொம்பத் தெரிந்தவர், நீங்கள்! உங்கள் தலை தீபாவளிக்கு என் அப்பா எப்படி-யெல்லாம் உபசாரம் பண்ணி இருந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு மாசத்துக்கு முன்பே கடிதங்களில் உங்களை வரச்சொல்லி எழுதி இருந்தாரே” என்று சமயத்தை விடாமல் மங்களம் இடித்துக் காட்டினாள்.
”ரகுபதியோடு ஸரஸ்வதியும் வருவாள் அம்மா. அவளுக்கு நாம் ஏதாவது தீபாவளிப் பரிசு கொடுக்க வேண்டாமா?” என்று சந்துரு கேட்டான்.
“ஒரு நிமிஷங்கூட ஸரஸ்வதியை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறதே! உன் வியாச புஸ்தகம் பூராவும் ஸரஸ்வதி நாம ஸ்மரணையாக இருக்கிறதே! இந்த ஸ்துதியைக் கேட்டு சாக்ஷாத் ஸ்ரீ ஸரஸ்வதியே பிரசன்னமாகி விடுவாள்; இல்லையா அண்ணா?” என்று சீதா தமையனைச் சமயம் பார்த்துத் தாக்கினாள்.
வெட்கத்தால் பதில் ஒன்றும் கூறாமல் சந்துரு மென்று விழுங்கினான். அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ரகுபதி வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். சந்துரு யாருக்கும் தெரியாமல் நடராஜரின் சித்திரம் ஒன்றை வாங்கி வைத்திருந்தான். சாதாரணப் புடைவையும், ரவிக்கையும் உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமான ஸரஸ்வதிக்கு அளிப்பதற்குத் தகுதி உள்ளவைகளாக இல்லை. ஸரஸ்வதியைத் தீபாவளியின் போது சந்தித்தால் இந்தக் கலைப் பரிசை அவளுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தூய காதல் ஈடேற தில்லையம்பலத்து இறைவன் அருள் புரிவான் என்றும் நம்பினான்..
– தொடரும்…
– இருளும் ஒளியும் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1956, கலைமகள் காரியாலயம், சென்னை.