அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20
11. வீணையும் கண்ணீரும்
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் வழக்கம் போல் சுடர்விளக்கு ஏற்றிய பிறகு ஸரஸ்வதி வீணை வாசிக்க உட்கார்ந்தாள். இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடாமல் கிடந்த வீணை ‘டிரிங்’ கென்ற நாதத்துடன் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அத்துடன் ஸ்வர்ணம் அன்று காலையில் ஸரஸ்வதியைப் பார்த்து, “அம்மா ஸரஸு! சங்கீதம் என்பது சாமான்ய வித்தையல்ல. தெய்வ கடாக்ஷத்தால் சித்திக்கும் அபூர்வக் கலை அது. அத்தெய்வீகக் கலையை ஒருத்தருக்காக உதாசீனம் செய்வது நல்லதில்லை. நீ வீணையைத் தொட்டு மாதக்கணக்கில் ஆகிறதே. சாயங்காலம் விளக்கேற்றிய பிறகு இரண்டு பாட்டாவது வாசி கேட்கலாம்” என்று கூறினாள்.
‘வாஸ்தவந்தாள்! சாவித்திரிக்குப் பிடிக்காவிட்டால் அவளுக்காக நமக்குத் தெரிந்த கலையை உதாசீனம் செய்வானேன்?’ என்று எண்ணமிட்டாள் ஸரஸ்வதி. ஆகவே, அன்று மாலை தூசுபடிந்து கிடந்த வீணையைத் துடைத்து எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள் ஸரஸ்வதி. சாவித்திரியும், ஸ்வர்ணமும் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். படங்களுக்குப் போட்டிருந்த மல்லிகை மாலைகளின் மணமும், ஊதுவர்த்தியின் சுகந்தமும் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு தெய்வீகக் களையை ஏற்படுத்தின. நீர் ஊற்றுப்போல் கிளம்பும் நாத வெள்ளம் எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது. காம்போதி ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனம் செய்து தானம் வாசித்த பிறகு, ‘ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே’ என்கிற கிருதியை ஸரஸ்வதி வீணையில் வாசித்து, மதுரமான குரலில் பாடினாள். இதுவரையில் அவள் பாட்டிலேயே லயித்துப்போய் உட்கார்ந்திருந்த ஸ்வர்ணம், “ஸரஸு! உன் அத்தான் இன்று இந்தப் பாட்டைக் கேட்க இங்கே இல்லையே? நேற்று கூட, ‘ஏனம்மா! ஸரஸ்வதி இப்பொழுதெல்லாம் பாடுகிறதேயில்லை’ என்று என்னிடம் கேட்டான்” என்றாள்.
புன்னகை ததும்பும் முகத்துடன் ஸரஸ்வதி பாட்டை முடித்துவிட்டு வேறு நீர்த்தனம் தன்றை ஆரம்பித்தாள். ஸ்வர்ணம் ஆசையுடன் நாட்டுப்பெண்ணின் பக்கம் திரும்பி, ”சாவித்திரி! உன்னைப் பாடர் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாட்களாக எண்ணம். எல்லோரும் சங்கீதத்தை முறைப்படி கற்காவிட்டாலும், சாதாரணமாக நாலு பாட்டுகள் பாடத் தெரிந்து கொண்டே இருப்பார்கள். எனக்குக்கூடப் பாடத் தெரியும். மார்கழி மாதத்தில் விடியற்காலம் ஸ்நானம் செய்து விட்டு, ‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை’ என்று எதையாவது பாடிக்கொண்டே வீட்டு வேலைகள் செய்வேன். புளியையும் உப்பையும் போட்டுச் சமைத்துச் சமைத்து அலுத்துப்போன மனசுக்கு எதையாவது பாடிக்கொண்டே வேலை செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறமாதிரி தோன்றும்.
” ஆராரோ ஆரரிரோ” என்று தாலாட்டுப் பாடுகிறோம். ராகமும், தாளமும் தெரிந்துவைத்துக்கொண்டா பாடுகிறோம்?. குழந்தை அந்தப் பாட்டைக் கேட்டுத் தூங்கவில்லையா? ஸரஸு பாடி முடித்ததும் உனக்குத் தெரிந்தது ஏதாவது பாடு பார்க்கலாம். ரகுபதியும் ஒரு சங்கீதப் பைத்தியம்!” என்றாள்.
சாவித்திரியின் முகத்தில் சொல்லொணாத துக்கமும், பொறாமையும் நிரம்பியிருந்தன. சாவித்திரி தன் பிள்ளையின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்வர்ணம் விரும்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்வர்ணத்துக்குச் சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து தரையில் விரலால் கீறிக்கொண்டிருந்தாள்.
இதற்குள்ளாக வெளியே சென்றிருந்த ரகுபதி அழகிய வீணையுடன் ஸரஸ்வதி பாடும் இடத்துக்கு வந்து வீணையைப் படத்தருகில் வைத்துவிட்டு ஸரஸ்வதியின் எதிரில் உட்கார்ந்தான், சிறிது நேரம் அங்கு ஒருவரும் பேசவில்லை. பாட்டு முடிந்ததும் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து, “ரகு! ஸரஸு ஏன் பாடுகிறதில்லை என்று கேட்டாயே? அவள் பாடும்போது நீ இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். சமயத்தில் வந்துவிட்டாய்” என்று அன்புடன் கூறினாள்.
ஸரஸ்வதி தன்னுடைய வீணையை உறைக்குள் போட்டு மூடிவிட்டுப் புது வீணையை ஸ்ருதி சேர்ப்பதற்காக அதைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கும், அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும். எவ்வித சம்பந்தமும் இல்லை போல் பாவித்திருக்கும் சாவித்திரி, வீணையைப் பார்த்துக் கொண்டிருந்த ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி அவளை வெட்டுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் நிலத்தில் கோலமிட ஆரம்பித்தாள். யாராவது ஒருவர். ‘இந்த வீணை எதற்கு வாங்கினாய்?” என்று கேட்பார்கள் என்று ரகுபதி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அந்த வீணை எதற்காக, யாருக்காக வாங்கப்பட்டது என்கிறதை அவனாகவே சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டவுடன் ரகுபதி தன் தாயைப் பார்த்து, ” அம்மா! இன்று நல்ல நாளாக இருப்பதால் டவுனுக்குப்போய் இந்த வீணையை வாங்கி வந்தேன், சாவித்திரிக்கு இருக்கட்டு மென்று. வெள்ளிக்-கிழமையாகவும் இருக்கிறது. இன்றே பாடமும் ஆரம்பிக்கலாம். என்ன ஸரஸு?” என்று ஸரஸ்வதியைப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தன் மனைவியை நோக்கிப் புன்னகை புரிந்தான்.
சாவித்திரி கோபம் பொங்கும் முகத்துடன் கணவனைத் ’துரு துரு’ வென்று விழித்துப் பார்த்துவிட்டு அசட்டையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். கையில் வைத்திருந்த வீணையைக் கீழே வைத்து விட்டு ஸரஸ்வதி நிதானமாக, “இன்றைக்கே என்ன அவசரம் அத்தான்? ஆகட்டுமே; இன்னொரு நாள் ஆரம்பித்தால் போகிறது” என்றாள்.
“அவசரம் ஒன்றுமில்லை. நாள் நன்றாக அமைந்திருக்கிறது. நான் கேட்பதற்கு முன்பே கடைக்காரர்களும், ‘புதுசாக வீணை தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறது, ஸார்; வேண்டுமானால் எடுத்துப் போங்கள்’ என்று கையில் கொடுத்தார்கள்” என்று கூறிவிட்டுத் தன் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உட்கார்ந்திருக்கும் மனைவியின் முகத்தை மறுபடியும் பார்த்தான் ரகுபதி.
ஏதோ அலுவலாகச் சற்றுமுன் சமையலறைக்குச் சென்று காய்ச்சிய பாலை இறைவனுக்குப் படைப்பதற்காக எடுத்து வந்த ஸ்வர்ணம், மகன் கூறுவதைக் கேட்டுவிட்டு, “அவன் இஷ்டப்படி தான் இன்றைக்குப் பாட்டு ஆரம்பியேன். இதற்குப்போய் இவ்வளவு தர்க்கம் வேண்டியதில்லையே! யாராவது ஒருத்தர் தாழ்ந்து போய்விட்டால் ஆயிற்று” என்று கூறிவிட்டுப் பாலைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தாள்.
இதுவரையில் பேசாமல் ஏதோ முழுகிவிட்டது போல் உட்கார்ந்திருந்த சாவித்திரி சரேலென்று எழுந்து, “எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு பிடித்தமில்லை என்று முன்னாடியே சொல்லி இருக்கிறேனே. வெறுமனே இதென்ன வீண் தொந்தரவு?” என்று கூறி அறையைவிட்டுப் போக எத்தனித் தா…..
ஸ்வர்ணத்துக்கும் கோபம் வந்தது. நாட்டுப்பெண்ணைப் பார்த்து அதட்டும் குரலில், “நீ செய்கிறதும், பேசுகிறதும் நன்றாகவே இல்லை, சாவித்திரி. அவன் இஷ்டப்படி தான் கேட்டு வையேன், இதிலே என்ன குறைந்துவிடப்போகிறாய்? அவன் கிழக்கே பார்க்கச் சொன்னால் நீ மேற்கே பார்த்துக் கொண்டு நிற்கிறாயே, சுத்தமாக நன்றாக இல்லையே நீ செய்கிறது!” என்றாள் ஸ்வர்ணம்.
“ஆமாம்… . நன்றாகத்தான் இல்லை. அதுவும் என்னுடைய இஷ்டம்” என்று வெடுக்கென்று கூறிவிட்டு ‘திடுதிடு’ வென்று படுத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள் சாவித்திரி.
12. ரகுபதியின் கோபம்
மாடிக்குச் செல்லும் மனைவியைச் சற்றும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரகுபதி, கோபத்துடன் மனைவியை “சாவித்திரி! சாவித்திரி!” என்று இரைந்து கூப்பிட்டான். ஸரஸ்வதி பயந்து போய் முகம் வெளுக்க ரகுபதியின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் கூப்பிட்ட தற்கு மாடியிலிருந்து பதில் ஒன்றும் வராமற்போகவே திடுதிடு வென்று மாடிப்படிகளில் ஏறினான் ரகுபதி. அவன் பின்னால் சென்ற ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் சாவித்திரியைப் பார்த்து விட்டு ஒருகணம் திகைத்து நின்றார்கள். பிறகு ஸ்வர்ணம் பொங்கி எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு, “நன்றாக இருக்கிறது சாவித்திரி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாக!” என்றாள்.
“சாவித்திரி! இதென்னம்மா இப்படி அழுகிறாய்? எழுந்திரு” என்று அவள் கரங்களை அன்புடன் பற்றினாள் ஸரஸ்வதி.
சாவித்திரி கண்ணீர் வழியும் முகத்துடன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு ஆத்திரம் தொனிக்க, “என் பிறந்த வீட்டில் கூட என்னை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். இங்கே . …” என்று மேலும் கூறாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.
ரகுபதிக்குச் சற்று தணிந்திருந்த கோபம் பீறிட்டு எழுந்தது.
“இங்கே உன்னை வாணலியில் போட்டு வதக்கி, தாலத்தில் எடுத்து வைக்கிறார்கள்! நீ பிறந்த வீட்டில் சுதந்தரமாக வளர்ந்த லக்ஷணம் தான் இப்போது தெரிகிறதே!” என்று கேலியும், ஆத்திரமும் கலந்த குரலில் கூறினான் ரகுபதி.
“என்ன தெரிகிறதாம்?” என்று கணவனைப் பதில் கேள்வி கேட்டு மடக்கிவிட்டதாக நினைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சாவித்திரி.
” உன் லக்ஷணம்! உன் பிடிவாதம்! வேறு என்ன கிடக்கிறது தெரிகிறதற்கு?” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டுப் பொறுமையை இழந்தவனாக ரகுபதி கீழே உட்கார்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் பரீரென்று அறைந்தான். அடுத்த விநாடி அவன் தன் தவறை உணர்ந்து கொண்டான். இது வரையில், பெற்ற தாயின் மனம் நோகும்படி ரகுபதி பேசி அறியமாட்டான். உடன் பிறந்தவளைப்போல் அவனுடன் ஒன்றாக வளர்ந்துவரும் ஸரஸ்வதியின் கண்களில் கண்ணீரைக் கண்டால் அவன் நெஞ்சு உருகிவிடும். பெண்களை மலரைப்போல் மென்மையாக நடத்தவேண்டும் என்னும் கொள்கையை உணர்ந்தவன். தன்னுடைய அருமை மனைவியைத் தொட்டு அடிப்பதற்கு மனம் வருமா? கை தீண்டி அடிக்கும்படியான நீச மனோபாவம் தனக்கு
ஏன் ஏற்பட்ட்து என்பதை ரகுபதியால் உணர முடியவில்லை.
ஸ்தம்பித்து உணர்விழந்து நிற்கும் மகனை ஸ்வர்ணம் கண்களில் நீர் பொங்க ஏறிட்டுப் பார்த்து. “சீ! சீ! உனக்குப் புத்தி கெட்டுவிட்டதாடா ரகு? ஊரார் பெண்ணை அடிக்க உனக்கு என்னடா அப்படிப் பாத்தியம் ஏற்பட்டுவிட்டது? ஊரிலே நாலுபேர் என்ன சொல்லமாட்டார்கள்? புருஷன் – மனைவி தகராறு என்று உலகம் ஒத்துக்கொள்ளாது அப்பா. நடுவில் நான் ஒருத்தி இருக்கிறேன் பாரு” என்றாள். அவள் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.
ஸரஸ்வதி ரகுபதியைத் தன் அழகிய விழிகளால் சுட்டு விடுவதுபோல் விழித்துப் பார்த்தாள். மானைப்போல் மருண்டு பார்க்கும் பார்வை ஒரு விநாடி அனல் பொறிகளை உதிர்த்தது.
“ரொம்ப அழகாக இருக்கிறது அத்தான்! உன்னுடைய போக்கு கொஞ்சங்கூட நன்றாக இல்லை. என்னாலேதானே இந்தத் தொந்தரவுகள் எல்லாம் ஏற்படுகின்றன? நான் எங்கேயாவது தொலைந்துபோகிறேன்” என்று படபட வென்று கூறிவிட்டு, கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
ஸரஸ்வதி கூறியதைக் கேட்டதும், சாவித்திரி ‘விசுக்’ கென்று எழுந்து ”எனக்காக இங்கிருந்து யாரும் போக வேண்டாம். எனக்கும் என் மனுஷாளைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நானே புறப்பட்டுப்போகிறேன். ஆமாம்….” என்று கூறி, பீரோவிலிருந்து புடைவைகளை எடுத்துப் பெட்டியில் வைக்க ஆரம்பித்தாள்.
தலையில் அடிபட்ட நாகம்போல் ரகுபதியின் கோபம் மறு படியும் ‘புஸ்’ – என்று கிளம்பியது. அவன் அலட்சியத்துடன் அவளைப் பார்த்து, “பேஷாய்ப் போயேண்டி அம்மா: நீ இல்லாமல் இந்த உலகம் அஸ்தமித்துவிடப்போகிறதா என்ன?
ஹும்.. ஹும் . . என்னவோ மிரட்டுகிறாயே?” என்றான்.
“நன்றாக இருக்கிறதடா நீ அவளைப் போகச் சொல்லுகிறதும், அவள் புறப்படுகிறதும்! பிறந்தகத்திலிருந்து வந்து நான்கு மாசங்கள் கூட முழுசாக ஆகவில்லை. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானால், சண்டை கூச்சலில்லாமல் சௌஜன்யமாகப் போகிறது தான் அழகு” என்று வேதனை தொனிக்கும் குரலில் கூறினாள் ஸ்வர்ணம்.
ரகுபதி கோபத்துடன் தாயை உறுத்துப் பார்த்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றான். சாவித்திரி தன்னை எவ்வளவுதான் சுட்டுப் பேசினாலும், ஸரஸ்வதியின் கபடமற்ற மனம் அதைப் பாராட்டாமல், அவளை எப்படியாவது ஊருக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆகவே அவள் அத்தை ஸ்வர்ணம் கீழே சென்றபின்பு உரிமையுடன் சாவித்திரியின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் மீது தன் கையை வைத்து, “சாவித்திரி! அசட்டுத்தனமாக இப்படி யெல்லாம் செய்யாதே அம்மா. அத்தானின் மனசு தங்கமானது. தங்கத்தை உருக்கி, எப்படி இழுத்தாலும் வளைவது மாதிரி அவன் மனசை நீ அறிந்து, அதன்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். அத்தையும் பரம சாது” என்றாள்.
கணவனின் அடியால் ‘விறு விறு’ என்று வலிக்கும் தன் கன்னத்தின் எரிச்சலுடன், ஸரஸ்வதியின் அன்பு மொழிகள் அவளுக்கு ஆறுதலைத் தராமல், மேலும் எரிச்சலை மூட்டின.
“எல்லோருடைய குணமுந்தான் தெரிந்து விட்டதே! இனி மேல் தெரிவதற்கு என்ன இருக்கிறது? யார் வேண்டுமானாலும் தங்கமாக இருக்கட்டும், வைரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! ‘எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.’ ‘நான் போகத்தான் வேண்டும்” என்று சாவித்திரி அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுத் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள். ஸரஸ்வதி முகவாட்டத்துடன் அங்கிருந்து போய்விட்டாள்.
அன்றிரவு படுக்கை அறைக்குள் வந்த – கணவனிடம் வேறெதுவும் பேசாமல், சாவித்திரி, “நாளை காலை வண்டிக்கு என்னை எங்கள் ஊருக்கு ரெயில் ஏற்றிவிடுகிறீர்களா?” என்று கேட்டாள். ரகுபதியின் கோபம் அதற்குள் முற்றிலும் தணிந்துவிட்டது. அவன் புன் சிரிப்புடன் அவள் கைகளாப் பற்றிக்கொண்டு. ”சாவித்திரி! அடித்துவிட்டேன் என்று கோபமா உனக்கு? அடிக்கிற கை, அணைப்பதும் உண்டு என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையே! உன்னை ஊருக்கு அனுப்பிவடடு. நான் தனியாக இங்கே இருக்கமுடியுமா சொல்?” என்றான்.
சாவித்திரி அவன் பிடியிலிருந்து தன் கைகளை உதறி விடுவித்துக் கொண்டாள். பின்பு அவனை ரோஷத்துடன் நிமிர்ந்து பார்த்து, “உங்களால் ரெயில் ஏற்றிவிடமுடியுமா, முடியாதா என்பதைச் சொல்லுங்கள்! வேறு எந்த ராமாயணமும் எனக்கு வேண்டாம்!” என்று கூறிவிட்டு வழக்கம்போல் போர்வையை உதறிப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
அதே சமயத்தில் சமையலறையில், சாப்பாட்டுக்கு அப்புறம் ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“என்னம்மா ஸரஸு! இப்படிப்பட்ட சண்டியாக வந்து வாய்த்திருக்கிறதே” என்று ஸ்வர்ணம் கவலையுடன் கேட்டாள் ஸரஸ்வதியை.
ஸரஸ்வதியின் மனதில் வேதனை நிரம்பியிருந்தது. முகத்தை ஒரு தினுசாக அசைத்து அவள், “இந்த அத்தானிடமும் தவறு இருக்கிறது அத்தை. அவள் இஷ்டப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே!” என்றாள்.
ஸ்வர்ணம் பழைய நாளைய மனுஷி. புருஷன் சொல்லி மனைவி கேட்டு பக்தியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்கிற பண்பாட்டில் ஊறிப்போனவள். அத்துடன் தன் செல்லப் பிள்ளையின் மனம் நோகும்படி எதிர்த்துப் பேசிய சாவித்திரியிடம்
அவளுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டிருந்தது.
“நாளைக்கு. ஊரில் போய் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, நமக்குக் கெட்ட பெயர் வாங்கிவைக்குமோ என்னவோ இந்தப் பெண்! இப்படி ஒரு பிடிவாதமா ஒரு பெண்ணுக்கு!” என்று அதிசயப்பட்டாள் ஸ்வர்ணம்.
“என்னவோ போ அத்தை! எனக்குத் தெரிந்ததை நான் சொல்லுகிறேன். இதையெல்லாம் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது” என்று பயந்த மனத்துடன் கூறினாள் ஸரஸ்வதி.
13. பிறந்த வீட்டுக்கு
அடுத்த நாள் அதிகாலையில் சாவித்திரியை ரெயில் எற்றுவதற்காக அரை மனத்துடன் ரகுபதி அவளுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். பெரிய நகரமாக இருந்தால் ஒருவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை இன்னொருவர் அவ்வளவாகக் கவனிக்கமாட்டார்கள். அந்த ஊர் சற்றுக் கிராமாந்தரமாக இருக்கவே அண்டை அயலில் இருக்கும் பெண்கள் வாசலில் கோலமிட வந்தபோது அதிசயத்துடன் கோலத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு ஸ்வர்ணத்தின் வீட்டு வாசலில் வண்டி நிற்பதைக் கவனித்தார்கள். சாவித்திரியும் ரகுபதியும் வண்டி ஏறுவதற்கு முன்பு கசமசவென்று ஏதோ பேசப்படுவதையும் கேட்டார்கள்.
திடுமென்று நாட்டுப்பெண் ஊருக்குப் போவதை ஸ்வர்ணம் துளிக்கூட விரும்பவில்லை. “எங்கள் நாளில் இப்படியா இருந்தோம்? புருஷன் ஏதோ கோபித்துக்கொண்டு அடிக்கிறதும் உண்டு. இரண்டு நாள் புருஷனோடு பேசாமல் இருப்போம். அப்புறம் சமாதானம் ஆகிப் பேசுகிறதில் எவ்வளவு இன்பம் என்பதைச் சொல்லவே முடியாது. அதையெல்லாம் பாராட்டலாமா?” என்று சொல்லி மாய்ந்து போனாள்.
“புருஷன், மனைவியை அடிக்கிறது தவறு அத்தை ! உனக்கு, இந்தக் காலத்து விஷயமே தெரியவில்லை. நீ என்னவோ அந்த நாளைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறாயே!” என்று ஸரஸ்வதி கோபித்துக்கொண்டாள்.
கணவனும், மனைவியும் ரெயில் நிலையத்தை அடையும் வரையில் ஒருவரோடொருவர் பேசவில்லை. ரெயில் நிலையத்தினுள் அதிகக் கூட்டமில்லாமல் இருக்கவே ரகுபதி சாவித்திரியின் அருகில் நெருங்கி, ‘இப்பொழுதாவது கோபம் தணிந்து விட்டதா? திரும்பி வீட்டுக்குப் போய்விடலாமா? இல்லை, டிக்கெட் வாங்கித்தான் வர வேண்டுமா?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.
“இது என்ன விளையாட்டு? அழுகிற குழந்தைக்கு மிட்டாய் வாங்கித்தருகிற மாதிரி குழைந்து குழைந்து என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? ரெயில் வந்துவிட்டால் நம் தர்க்கத்தை ரத்துக் கொண்டு நிற்காது! பேசாமல் போய் டிக்கெட் வாங்கி வாருங்கள்” என்று சாவித்திரி கோபத்துடன் பொரித்து தள்ளினாள்.
ரகுபதியின் மனத்தை ஊசியால் ‘நறுக்’கென்று குத்துவது போல் அவள் வார்த்தைகள் தைத்தன. அவன் வேறெதுவும் பேசாமல் டிக்கெட்டை வாங்கி வந்து அவளிடம் கொடுப்பதற்கும் ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கணவன், மனைவி என்கிற பந்தம் எவ்வளவு நெருங்கியதாக இருந்தாலும் சாவித்திரிக்கும் ரகுபதிக்கும் ஏற்பட்டிருந்த பிளவு அசாதாரண மாகத்தான் இருந்தது. ஜன்னலின் மீது கையை ஊன்றி முகத்தைச் சாய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் வெகு சமீபத்தில் பெட்டிக்கு வெளியேதான் ரகுபதி நின்றிருந்தான். இருந்தாலும் அவர்கள் இருவரின் மனங்களும் வெவ்வேறு துருவங்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. ரெயிலின் ‘கார்டு’ தன் ஊதலை எடுத்து ஊதிக் கொடியைப் பறக்கவிட்டு ஆட்டினார். திக்கித் திணறி ரகுபதி, “ஊருக்குப் போனதும் கடிதம் போடு” என்றான். சாவித்திரி மௌனமாகத் தலையை அசைத்தாள்.
மனைவியை ரெயில் ஏற்றிவிட்டுக் கால் நடையாகவே திரும்பி பாகுபதி வீட்டுக்கு வரும்போது பலமுறை அவன் மனம் அவனையும் அறியாமல் சாவித்திரியையும், ஸரஸ்வதியையும் ஒப்பிட்டுப் பார்த்தது. இப்பொழுது நடந்தது மாதிரி இருந்தது அவனுக்கு அந்தச் சம்பவம். ஒரு நாள் ஸரஸ்வதியை – அவ ளுக்குப் பன்னிரண்டு வயசாக இருக்கும் போது – ஏதோ ஒரு பாட்டைப் பாடச் சொல்லி வற்புறுத்தினான் ரகுபதி. ஓடி விளையாடும் பருவத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்துப் பாடிப் பாடி அலுத்துவிட்டது அவளுக்கு. ஆகவே சற்றுக் கோபத் துடன், “போ அத்தான்! உனக்கு இது ஒரு பைத்தியம்! என்னாலே இனிமேல் பாட முடியாது போ” என்று கூறி எழுந்து சென்ற ஸரஸ்வதியின் பறக்கும் மேலாக்கைப்பற்றி ரகுபதி’ இழுத்தபோது அது கிழிந்து போய்விட்டது.
“புத்தப் புதுசையெல்லாம் கிழித்து விடுகிறாயே அத்தான்!” என்று இரைந்தாள் ஸரஸ்வதி.
“கத்தாதே இப்படி ராக்ஷசி மாதிரி!” என்று அவள் கொவ்வைக் கன்னங்களை அழுத்திக் கிள்ளிவிட்டான் ரகுபதி. உதடுகள் துடிக்க அவனை நீர் மல்கும் விழிகளால் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் ஸரஸ்வதி:
“ஐயோ பாவம்! தாயில்லாக் குழந்தை! முரட்டுத்தனமாகக் கிள்ளிவிட்டோமே. பார்த்து ஆறுதல் கூறவேண்டும்” என்று அவளைத் தேடி. ரகுபதி சென்ற போது அவளாகவே வலுவில் எதிரில் வந்து. “அத்தான்! காப்பி சாப்பிடாமல் மறந்து போய் விட்டாயே இன்றைக்கு. ஆறிப்போகிறதே” என்று சுடச்சுட காபியை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தாள். ரோஜாக் கன்னம் இன்னும் சிவந்துதான் இருந்தது. “கிள்ளி விட்டேனே. வலிக்கிறதா?” என்று கேட்க அவனுக்கு வெட்கம்.
” நீதான் கிள்ளினாயே!” என்று மறுபடியும் அந்த சம்பவத்தை நினைவு படுத்த அவளும் வெட்கினாள்.
நேற்று ரகுபதி மனைவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, “அடித்து விட்டேனே” என்று மனம் வருந்தியபோது சாவித்திரி அதைப் பாராட்டவில்லை அல்லவா? ‘ அடிப்பதை அடித்தாயிற்று. தோரணையில் உதாசீனமாகத்தானே பேசினாள்?
ரகுபதி சாம்பிய மனத்துடன் வீட்டை அடைந்தான். யந்திரம்போல ஒருவருடனும் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டான். ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் அவனுடன் ஒன்றுமே பேசவில்லை. ‘அவனாகவே ஏதாவது பேசட்டும்’ என்று ஸ்வர்ணம் நினைத்தாள். அத்தானிடம் ஏதாவது வலுவில் பேசி அவன் மனப் புண்ணைக் கிளறக்கூடாது என்று ஸரஸ்வதி மௌனமாகவே இருந்துவிட்டாள். இந்த அசாதாரணமான சாந்தம் அவன் நெஞ்சைப்பிடித்து உலுக்கியது. ஏன் ஒருவரும் தன்னுடன் பேசவில்லை – என்று அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. ஒரு வேளை சாவித்திரியை அடித்தது ஒரு மாபெரும் குற்றம் என்று எல்லோரும் கருதுகிறார்களோ? குற்றமாக இருந்தாலும், பிறகு அவளை எவ்வளவு முறை சமாதானப்படுத்த முயன்றான்? ’மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் கெஞ்சினேன்’ என்று ஒருவனுக்கு பெற்ற தாயிடம் மட்டும் சொல்லிக்கொள்ள லஜ்ஜையாக இராதா என்ன? உடன் பிறந்தவளைப்போல் ஸரஸ்வதி பழகினாலும் இந்த விஷயங்களையெல்லாம் அவளிடம் வாய்விட்டுச் சொல்ல முடியுமா? ‘ ஒருவனுக்கு ஏற்படும் சில உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு ‘அந்த ஒருத்தி’ தான் தேவையாகவிருக்கிறது.
தாயாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும், தோழனாக இருந்தாலும் மற்றவர்களால் பகிர்ந்து கொள்ள முடியாத சில உணர்ச்சிகளை சகதர்மிணி ஒருத்தியால்தான் வாழ்க்கையில் பகிர்ந்துகொள்ள முடியும். இதையொட்டித்தான் பெரியவர்கள் மனைவியைச் ‘சகதர்மிணி’ என்று பெயரிட்டு அழைக்கிறார்களோ’ என்று நினைத்து ரகுபதி மனம் வருந்தினான்.
இப்படியே நாலைந்து தினங்கள் ஓடிவிட்டன. பிள்ளையின் இந்த அசாதாரணமான மௌனத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து. “ஏண்டா! சாவித்திரி எப்பொழுது வருகிறேன் என்று சொன்னாளடா? கேட்டாயோ அவளை?” என்று கவலையுடன் விசாரித்தாள். இந்த நாலைந்து தினங்களுக்குள்ளாகவே ஊரில், சாவித்திரி திடீரென்று பிறந்தகம் சென்றதைப்பற்றியே பேச்சாக இருந்தது.
“நேற்றுக்கூட ஸ்வர்ணத்தைக் கோவிலில் பார்த்தேன். நாட்டுப்பெண் ஊருக்குப் போகிறதைப்பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே” என்று அவயம் ஆச்சரியப்பட்டாள்.
“வர வர ஸ்வர்ணம் முன்னைப்போல் இல்லையடி. எந்த விஷயத்தையும் பூட்டிப் பூட்டி வைத்துக்கொள்கிறாளே பத்திரமாக!” என்று பாகீரதி அம்மாமி முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு அவயம் கூறியதை அப்படியே ஆமோதித்தாள். இப்படி கோவிலிலும், குளக்கரையிலும், நடுக்கூடங்களிலும் ஸ்திரி ரத்தினங்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்ட ஸ்வர்ணம், மனக்கஷ்டம் தாங்காமல் பிள்ளையை மேற்கூறியவிதம் விசாரித்தாள்.
“எப்படிப் போனாளோ அப்படி வந்து சேருகிறாள். இங்கே யாராவது அவளைப் போகச்சொன்னோமா என்ன?” என்று தாயின் மீது சீறிவிழுந்தான் ரகுபதி.
“அவள் தான் முரடாக இருக்கிறாள் என்றால் நீயாவது தணிந்து போகமாட்டாயா அப்பா? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா?” என்றாள் ஸ்வர்ணம்.
அதற்குப் பதில் எதுவும் கூறாமல் எழுந்து சென்ற ரகுபதியை மாடிப்படிகளில் சந்தித்த ஸரஸ்வதி கனிவுடன், “அத்தான்! சாவித்திரியிடமிருந்து ஊர்போய்ச் சேர்ந்ததைப்பற்றி கடிதம் ஏதாவது வந்ததா?” என்று கேட்டாள்.
“வெறுமனே அதைப்பற்றிப் பேசிப் பேசி என் மனத்தை என் எல்லோரும் நோக அடிக்கிறீர்கள், ஸரஸ்” என்று பரிதாப மாகக் கூறிவிட்டு மேலே விரைந்து சென்றுவிட்டான் ரகுபதி.
’கல்யாணமாகி வாழ்க்கை நடத்த ஆரம்பித்த இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவ்வளவு மனக் கசப்பும், வெறுப்பும் என் அத்தானுக்கு ஏற்பட்டுவிட்டதே’ என்று நினைத்து வரஸ்வதி மனம் வருந்தினாள். ஒருவேளை அது அவளால் ஏற்பட்டதோ என்பதை நினைத்துப்பார்க்கையில் மலரினும் மெல்லியதான அவள் மனம் ‘திக்’கென்று அடித்துக்கொண்டது.
14. சீதாவின் உபதேசம்
அன்று சனிக்கிழமையாதலால் ராஜமையர் காரியாலயத்திலிருந்து பகல் ஒரு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டார். காசிக்குத் தன் பெண் பாலத்துடன் சென்றிருந்த அவர் தாயாரும் ஊரிலிருந்து முதல் நாள் தான் வந்திருந்தாள். இடைவேளைச் சிற்றுண்டிக்கு அப்புறம் கூடத்தில் உட்கார்ந்து வடநாட்டைப்பற்றிப் பாட்டி கூறுவதைக் கேட்டுக்கொண்டு. இடை யிடையே அவளைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.
“பாட்டி! காசிக்குப் போனால் ஏதாவது அவரவர்களுக்குப் பிடித்த பண்டத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லுகிறார்களே. நீ காப்பியை விட்டுவிட்டாயா பாட்டி?” என்று சீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
”சே. . சே… காப்பியை இன்னும் ‘ ஸ்ட்ராங்’காகச் சாப் பிடுவது என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்திருப்பாள் பாட்டி!” என்று சந்துரு கேலி செய்தான்.
“போடா அரட்டை! கொய்யாப் பழத்தையும், பாகற் காயையும் விட்டுவிட்டேன்” என்று பேரன், பேத்திக்குப் பதில் கூறினாள் பாட்டி.
”அடி சக்கை! தினம் தினந்தான் கொய்யாப்பழமும், பாகற்காயும் நாம் சாப்பிடுகிறோம்? சரியாகத்தான் பார்த்துப் பொறுக்கி எடுத்திருக்கிறாய்?” என்றான் மீண்டும் சந்துரு.
“காயும், பழமும் விடவேண்டும் என்பது ஒன்றும் சாஸ்திரம் இல்லை. நமக்கு இருக்கும் பலவித ஆசைகளில் எதையாவது துளி அந்தப் புனித க்ஷேத்திரத்தில் விட்டுவர வேண்டும். ஆசா பாசங்களை ஒடுக்கவேண்டும் என்று பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்” என்றார் ராஜமையர்.
சற்று ஒதுப்புறமாக உட்கார்ந்திருந்த மங்களம், “ஏதாவது அரட்டை வேண்டுமோ இல்லையோ? சாவித்திரியிடமிருந்து கடிதம் வந்து பத்து தினங்களுக்கு மேல் ஆகிறது. யாரும் ஒரு வரி பதிலே போடவில்லை. உன்னை எழுதச் சொல்லி எத்தனை முறைகள் சொல்லி இருப்பேன் சதா?” என்று மகன் கோபித்துக்கொண்டாள்.
“இதோ வந்துவிட்டேன் அம்மா” என்று கூறி காமரா அறைக்குள் சென்று கையில் கடிதமும் உரையும் அவள் எடுத்து வந்தபோது தெருவில் வண்டி வந்து நின்றது. கையில் ஒரு சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு சாவித்தி மட்டும் இறங்கி உள்ளே வந்தாள். அடுத்தாற்போல் மாப்பிள்ளை ரகுபதி வருவான் என்று எல்லோரும் வாசற்பக்கத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டிக்காரன் காலி வண்டியைத் திருப்பிக்கொண்டு போன பிறகுதான் சாவித்திரி மட்டும் தனியாக வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.
“என்னம்மா இது? நீ மாத்திரம் தனியாகவா வருகிறாய்?” என்று ஆச்சரியத்துடன் மகளைப் பார்த்துக் கேட்டார் ராஜமையர்.
“இது என்னடி அதிசயம். ஒரு கடுதாசி போட்டிருந்தால் இங்கேயிருந்து யாராவது வந்து அழைத்து வந்திருக்க மாட்டோமா?” என்று பாட்டி அதிசயம் தாங்காமல் கேட்டுவிட்டுப் பேத்தியைப் பார்த்தாள்.
சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் காமரா அறைக்குள் சென்று பெட்டியை வைத்துவிட்டு அவளைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த மங்களத்தின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அப்புறம் மாமியார் வீட்டில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச் சாவித்திரி தாயிடம் கூறவும், அது வீடு முழுவதும் பரவுவதற்குச் சில நிமிஷங்கள் கூடப் பிடிக்கவில்லை.
”அடிக்கிறதாவது? ஹூம். . பதினெட்டு வயசு வரையில் வளர்த்துக் கொடுத்தால் அடிக்கிறதாவது? ஹும் . .” என்று ராஜமையர் திருப்பித் திருப்பித் தாம் சொன்ன வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தார்.
“அடிப்பார்கள். நாளைக்கு இவளை வேண்டாம் என்று தள்ளியும் வைப்பார்கள். வீட்டிலேதான் பெண் குதிர் மாதிரி வளர்கிறதே!” என்று பாட்டி, சம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தபோது சந்துரு , திடுக்கிட்டான். ’ஸரஸ்வதியைக் குறித்தா இவ்வளவு கேவலமாகப் பேசுகிறாள் பாட்டி? ரகுபதி ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு, அந்த மனைவியைத் தள்ளி வைத்த பிறகு தன்னை மணக்கவேண்டும் என்று விரும்புகிற பெண்ணா அவள்?’ – பாட்டியின் சொல்லைப் பொறுக்கமுடியாமல் சந்துரு சற்று இரைந்து. “சரி, சரி, எல்லாவற்றையும் கொஞ்சம் பொறுமையாக ஆராய்ந்து விசாரிக்கலாம். வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு நிற்கவேண்டாம்” என்று கூறினான்.
சாப்பிடும் கூடத்தில் சாவித்திரியின் பக்கத்தில் சீதா வந்து உட்கார்ந்து, “உனக்கும், அத்திம்பேருக்கும் ஏதோ ஊடல் போல இருக்கிறது! தமிழ்க் கவிதைகளையும், தலைவன், தலைவி ஊடல் பாடல்களையும் படித்துவிட்டு அத்திம்பேர் உன்னிடம் ஊடலை ஆரம்பித்திருக்கிறார் போல இருக்கிறது! நடுவில் யாராவது தூது செல்வதற்கு இருந்திருந்தால் நீ இங்கே வந்திருக்கமாட்டாய் இல்லையா சாவித்திரி? அப்படித்தானே?” என்று குறும்பு தவழக் கேட்டாள்.
“நாளைக்கு உனக்கு வரப்போகிற புருஷன் உன்னைக் கன்னத்தில் நாலறை அறைந்து வீட்டைவிட்டு வெளியே தள்ளினால், நீ அதை ’வேடிக்கை’ன்னு நினைத்துக்கொண்டு அழகாகக் குடித்தனம் செய்து கொண்டு இருப்பாய்” என்று பாட்டி உரக்க இரைய ஆரம்பித்தாள், தன் சின்னப் பேத்தியைப் பார்த்து.
சீதாவுக்கு உண்மையிலேயே தன் தமக்கைமீது கோபம் ஏற்பட்டது.
”கணவன் அடிக்கிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீட்டைவிட்டுத் துரத்துகிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீடு என்பது கணவன், மனைவி இருவருக்கும் சொந்தமான இடம். இதிலிருந்து ஒருவரையொருவர் வெளியே போகச்சொல்ல யாருக்கு அதிகாரம்? அப்படியே அவன் வற்புறுத்தினாலும், ‘சீ, சீ, உங்களையே கதி என்று நம்பி வந்திருக்கும் என்னை, என் வீட்டைவிட்டு வெளியேற்ற உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? பேசாமல் இருங்கள். என் வீட்டுக்கு நான் தான் அரசி’ என்று கூறிவிட்டு நான் உள்ளே போய் விடுவேன். காலப் போக்கில் எவ்வளவோ மனஸ்தாபங்கள் கரைந்து போய்விடுகின்றன. இதைத்தானே அன்னை கஸ்தூரிபாயும் நமக்குப் போதிக்கிறார்?” என்று சீதா ஆவேசத்துடன் பேசினாள். அவள் அப்பொழுது சந்துரு லைப்ரரியிலிருந்து வாங்கிவந்த காந்திஜியின் ‘சத்திய சோதனை’யைப் படித்துக் கொண்டிருந்தாள்.
“சீதா! நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னை அதிகம் படிக்கவைப்பதே ஆபத்தாக முடியும் போல் ! இருக்கிறதே!” என்று ராஜமையர் அதட்டிய பிறகுதான் அப்பாவும் விஷயத்தைப் பிரமாதப்படுத்த விரும்புகிறார் என்பதைச் சீதா தெரிந்து கொண்டாள்.
சாவித்திரியின் கல்யாணத்துக்காக ராஜமையர் -ஆறாயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்திருக்கிறார். விமரிசையாகக் கல்யாணம் செய்தார். மாப்பிள்ளை ரொம்பவும் நல்ல பிள்ளை என்று முடிவு கட்டியிருந்தார். பிக்கல், பிடுங்கல் ஒன்றும் இல்லை. பெண் சுதந்தரமாக வாழ்வாள் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், கல்யாணம் நடந்த நான்கு மாதங்களுக்குள் கணவனுடன் மனஸ்தாபப்பட்டுக்கொண்டு தன்னந்தனியே வந்து நிற்கும் மகளைப் பார்த்ததும், பொறுமைசாலியான அவர் மனமும் கோபத்தால் வெகுண்டது: எரியும் நெருப்புக்கு விசிறி கொண்டு விசிறுவது போல அவர் தாயார் மேலும் தொடர்ந்து. “ஏண்டா அப்பா! குழந்தையை அடித்துத் துரத்தும்படி என்னடா கோபம் வந்துவிட்டது அவர்களுக்கு? சீர்வரிசைகளில் ஏதாவது – குறைந்து போய்விட்டதா? சாவித்திரிதான் என்ன அழகிலே குறைவா? எதறகாக இந்தமாதிரி பண்ணியிருக்கிறார்கள்?” என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு அவரைத் திணற அடித்தாள்.
“பணம் காசைப்பற்றி என் மாமியார் வீட்டாருக்கு ஒருவிதக் குறையுமில்லை பாட்டி. அவர் இஷ்டப்படி நான் வீணை கற்றுக்கொள்ள வேண்டுமாம்! சங்கீதம் தெரிந்தவளாக இருந்தால்தான் அவர் மனசுக்குப் பிடித்தமாக இருக்குமாம்!” என்று பாட்டியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள் சாவித்திரி.
“அப்பா! இவ்வளவுதானா? பேஷாகக் கற்றுக்கொள்கிறது. இதிலே சண்டைக்கும், சச்சரவுக்கும் இடமில்லையே. அப்படி உனக்குச் சங்கீதம் பயின்றும் வராமல் போனால் அத்திம்பேர் தன்னால் மனம் சலித்து விட்டுவிடுகிறார்” என்றாள் சீதா.
“அடேயப்பா! இதுதானா விஷயம்?” என்று மங்களம் ஒரு பெருமூச்சு விட்டாள். இதுவரையில் இவர்கள் பேச்சைக் கவனித்த சந்துரு உதட்டை மடித்துக் கொண்டே
சீதாவைப் பார்த்தான்.
”ஒருவேளை நாளைக் காலை வண்டியில் அத்திம்பேர் சாவித்திரியைத் தேடிக்கொண்டு வந்தாலும் வருவார்” என்று சீதா கூறியதும், “வரட்டுமே. தயாராக ஆரத்தி கரைத்து வை! வந்ததும் திருஷ்டி கழித்து ஆரத்தி சுற்றி நெற்றிக்குத் திலக மிட்டு உள்ளே அழைத்து வாயேண்டி. அசடே. . . .” என்று கூறிப் பல்லை நறநறவென்று கடித்தாள் சாவித்திரி.
15. ‘மாலே மணி வண்ணா!’
பல நாள் முயற்சியின் பேரில் ரகுபதி அந்த ஊரில் ஒரு சிறு சங்கீத மண்டபம் கட்டி முடித்திருந்தான். அதன் திறப்புவிழாவை அவன் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான். மனைவியுடன் வெகு உற்சாகமாக அவன் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், பிறந்தகம் சென்ற சாவித்திரி மூன்று மாதங்களாகியும் அவனுக்கு ஒரு கடிதங்கூடப் போடாததை நினைத்துத்தான் அவன் மனம் சதா ஏங்கிக்கொண்டிருந்தது. ‘சௌக்கியமாக ஊர் போய்ச் சேர்ந்தேன்’ என்று கடிதம் போடும்படி அன்று ரெயிலடியில் அவளிடம் தான் கேட்டுக்கொண்டும் அவள் தன்னை மதிக்கவில்லையே என்று ரகுபதி எண்ணி வருந்தாத நாளில்லை. ஆசையுடன் வாங்கிவந்த வீணை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றுத் தூசி படிந்து கிடந்தது. அன்று நடந்த ஒரு சிறு சம்பவம் மனைவியையும் கணவனையும் பிரித்து எவ்வளவு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது! குடும்ப வாழ்க்கையில் இன்பமும், அமைதியும் நிலவ வேண்டிய நாட்களில் மன அமைதி குறைந்து வாழ்க்கையில் கசப்பல்லவா ஏற்பட்டிருக்கிறது?
மன நிம்மதியை இழந்த ரகுபதி தன் அறைக்குள் மேலும் கீழுமாக உலாவிக்கொண்டே சிந்தனையில் மூழ்கி இருந்தான். எதிரே மேஜைமீது திறப்பு விழாவுக்காக அனுப்ப வேண்டிய அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. தான் நடத்தப் போகும் இந்த விழாவைக் குறித்துத் தன் மாமனாருக்கும் அன்றைய தபாலில் நான்கு வரி ஒரு கடிதம் எழுதிப் போட்டிருந்தான். அதில் அவரைக் கட்டாயம் வரவேண்டும் என்றும் எழுதி இருந்தான். ஒருவேளை பெண்ணைச் சமாதானப்படுத்தி அவர் அழைத்து வந்தாலும் வரலாம் அல்லவா? சாவித்திரி தன் தகப்பனாருடன் வந்துவிட்டால் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிடவேண்டும். அதைப்பற்றித் தப்பித் தவறிக் கூட அவளிடம் பிரஸ்தாபிக்கக்கூடாது என்று ரகுபதி தீர்மானித்துக் கொண்டான்.
அவன் சிந்தனையைக் கலைப்பது போல் கீழே பூஜை அறையை மெழுகிப் படத்தருகில் வித விதமாகக் கோலம் போட்டுக்கொண்டே மெல்லிய குரலில் ஸரஸ்வதி பாடிக் கொண்டிருந்தாள். மாடியில் ரகுபதியின் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவில் நின்று பார்த்தால் அறையும் நன்றாகத் தெரியும். குந்தலவராளி ராகத்தில் உருக்க மாக “மாலே மணி வண்ணா’ என்கிற ஆண்டாளின் பாசுரத்தை அவள் பாடுவதைக் கேட்டு வராந்தாவின் கைப்பிடிச்சுவர் மீது சாய்ந்து நின்றுகொண்டு அதை ரசிக்க ஆரம்பித்தான் ரகுபதி. அப்பொழுது மாலை நேரம். எல்லோர் வீட்டிலும் விளக்கேற்றி விட்டார்கள். வித விதமாக ஆடைகள் உடுத்து இளம் பெண்களும் சிறுமிகளும் கையில் குங்குமச் சிமிழுடன் ஊரழைக்க வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தனர். இன்று என்ன விசேஷம்?’ என்று ரகுபதி யோசித்தான்.
“ஓஹோ! நவராத்திரி – ஆரம்பம்போல் இருக்கிறது. கல்யாணம் நடந்த வருஷத்தில் மங்களகரமாகக் கணவனுடன் இருந்து பண்டிகைகள் கொண்டாட வேண்டியவள் பிறந்தகத்தில் – போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்! ஆயிற்று, நவராத்திரி முடிந்ததும் தீபாவளி வரும். இந்தத் தீபாவளி தலை தீபாவளி ஆயிற்றே?. மாமனார் வீட்டிலிருந்து பலமாக அழைப்பு வரும்! பெட்டி நிறையப் பட்டாசுக் கட்டுகளும் ஆருயிர் மனைவிக்கு வண்ணச்சேலையும் வாங்கிப் போகவேண்டியது தான் பாக்கி.
ரகுபதிக்கு எதையோ, என்னவோ நினைத்து நினைத்துத் தலையை வலிக்க ஆரம்பித்தது. அவன் சிந்தனையைக் கலைத்து அவன் தாய், “ரகு!” என்று ஆதரவுடன் கூப்பிட்டாள். திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது ஸ்வர்ணம் அவனுக்கு வெகு அருகிலேயே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.
“ஏண்டா அப்பா! திறப்பு விழாவுக்காவது சாவித்திரி வந்துவிட்டால் தேவலை. நாம்தான் பேசாமல் இருக்கிறோம். ஊரில் நாலுபேர் கேட்பதற்குப் பதில் சொல்ல முடியவில்லையே. உன் மாமனாருக்காவது ஒரு கடிதம் எழுதிப் பாரேன்” என்றாள்
ஸ்வர்ணம்.
“அவருக்கு இன்று தான் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்” –வரட்சியுடன் பதிலளித்த மகனின் முகத்தைப் பார்த்ததும் ஸ்வர்ணத்தின் மனம் உருகியது. இப்படிச் செய்வதுதான் நல்லது. இது தான் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும். நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்’ என்று குழந்தையில் அதட்டித் திருத்தி அவள் வளர்த்த மகன்தான் ரகுபதி. இருந்தாலும், இன்று அவன் மனத்துக்கு நல்லது கெட்டது தெரிந்திருக்கிறது. அதிகமாக அவனை ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அப்படிச் சொல்லித் திருத்துவதற்கும் பிரமாதமாகத் தவறு ஒன்றும் அவன் இழைத்துவிடவில்லை. இந்தப் பிளவு – இந்த வைராக்கியம் – ஒரு வேளை நீடித்து நிலைத்துவிடுமோ? அப்படியானால், அவள் ஒரே மகன் வாழ்க்கை முற்றும் இப்படித் தான் ஒண்டிக் கட்டையாக நிற்கப்போகிறானா? ஸ்வர்ணத்தின் நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அநுபவித்தாள்.
பெற்ற அன்னை மகனைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கிறாள். அவன் அறிவு பெற அரிய கதைகளை மனதில் பதியும்படி கூறுகிறாள். பள்ளிக்கு அனுப்புகிறாள். அவன் கல்வியில் தேர்ந்து பட்டம் பெற்று வரும்போது திருஷ்டி கழிக்கிறாள். பொங்கிப் பூரிக்கிறாள். அவனுக்கு ஆசையோடு மணம் முடித்து வைத்துப் பேரன் பேத்தியோடு குலம் தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறாள். நடு நடுவில் குடும்பங்களில் சிறு பூசல்கள் எழலாம். மாமியாரும், மரு மகளும் சண்டை போட்டுக்கொண்டு விலகி வாழலாம். இவை தினமும் நடக்கின்றன. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் நல்வாழ்வு வாழவேண்டும் என்று எண்ணிய அன்னையின் உள்ளத்தில் அந்த ஆசை, சண்டை – பூசல்களுக் கிடையில் நிலைத்துத்தான் இருக்கும். அதன் முன்பு மற்றச் சிறு வியவகாரங்கள் மறைந்து போகின்றன; தெளிந்த கங்கையில் கழுவப்படும் மாசுமறுக்களைப்போல!
கீழே கூடத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டே நாலைந்து பெண்கள் வந்தார்கள்.
“ஸரஸ்வதி! புது சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரியாமே! என்ன பாட்டுகள் பாடப் போகிறாயடி?” என்று ஒருத்தி கேட்டாள்.
“அதெல்லாம் முன்னாடி சொல்லுவாளா? நாளைக்கே பெரிய பாடகியாகி ‘தேசிய’ நிகழ்ச்சியில் பாடினாலும் பாடுவாள். இப்பொழுது சாதாரண ஸரஸ்வதியாக இருக்கிறவள் அப்பொழுது கான ஸரஸ்வதியாகவோ, இசைக் குயிலாகவோ மாறிவிடுவாள் இல்லையா? ‘நீ யார்? எந்த ஊர்?’ என்று உன்னைப் பார்த்துக் கேட்டாலும் கேட்பாள். இல்லாவிடில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு ‘நமஸ்காரம்’ போட்டுவிட்டுக் காரில் போய் ஏறி உட்கார்ந்து காண்டாலும் கொள்வாள்!” என்றாள் இன்னொருத்தி.
அவள் பேசி முடித்ததும் எல்லோரும் ‘கலி’ ரென்று சிரித்தார்கள்.
“அப்படியெல்லாம் பண்ண மாட்டாள் ஸரஸ்வதி. இன்றைக்கு மாத்திரம் என்ன, அவள் பெரிய பாடகி ஆவதற்கு வேண்டிய தகுதி இல்லையா? குடத்துள் விளக்காக இருக்கிறாள். தன்னைப்பற்றி அதிகம் வெளியிலே சொல்லிக்கொள்ளவே அவளுக்கு வெட்கம்!” – முதலில் பேசிய பெண் ஸரஸ்வதிக்காகப் பரிந்து பேசினாள்.
இவர்கள் பேச்சுக்குப் பதில் கூறாமல் ஸரஸ்வதி புன்சிரிப்புடன் கம்பளத்தை எடுத்து விரித்து அவர்களை அதில் உட்கார்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். பிறகு, அங்கிருந்த பெண்கள் பூஜை அறையைக் கவனித்துவிட்டு, “இந்த வருஷம் ஏன் பொம்மைகளை அதிகமாகக் காணோம்? சாவித்திரி எப்பொழுது பிறந்தகத்திலிருந்து வருவாள்?” என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். அங்கே நின்று பேசினால் மேலும் அவர்கள் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து, ஸரஸ்வதி பூஜை அறைக்குள் சென்று தட்டில் வெற்றிலை பாக்கு, பழத்துடன் வெளியே வந்தாள். வந்த பெண்கள் எல்லோரும் தாம்பூலம் பெற்றுக்கொண்டு வெளியே போய் விட்டார்கள்.
மாடியிலிருந்து அந்தப் பெண்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரகுபதி நிதானமாகக் கீழே இறங்கி வந்தான். பூஜை அறை வாயிற்படியில் நின்றிருந்த ஸரஸ்வதியைப் பார்த்து, “சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருக்கிறதுபற்றி உனக்குத் தெரியுமா ஸரஸு? அதைப்பற்றி அழைப்பிதழ்களில் கூட வெளியிட்டிருக்கிறோமே! பத்திரிகைகளிலும் விளம்பரம் வந்திருக்கிறது” என்று சொன்னான்.
“இதெல்லாம் எதற்கு அத்தான்? நான் என்றும் சாதாரண ஸ்ரஸ்வதியாகவே இருக்கிறேனே. நீ ஏன் இப்படி அமர்க்களப் படுத்துகிறாய்?” என்று கேட்டாள் ஸரஸ்வதி, குழந்தையைப் போல.
– தொடரும்…
– இருளும் ஒளியும் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1956, கலைமகள் காரியாலயம், சென்னை.